Author Archives: Adien Ramanuja Dasan

கூரத்தாழ்வான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

kurathazhwan

திருநக்ஷத்ரம் : தை, ஹஸ்தம்

அவதார ஸ்தலம் : கூரம்

ஆசார்யன் : எம்பெருமானார்

சிஷ்யர்கள் : திருவரங்கத்தமுதனார்

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

அருளிச்செய்தவை : பஞ்ச ஸ்தவம் (அதிமானுஷ ஸ்தவம், ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம்), யோநித்யம் அச்யுத மற்றும் லக்ஷ்மிநாத தனியன்கள்.

 • கி.பி 1010 (சௌம்ய வருஷம், தை மாதம், ஹஸ்த நக்ஷத்ரத்தன்று) ஒரு உன்னத குடும்பத்தில் கூரம் என்னும் கிரமத்தில் உள்ள கூரத்தாழ்வார் மற்றும் பெருந்தேவி அம்மாள் என்பவர்களுக்கு திருக்குமாரராக திருவவதரித்தார். இவருக்கு ஸ்ரீவத்ஸாங்கன் என்ற திருநாமத்தை சூட்டினார்கள்.
 • இவருடைய திருத்தாயார் சிறு வயதிலேயே ஆசார்யன் திருவடி (பரமபதித்தார்) அடைந்தார். சாஸ்திரம் ஒருவர் ஏதாவது ஒரு ஆச்ரமத்தில் நிலையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும் (அதாவது ஒருவனுடைய திருமணத்திற்கு பின் அவன் தர்மபத்னி பரமபதித்தால், அவன் மறுபடியும் திருமணம் செய்து கொண்டு க்ருஹஸ்தாச்ரமத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்) இவருடைய திருத்தகப்பனாரோ மறுபடியும் திருக்கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு “நான் திருமணம் செய்து கொண்டால், வரும் புது மனைவி கூரத்தாழ்வானை நன்றாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால், அது மிகப் பெரிய பாகவத அபச்சாரம்” என்று கூறினார். இவருக்கு இத்தகைய உயர்ந்த பண்புகள் சிறு வயதிலேயே இருந்தது.
 • தேவப்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பி இவரை வழிநடத்தி வந்தார்.
 • தன்னுடைய நல்ல குணங்களுக்கு ஏற்றவரான ஆண்டாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
 • எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளையே புகலிடமாகக் கொண்டு அவரிடம் பஞ்ச சம்ஸ்காரத்தையும் பெற்றுக்கொண்டார்.
 • தன்னுடைய அனைத்து செல்வங்களையும் கூரத்திலேயே விட்டு, தன்னுடைய தர்மபத்னியுடன் திருவரங்கம் சென்று அங்கு உஞ்சவ்ருத்தி  (பிக்ஷை) பண்ணி வாழ்ந்து வந்தார்.
 • போதாயன வ்ருத்தி க்ரந்தம் என்ற க்ரந்தத்தை மீட்டெடுக்க  எம்பெருமானாருடன் இவரும் காஷ்மீரம் சென்றார். திரும்பி வரும் வழியில் அந்த க்ரந்தத்தை இழந்த பின்னர், இதைக் கண்டு எம்பெருமானார் வருந்த, அதற்கு கூரத்தாழ்வான் தான் அந்த க்ரந்தம் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டேன் என்று எம்பெருமானாருக்கு ஆறுதல் கூறினார். பிறகு திருவரங்கம் வந்தவுடன், எம்பெருமானாருடைய மிகப் பெரும் க்ரந்தமான “ஸ்ரீ பாஷ்யம்” என்னும் க்ரந்தத்தை எம்பெருமானார் அருளிச்செய்ய அதை இவர் பனை ஓலைகளில் ஏடுபடுத்துவதற்கு உதவி புரிந்தார்.

amudhanar-azhwan-emperumanarஅமுதனார் – ஆழ்வான் – எம்பெருமானார்

 • இவர் திருவரங்கத்தமுதனாரை திருத்திப்பணிகொண்டு எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயிக்கச் செய்தார். எப்படி என்றால், முதலில் ஏகாகம் என்ற சடங்கில் உட்கார்ந்து, அவரிடமிருந்து கோயில் பொறுப்பு மற்றும் சாவியை பெற்று எம்பெருமானாரிடம் ஒப்படைத்தார்.
 • எம்பெருமானாருக்குப் பதிலாக இவர் சைவ அரசனிடம் சென்று, “ருத்ரன் தான் மிகப் பெரியவன்” என்று அரசன் கூறும் கூற்றை மறுத்து பேசி, “ஸ்ரீமன் நாராயணனே மிகவும் உயர்ந்தவன்” என்று ஸ்தாபித்தார். இந்த விவாதத்தின் இறுதியில் ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தை (சம்பிரதாயம்) காப்பதற்காக தன்னுடைய தர்சனத்தை (கண்கள்) இழந்தார்.
 • இவர் திருவரங்கத்தை விட்டு திருமாலிருஞ்சோலைக்குச் (எம்பெருமானார் திருநாராயணபுரத்திற்குச் (மேல்கோட்டை) சென்ற பிறகு) சென்று அங்கு 12 வருடங்கள் இருந்தார்.
 • பஞ்சஸ்தவத்தில் ஒன்றான ஸுந்தரபாஹு ஸ்தவத்தை இவர் கள்ளழகருக்காக (திருமாலிருஞ்சோலை எம்பெருமான்) அருளிச்செய்தார்.
 • எம்பெருமானார் திருவரங்கத்திற்கு எழுந்தருளிவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் இவர் திருவரங்கம் எழுந்தருளினார்.
 • எம்பெருமானார் நியமனத்தினால் இவர் வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாளிடம் அருளிச்செய்தார். இறுதியில் தன்னுடைய அனைத்து சம்பந்திகளுக்கும் மோக்ஷம் வேண்டும் என்றும், முக்கியமாக நாலூரானுக்கும் (ஆழ்வான் கண்களை இழப்பதற்கு இவனும் ஒரு முக்கியமான காரணம்) மோக்ஷம் வேண்டும் என்று கேட்டார்.
 • மொத்தமாக இவர் பஞ்ச ஸ்தவத்தை இவர் அருளிச்செய்தார் – ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம் மற்றும் ஸ்ரீ ஸ்தவம். இவை அனைத்துமே வேதாந்த அர்த்தங்களின் சாராம்சமாக விளங்குகிறது.
 • எம்பெருமானர் திருவரங்கம் கோயிலில் இவருக்கு பௌராணிக கைங்கர்யத்தை (பெருமாளுக்கு புராணங்கள் வாசிப்பது) நியமித்தார். மேலும் இவரது காலத்தில் இவரே நமது சம்ப்ரதாயத்திற்கு க்ரந்த நிர்வாகியாக (காலக்ஷேபாதிகாரி) இருந்தார்.

azhwan_bhattarsஆழ்வான் மற்றும் அவருடைய திருக்குமாரர்கள் பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்

 • இவரும், இவருடைய தர்ம பத்னியும், ஸ்ரீரங்கநாதனிடமிருந்து ப்ரசாதத்தை பெற்றனர். அந்த ப்ரசாதத்தை ஸ்வீகரித்ததால், இரண்டு அழகான குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள். அவர்களுக்கு பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர் என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள்.
 • இவர் அருளிச்செயல் (4000 திவ்ய ப்ரபந்தம்) அனுபவத்தில் மிகவும் மூழ்கி இருந்தார். இதை எப்படி கண்டுகொள்ளலாம் என்றால், எப்பொழுது உபன்யாசத்தை தொடங்கினாலும், சொல்லப்போகும் விஷயத்தின் அனுபவத்தை நினைத்து மிகவும் உருகி அழுவார் இல்லையெனில் மூர்சையுற்றுக்கிடப்பார்.
 • பெரிய பெருமாள் நேரடியாக இவருடன் பேசுவார்.
 • இறுதியில் இவர் பெரிய பெருமாளிடம் மோக்ஷத்தைக் கேட்டார், பெரிய பெருமாளும் தந்தோம் என்றருளினார். இதைத் கேட்டறிந்த எம்பெருமானார், விரைந்து இவரிடம் வந்து, “எனக்கு முன்பாக எப்படி நீர் செல்லலாம்?” என்று கேட்க, அதற்கு இவர் “திருவாய்மொழியில் சூழ்விசும்பணிமுகில் பதிகத்தில் ஆழ்வார் கூறின படி, ஒருவன் பரமபதத்திற்குச் செல்லும் போது, நித்யர்கள் மற்றும் முக்தர்கள் வந்து, புதிய முக்தாத்மாவின் திருவடியை விளக்குவார்கள். இதை எப்படி தேவரீர் வந்து அடியேனுக்குச் செய்வதை அனுமதிக்கமுடியும். அதனால் தான் அடியேன் தேவரீருக்கு முன்பாகச் செல்கிறேன்” என்று கூறினார்.
 • பல ஐதீஹ்யங்கள் (சம்பவங்கள்) கூரத்தாழ்வானைப் பற்றி வ்யாக்யானங்கள் மற்றும் குரு பரம்பரா ப்ரபாவத்தில் விஸ்தரமாக கூறப்பட்டுள்ளது.
 • இந்த ஒரு பக்கத்தில் கூரத்தாழ்வான் வைபவத்தைக் கூறி முடித்து விடமுடியுமா? கூரத்தாழ்வான் வைபவத்தைக் கூறுவதற்கு எனது இயலாமை அல்ல என்றால், இந்த பக்கம் முடிவற்றதாக இருக்கும்.

ஆழ்வானுடைய தனியன்

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

ஆழ்வானுடைய மிகச்சிறந்த மகத்துவம் (ஆழ்வானுடைய 1000 வது வருஷம் வைபவத்தன்று, வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் சாதித்ததை அடிப்படையாகக் கொண்டு எழுதி வெளியிடப்பட்டதை இந்த இணைய தளத்தில் http://koorathazhwan1000.webs.com காணலாம்).

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

எம்பெருமானாருடைய ப்ரதான சிஷ்யர்களுள் ஒருவர் கூரத்தாழ்வான். காஞ்சிபுரம் அருகில் உள்ள கூரம் என்ற கிராமத்தில் ஒரு உன்னதமான குடும்பத்தில் அவதரித்தார். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களுக்கு ஒரு உதாரணம் காட்ட வேண்டும் என்றால் அது கூரத்தாழ்வான் தான். இவர் முக்குறும்பை தொலைத்தவர் அதாவது 3 மதங்களை தொலைத்தவர் (வித்யா மதம் – மிகச்சிறந்த ஞானம் உடையவன் என்று பெருமைப்படுவது, தன மதம் – மிகுந்த செல்வம் உடையவன் என்று பெருமைப்படுவது, ஆபிஜாத்ய மதம் – ஒரு உயர்ந்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தேன் என்று பெருமைப்படுவது). இவருடைய பெருமையை திருவரங்கத்தமுதனார், இராமானுச நூற்றந்தாதியிலும் “மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்”, மணவாள மாமுனிகள், யதிராஜ விம்சதியிலும், “வாசாமகோசர மஹாகுண தேசிகாக்ர்ய கூராதிநாத” கூறினார்கள். இவர்கள் இருவருமே கூரத்தாழ்வானுடைய பெருமையை வாக்கினால் சொல்லி முடிக்க முடியாது என்று கூறினார்கள். உண்மையில் இராமானுச நூற்றந்தாதி மற்றும் யதிராஜ விம்சதி இரண்டுமே எம்பெருமானாருடைய பெருமைகளை கூற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அருளிச்செய்யப்பட்டது [இருந்தாலும் ஆழ்வான் பெருமை பேசப்பட்டது].

எம்பெருமானார் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திற்கு மிகவும் முக்கியமான ஆசார்யராகக் கருதப்படுகிறார். இந்த சம்ப்ரதாயம் உண்மையில் சனாதன தர்மத்தையே (வைதிக மதம் – வேதத்தை அடிப்படையாக கொண்டு விளங்கும் மதம்) பிரதிபலிக்கிறது. மேலும் தத்வத்ரயத்தைப் (சித் – ஜீவாத்மா, அசித் – உயிரற்ற பொருள், ஈச்வரன் – ஸ்ரீமன் நாராயணன்) பற்றி மிகவும் தெளிவாகவும் எல்லையற்ற ஞானத்தையும் உடையது. எம்பெருமானார் பாரத தேசம் முழுவதும் இந்த உயர்ந்த தர்மத்தை போதித்தார். இவர் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் பலவித நிலைகளில் இருந்து பலரையும் திருத்திப் பணிகொண்டார் – போதகர், கோயில் நிர்வாகம், சமூக சீர்திருத்தம், மனித நேயம் உடையவர், மற்றும் பல. வேதம், வேதாந்தம், பகவத் கீதை, சரணாகதியின் விளக்கம் (பகவானே புகல் என்றிருப்பது) மற்றும் வைதீக அனுஷ்டானங்களை விளக்குவதற்காக இவர் ஒன்பது க்ரந்தங்களை அருளிச்செய்தார்.

எம்பெருமானாருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஏனென்றால் இவருடைய திருத்தகப்பனார் திருவல்லிக்கேணியில் முக்கியமாக இருக்கும் பார்த்தசாரதி எம்பெருமானிடம் ப்ரார்தித்ததால் தான் எம்பெருமானர் இந்த உலகில் அவதரித்தார். திருவல்லிக்கேணி 108 திவ்யதேக்சங்களுள் ஒன்று. இந்த திவ்யதேசத்தை பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

கீதாசாரியனும் ஆழ்வானும் – 1

ஸ்ரீ பார்த்தசாரதி – அர்ஜுனனுக்கு ஸ்ரீபகவத் கீதையை அருளிச்செய்த கீதாசார்யன் . கிருஷ்ணர் தாமே தன் சோதிவாய் மலர்ந்தருளி சாதித்தால் ஸ்ரீ பகவத் கீதை சனாதன தர்மத்திற்கு, அதிலும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு முக்கியமான ப்ரமாணமாகக் கருதப்படுகிறது.

பகவத் கீதையில் 13 வது அத்யாயத்தில் கண்ணன் எம்பெருமான் க்ஷேத்ரம் (உடல்) மற்றும் க்ஷேத்ரஜ்ஞ (ஆத்மா) என்னுமவற்றைப் பற்றி விளக்குகிறார். அவர் கூறும் உபதேசத்தின் ஒரு பகுதியில், பகவானை உணர்ந்த ஒரு ஜீவாத்மாவினுடைய 20 குணங்களைப் பற்றி விளக்குகிறார். இந்த குணங்கள் கூரத்தாழ்வானிடத்தில் மிகவும் தெளிவாக ப்ரகாசிக்கிறது. இப்படிப்பட்ட குணங்களை ஆழ்வானின் வாழ்வில் நடந்த சரித்திரங்களைக் கொண்டு உதாரணங்களுடன் இப்பொழுது அனுபவிப்போம்.

ஸ்ரீ பகவத் கீதா, அத்யாயம் 13, ஸ்லோகம் 7 – 11

அமானித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸனம் சௌசம் ஸ்தைர்யமாத்மவினிக்ரஹ: ॥

இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் அநஹங்கார ஏவ ச ।
ஜன்மம்ருத்யுஜராவ்யாதிதுக்க தோஷானுதர்ஸனம் ॥

அஸக்திர் அநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ்டேபபத்திஷு ॥

மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிச்ஹாரிணி ।
விவிக்ததேசசேவித்வம் அரதிர்ஜனஸம்ஸதி ॥

அத்யாத்மஞானநித்யத்வம் தத்த்வஞானார்த்த தர்ஸனம் ।
ஏதத் ஞானம் இதி ப்ரோக்தமஜ்ஞானம் யததோந்யதா ॥

