அநந்தாழ்வான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

ananthazhwan

திருநக்ஷத்ரம் : சித்திரை, சித்திரை

அவதார ஸ்தலம் : சிறுபுத்தூர்/கிரங்கனுர் (பெங்களூரு-மைசூர் வழித்தடத்தில்)

ஆசார்யன் : அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

பரமபதம் அடைந்த இடம்: திருவேங்கடம்

எழுதிய கிரந்தங்கள் : வேங்கடேச இதிகாச மாலை, கோதா சது:ச்லோகி, ராமானுஜ சது:ச்லோகி

அநந்தாழ்வான் – அநந்தாசார்யார் மற்றும் அநந்தஸூரி என்று அழைக்கப்பட்டவர் எம்பெருமானாரின் பெருமைகளைக் கேள்வி பட்டு எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி  ஆகியோருடன் அவரை நாடிச் சென்றார். எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து அவருடைய நிழலில் இருக்க ஆசைப் பட்டார். அந்தச் சமயத்தில் தான் எம்பெருமானார் யஞ்ய மூர்த்தி என்பவரைத் திருத்திப் பணிகொண்டு அவரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று திருநாமமிட்டு ஸ்தாபித்திருந்தார். எனவே, தன்னை நாடிய அநந்தாழ்வானையும் மற்றவர்களையும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு சிஷ்யர் ஆக்கினார். அனைவரும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். அவர்கள் என்னதான் தன்னுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் எல்லோருமே எம்பெருமானாரின் திருவடித்தாமரைகளிலேயே ஆச்ரயித்து இருக்க வேணுமென்று அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கேட்டுக்கொண்டார். திருமலையில் எம்பெருமானாரின் திருவடி நிலைகளுக்கு அநந்தாழ்வான் என்றே பெயர்.

ananthazhwan-art1

அநந்தாழ்வானுக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள சில ஒற்றுமைகள்:

 • இருவருக்கும் ஒரே திருநக்ஷத்ரம் …சித்திரை-சித்திரை
 • இருவருமே முழுவதுமாக ஆசார்ய நிஷ்டையில் திளைத்தவர்கள். மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் திருவடிகளிலும் அநந்தாழ்வான் எம்பெருமானாரின் திருவடிகளிலும் ஆச்ரயித்து இருந்தனர்.

எம்பெருமானார் திருவாய்மொழியின் தேனான பாசுரங்களுக்கு வ்யாக்யானம் சாதித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள், “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் (3.3) நம்மாழவார் திருவேங்கடமுடையானுக்குத் தன்னுடைய நீண்ட நாள் ஆசையான உயர்ந்த கைங்கர்யங்களைச் செய்ய வேணுமென்று வெளிப்படுத்தியிருந்தார். அப்பதிகத்தில் திருவேங்கடமுடையான் உயர்ந்த புதிய புஷ்பங்களில் ஆசை உடையவராக இருந்ததைக் கூறியிருந்தார். இதை மனதில் கொண்டு எம்பெருமானார் அங்கிருந்தோரைப் பார்த்து யாரேனும் திருமலைக்குச் சென்று அழகிய நந்தவனம் அமைத்து ஆழவார் விரும்பிய அந்த புஷ்ப கைங்கர்யத்தைச் செய்ய விருப்பம் உள்ளதா எனக் கேட்க அநந்தாழ்வான் உடனே எழுந்திருந்து ஆழவார் மற்றும் எம்பெருமானாரின் அந்த திருவுள்ளத்தைத் தாம் பூர்த்தி செய்வதாகக் கூறினார். அது கேட்டு எம்பெருமானார் சந்தோஷப்பட உடனே அநந்தாழ்வான் திருமலைக்கு விடை பெற்றுச் சென்றார். அவர் முதலில் திருவேங்கடமுடையனுக்கு மங்களாசாசனம் செய்து புதிய நந்தவனம் அமைத்து அதற்கு “ராமானுஜன்” என்று பெயரிட்டு திருவேங்கடமுடையனுக்கு தினமும் புஷ்ப கைங்கர்யங்கள் செய்து வந்தார். இது கேட்டு எம்பெருமானார் அதைக் காண விருப்பம் கொண்டு தம்முடைய திருவாய்மொழி காலக்ஷேபத்தை விரைவாக முடித்துக் கொண்டு திருமலைக்குப் பயணப்பட்டார்.

வழியில் காஞ்சிபுரம் தேவப்பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிகளுக்கும் மங்களாசாஸனம் செய்துவிட்டு திருப்பதி வந்தடைந்தார். அநந்தாழ்வானும் சில ஸ்ரீவைஷ்ணவர்களும் எம்பெருமானாரை எதிர் கொண்டழைக்க மலை அடிவாரத்திற்குச் சென்றனர். ஆனால் எம்பெருமானார் திருமலையே ஆதிசேஷனின் அம்சம் எனக் கூறி அதன் மேலேற மறுத்துவிட்டார். பின் அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் “தேவரீரே மறுத்துவிட்டால் நாங்கள் எவ்வாறு ஏறுவோம்” என்று மிகத் தாழ்மையுடன் வினவ அவரும் அதை ஆமோத்தித்துப் பின் மலை மேல் ஏறினார். திருமலை வந்தடைந்தவுடன் திருமலை நம்பியே வந்து எம்பெருமானாரை வரவேற்று அழைத்துச் சென்றார். ஸ்வாமி பின் திருமலையில் அநந்தாழ்வானால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த “ராமானுஜன்” நந்தவனத்தை பார்த்து அங்கு நேர்த்தியாக வளர்க்கப்பட்ட பலவித வண்ண மலர்களைப் பார்த்து பேருவகை கொண்டார். திருமங்கை ஆழ்வார் கூறியது போல “வளர்த்ததனால் பயன் பெற்றேன்” (பரகால நாயகி ஒரு கிளி வளர்த்தாள். அது சதா சர்வ காலமும் எம்பெருமானின் திருநாமத்தையும்/சரிதத்தையும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்ததால் பரகால நாயகி அக்கிளியை “வளர்த்ததால் பயன் பெற்றேன்” என்று பேரானந்தம் கொண்டாள்). அவ்வாறே எம்பெருமானாரும் அநந்தாழ்வானின் அர்பணிப்பைப் பார்த்து பேருவகை கொண்டார்.

ஒரு சமயம் அநந்தாழ்வானும் அவரது கர்ப்பிணி மனைவியும் நந்தவனத்திற்காக. ஒரு சிறிய குளம் வெட்டிக் கொண்டு இருந்தனர். அப்போது எம்பெருமானே ஒரு சிறுவனாகத் தோற்றம் கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய வந்தான். ஆனால் தன்னுடைய ஆசார்யனின் கட்டளையை தானே நிறைவேற்ற எண்ணிய அநந்தாழ்வான் அச்சிறுவனின் உதவியை மறுத்து விட்டார். ஆனால் அநந்தாழ்வான் இல்லாத சமயத்தில் அவருடைய மனைவி அச்சிறுவனின்உதவியைப் பெற்றுக் கொண்டாள். இதைக் கேள்வியுற்ற அநந்தாழ்வான் மிகுந்த கோபம் கொண்டு அச்சிறுவனை விரட்டிக் கொண்டு ஓடினார். இறுதியில் தாம் வைத்திருந்த கடப்பாரையை அவன் மீது எறிந்தார். அக்கடப்பாரை அச்சிறுவனின் நாடியில் பட அவனும் ஓடி சன்னதிக்குள் மறைந்தான். திருவேங்கடமுடையானின் முகவாயிலும் அடி பட்டதாகக் காட்சிளிக்க, அதற்காகத்தான் நம்ம இன்றளவும் திருவேங்கடமுடையனுக்குப் பச்சைக் கற்பூரம் சார்த்தி குளிரப் பண்ணுகிறோம்.

ananthazhwan-snake

ஒரு முறை அநந்தாழ்வானை ஒரு சர்ப்பம் தீண்டிவிட்டது. அப்போது உடனிருந்தவர்கள் மிகுந்த கவலை அடைய அவர் கூறினார். “என்னைத் தீண்டிய சர்ப்பம் பலமுடையதாக இருந்தால் நான் இந்த சரீரத்தை வ்ரஜை நதியில் நீராடித் தொலைத்து விட்டுப் பின் பரமபதத்தில் இருக்கும் எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வேன். மாறாக இருந்தால் இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி திருவேங்கடத்திலேயே கைங்கர்யங்கள் செய்வேன்” என்றார். அவர் கைங்கர்யத்தில் அவ்வளவு ஊற்றம் உடையவராக விளங்கினார். தன்னுடைய தேஹ அபிமானமே இல்லாதிருந்தார்.

ananthazhwn-ants

மற்றறொரு முறை அவர் பக்கத்தில் ஒரு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவேங்கடத்திலிருந்து அவர் பிரசாதங்கள் கொண்டு வந்திருந்தார். அவற்றைப் பிரித்த போது அதில் பல எறும்புகள் இருப்பதைப் பார்த்துத் தன்னுடைய சிஷ்யர்களைப் பார்த்து அவற்றை மீண்டும் மலையிலே கொண்டு விட பணித்தார். ஏனென்றால் குலசேகர ஆழவார் கூறியது போல் (அவரும் எம்பெருமானின் பக்தர்களும் ) அவர் மலையில் ஏதேனுமாக இருக்க ஆசைப் பட்டாரே. அதனால் இந்த எறும்புகள் அவர்களாக இருக்கக் கூடும். எனவே நாம் அவர்கள் திருவேங்கடத்தில் வாழ்வதற்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றார்.

ஒரு முறை அநந்தாழவான் திருவேங்கடமுடையானுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தபோது அவரை உடனே அழைத்து வரும்படி ஒருவரை திருவேங்கடமுடையான் பணித்தார். ஆனால் அநந்தாழ்வான் தான் தொடுத்துக் கொண்டிருந்த மாலை கைங்கர்யம் முடிந்த பின் தாமதமாகத் திருவேங்கடமுடையானிடம் சென்றார். அவருடைய கால தாமதத்திற்குக் காரணம் கேட்க அதற்கு அவர், தமக்கு புஷ்பங்கள் எல்லாம் மொட்டாக மலரும் தருவாயில் இருக்கும்போதே மாலை கட்டி முடித்துவிடவேண்டும் என்றும் மேலும் சந்நிதியில் அவருக்கான கைங்கர்யங்கள் ஏதுமில்லை என்பதால் எம்பெருமானாரால் கட்டளையிடப்பட்ட “கைங்கர்யத்தைத் தவிர  வேறு கார்யம் இல்லை” என்று பதிலுரைத்தார். அதற்கு எம்பெருமான் “நான் உம்மை திருமலையிலிருந்தே வெளியேற வேண்டும் எனப் பணித்தால் என்ன செய்வீர்?” என்று வினவ அதற்கு அவர், “நீர் எனக்குச் சில காலம் முன்பாக இங்கு வந்தீர். ஆனால் நான் எம் ஆசார்யன் கட்டளையாலே இங்கு வந்து சேர்ந்தேன்.; அவ்வாறிருக்க நீர் எப்படி எம்மை வெளியேறச் சொல்ல முடியும்” என்று கேட்டார். அது கேட்ட எம்பெருமான், அநந்தாழ்வானின் மிக சிறந்த ஆசார்ய நிஷ்டையைக் கண்டு மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்.

