Monthly Archives: ஜனவரி 2017

திருமழிசை அண்ணாவப்பங்கார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

திருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம்

அவதார ஸ்தலம் : திருமழிசை

ஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர்

மஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.

இளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.

51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.

இவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.

க்ரந்தங்கள்

இவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:

 • ஸ்ரீ பக்தி ஸாரோதயம்
 • வேதவல்லி சதகம்
 • ஹேமலதாஷ்டகம்
 • அபீஷ்ட தண்டகம்
 • சுக சந்தேசம்
 • கமலா கல்யாண நாடகம்
 • மலயஜா பரிணய நாடிகா
 • ந்ருஸிம்ஹாஷ்டகம்
 • மாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்
 • திருச்சந்த விருத்த ப்ரதிபதம்
 • ஸ்ரீரங்கராஜ ஸ்தவ வ்யாக்யானம்
 • மஹாவீரசரித வ்யாக்யா
 • உத்தர ராம சரித வ்யாக்யா
 • சத ச்லோகீ வ்யாக்யா
 • ராமாநுஜாஷ்டக வ்யாக்யா
 • நக்ஷத்ர மாலிகா வ்யாக்யா
 • தேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா
 • துஷ்க்கர ச்லோக டிப்பணி
 • தினசர்யா
 • ஷண்மத தர்சனி
 • லக்ஷ்ம்யா உபாயத்வ நிராஸ:
 • லக்ஷ்மீ விபுத்வ நிராஸ:
 • ஸூக்தி ஸாதுத்வ மாய்யா
 • தத்வ ஸுதா
 • தத்வ ஸார வ்யாக்யா
 • ஸச்சரித்ர பரித்ராணம்
 • பழனடை விளக்கம்
 • த்ரிம்சத் பிரச்னோத்தரம்
 • லக்ஷ்மீ மங்கள தீபிகா
 • ராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்
 • அநு பிரவேச ச்ருதி விவரணம்
 • ”சைலோக்னிச்ச” ச்லோக வ்யாக்யா
 • மஹீஸார விஷய சூர்ணிகா
 • “ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்
 • ஸச்சர்யக்ஷகம்
 • ப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:
 • ந்யாய மந்தரம்
 • தாத்பர்ய ஸச்ச்ரீகரம்
 • வசஸ் சுதா மீமாம்ஸா
 • வசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்
 • ப்ரஹ்மவத்வதங்கம்
 • லக்ஷ்மீ ஸ்தோத்ரம்
 • வரணபஞ்ச விம்சதி:

இவ்வாறு தமது அளப்பரிய ஞான வைபவத்தால் ஸம்ப்ரதாயப் பெரும்பணியாற்றிய அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் வைபவம் சிறிதே அனுபவித்தோம். நாமும் இவரின் திருவடிகளில் பணிந்து, பகவத் விஷயத்தில் சிறிது ஞானத்தைப் ப்ரார்த்திப்போம்.

இவர் தனியன்:

ஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்
ஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |
ஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்
ஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/06/26/thirumazhisai-annavappangar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருமாலை ஆண்டான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

thirumalai-andan

திருநக்ஷத்ரம் : மாசி  மகம்
அவதார ஸ்தலம் : திருமாலிருஞ்சோலை
ஆசார்யன் : ஆளவந்தார்
சிஷ்யர்கள் :  எம்பெருமானார் (கிரந்த காலக்ஷேப  சிஷ்யர்)

ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர்களில் ஒருவர் திருமாலை ஆண்டான். இவர்  மாலாதாரர் என்றும் ஸ்ரீ குணபூர்ணர் என்றும் வேறு பெயர்களாலும் அறியப்படுகிறார்.

ஆளவந்தார் தமது ஐந்து பிரதான சிஷ்யர்களை அழைத்து அவர்களை எம்பெருமானாருக்கு நமது சம்பிரதாயத்தின் பல அம்சங்களையும் கற்றுத்தருமாறு பணித்தார். அந்த விதத்தில் திருமாலை ஆண்டானுக்கு திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களைக் கற்றுத்தரும் பொறுப்பு திருமாலை ஆண்டானுக்கு வழங்கப்பட்டது. ஆளவந்தார் பரமபதம் அடைந்தபொழுது ஸ்ரீரங்கம் வந்தடைந்த எம்பெருமானாரை, திருக்கோஷ்டியூர் நம்பி திருமாலை ஆண்டானிடம் அழைத்துச் சென்று அவரிடம் நம்மாழ்வார்  அருளிய திருவாய்மொழியின் அர்த்த விசேஷங்களை அறிந்து கொள்ளுமாறு பணித்தார்.

திருமாலை ஆண்டான் எம்பெருமானாருக்குத் திருவாய்மொழியின் அர்த்தங்களை எல்லாம் தாம் ஆளவந்தாரிடம் கற்றுக்கொண்டபடி ஸாதித்தார். அப்போது இடையிடையே சில பாசுரங்களுக்குத் தமக்குத் தோன்றிய அர்த்தங்களை (ஆண்டானின் அர்த்தங்களிலிருந்து வேறுபட்டவை) எம்பெருமானார் எடுத்துரைத்தார். அது கேட்டு திருமாலை ஆண்டான் எம்பெருமானார் தனக்குத் தோன்றிய அர்த்தங்களை  எல்லாம் கூறுகிறார் தவிர அவையெல்லாம் ஆளவந்தாரிடம் தாம் கேட்டவை அல்ல என்று எண்ணினார்.  ஒருமுறை திருவாய்மொழி 2.3.3  “அறியாக் காலத்துள்ளே” பாசுரத்தில் அர்த்தத்தை விளக்கும்போது,  ஆழ்வார்,  எம்பெருமான் தனக்கு நிறைந்த ஞானத்தைக் கொடுத்தருளியபோதும் தம்மை இந்த உடலோடே இந்த ஸம்ஸாரத்திலேயே இருக்க வைத்துவிட்டாரே என்று வருத்தப்படுவதாக கூறினார் . ஆனால் எம்பெருமானார் அதை வேறு விதமாகப் பார்த்து, (பாசுரத்தின் இரண்டாவது வரியை முதலில் வைத்து ) அர்த்தத்தைக் கூறினார். அதாவது, ஆழ்வாரின்  இந்த பதிகம் (10 பாசுரங்கள்) அவருடைய ஆனத்தையே காட்டுவதாகவே அமைந்துள்ளது. அதில் இப்பாசுரத்தில் ஆழ்வார் தாம் இதுவரை சம்சாரத்தில் உழன்றுகொண்டிருந்ததாகவும் ஆனால் திடீரென்று எம்பெருமான் தன்னை வாழ்த்திவிட்டதாகவும் சந்தோஷத்தோடே கூறுவதாகவும் சொன்னார்.  இதைக்கேட்டு வருத்தமுற்ற ஆண்டான் தாம் இதுவரை இந்த மாதிரி அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டது இல்லை என்றும், எம்பெருமானார் புதிது புதிதாக அர்த்தங்களை தாமே உருவாக்குகிறார் என்றும் அது எவ்விதம் விச்வாமித்ரர் திரிசங்கு மஹாராஜாவிற்காக ஒரு புதிய லோகத்தைத் தோற்றுவித்தாரோ அது போன்று உள்ளது என்று கூறினார். அத்துடன் அவருக்குத் தன் காலக்ஷேபத்தையும் நிறுத்திவிட்டார். அதைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி உடனே திருக்கோஷ்டியூரிலிருந்து ஸ்ரீரங்கம் விரைந்து ஆண்டானிடம்   நடந்ததைக் கேட்டறிந்தார். அதற்கு எம்பெருமானார் தொடர்ந்து தாம் ஆளவந்தாரிடம் கேட்டறியாத புது புது அர்த்தங்களை சொல்லிக்கொண்டு வருவதாக ஆண்டான் கூறினார். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி முழுவதும் சொன்னபோது, நம்பி தாம் அந்த அர்த்தத்தை ஆளவந்தாரிடம் கேட்டிருப்பதாகவும், அந்த பாசுரத்திற்கு அது நியாயமான விளக்கமே என்றும் கூறினார். மேலும் அவர் எம்பெருமான் எவ்வாறு சாந்தீபனியிடம் கற்றுக்கொண்டாரோ அது போன்றே ராமானுஜரும் உம்மிடம் திருவாய்மொழி கற்றுக்கொள்கிறார் என்றும், மேலும் ஆளவந்தாரின் ஹ்ருதயத்தில் இல்லாத எந்தக் கருத்தையும் அவர் சொல்ல மாட்டார் என்றும்,  எனவே ராமானுஜருக்குத் தெரியாத எதையும் நீர் கற்றுக் கொடுப்பதாக எண்ண வேண்டாம் என்றும்  கூறினார்.  பின்பு அவர் ஆண்டானையும் பெரிய நம்பியையும் எம்பெருமானாரின்  மடத்துக்கு அழைத்துவந்து ஆண்டானிடம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும்படி எம்பெருமானாரிடம் வேண்டிக் கொண்டார். தொடர்ந்து வேறு  ஒரு பாசுரத்திற்கு எம்பெருமானார் ஆண்டானின் அர்த்ததிலிருந்து மாறுபட்ட ஒரு அர்த்தத்தைக் கூறும்போது, ஆண்டான் எம்பெருமானாரிடம் நீர் ஆளவந்தாரைச் சந்திக்காமலே உமக்கு இந்த அர்த்தங்கள் எல்லாம் எவ்வாறு தெரிந்தது எனக் கேட்க , அதற்கு எம்பெருமானார் தாம் ஆளவந்தாருக்கு ஏகலவ்யன் போன்றவர் என்று சொன்னார் (துரோணாசார்யாரை நேரில் சந்தித்து கற்றுக் கொள்ளாமல் எல்லாக் கலைகளையும் கற்றுக் கொண்டவன் ஏகலவ்யன்). எம்பெருமானாரின் பெருமைகளை உணர்ந்த ஆண்டான் அவரை வணங்கி தாம் ஆளவந்தாரிடமிருந்து கேட்காமல் இழந்ததை எம்பெருமானாரிடமிருந்து அறிந்து கொண்டதை எண்ணி மிகவும் ஸந்தோஷம் அடைந்தார்.

