Monthly Archives: மே 2016

முதலியாண்டான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

mudhaliyandan

திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம்

அவதார ஸ்தலம் : பேட்டை

ஆசார்யன்: எம்பெருமானார்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

முதலியாண்டான் அருளிச்செய்தவை: தாடீ பஞ்சகம், ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை)

ஆனந்த தீக்ஷிதர், நாச்சியாரம்மன் தம்பதியினருக்கு  திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் தாசரதி. இவர் எம்பெருமானாரின் மருமகனாவார். ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் படுகிறார். இவர் முதலியாண்டான் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார் (ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைவர்). மற்றும்  எம்பெருமானாரின் திருவடித் தாமரை (யதிராஜ பாதுகா), எம்பெருமானாரின்  த்ரிதண்டம் என இவர் அறியப்படுகிறார். குறிப்பு: ஆழ்வானும் ஆண்டானும் எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமுடையவர்கள், பிரிக்க முடியாதவர்கள். எம்பெருமானாரின் த்ரிதண்டம்  முதலியாண்டானும்,  ஜல பவித்ரம் (த்ரிதண்டதில் இணைக்கப்பட்டுள்ள கொடி) கூரத்தாழ்வானும் ஆவார்கள்.

azhwan-emperumanar-andanஆழ்வான், எம்பெருமானார், ஆண்டான் – அவரவர்களின் அவதார ஸ்தலத்தில்

பகவத், பாகவத நிஷ்டையின் காரணமாக எம்பெருமானாரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானார். எம்பெருமானார் ஸந்யாஸாச்ரமத்தை ஆச்ரயித்த போது, அவர் எல்லாவற்றையும் துறந்தும் ஆண்டானை மட்டும் துறக்கவில்லை – ஆண்டானின் உயர்ந்த குணம் இதிலிருந்து நன்கு அறியப்படுகிறது. ஆழ்வானும் ஆண்டானும் எம்பெருமானாரின் முதல் சிஷ்யர்கள். இவர்கள் இருவரும் சாஸ்த்ரம் ( உபய வேதாந்தம் – ஸம்ஸ்க்ருதம், அருளிச்செயல்) அதன் ஸாரத்தையும்  எம்பெருமானாரிடமே பயின்றார்கள். எம்பெருமானார் காஞ்சிபுரம் விட்டு ஸ்ரீரங்கம் சென்ற போது ஆழ்வானும் ஆண்டானும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். எம்பெருமானாரின் கட்டளைப்படி முதலியாண்டான் ஸ்ரீரங்க ஆலய நிர்வாகத்தை முழு பொறுப்பு ஏற்றுக்கொண்டு அனைத்து ஆலய கைங்கர்யமும் திறம்பட நடைபெறச் செய்தார்.

திருக்கோஷ்டியூர் நம்பி சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை எம்பெருமானாருக்கு கற்றுக்கொடுத்த பின், ஆண்டானும் எம்பெருமானாரிடம் தனக்கும் அதை உபதேசிக்கும் படி வேண்டினார். எம்பெருமானாரும் அதற்குத் திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தே சென்று கேள் என்றார். ஆண்டானும் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகையிலே அவருக்கு ஆறு மாதம் பொறுமையுடன் கைங்கர்யம் செய்த பிறகு நம்பியிடம் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை உபதேசிக்கும் படி வேண்டினார். நம்பியும், உமக்குத் தகுந்த ஆத்ம ஞானம் அடைந்த பின் எம்பெருமானாரே கற்றுவிப்பார் எனக் கூற, ஆண்டான்  நம்பியின் திருவடித் தாமரைகளுக்குத் தண்டன் சமர்ப்பித்துவிட்டு அவரிடம் ஸ்ரீரங்கத்துக்கு விடை பெற்றார். எம்பெருமானார் ஆண்டான் திரும்பி வருவதைக் கண்டு அவருடைய சேவை மனப்பான்மையில் நெகிழ்ந்து உடனே சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை கற்பித்தார்.