அநந்தாழ்வானின் பெருமைகளையும் அறிவுரைகளையும் வ்யாக்யானங்களில் கூறிய படி சிலவற்றை இங்கே காண்போம்

 • பெரியாழவார் திருமொழி 4.4.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்யனுக்கு உகப்பான வார்த்தைகளைத் தவிர வேறெந்த வார்த்தைகளையும் பேச மாட்டார்கள் என்று ஆழ்வார் புகழ்கிறார். பட்டர் மேல் அநந்தாழ்வானுக்கு இருந்த பற்றுதலை (பட்டர் அநந்தாழ்வாழ்வானை விட வயதில் சிறியவராக இருந்தாலும்) மாமுனிகள் வெளிப்படுத்துகிறார். அநந்தாழ்வானுடைய அந்திமக் காலத்தில் அவர் சில ஸ்ரீவைஷ்ணவர்களைப் பார்த்து பட்டருக்கு மிகவும் நெருக்கமான/பிடித்தமான பெயர் என்று கேட்க அதற்கு அவர்கள் பட்டருக்கு மிகவும் பிடித்தமான நம்பெருமாள் பெயரான “அழகிய மணவாளன்” என்று பதில் கூறினர். அதற்கு அநந்தாழ்வான் ஒரு கணவனுடைய பெயரைச் சொல்லுவது நம் சம்பிரயதயத்திற்கு எதிரானது என்றாலும் பட்டருக்கு உகப்பானது என்பதால் தாமும் அந்தப் பெயரையே சொல்வதாகவும் கூறி அந்தத் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே பரமபதம் அடைந்தார். அவருக்கு எம்பெருமானாரின் பெயரையே சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பட்டருக்குப் பிடித்தமான பெயர் அழகிய மணவாளன் என்பதால் அதையே தாமும் கூறினார்.
 • நாச்சியார் திருமொழி 7 .2 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்: – இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் பாஞ்சஜன்யம் ஸமுத்ரத்தில் பிறந்தாலும் முடிவில் எம்பெருமானின் திவ்ய திருக்கரங்களில் சென்றடைந்தது. இதைப் பற்றி விளக்கும்போது பெரியவாச்சான் பிள்ளை, அநந்தாழ்வான் மற்றும் நஞ்சீயர் தொடர்பான விஷயத்தைக் கூறுகிறார். பட்டரால் திருத்திப் பணி கொள்ளப்பட்ட ஒரு வேதாந்தி தம்முடைய செல்வத்தையெல்லாம் மூன்று பங்காகப் பிரித்து இரண்டு பகுதிகளைத் தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும் கொடுத்து விட்டு மூன்றாவது பங்கைத் தமது ஆசார்யரான பட்டரிடம் ஸமர்ப்பித்துவிட்டுத் தாம் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டு தம்முடைய ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய விரும்பி ஸ்ரீரங்கம் வந்தார். இதைக் கேள்விப்பட்ட அநந்தாழ்வானும் அந்த வேதாந்தியிடம் “நீர் கிருஹஸ்தாச்ரமத்தில் நல்லபடியாக சௌகர்யமாகத் தானே இருந்து வந்தீர். நீர் அங்கேயே தொடர்ந்து இருந்துகொண்டு ஸம்பரதாய விஷயத்தை நன்றாக அறிந்துகொண்டு ஆசார்யனுக்கும் பாகவதர்களுக்கும் கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்து பின்பு அப்படியே பரமபதம் அடைந்திருக்கலாமே. ஏன் ஸந்யாஸம் ஏற்றுக் கொண்டீர்?” என்றார். வேறு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதற்கு “என்ன செய்ய” என்று கேட்க அநந்தாழ்வானும் “ஒருவர் திருமந்திரத்திலே பிறந்து (பரமாத்மா ஜீவாத்மா சம்பந்தத்தை அறிந்து கொண்டு) பின் த்வய மஹா மந்த்ரத்தாலே வளர்ந்து (பரமாத்மாவே உபாயம் உபேயம் என்று அறிந்து கொண்டு) அதற்குத் தகுந்தாற் போல் வாழ வேண்டும்” என்று அருளினார்.
 • நாச்சியார் திருமொழி 12.5 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் எவ்வாறு எல்லா கோபர்களும் கோபிகளும் கண்ணன் எம்பெருமான் காளியன் தலையில் மேல் நின்று நடனம் ஆடுவதைக் கேட்டு மூர்ச்சித்து விழுந்தார்கள் என்று விளக்குகிறாள். ஒரு முறை அநந்தாழ்வான் நம்பி குஹ தாசர் என்பவருடன் எம்பெருமானாரை தரிசிக்க சென்றார். அவர்கள் ஸ்ரீரங்கம் சென்று அடைந்த பொது வழியில் சில ஏகாங்கிகள் (கைங்கர்யபரர்கள்) மழித்த தலையோடு காவேரியிலிருந்து நீராடிவிட்டு வருவதைப் பார்த்துக் காரணம் வினவ அவர்கள் எம்பெருமானார் இந்த பூவுலகை நீத்து பரமபதம் அடைந்ததைச் சொன்னார்கள். இதைக் கேட்ட உடனேயே நம்பி குஹ தாசர் அருகிலிருந்த மரத்தின் மேலேறி தம் உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினார். அதற்கு அநந்தாழ்வான் “|நீர் எம்பெருமானார் பரமபதம் அடைந்த செய்தி கேள்விப்பட்ட அந்த க்ஷணமே உயிரை விட்டிருக்க வேண்டும். இப்போது மரத்தில் மீதிருந்து குதிப்பதால் உங்கள் உயிர் போகாது. ஆனால் உம்முடைய கால்கள் தான் உடைந்து போகும் என்றார்”. இந்த நிகழ்வு கோப கோபிகளுக்கு கிருஷ்ணன் மீதிருந்த பற்றுதலை அழகாக விளக்குகிறது.
 • பெருமாள் திருமொழி 4.10 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் தாம் ஏதேனுமாக வேண்டும் என்று கூறுவதன் மூலம் திருவேங்கடத்தின் மீது தாம் கொண்டிருந்த பற்றுதலைக் கூறினார். அது போல அநந்தாழ்வானும் திருவேங்கட மலைக்கும் தமக்கும் ஏதேனும் ஒரு சம்பந்தம் இருக்க வேணும் என்பதற்காக திருவேங்கடமுடையனாகவே ஆனாலும் பரவாயில்லை என்கிறார்.
 • பெரிய திருமொழி 5.5.1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் பரகால நாயகி பாவத்தில் திருவேங்கடத்தைப் பார்த்து “வேங்கடமே வேங்கடமே” என்று கதறி அந்த திவ்ய தேசத்தின் மேல் தாம் கொண்டு இருந்த அளவில்லாப் பற்றுதலைக் கூறுகிறார். இதை நஞ்சீயர், பட்டர் எவ்வாறு நம்பெருமாளை “அழகிய மணவாளா” என்று கூப்பிட்டாரோ, அநந்தாழ்வான் எவ்வாறு ஸ்ரீனிவாசனை “திருவேங்கடமுடையான்” என்று கூப்பிட்டாரோ அதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.
 • திருவாய்மொழி 6.7.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் நம்மாழ்வாருக்கு வைத்தமாநிதி எம்பெருமானிடத்திலும் திருக்கோளூர் திவ்ய தேசத்தின் மேலும் இருந்த அதீத பற்றுதலைக் கூறுகிறார். நம்பிள்ளை இதை அநந்தாழ்வானின் ஒரு நிகழ்வின் மூலம் விளக்குகிறார். அதாவது ஒருவன் அவனுடைய சொந்த ஊரான திவ்ய தேசத்தில் இருந்து கொண்டே அந்தப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதே சிறந்ததது என்பதைக் குறிப்பிடுகிறார். ஒருமுறை அநந்தாழ்வான் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் சோழ குலாந்தகன் என்ற ஊரில் ஒரு வயலில் உழவு வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அவரிடம் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்க அவரும் தாம் திருக்கோளுரைச் சேர்ந்தவன் என்று கூற பின் ஏன் நீர் உமது சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வந்தீர் எனக் கேட்டார். அதற்கு அவர் தமது சொந்த ஊரில் அவருக்கு எந்த ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்றும் அதனால் இங்கு வந்ததாகவும் சொன்னார். அது கேட்ட அநந்தாழ்வான் நீர் உமது சொந்த ஊரில் சில கழுதைகளை மேய்த்தாவது சம்பாதித்துக் கொண்டிருந்திருக்கலாம். அது திருக்கோளூர் எம்பெருமானுக்கும் நம்மாழ்வாருக்கும் மிகவும் உகப்பாக இருந்திருக்கும் .இங்கு வந்து வயலில் வேலை செய்வதற்குப் பதில் அங்கேயே இருந்து கொண்டு அவர்களுக்குக் கைங்கர்யங்கள் செய்து கொண்டு இருந்திருக்கலாம் என்றார். இதன் மூலம் இந்த உலகில் வாழும் ஜீவாத்மாக்கள் ஒரு திவ்ய தேசத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார்.
 • திருவாய்மொழி 6.8.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் பிரிவாற்றாமையால் தாம் படும் வேதனையை எம்பெருமானிடத்தில் சென்று கூற ஒரு பறவையைத் தூது விடுகிறார். அப்போது ஆழ்வார் அந்தப் பறவையிடம் அது தமக்கு தூதாகச் சென்றால் அதற்கு அவள் இந்த  ஸம்ஸாரம் என்கிற லீலா விபூதியையும் பரமபதம் ஆகிய நித்ய விபூதியையும்  இரண்டையுமே அளிப்பதாகக் கூறுகிறாள். (பராங்குச நாயகியே எம்பெருமானின் நாயகியாகவும்/மனைவியாகவும் இருப்பதால் எம்பெருமானுக்குச் சொந்தமான எல்லாமே அவளுக்கும் சொந்தம்) .அப்போது ஒருவர் பராங்குச நாயகி பின் எங்கே தங்குவாள் எனக் கேட்க அதற்கு அநந்தாழ்வான் அந்த பறவை எங்கே இடம் கொடுக்கிறதோ அங்கே இருப்பாள் என்று மிக அழகாகச் சொல்கிறார்.
 • திருவாய்மொழி 7.2.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், எம்பெருமானைப் பார்த்து “என் திருமகள் சேர் மார்பன்” என்று சொல்கிறார். அதாவது அவரே. மஹாலக்ஷ்மித் தாயாரின் உறைவிடம் என்பதால். ஆழ்வாரின் மேல் இருந்த மிகுந்த பற்றுதலால் அநந்தாழ்வான் தன்னுடைய பெண்ணிற்கு “என் திருமகள்” என்று பெயரிட்டார்.
 • வார்த்தமாலை 345 – ஒரு முறை பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார். அவரும் அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து கொண்டிருந்தது. அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார். அவரைப் பார்த்து விட்ட அநந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டினார். பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம் பட்டருடைய சிஷ்யர் என்றும், பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார். அதற்கு அநந்தாழ்வான் கூறினார், ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப் போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.
  • கொக்கு என்பது எப்போதும் மிகச் சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியை பொறுக்கிக் கொள்ளும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்) அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின் பற்றி நடக்க வேண்டும்.
  • உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும். அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாதபோது தான் செய்த நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.
  • இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல் பட வேண்டும் என்றார்.

ananthazwan-magilatreeஇன்றளவும் திருவேங்கடமுடையான் அநந்தாழ்வானை கௌரவிக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவருடைய திருநக்ஷத்ரமான சித்திரை- சித்திரையிலும் அவருடைய தீர்த்த தினமான திருவாடிப்பூரம் அன்றும் அநந்தாழ்வானின் நந்தவனத்திற்கு எழுந்தருளி தம்முடைய மாலை பிரசாதத்தையும் ஸ்ரீசடகோபத்தையும் அநந்தாழ்வான் சரம கைங்கர்யங்கள் நடந்த மகிழ மரத்திற்கு சாதிக்கிறார்.

ananthazhwan-thirumalaiஇதுவரை நாம் அநந்தாழ்வானின் சில பெருமைகளைப் பார்த்தோம்.அவர் முழுவதுமாக தான் வாழ்வை பாகவத நிஷ்டையிலேயே கழித்தார். எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கினார். நாமும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து அவருடைய பாகவத நிஷ்டையைப் போல் ஒரு துளி அளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

அநந்தாழ்வானுடைய தனியன்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம் |
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அநந்தார்ய தேசிகம் ||

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம் : http://guruparamparai.wordpress.com/2013/03/31/ananthazhwan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

nayanar

திருநக்ஷத்ரம் :  மார்கழி அவிட்டம்

அவதார ஸ்தலம் :  ஸ்ரீரங்கம்

ஆசார்யன் :  வடக்குத் திருவீதிப் பிள்ளை

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

க்ரந்தங்கள் : திருப்பாவை ஆராயிரப்படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம்,  அமலனாதிபிரான் வ்யாக்யானம், அருளிச்செயல் ரஹஸ்யம் (ஆழ்வாரின் அமுதச்சொற்களைக் கொண்டே எழுதப்பட்ட ரஹஸ்யத்ரய விவரணம்),  ஆசார்ய ஹ்ருதயம் பட்டோலை (ஆசார்ய ஹ்ருதயத்திற்கு அவரே எழுதிய வ்யாக்யானம் இப்பொழுது கிடைக்கவில்லை) மற்றும் பல.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஸ்ரீரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளை என்ற ஆசார்யருக்குத் திருக்குமாரராக நம்பெருமாளின் திருவருளால் அவதரித்தார் (இதை நாம் முன்பே வடக்குத் திருவீதிப் பிள்ளை சரித்ரத்தில் பார்த்திருக்கிறோம்).