ஆண்டானுக்கும் எம்பெருமானாருக்கும் இடையே ஏற்பட்ட பல முக்கிய சுவாரஸ்யமான/வித்யாசமான குறிப்புகளை நாம் வ்யாக்யானங்களிலிருந்து காண முடிகிறது. அவற்றுள் சில:

 • திருவாய்மொழி 1 .2 – நம்பிள்ளை வ்யாக்யானம் : “வீடு மின் முற்றவும்”  பதிகம் முன்னுரை – இந்தப் பதிகத்தின் காலக்ஷேபத்தின் போது தாம் ஆளவந்தாரிடம்  கேட்டதுபோல, எம்பெருமானாருக்கு ப்ரபத்தி (சரணாகதி) யோகத்தைப் பற்றி விளக்கினார்.  அதையே எம்பெருமானாரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் பிற்காலத்தில் அவர் ஸ்ரீ பாஷ்யம் எழுதி முடித்தவுடன் இந்தக் கருத்தை மாற்றி இந்தப் பதிகம் பக்தி யோகத்தைப் பற்றி விளக்குவதாகக் கூறினார். ஏனெனில் ப்ரபத்தி என்பது மிகவும் ரஹஸ்யமானது என்றும் சுலபமாக விபரீத அர்த்தம் பண்ணைக் கூடியது என்றும் கூறினார். எம்பெருமானார் இதை  ஸாத்ய  பக்தியாக விளக்கினார் (என்னுடைய முயற்சியால் நான் இந்த பக்தியைப் பண்ணுகிறேன் என்ற எண்ணம் ஒரு துளியும் இல்லாமல் எம்பெருமானின் சந்தோஷத்திற்காக மட்டுமே இந்த பக்தியை ஆத்மார்த்தமாகப்  பண்ணுவது). இந்த  ஸாத்ய  பக்தி என்பது உபாய/ஸாதன பக்தியிலிருந்து வேறு பட்டது ஆகும் (பொதுவாக பக்தி யோகம் என்றே குறிப்பிடப்படுகிறது). எம்பாரும் எம்பெருமானாரைப் பின்பற்றி இவ்வாறே விளக்குகிறார்.
 • திருவாய்மொழி 2 .3 .1 – நம்பிள்ளை வ்யாக்யானம் – “தேனும் பாலும் கன்னலும்  அமுதுமொத்தே – கலந்தொழிந்தோம்” என்ற பாசுரத்தை விளக்கும் போது தாம் ஆளவந்தாரிடம் கேட்டபடி, ஆழ்வார் , எம்பெருமானும் தாமும் இயற்கையாக தேனும் தேனும், பாலும் பாலும், கலப்பது போலக் கலந்தோம் என்று கூறுவதாக விளக்கினார். ஆனால் எம்பெருமானார் அதற்கு ஆழ்வார், எம்பெருமானும் தாமும், தேன் பால் கற்கண்டு  போன்ற சுவையான பதார்தங்களைக் கலந்தால் கிடைக்கும் அமுதமான சுவையை  கலந்து அனுபவித்ததாக விளக்கினார்.
 • நாச்சியார்  திருமொழி  1 .1 .6 – வ்யாக்யானம் – ஆண்டானுடைய ஆசார்ய பக்தியைப் பெரியவாச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். ஆண்டான் வழக்கமாகக் கூறுவாராம்: நாம் இந்த உடம்பையும் அது சார்ந்தவைகள் மீதுள்ள பற்றையும் விட்டொழிக்கவேண்டும் என்றாலும் இந்த உடலை புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் இந்த உடலால் தான் நான்  ஆளவந்தாரின் சம்பந்தம் கிடைக்கப் பெற்றேன் என்பாராம்.

சரமோபாய நிர்ணயத்தில் (எம்பெருமானாரின் பெருமைகளை பற்றிச் சொல்லும் க்ரந்தம்) திருமாலை ஆண்டான் பொலிக பொலிக பாசுரத்தின் (திருவாய்மொழி 5.2) அர்த்தங்களை காலக்ஷேபம் பண்ணிக்கொண்டிருக்கும்போது “திருக்கோஷ்டியூர் நம்பி அந்த கோஷ்டியினரைப் பார்த்து, இந்த பாசுரத்தால் குறிக்கப்படுபவர் எம்பெருமானாரே” என்று கூறியதாக நாயனார் ஆச்சான் பிள்ளை குறிப்பிடுகிறார். இதைக் கேட்ட ஆண்டானும் மிகவும் களிப்புற்று இனித் தாம் எம்பெருமானாரையே ஆளவந்தாராகக் (அவருடைய ஆசார்யன்) கருத்தப்போவதாகக் கூறினார். இந்த விஷயம் http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html என்ற வலைத்தளத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆளவந்தார் மற்றும் எம்பெருமானாரிடத்தில் மிகவும் பற்றுயுடைய  திருமாலைலை ஆண்டானின் திருவடித்தாமரைகளை ஆச்ரயிப்போம் !!