 1. அமானித்வம் – பணிவு
 • இவர் உயர்ந்த மற்றும் பணக்காரக் குடும்பத்தில் அவதரித்திருந்தாலும் கூட, ஸ்ரீரங்கத்திற்குச் சென்று எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இவை அனைத்தயும் கைவிட்டார்.
 • முன்பொருகாலத்தில் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார், தீமைகள் செய்வோரிடமிருந்து கோயிலைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றி மந்திதிரிக்கப்பட்ட மணலைத் தூவுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பெரிய நம்பி அவருடன் யாரேனும் ஒருவர் வரவேண்டும் என்று கேட்டார் – ஆனால் அவர் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் – மேலும் ஏன் நான் மற்றொருவர் பின்னால் நடக்க வேண்டும் என்று அவர் ஒரு கணம் கூட நினைக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு நிமிடம் எம்பெருமானார் இதைச் சிந்தித்து, தன்னுடைய சிஷ்யர்களைப் பார்க்கும் பொழுது, “கூரத்தாழ்வானை அனுப்பும், ஏனென்றால் அவரைவிட மிகவும் எளிமையாக யவரும் இருக்க முடியாது” என்று பெரிய நம்பியே கூறிவிட்டார்.
 1. அதம்பித்வம் செறுக்கின்மை
 • போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை (ப்ரஹ்ம சூத்திரத்தினுடைய சுருக்கமான வ்யாக்யானம்) மீட்டெடுக்க எம்பெருமானாருடன் இவர் சென்று, அந்த க்ரந்தத்தை மீட்டெடுத்துத் திரும்பினார்கள். அந்த நேரத்தில் எம்பெருமானாரைப் பிடிக்காத ஒரு சிலர் (அங்கு இருக்கும் உள்ளூர் பண்டிதர்கள்) சில வீரர்களை அனுப்பி அந்த க்ரந்தத்தை மீண்டும் அவரிடமிருந்து பறித்து விட்டார்கள். அப்பொழுது எம்பெருமானார் அதிர்ச்சியுடன், மிகுந்த வருத்ததிலும் இருந்தபோது, கூரத்தாழ்வான் எம்பெருமானாரிடம் “தேவரீருக்குக் கைங்கர்யத்தை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த க்ரந்தம் முழுவதையும் மனனம் செய்துவிட்டேன்” என்றுகூறினார். அந்த நேரத்திலும் கூட அவர் சிறு துளி அளவும் செறுக்கைக் காட்டவில்லை.
 1. அஹிம்ஸா வன்முறையின்மை
 • ஒரு பாம்பு, தவளையை உண்ணும் போது தவளை அழும் சப்தத்தை ஆழ்வான் கேட்டார். உடனே அவரும் வருத்தப்பட்டு அழுது பின்பு மயக்கம் அடைந்தார். இதன் மூலம் இவர் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு வைத்திருந்தது தெரிகிறது. அயோத்தி மக்கள் யவரேனும் ஒருவருக்கு ஏதாவது தீங்கு நடந்தால், பாதிக்கப்பட்ட நபர் வருந்துவதற்கு முன் ஸ்ரீராமர் மிகவும் வருந்தி அழுவார். அதேபோல், யவரேனும் ஒருவருக்கு ஏதாவது நன்மை நடந்தால், அந்த நபர் சந்தோஷப்படுவதற்கு முன் ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷப்படுவார். இவ்வாறு வால்மீகி ராமாணத்தில் கூறிய படி இருப்பதால், இவர் ஸ்ரீராமருடைய அவதாரமாகக் கருதப்படுகிறார்.
 1. க்ஷாந்திர் – சகிப்புத்தன்மை
 • எம்பெருமானார், ஸ்ரீபகவத் கீதா சரமச்லோகத்தின் (சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்…..) அர்த்தத்தை, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றுக்கொண்டார். கடினமான சோதனைகளுக்கு பிறகு தான் இந்த அர்த்தத்தை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வான் இந்த அர்த்த விசேஷத்தை உபதேசிக்குமாறு கேட்ட பொழுது, எம்பெருமானார் நம்பி கூறியதைக் கூறினார். அதற்கு ஆழ்வான் 1 மாத காலம் மடத்து வாசலில் உபவாசம் இருந்தார். இறுதியில் சரம ச்லோகார்த்தத்தை எம்பெருமானாரிடம் பெற்றுக் கொண்டார்.
 • இவர் நாலூரானை க்ஷமித்து, அவனுக்கும் (இவர் சைவ ராஜா சபையில் தன் கண்களை இழக்க ஒரு காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கொடுக்குமாறு கேட்டார்.
 1. ஆர்ஜவம் – நேர்மை
 • ஆழ்வான், திருவரங்கத்தமுதனாருக்கு பகவத் விஷயம் உபதேசித்த பிறகு, அமுதனார் இவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்ட பொழுது, அதற்கு “எம்பெருமானார் திருவடிகளையே சார்ந்து இரும்” என்று ஆழ்வான் கூறினார்.
 • பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை திருத்திய பிறகு, அவரையும் எம்பெருமானாரையே சார்ந்து இருக்குமாறு கூறினார்.
 1. ஆசார்ய-உபாஸனம் – எப்பொழுதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது
 • எம்பெருமானார் தனது திருவடிகளை திருவரங்கத்தில் இருக்கும் வாய் பேசமுடியாத (ஊமை) மற்றும் காது கேட்காத (செவிடு) ஒருவனுடைய தலையில் வைத்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான் மிகவும் வருந்தி அழுதார். ஏனென்றால் “ஸ்வாசர்யரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தலையில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்?”. “த்ருணி க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய: ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலின:” – இந்த ச்லோகத்தினுடைய அர்த்தமும் அதே பொருளைக் குறிக்கிறது.
 1. சௌசம் – தூய்மை – அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை

இப்பேர்ப்பட்ட ஆசார்யன் நிச்சயமாக புறத் தூய்மையுடன் தான் இருப்பார் என்று வெளிப்படையாக தெரிகிறது. மேலே அவருடைய அகம் எப்படி தூய்மையாக உள்ளது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

 • சைவ ராஜவினுடைய செயல்களினால் எம்பெருமானார் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஆழ்வான் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் கோயிலுக்குச் செல்லும் போது, ஒரு காவலாளி அவரைத் தடுத்து “எம்பெருமானருடைய சம்பந்திகள் யவரேனும் வந்தால் கோயிலினுள் அனுமதிக்கக் கூடாது என்று அரசனின் ஆணை” என்று கூறினார். அதற்கு மற்றொரு காவலாளி “கூரத்தாழ்வான் மிகவும் நல்ல குணங்களுடன் கூடியவர். ஆதலால் நாம் அவரை உள்ளே விடவேண்டும்” என்று கூறினார். அதற்குக் கூரத்தாழ்வான் “என்னிடம் ஏதேனும் நல்ல குணங்கள் இருந்தால் அது எம்பெருமானாருடைய சம்பந்தத்தினாலேயே வந்தது” என்று கூறி கோயிலுக்குள் நுழையாமலேயே சென்று விட்டார். யாரேனும் இவரைத் தனித்து நல்லவர் என்று கருதினால், ஸ்ரீரங்கநாதனை சேவிப்பதற்காகக் கூட அதை அவர் ஒப்புக் கொள்வதில்லை. இந்த அளவுக்கு அவருடைய மனம் தூய்மையாக இருந்தது.
 1. ஸ்தைர்யம் – மன உறுதி
 • “ஏன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை வணங்குவதில்லை?” என்று சில பக்தர்கள் கேட்டபொழுது, “நமது முன்னோர்கள் (பூர்வாசாரியர்கள் – வேதங்களை நன்றாக அறிந்தவர்கள்) அதைச் செய்ததில்லை, அதனால் நாங்களும் செய்வதில்லை” என்று கூரத்தாழ்வான் கூறினார். இப்படி நமது பூர்வாசாரியர்கள் மீது இவர் ஸ்திரமான மனமும், நம்பிக்கையும் வைத்திருந்தார்.
 1. ஆத்ம-வினிக்ரஹ: சுய கட்டுப்பாடு (வைராக்யம்)
 • அவருடைய திருக்குமாரர்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் (யுவா பருவம்) அவருடய தர்ம பத்னி மற்றும் பலரும், தகுந்த மணப்பெண் பார்க்குமாறு கேட்டபொழுது, “ஈச்வர குடும்பதுக்கு நாம் யார் கரைவது?” என்று கூரத்தாழ்வான் கூறினார். அதாவது “பகவானுடைய குடும்பத்திற்கு நான் ஏன் கவலைப்படவேண்டும்? இது ஸ்ரீரங்கனாதனுடைய கடமை” என்று கூறினார்.
 • எம்பெருமானார் கூரத்தாழ்வானை தேவப்பெருமாளிடம் ஸ்தோத்ரம் செய்து கண்களை அவரிடம் வேண்டுமாறு நியமித்த பொழுது, கூரத்தாழ்வான் அவரிடம், அவருக்கும் நாலூரனுக்கும் (அவருடைய கண்களை இழக்கக் காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கேட்டார்.
 1. இந்த்ரிய-அர்த்தேஷு வைராக்யம் – புலன்களின் ஆசையை துறத்தல்
 • திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் (தங்கம் மற்றும் பல) ஆழ்வானிடம் கொடுத்த பொழுது, கூரத்தாழ்வான் அனைத்தயும் தெருவிலே விட்டெறிந்து விட்டு, எம்பெருமானாரிடம் “தான் அனைத்து தேவையற்ற சுமைகளையும் கைவிட்டேன்” என்று கூறினார்.
 1. அனஹங்கார தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்
 • மிகச்சிறந்த ஞானியாகவும், மிகுந்த செல்வந்தராக இருந்தலும் கூட, கூரத்தாழ்வான் ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது, ஒரு நேரத்தில் எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான் மீது வருத்தம் ஏற்பட்டது. அதற்கு ஆழ்வான் “எம்பெருமானார் என் ஸ்வாமி, நான்  அவருக்கு தாசன். ஆதனால் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.
 1. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-துக்க-தோஷானுதர்ஸனம் எப்பொழுதும் இந்த சம்சாரத்தில் உள்ள கஷ்டத்தை பார்பது
 • ஒருமுறை யாரோ ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை கேட்டவுடன், கூரத்தாழ்வான் ரங்கநாதர் திருமுன்பே சென்று அழுதார். ஏன்? என்று சிலர் கேட்டதற்கு, “யவரேனும் ஒருவர் இந்த சம்சாரம் என்கிற சிறையில் பிறக்கும் போது, இந்த சம்சாரதிலிருந்து யாரால் விடுவிக்க முடியுமோ அவரிடம் சென்று நாம் அழவேண்டும். ரங்கநாதர் மட்டுமே நாம் அனைவரையும் இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான், நான் அவரிடம் சென்று இந்த குழந்தை பிறந்ததற்காக அழுதுவிட்டு வந்தேன்” என்று கூறினார்.
 1. அஸக்திர் – பற்றின்மை
 • எம்பெருமானாருடைய திருவடி சம்பந்தத்தை பெறுவதற்காகக் காடு வழியே ஆழ்வானும், ஆண்டாளும் ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் போது, ஆழ்வானுடைய தர்மபத்னி ஆண்டாள் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். ஏன் பயம் என்று ஆழ்வான் கேட்டபொழுது, தேவரீர் அமுது செய்ய உபயோகப்படுத்தும் தங்கப் பாத்திரத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். உடனே அதை வாங்கித் தூக்கி எறிந்துவிட்டு, ரங்கநாதரும், எம்பெருமானாரும் இருக்கும்பொழுது இந்தப் பாதிரத்தால் என்ன பயன் என்று கேட்டார். இதன் மூலம் ஆழ்வானுக்கு சிறிதளவும் கூட எந்தப் பொருளிலும் ஆசை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது.
 1. புத்ரதாரக்ருஹாதிஷு அனபிஷ்வங்க: குழந்தை, மனைவி , வீடு மற்றும் பல விஷயங்களில் பற்றில்லாமல் இருத்தல்
 • அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஸ்ரீரங்கம் சென்று உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார். தனக்கென்று ஒரு குடும்பம் இருந்த பொழுதிலும், இவர் சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்றி வந்தார்.
 • ஒரு நாள் இவர் தனது சிஷ்யர்களுக்கு ரஹஸ்யத்ரய (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, முதலில் அவருடைய குழந்தைகளை அந்த இடத்தை விட்டுச் செல்லச் சொன்னார். ஆனால் பின்னர் அவர்களை அழைத்து விசேஷார்த்தங்களைக் (உட்கருத்துக்களை) கூறினார். ஏன் என்று கேட்டபொழுது “யாருக்குத் தெரியும் இவர்கள் எவ்வளவு நாட்கள் இருப்பர்கள் என்று. இவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் தங்களுடைய உயிரை இழந்து விடலாம், அதனால் தான் அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறினார். இது இவர் தன் குழந்தைகள் மீது உள்ள பற்றினால் அல்ல, அவர்களையும் ஒரு ஆத்மாவாகப் பார்த்து, அவர்களும் உண்மையான அறிவைப் பெற வேண்டும் என்றும், அவர்களும் இந்த சம்சாரதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகச் செய்தார் என்பதை மிகத் தெளிவாக் காட்டுகிறது.
 • இவர் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் வைத்துகொண்டதில்லை என்றும், இவருடைய குழந்தைகள் (பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்) ஸ்ரீரங்கநாதனுடைய கடாக்ஷத்தினாலேயே அதாவது அவருடைய அரவணைப் பிரசாதத்தினாலேயே அவதரித்தனர் என்றும் கூறுவர்கள்.
 1. இஷ்ட அனிஷ்ட உபபத்திஷு நித்யம் ஸமசித்தத்வம் – விருப்பு வெறுப்பு அற்று ஸம நிலையுடன் இருத்தல்
 • கூரத்தாழ்வான் தனது கண்களை இழந்த போது பெரிதும் வருத்தமில்லாமல் இருந்தார். “பகவானுடைய விரோதியான அந்த ராஜாவைப் பார்த்த பிறகு இந்தக் கண்களினால் என்ன பயன் ?” என்று அவர் கேட்டார். எம்பெருமானார், கூரத்தாழ்வானை, காஞ்சி வரதரிடம் கண்களை திருப்பித் தருமாறு கேட்க வேண்டும் என்று நியமித்த பொழுது, கூரத்தாழ்வானுக்கு ஒன்றும் அவ்வளவாக சந்தோஷமாக இல்லை, அதோடு அவர் “நான் ஏற்கனவே எம்பெருமானார் மற்றும் எம்பெருமானை தன்னுடைய அகக்கண்களால் சேவித்துக் கொண்டிருக்கிறேன், புறக்கண்களுக்கு என்ன அவசியம்?” என்று கேட்டார்.
 1. மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிசாரிணி – என் (கிருஷ்ணன்) மேல் மட்டுமே நிலையான பக்தி
 • மிகவும் பாதகமான நேரத்தில் கூட, அதாவது தனது கண்களை இழந்த போதிலும், திருவரங்கத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் மற்றும் பல நிலைகளிலும் கூரத்தாழ்வான் நிலையான பக்தியோடு எம்பெருமானை மட்டுமே வழிபட்டார். அவர் ஒருகலத்திலும் இதர தேவதைகளிடம் சென்றது இல்லை, அதுமட்டுமல்லாமல் எம்பெருமானிடமும் பக்தியைத் தவிர வேறு எதையும் கேட்டதில்லை.
 1. விவிக்ததேசசேவித்வம் – தனிமையான இடத்தில் வசித்தல்
 • ஒரு ஸ்ரீவைஷ்ணவர், தனிமையான இடத்தில் வசிக்க வேண்டும் என்பது, புனிதமான இடத்தில் வசிப்பது அதாவது அந்தச் சுற்றுச்சூழலில் பகவானைப் பற்றி மட்டுமே பல விசேஷங்கள் நடக்கும் என்பது தான் அதன் பொருள். கூரத்தாழ்வான் எப்பொழுதுமே தனது ஆசார்யரான எம்பெருமானாரோடே வசித்து வந்தார் மற்றும் எப்பொழுதுமே எம்பெருமான், எம்பெருமானாருடைய கைங்கர்யத்தையே சிந்தித்தும் செய்தும் வந்தார்.
 1. அரதிர்ஜனஸம்ஸதி – பொது மக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்
 • சிறந்த பக்தர்கள் பொது மக்களோடு சேர்ந்து இருந்தாலும் கூட, அவர்கள் மீது பற்றில்லாமல் இருப்பார்கள். கூரத்தாழ்வான் ஒரு சில சாதாரண மக்களோடு (ராஜா,.. மற்றும் பலர்) இருந்தாலும், அதாவது அவரிடம் அறிவுரைகளைக் கேட்கும் சிலரோடு இருந்தாலும் கூட, அவர்களிடம் எந்த வித பற்றையும் காட்டியதில்லை.
 1. அத்யாத்மஞானநித்யத்வம் – நித்யமான ஆத்ம ஞானம்
 • தனது சிறு வயதிலிருந்தே, கூரத்தாழ்வான் ஆத்ம ஞானத்தில் ஈடுபாடு காட்டினார். அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவுக்கு அடிமைப்பட்டது என்பதைத் தெளிவாக இருந்தார்.
 1. தத்த்வ-ஞான அர்த்த சிந்தனம் – உண்மையான அறிவைப் பற்றி சிந்தனை செய்வது
 • அனைத்து ஜீவாத்மக்களும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமைப் பட்டவர்கள் என்று. கூரத்தாழ்வான் எப்பொழுதுமே உண்மையான அறிவைப் பற்றிச் சிந்தனை செய்வார். அதனால்தான் அவர் பரமபதித்த பொழுது, எம்பெருமானார் த்வய மஹா மந்திரத்தைக் கூரத்தாழ்வான் திருச்செவியில் ஓதுமாறு ஸ்ரீவைஷ்னவர்களை நியமித்தார். ஏனென்றால் அதைத் தான் அவர் எப்பொழுதுமே சிந்தனை செய்தார்.

முடிவுரை

இந்த அனைத்து சிறந்த குணங்களும் ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே கூரத்தாழ்வானிடத்தில் முழுமையாக  வெளிப்பட்டது” என்று மாணிக்க மாலையில் கூறியுள்ளார். நாம் இதிலுள்ள சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு, நமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி, கூரத்தாழ்வான் மற்றும் அனைத்து பூர்வாசாரியர்களையும் மகிழ்விப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமானுஜ தாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/10/05/kurathazhwan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் –

மாறனேரி நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

alavandhar-deivavariandan-maranerinambi

ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் சன்னிதியில் சிற்ப வடிவில் எழுந்தருளியிருக்கும் ஆளவந்தார் (மத்தியில்), தெய்வவாரி ஆண்டான் மற்றும் மாறனேரி நம்பி

திருநக்ஷத்ரம்: ஆனி, ஆயில்யம்

அவதார ஸ்தலம்: புராந்தகம் (பாண்டிய நாட்டில் இருக்கும் ஒரு கிராமம்)

ஆசார்யன்: ஆளவந்தார்

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

ஆளவந்தாருடைய தயைக்கு பாத்திரமான சிஷ்யர் மாறனேரி நம்பி. இவர் நான்காவது வர்ணத்தில் அவதரித்தார். இவர் தன் ஆசார்யன் ஆளவந்தார் மீதும், பெரிய பெருமாள் மீதும் வைத்திருந்த பற்றைப் (அன்பை) பார்த்து ஸ்ரீங்கத்தில் உள்ள அனைவராலும் மிகவும் மதிக்கப்பட்டார்.

இவர் குணங்கள் மாறனைப் (நம்மாழ்வரைப்) போலே இருப்பதால், சில நேரங்களில் இவரை மாறனேர் நம்பி (மாறன் + நேர்) என்று அழைக்கப்பட்டார்.

இவர் ஆளவந்தாரிடம் எப்பொழுதுமே காலக்ஷேபம் கேட்பதிலே முழு ஈடுபாட்டுடன் இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் இவர் எப்பொழுதும் பெரிய பெருமாளுடைய குணானுபவத்திலே மிகவும் ஈடுபட்டிருந்தார். இவர், தான் மற்றவர்கள் மீது வைத்திருந்த பற்றை (அன்பை) விட்டு ஸ்ரீரங்கம் கோயில் ப்ரகாரத்திலேயே வாழ்ந்து வந்தார்.