ஆண்டான் எப்படி எம்பெருமானாரை முழுவதுமாக சரண் அடைந்தார் என்பதை இந்த சரித்திரச் சம்பவத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

mudhaliyandan-sridhanavellAtti

பெரிய நம்பியின் மகள் அத்துழாய் தன் மாமியாரிடம் ஆற்றுக்குக் குளிக்கச் செல்ல ஒரு ஆள் துணைக்கு வேண்டும் எனக்   கேட்க மாமியாரும் உன் பிறந்தகத்தில் இருந்து சீதன வெள்ளாட்டி கொண்டு  வரச்சொல்லு என்றாள். அத்துழாயும் தன் தந்தை பெரிய நம்பியிடம் கேட்டாள். பெரிய நம்பி நாம் எம்பெரும்மானாரையே  சார்ந்துள்ளோம் என்று சொல்ல இவளும் எம்பெருமானரைக் கேட்டாள்.

எம்பெருமான் தன் சிஷ்யர்களிடையே சுற்றிப்பார்த்து அவரது கண்கள் ஆண்டானிடம் நிற்க,  அவரை அத்துழாயுடன் செல்லப் பணிக்க அவரும் குருவின் ஆணையை மகிழ்ச்சியுடன் ஏற்று அவளை பின் தொடர்ந்து சென்றார். ஆண்டானும் அவளுக்கு எல்லா உதவிகளும் தினசரி செய்து கொண்டிருக்கும் வேளையில் அத்துழாயின் மாமியார் வீட்டில் உள்ளவர்களுக்கு, இவ்வளவு உயர்ந்த பண்டிதர், ராமானுஜரின் சிஷ்யர்களின் தலைவரான ஆண்டான் சாதாரண வீட்டுப்  பணியாளராக இருப்பது வருத்தமாய் இருந்ததால் ஆண்டானிடம் வேலையை நிறுத்தச் சொன்னார்கள். ஆண்டான் அதற்கு எம்பெருமனாரின் கட்டளை, இதை  நிறைவேற்றுவேன் என்றார். அவர்கள் உடனே பெரிய நம்பியிடம் சென்று முறையிட்டார்கள். பெரிய நம்பியும்  அவர்களை எம்பெருமானாரிடம் அனுப்ப, அவரும் நீங்கள் உதவி கேட்டதால் அனுப்பினோம் வேண்டாம் என்றால் ஆண்டானைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்  என்றார். அவர்கள் குற்றத்தை உணர்ந்து ஆண்டானைப் பணி செய்வதை நிறுத்தச் சொன்னர்கள். பெரிய நம்பி, எம்பெருமானார், ஆண்டான் மற்றும் அத்துழாய் இவர்களின் மேன்மையை அறிந்து மன்னிப்புக் கேட்டார்கள், பிறகு அத்துழாயை அன்போடும் பரிவோடும்  நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து ஆண்டான் எவ்வளவு உயர்ந்தவர் என்றும்,  ஆசார்யனின்  வாக்குக்குக் கட்டுப்படுகிறார் என்றும் தெரிய வருகிறது. இதிலிருந்து எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளுக்கு அடியவர்களாக இருப்பவர்கள் நற்குணங்களுக்கு இருப்பிடமாக இருத்தல் வேண்டும் என்பதை உணரலாம். அதற்கு ஆண்டான்  ஒரு எடுத்துக்காட்டு.

mudhaliyandan-sripadhathirtham

சைவ அரசர்களின் விரும்பத்தகாத  செயல்களினால் எம்பெருமானார் மேல்கோட்டை (திருநாராயணபுரம்) பயணத்தின் போது ஆண்டானும் அவருடன் சென்றார். வழியில் இருந்த மிதுலாபுரி சாளக்ராமம் என்ற ஊரில் உள்ள மக்கள் வைதிக தர்மத்திற்கு மிகவும் எதிரானவர்கள். அந்த ஊரில் உள்ள நீராடும்    புஷ்கரணியில் எம்பெருமானார் ஆண்டானை அவரது திருவடியால் தண்ணீரை ஸ்பர்சிக்கச் சொன்னார். அவருடைய திருவடி ஸம்பந்தத்தால்  அங்குள்ளவர்கள்  புனிதம் அடைந்தார்கள். மறுநாள் கிராம வாசிகள் ராமானுஜரை அணுகி அவர் திருவடித் தாமரைகளை ஆச்ரயித்தார்கள். இந்நிகழ்ச்சியிருந்து ஒரு தூய ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீபாத தீர்த்தம் யாரையும் புனிதப்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