திருமாலை ஆண்டான்  தனியன்

ராமாநுஜ முநீந்த்ராய  த்ராமிடீ  ஸம்ஹிதார்த்தம் |
மாலாதர குரும் வந்தே வாவதூகம்  விபஸ்சிதம் ||

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/02/24/thirumalai-andan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

nampillai-goshti1நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி – நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் (இடப் பக்கத்தில் இருந்து மூன்றாவது)

திருநக்ஷத்திரம் : ஐப்பசி அவிட்டம்
அவதாரஸ்தலம் : ஸ்ரீரங்கம்
ஆசார்யன்  : அவருடைய தகப்பனார் (பட்டர்), நம்பிள்ளை
சிஷ்யர் : வலமழகியார்
பரமபதம் அடைந்த இடம்  :  ஸ்ரீரங்கம்
அவர் எழுதிய நூல்கள் :  திருவாய்மொழி 125000  படி வ்யாக்யானம் ,  பிஷ்ட பசு நிர்ணயம், அஷ்டாக்ஷர  தீபிகை, ரஹஸ்ய த்ரயம், த்வய பீடக்கட்டு,  தத்வ விவரணம், ஸ்ரீவத்ச விம்சதி முதலியவை

இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும் பேரன் என்றும் சொல்லப்படுகிறார். இவர்  முதலில் உத்தண்டபட்டர் என்று பெயரிடப்பட்டு பிற்காலத்தில் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் என்று புகழப்பட்டார்.

பின் குறிப்பு: பெரிய திருமுடி அடைவு என்னும் நூலில் இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும், 6000 படி  குரு பரம்பரை ப்ரபாவத்தில்  இவர் கூரத்தாழ்வானின் பேரன் என்றும் அறியப்படுகிறார். பட்டோலையில் இவர் வேத வ்யாஸ பட்டரின் கொள்ளுப்பேரன் என்றும் அறியப்படுகிறார்.இவ்வாறு சில அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் அவர் நம்பிள்ளையின் அன்பிற்குப் பாத்திரமான சிஷ்யரானார்.

ஸ்ரீரங்கத்தில் நம்பிள்ளையின் காலமே ஸ்ரீவைஷ்ணவத்தின் மிகுந்த பெருமை வாய்ந்த பொற்காலமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்தக்காலத்தில் தான் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் தொடர்ந்து பகவதனுபவம் கிடைத்தது. நம்பிள்ளைக்கு அப்போது ஏராளமான சிஷ்யர்களும் தொண்டர்களும் இருந்தனர். அவர்கள் நம்பிள்ளையின் காலக்ஷேபங்களைத் தவறாமல் கேட்டு வந்தனர். இருந்தாலும் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நம்பிள்ளையிடம் ஒரு அனுகூலமான மனப்பான்மை  இல்லை.இவர் உயர்ந்த பரம்பரையிலிருந்து வந்ததால் கர்வம் நிறைந்து ஆரம்பத்தில் நம்பிள்ளையை மதிக்காதவராக இருந்தார்.

ஒருமுறை நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் மன்னரின் அரசவைக்குச் சென்று கொண்டு இருந்தார். வழியில் பின்பழகிய பெருமாள் ஜீயரைச் சந்தித்து அவரையும் மன்னரின் அரசவைக்கு வருமாறு அழைத்தார். ஜீயருக்கு பட்டர் குடும்பத்தின் மீது இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக அவருடன் சென்றார். மன்னர் அவர்களை வரவேற்று நன்கு உபசரித்து மரியாதைகள் செய்து அவர்களை நல்ல இருக்கைகளில் அமரச் செய்தார். மன்னர் நன்கு படித்தவராக விளங்கியதால் பட்டரின் அறிவாற்றலைத் தெரிந்து  கொள்ள ஸ்ரீராமாயணத்திலிருந்து அவரிடம் ஒரு கேள்வி  கேட்டார். அரசர் கேட்டார் “ஸ்ரீராமன் தன்னை ஒரு மனிதப் பிறவியாகவும் தசரதனின் அன்பான பிள்ளையாகவும் சொல்லிக் கொண்டவன், எப்படி ஜடாயுவின் இறுதி காலத்தில் அவருக்கு ஸ்ரீவைகுண்டம் செல்ல ஆசீர்வாதம் வழங்கினான்? இது மாறுபாடான கருத்தல்லவோ?” என்றார். பட்டர் இதைக் கேட்டு ஒரு பொருத்தமான காரணத்தைக் கூற முடியாமால் பேசமுடியாமல் வாயடைத்து நின்றார்.  அதற்குள் மன்னர் வேறு வேலைகளால் கவனம் கலைந்தார். அதற்குள் பட்டர் ஜீயரைப் பார்த்து இதற்கு நம்பிள்ளை எவ்வாறு விளக்கம் அளிப்பார் எனக் கேட்டார். அதற்கு ஜீயர், நம்பிள்ளை “ஸத்யேன லோகான் ஜயதி” என்ற ச்லோகத்தின் மூலம் அதை விளக்குவார் என்றும், அதற்கு அர்த்தம் — ஒரு முழுமையான ஸத்யவானாகில், அவனால் எல்லா உலகங்களையும் கட்டுப்படுத்த முடியும். எனவே ஸத்யத்தினால் மட்டுமே அவரால் எல்லா உலகங்களையும் ஜயிக்க முடிந்தது என்கிறார். மன்னர் திரும்பி வந்ததும் இதை பட்டரே அவரிடம் விளக்கினார். மன்னரும்  சிறந்த அறிவாற்றல் மிக்கவராகையால்  இதனைப் புரிந்து கொண்டு பட்டருக்கு வேண்டிய செல்வத்தைக் கொடுத்து அவரை கௌரவித்தார். பட்டர் உடனே நம்பிள்ளையின் மேல் ஏற்பட்ட நன்றியாலும் பக்தியாலும் ஜீயரிடம் அவரை நம்பிள்ளையிடம் அழைத்துச் செல்லுமாறு கூறி உடனே நம்பிள்ளையின் திருமாளிகைக்குச்  சென்று   தனக்கு மன்னரிடமிருந்து கிடைத்த அத்தனை செல்வத்தையும் அவருடைய திருவடிகளில் ஸமர்ப்பித்து, அவருடைய பாடங்களிலிருந்து ஒரு சிறிய விளக்கம் மூலமாகக் கிடைத்ததே அச்செல்வம் என்று கூறி அனைத்தையும் அவருக்கே ஸமர்ப்பித்தார். பின்பு அவர் நம்பிள்ளையிடம் “நான் இத்தனை நாளகத் தங்களுடைய விலை மதிப்பற்ற வழிகாட்டுதலை இழந்தே போனேன்” என்று கூறினார். அதன் பின்பு அவர் , “இந்த நொடியிலிருந்து அடியேன் தங்களுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டு ஸம்ப்ரதாய விஷயங்களை எல்லாம் தங்களிடமிருந்து அறிந்து கொள்வேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே நம்பிள்ளை பட்டரைத் தழுவிக்கொண்டு அவருக்கு  நம்முடைய ஸம்ப்ரதாய விஷயங்களைத் தெளிவுறக் கற்றுக் கொடுத்தார்.   நம்பிள்ளை பட்டருக்குத் திருவாய்மொழி முழுவதும் கற்றுக் கொடுத்தார். பட்டரும் அவைகளைத் தினமும் காலையில் கற்றுக் கொண்டு பிறகு அதை பற்றியே சிந்தித்து அவற்றின் அர்த்தங்களை எல்லாம் விரிவாக இரவில் எழுதி வைப்பார். காலக்ஷேபம் முடிந்ததும் பட்டர் தாம் எழுதி வைத்திருப்பதை நம்பிள்ளையின்  பாதார விந்தங்களில் சமர்ப்பித்தார். பட்டரின் மிக விரிவான அதாவது 125000 படி நீளமான மஹாபாரதத்துக்கு இணையான அளவில் இருந்த அவரின் விளக்க உரைகளைப் பார்த்து நம்பிள்ளை சிறிது கலங்கினார். ஏனென்றால் இவ்வளவு விரிவான மிக நீண்ட விளக்க உரையை மக்கள் படித்தால், அவர்கள் குரு சிஷ்யர்கள் இடையேயான கற்றுக்கொடுத்தல் , கற்றுக்கொள்ளுதல் மற்றும் கற்றுக் கொடுக்கும் விதம் இவைகளைப் புறக்கணித்து, அப்புத்தகத்தை வெறுமனே படித்து விட்டு அவரவர்களுடைய சொந்த முடிவுகளுக்கு  வந்து விடுவார்களே என்று மனம் கலங்கினார். பின் நம்பிள்ளை பட்டரிடம்  சொன்னார் – இது போன்று பிள்ளான் 6000  படி (விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் அளவு) வ்யாக்யானம் எழுதியபோது அவர் எம்பெருமானாரின் உத்தரவு பெற்ற பின்பே  அதை எழுதினார் என்று விளக்கினார். ஆனால் இப்போது பட்டர் இந்த வ்யாக்யானத்தை எழுதுவதற்கு முன் நம்பிள்ளையிடம் உத்தரவு பெறவில்லை. ஆனால் பட்டர் தான் நம்பிள்ளை ஸாதித்ததைமட்டுமே   எழுதியதாகவும் தான் ஸ்வயமாக எதுவுமே எழுதவில்லை என்றும் கூறினார். இறுதியில் நம்பிள்ளை அந்த க்ரந்தத்தை   வெளியிட ஒப்புக் கொள்ளாமல் அதை அழித்துவிட்டார்.

