திருக்கண்ணமங்கை ஆண்டான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

திருநக்ஷத்ரம் : ஆனி ஶ்ரவணம் (திருவோணம்)

அவதார ஸ்தலம் : திருக்கண்ணமங்கை

ஆசார்யன் : நாதமுனிகள்

பரமபதித்த இடம்: திருக்கண்ணமங்கை

அருளிச்செய்தவை: நாச்சியார் திருமொழி – “அல்லி நாள் தாமரை மேல்” என்று தொடங்கும் தனியன்.

Thirukkannamangai_bhakthavatsalan

தாயாருடன் எழுந்தருளியிருக்கும் பக்தவத்ஸலன் எம்பெருமான் – திருக்கண்ணமங்கை

thirukkannamangai-andan-thiruvarasuதிருக்கண்ணமங்கை ஆண்டான் – திருக்கண்ணமங்கை

நாதமுனிகளின் தயைக்குப் பாத்திரமாக இருப்பவர் திருக்கண்ணமங்கை ஆண்டான். இவர் திருக்கண்ணமங்கை என்னும் திவ்யதேஶத்தில் அவதரித்தார். பகவான் ரக்ஷிப்பான் என்று இவர் பகவான் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பற்றி நமது பூர்வாசாரியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகிறார்கள்.

ஸ்ரீவசனபூஷண திவ்ய ஶாஸ்திரத்தில் பிள்ளைலோகாசாரியர் இவருடைய மேன்மையான குணவிஶேஷங்களைப் பற்றி மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். உபாயம் (பகவானை அடைவதற்கான வழி) மற்றும் உபேயத்தை (குறிக்கோள் – பகவத் கைங்கர்யம்) பற்றி விரிவாகக் கூறும் சமயத்தில் மிகச்சிறந்த உதாரணத்தைக் காட்டுவதற்காக, அவர் 80 ஆவது ஸூத்ரத்தில் “உபாயத்துக்குப் பிராட்டியையும், த்ரௌபதியையும், திருக்கண்ணமங்கை ஆண்டானையும் போலே இருக்கவேணும்; உபேயத்துக்கு இளைய பெருமாளையும், பெரிய உடையாரையும், பிள்ளை திருநறையூர் அரையரையும், சிந்தயந்தியையும் போலே இருக்கவேணும்” என்று கூறினார். இந்த ஸூத்ரத்திலும் மற்றும் பின்புள்ள சில ஸூத்ரங்களிலும் உபாயம் மற்றும் உபேயத்தைப் பற்றி மிகச் சிறப்பான உதாரணங்களை வைத்து மிகவும் அழகாக விவரித்துள்ளார். உபாயம் என்பது வழி மற்றும் உபேயம் என்பது குறிக்கோள். பகவானே நாம் உய்ய வழி என்றும், அவனுக்கு நாம் பண்ணும் நித்ய கைங்கர்யமே மிகவும் முக்கியமான குறிக்கோள் என்றும் ஶாஸ்த்ரம் விளக்குகிறது. பகவான் மட்டுமே ஸர்வஶக்தனாய் மற்றும் ஸர்வரக்ஷகனாய் இருப்பதால், அவரால் எவரை வேண்டுமானாலும் எளிதில் ஸம்ஸார ஸம்பந்தத்திலிருந்து விடுவிக்க முடியும் – ஆதலால் அவனே உபாயம். ஸ்ரீமந் நாராயணனே அனைவருக்கும் எஜமானன் (தலைவன்) என்பதால், ஸ்ரீமந் நாராயணனும் அவனது பத்னியுமான பெரியபிரட்டியாரும் இருக்கும் அச்சேர்த்தியிலே கைங்கர்யம் செய்வது தான் மிகச்சிறந்த உபேயம். உபாயம் மற்றும் உபேயத்திற்குச் சில உதாரணங்களை சுருக்கமாக இங்கே காண்போம்.