மாறனேரி நம்பி தன்னுடைய அந்திம காலத்தில் பெரிய நம்பியிடம், தன் தேஹ பந்துக்கள் அனைவரும் ஸ்ரீவைஷ்ணவர்களாக இல்லாததால், இந்த திருமேனியை (பூத உடலை) அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறினார். அது மட்டுமல்லாமல் அந்திம க்ரியைகள் அனைத்தையும் பெரிய நம்பியையே செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டார். அவர் இந்த உடலை ஹவிஸோடே (யஞ்யத்தில் ஸமர்பிப்பது) ஒப்பிட்டார். அதாவது எப்படி அது பகவானுக்கு மட்டுமே ஸமர்பிக்கத் தகுந்ததோ இதுவும் அப்படியே என்றும், அதை எப்படி மற்றையார்கள் தொடக்கூடாதோ அதே போல் இதையும் மற்றையார்கள் தொடக்கூடாது என்று கூறினார். பெரிய நம்பி இந்த நியமனத்தை சிரஸாக வகித்து, மாறனேரி நம்பி பரமபதித்த உடன் அவருக்கு சரம கைங்கர்யத்தைச் செய்து முடித்தார். இதைப் பார்த்த அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் அவருடைய (மாறனேரி நம்பி) வர்ணத்தினால் குறைவு என்பதால், இவர் அந்திம க்ரியைகள் செய்தது தவறு என்று கூறி, எம்பெருமானாரிடம் சென்று குறை கூறினார்கள். எம்பெருமானாருக்கோ பெரிய நம்பி மூலமாக மாறனேரி நம்பியினுடைய பெருஞ்சிறப்பை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அவர் பெரிய நம்பியிடம் சென்று “ஏன் இப்படிச் செய்தீர்?” என்று வினவினார். “அடியேனோ சாஸ்திரங்கள் மீது ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை வளர வேண்டும் என்று சில காரியங்களைச் செய்தால், தேவரீர் எதற்காக இப்படி ஒரு காரியத்தை சாஸ்திரத்திற்கு முரணாகச் செய்தீர்?” என்று எம்பெருமானார் பெரிய நம்பியிடம் கேட்டார். அதற்குப் பெரிய நம்பி “பாகவத கைங்கர்யத்திற்கு நாம் வேறொருவரை நியமிக்க முடியாது. நாமே தான் செய்து முடிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஸ்ரீ ராமன், ஜடாயுவிற்கு அந்திம க்ரியைகளைச் செய்தான். நான் ராமனை விட உயர்ந்தவன் அல்ல, இவரும் ஜடாயுவை விடத் தாழ்ந்தவன் அல்ல, அதனால் அடியேன் இவருக்கு செய்த கைங்கர்யம் ஒன்றும் தவறு இல்லை. நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியில் “பயிலும் சுடரொளி” (திருவாய்மொழி 3-7) மற்றும் “நெடுமாற்கடிமை” (திருவாய்மொழி 8-10) பதிகங்களில் பாகவத சேஷத்வத்தை பற்றி மிகவும் சிறப்பாகக் கூறியுள்ளார். அது வெறும் தத்வார்த்தம் மட்டும் அன்று, நாம் ஆழ்வாருடைய தெய்வீக வார்த்தையை நம்மால் இயன்ற அளவு பின்பற்ற வேண்டும்” என்று கூறினார். இதைக் கேட்டவுடன் எம்பெருமானார் மிகவும் சந்தோஷத்துடன் பெரிய நம்பியைச் சேவித்தார். பிறகு பெரிய நம்பி செய்தது உன்னதமான செயல் என்று அறிவித்தார். இதைக் கேட்ட அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இந்த அழகான ஸம்பாஷணையை, மணவாள மாமுனிகள் பிள்ளை லோகாசாரியருடைய ஸ்ரீவசன பூஷனத்தில் உள்ள 234வது ஸூத்திரத்தினுடைய வ்யாக்யானத்தில் மிகவும் அருமையாக விளக்கிக் காட்டியுள்ளார்.

நம்பியினுடைய வைபவம் வ்யாக்யானங்களில் சில இடங்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவற்றில் சிலவற்றைக் கீழே காண்போம்.

 • திருப்பாவை 29 – ஆய் ஜனன்யாசாரியர் வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் எம்பெருமானார் மற்றும் பெரிய நம்பிக்கு இடையே நடந்த சம்பாஷணை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. மாறனேரி நம்பியின் கடைசி நாட்களில், அவர் சரீரரீதியான இடர்பாடுகளை சகிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், தன்னுடைய இறுதிக் கணங்களில் தாம் எம்பெருமானைப் பற்றி த்யானிக்க முடியாதோ என்று மிகவும் வருந்தினார். அந்த நிலையைப் பார்த்த பெரிய நம்பி, எம்பெருமானாரிடம் மாறனேரி நம்பி பரமபதம் சென்றடைவாரா? என்று கேட்டார். அதற்கு எம்பெருமானார் “வராஹப் பெருமாள் முன்பே வராஹ சரம ச்லோகத்தில் உத்திரவாதம் கொடுத்துள்ளாரே! அதாவது எவன் ஒருவன் தன்னைச் சரணடைந்தானோ அவனைக் கடைசி நேரத்தில் தான் நினைத்து, தானே அவனை பரமபதத்தில் சேர்ப்பதாகக் கூறியுள்ளார்” என்றார். உடனே பெரிய நம்பி “அந்த வார்தைகளை நம்ப முடியாது, ஏனென்றால் அவன் அதை பூமிப் பிராட்டி மீது உள்ள பற்றினால் கூறியிருப்பான், அதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார். அதற்கு எம்பெருமானார் “பிராட்டி எப்பொழுதுமே எம்பெருமானுடன் இருப்பதால், அவளை சமாதானப்படுத்துவதற்காக அவன் இந்த வார்தைகளைக் கூறியிருக்கமாட்டான்” என்றார். உடனே பெரிய நம்பி “ஒருவன் பகவத் விஷயத்திலேயே ஈடுபட்டிருந்தால் அவனுக்கு மோக்ஷம் கொடுக்கப்படும் என்று எங்கே கூறியுள்ளது? அதற்கு ப்ரமாணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு எம்பெருமானார், கண்ணன் எம்பெருமான் சாதித்த கீதையில் 4.10ல் உள்ள வார்தையை எடுத்துகாட்டினார் “ஜன்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத: த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜுன“. அதாவது எவன் ஒருவன் பகவானுடைய அவதாரத்தையும், அவனுடைய சேஷ்டிதங்களையும் உண்மையாகப் புரிந்து கொள்கிறானோ, அவனது ஜன்மத்தின் முடிவில் நிச்சயமாகப் பரமபதத்திற்குச் செல்வான். எம்பெருமானாரின் இந்த வார்தையைக் கேட்டவுடன்  பெரிய நம்பி மிகவும் மகிழ்ந்தார்.
 • பெரிய திருமொழி 7.4 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் அவதாரிகை – இந்தப் பதிகத்தில், “கண்சோர வெங்குருதி” பாசுரத்தில் , திருச்சேறை ஸாரநாதன் எம்பெருமானிடம் சரணடைந்த ஸ்ரீவைஷ்ணவர்களை மிகவும் புகழ்ந்து பேசுகிறார் திருமங்கை ஆழ்வார். இந்த இடத்தில் பெரிய நம்பி மாறனேரி நம்பிக்கு செய்த அந்திம கைங்கர்யங்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
 • முதல் திருவந்தாதி 1 – நம்பிள்ளை வ்யாக்யானம் – ஒருவர் மாறனேரி நம்பியிடம் “எம்பெருமானை மறவாதிருக்க ஏதேனும் வழி உண்டோ?” என்று கேட்க அதற்கு அவர் “எம்பெருமானை மறப்பதற்கு ஏதேனும் வழி உண்டோ?” என்று கேட்டார் (ஏனென்றால் இவர் எப்பொழுதுமே எம்பெருமானைப் பற்றி த்யானித்துக் கொண்டிருப்பதால், அவரால் எம்பெருமானை மறப்பது சாத்தியம் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை).
 • ஸ்ரீவசன பூஷணம் 324 – பிள்ளை லோகாசாரியர் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பெருமையை இந்த ஸூத்திரத்தில் கூறினார். குறிப்பாக ஒருவன் பிறக்கும் வர்ணத்தினால் அந்த பெருமைகள் குறையாது என்று கூறினார். பல உதாரணங்களுக்கு மத்தியில், பெரியநம்பி தான் மாறனேரி நம்பிக்கு செய்த அந்திம கைங்கர்யங்களைப் பற்றி எம்பெருமானாருக்கு விவரித்ததை எடுத்துக் காட்டியுள்ளார். மாமுனிகள் அவருடைய அழகான வ்யாக்யானத்தில் இந்த ஸம்பாஷணையின் ஸாரத்தை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.
 • ஆசார்ய ஹ்ருதயம் 85 – அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், தன்னுடைய தமையனாரின் (பிள்ளை லோகாசாரியர்) அடிச்சுவடுகளைப் பின்பற்றி, மாறனேரி நம்பியுடைய பெருமையை ஒரு சூர்ணிகையில் இந்த சம்பவத்தின் மூலம் எடுத்துக்காட்டினார்.

இதன் மூலம் நாம் மாறனேரி நம்பியின் சில பெருமைகளில் சில துளிகளை அனுபவித்தோம் .

நாமும் ஆளவந்தார் மீது மிகவும் பற்றோடு இருந்த மாறனேரி நம்பியின் திருவடித் தாமரைகளைப் போற்றி வணங்குவோம்.

குறிப்பு : இவருடைய திருநட்சத்திரம் ஆடி-ஆயில்யம் என்று பெரிய திருமுடி அடைவில் காட்டப்பட்டுள்ளது, ஆனால் ஆனி-ஆயில்யம் என்று அவருடைய வாழித் திருநாமத்தில் காட்டப்பட்டுள்ளது.

மாறனேரி நம்பியினுடைய தனியன் :

யாமுநாசார்ய ஸச்சிஷ்யம் ரங்கஸ்தலநிவாஸிநம்
ஜ்ஞாநபக்த்யாதிஜலதிம் மாறனேரிகுரும் பஜே

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமானுஜ தாசன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2013/03/02/maraneri-nambi/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருக்கண்ணமங்கை ஆண்டான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

திருநக்ஷத்ரம் : ஆனி ஶ்ரவணம் (திருவோணம்)

அவதார ஸ்தலம் : திருக்கண்ணமங்கை

ஆசார்யன் : நாதமுனிகள்

பரமபதித்த இடம்: திருக்கண்ணமங்கை

அருளிச்செய்தவை: நாச்சியார் திருமொழி – “அல்லி நாள் தாமரை மேல்” என்று தொடங்கும் தனியன்.

Thirukkannamangai_bhakthavatsalan

தாயாருடன் எழுந்தருளியிருக்கும் பக்தவத்ஸலன் எம்பெருமான் – திருக்கண்ணமங்கை

thirukkannamangai-andan-thiruvarasuதிருக்கண்ணமங்கை ஆண்டான் – திருக்கண்ணமங்கை

நாதமுனிகளின் தயைக்குப் பாத்திரமாக இருப்பவர் திருக்கண்ணமங்கை ஆண்டான். இவர் திருக்கண்ணமங்கை என்னும் திவ்யதேஶத்தில் அவதரித்தார். பகவான் ரக்ஷிப்பான் என்று இவர் பகவான் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பற்றி நமது பூர்வாசாரியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகிறார்கள்.

ஸ்ரீவசனபூஷண திவ்ய ஶாஸ்திரத்தில் பிள்ளைலோகாசாரியர் இவருடைய மேன்மையான குணவிஶேஷங்களைப் பற்றி மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். உபாயம் (பகவானை அடைவதற்கான வழி) மற்றும் உபேயத்தை (குறிக்கோள் – பகவத் கைங்கர்யம்) பற்றி விரிவாகக் கூறும் சமயத்தில் மிகச்சிறந்த உதாரணத்தைக் காட்டுவதற்காக, அவர் 80 ஆவது ஸூத்ரத்தில் “உபாயத்துக்குப் பிராட்டியையும், த்ரௌபதியையும், திருக்கண்ணமங்கை ஆண்டானையும் போலே இருக்கவேணும்; உபேயத்துக்கு இளைய பெருமாளையும், பெரிய உடையாரையும், பிள்ளை திருநறையூர் அரையரையும், சிந்தயந்தியையும் போலே இருக்கவேணும்” என்று கூறினார். இந்த ஸூத்ரத்திலும் மற்றும் பின்புள்ள சில ஸூத்ரங்களிலும் உபாயம் மற்றும் உபேயத்தைப் பற்றி மிகச் சிறப்பான உதாரணங்களை வைத்து மிகவும் அழகாக விவரித்துள்ளார். உபாயம் என்பது வழி மற்றும் உபேயம் என்பது குறிக்கோள். பகவானே நாம் உய்ய வழி என்றும், அவனுக்கு நாம் பண்ணும் நித்ய கைங்கர்யமே மிகவும் முக்கியமான குறிக்கோள் என்றும் ஶாஸ்த்ரம் விளக்குகிறது. பகவான் மட்டுமே ஸர்வஶக்தனாய் மற்றும் ஸர்வரக்ஷகனாய் இருப்பதால், அவரால் எவரை வேண்டுமானாலும் எளிதில் ஸம்ஸார ஸம்பந்தத்திலிருந்து விடுவிக்க முடியும் – ஆதலால் அவனே உபாயம். ஸ்ரீமந் நாராயணனே அனைவருக்கும் எஜமானன் (தலைவன்) என்பதால், ஸ்ரீமந் நாராயணனும் அவனது பத்னியுமான பெரியபிரட்டியாரும் இருக்கும் அச்சேர்த்தியிலே கைங்கர்யம் செய்வது தான் மிகச்சிறந்த உபேயம். உபாயம் மற்றும் உபேயத்திற்குச் சில உதாரணங்களை சுருக்கமாக இங்கே காண்போம்.

உபாயம்

 • ராவணன் ஸீதா பிராட்டியைச் சிறை பிடித்து வைத்திருந்த காலத்தில், பிராட்டி தன்னுடைய ஶக்தியின் மூலம் ராவணனை தண்டித்து விட்டு சென்றிருக்கலாம். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. ஹனூமானுடைய வாலில் ராக்ஷஸர்கள் தீ வைத்தபோது பிராட்டி தன்னுடைய ஶக்தியை நிரூபித்துக் காட்டினாள். எப்படி என்றால் “ஶீதோ பவ” (இந்த நெருப்பு, குளிர்ந்து இருக்கட்டும்) என்று கூறி பிராட்டி குளிரக் கடாக்ஷித்ததால் ஹனூமானுக்கு அந்த நெருப்பு சுடாமல் குளிர்ந்திருந்தது. ஆனால் அவள் பெருமாளை (ஸ்ரீ ராமன்) மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்டினாள். எப்படி என்றால் அவள் தன்னைக் காத்துக்கொள்ள தன்னுடைய எந்த ஶக்தியையும் உபயோகப்படுத்தாமல், பெருமாளே வந்து தன்னைக் காப்பற்ற வேண்டும் என்று காத்திருந்தாள்.
 • கௌரவர்கள், அனைவரும் இருக்கும் ஸபையில் த்ரௌபதியை அவமானப்படுத்தியபொழுது, தன்னுடைய லஜ்ஜையை (நாணத்தை) விட்டு, தன்னைதானே ரக்ஷித்துக்கொள்ள முடியாமல் கைகளைத்தூக்கி ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கதறினாள். அவள் புடவையை தன் கைகளால் பிடித்துக்கொள்ளாமல், கிருஷ்ணன் காப்பற்றுவான் என்ற முழு நம்பிக்கையுடன் இரண்டு கைகளையும் கூப்பினாள்.
 • எம்பெருமனே நமக்குத் தஞ்சம் என்று இவர் தன்னுடைய செயல்கள் அனைத்தையும் விட்டுவிட்டு திருக்கண்ணமங்கை திவ்யதேசத்து எம்பெருமானான பக்தவத்ஸலப் பெருமாளைத் தஞ்சமடைந்தார்.

இந்த ஸூத்ரத்தின் வ்யாக்யானத்தில், ஆண்டானுடைய நிஷ்டையை மிகவும் அழகாக விளக்கியுள்ளார் விஶதவாக்ஶிகாமணியான மாமுனிகள். ஒருநாள் ஒரு நாயை ஒருவன் அடித்ததை ஆண்டான் பார்த்தார். இதைப் பார்த்த அந்த நாயின் சொந்தக்காரர் மிகவும் கோபமடைந்து அதை அடித்தவருடன் சண்டையிட்டார். இருவரும் தங்களுடைய கத்தியை வெளியே எடுத்து சண்டையிட்டார்கள். அது  மட்டுமல்லாமல் ஒருவரையொருவர் கொல்லவும் தயாரானார்கள். இதைப் பார்த்தவுடன் மிகச்சிறந்ததோர் எண்ணம் ஆண்டானுக்கு உதயமானது. “ஒரு ஸாதாரண மனிதன் தனக்கு சொந்தமான ஒரு நாயை அடித்ததற்காக கோபப்பட்டு, கேவலம் அந்த வஸ்து தனக்கு சொந்தமானது என்பதற்காக அடித்தவரைக் கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு செல்வானேயானால், ஒருவன் “ஸர்வ ரக்ஷகனான எம்பெருமானிடம் நாம் ஶரணாகதி பண்ணிவிட்டு, அவனே நம்மை காப்பாற்றுவான் என்றிருந்தால் தேவர்க்கெல்லாம் தேவனான ஸ்ரீமந் நாராயணன் நம்மை ரக்ஷியாதிருப்பனோ?” என்று அவர் சிந்தித்தார். இதைச் சிந்தித்த உடனேயே, தான் அனைவர் மீதும் வைத்திருந்த பற்றை விட்டு, தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும், கவலையும் இல்லாமல் கோயிலுக்குச் சென்று அங்கேயே இருந்தார். இங்கே, எதுவும் செய்யாமல் அனைத்துச் செயல்களையும் விட்டார் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் மாமுனிகள் இவர் கொள்கையை மிகவும் அழகாக விவரித்துள்ளார். அவருடைய அழகான வார்த்தைகள் என்னவென்றால் “ஸ்வரக்ஷண ஹேதுவான ஸ்வவ்யாபாரங்களை விட்டான் என்றபடி” – அதாவது அவர் தன்னை ரக்ஷிக்கும் பொருட்டான அனைத்து செயல்களையும் கைவிட்டார். இதற்கு என்ன அர்த்தமென்றால், அவர் எம்பெருமானுக்கு பண்ணும் கைங்கர்யங்களை விடாமல் செய்து வந்தார், ஆனால் தன்னை ரக்ஷித்துக்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டார் என்பதே இதன் பொருள். ஆய் ஜனன்யாசாரியரும் இதே கொள்கையை எடுத்துக்காட்டுகிறார். இந்த அழகான ஶாஸ்த்ரார்த்தத்தை இனிமேல் வரும் பகுதிகளிலிருந்து நன்றாக புரிந்து கொள்ளமுடியும், குறிப்பாகத் திருவாய்மொழி 9.2.1 வ்யாக்யானத்தில் காட்டிய ஸம்பவத்தின் மூலம் மிகவும் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