(குறிப்பு:- யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டதுபோல் ஒரு ஆசார்யன் பரமபதம் அடைந்துவிட்டால் அவருடைய சிஷ்யர்கள் மற்றும் குமாரர்கள்  தங்களுடைய தலையைச் சிரைத்துக் கொள்ள வேணும் என்றும், மற்றவர்கள் அதாவது ஆசார்யர்களின் நேரடி சிஷ்யர்களாக இல்லாமல் அவரை ஆச்ரயித்தவர்களாக இருந்தால் அவர்கள் தங்களுடைய உடல் மற்றும் முகத்தில் உள்ள உரோமத்தை மழித்துவிடவேண்டும்)  நம்பிள்ளை பரமபதம் அடைந்தபோது சிஷ்யர்கள்  போல நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரும் தன்னுடைய தலையைச் சிரைத்துக் கொண்டார். இதைப் பார்த்த பட்டருடைய ஒரு சகோதரர் “கூரத்தாழ்வான் பரம்பரையில் பிறந்த ஒருவர் நம்பிள்ளை பரமபதித்தற்கு எதற்குத் தன்னுடைய தலையைச் சிரைத்துக் கொள்ளவேண்டும்?” என வினவினார்.  இதைக் கேட்ட பட்டர் மிகவும் கேலியாக “ஓ ! நான் கூரேசர் பரம்பரையைப் பழித்துவிட்டேன். நீ இதை எப்படி சரி செய்யப்போகிறாய்?” என்று கேட்டார். இதைச் சகித்துக் கொள்ள முடியாமல் பட்டருடைய சகோதரரும் நேரே நம்பெருமாளிடம் போய் முறையிட்டார். நம்பெருமாளும் பட்டரை வரவழைத்து அர்ச்சக முகனே தாம் உயிரோடு இருக்கும்போது (பெருமாளே பராசர பட்டர் மற்றும் அவருடைய சந்ததியினருக்குத் தந்தை) ஏன் இவ்வாறு செய்தீர்? என வினவ, அதற்கு பட்டர் தன்னுடைய அச்செயலுக்கு மன்னித்துவிடுமாறு கூறினார். மேலும் அவர், கூரேசர் பரம்பரையில் வந்த  எவருக்கும் இருக்கும் இயற்கையான குணம்  போன்று, (ஸ்ரீவைஷ்ணவர்களிடம் சரணாகதி பண்ணுவது) தாமும் நம்பிள்ளையிடம் முழுவதும் சரணாகதி பண்ணி, தம்முடைய உடல் மற்றும் முகத்தில் உள்ள ரோமத்தை  மழித்து இருக்கவேண்டும். மாறாக தான் ஒரு சிஷ்யர்கள்/குமாரர்கள் போன்று தான்  தலையை மட்டும் மழித்து விட்டு மிகக் குறைந்த அனுஷ்ட்டானத்தையே பண்ணியதாகச் சொல்லி “இதற்காக நம்பெருமாளே தேவரீர் வருத்தப்படுகிறீரா?” என வினவினார்.  நம்பெருமாள் நம்பிள்ளையிடம் பட்டருக்கு இருந்த அளப்பற்ற ப்ரதிபத்தியைக் கண்டு பேரானந்தம் கொண்டு பட்டருக்குத் தம்முடைய தீர்த்தம், மாலைப் பிரஸாதம் மற்றும் வஸ்த்ரங்களைக்  கொடுத்து கௌரவித்தார். இத்தகைய பெருமை மிக்கவர் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்.

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைப் பற்றி வ்யாக்யானங்களில் குறிப்பிடப்பற்றவற்றைப் பார்ப்போம்.:

 • திருவாய்மொழி  – 9-3 :- நம்பிள்ளை ஈடு ப்ரவேசம் (முன்னுரை) : இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் நாராயண நாமத்தின் (மற்றும் மந்த்ரத்தின்) மகிமையைப் பற்றிச் சொல்கிறார். முக்கியமான மூன்று வ்யாபக மந்திரங்கள் (பகவானின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையைக் குறிப்பது) அதாவது அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய) ஷடாக்ஷரம் (ஓம் நமோ விஷ்ணவே) மற்றும் த்வாதசாக்ஷரம் (ஓம் நமோ பகவதே வாசுதேவாய) நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் சொல்கிறார்; ப்ரணவத்தினுடைய அர்த்தம், நம:வின் அர்த்தம் மற்றும் பகவானின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மை எல்லாம் இந்த மூன்று வ்யாபக மந்திரங்களில் கூறப்பட்டிருந்தாலும் ஆழ்வாருடைய ஹ்ருதயம் /மனம் நாராயண மந்திரத்திற்கருகிலேயே இருந்தது. குறிப்பு: இந்த நாராயண மந்திரத்தின் முக்கியத்துவம் ஸ்ரீ பிள்ளைலோகாசார்யரின் முமுக்ஷுபடியின் துவக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