நாயனாரும் அவருடைய மூத்த சகோதரருமான பிள்ளை லோகசார்யரும் பெருமாளும், இளையபெருமாளும் அயோத்தியில் வளர்ந்தது போலவும்; கண்ணன் எம்பெருமானும் நம்பி மூத்தபிரானும் கோகுலத்தில் வளர்ந்தது போலவும் ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து வந்தனர். அவர்கள் நம்முடைய சம்ப்ரதாயத்தில் உயர்ந்த ஆசார்யர்களான நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்றவர்களின் கடாக்ஷமும், அனுக்ரஹமும், வழிகாட்டுதலும் கிடைக்கபெற்ற மிகுந்த பாக்யவான்களாக இருந்தனர். அவர்கள் நம் சம்ப்ரதாய அர்த்த விசேஷங்களை தம் தகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளையின்  திருவடிவாரத்திலேயே கற்றனர். இவ்விரண்டு ஆசார்ய ஸிம்ஹங்களும் தம் வாழ்நாள் முழுவதும் ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்தையே கடைப்பிடித்து வாழ்ந்த தனித்துவம் உடையவராவர்.

மணவாளமாமுனிகள் தம்முடைய உபதேச ரத்தின மாலை 47வது பாசுரத்தில் நாயனாரையும் அவருடைய க்ரந்தங்களையும்  கீழ்வருமாறு சிறப்பித்திருக்கிறார்.

நஞ்சீயர் செய்த வ்யாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமை யாவைக்கும் இல்லையே
தம் சீரால் வையகுருவின் தம்பி மன்னு மணவாளமுனி
செய்யுமவை தாமும் சில

எளிய மொழிபெயர்ப்பு

பெரியவாச்சான் பிள்ளைக்கு முன்பே நஞ்சீயர் என்னும் ஆசார்யர் ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்கள் சிலவற்றுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார். பெரியவாச்சான் பிள்ளைக்குப் பின்பு, ஆத்ம குணங்கள் நிரம்பியவரும் பிள்ளை லோகாசார்யரின் அன்பு சகோதரருமான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆழ்வார்களின் ப்ரபந்தங்கள் சிலவற்றுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார்.

நாயனாரின் பெருமைகளை பிளைலோகம் ஜீயர் தம்முடைய வ்யாக்யானங்களில் ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார்.

 • நாயனாரின் சிறப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றை “தம் சீர்” என்பதை விளக்கும் இடத்தில் வெளிக்காட்டியுள்ளார். நாயனாரின் அருளிச்செயல் வ்யாக்யானங்கள் மற்ற ஆசார்யர்களின் வ்யாக்யானங்களைவிடவும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருப்பதைக் கண்டு உணர்ந்து தெரிவித்துள்ளார். இச்சிறப்பை நாம் “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும்  நாயனரின் க்ரந்தத்தை படிக்கும்பொழுது நன்கு அறிந்துகொள்ளலாம். இந்த க்ரந்தமானது பெரும்பாலும் ஆழ்வார்களின் அமுதச் சொற்களைக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. எனினும் சில சொற்கள் இதிஹாஸ, புராணங்களிலிருந்தும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
 • வையகுருவின் தம்பி” என்பதை விளக்கும்பொழுது நாயனாரின் சிறப்பானது, பிள்ளை லோகாசார்யரின் தம்பியாக இவர் அவதரித்ததாலே மேலும் ஏற்றம் பெற்றது என்று காட்டப்பட்டுள்ளது. இவர் “ஜகத்குருவரானுஜ” அதாவது பிள்ளை லோகாசார்யரின் தம்பியார் என்று மிகவும் புகழ் பெற்றிருந்தார்.

நாயனாரின் திருப்பாவை, கண்ணிநுண்  சிறுத்தாம்பு, அமலனாதிபிரான் வ்யாக்யானங்கள் மிகவும் ரஸிக்கக்கூடியவைகளாக இருந்தாலும் இவருடைய “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தமே இவருக்கு மிகவும் பெருமை சேர்த்த ஒன்றாகும்.

நாயனாரின் வ்யாக்யான க்ரந்தங்களும் / க்ரந்தங்களும்

 • நாயனாரின் திருப்பாவை 6000படி வ்யாக்யானமானது விரிவானதும், நுணுக்கமானதும், மிகவும் அழகான ஒன்றானதும் ஆகும். இந்த வ்யாக்யானத்தில் நம் சம்ப்ரதாய அர்த்த விசேஷங்களை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். நம் சம்ப்ரதாய தத்துவங்களான எம்பெருமானே அடையப்பட வேண்டியவனும் (உபேயத்வம்), அவனை அடைவதற்கு அவனே உபாயம் (உபாயத்வம்) எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபை (ஒரு காரணனுமின்றி காட்டும் தயை), பிராட்டியின் புருஷகாரம் (சேதனனுக்காக எம்பெருமானிடம் பரிந்து பேசுவது), பரகத ஸ்வீகாரம், கைங்கர்யத்தில் களை (எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும்பொழுது ஏற்படும் விரோதி) முதலியவைகளைப் பற்றி மிகவும் தெளிவாக விவரித்துள்ளார்.
 • நாயனாருடைய அமலனாதிபிரான் வ்யாக்யானம் நம் சம்ப்ரதாயத்தில் மிகவும் நேர்த்தியாகவும், அழகுறவும் எடுத்துரைக்கப்பட்ட ஒன்றாகும். இதில் நாயனார் ஆழ்வார் அனுபவித்த எம்பெருமானின் திருமேனியையும் நம் விசிஷ்டாத்வைத சித்தாந்தையும் அழகுற இணைத்து வ்யாக்யானம் செய்துள்ளார். இதை நாம் ஏற்கனவே திருப்பாணாழ்வாரின் அர்ச்சாவதார அனுபவமென்பதின் ஒரு பகுதியாக பார்த்துள்ளோம்.
 • நாயனாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானமானது பஞ்சமோபாயத்தின் (ஆசார்யனே நமக்கு எல்லாம் என்று ஏற்றுக்கொண்டு அவருக்கு கைங்கர்யம் செய்வது) சிறப்புகளை மிக அழகாக தெளிவுபடுத்துகிறது.
 • நாயனாரின் அருளிச்செயல் ரஹஸ்யம் என்ற க்ரந்தமானது ரஹஸ்ய த்ரயத்தை (திருமந்திரம், த்வயம், சரம ச்லோகம்), ஆழ்வார்களின் அருளிச்செயலான ப்ரபந்தங்களிலுள்ள சொற்களைக்கொண்டே அழகுற விவரிக்கின்றது.
 • நாயனாரின் படைப்புகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த “ஆசார்யஹ்ருதயம்” என்னும் க்ரந்தமானது நம்மாழ்வார் திருவாய்மொழி அருளியபோது அவருக்கிருந்த மனநிலையையும், திருவாய்மொழி மூலமாக ஆழ்வார் எடுத்துரைத்துள்ளதையும் ஆழ்வாரின் மனநிலையைக்கொண்டே தெளிவுபடுத்தியுள்ளார். “ஆசார்ய ஹ்ருதயம்” என்னும் க்ரந்தமானது பிள்ளை லோகாசார்யர் அருளிய “ஸ்ரீவசன பூஷணம்” என்னும் திவ்ய சாஸ்த்ரத்தின் தத்துவங்களை இன்னும் பரக்க விவரிக்கின்றது. நாம் முன்பே ஆசார்ய ஹ்ருதயம் மூலமாக நாயனார் அடைந்த அர்ச்சாவதார அனுபவங்களை  http://ponnadi.blogspot.in/2012/11/archavathara-anubhavam-nayanar-anubhavam.html என்பதில் பார்த்துள்ளோம்.

நாம் ஒருவரைப் பற்றிய சிறப்புகளை நன்கு தெரிந்துகொள்ள அவரைப்பற்றி மிகவுயர்ந்த ஆசார்யர்கள் என்ன கூறியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நாயனார் இளம் வயதிலேயே இப்பூவுலகில் தம் திருமேனியைத் துறந்து தமையனாரான பிள்ளை லோகாசார்யரை விட்டு, பரமபதம் செல்ல முடிவு செய்தார். பிள்ளை லோகாசார்யர் தன் தம்பியாரின் திருமுடியை மடியில் வைத்துக்கொண்டு (சோகக்கடலில் ஆழ்ந்து) பின்வருமாறு கூறினார்.

மாமுடும்பை மன்னு மணவாள அண்ணலொடு
சேமமுடன் வைகுந்தம் சென்றக்கால்
மாம் என்று தொட்டுரைத்த சொல்லும்
துயம் தன்னினாழ்பொருளும் எட்டெழுத்தும் இங்குரைப்பாரார்.

எளிய விளக்கம்

நாயனார் இவ்வுலகைவிட்டு பரமபதத்தை அடைந்தபின் ரஹஸ்யத்ரயத்தின் (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) சரமஸ்லோகத்தில் எம்பெருமான் தன் ஹ்ருதயத்தைத் தொட்டு  “மாம்” (நானே காப்பவன்) என்று சொன்ன ஆழ்ந்த பொருளை இனி எடுத்துரைக்கவல்லார் யார் உளர் ? என்று சோகிக்கிறார். பிள்ளை லோகாசார்யரே இப்படி சோகத்தில் ஆழும்படியானது நாயனாரின் மகிமையாகும்.

நாமும் நாயனாரின் திருவடித்தாமரைகளில் பணிந்து எம்பெருமானார் மீதும், நம் ஆசார்யன் மீதும் மிகுந்த பற்று ஏற்படவேண்டுமென்று ப்ரார்திப்போம்.