உபேயம் (கைங்கர்யம்) – 80வது ஸூத்ரத்தின் மீதமுள்ள பாகம் மற்றும் அடுத்துள்ள ஸூத்ரத்தின் சுருக்கமான விளக்கம்

 • இளைய பெருமாள் – லக்ஷ்மணன் – பெருமாளை (ஸ்ரீ ராமன்) விட்டு ஒரு பொழுதும் இணைபிரியாமல் இருந்து, பெருமாள் எங்குச் சென்றாலும் அவருடன் சென்று, அவருக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்தார்.
 • பெரிய உடையார் – ஜடாயு மஹாராஜா – ஸீதா பிராட்டியை காப்பாற்றவேண்டும் என்று ராவணனுடன் சண்டையிடும் காலத்தில், தனக்கு தீங்கு ஏற்படும் என்று நினையாமல், சண்டையிட்டார். அவருடைய முழு எண்ணமும் பிரட்டியை அந்த ராவணனிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்றே இருந்தது. ஆனாலும் அவர் இறுதியில் கொல்லப்பட்டார்.
 • பிள்ளை திருநறையூர் அரையர் – இவர் மற்றும் இவருடைய குடும்பமே தொட்டியம் திருநாராயணபுரத்து (திருவரங்தத்திற்கு அருகில் இருக்கும் ஸ்தலம்) எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வந்தார்கள். ஒருமுறை தீயவர்கள் சிலர் அந்த கோயிலைத் தாக்கி, அந்த அர்ச்சாவதாரப் பெருமாளுக்கு தீ வைத்துவிட்டார்கள். இதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், எம்பெருமானை காபாற்றுவதற்க்காக இவர் மற்றும் இவருடைய குழந்தைகள், தர்ம பத்தினி அனைவரும் அர்ச்சாவதாரத் திருமேனியை அணைத்துக் கொண்டனர். அந்த காலத்தில் தீயினால் ஏற்பட்ட காயத்தினால் அவரும் அவருடைய குடும்பமும் உயிரை விட்டார்கள். இப்படி எம்பெருமானுக்காக தம்மையே அர்ப்பணித்ததை நமது பூர்வாசாரியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகிறார்கள்.
 • சிந்தயந்தி – வ்ரஜ பூமியில் வாழ்ந்த ஒரு கோபிகை. இவள் கண்ணன் எம்பெருமான் மீது மிகவும் பற்று (அன்பு) வைத்திருந்தாள். ஒரு நாள் கண்ணன் எம்பெருமானுடைய அழகான வேணு கானத்தை (குழலோசையை) கேட்டவாறே, மிகவும் ஆனந்தமடைந்து தன்னுடைய க்ருஹத்தை விட்டு உடனே சென்று எம்பெருமானை ஸேவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். வீட்டிலிருந்த பெரியோர்கள் அனுமதிக்காத படியினால் அவளால் உடனே அவளுடைய க்ருஹத்திலிருந்து கிளம்ப முடியவில்லை என்பதால் மிகவும் வருத்தமடைந்தாள். எம்பெருமானுடைய குழலோசையைக் கேட்டு பேரின்பமடைந்ததால், அவளுடைய புண்ய கர்மங்கள் (மகிழ்ச்சியாய் இருப்பதற்கு புண்யம் தேவைப்படுகிறது) அழிந்தன. தன்னால் இந்த இடத்தை விட்டு கண்ணனிடம் செல்ல முடியவில்லையே என்று மிகவும் வருத்தப்பட்டதால் அவளுடைய பாப கர்மங்கள் அழிந்தன. அவளுடை பாபம் மற்றும் புண்யங்கள் அனைத்தும் அழிந்ததும், உடனேயே அவள் பரமபதத்தை அடைந்தாள் (நமது புண்யம் மற்றும் பாபமே நம்மை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் அழுத்துகிறது – அவை அனைத்தும் அழிந்தால் நாமும் பரமபதமான மிகப்பெரிய பேற்றை அடைவோம்). நமது இறுதி குறிக்கோளான பரமபதத்தை இவள் மிகவும் ஸுலபமாக அடைந்து, அங்கு எம்பெருமானுக்கு நித்யமாக கைங்கர்யம் செய்தாள்.

அதுமுதல் ஆண்டான் மீதமுள்ள காலங்களில் திருக்கண்ணமங்கை எம்பெருமானுக்கே கைங்கர்யம் செய்து கொண்டிருந்து, கடைசியில் பரமபதத்தை அடைந்தார். அவருடைய கைங்கர்யத்தை பரமபதநாதனுக்குச் செய்யத் தொடங்கினார்.

ஆண்டானுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் புகழ் திவ்ய ப்ரபந்த வ்யாக்யானங்கள் மற்றும் ரஹஸ்ய க்ரந்த வ்யாக்யானங்களில் சில இடங்களில் காட்டப்பட்டுள்ளது. அதை நாம் இங்கே பார்ப்போம்.

 • நாச்சியார் திருமொழி 1.1, பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – “தரை விளக்கி” ஆண்டாள் அருளிச்செய்தாள் – தரையை சுத்தம் செய்வது. திருக்கண்ணமங்கை ஆண்டான் சுத்தம் செய்யும் கைங்கர்யத்தையே முக்கியமான குறிக்கோளாக (இதன் மூலமாக எதையேனும் அடையவேண்டும் என்ற நினைப்பில்லாமல்) வைத்திருந்தார் என்று பெரியவாச்சான் பிள்ளை எடுத்துக்கட்டுகிறார்.
 • திருமாலை 38, பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – “உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பர்” – என்றால் எவரொருவர் எம்பெருமான் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளாரோ அவரே வாழும் சோம்பர் என்று இந்த இடத்தில் காட்டுகிறார். அதாவது ஒரு நாயினுடைய சொந்தக்காரர் அதைக் காப்பற்றியதைப் பார்த்த உடன், ஆண்டான் பக்தவத்ஸலப்பெருமாளிடம் இதை அனுஷ்டித்துக் காட்டியதை வாழும் சோம்பர் என்று பெரியவாச்சான் பிள்ளை விளக்குகிறார். வாழும் சோம்பருக்கு எதிர் மறையானது தாழும் சோம்பர் (உண்மையான சோம்பேறியான நபர்). இவர்கள் தன்னை எந்தக் கைங்கர்யத்திலும் ஈடுபடுத்திக்கொள்ளாமல் தனது வாழ்க்கையை வ்யர்த்தமாக கழிப்பர்கள்.
 • திருவாய்மொழி 9.2.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – “கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” – ஒருவன் எம்பெருமானுடைய கோயிலை சுத்தம் செய்து கைங்கர்யம் செய்தாலே அவனுடைய பாபங்கள் கழிந்துவிடும். திருக்கண்ணமங்கை ஆண்டான் அனைத்துச் செயல்களையும் விட்டு, எப்பொழுதுமே திருக்கண்ணமங்கை பக்தவத்ஸலன் எம்பெருமான்  ஸன்னிதில் இருந்ததை நாம் அனைவரும் அறிந்ததே. அவர் எப்பொழுதும் ஸன்னிதியை சுத்தம் செய்யும் கைங்கர்யத்தை ஒரு நாள் தவறாமல் மிகவும் ப்ரேமையோடு செய்து வந்தார். திருவாய்மொழி 9.2.1 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – நம்பிள்ளை மிகவும் அழகாக ஒரு முக்கியமான விஷயத்தை நிறுவுகிறார். நாங்கள் தலைமுறை தலைமுறையாக கோயிலைச் சுத்தம் செய்வது முதலான பல கைங்கர்யங்களை செய்து வருகிறோம் என்று நம்மாழ்வார் கூறுகிறார். இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ப்ரபன்னர்கள் எம்பெருமானை மட்டுமே உபாயம் என்று முழுமையாக ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்காக என்று எந்த தனிப்பட்ட விஷயத்திற்கும் ஒருபொழுதும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை – அதனால் எதற்காக கைங்கர்யம் பண்ண வேண்டும்?. இதைத் திருக்கண்ணமங்கை ஆண்டானுடைய சரித்திரத்தை வைத்து மிகவும் அழகாக நம்பிள்ளை விளக்கியுள்ளார். ஆண்டானுடன் வாசித்த சக மாணவர் (பிற்காலத்தில் நாஸ்திகராய் மாறியவர்) ஆண்டானிடம் “தனக்காக என்று எந்த சுய முயற்சியிலும் ஈடுபாடு இல்லாத பொழுது, எதற்காக நீ கோயிலைச் சுத்தம் செய்து உன்னை கஷ்டப்படுத்திக் கொள்கிறாய்” என்று கேட்டார். இதற்கு ஆண்டான் புழுதி படிந்த இடத்தை மற்றும் சுத்தமான இடத்தையும் காட்டினார். புழுதி படிந்த இடத்தை துடைப்பதன் மூலம் அந்த இடம் சுத்தமாகுமே தவிர வேறோன்றும் இல்லை. உமக்கு சுத்தமான இடத்திற்கும், புழுதி படிந்த இடத்திற்கும் வித்யாசம் கண்டுபிடிக்கத் தெரியாதோ? என்று கேட்டார். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் கைங்கர்யம் என்பது ஒரு தாஸபூதனுடைய (சேவகனுடைய) இயற்கையான செயலாகும். அந்த கைங்கர்யமே உபாயமாக ஆகாது என்பது இதனுடைய விளக்கம். ஸ்ரீவசனபூஷணத்தில் பிள்ளைலோகாசாரியர், 88வது ஸூத்ரத்தில் மிகவும் அழகாக விளக்குகிறார். பொருள் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்திலே வாழும் நபர் ஒருவர், தனக்கோ அல்லது தனக்குப் பிடித்தவர்களுக்கோ பொருள் மீது உள்ள ஆசையை ஏதேனும் ஒரு வழியில் ஸாதித்துக் கொள்ளும்போது, ஜீவாத்மவின் ஸ்வரூபத்திற்கு ஏற்ப, அவனுக்கு கைங்கர்யம் செய்ய தகுதி உள்ள ஒரு ப்ரபன்னன், அவன் முகமலர்ச்சியைப் பார்த்துச் செய்யும் மிகவும் பேரின்பமான  கைங்கர்யம் செய்வதற்கு எவ்வளவு ஆசை/பற்று கொள்ளவேண்டும்? என்று கூறுகிறார்.
 • சரமோபாய நிர்ணயம் – நாதமுனிகள் நம்மாழ்வாரிடமிருந்து 4000 திவ்ய ப்ரபந்தத்தை ஆழ்வார்திருநகரியில் கற்றுக்கொண்டு வீரநாராயாணபுரத்திற்கு (காட்டுமன்னார் கோயில்) எழுந்தருளினார். அவர் அந்த ப்ரபந்தத்தை அந்த திவ்யதேசத்து எம்பெருமான்  மன்னனார் திருமுன்பே சேவித்து அவரிடமிருந்து மரியாதையை பெற்றுக்கொண்டார். அவர் தம்முடைய திருமாளிகைக்கு வந்தவுடன் தனது மருமான்களான கீழையகத்தாழ்வான் மற்றும் மேலையகத்தாழ்வான் அழைத்து அவர்களிடம் தாம் ஆழ்வாரால் அருளப்பெற்றதையும், ஆழ்வார் பவிஷ்யதாசாரியரை தமது கனவில் (இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் உய்வதற்கு வரும் காலத்தில் எம்பெருமானார் அவதரிக்க போகிறார் என்று கூறி ஆழ்வார் அவதரிக்கப்போகிற ஆசார்யரின் திருமேனியையும் காட்டிக்கொடுக்கிறார்) காட்டியதையும் விளக்கமாகக் கூறினார். இதைக் கேட்டவுடன் அவர்கள் இருவரும் மிகவும் ஆச்சர்யமடைந்தனர். மேலும் இப்பேர்ப்பட்ட மஹானுபாவருடைய ஸம்பந்தம் கிடைத்ததே என்று த்ருப்தியடைந்தனர். அதன் பிறகு ஸ்ரீமன் நாதமுனிகள், ஶிஷ்யனாய் இருப்பதற்கு உண்மையான தகுதி உடைய திருக்கண்ணமங்கை ஆண்டானுக்கு த்வய மஹா மந்திரத்தின் விஶேஷார்த்தத்தை திருவாய்மொழி மூலம் விளக்கமாகக் கூறினார். “பொலிக பொலிக பொலிக” (திருவாய்மொழி 5.2.1) பாசுரம் வந்தவாறே, ஆழ்வார் கூறிய வார்த்தைகளையும், ஆழ்வார் கனவில் தமக்குக் காட்டியருளியதையும் நாதமுனிகள் விளக்கமாகக் கூறினார். இதைக்கேட்டவுடன் “பவிஷ்யதாசாரியரின் திவ்ய மங்கள விக்ரஹத்தை தேவரீர் கனவில் ஸேவித்தீர். இப்பேர்ப்பட்ட உம்முடன் அடியேனுக்கு ஸம்பந்தம் இருக்கிறது என்பதே அடியேனுக்கு மிகவும் பாக்யம்” என்று திருக்கண்ணமங்கை ஆண்டான் கூறினார். இந்த ஸம்பவம் சரமோபாய நிர்ணயத்தில் (http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-thirumudi.html) எடுத்துக்காட்டப்படுள்ளது. இதை அருளியவர் பெரியவாச்சான் பிள்ளையினுடைய ஸ்வீகார குமாரரான நாயனார் ஆச்சான் பிள்ளை.
 • வார்த்தாமாலை 109 – நாம் முன்பே பார்த்தது போல் ஸ்ரீவசன பூஷணத்தில் விளக்கமாக கூறியிருக்கும் விஷயத்தை பின்பழகராம் பெருமாள் ஜீயர் இந்த வார்த்தையில் கூறுகிறார். எம்பெருமானை அடைவதற்கான வழியையும், முழுமையாக அவனைச் சார்ந்திருப்பதைப் பற்றி விளக்கும் போது இவர் பிராட்டி, த்ரௌபதி மற்றும் திருக்கண்ணமங்கை ஆண்டானை உதாரணமாகக் காட்டுகிறார்.
 • வார்த்தாமாலை 234 –  ஸாமான்ய சாஸ்த்ரத்தை (வர்ணாச்ரம தர்மம்) விட விஶேஷ ஶாஸ்த்ரம் (பாகவத தர்மம்) தான் மிகவும் முக்கியமானது என்று இந்த ஸூத்திரத்தில் அழுத்தமாகக் கூறப்படுள்ளது. இப்படிப்பட்ட நிஷ்டை மிக உயர்ந்த அதிகாரிகளான ஆதி பரதன், திருக்கண்ணமங்கை ஆண்டான், மற்றும் சிலருக்கு மட்டும் தான் ஏற்படும் என்று நாம் நினைக்கக்கூடாது என்று கூறுகிறது, அதுமட்டுமல்லாமல் நாம் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்றும் அந்த பகவானின் கடாக்ஷத்தின் மூலம் நாமும் இந்த நிஷ்டையில் இருப்போம் என்றும் கூறியுள்ளது.

இதன் மூலம் திருக்கண்ணமங்கை ஆண்டானுடைய மகிமையில் சில துளிகளைப் பார்த்தோம். நாமும் எம்பெருமான் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்க இவருடைய திருவடித்தாமரைகளை வணங்கி ப்ரார்த்திப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2014/07/13/thirukkannamangai-andan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

பெரிய திருமலை நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

periya-thirumalai-nambi

திருநக்ஷத்திரம் : வைகாசி, ஸ்வாதி

அவதார ஸ்தலம்: திருமலை (திருவேங்கடம்)

ஆசார்யன்: ஆளவந்தார்

சிஷ்யர்கள்: எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப சிஷ்யர்), மலைகுனிய நின்ற பெருமாள், பிள்ளை திருக்குலமுடையார், பட்டாரியரில் சடகோபதாசர்.

பெரியதிருமலை நம்பி திருவேங்கடமுடையானின் இன்னருளால் திருமலையில் திருவவதரித்தார். ஆளவந்தாரின் முக்கியமான சிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவருக்கு ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் உண்டு. இவர் எம்பெருமான் மீது வைத்திருக்கும் பற்றைப் பார்த்து திருவேங்கடமுடையானே இவரை “பிதாமஹர்” என்று மிகவும் கௌரவித்தார்.

ஆளவந்தார் தன்னுடைய சிஷ்யர்களுள் 5 பிரதானமான சிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு சம்பிரதாயதில் உள்ள சகல அர்த விசேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். அந்த 5 பேரில், பெரியதிருமலை நம்பியை ஸ்ரீராமயணத்தை கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். இதுவே நமது சம்பிரதாயத்தில் பிரபலமாக சரணாகதி சாஸ்திரம் என்று அழைக்கப்படும்.

திருமலைநம்பி ராமானுஜருடைய தாய்மாமன். மேலும் இவரே ராமானுஜர் அவதரித்த போது “இளையாழ்வார்” என்ற திருநாமத்தை அவருக்கு சூட்டினார். திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் இவரே முதன்மையானவராக பாராட்டப்பட்டார். இவர் திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்தார். தினமும் திருவேங்கடமுடையானுக்காக இவர் ஆகாச கங்கையிலிருந்து (திருமலையில் உள்ள நீர் ஆதாரம்) தீர்த்தம் கொண்டு வருவார்.

கோவிந்தப் பெருமாளை (எம்பார்) நமது சம்பிரதாயத்திற்கு (ஏனெனில் அவர் வரணாசி யாத்திரைக்கு சென்றபொது உள்ளங்கை கொணர்ந்த நாயனாராக மாறி, காலஹஸ்தியில் தேவதாந்தரத்திற்குத் தொண்டு செய்து கொண்டிருந்தார்) கொண்டு வரவேண்டும் என்று எம்பெருமானார் ஆசைப்பட்டார். கோவிந்தப் பெருமாளைத் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம் எம்பெருமானார் பெரிய திருமலை நம்பியிடம் கேட்டுக் கொண்டார்.