வார்த்தமாலை என்ற நூலிலும் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

 • 216  – நம்பிள்ளைக்கும் பின்பழகிய பெருமாள் ஜீருக்கும் நடந்த ஒரு உரையாடலை இதை காட்டுகிறார் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர். ஜீயர் நம்பிள்ளையிடம் கேட்கிறார் ” ஒவ்வொரு முமுக்ஷுவும் ஆழ்வாரைப் போன்று (எம்பெருமானை மட்டுமே பற்றிக்கொண்டு அவனை மட்டுமே சிந்தித்துக்கொண்டு) இருக்க வேண்டாமா? ஆனால் நமக்கு இன்னும் பிற விஷயங்களில் ஆசை /பற்று வைத்துக்கொண்டு உள்ளோமே. ஆழ்வாரைப் போன்ற  கதி ( பரமபதத்தில் கைங்கர்ய பிராப்தி) நமக்கு எப்போது ஏற்படும் ?” என்று.அதற்கு நம்பிள்ளை , நமக்கு எல்லாம் இந்த சரீரத்தில்  ஆழ்வாரைப் போன்று நிலை ஏற்படாவிட்டாலும்கூட  மிகவும் பரிசுத்தமான நம் ஆசார்யர்களின் க்ருபையால் பகவான் நமக்கு அதே ஆசையை (ஆழ்வாரைப் போன்று) நாம் மரணித்து பரமபதம் அடைவதற்கு முன் நம்முள் ஏற்படுத்திவிடுவான் என்று பதிலுரைத்தார். எனவே நாம் எல்லோரும் பரமபதம் அடைவதற்கு முன் எல்லோரும் ரொம்ப சுத்தமானவர்களாக ஆகி எம்பெருமானுக்கு சாஸ்வதமான கைங்கர்யத்திலேயே நாம் ஊன்றி விடுவோம்
 • 410  – ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எப்படி  இருக்க வேண்டும் என்று நடுவில் திருவீதிப் பிள்ளை சொல்கிறார்:
  • இந்த உலகில் வாழும் சம்சாரிகளிடத்தில் நாம் ஏதேனும் குறை கண்டால் , நமக்கு,  அவனை பகவான் போன்று மாற்றி அமைக்கும்/காட்டும் திறமை இல்லாததால் அவைகளை  அலட்சியப்படுத்திவிடவேண்டும் .
  • ஸாத்விகர்களிடத்தில் (ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில்) குறைகள் கண்டால் அவைகளையும் அலட்சியப்படுத்திவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் பகவானையே அண்டி இருப்பவர்கள்/சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஆகையால் அவர்கள் தங்களின் குறைகளை பகவானின் துணையோடு சரிபடுத்திக் கொண்டுவிடுவார்கள்.
  • ஸாமான்ய மனிதர்கள்  தங்களின் மீது ஏதோ ஒரு ரசாயனக் கலவையை பூசிக்கொள்வதன் மூலம் தங்கள் மேல் நெருப்பு பற்றிக் கொள்ளாமல் காத்துக் கொள்வது போல் நாமும் நம்மை  பகவத் ஞானத்தினால் போர்த்தி கொண்டு லௌகீக பற்றுக்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.
  • நமக்கு இரண்டு விதமான ஞானம் வேண்டும்
   1 ) நமக்கு அந்த பரமபதம் அடைவது ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். 2) இந்த ஸம்ஸார பந்தத்திலிடுந்து முற்றிலும் விடுபடவேண்டும் என்ற ஞானம் (ஸம்ஸாரமே அறியாமையின் இருப்பிடம்)  இந்த  ஸம்ஸார  பந்தத்தில் துளி பற்று இருந்து விட்டாலும் கூட அதுவே நம்மை இங்கேயே இருத்தி விடும்.

இவ்வாறாக நாம் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைப் பற்றியும் அவரது மேன்மையையும் பற்றி சிறிது அறிந்து கொண்டோம். அவர் மிக சிறந்த ஞானி மற்றும் நம்பிள்ளையின் அன்புக்குப் பாத்திரமானவர். எனவே நாம் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து, நமக்கும் சிறிதளவாவது அவரைப் போன்று பாகவத நிஷ்டை ஏற்பட வேண்டுமென்று பிரார்த்திப்போம்!

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் தனியன்

லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம்  |
ஸ்ரீவத்சசிஹ்னவம்சாப்திஸோமம் பட்டார்யாமாச்ரயே ||

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/04/20/naduvil-thiruvidhi-pillai-bhattar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

அப்பிள்ளார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

appiLLAr

திருநக்ஷத்ரம் : தெரியவில்லை

அவதாரஸ்தலம் :தெரியவில்லை

ஆசார்யன் : மணவாள மாமுனிகள்

அருளிச் செயல்கள்: சம்ப்ரதாய சந்திரிகை, கால ப்ரகாசிகை

அப்பிள்ளான் என்று அழைக்கப்பட்ட அப்பிள்ளார் ஒரு சிறந்த பண்டிதர் ஆவார். இவர் எம்பெருமானாரின் சிஷ்யரான கிடாம்பியாச்சானின் திருவம்சத்தில் அவதாரம் செய்ததாய்க் கூறுவர். இவரே பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் நெருங்கிய சிஷ்யரும் அஷ்டதிக் கஜங்களில் ஒருவருமாய்த் திகழ்ந்தார்.

பெரிய பெருமாளின் ஆணைப்படி மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்து சம்பிரதாய விஷயங்களைப் பரப்பினார். இதைக் கண்ட பல ஆச்சார்யர்கள் மாமுனிகளின் சிஷ்யர்களாயினர்.

எறும்பியப்பா ஸ்ரீரங்கம் வந்தடைந்து மாமுனிகளின் சிஷ்யரானார். அவர் மாமுனிகளோடே சில காலம் தங்கியிருந்து, பின்னர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்படத் திருவுள்ளம் கொண்டார். அவர் சிறிது காலம் மாமுனிகளுக்கு கைங்கர்யம் செய்யது விட்டு தமது ஊரான எறும்பிக்குத் திரும்பத் திருவுள்ளம் கொண்டிருந்தார். ஆனால் சில அசுப நிகழ்வுகள் நடப்பதை உணர்ந்து புறப்படவில்லை. பின்னர் மாமுனிகளிடம் வந்தடைந்தபோது, “நீர் பொறுத்திரும், ஒரு நல்ல சந்தர்ப்பம் உமக்காய் காத்திருக்கிறது, அதன் பின்னர்  நீர் புறப்படலாம்” என்றார். அங்கிருந்த மற்றவர்கள் அது கேட்டு மிகவும் அகமகிழ்ந்து, அந்த நல்ல சந்தர்ப்பம் என்னவாயிருக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.