அழகிய மணவாளபெருமாள் தனியன்

த்ராவிடாம்நாய ஹ்ருதயம் குருபர்வக்ரமாகதம் |
ரம்யஜாமாத்ருதேவேந தர்சிதம் க்ருஷ்ணஸூநுநா ||

அழகியமணவாளப்பெருமாள் நாயனாரை மிகவும் பெருமைப் படுத்தும் தனியன் (ஆசார்ய ஹ்ருதயம் சேவித்த பிறகு சேவிக்கப்படுவதாகும்)

தந்தருளவேணும் தவத்தோர் தவப்பயனாய்
வந்த முடும்பை மணவாள – சிந்தையினால்
நீயுரைத்த மாறன் நினைவின் பொருளனைத்தின்
வாயுரைத்து வாழும் வகை

அடியேன் சாந்தி ராமாநுஜ தாஸி

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/12/15/azhagiya-manavala-perumal-nayanar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருக்குருகைப்பிரான் பிள்ளான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

திருநக்ஷத்ரம்: ஐப்பசி பூராடம் (ஆவணி மிருகசீர்ஷம் என இவருடைய தனியன் ஒன்றிலிருந்து தெரிய வருகிறது)

அவதார ஸ்தலம்: ஆழ்வார் திருநகரி

ஆசார்யன்: எம்பெருமானார்

அருளிச்செய்தவை: திருவாய்மொழி 6000 படி வ்யாக்யானம்

பிள்ளான், பெரியதிருமலை நம்பியின் சிறப்பு வாய்ந்த திருக்குமாரர் ஆவார்.  குருகேசர், குருகாதிநாதர் என்றும் இவர் அறியப்படுகிறார். எம்பெருமானாரே இவருக்கு இந்தத் திருநாமத்தைச் சாற்றி, திருவாய்மொழிக்கு முதல் வ்யாக்யானத்தை எழுதுமாறு பணித்தார். இதுவே ஆறாயிரப்படி என்று பிரசித்தி பெற்று விளங்குகிறது.

எம்பெருமானார்  குருகைப்பிள்ளானை, தன் மானஸ  புத்திரராக  (அபிமான  – அன்புக்குப்பாத்திரமான குமாரராக) கருதினார். ஒருமுறை எம்பெருமானாரின் சிஷ்யர்கள் பிள்ளானை எம்பெருமானரிடம் சென்று திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுதும்படி கேட்கச் சொன்னார்கள். பிள்ளானும் எம்பெருமானரிடம் தண்டன் சமர்ப்பித்து  “தேவரீர் ஸ்ரீபாஷ்யம் எழுதியுள்ளீர் , எல்லா இடத்திற்கும் யாத்திரை மேற்கொண்டு விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தியுள்ளீர், நாங்கள் இப்பொழுது தேவரீரை ஆழ்வாரின் பாசுரத்திற்கு  வ்யாக்யானம் எழுதி (மற்றவர்கள் அதைத் தவறாக அர்த்தம் செய்யாமல் இருப்பதற்கு)  மற்றும் அதை பாதுகாக்கும்படி ப்ரார்த்திக்கிறோம்” என்று விண்ணப்பித்தார். அதற்கு எம்பெருமானார் “இது மிக அவசியமே, ஆனால், அதை நான் எழுதினால், வித்வான்கள் அல்லாதவர் ஆழ்வாரின் அருளிசெயல்கள் அவ்வளவே என்று கருதலாம் மற்றும் மற்றவர்கள் இதற்கு மேலும் வ்யாக்யானம் செய்யத் தயங்கலாம். இது ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்த ஆழ்வாரின் சிறந்த அருளியச்செயலுக்கு குற்றமாகிவிடும். ஏனென்றால் பிற்காலத்தில்  அதிகார பூர்வமான பல ஆசார்யர்களால் சிறந்த வ்யாக்யானங்கள் வழங்கப் படவிருக்கலாம். ஆகையால், திருவாய்மொழியின் முதல் வ்யாக்யானத்தை ஆறாயிரம் ச்லோகம் உடைய விஷ்ணு புராணத்திற்கு இணையாக இருக்கும்படியான வ்யாக்யானம் அருளிச் செய்வதற்கு அடியேன் உமக்கு அனுமதி அளிக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு எம்பெருமானாரின் அனுமதியுடன் பிள்ளான் ஆறாயிரப்படி வ்யாக்யானத்தை அருளிச்செய்ய, பின்னர்  இதையே பட்டர் நஞ்சீயருக்கு உபதேசத்தருளினார்.

055_4762658378_lஎம்பெருமானாரின் ஆசிர்வாதத்தால் மற்றும் அவருடைய மேற்பார்வையில் நடந்த பிள்ளானின் திருமணம்

பிள்ளான் ஸ்ரீபாஷ்யம் மற்றும் பகவத் விஷயத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். பிள்ளான்  ஒருமுறை சிறுப்புத்தூரில் இருக்கும்போது, சோமாசியாண்டான்  இவரிடம் மூன்று முறை ஸ்ரீபாஷ்யத்தை கற்றுக் கொண்டார். சோமாசியாண்டான் பிள்ளானிடம் தனக்கு சிறந்த அறிவுரையை  உபதேசிக்குமாறு விண்ணப்பித்தார். பிள்ளான் சோமாசியாண்டான்க் குறித்து  நீர் “ பட்டர் பிரபாகர மீமாம்ஸைபோன்ற பிற ஸித்தாந்தங்களை விளக்க வல்லவர், ஸ்ரீபாஷ்யத்திற்கு ப்ரவர்த்தகர் என்று மேன்மை பாராட்டித் திரியாதே  எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்றிரும்” என்று அருளினார்.

எம்பெருமானார் திருநாட்டிற்கு எழுந்தருளும்போது, எம்பெருமானார் கிடாம்பி ஆச்சான், கிடாம்பி பெருமாள், எங்களாழ்வான், நடாதூராழ்வான் ஆகியோரை அழைத்து, பிள்ளானிடம் சரணடையும் படியும்,  அதே சமயத்தில் பிள்ளானிடம் இவர்களை வழி காட்டும் படியும் சொன்னார். மேலும் எம்பெருமானார் தன் காலத்துக்குப்பின் பட்டரை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை தலைமை வகித்து பிள்ளான் உட்பட எல்லோருக்கும் வழி காட்டியாக இருக்கச் சொன்னார். பிள்ளான் எம்பெருமானாரின் அபிமான குமாரர் ஆதலால் சரம கைங்கர்யத்தை அவரே முன்னின்று நடத்தினார்.

நமது வ்யாக்யானங்களில், திருக்குருகைப்பிரான் பிள்ளானின் சிறப்பை  சில ஐதிஹ்யங்களில்  காணலாம். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

 • நாச்சியார் திருமொழி 10.6 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – ஆண்டாள் இங்கு கிருஷ்ணனைப்போல நடனம் ஆடுகின்ற மயிலை வணங்குகிறாள். இதைப்போல அம்மணியாழ்வான் என்ற ஆசார்யர் தனது சிஷ்யர் ஒருவரை தண்டன் சமர்ப்பித்து வணங்குவார். இதற்கு அவர், நாம் ஸ்ரீவைஷ்ணவர்களைச் சேவிப்பது நம்முடைய சம்பிரதாயத்தில் உள்ளது, ஆகையால் சிஷ்யர் ஒருவர் தகுந்த ஸ்ரீவைஷ்ணவராக இருப்பதால் அவரைச் சேவிப்பது முறையே என்றார். இதற்கு நஞ்சீயர், சிஷ்யர்கள் போதிய ஞானம் அடையாமல் இருக்கும்போது அவர்களை  வணங்கினால் அவர்களுக்கு அஹங்காரம் மேலிட்டு  அதனால் அவர்கள் ஆன்மீக வளர்ச்சியில் குறை உண்டாகலாம் என்று வாதிட்டார். பிள்ளான் இதற்கு “ஒரு சிஷ்யர் அம்மணியாழ்வான் போன்ற  ஆசார்யரால் அனுக்ரஹிக்கப்பட்டபின் அவர்  இயல்பாகவே களங்கமற்றவராகி விடுவார், அதனால் ஆசார்யர் செயல் சரியே” என்று விளக்கினார்.
 • பெரிய திருமொழி 2.7.6 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – திருமங்கை ஆழ்வார் தன்னைப் பெண்ணாக பாவித்து (எங்களுடைய  குடும்பம் என்று சொல்லாமல்)  பரகால நாயகியின் குடும்பம் என்று சிறப்புடன் கூறுவதை இங்கு பிள்ளான் எப்படி நம்பெருமாள் நம் ஸம்ப்ரதாயத்தை எம்பெருமானாரின் தரிசனம் என்று பெயரிட்டு எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களையும் ராமானுசருடையார் (ராமானுஜ சம்பந்தம் பெற்றவர்) என்றும்,  எம்பெருமான் அவருடைய பக்தர்களை நேராக தன்னிடம் அடைவதை விட  ராமானுஜரின் சம்பந்தம்  பெற்ற பின் தன்னை அடைவதை விரும்புகிறார்.    எப்படி ஒரு அழகான சங்கிலியின் நடுவில் ஒரு கல் வைத்திருந்தால் அச்சங்கிலி எப்படி மேலும் அழகாக தோன்றுமோ அப்படித்தான் நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை என்னும்  சங்கிலித் தொடரும்  எம்பெருமானார்  நடுவில் இருப்பதால்  மேலும் அழகாக இருக்கின்றது.
 • திருவாய்மொழி 1.4.7 –  நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – நம்பிள்ளை தனது ஈடு வ்யாக்யானத்தில் நம்மாழ்வார் தாம் எம்பெருமானிடமிருந்து பிரிந்த சோகத்தில், எம்பெருமானை “அருளாத திருமாலார்” என்று அழைக்கின்றார் என்று கூறியுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்றால் ஸ்ரீமந் நாராயணன் இரக்கமற்றவர் என்றும்  (இதற்கு முரண்பாடாக எம்பெருமான் பிராட்டியுடன் உள்ள போது மிகவும் இரக்கமுள்ளவராக இருப்பார் என்றும்) அர்த்தம் விளக்கியுள்ளார். நஞ்சீயரும் இதற்கு “மிகவும் இரக்க குணமுள்ள பிராட்டியுடன் நீங்கள் இருந்தாலும் நீங்கள் அடியேனுக்கு அருள மறுக்கின்றீர்கள்” என்று ஆழ்வார் கூறியுள்ளதாக வ்யாக்யானம்  அருளியுள்ளார்.  இதை வேறு ஒரு கோணத்தில் “எம்பெருமான் பிராட்டியுடைய  திருமுகம் கண்டு மயக்கத்தில் உள்ளதால் எனக்கு அருளாமல் இருக்கின்றான் ” என்று  ஆழ்வார் கூறியுள்ளதாக  பிள்ளான் வ்யாக்யானம் அருளியுள்ளார்.
 • திருவாய்மொழி 6.9.9 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – ஆழ்வார் எம்பெருமானிடம்  ஸம்ஸாரம் என்ற துன்பக் கடலிலிருந்து தன்னை விடுவித்து திருவடித் தாமரையின் கீழ்  சேர்த்துக் கொள்ளும்படி ஏங்கினார். பிள்ளான் தன் இறுதி நாட்களில் ஆழ்வாருடைய இந்த ஏங்கலைத் தானும் எம்பெருமானிடம் பிராத்திக்க,  இதைக்கண்ட  நஞ்சீயர் மனம் வருந்தி  அழுதார். அதற்குப் பிள்ளான்  நஞ்சீயரைப் பார்த்து உயர்ந்த பரமபதத்தில் கிடைக்கும் சிறப்பான வாழ்க்கை, இந்த பூலோகத்தின் வாழ்க்கையை வித்ட  தாழ்ந்தது என்று எண்ணி நீர் வருந்துகிறீரோ என்று கேட்டு அவரை “வேதனைப்படாமல் சந்தோஷமாய் இரும்” என்றார்.