உடனே பெரிய திருமலை நம்பி தனது சிஷ்யர்கள் மற்றும் அந்த ஸ்ரீவைஷ்ணவரை (இவர் பின்னர் திருவரங்கத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை எம்பெருமானாரிடம் விவரிக்கிறார்) அழைத்துக்கொண்டு கோவிந்தப் பெருமாளை பார்க்க காலஹஸ்திக்குச் சென்றார். கோவிந்தப் பெருமாள் வழக்கமாக நடந்து செல்லும் பாதையில் உள்ள ஒரு மரத்தினுடைய நிழலில் நம்பியும் அவருடைய சிஷ்யர்களும் உட்காந்திருந்தார்கள். கோவிந்தப் பெருமாள் சிவபக்தர் போல் ஆடைகள் அணிந்து கொண்டு, உடம்பில் திர்யக் புண்ரம் (சாம்பல்) மற்றும் ருத்ராக்ஷ மாலையை அணிந்து கொண்டு அந்த வழியாக வந்தார். நம்பி எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தார், அதை கோவிந்தப் பெருமாள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார். சில நாட்கள் கழித்து, அதே நேரத்தில் அதே இடத்தில் நம்பி ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள 11வது ச்லோகத்தை (இந்த ச்லோகமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தையும், இதர தேவதைகள் எம்பெருமனை எப்படிச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது) பனை ஓலையில் எழுதி அந்த இடத்தில் கீழே விட்டார். கோவிந்தப் பெருமாள் அதை எடுத்துப் படித்து விட்டு கீழே போட்டு விட்டார். திரும்பி வரும்பொழுது அந்த பனை ஓலையை தேடிக் கண்டுபிடித்தார். அந்த ச்லோகத்தினுடைய ஆழமான அர்த்தத்தைச் சிந்தித்து, நம்பியிடம் சென்று இது உம்முடையதா? என்று கேட்டார். கோவிந்தப் பெருமாள் மற்றும் பெரிய திருமலை நம்பிக் கிடையே ஒரு சிறிய உரையாடல் நடந்தது. அப்பொழுது கோவிந்த பெருமாளுக்கு ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தில் இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் பெரிய திருமலை தெளிவுபடுத்தினார். அவர் வார்தைகள் அனைத்தையும் கேட்டு உறுதியான நம்பிக்கையுடன் கோவிந்தப் பெருமாள் அந்த இடத்தை விட்டு சென்றார். பின்னர் நம்பி மீன்டும் அந்த இடத்திற்கு வந்தார். அப்பொழுது கோவிந்தப் பெருமாள் மரத்தில் ஏரி ருத்ரனுக்காக புஷ்பங்கள் பறித்துக் கொண்டிருந்தார். நம்பி திண்ணன் வீடு பதிகத்தை விளக்கமாக உபந்யஸிக்க ஆரம்பித்தார். அந்த பதிகத்தில் எம்பெருமானுடைய பரத்வத்தைப் பற்றி ஆழ்வார் விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் 4வது பசுரத்தை மிகவும் அழகாக விவரித்தார். அதாவது புஷ்பமும், பூஜையும் (திருவாராதனமும்) எம்பெருமானுக்கு மட்டுமே தகும் என்று நம்மாழ்வார் மிகவும் அழகாக நிர்வஹித்துள்ளார் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் கோவிந்தப் பெருமாள் மரத்திலிருந்து கீழே குதித்து, வேரற்ற மரம் விழுவது போல நம்பியினுடைய திருவடித் தாமரைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தேவையற்றவர்களுடைய சம்பந்தமே தன்னை இப்படி மாற்றியது என்றும் தன்னை நம்பியினுடைய திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுவதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுதுகொண்டே கேட்டுக் கொண்டார். நம்பி அவரை மேலே எழுப்பி ஆறுதல் கூறினார். கோவிந்தப் பெருமாள் காளஹஸ்தியில் உள்ள அனைத்து சம்பந்தத்தையும் விட்டு, கருவூலத்தின் சாவியை ருத்ர பக்தர்களிடம் ஒப்படைத்தார். அந்த சமயத்தில் ருத்ர பக்தர்கள் கோவிந்தப் பெருமாளிடம் “நேற்று இரவு ருத்ரன் கனவில் வந்தார். இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் உண்மையான அறிவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானார் அவதரித்திருக்கிரார். கோவிந்தப் பெருமாள் நம் மீது உள்ள பற்றை விட்டால் யாரும் தடுக்க கூடாது என்று ருத்ரன் கூறியதாக” கூறினார்கள். அதனால் மிகவும் சந்தோஷத்துடன் அவரை அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் இருவரும் திருமலைக்கு வந்த பிறகு, நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு உபனயன சம்ஸ்காரமும், பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து வைத்து அவருக்கு ஆழ்வார்களுடைய அருளிச்செயலைக் கற்றுக்கொடுத்தார்.

எம்பெருமானார் ஒருமுறை திருமலைக்குச் சென்றார். எம்பெருமானார் திருமலையில் ஏறிச் சென்ற பொழுது, நுழைவு வாயிலில் நம்பி தாமே வந்து அவரை வரவேற்றார். நம்பி மிகவும் கற்றுத் தேர்ந்தவர், முதியவர் மேலும் எம்பெருமானாருக்கு ஆசார்யன் அதனால்,  எம்பெருமானார் “அடியேனை வரவேற்க யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ?” என்று கேட்க, அதற்கு நம்பி பெருந்தன்மையுடன் “எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தேன், என்னை விடத் தாழ்ந்தவர் யாருமே இல்லை” என்று நம்பி கூறினார். எம்பெருமானார் திருவேங்கடமுடையானை மங்களாசாசனம் பண்ணிவிட்டு திருமலையில் இருந்து இறங்கினார்.

ptm-ramayana-goshtiபெரிய திருமலை நம்பியின் ஸ்ரீ ராமாயண காலக்ஷேப கோஷ்டி

ஸ்ரீ ராமானுஜர், நம்பியிடம் ஸ்ரீராமாயணம் கற்றுக் கொள்வதற்காகத் திருப்பதிக்கு வந்தார். ஒரு வருடம் முழுவதும் அங்கே இருந்து ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் கேட்டார். காலக்ஷேபத்தின் முடிவில், திருமலை நம்பி எம்பெருமானாரிடம் ஏதாவது பரிசைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று  கேட்டுகொண்டார். அதற்கு எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டார். நம்பியும் சந்தோஷத்துடன் அதை ஏற்றுக்கொண்டார். எம்பெருமானாரும், கோவிந்தப் பெருமாளும் திருப்பதியை விட்டுச்சென்றார்கள். ஆனால் கோவிந்தப் பெருமாள் தன்னுடைய ஆசார்யனுடைய பிரிவைத் தாங்க முடியாமல், மீண்டும் திருப்பதிக்கு வந்தார். ஆனால் திருமலை நம்பி கோவிந்தப் பெருமாளிடம் ஒரு வார்தை கூட பேச விருப்பமில்லாமல், அவர் எம்பெருமானாருக்குச் சொந்தமானவர் என்று கூறி உடனே அவரை எம்பெருமானரிடம் செல்லுமாறு அனுப்பி வைத்தார். இப்படி அவருடைய அர்ப்பணிப்பு இருந்தது. இந்த சரித்திரத்தை மிகவும் விரிவாக இந்த வலைத்தலத்தில் https://guruparamparaitamil.wordpress.com/2015/07/23/embar/ பார்க்கலாம். பின்னர் கோவிந்தப்  பெருமாள் ஸந்யாஸாச்ரமம் ஏற்றுக்கொண்டு எம்பாராக என்று பிரபலமாக விளங்கினார்.

நம்பியினுடைய வைபவம் மற்றும் அவருடைய விளக்கங்கள் நமது வ்யாக்யானங்களில் பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை இங்கே பார்ப்போம்:

 • திருப்பாவை 14வது பாசுரம் – அழகிய மணவாள பெருமாள் நாயனார் – “செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்” என்பதற்கு நம்பியினுடைய ஆச்சர்யமான விளக்கத்தை இங்கே காட்டுகிறார். கோபிகைகளை எழுப்பும்பொழுது விடியற்காலை வேளையில் நடக்கும் சுப நிகழ்வுகளை இந்த இடத்தில் காட்டவேண்டியதால், இவர்களை சன்யாசிகளாக நினைக்க வேண்டும். அவர்கள் தான் விடியற்காலையில் எழுந்து, கோயிலுக்குச் சென்று எம்பெருமானை மங்களாசாஸனம் செய்வார்கள் என்பது நம்பியினுடைய நிர்வாஹம்.
 • நாச்சியார் திருமொழி – 10.8 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம். “மழையே மழையே” மற்றும் அடுத்த பாசுரமான “கடலே கடலே”, ஆகிய இரண்டு பாசுரங்களும் நம்பிக்கு மிகவும் பிடித்த பாசுரமாக அடையாளம் காட்டப் பட்டுள்ளது. ஆண்டாள் தான் எம்பெருமானிடம் இருந்து பிரிந்து தவிக்கும் உணர்வை, திருவேங்கடமுடையானிடம் கூறுவதற்காக மேகத்தைத் தூதுவிடுகிறாள். ஒவ்வொருமுறை நம்பி இந்த பாசுரத்தைச் சேவிக்கும் பொழுதும், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒன்றுமே பேச முடியாத படி இருப்பார். நம் ஆசார்யர்கள் அனைவரும் நம்பி மீது பற்றுவைத்துள்ளதால், அவர்களும் இந்தப் பாசுரத்தின் மீது மிகவும் ஈடுபாடு வைத்திருந்தார்கள்.
 • திருவிருத்தம் – 3 – நம்பிள்ளை வ்யாக்யானம் – ஆழ்வாருடைய பகவத் அனுபவம் மானஸ சாக்ஷத்காரமா? (மனதுக்குள்ளேயே அனுபவிக்கும் பகவத் அனுபவம்) அல்லது வெளியில் நேராக அனுபவிக்கும் பகவத் அனுபவமா? என்று ஆழ்வார் ஆச்சர்ய படுவதாக ஆழ்வாருடைய மனதை பெரிய திருமலை நம்பி வெளிப்படுத்தினார் என்று பிள்ளை திருநறையூர் நம்பி விளக்கமாகக் கூறினார்.
 • திருவாசிரியம் – 1 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – எம்பெருமானுடைய அழகை வர்ணிக்கும்பொழுது, ஆழ்வார் “செக்கர் மா முகிலுடுத்து …. கண்வளர்வது போல்” என்கிறார். அவர் “தூங்குவது” என்ற வார்தைக்கு பதிலாக “கண்வளர்வது” என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி உள்ளார். கண்வளர்வது என்பது ஸம்ப்ரதாய வார்த்தை, ஆனால் “தூங்குவது” என்பது பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை. பெரிய திருமலை நம்பி இப்படி உயர்ந்ததான ஸம்ப்ரதாய வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில் மிகவும் நிபுணராக இருந்தார் என்பதை பெரியவாச்சான் பிள்ளை இங்கு எடுத்துரைக்கிறார். நம்பி ஒருமுறை எம்பெருமானாருக்கு ஒருவரை அடையாளம் காட்ட “பொன்னாலே தோடு செய்தாலும் அணிந்துகொள்ள முடியாத காதை உடையவர்” என்று உணர்த்துகிறார். அதாவது நல்ல உபதேசங்களையும் கேட்காதவர் என்பதை இப்படி நய்மாகக் கூறுகிறார்.
 • திருவாய்மொழி – 1.4.8 – நம்பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் நாயிகா பாவத்தில் “தான் எம்பெருமானிடத்திலிருந்து பிரிந்ததால் தனது உடல் வலிமை மற்றும் அழகையும் இழந்து மிகவும் பலவீனமாக இருப்பதாக” பறவையிடம் கூறினார் (தன்னுடைய நிலைமையை எம்பெருமானிடம் கூறுவதற்காகத் தூதாக அனுப்பினார்). தான் பலவீனமாக இருப்பதால் அந்த பறவையைத் தானே உணவை தேடிக்கொள்ளுமாறு ஆழ்வார் கூறினார். இதில் நம்பிள்ளை, பெரிய திருமலை நம்பியினுடைய சரித்திரத்தை எடுத்துக்காட்டினார். தன்னுடைய கடைசி காலத்தில் நம்பி தன்னுடைய திருவாரதனப் பெருமாளிடம், அதாவது வெண்ணைக்காடும் பிள்ளையிடம் சென்று, தான் மிகவும் தளர்ந்து விட்டதாகவும், அதனால் எம்பெருமான் அவரை பார்த்துக்கொள்ளத் தானே வேறு ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினார்.

திருமலை நம்பி எம்பெருமானாருடைய பெருமைகளை நிலை நாட்டியதை விளக்கமாக சரமோபாய நிர்ணயம் என்ற க்ரந்தத்தில் பார்க்கலாம். அதை இந்த வளைத்தளத்தில் பார்க்கலாம் – http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html.

இதன் மூலம் நாம் நம்பியினுடைய வைபவத்தை சிறிது அனுபவித்தோம்.

இப்படி ஆளவந்தார் மீதும், எம்பெருமானார் மீதும் பற்று வைத்துள்ளா திருமலை நம்பியினுடைய திருவடித்தாமரைகளை நாமும் வணங்கி வாழ்சி பெறுவோம்.

குறிப்பு : 6000 படி குரு பரம்பரா ப்ரபாவம் மற்றும் பெரிய திருமுடி அடைவில் நம்பியினுடைய திருநக்ஷத்திரத்தை சித்திரை-சுவாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வாழி திருநாமத்தில்  வைகாசி-சுவாதி என்று இருப்பதால் அன்றே அவருடைய திருநக்ஷத்திரம் கொண்டாடப்படுகிறது.

பெரிய திருமலை நம்பியின் தனியன்

பிதாமஹஸ்யாபி பிதாமஹாய ப்ராசேதஸாதேசபலப்ரதாய
ஸ்ரீபாஷ்யகாரோத்தம தேசிகாய ஸ்ரீசைலபூர்ணாய நமோ நம: ஸ்தாத்

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2013/03/01/periya-thirumalai-nambi/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருக்கோஷ்டியூர் நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

thirukoshtiyur-nambi

திருநக்ஷத்ரம் : வைகாசி ரோஹிணி     

அவதார ஸ்தலம் : திருக்கோஷ்டியூர்

ஆசார்யன் : ஆளவந்தார்

சிஷ்யர்கள் : எம்பெருமானார் (க்ரந்த காலக்ஷேப ஶிஷ்யர்)

பெரியாழ்வார் திருமொழியில் நாவகாரியம் பதிகத்தில் (4.4) திருக்கோஷ்டியூரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார். திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் இந்த அழகான திவ்யதேஶத்தில் அவதரித்தார். ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர். இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார். இவருக்கு கோஷ்டி பூர்ணர், கோஷ்டி புரீஶர் என்ற திருநாமங்களும் உண்டு.

ஆளவந்தார் தன்னுடைய ஶிஷ்யர்களுள் 5 பிரதானமான ஶிஷ்யர்களை அழைத்து, எம்பெருமானாருக்கு ஸம்பிரதாயத்தில் உள்ள ஸகல அர்த்த விஶேஷங்களையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார். அந்த 5 பேரில், ரஹஸ்ய த்ரயத்தினுடைய (திருமந்த்ரம், த்வயம், சரமஶ்லோகம்) அர்த்த விஶேஷங்களைக் கற்றுகொடுக்குமாறு திருக்கோஷ்டியூர் நம்பியை நியமித்தார். 

ஸ்ரீ ராமானுஜர் தன் நலம் கருதாமல், சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷத்தை எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் ஆசையுடையோர்க்கெல்லாம் கூறியதால் திருக்கோஷ்டியூர் நம்பி அவருக்கு “எம்பெருமானார்” என்ற திருநாமத்தைச் சூட்டினார். நம்பி தன் ஆசார்யரான ஆளவந்தாரிடம் கற்றுகொண்ட ரஹஸ்ய த்ரயத்தினுடைய (திருமந்த்ரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகம்) அர்த்த விஶேஷங்களையே எப்பொழுதும் த்யானித்துக்கொண்டே இருப்பதால் யாரிடமும் இவர் பேசாமல் இருந்தார். திருக்கோஷ்டியூரில் வசிக்கும் ஒருவருக்கும் இவருடைய பெருமைகள் தெரியாது. ஸ்ரீ ராமானுஜருக்கு இவருடைய பெருமைகள் தெரிந்ததால், அவர் மிகவும் ரஹஸ்யமான சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷங்களைக் கற்றுக்கொள்வதற்காக 18 முறை ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு நடந்தே சென்றார். கடைசியில் 18வது முறை நம்பி அவருக்கு சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். தகுதி இல்லாதவர்களுக்கும், கற்றுக் கொள்ள வேண்டும் என்று கடுமையான முயற்சி இல்லாதவர்களுக்கும் இந்த அர்த்த விஶேஷத்தைக் கூறக்கூடாது என்று ஸத்தியம் செய்யுமாறு நம்பி ராமானுஜரிடம் கேட்டார். ராமானுஜரும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஸத்தியம் செய்தார்.  நம்பி மிகவும் ரஹஸ்யமான சரம ஶ்லோகத்தினுடைய அர்த்த விஶேஷத்தை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். சரம ஶ்லோகம் என்னவென்றால், கீதாசர்யன்  ஸாதித்த “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய” ஶ்லோகம் (கீதை 18.66). இந்த ஶ்லோகத்தில் முக்கியமான அர்த்த விஶேஷத்தைக் கூறும் வார்த்தை “ஏகம்” – பகவான் மட்டுமே உபாயம் என்பதே இந்த வார்த்தைக்கு அர்த்தம். கர்ம, ஞான, பக்தி யோகங்கள் மற்றும் நாம் செய்யும் ப்ரபத்தி (சரணாகதி), மற்றும் பல – இவை அனைத்துமே உண்மையான உபாயம் அல்ல. இந்த ரஹஸ்யார்த்தத்தை தகுதி இல்லாதவர்களிடம் கூறினால், தான் செய்யவேண்டிய கர்மத்தை  அல்லது கடமைகளைக் கூடச் செய்யாமல் இருக்கலாம் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள். அதனால் ராமானுஜருக்கு முன்னால் உள்ள ஆசார்யர்கள் இந்த அர்த்த விஶேஷத்தை மிகவும் அக்கறை கொண்டு பாதுகாத்து வந்தார்கள். ஆனால் ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் அர்த்த விஶேஷத்தைக் கற்றுக் கொண்ட பிறகு, இந்த ரஹஸ்யார்த்தத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசையுடைவர்களை உடனே அழைத்து, அந்த அர்த்தத்தை மிகவும் விளக்கமாகக் கூறினார். ராமானுஜர் அர்த்த விஶேஷத்தை வெளியிட்டதை நம்பி கேள்விப்பட்டவுடன், தன்னைச் சந்திக்குமாறு அவருக்கு உத்தரவிட்டார். ராமானுஜரும் நம்பி திருமாளிகைக்கு எழுந்தருளினார். நம்பி ராமானுஜர் செய்ததை கேட்டறிந்தார், ராமானுஜரும் அதற்கு நம்பியினுடைய நியமனத்தை தான் மீறினதாக ஒப்புக்கொண்டார். நம்பி “ஏன் இப்படி செய்தீர்?” என்று கேட்டபோது, ராமானுஜர் “தேவரீருடைய ஆணையை மீறியதால் அடியேனுக்கு வேண்டுமானால் நரகம் கிடைக்கும், ஆனால் பலருக்கு (சரம் ஶ்லோகார்த்தத்தைக் கற்றவர்களுக்கு) மிக உயர்ந்த மோக்ஷம் (பரமபதம்) கிடைக்குமல்லவா” என்று கூறினார். மற்றவர்கள் உய்ய வேண்டும் என்று க்ருபையோடு இருக்கும் ராமானுஜருடைய பரந்த திருவுள்ளத்தைப் பார்த்து நம்பி அவருக்கு “எம்பெருமானார்” என்ற விஶேஷமான திருநாமத்தை சூடினார். எம்பெருமான் என்றால் பகவான் என்று பொருள், எம்பெருமானார் என்றால் அந்த பகவானைக் காட்டிலும் மிக அதிகமாகக்  கருணை உடையவர் என்று பொருள். இப்படி சரம ஶ்லோகத்தினுடைய முக்கியமான அர்த்த விஶேஷங்களைத் திருக்கோஷ்டியூரில் கூறியதால் ராமானுஜர் எம்பெருமானாராக ஆனார். இந்த சரித்திரம் மணவாள மாமுனிகளுடைய முமூக்ஷுப்படி வ்யாக்யானத்தில் உள்ள சரம ஶ்லோக ப்ரகரணத்தின் அவதாரிகையில் மிகவும் தெளிவாகவும், அழகாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பு : 6000 படி குருபரம்பரா ப்ரபாவத்தில், ராமானுஜர் திருமந்த்ரத்தினுடைய அர்த்தத்தைக் கற்றுக்கொண்டதாகவும், அதை அவர் வெளியிட்டதால் அவருக்கு நம்பி “எம்பெருமானார்” என்று திருநாமத்தைச் சூட்டியதாகவும் உள்ளது. ஆனால் சரம ஶ்லோகத்தினுடைய அர்த்தத்தை தான் ராமானுஜர் வெளியிட்டார் என்று மாமுனிகள் மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார். மேலும் சரம ஶ்லோகத்தில் உள்ள “ஏகம்” என்ற ஶப்தமே மிகவும் ரஹஸ்யமான அர்த்த விஶேஷம் என்று வ்யாக்யானத்தில் பல இடத்தில் கூறியிருள்ளதும், இந்தச் சம்பவமும் பொருந்துகிறபடியால் நாம் மாமுனிகளின் விளக்கத்தை முக்கியப் ப்ரமாணமாகக் கொள்வோம் என்று கற்றறிந்த பல பெரியோர்கள் கூறியுள்ளார்கள்.