உபாயம்

  • ராவணன் ஸீதா பிராட்டியைச் சிறை பிடித்து வைத்திருந்த காலத்தில், பிராட்டி தன்னுடைய ஶக்தியின் மூலம் ராவணனை தண்டித்து விட்டு சென்றிருக்கலாம். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. ஹனூமானுடைய வாலில் ராக்ஷஸர்கள் தீ வைத்தபோது பிராட்டி தன்னுடைய ஶக்தியை நிரூபித்துக் காட்டினாள். எப்படி என்றால் “ஶீதோ பவ” (இந்த நெருப்பு, குளிர்ந்து இருக்கட்டும்) என்று கூறி பிராட்டி குளிரக் கடாக்ஷித்ததால் ஹனூமானுக்கு அந்த நெருப்பு சுடாமல் குளிர்ந்திருந்தது. ஆனால் அவள் பெருமாளை (ஸ்ரீ ராமன்) மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டினாள். எப்படி என்றால் அவள் தன்னைக் காத்துக்கொள்ள தன்னுடைய எந்த ஶக்தியையும் உபயோகப்படுத்தாமல், பெருமாளே வந்து தன்னைக் காப்பற்ற வேண்டும் என்று காத்திருந்தாள்.
  • கௌரவர்கள், அனைவரும் இருக்கும் ஸபையில் த்ரௌபதியை அவமானப்படுத்தியபொழுது, தன்னுடைய லஜ்ஜையை (நாணத்தை) விட்டு, தன்னைதானே ரக்ஷித்துக்கொள்ள முடியாமல் கைகளைத்தூக்கி ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கதறினாள். அவள் புடவையை தன் கைகளால் பிடித்துக்கொள்ளாமல், கிருஷ்ணன் காப்பற்றுவான் என்ற முழு நம்பிக்கையுடன் இரண்டு கைகளையும் கூப்பினாள்.
  • எம்பெருமனே நமக்குத் தஞ்சம் என்று இவர் தன்னுடைய செயல்கள் அனைத்தையும் விட்டுவிட்டு திருக்கண்ணமங்கை திவ்யதேசத்து எம்பெருமானான பக்தவத்ஸலப் பெருமாளைத் தஞ்சமடைந்தார்.

இந்த ஸூத்ரத்தின் வ்யாக்யானத்தில், ஆண்டானுடைய நிஷ்டையை மிகவும் அழகாக விளக்கியுள்ளார் விஶதவாக்ஶிகாமணியான மாமுனிகள். ஒருநாள் ஒரு நாயை ஒருவன் அடித்ததை ஆண்டான் பார்த்தார். இதைப் பார்த்த அந்த நாயின் சொந்தக்காரர் மிகவும் கோபமடைந்து அதை அடித்தவருடன் சண்டையிட்டார். இருவரும் தங்களுடைய கத்தியை வெளியே எடுத்து சண்டையிட்டார்கள். அது  மட்டுமல்லாமல் ஒருவரையொருவர் கொல்லவும் தயாரானார்கள். இதைப் பார்த்தவுடன் மிகச்சிறந்ததோர் எண்ணம் ஆண்டானுக்கு உதயமானது. “ஒரு ஸாதாரண மனிதன் தனக்கு சொந்தமான ஒரு நாயை அடித்ததற்காக கோபப்பட்டு, கேவலம் அந்த வஸ்து தனக்கு சொந்தமானது என்பதற்காக அடித்தவரைக் கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு செல்வானேயானால், ஒருவன் “ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானிடம் நாம் ஶரணாகதி பண்ணிவிட்டு, அவனே நம்மை காப்பாற்றுவான் என்றிருந்தால் தேவர்க்கெல்லாம் தேவனான ஸ்ரீமந் நாராயணன் நம்மை ரக்ஷியாதிருப்பனோ?” என்று அவர் சிந்தித்தார். இதைச் சிந்தித்த உடனேயே, தான் அனைவர் மீதும் வைத்திருந்த பற்றை விட்டு, தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும், கவலையும் இல்லாமல் கோயிலுக்குச் சென்று அங்கேயே இருந்தார். இங்கே, எதுவும் செய்யாமல் அனைத்துச் செயல்களையும் விட்டார் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் மாமுனிகள் இவர் கொள்கையை மிகவும் அழகாக விவரித்துள்ளார். அவருடைய அழகான வார்த்தைகள் என்னவென்றால் “ஸ்வரக்ஷண ஹேதுவான ஸ்வவ்யாபாரங்களை விட்டான் என்றபடி” – அதாவது அவர் தன்னை ரக்ஷிக்கும் பொருட்டான அனைத்து செயல்களையும் கைவிட்டார். இதற்கு என்ன அர்த்தமென்றால், அவர் எம்பெருமானுக்கு பண்ணும் கைங்கர்யங்களை விடாமல் செய்து வந்தார், ஆனால் தன்னை ரக்ஷித்துக்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டார் என்பதே இதன் பொருள். ஆய் ஜனன்யாசாரியரும் இதே கொள்கையை எடுத்துக்காட்டுகிறார். இந்த அழகான ஶாஸ்த்ரார்த்தத்தை இனிமேல் வரும் பகுதிகளிலிருந்து நன்றாக புரிந்து கொள்ளமுடியும், குறிப்பாகத் திருவாய்மொழி 9.2.1 வ்யாக்யானத்தில் காட்டிய ஸம்பவத்தின் மூலம் மிகவும் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