முதலியாண்டனின் மகனாகிய கந்தாடை ஆண்டான் எம்பெருமானாரின் உத்தரவு பெற்று, எம்பெருமானாரின் அர்ச்சா விக்ரஹம் ஒன்றை உருவாக்கினார். எம்பெருமானாரும் இந்த விக்ரஹத்தை மிகவும் உகந்து ஆலிங்கனம் செய்தார். எம்பெருமானாரின் அவதார ஸ்தலத்தில்  (ஸ்ரீ பெரும்புதூர்) தை பூசம் (இன்றும் இந்த நாள் குரு புஷ்யம் என்று ஸ்ரீ பெரும்புதூரில் கொண்டாடப்படுகிறது) அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த விக்ரஹம் “தாம் உகந்த திருமேனி” என்று ப்ரஸித்தமாக அறியப்படுகிறது.

ஆண்டானின் சிறப்பும், உபதேசங்களும் வ்யாக்யானத்தின் பல இடங்களில் அறிந்து கொள்ளலாம். அதில் சிலவற்றை இப்பொழுது நாம் காண்போம்.

  • திருவாய்மொழி 2.9.2 – நம்பிள்ளை  ஈடு  வ்யாக்யானம்  – ஆண்டானின் பெருந்தன்மை அழகாக இந்த சம்பவத்தின் மூலம் தெரிய வருகிறது. ஒருமுறை ஆண்டானின் சிஷ்யன் ஒருவர், ஆண்டான் வெளியூர் சென்ற போது எம்பாரிடம் சென்றார். எம்பாரும் சிஷ்யன் கைங்கர்யத்தைப் பெற்றுக்கொண்டு சிஷ்யனுக்கு ஆசார்யன் சம்பந்தம் இல்லை என்றெண்ணி அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரமும் ஆத்ம ஞானத்தையும்  போதித்தார். பிறகு ஆண்டான் ஊருக்குத் திரும்பியவுடன்  சிஷ்யன் ஆண்டானிடம் திரும்பச் சென்று பழையபடி கைங்கர்யம் செய்யலானார். இதை அறிந்த. எம்பார் விரைந்து ஆண்டானிடம் சென்று மிகவும் கவலையுடன் நான் அபச்சாரம் செய்துவிட்டேன் எனக்கு இவர் உங்களுடைய சிஷ்யன் என்று தெரியாது  என்னை மன்னிக்கவும் என்றார். அதற்கு முதலியாண்டான் மிகவும் அமைதியுடன் பதில்  கூறினார். ஒருவன் கிணற்றில் விழுந்திருக்கும்போது  அவனை இருவர் தூக்கி எடுத்தால் மிகவும் சுலபமாகிறது அதுபோல் இந்த ஸ்ரீவைஷ்ணவன் ஸம்ஸாரத்தில் இருக்கிறபடியால் நாம் இருவரும் உதவினால் மிகவும் நன்மை ஆகும் என்றார். இந்த  தூய்மையான உள்ளம் பார்ப்பதற்கு மிகவும் அரிது. இவ்வகையான பண்புகள் முதலியாண்டானிடம் உள்ளன.
  • திருவாய்மொழி 3.6.9 – நம்பிள்ளை  ஈடு  வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் அர்ச்சாவதார எம்பெருமானுடைய சிறப்பு  முழுவதும் சொல்லப்படுகிறது. ஆண்டான் “பரமபதநாதன் தன் அடியார்களை மகிழ்விப்பதற்காக அர்ச்சாவதாரமாக வந்துள்ளான் என்று எண்ணுதல் கூடாது; இங்குள்ள அர்ச்சாவதார எம்பெருமானே பரமபதநாதனாக எழுந்தருளியுள்ளான் என்று எண்ணுதல் வேண்டும்” என்று விவரிக்கிறார்.
  • திருவாய்மொழி 5.6.7 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம்: இந்தப் பதிகத்தில் எம்பெருமானின் ஸர்வ வியாபக்த்வம் (எங்கும் நிறைந்தவர் ) விளக்கப்படுகிறது. இங்கு பராங்குச நாயகியாக (நம்மாழ்வாரின் நாயிகாபாவம்) “தனது உற்றார் உறவினர்களை எம்பெருமான் அழித்து விடுவான்” என்று கூறுகிறார். ஆண்டான் அதற்கு அழகாக “எம்பெருமான் தன் தெய்வீக  அழகைக் காட்டி அவர்களை (அவரிடம் பற்றுள்ளவர்களை முற்றிலும் மயக்கி) உருக்கி விடுகிறான்” என்று விளக்குகிறார் .