நம்பியினுடைய வைபவம் வயாக்யானங்களில் பல இடங்களில் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. அதிலே சிலவற்றை நாம் கீழே அனுபவிப்போம்.

 • நாச்சியார் திருமொழி – 12.2 பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானம்
  • இங்கே நம்பியுடன் ஆண்டாளை ஒப்பிடுகிறார். எப்படி நம்பி தன்னுடைய பகவத் அனுபவத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமாட்டரோ, அதே போல் ஆண்டாளும் தான் எம்பெருமானுடன் பிரிந்த வருத்தத்தை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படமாட்டாள் என்று பெரியவாச்சான் பிள்ளை கூறியுள்ளார்.
  • ஸ்ரீராமானுஜர் திருக்கோஷ்டியூருக்கு எழுந்தருளுவதற்கு முன்பு வரை, நம்பியினுடைய வைபவம் அந்த ஊரில் வசிக்கும் ஒருவருக்கு கூடத் தெரியாது. ராமானுஜர் அந்த ஊருக்கு வந்தவுடன், திருக்குருகைப்பிரானுடைய (நம்பியினுடைய திருநாமம் – நம்மாழ்வாருடைய திருநாமம்) திருமாளிகை எங்கு உள்ளது என்று அந்த ஊரில் இருக்கும் சிலரிடம் கேட்டார். அவர்கள் எந்தத் திசையில் உள்ளது என்று காட்டியவுடன், ராமானுஜர் அவர் நின்ற இடத்திலிருந்தே அந்த திசையை நோக்கி ஸேவித்துக்கொண்டே நம்பியினுடைய திருமாளிகையை அடைந்தார். இப்படித் தான் நம்பி மீது வைத்திருக்கும் மதிப்பை புகழ்ந்து பேசிக் காட்டாமல் செய்து காட்டினார். இதைப் பார்த்த பிறகு தான் அங்குள்ள ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நம்பியினுடைய பெருமை புரிந்தது.
  • நமது ஸம்பிரதாயத்தில் உள்ள முக்கியமான அர்த்த விஶேஷத்தை கற்றுக் கொள்வதற்காக முதலியாண்டானும், கூரத்தாழ்வானும் ஆறு மாத காலம் நம்பியினுடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யம் செய்தார்கள் என்பதை வ்யாக்யானங்களில் சிறப்பாகக் காட்டியுள்ளனர்.
 • திருவிருத்தம் – 10வது பாசுரம் – நம்பிள்ளை ஸ்வாபதேசம். ஒவ்வொரு முறை நம்பி ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளிவிட்டுச் செல்லும் பொதும், எம்பெருமானார் வழியனுப்புவதற்காக அவருடன் மாராச்சிப்புரம் (ஸ்ரீரங்கம் அருகாமையில் இருக்கும் ஒரு இடம்) என்ற இடம் வரை நடந்து செல்வார். அந்தச் சமயத்தில் எம்பெருமானார் நம்பியிடம் “எப்பொழுதும் அடியேன் எதைத் த்யானம் செய்ய வேண்டும்” என்று கேட்டார். அதற்கு நம்பி “ஆளவந்தார் காவிரியில் தீர்த்தமாடும் ஸமயத்தில் அவர் உள்ளே மூழ்கும் பொழுது, அவருடைய திருமுதுகைப் பார்க்கும் போது, கூர்மாஸனத்தின் முதுகு போல் இருக்கும் (அமையின் ஓடு போல் இருக்கும் ஒரு இருக்கை). ஆளவந்தார் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகும் எப்பொழுதும் ஆளவந்தாருடைய திருமுதுகின் அழகை நான் பார்த்ததைச் சிந்தனை செய்து கொண்டிருப்பேன். நீரும் அதையே எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிரும்” என்று கூறினார். இந்த நிகழ்வின் மூலம் நம்பி ஒரு ஶிஷ்யன் எப்படித் தன்னுடைய ஆசார்யனுடைய நுண்ணறிவின் மீதும், கட்டளையின் மீதும் பற்று வைத்துள்ளானோ அதே போல் அவருடைய திருமேனி (சீர்வடிவு) மீதும் உண்மையான பற்று வைக்க வேண்டும் என்று காட்டுகிறார்.
 • திருவிருத்தம் 99 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம், ஞானப்பிரான் மட்டுமே உபாயம் என்று ஆழ்வார் கூறுகிறார். இந்த பாசுரமே சரம ஶ்லோகத்தில் இருக்கும் “ஏகம்” என்ற ஶப்தத்தினுடைய அர்த்தத்தை விவரிக்கிறது, அதாவது அனைத்து உபாயங்களையும் நீக்கி விட்டு, எம்பெருமான் மட்டுமே உபாயம் என்று நிர்ணயம் செய்து காட்டும் பாசுரம். நமது ஸம்பிரதாயத்தில் இந்த ஶப்தத்தினுடைய அர்த்தமே மிகவும் ரஹஸ்யமானது, இந்த ஶப்தத்தினுடைய அர்த்தத்தைத் தான் திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜருக்குக் கற்றுக்கொடுத்தார். ஒரு முறை ஸ்ரீரங்கத்திற்கு உற்சவத்திற்காக எழுந்தருளிய நம்பி, எம்பெருமானரை அழைத்துக்கொண்டு பெரிய பெருமாள் ஸன்னதியில் யாருமே இல்லாத இடத்திற்கு சென்று அவருக்கு “ஏகம்” ஶப்தத்தினுடைய அர்த்தத்தை விரிவாகக் கூற ஆரம்பித்தார். ஆனால் கோயில் கைங்கர்யபரர் அங்கே குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருப்பதை பார்தார். உடனே நம்பி யாரோ ஒருவர் இருக்கிறார் அதனால் அர்த்தததை இப்பொழுது கூறமுடியது என்றார் நம்பி. ஆனால் மற்றொரு சமயத்தில் நம்பி எம்பெருமானாரிடம் அதனுடைய அர்த்தத்தை கூறிவிட்டு, தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இதை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அன்று எம்பெருமானார் நம்பியை வழியனுப்பி விட்டு, கொளுத்தும் வெயிலில், ஆழ்வானுடைய திருமாளிகைக்குச் சென்று, நம்பி எப்படி அர்த்தத்தைக் கூறினாரோ அப்படியே அதை ஆழ்வானிடம் கூறினார். ஸஹகாரி நைரபேக்ஷ்யத்தை (தான் குளிரக் கடாக்ஷிப்பதற்கு ஒருவரிடமிருந்து எந்த வித செயலையும் எதிர்பார்க்காமல் இருக்கும் குணம்) எம்பெருமானார் இதன் மூலம் நிரூபிக்கிறார். எப்படியென்றால் இந்த விஶேஷார்த்தத்தை கேட்பதற்கு ஆழ்வான் எந்த ஒரு ப்ரயத்னமும் செய்யவில்லை. ஆனால் எம்பெருமானார் விஶேஷார்த்தத்தை அவருக்குத் தானே கூறினார்.
 • திருவிருத்தம் 95 – “யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு” பாசுரம் வ்யாக்யானம், நம்பியினுடைய ஶிஷ்யர்களுள் ஒருவர் நஞ்ஜீயரிடம் இது நம்பிக்கு மிகவும் பிடித்த பாசுரம் என்று கூறினார். அத்தோடு அவர் “என்ன தான் ஒரு ஜீவாத்மா விஷயாந்தரங்களிலேயும், பொருள் சேர்ப்பதிலேயும் ஈடுபாடு கொண்டிருந்தாலும் கூட, எம்பெருமான் அந்த ஜீவாத்மவிற்குச் செய்யும் நிர்ஹேதுகமான க்ருபாகடாக்ஷத்தை விளக்கமாகக் கூறுகிறது இந்தப் பாசுரம்” என்று கூறினார்.
 • திருவாய்மொழி, 1.10.6 – நம்பிள்ளை வ்யாக்யானம், இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் தன்னுடைய நெஞ்சத்திடம் பேசுகிறார். இதை விரிவாகக் கூறுவதற்காக, நம்பிள்ளை “மிகவும் உயர்ந்த அர்த்தங்களை உள்ளடக்கியது பகவத் விஷயம், மேலும் அது ஸாமாந்யர்களால் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலாது. அதனால் தான் நம்பி எப்பொழுதுமே அதைப் பற்றி தனிமையிலேயே சிந்தித்துக் கொண்டிருக்கிறார், ஆழ்வாரும் தன் நெஞ்சத்தோடு பகவத் விஷயத்தைப் பேசுகிறார்” என்று கூறினார்.
 • திருவாய்மொழி 8.8.2 – எம்பெருமானாருடைய காலக்ஷேப கோஷ்டியில் ஒரு முறை “ஜீவாத்மாவின் ஸ்வரூபம் என்ன? அதாவது ஞாத்ருத்வமா (தன்னை அறிந்தவன்) அல்லது ஶேஷத்வமா (எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவன்)? என்று ஒரு கேள்வி எழுந்தது. எம்பெருமானார் அழ்வானை நம்பியிடமிருந்து இதனுடைய அர்த்தத்தை அறிந்து வருமாறு நியமித்தார். ஆழ்வானும் ஆசார்ய நியமனத்தை ஏற்றுக் கொண்டு, திருக்கோஷ்டியூருக்குச் சென்று 6 மாத காலம் நம்பிக்குக் கைங்கர்யம் செய்தார். கடைசியில் நம்பி ஆழ்வான் வந்ததன் காரணம் என்ன? என்று கேட்டார். ஆழ்வானும் கேள்வியைக் கூறினார். அதற்கு நம்பி “அடியேன் உள்ளான்” ஜீவாத்மவுடைய ஸ்வரூபம் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவன் என்பதை தான் ஆழ்வார் இந்த இடத்தில் நிரூபிக்கிறார் என்று கூறினார். ஆனால் வேதாந்தம் ஏன் ஞாத்ருத்வத்தைப் (தன்னை அறிந்தவன்) பற்றிப் பேசுகிறது என்றால், இந்த இடத்தில் தன்னை அறிந்தவன் என்றால் “தான் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவன் என்று அறிந்து கோள்வதே” இதனுடைய பொருள். அதாவது, இங்கு ஆழ்வார் மற்றும் நம்பி உணர்த்துவது –  “இந்த ஜீவாத்மா தான் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டவன் என்று தெரிந்துகொண்டு இருப்பதே உண்மையான ஜீவாத்ம ஸ்வரூபம்”.

திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருடைய பெருமைகளை சரமோபாய நிர்ணயம் என்ற க்ரந்தத்தில் நிரூபித்துக் காட்டியுள்ளார். அதை நாம் இந்த வலைத்தளத்தில் பார்க்கலாம் “http://ponnadi.blogspot.in/2012/12/charamopaya-nirnayam-ramanujars-acharyas.html

எம்பெருமானாருடன் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமாலையாண்டான் திருவாய்மொழி காலக்ஷேபத்தை நிறுத்திய பொழுது, நம்பி அவரிடம் “எம்பெருமானார் ஒரு அவதார புருஷர். அவர் அனைத்து சம்பிரதாய விஷயத்தையும் நன்றாக அறிந்தவர்” என்று கூறி ஸமாதானப்படுத்தினார். நம்பி அவரை எம்பெருமானாருக்குக் காலக்ஷேபத்தைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி, நடப்பதை உறுதியும் செய்து கொண்டார்.

ஒரு முறை எம்பெருமானாருடைய பிக்ஷை ப்ரசாதத்தில் சிலர் விஷம் கலந்து கொடுத்து விடுகிறார்கள். இது தெரிந்தவுடன் எம்பெருமானார் எந்த பிரசாதத்தையும் அமுது செய்யாமல் உபவாசமாக இருந்தார். இதை அறிந்தவுடன் நம்பி திருக்கோஷ்டியூரிலிருந்து வந்தார். எம்பெருமானார் மிகவும் கடுமையான வெயிலில், காவேரி நதிக் கரையில் அவரைச் சந்தித்தார். எம்பெருமானார் நம்பியைப் பார்த்தவுடன் சுடும் மணலையும் பொருட்படுத்தாமல் ஸாஷ்டாங்க ப்ரணாமம் செய்தார், நம்பியும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அருகே இருந்த எம்பெருமானருடைய ஶிஷ்யரான கிடாம்பி ஆச்சான், உடனே எம்பெருமானாரை எழுப்பி, “ஏன் எம்பெருமானாரை சுடும் மணலில் இவ்வளவு நேரம் இருக்க வைக்கிறீர்?” என்று நம்பியிடம் கேட்டார். அதற்கு நம்பி “யார் இந்த கோஷ்டியிலே எம்பெருமானார் திருமேனி (சீர்வடிவு) மீது மிகுந்த பற்று வைத்துள்ளார்கள் என்று பார்ப்பதற்காகவே இவ்வாறு செய்தோம்” என்று கூறினார். அன்றிலிருந்து எம்பெருமானாருக்கு தினமும் ப்ரசாதம் செய்து கொடுக்குமாறு கிடாம்பியாச்சானை நம்பி நியமித்தார். இதிலிருந்து நம்பிக்கு எம்பெருமானாரை மிகவும் பிடிக்கும் என்றும், அதோடு எப்பொழுது எம்பெருமானருடைய நலனையே அவர் சிந்தித்தார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு திருக்கோஷ்டியூர் நம்பியினுடைய பல பெருமைகளை நாம் பார்த்தோம். “எம்பெருமானார்” என்ற திருநாமத்தை ஸ்ரீ ராமானுஜர் பெறுவதற்கு இவரே காரணமாக இருந்தார். அந்த எம்பெருமானாரே நமது ஸம்பிரதாயத்தினுடைய  தர்ஶன ப்ரவர்தகராக இருப்பதை நம்பெருமாளே எம்பெருமானார் தரிஶனம் என்று பாராட்டியுள்ளதை மாமுனிகள் தன்னுடைய உபதேஶ ரத்தின மாலையில் காட்டியுள்ளார்.

ஆளவந்தார் மீதும் எம்பெருமானார் மீதும் அளவற்ற பற்றை வைத்துள்ள திருக்கோஷ்டியூர் நம்பியின் திருவடித்தாமரைகளை நாமும் பணிந்து வணங்கி வாழ்ச்சி பெறுவோம்.

திருக்கோஷ்டியூர் நம்பியினுடைய தனியன்

ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம்ருத ஸாகரம்
ஸ்ரீமத்கோஷ்டீபுரீபூர்ணம் தேசிகேந்த்ரம் பஜாமஹே

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2013/02/27/thirukkoshtiyur-nambi/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழிப் பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/10/18/pillai-lokacharyar/) பிள்ளை லோகாசாரியரை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றி அனுபவிப்போம் .

திருவாய்மொழிப் பிள்ளை – குந்தீநகரம் (கொந்தகை)

திருநக்ஷத்ரம் : வைகாசி விசாகம்

அவதார ஸ்தலம் : குந்தீநகரம் (கொந்தகை)

ஆசார்யன் : பிள்ளை லோகாசார்யர்

ஶிஷ்யர்கள் : அழகிய மணவாள மாமுனிகள், ஶடகோப ஜீயர் (பவிஷ்யதாசார்யன் சன்னிதி), தத்வேஶ ஜீயர் மற்றும் பலர்.