உபேயம் (கைங்கர்யம்) – 80வது ஸூத்ரத்தின் மீதமுள்ள பாகம் மற்றும் அடுத்துள்ள ஸூத்ரத்தின் சுருக்கமான விளக்கம்

  • இளைய பெருமாள் – லக்ஷ்மணன் – பெருமாளை (ஸ்ரீ ராமன்) விட்டு ஒரு பொழுதும் இணைபிரியாமல் இருந்து, பெருமாள் எங்குச் சென்றாலும் அவருடன் சென்று, அவருக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்தார்.
  • பெரிய உடையார் – ஜடாயு மஹாராஜா – ஸீதா பிராட்டியை காப்பாற்றவேண்டும் என்று ராவணனுடன் சண்டையிடும் காலத்தில், தனக்கு தீங்கு ஏற்படும் என்று நினையாமல், சண்டையிட்டார். அவருடைய முழு எண்ணமும் பிரட்டியை அந்த ராவணனிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்றே இருந்தது. ஆனாலும் அவர் இறுதியில் கொல்லப்பட்டார்.
  • பிள்ளை திருநறையூர் அரையர் – இவர் மற்றும் இவருடைய குடும்பமே தொட்டியம் திருநாராயணபுரத்து (திருவரங்தத்திற்கு அருகில் இருக்கும் ஸ்தலம்) எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வந்தார்கள். ஒருமுறை தீயவர்கள் சிலர் அந்த கோயிலைத் தாக்கி, அந்த அர்ச்சாவதாரப் பெருமாளுக்கு தீ வைத்துவிட்டார்கள். இதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், எம்பெருமானை காபாற்றுவதற்க்காக இவர் மற்றும் இவருடைய குழந்தைகள், தர்ம பத்தினி அனைவரும் அர்ச்சாவதாரத் திருமேனியை அணைத்துக் கொண்டனர். அந்த காலத்தில் தீயினால் ஏற்பட்ட காயத்தினால் அவரும் அவருடைய குடும்பமும் உயிரை விட்டார்கள். இப்படி எம்பெருமானுக்காக தம்மையே அர்ப்பணித்ததை நமது பூர்வாசாரியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகிறார்கள்.
  • சிந்தயந்தி – வ்ரஜ பூமியில் வாழ்ந்த ஒரு கோபிகை. இவள் கண்ணன் எம்பெருமான் மீது மிகவும் பற்று (அன்பு) வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணன் எம்பெருமானுடைய அழகான வேணு கானத்தை (குழலோசையை) கேட்டவாறே, மிகவும் ஆனந்தமடைந்து தன்னுடைய க்ருஹத்தை விட்டு உடனே சென்று எம்பெருமானை ஸேவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். வீட்டிலிருந்த பெரியோர்கள் அனுமதிக்காத படியினால் அவளால் உடனே அவளுடைய க்ருஹத்திலிருந்து கிளம்ப முடியவில்லை என்பதால் மிகவும் வருத்தமடைந்தாள். எம்பெருமானுடைய குழலோசையைக் கேட்டு பேரின்பமடைந்ததால், அவளுடைய புண்ய கர்மங்கள் (மகிழ்ச்சியாய் இருப்பதற்கு புண்யம் தேவைப்படுகிறது) அழிந்தன. தன்னால் இந்த இடத்தை விட்டு கண்ணனிடம் செல்ல முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டதால் அவளுடைய பாப கர்மங்கள் அழிந்தன. அவளுடை பாபம் மற்றும் புண்யங்கள் அனைத்தும் அழிந்ததும், உடனேயே அவள் பரமபதத்தை அடைந்தாள் (நமது புண்யம் மற்றும் பாபமே நம்மை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் அழுத்துகிறது – அவை அனைத்தும் அழிந்தால் நாமும் பரமபதமான மிகப்பெரிய பேற்றை அடைவோம்). நமது இறுதி குறிக்கோளான பரமபதத்தை இவள் மிகவும் ஸுலபமாக அடைந்து, அங்கு எம்பெருமானுக்கு நித்யமாக கைங்கர்யம் செய்தாள்.

