Monthly Archives: ஜூலை 2015

பராசர பட்டர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/07/23/embar/) எம்பாரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் மற்றும் நம்பெருமாளின் அபிமான புத்திரரான பட்டரை  பற்றி அனுபவிப்போம் .

பராஶர பட்டர்  (திருவடிகளில் நஞ்சீயர்) – திருவரங்கம்

திருநக்ஷத்ரம்: வைகாசி அனுஷம்

திரு அவதாரத்தலம்: திருவரங்கம்

ஆசார்யன்: எம்பார்

ஶிஷ்யர்கள்: நஞ்சீயர்

திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம்

அருளிச்செய்தவை: அஷ்டஶ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோஶம் , பகவத் குண தர்ப்பணம் (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வியாக்யானம் ), ஸ்ரீரங்கராஜ ஸ்தோத்ரம் .

திருவரங்கநாதனின் பிரசாதத்தை ஆண்டாள் அம்மங்கார் உண்டதால் , கூரத்தாழ்வானுக்கும் ஆண்டாள் அம்மங்காருக்கும் திருவவதாரம்  செய்த மன்னுபுகழ் மைந்தர்கள் ஸ்ரீ பராஶர பட்டர்  மற்றும் இவரது திருத்தம்பியாரான வேத  வியாஶ பட்டர் ஆவர். ஒரு நாள் ஆழ்வான் உஞ்ச வ்ருத்திக்கு சென்ற போது  மழை பெய்து அவரால் அன்று எந்த தான்யங்களையும் எடுத்துவர முடியாததால் , ஆழ்வானும் ஆண்டாள் அம்மங்காரும் உணவருந்தாமலேயே அன்றிரவு உறங்கச் சென்றுவிட்டனர். அந்த வேளையில்  பெரிய பெருமாளுக்கு, அந்த நாளின் இறுதி தளிகை கண்டருளப்பண்ணும் மணி ஓசையை அவர்கள் கேட்கின்றனர் . அப்போது ஆண்டாள் எம்பெருமானை  நோக்கி “இதோ உமது பக்தரான ஆழ்வான் பிரஸாதம் இன்றி இருக்க தேவரீர் அங்கு கூடிக்குலாவி போகம் கண்டருள்கிறீர் ” என்று நினைத்தார். இதை உணர்ந்த பெரிய பெருமாள் உத்தம நம்பி மூலம் தமது பிரஸாதங்களை வாத்யம், சத்ரம் (குடை), சாமரம் உள்ளிட்ட ஸகல விருதுகளோடு ஆழ்வானுக்கும் அவர் தேவிகளுக்கும் அனுப்புகிறார். பிரஸாதம் ஆழ்வான் திருமாளிகையை  நோக்கி வர , “இதென்  ? இன்றைக்கு என்ன விசேஷம்” என்று பதறி எழுந்தார் . பிறகு ஆண்டாளை நோக்கி “நீ பெருமாளிடம் ஏதேனும்  நினைத்தாயோ ? ”  என்று கேட்க  ஆண்டாளும்  நினைத்தவற்றை சொல்ல, ஆழ்வான் ஆண்டாள் பெருமாளிடம் இவ்வாறு ப்ரார்த்தித்ததை நினைத்து மிகவும் வருந்தினார். பின் பிரஸாதத்திலிருந்து இரண்டு திரளைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தாம் அமுது செய்து  ஆண்டாளுக்கும் கொடுத்தார். இந்த இரண்டு திரளைகளே அவர்களுக்கு பராஶர பட்டர்  வேதவ்யாஸ பட்டர் என்கிற இரண்டு அழகான திருக்குமாரர்களை அருளுகின்றன. இவ்விருவரும் திருவவதரித்த பத்துநாளும் கடந்த இரண்டாம் நாள், எம்பார் த்வய மஹா மந்த்ரோபதேஶத்தை  செய்தருள , எம்பெருமானார் எம்பாரையே இவ்விருவருக்கும் ஆசார்யனாய் இருக்க நியமித்தார். எம்பெருமானார் ஆழ்வானை, பராஶர பட்டரை பெரிய பெருமாளின் ஸ்வீகார புத்திரராய்த் தரும்படி நியமிக்க, ஆழ்வானும் அவ்வண்ணமே செய்தார். ஸ்ரீரங்கநாச்சியார் தானே பட்டரைத் தமது ஸந்நிதியில் வைத்துப் பார்த்துக்கொண்டார். ஒருமுறை , பால ப்ராயத்திலே பட்டர் பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்து வருகையில், எம்பெருமானார் அநந்தாழ்வான் உள்ளிட்ட ஸ்ரீவைஷ்ணவர்களிடம் பட்டரைத் தம்மைப் போலவே கொள்ளும் படிக் கூறினார். பட்டர்  தமது சிறு பிராயம் முதலாகவே மிகவும் விலக்ஷணராய்த் திகழ்ந்தார். இதை நமக்குப் பல வைபவங்கள் உணர்த்துகின்றன:

 •   ஒரு முறை பட்டர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு வித்வான் “ஸர்வஞ்ய பட்டன் “ என்று விருது ஊதி வர, “இதார்? எம்பெருமானார்  கூரத்தாழ்வான் முதலியாண்டான் எம்பார் உள்ளிட்ட பெரியர்வர்கள் இங்கே திருவரங்கத்திலே எழுந்தருளி இருக்க ஸர்வஞ்யன் என்ற விருதூதி வருவது ? ”  என்று திடுக்கிட்டு , அந்த வித்வானிடம் சென்று அவரை வாதத்திற்கு அழைத்தார் . அந்த வித்வானும் பட்டர்  சிறுபிள்ளை ஆதலால் , பட்டர்  என்ன கேள்வி எழுப்பினாலும் அதற்கு தாம் விடையளிப்பதாகக் கூறினார். பட்டர்  தன்  திருக்கரத்தில் ஒரு பிடி மண்ணை  எடுத்து, இதில் எவ்வளவு மண் இருக்கிறது என்று கேட்க பதிலின்றி திகைத்தார் அந்த வித்வான். பிறகு பட்டர்  “ஒரு பிடி மண் என்று பதிலளிக்க முடியாத நீர்  ஏன்  இவ்விருதை ஊதுகிறீர் ? ”  என்று கேட்க, பட்டரின்  பேரறிவைக் கண்டு வியப்புற்ற அந்த வித்வானும் பல்லக்கிலிருந்து இறங்கி பட்டரை  பல்லக்கிலே எழுந்தருளப்பண்ணி ஆழ்வான் திருமாளிகையிலே கொண்டு சேர்த்து பலவகையால் பட்டரைப் புகழ்ந்தார் .
 • பட்டரின் குருகுல வாசத்தில் ஒரு நாள், பட்டர்  தெருவில் விளையாடுவதைக் கண்டு, பாடசாலைக்குச் செல்லாமல் விளையாடுவது ஏன் என்று கூரத்தாழ்வான் கேட்கிறார். ஒரே சந்தையில் பாடத்தை க்ரஹிக்கக் கூடியவரான பட்டர்  அதற்கு “நேற்று சொன்ன பாடத்தையே  இன்றும் சொல்லுகிறார்கள் ” என்று கூறினார். இதைக் கேட்டு ஆழ்வான் பட்டரை பரீக்ஷிக்க பட்டர்  மிக எளிதாகப் பாசுரங்களைச் ஸாதித்துவிடுகிறார்.
 • ஒரு முறை கூரத்தாழ்வான் திருவாய்மொழியில் நெடுமாற்கடிமை  பதிகத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது “சிறுமா மனிசர் “ என்று வருவதைக் கேட்டு பட்டர் , “எவ்வாறு ஒரே மனிதர் சிறியவராகவும் பெரியவராகவும் இருத்தல் ஸாத்தியம் ?”   என்று கேட்க ஆழ்வான் தானும் மிகவுகந்து “நல்லாய் ! முதலியாண்டான் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போன்றோரைப் பார், உடல் மெலிந்து சிறுமையுடயராயிருந்தும் ஞானம் அனுட்டானம் பெருத்துப் பெருமை உடையவர்களாகவும் எழுந்தருளி உள்ளனர் அல்லவா ? ”  என்று   ஸமாதானம் ஸாதிக்க, பட்டர் தானும் தெளிவடைந்தார் .