பரமபதித்த இடம் : ஆழ்வார் திருநகரி

அருளிச் செய்தவை : பெரியாழ்வார் திருமொழி ஸ்வாபதேஶம்

திருமலையாழ்வார் என்ற திருநாமத்துடன் அவதரித்தார், அவருக்கு ஸ்ரீஶைலேஶர் மற்றும் ஶடகோபதாஸர் என்ற திருநாமமும் உண்டு. இவருக்கு ஆழ்வார் மீதும், ஆழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி மீதும், இருந்த பற்றினாலும் அவர் திருவாய்மொழியைப் பரப்பின விதத்தினாலும் இவருக்கு திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமமே இன்றளவும் மிகப் பிரசித்தமாக உள்ளது.

திருமலையாழ்வார் சிறு வயதிலேயே பிள்ளை லோகாசாரியரின் திருவடித் தாமரைகளை ஆஶ்ரயித்து பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டார். அவர் தமிழில் மிகச்சிறந்த பண்டிதராகவும் மற்றும் மிகச்சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார். அவர் ஸம்பிரதாயதிலிருந்து விலகி, மதுரை பேரரசின் ராஜா அவனுடைய சிறு குழந்தையை விட்டு இறந்து போனதால், அந்தப் பேரரசின் தலைமை ஆலோசகராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். பிள்ளை லோகாசாரியார் தன்னுடைய கடைசி காலத்தில், திருமலையாழ்வாரை மானஸீகமாக கடாக்ஷித்தார். பிறகு கூரகுலோத்தம தாஸர் மற்றும் பிற ஶிஷ்யர்களை அழைத்துத் திருமலையாழ்வாரைத் திருத்திப் பணிகொண்டு அவரை நமது ஸம்பிரதாயத்தின் அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகராக மாற்றவேண்டும் என்று நியமித்தார். கூரகுலோத்தம தாஸர் திருமலையாழ்வரைத் திருத்திப் பணிகொள்வதற்காக அவரைச் சந்திக்கச் சென்றார்.

அந்த நேரத்தில் (துருஷ்கர்கள் படையெடுப்பின் பிறகு) நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியிலிருந்து புறப்பட்டு கோழிக்கோட்டில் நம்பெருமாளுடன் சேர்ந்து சிறிது காலம் இருந்தார். ஆனால் நம்பெருமாள் அங்கிருந்து புறப்படும்பொழுது அங்குள்ள சில ஸ்ரீவைஷ்ணவர்களிடம் இருந்த கருத்து வேறுபாட்டினால் ஆழ்வார் அவருடன் செல்லவில்லை. அந்த நேரத்தில் ஆழ்வாரை தென் மேற்கு மலைப் பகுதியில் அழைத்துச்சென்றார்கள். அங்கு திருடர்கள் பயம் அதிகமாக இருப்பதால், ஆழ்வாரை ஒரு பெட்டியில் வைத்து ஒரு குன்றின் அடியில் (உயரமான செங்குத்தான பாறைக்கு நடுவில்) பாதுகப்பாக அந்த பெட்டியை வைத்து விட்டார்கள். சிறிது நாள் கழித்து தோழப்பர் என்ற ஸ்ரீவைஷ்ணவர், நம்மாழ்வாரிடம் மிகவும் பற்று உள்ளவர், திருமலையாழ்வரை சந்தித்து நம்மாழ்வாரை மீட்டெடுக்க சில வீரர்களை அனுப்பி வைக்குமாறு அவரிடம் ப்ரார்த்தித்தார். திருமலையாழ்வரும் மிகவும் ஸந்தோஷமாக ஆழ்வாரை மீட்டெடுக்க வீரர்களை அனுப்பி வைத்தார். தோழப்பரும் அவர்களை அந்த குன்றிற்கு வழிநடத்திச்சென்றார். அனைவரும் அந்த குன்றின் நடுவில் (உயரமான செங்குத்தான பாறையின் நடுவில்) இறங்குவதற்குப் பயப்பட்ட பொழுது, தோழப்பர் ஆழ்வார் மீதுள்ள பற்றினால் தாமாகவே அந்த பாறையின் நடுவில் இறங்குவதாகக் கூறினார். அந்த நேரத்தில் ஆழ்வார் திருநகரியிலிருந்து வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அவரைப் பாராட்டி, அன்றிலிருந்தே ஆழ்வாருடைய சிறப்பான மரியாதைகள் மற்றும் ப்ரஸாதங்கள் அவருக்கு கிடைக்கும் என்று அவர்கள் அனைவரும் கூறினார்கள். ஊஞ்சல் போல உள்ள அமைப்பில் அவர் கீழே இறங்கி ஆழ்வாரை அந்த பெட்டியோடு அந்த ஊஞ்சலில் எழுந்தருளப் பண்ணி அனுப்பினார். ஆழ்வாரை மேலே எழுந்தருளப் பண்ணிய பிறகு, இரண்டாவது முறை தோழப்பரை கூப்பிடுவதற்காக அந்த ஊஞ்சலைக் கீழே இறக்கினார்கள். அதை அங்குள்ள வீரர்கள் மேலே இழுக்கும் பொழுது, அவர் தவறி அதிலிருந்து கீழே விழுந்து உடனே அங்கேயே பரமபதித்தார். நம்மாழ்வார் உடனே தோழப்பருடைய திருக்குமாரரைச் ஸமாதானப்படுத்தி, தாமே அவருக்குத் தகப்பனாராக இருப்பதாகக் கூறினார். இவ்வாறு தோழப்பருடைய முயற்சியால் (திருமலையாழ்வருடைய உதவியினால்) நம்மாழ்வார் அங்கிருந்து மீட்கப்பட்டபிறகு சிறிது காலம் திருக்கணாம்பியில் இருந்து வந்தார். இப்பொழுது திருமலையாழ்வார் சரித்திரத்திற்கு வருவோம். திருமலையாழ்வார் வழக்கமாக பல்லக்கில் வலம் வரும்பொழுது, ஆழ்வாருடைய திருவிருத்தத்தை அனுஸந்தித்துக்கொண்டிருந்த கூரகுலோத்தம தாஸரைப் பார்த்தார். ஏற்கனவே திருமலையாழ்வாருக்குப் பிள்ளை லோகாசாரியருடைய க்ருபா கடாக்ஷம் இருப்பதால், தாஸருடைய பெருமையை உணர்ந்து, உடனே பல்லக்கிலிருந்து இறங்கி, திருவிருத்தத்திற்கான அர்த்தத்தை கற்றுக்கொடுக்குமாறு தாஸரிடம் பணிவுடன் கேட்டுக்கொண்டார். ஆனால் தாஸர் அவருக்கு அர்த்தத்தை கூற முடியாது என்று கூறிவிட்டார். திருமலையாழ்வார் ஸாத்விகராக இருப்பதால், அவருடைய வீரர்கள் அவருக்கு தீங்கு செய்யப் போகும்பொழுது அவர்களைத் தடுத்து அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டார். நடந்த ஸம்பவத்தை திருமலையாழ்வார் அவருடைய வளர்ப்புத் தாயாரிடம் கூறினார், அவருடைய தாயார் அவருக்கும் பிள்ளை லோகாசாரியருடைய ஸம்பந்தத்தை நினைவு படுத்தினார். உடனே திருமலையாழ்வார் அவர் இழந்ததை உணர்ந்து  வருத்தப்பட்டார். மற்றொறு முறை திருமலையாழ்வார் யானை மீது வந்துகொண்டிருக்கும் பொழுது தாஸரை மீண்டும் பார்த்தார். இந்த முறை உடனே மேலிருந்து இறங்கி தாஸருடைய திருவடித்தாமரைகளில் விழுந்து ஸேவித்தார். தாசரும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களையும் கற்றுகொடுப்பதாக கூறினார். திருமலையாழ்வார் தாஸர் திருவாரதனம் மற்றும் பல விஷயங்களுக்காக ஒரு தனி அக்ரஹாரத்தை (இடத்தை) ஏற்பாடு செய்து கொடுத்தார். திருமலையாழ்வார் அவருடைய நிர்வாகத்தில் மிகவும் அதிகமாக வேலை இருப்பதால், தினமும் அவர் திருமண்காப்பு இட்டுக்கொள்ளும்பொது தாஸரை வந்து அர்த்தவிசேஷங்களைக் கற்றுக்கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டார், தாஸரும் அதற்குச் ஸம்மதித்தார். முதல் முறை தாஸர் திருமலையாழ்வரை சந்திக்கும் பொழுது, அவர் பிள்ளை லோகாசாரியர் தனியனை அனுஸந்தித்துக்கொண்டே திருமண்காப்பு இட்டுக்கொள்வதை கவனித்தார். இதை பார்த்த தாஸர் மிகவும் சந்தோஷமடைந்தார். தாஸர் தான் பிள்ளைலோகாசாரியரிடம் கற்றுகொண்ட அனைத்து அர்த்த விஶேஷங்களையும் திருமலையாழ்வருக்குத் தினமும் கற்றுக்கொடுத்து வந்தார். ஒரு நாள் திருமலையாழ்வர் தனது வேலையில் மிகவும் மும்மரமாக இருந்ததால் அவர் அன்று பாடத்தைக் கவனிக்கவில்லை. அன்றிலிருந்து சில நாட்களுக்கு தாஸர் திருமலையாழ்வருக்கு கற்றுக்கொடுக்கச் செல்லவில்லை. தனது தவறை உணர்ந்த திருமலையாழ்வார் உடனே தாஸரைச் சந்தித்து அபராத க்ஷாமணம் கேட்டார். தாசரும் அவரை ஏற்றுக்கொண்டு அவருக்குத் தன் ஶேஷ பிரசாதத்தைக் (போனகம் செய்த ஶேடம்) கொடுத்தார். அப்பொழுதிலிருந்தே திருமலையாழ்வார் அனைத்து லௌகிக விஷயத்திலிருந்தும் விலகினார், அதோடு தனது பதவி மற்றும் பேரரசின் அதிகாரத்தையும் இளம் இளவரசனிடம் ஒப்படைத்து விட்டு, எல்லா நேரங்களிலும் தாஸருடனே இருந்து ஸம்பிரதாய விஶேஷார்த்தங்களை கற்றுக்கொண்டார்.

தாஸருடைய கடைசி நாள்களில், அவர் திருக்கண்ணங்குடிப் பிள்ளையிடம் திருவாய்மொழி அர்த்தத்தை விளக்கமாகவும், விளாஞ்சோலைப் பிள்ளையிடம் அனைத்து ரஹஸ்யார்த்தங்களையும் கற்றுக்கொள்ளுமாறு நியமித்தார். தாஸர் திருமலையாழ்வரை நமது ஸம்பிரதாயத்திற்கு அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகராக நியமித்தார். பிறகு பிள்ளைலோகாசாரியாரை தியானித்துக்கொண்டே தாஸர் திருநாடலங்கரித்தார். திருமலையாழ்வார் அவருக்கு அனைத்து சரம கைங்கர்யங்களையும் மிகச் சிறந்த முறையில் செய்து முடித்தார்.

திருமலையாழ்வார் திருக்கண்ணங்குடிப் பிள்ளையைச் சந்தித்து திருவாய்மொழியினுடைய அர்த்த விஶேஷங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். திருவய்மொழியினுடைய ஸாராம்ஸத்தைக் கற்றுக்கொடுக்கும்போது, திருமலையாழ்வார் பதவுரைக்கு (வார்த்தைக்கு வார்த்தை) அர்த்தம் கேட்க வேண்டும் என்று ஆசை உள்ளதாகக் கூறினார். அதனால் பிள்ளை திருமலையாழ்வரை திருப்புட்குழி ஜீயரிடம் சென்று இவ்வர்த்தத்தைக் கேட்குமாறு நியமித்தார். திருமலையாழ்வாரும் திருப்புட்குழிக்குச் சென்று அந்த ஜீயரை சந்திக்கபோகும் சற்று நேரத்திற்கு முன்பு ஜீயர் திருநாடலங்கரித்தார். திருமலையாழ்வார் மிகவும் வருத்தமடைந்து, பின்பு தேவப்பெருமாளை மங்களாஶாஸனம் செய்வதற்காகச் சென்றார். அவர் எழுந்தருளியதும் அங்குள்ள ஒவ்வொருவரும் அவரை வரவேற்றார்கள், தேவபெருமாளும் அவருக்குத் தீர்த்தம், ஸ்ரீஶடகோபம், சாத்துப்படி மற்றும் பல மரியாதைகளைப் ப்ரஸாதித்தார். அந்த நேரத்தில் நாலூர் பிள்ளை தேவப்பெருமாள் ஸன்னதியில் இருந்தார் (குறிப்பு : நம்பிள்ளை ஈடு வ்யாக்யானத்தை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கொடுத்தார். அவர்  அவருடைய திருக்குமாரரான ஈயுண்ணி பத்மனாபப் பெருமாளுக்குக் கற்றுக்கொடுத்தார். நாலூர் பிள்ளை ஈயுண்ணி பத்மனாபப் பெருமாளுக்கு நேர் ஶிஷ்யர். அதனால் அவரிடம் இருந்து முழுமையாக ஈடு வ்யாக்யானத்தை முழுமையாகக் கேட்டவர். அதோடு நாலூர் பிள்ளை ஈடு வ்யாக்யானத்தை தன் குமாரரான நாலூர் ஆச்சான் பிள்ளைக்கும் கற்றுக்கொடுத்தார். அந்த நேரத்தில் தேவப்பெருமாள் அர்ச்சகர் மீது ஆவேசித்து நாலூர் பிள்ளையிடம் “அருளிச்செயலினுடைய அனைத்து அர்த்த விஶேஷங்களையும் உம்மைத் திருமலையாழ்வாருக்கு கற்றுக்கொடுக்குமாறு ஜ்யோதிஷ்குடியில் (பிள்ளைலோகாசாரியராக இருந்து) நியமித்தோம். ஆனால் இப்பொழுது இவருக்குத் திருவாய்மொழியினுடைய அர்த்த விஶேஷங்களைத் திருப்புட்குழி ஜீயரிடம் கேட்க முடியாததால் அந்த குறை தீர, ஈடு வ்யாக்யானத்தையும் இவருக்கு கற்றுக்கொடுக்குமாறு நியமிக்கிறோம்” என்று கூறினார். இதற்கு நாலுர் பிள்ளை “இவருக்கு கற்றுக்கொடுப்பதில் எனக்கு ஆசை தான், ஆனால் அடியேனுடைய வயது இதற்கு ஒத்துழைக்காது” என்று கூறினார். உடனே தேவப்பெருமாள் “உம்முடைய குமாரரான நாலூர் ஆச்சான் பிள்ளை இவருக்கு ஈடு வ்யாக்யானத்தை கற்றுகொடுத்தால் அது நீரே கற்றுக்கொடுப்பது போல” என்று கூறினார். தேவப்பெருமாளுடைய இந்த கட்டளையைக் கேட்டவுடன் நாலூர் பிள்ளை திருமலையாழ்வரை மிகவும் ஸந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு அவரை நாலூர் ஆச்சான் பிள்ளையிடம் சேர்த்து, நாலூர் ஆச்சான் பிள்ளையைத் திருமலையழ்வாருக்கு அருளிச்செயலினுடைய அர்த்த விஶேஷங்களுடன் சேர்த்து ஈடு வ்யாக்யானத்தையும் கற்றுக்கொடுக்குமாறு நியமித்தார்.

நாலூர் ஆச்சான் பிள்ளை (தேவராஜர் என்ற மற்றொறு திருநாமமும் இவருக்கு உண்டு) அர்த்த விஶேஷங்களைக் கற்றுக்கொடுக்கும் பொழுது, இந்தச் ஸம்பவத்தைக் கேட்ட திருநாராயணபுரத்து ஆயி, திருநாராயணபுரத்து பிள்ளை மற்றும் பலர், நாலூர் ஆச்சான் பிள்ளை மற்றும் திருமலையாழ்வரை திருநாராயணபுரத்திற்கு எழுந்தருளுமாரு பணிவுடன் கேட்டுக் கொண்டு, நாலூர் ஆச்சான் பிள்ளை இங்கு வந்து காலக்ஷேபம் ஸாதித்தால் தாங்களும் கேட்டு பயன் பெறுவோம் என்று கேட்டார்கள். இதை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டு, திருநாராயணபுரத்திற்கு எழுந்தருளி, அங்கு எம்பெருமானார், யதுகிரி நாச்சியார், செல்வப்பிள்ளை மற்றும் திருநாரணனை மங்களாஶாஸனம் பண்ணிவிட்டு, காலக்ஷேபத்தை அங்கேயே முழுமையாகச் ஸாதித்தார். திருமலையாழ்வார் ஈடு வ்யாக்யானத்தை முழுமையாகக் கேட்டவுடன், அவருடைய நடவடிக்கைகளையும், அவருடைய கைங்கர்யத்தையும் பார்த்து நாலூர் ஆச்சான் பிள்ளை தன்னுடைய திருவாராதனப் பெருமாளை (இனவாயர் தலைவன்) திருமலையாழ்வாருக்குக் கொடுத்தார். இவ்வாறு ஈடு 36000 படி நாலூர் ஆச்சான் பிள்ளையிடமிருந்து பெற்று,  திருமலையாழ்வார், திருநாராயணபுரத்து ஆயி, திருநாராயணபுரத்து பிள்ளை ஆகிய மூன்று மிகப் பெரிய பண்டிதர்கள் பரப்பினார்கள்.

பிறகு திருமலையாழ்வார் ஆழ்வார்திருநகரிக்குச் சென்று நிரந்தரமாக அங்கேயே வாழ வேண்டும் என்று முடிவு செய்தார். நம்மாழ்வார் அழ்வார்திருநகரியிலிருந்து சென்ற உடன் அந்த ஊரே காடாக மாறியதை அவர் கண்டார். முதலில் அங்கு உள்ள மரங்களையும், புதர்களையும் திருத்தினார். இப்படிப்பட்ட கைங்கர்யத்தினால் ஆழ்வார்திருநகரி மீண்டும் பழையபடியே அழகாக மாறியது, அதனால் இவருக்கு காடு வெட்டி குரு (ஏனென்றால் இந்த ஆசார்யன் தான் காட்டைத் திருத்தினார்) என்ற திருநாமமும் ஏற்பட்டது. பிறகு அவர் நம்மாழ்வாரைத் திருக்கணாம்பியிலிருந்து (கர்நாடகாவில் உள்ளது) மறுபடியும் ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளப்பண்ணிக் கோயிலைச் சீர் செய்தார். அடுத்ததாக எம்பெருமானாருக்காக (நம்மாழ்வாரால் பல வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பவிஷ்யதாசாரியன் திருமேனி) ஒரு கோயிலை  ஆழ்வார்திருநகரியின் மேற்குப் பகுதியில் அமைத்தார். அந்த ஸன்னிதியைச் சுற்றி சதுர்வேதி மங்கலம் (கோயிலை சுற்றி 4 வீதிகளை அமைத்தார்) அமைத்து, மற்றும் 10 குடும்பங்களை நியமித்தார். அதோடு ஒரு விதவையான ஸ்ரீவைஷ்ணவ அம்மையாரை பவிஷ்யதாசாரியன் சன்னிதிக்குக் கைங்கர்யம் செய்வதற்காக நியமித்தார். எப்பொழுதுமே நம்மாழ்வாருடைய பெருமையையே கூறிகொண்டு அவர் மீது ஈடுபாட்டுடன் இருப்பதாலும், எப்பொழுதுமே திருவாய்மொழியைக் கற்றுக் கொடுப்பதாலும், அவருக்கு திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமமே மிகவும் பிரஸித்தமாக இன்றளவும் உள்ளது.