அந்த சமயம் அப்பிள்ளையும், அப்பிள்ளாரும் தங்களது குடும்பத்தோடே ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர். ஸ்ரீரங்கநாதனை சேவிக்கவே ஆர்வமாய் இருந்தனர். மாமுனிகளைப் பற்றிக் கேள்வியுற்றிருந்தாலும் மாமுனிகளிடம் அவ்வளவாய் ப்ரீதியில்லாமல் இருந்தனர். பெரும் பண்டிதர்களாய் இருந்தமையால், தர்க்கத்தில் ஜெயித்த பெரும் செல்வத்துடனே காவிரிக்கரையில் சில காலம் தங்க முடிவு செய்தனர். அப்படித் தங்கியிருந்த போது மாமுனிகளின் வைபவங்களைக் கேள்விப் படுகின்றனர். ஆசார்ய ச்ரேஷ்டர்களான கந்தாடை அண்ணன் மற்றும் எறும்பியப்பா ஆகியோர் மாமுனிகளைத் தஞ்சமடைந்திருப்பதையும் கேள்விப்படுகின்றனர். இதனால் மிகவும் ஆச்சர்யமடைகின்றனர். எறும்பியப்பாவின் சாஸ்த்ர ஞானத்தை நன்குணர்ந்த அப்பிள்ளார், அப்படிப்பட்ட ச்ரேஷ்டரான எறும்பியப்பாவே மாமுனிகளிடம் சிஷ்யரானார் என்றால் மாமுனிகளின் வைபவம் சாமான்யமானது இல்லை என உணர்ந்தார். உடனே தனக்கு மிகவும் நெருக்கமானவரும் சிறந்த ஞானம் பெற்றிருந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவருடனே ஜீயர் மடத்தை அடைந்தார். அந்த ஸ்ரீவைஷ்ணவரை உள்ளே அனுப்பி எறும்பியப்பாவைப் பார்த்து “அப்பிள்ளான் வந்திருக்கிறார்” எனத் தெரிவிக்கச் செய்தார். அந்த ஸ்ரீவைஷ்ணவரும் எறும்பியப்பாவைக் கண்டு அவ்வாறே தெரிவித்தார். இதைக் கேட்ட எறும்பியப்பா அப்பிள்ளாரைக் காணப் போவதை நினைத்து மிகவும் அகமகிழ்ந்தார். உடனே எறும்பியப்பாவும் அப்பிள்ளாரும் சந்தித்தனர். எறும்பியப்பாவின் திருத்தோள்களில் சங்கு-சக்கரப் பொறிகளைக் கண்டு அப்பிள்ளார், எறும்பியப்பா மாமுனிகளின் சிஷ்யரானமையை உணர்ந்தார். உடனே அப்பிள்ளார் எறும்பியப்பாவை தண்டன் சமர்பிக்கிறார். பிறகு இருவரும் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். எறும்பியப்பா தாம் எப்படி எம்பெருமானின் ஆணைப்படி மாமுனிகளை அடைந்தார் என ஒன்று விடாமல் சாதித்தருளினார். மெதுவாக மாமுனிகளின் அருமை அப்பிள்ளாருக்குப் புரிகிறது. பிறகு தம்முடன் அப்பிள்ளையும் மற்றும் பலரும் வந்திருப்பதையும், அவர்கள் காவிரிக்கரையில் தங்கியிருப்பதையும் தெரிவித்தார். எறும்பியப்பா மற்ற அனைவருக்கும் மாமுனிகளின் வைபவத்தை அருளுமாறு பிரார்த்தித்தார். எறும்பியப்பா மிகவும் மகிழ்ச்சியுற்றார். உடனே இதனை எறும்பியப்பா வானமாமலை ஜீயரிடம் தெரிவித்து, அப்பிள்ளாராய் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தித்தார். பிறகு காவிரிக்கரைக்குச் சென்று அனைவரையும் சந்தித்து மாமுனிகளின் வைபத்தை அருளினார்.

இதற்கிடையே வானமாமலை ஜீயர் மாமுனிகளைச் சந்தித்து அப்பிள்ளை, அப்பிள்ளார் என்று இருபெரும் பண்டிதர்கள் எழுந்தருளியிருப்பதைத் தெரிவித்தார். மேலும் அவர்கள் மாமுனிகளிடம் சம்பந்தம் பெறத் தகுதியானவர்கள் என்றும் தெரிவித்தார். ஆசார்ய சம்பந்தம் ஏற்படும் முன் ஆறு விஷயங்கள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதை இந்த ச்லோகத்தில் காணலாம்

ஈச்வரஸ்ய ச ஸௌஹார்தம் யத்ருச்சா ஸுஹ்ருதம் ததா விஷ்ணோ: கடாக்ஷம் அத்வேஷம் ஆபிமுக்யம் ச ஸாத்விகை: ஸம்பாஷணம் ஷடேதாநி

 • முதலில் பகவான் மிகவும் நல்லுள்ளம் கொண்டவன், அவன் எல்லோரின் க்ஷேமத்திற்காவே இருப்பவன்.
 • இரண்டாவதாக நல்ல விஷயத்தை அடைய சந்தர்ப்பமும் அவாவும் இருத்தல் வேண்டும்
 • மூன்றாவதாக, பகவானின் காருண்யமான கடாக்ஷம் அந்த ஜீவாத்மாவிற்குக் கிட்டவேண்டும்
 • நான்காவதாக – அந்த ஜீவாத்மா அத்வேஷத்தை வெளிப்படுத்த வேண்டும்; அதாவது பகவானின் கருணையை தடுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 • ஐந்து – அந்த ஜீவாத்மா பரமாத்மாவிடத்தில் ஆபிமுக்யம் பண்ண வேண்டும்; பகவானிடத்தில் ஈடுபாடு கொள்தல்.
 • ஆறு – அந்த ஜீவாத்மா பகவத் விஷயத்தை அறிந்து அதனால் பரிசுத்தமடைந்த பாகவதர்களோடு ஸம்பாஷிக்க வாய்ப்புக் கிட்டி, அதனால் ஆசார்யனை அடைதல் வேண்டும்.

வந்திருப்பவர்கள் எறும்பியப்பாவிடம் பேசும் பாக்கியம் பெற்றுவிட்டதால் அவர்களை நீர் சிஷ்யர்களாக ஏற்றுக் கொள்ளும் தகுதி அடைந்தனர் என்று பொன்னடிக்கால் ஜீயர் (வானமாமலை ஜீயர்) மாமுனிகளிடம் தெரிவித்தார். எப்போதுமே ஜீவாத்மாவின் உய்வைக் கருதும் நீர் எறும்பியப்பாவின் விருப்பத்தினையும் அடியேன் விருப்பத்தினையும் இதன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் மாமுனிகளிடம் பிரார்தித்துக் கொண்டார். மாமுனிகள் இதனை ஏற்றுக் கொண்டு “எம்பெருமான் தன விருப்பத்தினை தெரிவித்து விட்டான், மேலும் வந்திருப்பவர்களில் ஒருவருக்கு எம்பெருமானாரின் திருநாமம் (பஞ்ச ஸம்ஸ்காரத்தின் போது) தாஸ்ய நாமமாகக் கொடுக்க உள்ளோம்” என்றும் சாதித்தருளினார். அப்பிள்ளை, அப்பிள்ளார் முதலானோரை அழைத்து வர பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் அனுமதியினை பிரார்தித்துப் பெற்றார். உடனே ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அனுப்பி தாம் அவர்களை சந்திக்க இருப்பதாக செயதி அனுப்பினார்.