அதுமுதல் ஆண்டான் மீதமுள்ள காலங்களில் திருக்கண்ணமங்கை எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்து கொண்டிருந்து, கடைசியில் பரமபதத்தை அடைந்தார். அவருடைய கைங்கர்யத்தை பரமபதநாதனுக்குச் செய்யத் தொடங்கினார்.

ஆண்டானுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் புகழ் திவ்ய ப்ரபந்த வ்யாக்யானங்கள் மற்றும் ரஹஸ்ய க்ரந்த வ்யாக்யானங்களில் சில இடங்களில் காட்டப்பட்டுள்ளது. அதை நாம் இங்கே பார்ப்போம்.

  • நாச்சியார் திருமொழி 1.1, பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – “தரை விளக்கி” ஆண்டாள் அருளிச்செய்தாள் – தரையை சுத்தம் செய்வது. திருக்கண்ணமங்கை ஆண்டான் சுத்தம் செய்யும் கைங்கர்யத்தையே முக்கியமான குறிக்கோளாக (இதன் மூலமாக எதையேனும் அடையவேண்டும் என்ற நினைப்பில்லாமல்) வைத்திருந்தார் என்று பெரியவாச்சான் பிள்ளை எடுத்துக்கட்டுகிறார்.
  • திருமாலை 38, பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – “உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்” – என்றால் எவரொருவர் எம்பெருமான் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளாரோ அவரே வாழும் சோம்பர் என்று இந்த இடத்தில் காட்டுகிறார். அதாவது ஒரு நாயினுடைய சொந்தக்காரர் அதைக் காப்பற்றியதைப் பார்த்த உடன், ஆண்டான் பக்தவத்ஸலப்பெருமாளிடம் இதை அனுஷ்டித்துக் காட்டியதை வாழும் சோம்பர் என்று பெரியவாச்சான் பிள்ளை விளக்குகிறார். வாழும் சோம்பருக்கு எதிர் மறையானது தாழும் சோம்பர் (உண்மையான சோம்பேறியான நபர்). இவர்கள் தன்னை எந்தக் கைங்கர்யத்திலும் ஈடுபடுத்திக்கொள்ளாமல் தனது வாழ்க்கையை வ்யர்த்தமாக கழிப்பர்கள்.
  • திருவாய்மொழி 9.2.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – “கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” – ஒருவன் எம்பெருமானுடைய கோயிலை சுத்தம் செய்து கைங்கர்யம் செய்தாலே அவனுடைய பாபங்கள் கழிந்துவிடும். திருக்கண்ணமங்கை ஆண்டான் அனைத்துச் செயல்களையும் விட்டு, எப்பொழுதுமே திருக்கண்ணமங்கை பக்தவத்ஸலன் எம்பெருமான்  ஸன்னிதில் இருந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அவர் எப்பொழுதும் ஸன்னிதியை சுத்தம் செய்யும் கைங்கர்யத்தை ஒரு நாள் தவறாமல் மிகவும் ப்ரேமையோடு செய்து வந்தார். திருவாய்மொழி 9.2.