சில நாட்கள் கழித்து, திருவாய்மொழிப் பிள்ளை, பிள்ளை லோகாசாரியருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் ஒருவரான விளாஞ்சோலைப் பிள்ளையிடம் அனைத்து ரஹஸ்ய க்ரந்தங்களை கற்றுக் கொள்வதற்காக திருவனந்தபுரத்திற்குச் சென்றார். விளாஞ்சோலைப் பிள்ளை எப்பொழுதுமே தன் ஆசார்யனை த்யானித்துக் கொண்டே இருப்பார். அவர் மிகவும் ஸந்தோஷமாக திருவாய்மொழிப் பிள்ளையை வரவேற்றார். விளாஞ்சோலைப் பிள்ளை ரஹஸ்ய க்ரந்தங்களுடைய ஆழமான உட்கருத்தை மிகவும் நன்றாக கற்றுக் கொடுத்து அவரை குளிரக் கடாக்ஷித்தார். அதன் பிறகு திருவாய்மொழிப் பிள்ளை ஆழ்வார்திருநகரிக்கு சென்றார். சில நாட்கள் கழித்து விளாஞ்சோலைப் பிள்ளை தன்னுடைய சரம திருமேனியை விட்டுத் தன் ஆசாரியனுக்கு நிரந்தரமாக நித்ய விபூதியில் கைங்கர்யம் பண்ணவேண்டும் என்று எண்ணி, திருநாடலங்கரித்தார். இதைக் கேட்டவுடன் திருவாய்மொழிப் பிள்ளை அங்குச் சென்று விளாஞ்சோலைப் பிள்ளைக்கு அனைத்து சரம கைங்கர்யங்களையும் செய்தார்.

சில காலம் கழித்து பெரிய பெருமாள் பல ஜீவாத்மக்களுக்கு உஜ்ஜீவனம் அளிக்க ஆதிஶேஷனை மறுபடியும் ஸம்ஸாரத்தில் அவதரிக்கச் சொல்லி நியமித்தார். திருவனந்தாழ்வான் தன் சுவாமியினுடைய நியமனத்தை ஏற்றுக் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராக (இறுதியில் அழகிய மணவாள மாமுனிகளாக பிரசித்தமானார்) திகழக் கிடந்தான்   திருநாவீறுடைய பிரான் (கோமடத்தாழ்வான் வம்ஶத்தில் வந்தவர் – இவர் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட 74 ஸிம்மாசனாதிபதிகளில் ஒருவர்) மற்றும் ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் ஐப்பசி திருமூலத்தில் திருக்குமாரராக ஆழ்வார்திருநகரியில் திருவவதரித்தார். இவர் இவருடைய திருத்தாயார் ஊரான சிக்கில் கிடாரத்தில் வளர்ந்து வந்தார். அங்கு ஸாமாந்ய ஶாஸ்த்ரம் மற்றும் வேத அத்யயனத்தை அவருடைய திருதகப்பனாரிடத்தில் கற்று வந்தார். திருவாய்மொழிப் பிள்ளையைப் பற்றித் தெரிந்தவுடன், உடனே ஆழ்வார்திருநகரிக்கு வந்து அவரை ஆசஶ்ரயித்து, அவருக்குச் ஶிஷ்யராகப் பல கைங்கர்யங்களைப் பண்ணிக்கொண்டே அவரிடம் அருளிச்செயல் மற்றும் அதனுடைய முழுமையான அர்த்த விஶேஷங்களையும் கற்றுக்கொண்டார். திருவாய்மொழிப் பிள்ளையுடைய வழிகாட்டுதலினால் இவர் பவிஷ்யதாசாரியருக்கு உண்மையாகவும், மிகவும் அன்போடும் திருவாராதனம் செய்தார். பிறகு எம்பெருமானாருடைய பெருமைகளை யதிராஜ விம்ஶதியாக இயற்றினார். திருவாய்மொழிப் பிள்ளையுடைய ஶிஷ்யர்களுள் சிலர், ஏன் இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரிடம் மிகவும் பற்றோடு உள்ளார் என்று வியப்படைந்தனர், இதை உணர்ந்த திருவாய்மொழிப் பிள்ளை அவர்களை அழைத்து ஆதிஶேஷன் தான் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராக அவதரித்திருப்பதாக விளக்கமாகக் கூறினார்.

தன்னுடைய கடைசி காலத்தில் திருவாய்மொழிப் பிள்ளை, தனக்கு அடுத்த தர்ஶன ப்ரவர்தகராக யாரை நியமிப்பது என்று மிகவும் வருத்தமாக இருந்தார். அந்த ஸமயத்தில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அனைத்து பொறுப்புகளையும் தான் எடுத்துக் கொள்வதாகவும், தன் ஆசார்யனுடைய ஆசையையும் நிறைவேற்றுவதாகவும் உறுதி பூண்டார். அவர் கூறியதைப் பார்த்து மிகவும் ஸந்தோஷமடைந்த திருவாய்மொழிப் பிள்ளை, நாயனாருடைய காலத்தில் ஒருமுறை மட்டுமே அவர் ஸ்ரீபாஷ்யம் கற்றுக்கொள்ள வேண்டும், பிறகு அவருடைய முழுமையான காலத்தையும் திருவாய்மொழி மற்றும் அதனுடைய வ்யாக்யனங்களிலேயே காலம் கழிக்க வேண்டும் என்று நியமித்தார். அதோடு மட்டுமல்லாமல் தனது மனதை திருவரங்கத்தில் உள்ள பெரிய பெருமாளுக்கு மங்களாஶாஸனம் பண்ணவேண்டும் என்ற நிரந்தரமான எண்ணத்தை மனதில் வைக்க வேண்டும் என்று நியமித்தார். அழகிய மணவாள பெருமாள் நாயனாரை அவதார விஶேஷமாக எண்ண வேண்டும் மற்றும் அவருக்குத் தனி மரியாதை கொடுக்க வேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளை தன்னுடைய ஶிஷ்யர்களுக்குக் கட்டளையிட்டார். அதன் பிறகு பிள்ளை லோகாசாரியர் திருவடிகளையே த்யானித்துக்கொண்டு திருநாடலங்கரித்தார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மற்றும் சில ஶிஷ்யர்கள் திருவாய்மொழிப் பிள்ளைக்குச் சரம கைங்கர்யத்தைச் செய்தார்கள்.

எப்படி எம்பெருமானார் பராங்குஶ தாஸரான பெரிய நம்பியின் திருவடியைத் தஞ்சமடைந்தாரோ, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஶடகோப தாஸரான திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சமடைந்தார். திருவாய்மொழிப் பிள்ளையின் முயற்சியால் மட்டுமே இன்று நாம் ஆதிநாதர் ஆழ்வார் சன்னிதியையும், பவிஷ்யதாசாரியன் (எம்பெருமானார்) ஸன்னிதியையும்  ஸேவிக்க முடிகிறது. இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக நம்மாழ்வாருக்காகவும், திருவாய்மொழிக்காகவும் அர்ப்பணித்தார். பிள்ளை லோகாசாரியருடைய ஆணைக்கிணங்க, பல இடங்களுக்குச் சென்று பல ஆசார்யர்களைப் பற்றி, விஷயங்களைச் சேகரித்து, அனைத்தையும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரிடம் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் இவருடைய முழுமையான முயற்சியால் மட்டுமே ஈடு 36000 படி வ்யாக்யானம் நமக்குக் கிடைத்தது, அதைத் தான் பிற்காலத்தில் அழகிய மணவாள மாமுனிகள் மிகவும் பிரஸித்தமாக, மிகப் பெருவாரியாகப் பரப்பினார்.

நாமும் திருவாய்மொழிப் பிள்ளையுடைய திருவடித்தாமரைகளை வணங்கி, எம்பெருமானார் மீதும், நமது ஆசார்யன் மீதும் பற்றை வளர்த்துக் கொள்வோம்.

திருவாய்மொழிப் பிள்ளையினுடைய தனியன்:

நம ஸ்ரீஶைலநாதாய குந்தீ நகர ஜந்மநே
ப்ரஸாதலப்த பரம ப்ராப்ய கைங்கர்யஶாலிநே

திருவாய்மொழிப் பிள்ளையினுடைய வாழி திருநாமம்:

வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே

மேலே அடுத்த ஆசார்யரான அழகிய மணவாள மாமுனிகள் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/19/thiruvaimozhi-pillai/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வடக்குத் திருவீதிப் பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/09/22/nampillai/) நம்பிள்ளையை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பற்றி அனுபவிப்போம் .

வடக்கு திருவீதிப் பிள்ளை – காஞ்சிபுரம்

திருநக்ஷத்ரம்: ஆனி ஸ்வாதி

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

ஆசார்யன்: நம்பிள்ளை

ஶிஷ்யர்கள்: பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மற்றும் பலர்.

பரமதித்த இடம்: திருவரங்கம்

அருளிச்செய்தது: ஈடு 36000 படி

ஸ்ரீ க்ருஷ்ண பாதர் என்று அவருடைய இயற்பெயர். இவருக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்ற திருநாமமே ப்ரஸித்தமாக உள்ளது. நம்பிள்ளையின் முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை முழுமையாக ஆசார்ய நிஷ்டையோடு இருந்தார். க்ருஹஸ்தாஶ்ரமத்திற்கு வந்த பின்னரும் அவர் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் இருந்தார். இதைக் கண்டு மிகவும் வருத்தமடைந்த அவருடைய திருத்தாயார், நம்பிள்ளையிடம் அவருடைய இருப்பைப் பற்றிக் கூறினார். இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை வடக்கு திருவீதிப் பிள்ளையையும் அவருடைய பார்யாளையும் கூப்பிட்டு, தன்னுடைய க்ருபையினால் அவர்களை கடாக்ஷித்து, வடக்குத் திருவீதிப் பிள்ளையை பார்யாளுடன் ஏகாந்தத்தில் இருக்குமாறு நியமித்தார். ஆசார்ய நியமனத்தின் படி நடந்ததால் அவர்கள் இருவரும் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தார்கள். நம்பிள்ளையினுடைய (லோகாசார்யன்) க்ருபா கடாக்ஷத்தில் பிறந்ததால், வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்தக் குழந்தைக்கு பிள்ளை லோகாசார்யன் என்ற திருநாமத்தைச் சூட்டினார். இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை “அழகிய மணவாளன்” என்ற திருநாமத்தைச் சூட்ட வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகக் கூறினார். இதைக் கேட்ட நம்பெருமாள், வடக்குத் திருவீதிப் பிள்ளையை கடாக்ஷிக்க, அவர்கள் இருவரும் மற்றொரு குழந்தையை ஈன்றெடுத்தார்கள். அழகிய மணவாளனுடைய (நம்பெருமாள்) க்ருபா கடாக்ஷத்தால் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள். இப்படித்தான் வடக்குத் திருவீதிப் பிள்ளை இரண்டு ரத்தினங்களை நமது ஸம்ப்ரதாயத்திற்குக் கொடுத்தார். இவரைப் பெரியாழ்வாரோடு ஒப்பிடலாம்:

 • பெரியாழ்வார், வடக்குத் திருவீதிப் பிள்ளை இருவரின் திருநக்ஷத்ரமும் ஆனி ஸ்வாதி.
 • ஆழ்வார் எம்பெருமான் கடாக்ஷத்தினால் திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி அருளிச்செய்தார். நம்பிள்ளை கடாக்ஷத்தினால் வடக்குத் திருவீதிப் பிள்ளை 36000 படி வ்யாக்யானம் அருளிச்செய்தார்.
 • ஆழ்வார் ஆண்டாளை இந்த ஸம்ப்ரதாயத்திற்காகக் கொடுத்தார், அவளை க்ருஷ்ணானுபவத்தை ஊட்டியே வளர்த்தார். வடக்குத் திருவீதிப் பிள்ளை பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை இந்த ஸம்ப்ரதாயத்திற்காகக்  கொடுத்தார். அவர்களை பகவத் அனுபவத்தை ஊட்டியே வளர்த்தார்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளையிடம் திருவாய்மொழி காலக்ஷேபம் கேட்கும்பொழுது, பகல் நேரத்தில் ஆசார்யனோடு இருந்து கொண்டு கேட்பார், இரவு நேரத்தில் அதை ஒலைச்சுவடியில் ஏடுபடுத்துவார். இப்படித்தான் நம்பிள்ளைக்குத் தெரியாமல் இவர் ஈடு 36000 படி வ்யாக்யானத்தை எழுதி முடித்தார். ஒருநாள் வடக்குத் திருவீதிப் பிள்ளை ததியாராதனத்திற்காக நம்பிள்ளையை தன் திருமாளிகைக்கு அழைத்தார். நம்பிள்ளையும் அதை ஏற்றுக்கொண்டு அவர் திருமாளிகைக்கு எழுந்தருளினார். நம்பிள்ளை திருவாராதனத்தைத் தொடங்கியபொழுது, கோயிலாழ்வாரில் ஒலைச்சுவடியில் வ்யாக்யானம் இருப்பதைக் கண்டார். ஆர்வத்தோடு அதை எடுத்து சிலவற்றைப் படித்து, இது என்ன என்று வடக்குத் திருவீதிப் பிள்ளையிடம் கேட்டார். வடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளையுடைய காலக்ஷேபத்தை தினமும் ஏடுபடுத்துவதாகக் கூறினார். உடனே நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை திருவாராதனம் பண்ணச் சொல்லிவிட்டு, அவர் அந்த ஏட்டில் இருக்கும் வ்யாக்யானங்களை படிக்க ஆரம்பித்தார். “என்னுடைய அனுமதி இல்லாமல் ஏன் எழுதினீர்? பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்திற்குப் போட்டியாக இயற்றுகிறீரா?” என்று நம்பிள்ளை கேட்டார். இதைக் கேட்டவுடன் மிகவும் வருத்தமுற்றார் வடக்குத் திருவீதிப் பிள்ளை. உடனே நம்பிள்ளையின் திருவடித்தாமரைகளில் விழுந்து, பிற்காலத்தில் பார்த்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதற்காகத் தான் எழுதினதாக விவரித்தார். அதைக் கேட்டவுடன் ஸமாதானமடைந்த நம்பிள்ளை, அந்த வ்யாக்யானத்தை மிகவும் கொண்டாடினார். வடக்குத் திருவீதிப் பிள்ளைஒரு அவதார விஶேஷமாக இருப்பதாலேயே அவரால் ஒரு வார்தையைக் கூட விடாமல் இதை இயற்ற முடிந்தது என்று நம்பிள்ளை கூறினார். இந்த வ்யாக்யானத்தைத் தன்னுடைய ஶிஷ்யரான ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் (நஞ்சீயருடைய பூர்வாச்ரம திருநாமத்தை உடையவர்) கொடுப்பதாகவும் அவருடைய ஶிஷ்யர்கள் மூலமாக மாமுனிகளைச் சென்றடைந்து தகுந்த காலத்தில் மாமுனிகளால் இந்த உலகோருக்கு வெளியிடப்படும் என்றும் கூறினார். எம்பெருமானின் பரம க்ருபையால் நம்பிள்ளை மாமுனிகளுடைய அவதாரத்தை முன்பே கண்டு அதை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கூறினார்.

நம்பிள்ளை பரமபதித்த பிறகு வடக்குத் திருவீதிப் பிள்ளை தர்ஶன ப்ரவர்த்தகரானார். ஸம்ப்ரதாயத்தில் அனைத்து அர்த்த விஶேஷங்களையும் பிள்ளை லோகாசார்யருக்கும், அழகிய மணவாள பெருமாள் நாயனாருக்கும் கற்றுக்கொடுத்தார். பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசனபூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளை கூறிய சில உபதேஶங்களை உதாகரித்துள்ளார்:

 • ஸூத்ரம் 77 ல், அஹங்காரத்தை நீக்கிப் பார்த்தால், ஆத்மாவை அடியேன் என்றே அறிய முடியும் என்கிறார். யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில், இதை வடக்குத் திருவீதிப் பிள்ளை விளக்கியுள்ளது காட்டப்பட்டுள்ளது.
 • ஸூத்ரம் 443 ல், “ஒரு ஜீவாத்மா தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தால் ஈஶ்வரனின் அபிமானத்தை இழந்து இந்த ஸம்ஸாரத்தில் அநாதி காலமாக இருக்கிறான். ஸதாசார்யனின் அபிமானத்தைப் பெறுவதன் மூலமே அவன் இந்த ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட முடியும் என்று வடக்குத் திருவீதிப் பிள்ளை எப்பொழுதுமே கூறுவார்” என்று பிள்ளை லோகாசாரியர் கூறினார்.

தன்னுடைய ஆசார்யனான நம்பிள்ளையை நினைத்துக் கொண்டே, வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்தச் சரம திருமேனியை விட்டுத் திருநாடலங்கரித்தார்.

நாமும் எம்பெருமானார் மீதும், நமது ஆசார்யன் மீதும் பற்று வளர வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடித்தாமரைகளை வணங்குவோம்.

வடக்குத் திருவீதி பிள்ளையினுடைய தனியன்:

ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஶிரஸா ஸதா|
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

மிதுநே ஸ்வாதிஸம்பூதம் கலிவைரி பதாஶ்ரிதம்|
உதக்ப்ரதோளீ நிலயம் க்ருஷ்ணபாதமஹம் பஜே||

வடக்குத் திருவீதி பிள்ளையினுடைய வாழி திருநாமம்:

ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

மேலே, அடுத்த ஆசார்யரான பிள்ளை லோகசார்யரின் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/17/vadakku-thiruveedhi-pillai/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org