  • திருவாய்மொழி 6.4.10 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – ஆண்டானின்   அர்சாவதார எம்பெருமானின் (நம்பெருமாள்) மீதுள்ள பற்றும் அக்கறையும் பற்றி நம்பிள்ளை இங்கு விவரிக்கிறார். நம்பிள்ளை, நஞ்சீயர் எம்பார் மற்றும் ஆண்டானிடையே நடந்த ஒரு உரையாடலை இங்கு விளக்குகிறார். ஸம்ஸாரத்தில் உழன்று கொண்டிருக்கும் மக்கள் எம்பெருமானுக்கு ப்ரதிகூலமாக உள்ளனர். அர்ச்சாவதார எம்பெருமானோ மிகவும் இளகிய மனத்துடன் தன் அடியார்களுக்கு ஆட்பட்டு உள்ளான். ஒரு பிரம்மோத்ஸவம் முடிந்த பிறகு  எம்பாரும் ஆண்டானும் பரஸ்பர தண்டம் ஸமர்ப்பித்தும், தழுவிக்கொண்டும், இப்படிப்பட்ட உலகத்திலும்  நம்பெருமாள் அவருடைய ஆஸ்தானத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தார் என்று மகிழ்ந்தார்கள். இவ்வாறாக முதலியாண்டான் பூர்வாசார்யார்களின் மங்களாசாசன குணங்களை நடைமுறைப்படுத்தி காட்டினார்.
  • திருவாய்மொழி 8.10.3 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – பட்டர், ஆழ்வானிடம் “சிறுமாமனிசர்” பற்றிக் கேட்ட போது (சிறு என்றால் சிறிய, மா என்றால் பெரிய  – ஒரே  மனிதரிடம் இரண்டும் உள்ளது) ஆழ்வான் “ஆண்டான்,   அருளாளாப்பெருமாள் எம்பெருமானார் மற்றும் எம்பார் ஆகியோர் உருவத்தில் சிறியவராயினும் அவர்கள் எம்பெருமானிடம் கொண்ட பக்தியானது நித்ய ஸூரிகளின் பக்தியை விடப் பெரியது. இது போல் சிறியதும் பெரியதும் ஒரே மனிதரிடம் காணப்படுகிறது” என்று விளக்குகிறார் .
  • திருவாய்மொழி 9.2.8 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ஜயந்தி புறப்பாடு நடக்கும் வேளையில் வங்கிப் புரத்து நம்பி என்பவர் இடைப் பெண்கள்  கூட்டத்தில் சேர்ந்து  எம்பெருமானை வழிபட்டார். அந்த கூட்டத்தில் இருக்கும்போது என்ன சொன்னார் என்று ஆண்டான் கேட்க  நம்பியும் நான் “விஜயஸ்வ” என்று கூறினேன் என்றார். அதற்கு ஆண்டான் நீங்கள் அந்த பெண்கள் கூட்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு  கடினமான ஸமஸ்க்ருத  மொழியில் சொல்லாமல் அவர்கள் சொந்த மொழியில் பெருமாளை வாழ்த்தி, பெருமைப்படுத்தி இருக்கலாம் என்றார்.

இதுவரை முதலியாண்டானின் சிறப்பான வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். அவர், தன்னை முழுவதும் பாகவத  நிஷ்டையில் ஈடுபடுத்திக்   கொண்டதால் எம்பெருமானாருக்கு மிகவும் பிரியாமானவரானார். நாமும் நமக்கு அத்தகைய பாகவத நிஷ்டை சிறிதாவது கிடைப்பதற்கு அவரது திருவடித் தாமரைகளில் ப்ரார்த்தனை செய்வோம்.

முதலியாண்டானின் தனியன்

பாதுகே யதிராஜஸ்ய கதயந்தி யதாக்யயா
தஸ்ய தாசரதே: பாதௌ சிரஸா தாரயாம்யஹம்

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2013/03/29/mudhaliyandan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org