பட்டர்  வளர்ந்த பின் எம்பெருமானார் தரிசனத்தின் ப்ரவர்த்தகர் ஆனார் . பணிவு, பெருந்தன்மை, அருளிசெயலில் பெருத்த மங்களாஶாஸனம் ரஸனை உள்ளிட்ட அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பப் பெற்றவராய் எழுந்தருளி இருந்தார். நம்பிள்ளை உள்ளிட்ட பூர்வாசார்யர்கள் பல வியாக்யானங்களில் பட்டரின் கருத்தையே மிகவும் சிறந்ததாய் உகந்தனர். ஆழ்வானைப் போலவே பட்டரும் திருவாய்மொழியிலும் திருவாய்மொழி அர்த்தங்களிலும் ஆழ்ந்து விடுவார். பட்டர்  திருவாய்மொழியில் ஆழ்ந்த பல தருணங்களை வியாக்யானங்களில் காணலாம். ஆழ்வார் நாயிகா பாவத்தில் பராங்குஶ நாயகியாய்ப் பாடும் போது, “ஆழ்வார் திருவுள்ளத்தில் என்ன  ஓடிக்கொண்டிருக்கிறது என்று அறிவார் ஆரும்  இல்லை ”  என்று பட்டர்  சாதிப்பார். பட்டரின் பணிவு , ஞானம் , பெருந்தன்மை உள்ளிட்ட கல்யாணகுணங்களை விளக்கும் பல வைபவங்கள் இருக்கின்றன. பட்டரின்  பணிவை மணவாளமாமுநிகள் யதிராஜ விம்ஶதியில் ஆழ்வான் மற்றும் ஆளவந்தாருடைய பணிவோடு ஒப்பிட்டுக் கொண்டாடுகிறார். வ்யாக்யானங்கள் பட்டரின் நிர்வாகங்கள் மற்றும்  ஐதிக்யங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன .

 • தனது ரங்கராஜ ஸ்தோத்திரத்தில் பட்டர் ஓர் நிகழ்வைக் காட்டுகிறார் . ஒருமுறை எவ்வாறோ ஒரு நாய் பெரிய கோயிலுக்குள் நுழைந்துவிட அர்ச்சகர்கள் லகு ஸம்ப்ரோக்ஷணம் செய்ய முடிவெடுத்து விடுகிறார்கள். இதை அறிந்த பட்டர்  பெரிய பெருமாளிடம் விரைந்து சென்று நாள்தோறும் தாம் கோவிலுக்கு வருவதற்காக ஸம்ப்ரோக்ஷணம் செய்யாத அர்ச்சக  சுவாமிகள் நாய் நுழைந்ததற்கு செய்கிறாரேன்? என்று விண்ணப்பிக்கிறார். மிகப்பெரிய வித்வானாய்  இருந்தும் பட்டர் தன்னை ஒரு நாயை விடத் தாழ்மையானவர்  என்று கருதினார்.
 • தேவலோகத்தில் தேவனாய்ப் பிறப்பதைக் காட்டிலும் திருவரங்கத்தில் ஒரு நாயாய் பிறப்பதையே தாம் பெரிதும் உகப்பதாக தனது ஸ்ரீ ரங்கராஜ ஸ்தோத்திரத்தில் பட்டர்  ஸாதிக்கிறார்.
 • ஒரு முறை நம்பெருமாள் திருமுன்பே சில கைங்கர்யபரர்கள் பொறாமையால் பட்டரை வைதார்கள் . அதற்கு பட்டர்  “ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இரண்டு காரியங்களை தவறாது செய்யவேண்டும் . ஒன்று பெருமாளின் கல்யாண குணங்களை வாயினால் பாடுதல் மற்றொன்று தனது தோஷங்களை நினைத்து வருந்துதல்” என்றும் “பெருமாளின் கல்யாண குணங்களைப் பாடுவதில் ஈடுபட்டிருந்த அடியேன், அடியேனது தோஷங்களை எண்ணி வருந்த மறந்து விட்டேன். தாங்கள் அவற்றைக்கூறி  அடியேனது கடமையை முடிப்பதில் பெருத்த உபாகாரிகளாய் இருந்துள்ளீர்கள். இதற்கு அடியேன் உங்களுக்கு ஸன்மானங்களை ஸமர்பிக்கவேண்டும் ” என்று சாதித்து அந்த கைங்கர்யபரர்களுக்கு அவரது திருவாபரணங்களையும் சால்வையையும் தந்தார். பட்டரின் பெருந்தன்மயாகப்பட்டது அவ்வாறாக இருந்தது.
 • பட்டரின் காலக்ஷேப கோஷ்டியில் பலர் எழுந்தருளியிருந்தது உண்டு. ஒருமுறை பட்டர் ஶாஸ்திரங்களைப் பெரிதும் கற்காத ஒரு ஸ்ரீவைஷ்ணவருக்காக காத்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட படித்த பல வித்வான்கள் காரணம் கேட்க பட்டர் “அந்த ஸ்ரீவைஷ்ணவரே வித்வானாய் இல்லாமல் இருந்தும் ,உண்மை நிலையை அறிந்தவர்” என்று ஸாதித்தார். இதை மேலும் உணர்த்த திருவுள்ளம் கொண்ட பட்டர் கோஷ்டியில் ஒரு வித்வானை அழைத்து “உபாயம் எது? ” என்று கேட்டார் . அதற்கு அந்த ஸ்ரீவைஷ்ணவர் “ஶாஸ்திரத்தில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் உள்ளிட்ட பல உபாயங்கள் இடம் பெற்றுள்ளன “ என்று விடையளித்தார். பின் பட்டர் “உபேயம் எது ?” என்று கேட்க அந்த வித்வானும் “ஶாஸ்திரத்தில் ஐஶ்வர்யம், கைவல்யம், கைங்கர்யம் போன்ற பல உபேயங்கள் இடம் பெற்றுள்ளன ” என்று ஸாதித்தார். பட்டர் வித்வான்களாய் எழுந்தருளியிருந்தும் தெளிவு இல்லையே என்று ஸாதித்து பின் அவர் காத்துக்கொண்டிருந்த அந்த ஸ்ரீவைஷ்ணவர் வந்ததும் இதே கேள்விகளை கேட்க , அந்த ஸ்ரீவைஷ்ணவர் “எம்பெருமானே உபாயம் எம்பெருமானே உபேயம் ”  என்று ஸாதித்தார். பட்டர் இதுவே ஸ்ரீவைஷ்ணவ நிட்டை என்றும் இதற்காகவே தான் காத்திருந்ததாகவும் ஸாதித்தார்.
 • ஒரு முறை சோமாசியாண்டான் பட்டரிடம் தனக்கு திருவாராதன க்ரமம் கற்றுத்தர வேண்டும் என்று பிரார்த்திக்க பட்டர் தானும் மிக விஸ்தரமாகச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் ஒரு நாள் சோமாசியாண்டான் பட்டர் திருமாளிகைக்கு எழுந்தருளினார். அப்பொழுது பட்டர் ப்ரஸாதம் உண்ண  எழுந்தருளியிருக்கும் வேளையில்  தான் திருவாராதனம் செய்ய மறந்தது நினைவுக்கு வர உடனே பெருமாளை அங்கே எழுந்தருளப்பண்ணி தளிகை அமுதுசெய்வித்து பின் உடனே உண்டார். இதனைக்கண்ட சோமாசியாண்டான் ஏன் தனக்கு மிக விஸ்தரமான திருவாராதனம் என்று கேட்க பட்டர், நீர் சோமயாகம் உள்ளிட்ட பெரிய காரியங்களைச் செய்யக் கூடியவர், ஆதலால் இலகுவாக இருப்பதொன்று உமக்கு நிறைவளிக்காது , நாமோ சிறிய திருவாராதனதுக்கே உணர்ச்சிவசப்பட்டு மயக்கமுறுகிறோம், ஆதலால் தான் உமக்கு பெரிதாகச் சொல்லிக் கொடுத்தோம் என்று ஸாதித்தார்.