சரமோபாய நிர்ணயத்தில் பின் வரும் நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது –  உடையவர் திருவாய்மொழியின் அர்த்தத்தை  தன் அபிமான புத்ரனாகிய திருக்குருகைப்பிரான் பிள்ளானுக்கு உபதேசிக்கும்பொழுது  “பொலிக பொலிக”  என்ற பாசுரத்தை கேட்கும்பொழுது,   அதைக் கேட்ட பிள்ளான் உணர்ச்சி மேலீட்டால் பரவசத்துடன் காணப்பட்டார். இதைக் கண்ட உடையவர் எதனால் உணர்ச்சி வயப்படுகிறீர் என்று வினவினார். அதற்குப் பிள்ளான்  “ஆழ்வாரின் கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று உற்சாகமாக கூறிய பாசுரத்தில் ஆழ்வார் திரு உள்ளத்தில்  தேவரீருடைய  அவதாரத்தினால் கலி அழிந்துவிடும் என்பதை நினைத்துத்  தான் உணர்ச்சி வசப்பட்டதாக கூறினார்.  தேவரீரும் எவ்வளவு சிறப்புடையவர் என்பதை ஒவ்வொரு முறையும் தாங்கள் உபதேசிக்கும்பொழுது என்னால் கட்டுப்படுத்த முடியாமல் உணர்ச்சி வசப்படுகிறேன்.  மேலும்,  தேவரீரின் திருவாயால் திருவாய்மொழியின் அர்த்தத்தை கேட்க  நான் மிகவும் பாக்கியம் பெற்றேன்” என்றார். இதைக் கேட்ட உடையவர் மிகவும் திருப்தி அடைந்தார். அன்று இரவு பிள்ளானை அழைத்து,தனது  திருவராதனப்பெருமாளின் முன்பு நிறுத்தித் தன் திருவடியைப்  பிள்ளான் தலையில் வைத்து “எப்பொழுதும் இந்தத் திருவடித்தாமரைகளே கதி என்று  இரும், உன்னைச் சரண் அடைந்தவர்களுக்கும் இவ்வழியையே காட்டும்” என்றார்.  உடையவர் , மறுநாளே பிள்ளானை திருவாய்மொழிக்கு   ஆறாயிரப்படி வ்யாக்யானம் எழுத ஆரம்பிக்கும்படி சொன்னார் (விஷ்ணுபுராணத்தின் எழுத்து எண்ணிக்கைப்படி). இவ்வாறு உடையவர்  தன் அபிமான புதல்வரான திருகுருகைப் பிள்ளானுக்கு தனது உத்தாரகத்வத்தை வெளியிட்டார்.

ஸ்ரீவசனபூஷண திவ்ய சாஸ்திரத்தில்  பிள்ளை லோகாசார்யார் நம் ஸம்ப்ரதாயத்திற்குப் பிள்ளான் சில முக்யமான கொள்கைகளை அருளியுள்ளார் என மேற்கோள் காட்டி அவரை வெகுவாகக் கொண்டாடியுள்ளார். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்:

 • சூத்திரம் 122 – பக்தியோகத்தின் குறைகள் – சுத்தமான நீர் நிறைந்த பொற்குடத்தில்  சிறிதளவு மது சேர்ந்தாலும் எப்படி அதை அருந்த முடியாதோ, அது போல ஜீவாத்மா (என்ற குடத்தில்) சுத்தமான நீரைப்போல பக்தியில் சிறிதளவு மது போன்ற அஹங்காரம் என்ற விஷம் சேர்ந்தால் அது ஸ்வரூப  விரோதத்திற்கு இட்டுச்செல்லும்.   அஹங்காரம் இல்லாத பக்தி விரும்பப்படுகிறது. ஆனால் இது சாத்தியமாகாது ஏனென்றால், பக்தி யோகம் என்பது  பக்தி செய்பவன் மனதில் பகவானை த்ருப்திப் படுத்த நாம் இதைச் செய்கிறோம் என்ற மனப்பான்மை கொள்கிறான்.  அதற்குப் பிள்ளான், ஜீவாத்மாவிற்கு, பக்தி யோகம் என்பது  இயற்கையிலேயே வரும் சுபாவாமல்ல, ப்ரபத்தி  ஒன்றே (சரணாகதி – எம்பெருமான் ஒருவரே உபாயம்) என்று ஏற்றுக்கொள்வதே ஜீவாத்மாவிற்கு உய்யும் வழி என்கிறார்.
 • சூத்திரம் 177 – பரகத ஸ்வீகாரத்தின் சிறப்பு – எம்பெருமான்    காரணமின்றி  செய்யும் உபகாரத்தினால்தான் நாம் உய்வடைகிறோம் (கைங்கர்ய ப்ராப்தி அடைகிறோம்). எம்பெருமானையொழியத் தான் தனக்கு நன்மை தேடிக்கொள்வது தவறு; எம்பெருமானே நமக்குத் தேடித்தரும் நன்மைதான் கைக்கொள்ளத் தக்கது என்ற கருத்தை உள்ளடக்கிப் பிள்ளான் அருளிச்செய்யும் வார்த்தை ஒன்றுண்டு – “தன்னால் வரும் நன்மை விலைப்பால்போலே; அவனால் வரும் நன்மை முலைப்பால்போலே“. தன் முயற்சியாலே தான் தனக்கு உண்டாக்கிக்கொள்ளும் நன்மையானது விலைகொடுத்து வாங்கின பால் போலே ஒளபாதிகமுமாய் விரஸமுமாய்  அப்ராப்தமுமாய் இருக்கும். ஸ்வாமியான  எம்பெருமான் தானே  “இவனுக்கு இது  வேணும்” என்று விரும்பி உண்டாக்கும் நன்மையானது  முலைப்பால் போலே நிருபாதிகமுகமாய் ஸரஸமுமாய் ப்ராப்தமுமாயிருக்கும் என்றபடி.

மணவாள மாமுனிகளின் உபதேச ரத்தின மாலையில் (பாசுரம் 40 – 41) திருவாய்மொழியின் ஐந்து வ்யாக்யானங்கள் இல்லையென்றால்  திருவாய்மொழியின் அர்த்தத்தை நாம் அறிந்து கொள்ள இயலாது என்னும் கருத்தை அருளுகிறார். மாமுனிகள் “தெள்ளாறும் ஞானத் திருக்குருகைப்பிரான் பிள்ளான்” என்று சிறப்பித்துச் சொல்லியிருப்பதிலிருந்து பிள்ளான் பகவத் விஷயத்தில் தெளிந்த ஞானம் பெற்றவராய் இருந்தார் என்பது தெரிய வருகிறது. மேலும் திருவாய்மொழியின் தெய்வீக அர்த்தங்களை “பிள்ளான்  மிகவும் ப்ரேமையுடனும்   இனிமையாகவும்  விளக்குவார்” என்று  மணவாளமாமுனிகள் புகழ்கிறார். இதன் பின்னர் பட்டரின் ஆணைப்படி  நஞ்சீயர் 9000 படியும், நம்பிள்ளையின் 36000 படி  காலக்ஷேபத்தை வடக்குத்திருவீதிப்பிள்ளை பதிவு செய்துள்ளபடியையும், நம்பிள்ளையின் ஆணைப்படி பெரியவாச்சான் பிள்ளை அருளிய 24000 படியும் மற்றும் வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளிச்செய்த 12000 படியிலும் திருவாய்மொழியின் பாசுரங்களின் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தத்தை விளக்கியுள்ளனர்.

இதுவரை  திருக்குருகைப்பிரான் பிள்ளானின் சிறப்பான வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். அவர் தன்னை முழுவதும் பாகவத  நிஷ்டையில் ஈடுபடுத்திக்   கொண்டதால் எம்பெருமானாருக்கு மிகவும் பிரியாமானவரானார். நாமும் நமக்கு அத்தகைய பாகவத நிஷ்டை சிறிதாவது கிடைப்பதற்கு அவரது திருவடித் தாமரைகளில் ப்ரார்த்தனை செய்வோம்.

திருக்குருகைப்பிரான் பிள்ளானின் தனியன் (பகவத் விஷய காலக்ஷேபத்தில் பாராயணம் செய்வது)

த்ராவிடாகம ஸாரக்யம்  ராமானுஜ  பதாச்ரிதம் |
ஸுதீயம் குருகேசார்யம் நமாமி சிரஸாந்ஹவம் ||

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்:  http://guruparamparai.wordpress.com/2013/04/14/thirukkurugaippiran-pillan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

பின்பழகிய பெருமாள் ஜீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

nampillai-goshti1நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி – பின்பழகிய பெருமாள் ஜீயர் இடமிருந்து இரண்டாவது

nampillai-pinbhazakiya-perumal-jeer-srirangam நம்பிள்ளை திருவடிகளில் பின்பழகிய பெருமாள் ஜீயர், ஸ்ரீரங்கம்

திருநக்ஷத்ரம் : ஐப்பசி சதயம்

அவதார ஸ்தலம் : திருப்புட்குழி

ஆசார்யன் : நம்பிள்ளை

பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்

அருளிய க்ரந்தங்கள் : 6000  படி குரு பரம்பரா ப்ரபாவம். வார்த்தாமாலை என்ற கிரந்தத்தையும் இவர் அருளினார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

நம்பிள்ளையின் ஆத்மார்த்தமான சிஷ்யர்களில் பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருவர். இவர் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தம்முடைய 6000 படி குருபரம்பரை ப்ரபாவத்தில் அவர் நம்முடைய ஆழ்வார்  ஆசார்யர்களின் சரித்திர விவரங்களைப்  பற்றி குறிப்பிட்டுள்ளார். ஸந்யாஸியான நஞ்சீயர் எவ்வாறு க்ருஹஸ்தரான பட்டருக்குக் கைங்கர்யங்கள் செய்தாரோ அது போன்று பின்பழகிய பெருமாள் ஜீயர் (ஸந்யாஸி) நம்பிள்ளைக்கு (க்ருஹஸ்தர்) கைங்கர்யங்கள் செய்தார்.