பொன்னடிக்கால் ஜீயரும், மாமுனிகளின் சிஷ்யர்களும் வரப்போவதை நினைத்து அப்பிள்ளார் பூரிப்படைந்தார். தன்னுடன் இருந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அவர்களின் வழியில் தனக்கு மிகவும் விருப்பமான ஒரு பச்சை சால்வையை விரிக்கச் செய்து, வந்தவர்கள் அதன் மேல் பொன்னடிகளை சாற்றிய பிறகு அந்த ஸ்ரீபாத தூளியினை தன் சென்னியில் சாற்றிக் கொண்டார். பிறகு பழங்கள் மற்றும் தாம்பூலம் (வெற்றிலை பாக்கு முதலியன) சமர்ப்பித்து சுவீகரிக்கச் செய்தார். அத்தனை பேர்களையும் ச்ரத்தையுடன் வரவேற்று அனைவரின் ஸ்ரீபாத தூளிகளையும் தன் தலை மேல் ஏற்றார். அனைவரின் நலன்களையும் விசாரித்தபின் பொன்னடிக்கால் ஜீயர் அனைவரையும் கோயில் அண்ணன் திருமாளிகைக்கு அழைத்துச் சென்றார். கோயில் அண்ணன் மாமுனிகளை எம்பெருமானாரின் மறு அவதாரம் என்று எடுத்துரைத்தார். இதைக்கேட்ட அப்பிள்ளையும் அப்பிள்ளாரும் மாமுனிகளிடம் தஞ்சம் புக எண்ணினர். பிறகு வெற்றிலை, பழம், முதலியவைகளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு ஜீயர் மடத்தை அடைந்தனர். அப்போது அவர்கள் திருமலை ஆழ்வார் மண்டபத்தை அடைந்தபோது பேரொளியுடன் மாமுனிகள் எழுந்தருளியிருப்பதைக் கண்டனர். அழகான, அகண்ட தோள்களுடனும், திருமார்பு, அழகான கண்கள் மற்றும்  மிகுந்த தேஜசுடனும் மாமுனிகள் இருப்பதைத் தரிசித்தனர். தூய்மையான காஷாயத்தையும், த்ரிதண்டத்தையும் தரித்துக்கொண்டு அனைவரையும் அன்பான புன்முறுவலுடன் வரவேற்றார். அவருடைய வடிவழகைக் கண்டு வியந்த அப்பிள்ளையும் அப்பிள்ளாரும் சாஷ்டாங்கமாக விழுந்து தண்டன் சமர்பித்தபடியே மாமுனிகள் வார்த்தைக்காக காத்திருந்தனர். மாமுனிகள் அன்புடன் அனைவரது மரியாதையையும் ஏற்று  சம்பிராதாயத்திலுள்ள சில சாரரமான அர்த்தங்களைச் சாதிக்க, பெரும் பண்டிதர்களான அப்பிள்ளையும்  அப்பிள்ளாரும் வியந்தனர். உடனே அவர்கள் தங்களுக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து சிஷ்யர்களாக ஏற்குமாறு தெரிவித்தனர். இதனை மாமுனிகள் ஏற்று அனைவருக்கும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து சிஷ்யர்களாய் ஏற்றார். அடுத்து மாமுனிகள் அனைவரையும் பெரிய பெருமாளிடத்தே முறைப்படி அழைத்துச் சென்றார். (பூர்வ தினச்சார்யா எனும் ஸ்தோத்ர பாடத்தில் காட்டியுள்ளபடி முறைப்படி மாமுனிகள் ஆண்டாள், எம்பெருமானார், நம்மாழ்வார், சேனை முதலியார், கருடாழ்வார், ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார், பரமபதநாதன் என்று சேவை செய்துவைத்தார்). இவ்வாறாக அனைவரையும் எம்பெருமானிடம் சரணாகதி செய்து வித்தார். பிறகு அனைவரும் ஜீயர் மடத்தை அடைந்து,  சாஸ்திரப்படி, மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை சுவீகரித்தனர்.

நித்யப்படி ஜீயர் மடத்தின் ததீயராதனை முதலிய அத்தனை கைங்கரியங்களும் அப்பிள்ளாரிடம் அளிக்கப்பட்டது. எப்படிக் கிடாம்பியாச்சான் மடத்தின் எல்லாப் பொறுப்புகளையும் எம்பெருமானாருக்குக் கைங்கர்யமாகச் செய்தாரோ அதே போல், மாமுனிகளுக்கு அப்பிள்ளார் கைங்கர்யம் செய்தார்.

மாமுனிகளின் அந்திம காலத்தில் அப்பிள்ளாரும் ஜீயர் நாயனாரும் (ஜீயரின் பூர்வாச்ரமத்தில் திருப்பேரானார்) நித்ய திருவாராதனத்திற்காக ஆசார்ய விக்ரஹம் வேண்டிப் பிரார்த்தித்தனர். மாமுனிகள் தாம் தினம் உபயோகிக்கும் சொம்பினை அளித்து அனுகிரஹித்தார். அதில் அப்பிள்ளாரும் ஜீயர் நாயனாரும் ஆளுக்கொரு மாமுனிகள் விக்ரஹத்தைச் செயது திருவராதனத்தில் எழுந்தருளப்பண்ணிக் கொண்டனர்.

அப்பிள்ளாரின் வைபவத்தில் ஒரு சிறு பகுதியை அனுபவித்தோம். அவர் மாமுனிகளுக்கு மிகவும் நெருக்கமானவர். நாமும் அவரது திருவடியில் சிறிதேனும் ஈடுபாடு பெற ப்ரார்த்திப்போம்.

அப்பிள்ளார்தனியன் :

காந்தோபயந்த்ரு யோகீந்த்ர ஸர்வ கைங்கர்யதூர்வஹம் |
ததேக தைவதம் ஸௌம்யம் ராமாநுஜ குரும் பஜே ||

அடியேன் மகிழ்மாறன் ராமாநுஜ தாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/10/19/appillar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

அப்பாச்சியாரண்ணா

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

appachiyarannaஅப்பாச்சியாரண்ணா – முதலியாண்டான் ஸ்வாமி திருமாளிகை, சிங்கப் பெருமாள்கோயில்

திருநக்ஷத்ரம் : ஆவணி ஹஸ்தம்

அவதார ஸ்தலம் : ஸ்ரீரங்கம்

ஆசார்யன் : பொன்னடிக்கால் ஜீயர்

சிஷ்யர் : அவர் திருமகனார் அண்ணாவிலப்பன் முதலானோர்

ஸ்ரீரங்கத்தில் மேன்மை பொருந்தியவரான முதலியாண்டான் திருவம்சத்தில் அவரது ஒன்பதாவது தலைமுறையினராய் சிற்றண்ணரின் திருமகனாராக அவதரித்த வரதராஜர், திருமஞ்சனம் அப்பாவின் திருமகள் ஆச்சியாரின் திருமகன். திருமஞ்சனம் அப்பாவின் தௌஹித்ரர், இத்திருநாமம் மணவாள மாமுனிகளால் சூட்டப் பட்டது. பொன்னடிக்கால் ஜீயரின் ப்ரிய சிஷ்யரும் (எப்படிப் பொன்னடிக்கால் ஜீயர் மாமுனிகளின் திருவடி நிலையாகக் கொண்டாடப்பட்டாரோ அப்படி) திருவடி நிலையுமான இவரை மாமுனிகள், “நம் அப்பாச்சியாரண்ணாவோ!” என்று பரிவோடு கொண்டாடினார்.

திருவரங்கம் பெரிய கோயிலில் தன்னலமற்ற கைங்கர்ய ஸ்ரீமானான திருமஞ்சனம் அப்பா மாமுனிகள் பெருமை அறிந்தவராதலால் மாமுனிகள் தினமும் நீராடச்  செல்லும்போது பின்தொடர்ந்து அவர் நீராடிய நீர்  பெருகி வருவதில் தாம் நீராடி அப்புனித நீரால் ஞானமும் உயர்குணங்களும் பெருகப்பெற்றார். அவரிடமே ஆச்ரயித்து அவருக்குக் கைங்கர்யமும் செய்தார்.

ஒருநாள் மாமுனிகள் திருக்காவேரியில் நீராடப் புறப்பட்டபோது மழை வரவும் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் திருமாளிகையில் ஒதுங்கினார். ஜீயரைக் கண்டதும் அவ்வில்லத்துப் பெண்மணி வெளியே ஓடி வந்து அவர் அமர ஆசனமிட்டு, நீரில் நனைந்திருந்த அவர் திருப்பாதுகைகளைத் தன்  சிரமேற் கொண்டு பின் தன்  துணியால்  நன்கு துடைத்தாள். இதனால் அவளுக்கு ஆசார்ய பக்தி மேலிட்டது, அவரைச் சரண் புகவும் விரும்பினாள். ஜீயர் அவளை  நீ யார் என்று  கேட்க, அவள் தான் திருமஞ்சனம் அப்பாவின் மகள், கந்தாடைச் சிற்றண்ணர்  மனைவி என்றாள். மழை விட்டவுடன் மாமுனிகள் அங்கிருந்து திருக்காவேரிக்குச் சென்றார்.