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – நம்பிள்ளை மிகவும் அழகாக ஒரு முக்கியமான விஷயத்தை நிறுவுகிறார். நாங்கள் தலைமுறை தலைமுறையாக கோயிலைச் சுத்தம் செய்வது முதலான பல கைங்கர்யங்களை செய்து வருகிறோம் என்று நம்மாழ்வார் கூறுகிறார். இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ப்ரபன்னர்கள் எம்பெருமானை மட்டுமே உபாயம் என்று முழுமையாக ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக என்று எந்த தனிப்பட்ட விஷயத்திற்கும் ஒருபொழுதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை – அதனால் எதற்காக கைங்கர்யம் பண்ண வேண்டும்?. இதைத் திருக்கண்ணமங்கை ஆண்டானுடைய சரித்திரத்தை வைத்து மிகவும் அழகாக நம்பிள்ளை விளக்கியுள்ளார். ஆண்டானுடன் வாசித்த சக மாணவர் (பிற்காலத்தில் நாஸ்திகராய் மாறியவர்) ஆண்டானிடம் “தனக்காக என்று எந்த சுய முயற்சியிலும் ஈடுபாடு இல்லாத பொழுது, எதற்காக நீ கோயிலைச் சுத்தம் செய்து உன்னை கஷ்டப்படுத்திக் கொள்கிறாய்” என்று கேட்டார். இதற்கு ஆண்டான் புழுதி படிந்த இடத்தை மற்றும் சுத்தமான இடத்தையும் காட்டினார். புழுதி படிந்த இடத்தை துடைப்பதன் மூலம் அந்த இடம் சுத்தமாகுமே தவிர வேறோன்றும் இல்லை. உமக்கு சுத்தமான இடத்திற்கும், புழுதி படிந்த இடத்திற்கும் வித்யாசம் கண்டுபிடிக்கத் தெரியாதோ? என்று கேட்டார். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் கைங்கர்யம் என்பது ஒரு தாஸபூதனுடைய (சேவகனுடைய) இயற்கையான செயலாகும். அந்த கைங்கர்யமே உபாயமாக ஆகாது என்பது இதனுடைய விளக்கம். ஸ்ரீவசனபூஷணத்தில் பிள்ளைலோகாசாரியர், 88வது ஸூத்ரத்தில் மிகவும் அழகாக விளக்குகிறார். பொருள் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்திலே வாழும் நபர் ஒருவர், தனக்கோ அல்லது தனக்குப் பிடித்தவர்களுக்கோ பொருள் மீது உள்ள ஆசையை ஏதேனும் ஒரு வழியில் ஸாதித்துக் கொள்ளும்போது, ஜீவாத்மவின் ஸ்வரூபத்திற்கு ஏற்ப, அவனுக்கு கைங்கர்யம் செய்ய தகுதி உள்ள ஒரு ப்ரபன்னன், அவன் முகமலர்ச்சியைப் பார்த்துச் செய்யும் மிகவும் பேரின்பமான  கைங்கர்யம் செய்வதற்கு எவ்வளவு ஆசை/பற்று கொள்ளவேண்டும்? என்று கூறுகிறார்.
  • சரமோபாய நிர்ணயம் – நாதமுனிகள் நம்மாழ்வாரிடமிருந்து 4000 திவ்ய ப்ரபந்தத்தை ஆழ்வார்திருநகரியில் கற்றுக்கொண்டு வீரநாராயாணபுரத்திற்கு (காட்டுமன்னார் கோயில்) எழுந்தருளினார். அவர் அந்த ப்ரபந்தத்தை அந்த திவ்யதேசத்து எம்பெருமான்  மன்னனார் திருமுன்பே சேவித்து அவரிடமிருந்து மரியாதையை பெற்றுக்கொண்டார். அவர் தம்முடைய திருமாளிகைக்கு வந்தவுடன் தனது மருமான்களான கீழையகத்தாழ்வான் மற்றும் மேலையகத்தாழ்வான் அழைத்து அவர்களிடம் தாம் ஆழ்வாரால் அருளப்பெற்றதையும், ஆழ்வார் பவிஷ்யதாசாரியரை தமது கனவில் (இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உய்வதற்கு வரும் காலத்தில் எம்பெருமானார் அவதரிக்க போகிறார் என்று கூறி ஆழ்வார் அவதரிக்கப்போகிற ஆசார்யரின் திருமேனியையும் காட்டிக்கொடுக்கிறார்) காட்டியதையும் விளக்கமாகக் கூறினார். இதைக் கேட்டவுடன் அவர்கள் இருவரும் மிகவும் ஆச்சர்யமடைந்தனர். மேலும் இப்பேர்ப்பட்ட