ஒருமுறை பின்பழகிய பெருமாள் ஜீயர் உடல் நலம் சரில்லாமல் இருந்தார். அப்பொழுது அவர் மற்ற  சில ஸ்ரீவைஷ்ணவர்களிடம் தாம் விரைவில் குணமடைய வேண்டி எம்பெருமானிடம் பிரார்த்திக்கச் சொன்னார்.- இது நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசாரத்திற்கு விரோதமானது என்றும் நாம் ஒருபோதும் எம்பெருமானிடம்  எதற்காகவும் பிரார்த்திக்ககூடாது – நமது வியாதியிலிருந்து குணமடையக்கூடப் பிரார்த்திக்கக்கூடாது. ஜீயரின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்த நம்பிள்ளையின் சில சிஷ்யர்கள் நம்பிள்ளையிடமே இதைப் பற்றி விசாரித்தனர். இதற்கு நம்பிள்ளை சிஷ்யர்களைப் பார்த்து சில ஸ்வாமிகளிடம்  சென்று விசாரித்துத் தெரிந்து கொள்ளச் சொன்னார். அந்த வகையில் முதலில் எல்லா சாஸ்த்ரங்களிலும் நிபுணத்வம் பெற்ற எங்களாழ்வான் என்ற ஸ்வாமியிடம் சென்று கேட்கச் சொன்னார். அதற்கு எங்களாழ்வான் ஒருவேளை ஜீயருக்கு ஸ்ரீரங்கம் மீதுள்ள பற்றுதலாலும் இன்னும் சில காலம் அங்கு வாழ வேண்டும் என்ற ஆசையினாலும் இருக்கலாம் என்று கூறினார். அடுத்ததாக நம்பிள்ளை  தனது சிஷ்யர்களை திருநாராயணபுரத்து அரையரிடம் சென்று கேட்கச் சொன்னார். அதற்கு அவரும் ஒருவேளை ஜீயருக்கு இன்னும் தான் முழுவதுமாக முடிக்காத சில வேலைகள் இருந்திருக்கலாம் அவற்றை முடிக்கவேண்டும் என்பதற்காக இன்னும் சில காலம் வாழ விரும்பியிருக்கலாம் என்றார். அடுத்ததாக அம்மங்கி அம்மாளிடம் சென்று கேட்கச் சொன்னார். அவரும் ஒருவேளை ஜீயருக்கு நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியைப் பிரிய மனமில்லாது இன்னும் சிறிது காலம் இருந்து   நம்பிள்ளையின் காலக்ஷேப கோஷ்டியை அனுபவிக்க வேணுமென்று ப்ரார்த்தித்திருக்கலாம் என்றார். பின்பு நம்பிள்ளை தனது சிஷ்யர்களை பெரியமுதலியார் என்ற ஸ்வாமியிடத்து அனுப்பினார். அவரும் அதற்கு, அவர் ஒருவேளை நம்பெருமாளிடத்தில் கொண்ட அதீதமான பற்றுதலால் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கேயே இருக்க விருப்பியிருக்கலாம் என்றார். இறுதியாக நம்பிள்ளை ஜீயரை அழைத்து மேற்கூறிய கருத்துக்கள் எதுவாவது அவருடைய எண்ணத்திற்கு ஒத்துப் போகிறதா என்று கேட்டார். அத்தகு ஜீயர், தேவரீருக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் தேவரீரின் கருணையினால அதை என்மூலமாகவே தெரியப்படுத்த நினைக்கிறீர்கள். அடியேன் தேவரீர் தினமும் ஸ்நானம் செய்து  விட்டு வந்தவுடன் தேவரீரின் திருமேனியைக் கண்குளிரப் பார்த்துவிட்டு தேவரீருக்கு ஆலவட்டம் வீசுதல் போன்ற சில கைங்கர்யங்களை செய்து கொண்டு இருக்கிறேன்  . அத்தகைய கைங்கர்யங்களை விட்டு அதற்குள் அடியேன் எதற்குப் பரமபதம் செல்ல வேண்டும்? அதனால் தான் இன்னும் சில காலம் தொடர்ந்து வாழ விரும்புவதாகக் கூறினார். இவ்வாறு  பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு சிஷ்யருக்கு இருக்கு வேண்டிய உயர்ந்த லட்சணத்தை வெளிப்படுத்தினார். அதாவது  ஒரு ஆசார்யனின் திருமேனியில் ஒரு சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய முழுப் பற்றுதல். இதைக்கேட்ட அனைவரும் நம்பிள்ளயிடத்து ஜீயர்க்கு இருந்த  பக்தியைப் பார்த்து ப்ரமித்தனர்.

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் என்பவரை நம்பிள்ளையின் சிஷ்யராக ஆக்கிய பெருமை இவரையே சாரும். இதைப் பற்றிய விரிவான விளக்கங்களை https://guruparamparaitamil.wordpress.com/2017/01/25/naduvil-thiruvidhi-pillai-bhattar/ என்ற இணைய தளத்தில் காணலாம்.

வ்யாக்யானங்களில் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் பற்றிய குறிப்புகள்:

 • உபதேச ரத்தின மாலை 65 & 66 – பிள்ளை லோகம் ஜீயர் வ்யாக்யானம் – பரிபூரண சரணாகதியைப் பற்றியும் ஆசார்யனின் திருமேனியில் வைக்க வேண்டிய பக்தியைப் பற்றியும் பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீ வசனபூஷண திவ்ய சாஸ்திரத்திலும்  (சூத்ரம் 333), மணவாள மாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தின மாலையிலும் (பாசுரம் 65 & 66) விளக்கியுள்ளார்கள். அதில் 66 வது பாசுரத்தில் பின்பழகிய பெருமாள் ஜீயர் தன்னுடைய ஆசார்யரான நம்பிள்ளையிடத்தில் கொண்ட பக்தியினால் தான் பரமபதம் போகவேணும் என்ற எண்ணத்தையே கைவிட்டார்  என்று  மாமுனிகள் குறிப்பிட்டுள்ளார். பிள்ளை லோகம் ஜீயர் பின்பழகிய பெருமாள் ஜீயரின் ஆசார்ய நிஷ்டையை, மதுரகவியாழ்வார் – நம்மாழவார், ஆண்டாள் – பெரியாழ்வார், வடுகநம்பி – எம்பெருமானார், மற்றும் மாமுனிகள் – திருவாய்மொழிப்பிள்ளை இவர்களோடு ஒப்பிடுகிறார். ப்ரபன்னர்களுக்கு இவர்கள்  தான் ஆசார்ய நிஷ்டை என்பதற்கே  உதாரண புருஷர்களாக  விளங்கினார்கள். மேலும் பிள்ளை லோகம் ஜீயர், அப்பிள்ளையின் யதிராஜ விம்சதி வ்யாக்யானத்தில் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் பற்றிய குறிப்பை அவர் நம்பிள்ளையைளை தன் ஸ்வாமியாகவும், புகலிடமாகவும் தம்முடைய குறிக்கோளாகவும் கொண்டதைக் காட்டுகிறார்.

வார்த்தா மாலை என்னும் நூலிலும் பின்பழகிய பெருமாள் ஜீயரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன:

 • 2 – ஒரு முறை பின்பழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளையிடம் , ஸ்வரூபம் (ஜீவாத்மாவின் தன்மை), உபாயம் (வழி) மற்றும் உபேயம் (அடையவேண்டியது) பற்றிக் கேட்டார். நம்பிள்ளையும் அதற்கு ஜீவாத்மாவின் இச்சையே ஸ்வரூபம் என்றும், பகவானுடைய இரக்கமே உபாயம் என்றும், இனிமையே உபேயம் என்றும் பதிலுரைத்தார். ஜீயர் தாம் அதற்கு வேறு விதமாக எண்ணியிருப்பதாகக் கூற நம்பிள்ளை அதுகேட்டு ஆச்சர்யமுற்றார். ஜீயரும்  மிகவும் பவ்யமாகத் (தான் நம்பிள்ளையிடமிருந்து கற்றுக் கொண்டபடி) ஒரு ஸ்ரீ வைஷ்ணவனிடத்தில் சரணாகதி பண்ணுவதே தம் ஸ்வரூபம் என்றும்,  அவர்கள் நம்  மேல் வைக்கும் பற்றே  தம் உபாயம் என்றும், அவர்களுடைய ஆனந்தமே தம் குறிக்கோள் – உபேயம் என்றும் கூறினார். இது கேட்டு  நம்பிள்ளை மிகவும் ஆனந்தம் அடைந்தார்.  இவ்வாறாக தம்முடைய ஆசார்யன் முன்பாக பாகவத சேஷத்வத்தை நிர்ணயம் செய்தார்.
 • 69 – ஜீயர் த்வய மஹா  மந்திரத்தின்  அர்த்தத்தை நம்பிள்ளையிடம் கேட்டார். அதற்கு நம்பிள்ளை முதல் பகுதியில் நாம் ஸ்ரீமன் நாராயணனே நம்முடைய புகலிடம் என்றும், இரண்டாவது பகுதியில் நாம் பெருமாள் , பிராட்டி இருவருக்கும் சேர்த்து  கைங்கர்யம் செய்வதையே விரும்புகிறோம் என்றும், அந்த ஸ்ரீமன் நாராயணனே முழு ஆனந்தத்தை அடைபவன் என்றும் அதில் ஒரு சிறு துளியும் நமக்கு சுய லாபம் இருக்கக்கூடாது என்றும்  கூறினார். இவ்வாறாக சிஷ்யர்கள் ஆசார்ய நிஷ்டையோடு இருக்கவேண்டும். மேலும் ஜீயர் , பிராட்டி எப்பொழுதும் எம்பெருமானைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தால், ஜீவாத்மாவிற்கு அவள் எவ்வாறு உதவுவாள் என்று கேட்க நம்பிள்ளையும், எவ்வாறு எம்பெருமான் தான் எப்போதும் பிராட்டியின் அழகை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய படைத்தல் முதலான  செயல்களைச் செய்து கொண்டிருக்கிறானோ அது போன்று பிராட்டியும் தான் பெருமானுடைய அழகில் மயங்கி அவனை அனுபவித்துக் கொண்டிருந்தாலும்  துன்பப்படும் ஜீவாத்மாக்களுக்காக அவள் விடாது எம்பெருமானிடம் சிபாரிசு பண்ணிக் கொண்டு அவர்களை ரக்ஷித்துக் கொண்டு தான் இருப்பாள், ஏனெனில் அவள் இயற்கையாகவே புருஷகார பூதை. என்று விளக்கினார்.
 • 174 – பின்பழகிய பெருமாள் ஜீயர்  தன்னுடைய ஆசார்யன் நம்பிள்ளைக்கு  கைங்கர்யம் பண்ண வேண்டித் தன்னுடைய உடல் நலம் காக்க ப்ரார்த்தித்தது பற்றி நாம் ஏற்கனவே இந்த  பகுதியில் பார்த்து விட்டோம்.
 • 216 – நடுவில் திருவீதி பிள்ளை பட்டர் நம்பிள்ளைக்கும்  பின்பழகிய பெருமாள் ஜீயருக்கும் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பாஷணையைப் பற்றிக் கூறுகிறார். ஜீயர் நம்பிள்ளையிடம், ஒவ்வொரு முமுஷுவும் ஆழ்வாரைப் போன்றே எம்பெருமானையே முழுவதுமாகப் பற்றிக் கொண்டு அவனையே அனுபவித்துக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நாம்  இந்த லோக விஷயங்களில் பற்று வைத்துக் கொண்டு இருந்தோமேயானால் நமக்கு  எவ்வாறு பரமபதத்தில் கைங்கர்ய ப்ராப்தி கிட்டும் என்று வினவினார். அதற்கு நம்பிள்ளை, நமக்கு ஆழ்வாரைப் போன்று ப்ராப்தி இந்த சரீரத்தில் கிடைக்காவிட்டாலும், நம்முடைய ஆசார்யனின் பரிபூரண க்ருபையால் , நாம் மரணித்து பரமபதம் அடையும் போது  நமக்குள்ளும் பகவான் ஆழ்வாரைப் போன்றே எண்ணத்தையும் ஆசையையும் ஏற்படுத்தி  விடுவான். எனவே நாம் பரமபதம் அடையும் போது முற்றிலுமாகத் தூய்மையானவர்களாக மாறி எம்பெருமானுக்கு சாஸ்வதமாகக் கைங்கர்யம்  பண்ணவேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடயே  இருப்போம் என்று விளக்கம் அளித்தார்.
 • 332 – பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு முறை நம்பிள்ளையிடம் கேட்டார். “ஒருவருக்கு  எதாவது கஷ்டங்கள்/துயரங்கள் ஏற்படும்போது அவர் ஒரு ஸ்ரீவைஷ்ணவனிடத்தில் சென்று ப்ரார்த்தித்தால் அது அவனுக்கு விலகி விடுகிறதே. அது பகவானின்  சக்தியாலா  அல்லது அந்த ஸ்ரீவைஷ்ணவனின் சக்தியாலா”  என்று கேட்க அது  பகவானின்  சக்தியாலேயே என்று பதிலுரைத்தார். அதற்கு ஜீயர்  நாம் என் அதற்கு பகவனிடத்திலேயே சென்று ப்ரார்திக்கக்கூடாதா என்று கேட்க நம்பிள்ளையும் அதற்கு “கூடாது, நாம் எப்போதும் ஒரு ஸ்ரீவைஷ்ணவனை முன்னிட்டுக்கொண்டே  பகவானிடம் செல்ல வேண்டும்” என்று கூறினார். மீண்டும் ஜீயர் நம்பிள்ளையிடம் “பகவான் ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் எண்ணத்தை நிறைவேற்றியதற்கு ஏதாவது ப்ரமாணம் உண்டா” எனக் கேட்க நம்பிள்ளையும்  “அர்ஜுனன் போரில் ஜயத்ரதனை மாலை ஸூர்ய அஸ்தமனத்திற்குள் கொன்று விடுவதாக சபதம் எடுக்க , ஸர்வேச்வரனும் தான் அந்த யுத்தத்தில் ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று ஸங்கல்பம் செய்ததை மீறித் தன்னுடைய  ஸுதர்சன சக்கரத்தால் சூரியனை மறைத்தார். இதைப் பார்த்த ஜயத்ரதனும் ஸூர்ய அஸ்தமனம் ஆகிவிட்டது என்று வெளியே வர, பகவான் சட்டென்று தன்னுடைய சக்ராயுதத்தைத் திரும்பப் பெற சூரியன்  இன்னும் அஸ்தமனம் ஆகவில்லை என்று அறிந்து கொண்ட அர்ஜுனன்  ஜயத்ரதனை முடித்தான். இதிலிருந்து நாம் எம்பெருமான் ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் வார்த்தைகளை கண்டிப்பாக முடித்து வைப்பான் என்றும், நாம் எப்பொழுதுமே ஒரு ஸ்ரீவைஷ்ணவனை முன்னிட்டுக் கொண்டே எம்பெருமானிடம் செல்ல வேண்டும்” என்று கூறினார்.