சில நாள்கள் கழித்து அவள் தன் விருப்பத்தைத் தன் தந்தைக்குச் சொல்ல, அவள் ஓர் ஆசார்ய புருஷருக்குத் திருமணமானவள் என்பதால் ஒருவருக்கும் தெரியாமல் தந்தை அவளை மாமுனிகளிடம் ஆச்ரயிப்பித்தார். மாமுனிகள் அவள் ஆசார்ய புருஷ திருமாளிகையைச் சேர்ந்தவள் என்பதால் முதலில் தயங்கினாலும், அவளின் எல்லையில்லாத ப்ரதிபத்தியைக் கண்டு அவளைத் தன் சிஷ்யையாக ஏற்றுக் கொள்கிறார்.

நாளடைவில் எம்பெருமான் திருவருளால் கந்தாடையார் அனைவரும் மாமுனிகளிடம் ஆச்ரயித்தனர். கந்தாடையார் தலைவராய் விளங்கிய கோயில் கந்தாடை அண்ணன் கனவில் எம்பெருமான் தோன்றிக் கட்டளையிட அவர் பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரமாக மாமுனிகளிடம்  சரண் புகவும், கந்தாடையார் அனைவரும் அவ்வாறே செய்தனர்.

கோயில் அண்ணனுக்கும் பிறர்க்கும் பஞ்ச  சம்ஸ்காரம் அருளிய மாமுனிகள், பொன்னடிக்கால் ஜீயரிடம் தம் அன்பைப் வெளிப்படுத்துவாராக, கோஷ்டியாரிடம், “ஜீயர் அடியேன் ப்ராண ஸுஹ்ருத் ஆப்த தமர். அடியேனுக்கு உள்ள பெருமைகள் யாவும் அவருக்கும் ஏற்பட வேண்டும். அடியேன் பால் உள்ள ப்ராவண்யம் யாவரும் ஜீயரிடமும் பாராட்டவேணும், அவர்க்கும் ஆண்டான் வம்சீயர்கள் சிஷ்ய வ்ருத்தி செய்ய வேணும்” என்று பாரிக்க, கோயில் அண்ணன்.”ஜீயர் நியமித்திருந்தால் அடியேனே அவரிடம் சம்ஸ்காரம் பெற்றிருப்பேனே!” என்ன மாமுனிகள் அதற்கு “எனக்கு ஏற்பட்ட வஸ்துவைப் பிறருக்கு எப்படி அளிப்பது” என்று கூற, கோயில் அண்ணனும் தன் கோஷ்டியைப் பார்க்க, அவ்வளவில் அங்கிருந்த அப்பாச்சியாரண்ணா “ஸ்வாமி நியமனமாகில் அடியேன் செய்து கொள்வேன்” என வினயத்துடன் கூற, மாமுனிகள் போற உகந்து “நம் அப்பாச்சியாரண்ணாவோ!” என்று பாராட்டி, தன் சங்க சக்ரங்களைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் தந்து, தம் ஆசனத்தில் அவரை அமரச்சொல்ல அவர் மிக நடுங்கி மறுக்க மாமுனிகள் மிகச் சொல்லி ஜீயரின் முதல் சிஷ்யராக அண்ணா ஆனார்.

mamuni-ponnadikkaljiyar-appachiyarannaமாமுனிகள் (ஸ்ரீரங்கம்) – பொன்னடிக்கால் ஜீயர் (வானமாமலை) – அப்பாச்சியாரண்ணா

அன்றிலிருந்து அப்பாச்சியாரண்ணா தொடர்ந்து மாமுனிகள் மற்றும் பொன்னடிக்கால் ஜீயர் கைங்கர்யத்திலேயே ஈடுபட்டிருந்தார்.

மாமுனிகள் சிஷ்யர்களோடு திருவேங்கட யாத்ரை செல்கையில் காஞ்சியில் தேவப்பெருமாளை வைசாக உத்சவத்தில் கருட சேவையன்று மங்களாசாசனம் செய்தனர்.

varadhan-garudavahanam-mamunigaLதேவப்பெருமாள் கருடசேவை, மாமுனிகள்

மாமுனிகளை ஸ்ரீவைஷ்ணவர்கள் வரவேற்று சத்கரிக்க அவரும் உவந்து அவர்களுக்கு அருளிச்செயல், கைங்கர்யம் முதலானவற்றின் முக்யத்வம் கூற, அவர்களும் “ஜீயரே செய்தருளவேனும்” என்ன அவரும் பொன்னடிக்கால் ஜீயர் மூலம் அண்ணாவை வரவழைத்து, எல்லார்க்கும் காட்டித்தந்து, அவரிடம் “நீர் முதலியாண்டான் திருவம்சத்தவர், இங்கு நம்முடைய சார்பாக இருந்து முதலியாண்டான், கந்தாடை தோழப்பர் போன்றோர் திருவுள்ளங்கள் உகக்கும்படி தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்து போம்”  என்று கூற அண்ணாவும் காஞ்சி  கைங்கர்யங்களை வெகு சிறப்பாக நடத்திப் போந்தார். ஜீயரோடு அண்ணாவும் திருமலை மற்றும் பல திவ்ய தேசங்கள்  சேவித்து மீண்டும் ஸ்ரீரங்கம் அடைந்தனர்.

மாமுனிகள் அவர்க்கு தேவப்பெருமாள் கைங்கர்யம் பாரும் என்று நினைவுறுத்த, அவர் ஜீயர் பிரிவால் வாடவும், ஜீயர் தம் இராமானுசன் எனும் செப்புச் செம்பைப் பொன்னடிக்கால் ஜீயர் மூலம் தருவித்து, ”இதில் திருமண் சங்க சக்கரங்கள் அழிந்துள்ளன.இதில் நம் உருவங்கள் இரண்டு செய்து ஒன்று உம்  ஆசார்யனுக்கும் ஒன்று உமக்கும் கொள்வீர்” என்றார். தமது திருவாராதனப் பெருமாள் “என்னைத் தீமனம் கெடுத்தார்” என்பவரையும் அண்ணாவிடம் தந்தார்.

ennaitheemanamkedutharசிங்கப்பெருமாள் கோயில் முதலியாண்டான் சுவாமி திருமாளிகையில் என்னைத் தீ மனம் கெடுத்தான்

இவ்வெம்பெருமான் எம்பெருமானார் சிஷ்யர் ஆள் கொண்ட வில்லி  ஜீயரிடமும், அவரின் அதி ப்ரியரான கந்தாடை ஆண்டானிடமும் இருந்தவர், ”நீர் ஆண்டான் வம்சீயர் எனவே இவ்வெம்பெருமான் உம்மிடமே இருக்கத்  தக்கவன்” என்கிறார்.  மாமுனிகள் அப்பாச்சியாரண்ணாவிடம் கொண்ட பேரன்பால் அண்ணா தேவப்பெருமாள் அம்சம் என்பதையும் வெளிப்படுத்தினார். அண்ணாவும், மாமுனிகள் ஆணையை ஏற்று, காஞ்சீபுரம் வந்து தங்கி, அங்கிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களை வழி நடத்தினார்.

இவ்வாறு அப்பாச்சியாரண்ணாவின் வைபவம் மிக்க மேன்மை உள்ளது. அவர் மாமுனிகளுக்கும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் மிகவும் ப்ரியமானவராகத் திகழ்ந்தார். அவரது ஆசார்யாபிமானம் நமக்கும் வர அவர் திருவருளை வேண்டுவோம். இவர் தனியன்:

அப்பாச்சியாரண்ணாவின் தனியன்

ஸ்ரீமத் வாநமஹாசைல ராமாநுஜ முநிப்ரியம் |
வாதூல வரதாசார்யம் வந்தே வாத்ஸல்ய ஸாகரம் ||

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்:  http://guruparamparai.wordpress.com/2013/09/07/appachiyaranna/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org