மஹானுபாவருடைய ஸம்பந்தம் கிடைத்ததே என்று த்ருப்தியடைந்தனர். அதன் பிறகு ஸ்ரீமன் நாதமுனிகள், ஶிஷ்யனாய் இருப்பதற்கு உண்மையான தகுதி உடைய திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கு த்வய மஹா மந்திரத்தின் விஶேஷார்த்தத்தை திருவாய்மொழி மூலம் விளக்கமாகக் கூறினார். “பொலிக பொலிக பொலிக” (திருவாய்மொழி 5.2.1) பாசுரம் வந்தவாறே, ஆழ்வார் கூறிய வார்த்தைகளையும், ஆழ்வார் கனவில் தமக்குக் காட்டியருளியதையும் நாதமுனிகள் விளக்கமாகக் கூறினார். இதைக்கேட்டவுடன் “பவிஷ்யதாசாரியரின் திவ்ய மங்கள விக்ரஹத்தை தேவரீர் கனவில் ஸேவித்தீர். இப்பேர்ப்பட்ட உம்முடன் அடியேனுக்கு ஸம்பந்தம் இருக்கிறது என்பதே அடியேனுக்கு மிகவும் பாக்யம்” என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் கூறினார். இந்த ஸம்பவம் சரமோபாய நிர்ணயத்தில் (http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-thirumudi.html) எடுத்துக்காட்டப்படுள்ளது. இதை அருளியவர் பெரியவாச்சான் பிள்ளையினுடைய ஸ்வீகார குமாரரான நாயனார் ஆச்சான் பிள்ளை.
  • வார்த்தாமாலை 109 – நாம் முன்பே பார்த்தது போல் ஸ்ரீவசன பூஷணத்தில் விளக்கமாக கூறியிருக்கும் விஷயத்தை பின்பழகராம் பெருமாள் ஜீயர் இந்த வார்த்தையில் கூறுகிறார். எம்பெருமானை அடைவதற்கான வழியையும், முழுமையாக அவனைச் சார்ந்திருப்பதைப் பற்றி விளக்கும் போது இவர் பிராட்டி, த்ரௌபதி மற்றும் திருக்கண்ணமங்கை ஆண்டானை உதாரணமாகக் காட்டுகிறார்.
  • வார்த்தாமாலை 234 –  ஸாமான்ய சாஸ்த்ரத்தை (வர்ணாச்ரம தர்மம்) விட விஶேஷ ஶாஸ்த்ரம் (பாகவத தர்மம்) தான் மிகவும் முக்கியமானது என்று இந்த ஸூத்திரத்தில் அழுத்தமாகக் கூறப்படுள்ளது. இப்படிப்பட்ட நிஷ்டை மிக உயர்ந்த அதிகாரிகளான ஆதி பரதன், திருக்கண்ணமங்கை ஆண்டான், மற்றும் சிலருக்கு மட்டும் தான் ஏற்படும் என்று நாம் நினைக்கக்கூடாது என்று கூறுகிறது, அதுமட்டுமல்லாமல் நாம் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்றும் அந்த பகவானின் கடாக்ஷத்தின் மூலம் நாமும் இந்த நிஷ்டையில் இருப்போம் என்றும் கூறியுள்ளது.

இதன் மூலம் திருக்கண்ணமங்கை ஆண்டானுடைய மகிமையில் சில துளிகளைப் பார்த்தோம். நாமும் எம்பெருமான் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்க இவருடைய திருவடித்தாமரைகளை வணங்கி ப்ரார்த்திப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2014/07/13/thirukkannamangai-andan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

1 thoughts on “திருக்கண்ணமங்கை ஆண்டான்

  1. பிங்குபாக்: thirukkaNNamangai ANdAn | guruparamparai – AzhwArs/AchAryas Portal

பின்னூட்டமொன்றை இடுக