இவ்வாறாக நாம் பின்பழகிய பெருமாள் ஜீயர் பற்றி ஒரு சில விஷயங்களை அறிந்து கொண்டோம். அவர் மிகச் சிறந்த ஞானஸ்தர். நம்பிள்ளையின் மிக அபிமான சிஷயர். நாமும் ஜீயரின் திருவடித்தாமரைகளில் பணிந்து அவரைப் போன்று சிறு துளியாவது பாகவத நிஷ்டை  பெற ப்ரார்த்திப்போம்.

பின்பழகிய பெருமாள் ஜீயர் தனியன்

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குறும் பஜே ||

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2013/04/21/pinbhazhagiya-perumal-jiyar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

பிள்ளை லோகம் ஜீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

pillailokam-jeeyar

திருநக்ஷத்ரம் : சித்திரை திருவோணம் (ச்ரவணம்)

அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்

ஆசார்யன்: சடகோபாசார்யர்

அருளிச் செய்தவை: தனியன் வ்யாக்யானங்கள், ராமானுஜ திவ்ய சரிதை, யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம், இராமானுச நூற்றந்தாதி வ்யாக்யானம், மாமுனிகளின் அநேக ஸ்ரீஸுக்திகளுக்கு வ்யாக்யானங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கு வ்யாக்யானங்கள், மாமுனிகளின் வாழித்திருநாமம் – “செய்ய தாமரை தாழிணை”க்கு வ்யாக்யானம், ஸ்ரீ வைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம் ஆகியவை.

காஞ்சிபுரத்தில் அவதரித்த இவர் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் (மாமுனிகளின் அஷ்ட திக் கஜங்களில் ஒருவர்)  கொள்ளுப் பேரனாவார். இவருடைய திருநாமம் வரதாசார்யர் என்பதாகும். இவர் பிரபலமாக பிள்ளை லோகம் ஜீயர் என்றும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் என்றும் அறியப் படுகிறார்.

இவர் திருகடல்மல்லை ஸ்தலசயன பெருமாள் (மஹாபலிபுரம் – மாமல்லபுரம்)  ஆலயத்தை புதுப்பித்து, கோவிலில் முறையான வழிபாடு செய்வதையும் நிலை நிறுத்தினார். இதற்காக மன்னரால் கௌரவிக்கப்பட்டு இன்றும் இவருடைய சந்ததியினர் அந்தச் சிறப்பு  கௌரவத்தை  கோவிலில் பெற்று வருகிறார்கள்.

மேலும் இவர் பெரிய பண்டிதரும் வரலாற்றாசிரியரும் ஆவார். இவருடைய வாழ்க்கையைப்  பற்றி அதிகம் தெரியவில்லையாயினும் நம்முடைய ஸம்ப்ரதாயத்திற்கு இவர் அளித்துள்ள பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

இவர் திவ்யதேசங்களுக்கு செய்த உபகாரங்களை சில கல்வெட்டுகளில் காணலாம்.

 • திருகடல்மல்லை திவ்யதேசத்தில் கி. பி. 1614 என்ற வருடத்தை பொறிக்கப்பட்ட உள்ள ஒரு தாமிரத் தட்டில், இந்த ஜீயரை யதீந்திர ப்ரவண ப்ரபாவம் ஜீயர்  என்று அழைக்கப்பட்ட  குறிப்பு உள்ளது (இதிலிருந்து அக்காலத்திலேயே இவர் மணவாள மாமுனிகளின் சரித்திரத்தை எழுதியவரென்று மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் அறியப் பட்டார் என்பது தெளிவாகிறது).
 • ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது ப்ரகாரத்தில்  கி.பி. 1614 என்ற வருடம் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், பிள்ளை லோகம் ஜீயருடைய சிஷ்யர் ஒருவர் எம்பெருமானாரின் திருநக்ஷத்ரத்தன்று பக்தர்களுக்கு சக்கரைப்பொங்கல் விநியோகத்திற்கு 120 பொற்காசுகளை மூலதனமாக கொடுத்துள்ளார் என்ற தகவல் உள்ளது.

திவ்ய ப்ரபந்தங்களின் பெரும்பாலான தனியன்களுக்கு இவர் வ்யாக்யான உரை அருளிச் செய்துள்ளார். இந்த வ்யாக்யான உரையானது தனிப்பட்ட ப்ரபந்தங்களின் முக்கியமான அம்சங்களை வெளிக்காட்டுவது மட்டுமல்லாமல் அந்தந்த  திவ்ய பிரபந்தத்தை அருளிச் செய்த ஆழ்வாரின் மனநிலையை உணர்ந்து எழுதப்பட்டவையாகும்.

இவர் அருளிச்செய்த ராமாநுஜார்ய திவ்ய சரிதையில், எம்பெருமானாரின் வாழ்க்கை வரலாறு மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கிரந்தத்தில் எம்பெருமானாரின் பல்வேறு யாத்திரைகள், அவருடைய சிஷ்யர்களுடன் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நன்றாகக் காட்டப்பட்டுள்ளன.

மேலும்  யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் மற்றும் சிலருடைய புகழ் மிக்க வாழ்க்கை வரலாற்றை அழகாக இவர் அருளிச் செய்துள்ளார். மாமுனிகளின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விரிவாக கொடுத்தது மட்டுமல்லாமல் மாமுனிகளின் உபதேசங்களை இந்த கிரந்தத்தில் அழகாக கூறியுள்ளார்.

ராமாநுஜார்ய திவ்ய சரிதையிலும் யதீந்திர ப்ரவண ப்ரபாவத்திலும் அதிகம் தமிழ் பாசுரங்கள் நிறைந்திருப்பதிலிருந்து தமிழ் மொழியில் இவருக்கு உள்ள ஞானம் தெரிய வருகிறது.

ரஹஸ்ய க்ரந்தங்கள் சிலவற்றிற்கும் இவர் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

விளாஞ்சோலைப் பிள்ளையின் ஸப்த காதைக்கு இவர் மிகவும் அற்புதமான வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார். ஸப்த காதை பிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்திரத்ரத்தின் ஸாராம்சத்தை (ஆசார்ய நிஷ்டை)   வெளிக்கொணர்ந்து காண்பிக்கும் நூலாகத் திகழ்கிறது.

மாமுனிகளின் ஸ்ரீ ஸூக்தியான உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி மற்றும் ஆர்த்தி ப்ரபந்தம் ஆகியவற்றிற்கு விரிவான வ்யாக்யானங்கள் அருளிச் செய்துள்ளார்.

இவர் எம்பெருமானார் தரிசனத்திற்கு (நம்முடைய ஸத் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான விதிமுறைகளை, கோட்பாடுகளை) ஸ்ரீவைஷ்ணவ ஸமயாசார நிஷ்கர்ஷம் என்கின்ற மிகவும் அற்புதமான உரைநடை கிரந்தத்தை அருளிச் செய்துள்ளார். இந்த கிரந்தத்தில் நிறைய ப்ரமாணங்களை மேற்கோள் காட்டுவதிலிருந்து பிள்ளை லோகம் ஜீயருக்கு சாஸ்திரத்தில் உள்ள ஆழ்ந்த ஞானத்தை உணர்ந்து கொள்ளலாம்.

இது வரை நாம், பிள்ளை லோகம் ஜீயரின் பெருமை மிக்க வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம்.

பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளுக்கு மிகவும் விரிவான வ்யாக்யானங்களை அருளிச் செய்தது, எம்பெருமானார் மற்றும் மணவாள மாமுனிகளின் சிறப்பு மிக்க வாழ்க்கையை ஆவணம் செய்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு  பெரும் தொண்டு  புரிந்துள்ளார். நாமும் இது போல் எம்பெருமானார் மற்றும் மாமுனிகளிடம் அன்புடையவராய்  இருக்க இவரது  திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.

பிள்ளை லோகம் ஜீயரின் தனியன் (யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில் உள்ளது)

ஸ்ரீசடாரி குரோர்திவ்ய ஸ்ரீபாதாப்ஜ மதுவ்ரதம் |
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரவணம் ஸ்ரீ லோகார்ய முனிம் பஜே ||

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்:  http://guruparamparai.wordpress.com/2013/04/08/pillai-lokam-jiyar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருமழிசை அண்ணாவப்பங்கார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம்

அவதார ஸ்தலம் : திருமழிசை

ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.

51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.

இவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.

க்ரந்தங்கள்

இவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:

 • ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
 • வேதவல்லி சதகம்
 • ஹேமலதாஷ்டகம்
 • அபீஷ்ட தண்டகம்
 • சுக சந்தேசம்
 • கமலா கல்யாண நாடகம்
 • மலயஜா பரிணய நாடிகா
 • ந்ருஸிம்ஹாஷ்டகம்
 • மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்
 • திருச்சந்த விருத்த ப்ரதிபதம்
 • ஸ்ரீரங்கராஜ ஸ்தவ வ்யாக்யானம்
 • மஹாவீரசரித வ்யாக்யா
 • உத்தர ராம சரித வ்யாக்யா
 • சத ச்லோகீ வ்யாக்யா
 • ராமாநுஜாஷ்டக வ்யாக்யா
 • நக்ஷத்ர மாலிகா வ்யாக்யா
 • தேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா
 • துஷ்க்கர ச்லோக டிப்பணி
 • தினசர்யா
 • ஷண்மத தர்சனி
 • லக்ஷ்ம்யா உபாயத்வ நிராஸ:
 • லக்ஷ்மீ விபுத்வ நிராஸ:
 • ஸூக்தி ஸாதுத்வ மாய்யா
 • தத்வ ஸுதா
 • தத்வ ஸார வ்யாக்யா
 • ஸச்சரித்ர பரித்ராணம்
 • பழனடை விளக்கம்
 • த்ரிம்சத் பிரச்னோத்தரம்
 • லக்ஷ்மீ மங்கள தீபிகா
 • ராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்
 • அநு பிரவேச ச்ருதி விவரணம்
 • ”சைலோக்னிச்ச” ச்லோக வ்யாக்யா
 • மஹீஸார விஷய சூர்ணிகா
 • “ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்
 • ஸச்சர்யக்ஷகம்
 • ப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:
 • ந்யாய மந்தரம்
 • தாத்பர்ய ஸச்ச்ரீகரம்
 • வசஸ் சுதா மீமாம்ஸா
 • வசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்
 • ப்ரஹ்மவத்வதங்கம்
 • லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
 • வரணபஞ்ச விம்சதி:

இவ்வாறு தமது அளப்பரிய ஞான வைபவத்தால் ஸம்ப்ரதாயப் பெரும்பணியாற்றிய அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் வைபவம் சிறிதே அனுபவித்தோம். நாமும் இவரின் திருவடிகளில் பணிந்து, பகவத் விஷயத்தில் சிறிது ஞானத்தைப் ப்ரார்த்திப்போம்.

இவர் தனியன்:

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/06/26/thirumazhisai-annavappangar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருமாலை ஆண்டான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

thirumalai-andan

திருநக்ஷத்ரம் : மாசி  மகம்
அவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை
ஆசார்யன் : ஆளவந்தார்
சிஷ்யர்கள் :  எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப  சிஷ்யர்)

ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர்  மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார்.

ஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது சம்பிரதாயத்தின் பல அம்சங்களையும் கற்றுத்தருமாறு பணித்தார். அந்த விதத்தில் திருமாலை ஆண்டானுக்கு திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றுத்தரும் பொறுப்பு திருமாலை ஆண்டானுக்கு வழங்கப்பட்டது. ஆளவந்தார் பரமபதம் அடைந்தபொழுது ஸ்ரீரங்கம் வந்தடைந்த எம்பெருமானாரை, திருக்கோஷ்டியூர் நம்பி திருமாலை ஆண்டானிடம் அழைத்துச் சென்று அவரிடம் நம்மாழ்வார்  அருளிய திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அறிந்து கொள்ளுமாறு பணித்தார்.

திருமாலை ஆண்டான் எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை எல்லாம் தாம் ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்டபடி ஸாதித்தார். அப்போது இடையிடையே சில பாசுரங்களுக்குத் தமக்குத் தோன்றிய அர்த்தங்களை (ஆண்டானின் அர்த்தங்களிலிருந்து வேறுபட்டவை) எம்பெருமானார் எடுத்துரைத்தார். அது கேட்டு திருமாலை ஆண்டான் எம்பெருமானார் தனக்குத் தோன்றிய அர்த்தங்களை  எல்லாம் கூறுகிறார் தவிர அவையெல்லாம் ஆளவந்தாரிடம் தாம் கேட்டவை அல்ல என்று எண்ணினார்.  ஒருமுறை திருவாய்மொழி 2.3.3  “அறியாக் காலத்துள்ளே” பாசுரத்தில் அர்த்தத்தை விளக்கும்போது,  ஆழ்வார்,  எம்பெருமான் தனக்கு நிறைந்த ஞானத்தைக் கொடுத்தருளியபோதும் தம்மை இந்த உடலோடே இந்த ஸம்ஸாரத்திலேயே இருக்க வைத்துவிட்டாரே என்று வருத்தப்படுவதாக கூறினார் . ஆனால் எம்பெருமானார் அதை வேறு விதமாகப் பார்த்து, (பாசுரத்தின் இரண்டாவது வரியை முதலில் வைத்து ) அர்த்தத்தைக் கூறினார். அதாவது, ஆழ்வாரின்  இந்த பதிகம் (10 பாசுரங்கள்) அவருடைய ஆனத்தையே காட்டுவதாகவே அமைந்துள்ளது. அதில் இப்பாசுரத்தில் ஆழ்வார் தாம் இதுவரை சம்சாரத்தில் உழன்றுகொண்டிருந்ததாகவும் ஆனால் திடீரென்று எம்பெருமான் தன்னை வாழ்த்திவிட்டதாகவும் சந்தோஷத்தோடே கூறுவதாகவும் சொன்னார்.  இதைக்கேட்டு வருத்தமுற்ற ஆண்டான் தாம் இதுவரை இந்த மாதிரி அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டது இல்லை என்றும், எம்பெருமானார் புதிது புதிதாக அர்த்தங்களை தாமே உருவாக்குகிறார் என்றும் அது எவ்விதம் விச்வாமித்ரர் திரிசங்கு மஹாராஜாவிற்காக ஒரு புதிய லோகத்தைத் தோற்றுவித்தாரோ அது போன்று உள்ளது என்று கூறினார். அத்துடன் அவருக்குத் தன் காலக்ஷேபத்தையும் நிறுத்திவிட்டார். அதைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி உடனே திருக்கோஷ்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் விரைந்து ஆண்டானிடம்   நடந்ததைக் கேட்டறிந்தார். அதற்கு எம்பெருமானார் தொடர்ந்து தாம் ஆளவந்தாரிடம் கேட்டறியாத புது புது அர்த்தங்களை சொல்லிக்கொண்டு வருவதாக ஆண்டான் கூறினார். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி முழுவதும் சொன்னபோது, நம்பி தாம் அந்த அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டிருப்பதாகவும், அந்த பாசுரத்திற்கு அது நியாயமான விளக்கமே என்றும் கூறினார். மேலும் அவர் எம்பெருமான் எவ்வாறு சாந்தீபனியிடம் கற்றுக்கொண்டாரோ அது போன்றே ராமானுஜரும் உம்மிடம் திருவாய்மொழி கற்றுக்கொள்கிறார் என்றும், மேலும் ஆளவந்தாரின் ஹ்ருதயத்தில் இல்லாத எந்தக் கருத்தையும் அவர் சொல்ல மாட்டார் என்றும்,  எனவே ராமானுஜருக்குத் தெரியாத எதையும் நீர் கற்றுக் கொடுப்பதாக எண்ண வேண்டாம் என்றும்  கூறினார்.  பின்பு அவர் ஆண்டானையும் பெரிய நம்பியையும் எம்பெருமானாரின்  மடத்துக்கு அழைத்துவந்து ஆண்டானிடம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்படி எம்பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். தொடர்ந்து வேறு  ஒரு பாசுரத்திற்கு எம்பெருமானார் ஆண்டானின் அர்த்ததிலிருந்து மாறுபட்ட ஒரு அர்த்தத்தைக் கூறும்போது, ஆண்டான் எம்பெருமானாரிடம் நீர் ஆளவந்தாரைச் சந்திக்காமலே உமக்கு இந்த அர்த்தங்கள் எல்லாம் எவ்வாறு தெரிந்தது எனக் கேட்க , அதற்கு எம்பெருமானார் தாம் ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் போன்றவர் என்று சொன்னார் (துரோணாசார்யாரை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளாமல் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொண்டவன் ஏகலவ்யன்). எம்பெருமானாரின் பெருமைகளை உணர்ந்த ஆண்டான் அவரை வணங்கி தாம் ஆளவந்தாரிடமிருந்து கேட்காமல் இழந்ததை எம்பெருமானாரிடமிருந்து அறிந்து கொண்டதை எண்ணி மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்.

ஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் இடையே ஏற்பட்ட பல முக்கிய சுவாரஸ்யமான/வித்யாசமான குறிப்புகளை நாம் வ்யாக்யானங்களிலிருந்து காண முடிகிறது. அவற்றுள் சில:

 • திருவாய்மொழி 1 .2 – நம்பிள்ளை வ்யாக்யானம் : “வீடு மின் முற்றவும்”  பதிகம் முன்னுரை – இந்தப் பதிகத்தின் காலக்ஷேபத்தின் போது தாம் ஆளவந்தாரிடம்  கேட்டதுபோல, எம்பெருமானாருக்கு ப்ரபத்தி (சரணாகதி) யோகத்தைப் பற்றி விளக்கினார்.  அதையே எம்பெருமானாரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்தவுடன் இந்தக் கருத்தை மாற்றி இந்தப் பதிகம் பக்தி யோகத்தைப் பற்றி விளக்குவதாகக் கூறினார். ஏனெனில் ப்ரபத்தி என்பது மிகவும் ரஹஸ்யமானது என்றும் சுலபமாக விபரீத அர்த்தம் பண்ணைக் கூடியது என்றும் கூறினார். எம்பெருமானார் இதை  ஸாத்ய  பக்தியாக விளக்கினார் (என்னுடைய முயற்சியால் நான் இந்த பக்தியைப் பண்ணுகிறேன் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லாமல் எம்பெருமானின் சந்தோஷத்திற்காக மட்டுமே இந்த பக்தியை ஆத்மார்த்தமாகப்  பண்ணுவது). இந்த  ஸாத்ய  பக்தி என்பது உபாய/ஸாதன பக்தியிலிருந்து வேறு பட்டது ஆகும் (பொதுவாக பக்தி யோகம் என்றே குறிப்பிடப்படுகிறது). எம்பாரும் எம்பெருமானாரைப் பின்பற்றி இவ்வாறே விளக்குகிறார்.
 • திருவாய்மொழி 2 .3 .1 – நம்பிள்ளை வ்யாக்யானம் – “தேனும் பாலும் கன்னலும்  அமுதுமொத்தே – கலந்தொழிந்தோம்” என்ற பாசுரத்தை விளக்கும் போது தாம் ஆளவந்தாரிடம் கேட்டபடி, ஆழ்வார் , எம்பெருமானும் தாமும் இயற்கையாக தேனும் தேனும், பாலும் பாலும், கலப்பது போலக் கலந்தோம் என்று கூறுவதாக விளக்கினார். ஆனால் எம்பெருமானார் அதற்கு ஆழ்வார், எம்பெருமானும் தாமும், தேன் பால் கற்கண்டு  போன்ற சுவையான பதார்தங்களைக் கலந்தால் கிடைக்கும் அமுதமான சுவையை  கலந்து அனுபவித்ததாக விளக்கினார்.
 • நாச்சியார்  திருமொழி  1 .1 .6 – வ்யாக்யானம் – ஆண்டானுடைய ஆசார்ய பக்தியைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். ஆண்டான் வழக்கமாகக் கூறுவாராம்: நாம் இந்த உடம்பையும் அது சார்ந்தவைகள் மீதுள்ள பற்றையும் விட்டொழிக்கவேண்டும் என்றாலும் இந்த உடலை புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் இந்த உடலால் தான் நான்  ஆளவந்தாரின் சம்பந்தம் கிடைக்கப் பெற்றேன் என்பாராம்.

சரமோபாய நிர்ணயத்தில் (எம்பெருமானாரின் பெருமைகளை பற்றிச் சொல்லும் க்ரந்தம்) திருமாலை ஆண்டான் பொலிக பொலிக பாசுரத்தின் (திருவாய்மொழி 5.2) அர்த்தங்களை காலக்ஷேபம் பண்ணிக்கொண்டிருக்கும்போது “திருக்கோஷ்டியூர் நம்பி அந்த கோஷ்டியினரைப் பார்த்து, இந்த பாசுரத்தால் குறிக்கப்படுபவர் எம்பெருமானாரே” என்று கூறியதாக நாயனார் ஆச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். இதைக் கேட்ட ஆண்டானும் மிகவும் களிப்புற்று இனித் தாம் எம்பெருமானாரையே ஆளவந்தாராகக் (அவருடைய ஆசார்யன்) கருத்தப்போவதாகக் கூறினார். இந்த விஷயம் http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html என்ற வலைத்தளத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆளவந்தார் மற்றும் எம்பெருமானாரிடத்தில் மிகவும் பற்றுயுடைய  திருமாலைலை ஆண்டானின் திருவடித்தாமரைகளை ஆச்ரயிப்போம் !!

திருமாலை ஆண்டான்  தனியன்

ராமாநுஜ முநீந்த்ராய  த்ராமிடீ  ஸம்ஹிதார்த்தம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம்  விபஸ்சிதம் ||

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/02/24/thirumalai-andan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org