 • ஒரு முறை திருவரங்கத்தில் உறியடி உத்சவத்தில் பட்டர் வேத பாராயண கோஷ்டியை விட்டு இடையர்களோடு சென்று நின்றார் . இதை பற்றி விசாரித்ததற்கு அந்நாள் இடையர்களுக்காக ஏற்பட்ட உத்சவ நாள் ஆன படியால் பெருமாளின் கடாக்ஷம் அவர்கள் மீதிருக்கும் என்றும் பெருமாள் கடாக்ஷம் இருக்கும் இடத்திலே நாம் இருத்தல் வேண்டும் என்றும் ஸாதித்தார் .
 • ஒரு முறை திருமலை அனந்தாழ்வான் பட்டரிடம் பரமபதநாதனுக்கு இரண்டு திருத்தோள்களா அல்லது நான்கு திருத்தோள்களா என்று கேட்டார். அதற்கு பட்டர் எவ்வாறாகவும் இருக்கலாம் , இரண்டாக இருந்தால் பெரிய பெருமாளைப் போல் இருப்பார் நான்காக இருந்தால் நம்பெருமாளைப் போல் இருப்பார் என்று பதில் ஸாதித்தார் .
 • அம்மணியாழ்வான் வெகுதூரத்திலிருந்து வந்து பட்டரிடம் தனக்கு இதத்தை உபதேசிக்கும்படி பிரார்த்திக்க பட்டர் திருவாய்மொழியில் நெடுமாற்கடிமை  பதிகத்தை விளக்கி, பெருமாளை அறிதல் குறைவாக அருந்துதல் என்றும் அடியார்களை அறிதல் முழுவயிற்றுப் பசிக்கு உண்ணுதல் என்றும் ஸாதித்தார் .
 • பட்டரின் பெருமைகளைக் கேட்டறிந்த அரசன் ஒருவன் பட்டரிடம் வந்து பொருளாதார உதவிக்காகத் தம்மிடம் வருமாறு விண்ணபிக்க, பட்டர், நம்பெருமாளின் அபய  ஹஸ்தம் (அஞ்சேல் என்றுணர்த்தும் திருக்கை) திரும்பிக்கொன்டாலும் தாம் மற்றோரிடத்தில் உதவி நாடி செல்லுவதாக இல்லை என்று ஸாதித்தார்.
 • தனக்கும் ஆழ்வானுக்கும் ஆசார்யன் – ஶிஷ்யன்  என்ற உறவுமுறை உள்ளதால் திருவரங்கத்தமுதனார் தன்னை பட்டரை விட உயர்ந்தவர் என்று கருத, ஒக்குமே ஆனாலும் தானே இதை சொல்லிகொள்ளுதல் கூடாது  என்று ஸாதித்தார் .
 • யாரோ ஒருவர் பட்டரிடம் “ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்திரங்களை எவ்வாறாக நடத்த வேண்டும்”  என்று கேட்க பட்டர் “அக்கேள்வியே தவறானது மாற்றாக ஸ்ரீவைஷ்ணவர்களை தேவதாந்திரங்கள் எவ்வாறு நடத்தவேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கவேண்டும். ரஜோ அல்லது தமோ குணத்தால் தாங்கள் நிரம்பபெற்றிருப்பதாலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸாத்வீக குணம் நிரம்பப்பெற்றிருப்பதாலும் தேவதாந்திரங்களே  ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கலிலே அடிமைத்தனம் பூண்டிருக்க வேண்டும்”  என்று ஸாதித்தார் . இதே ஐதிஹ்யம் ஆழ்வான் விஷயத்திலும் விளக்க பட்டுள்ளது .
 • பட்டரின் பெருமைகள் எல்லைகளற்றவை . பெருத்த விதுஷியாய் இருந்தும் பட்டரின் தாயாரே பட்டரின் ஸ்ரீபாத தீர்த்தத்தை விரும்புவார். சிலர் அவரிடம் இவ்வாறு செய்யலாமா என்று வினவ “சிற்பி சிற்பத்தை செதுக்குவதால் அது ப்ராணப்ரதிஷ்டை ஆகி இறைவன் ஆன பின் அவன் அதை வணங்கக்கூடாது என்றில்லையே? அதேபோல பட்டரும் தன்  திருக்குமாரராய் இருந்தாலும் வணங்கத்தக்கவர்” என்று பதில் ஸாதிப்பார் .
 • ஒரு முறை ஒரு தேவதாந்த்ரபரரின் (எம்பெருமானை தவிர வேறொருவனை பூசிப்பவன்) வஸ்திரம் பட்டர் மீது பட்டுவிட்டது. பெருத்த விஷய அறிவுடையவராய் எழுந்தருளியிருந்தும் பட்டர் தனது தாயாரிடத்தே ஓடி வந்து “என் செய்ய?” என்று கேட்டார். அதற்கு ஆண்டாள் அம்மங்கார் ப்ராம்ஹணர் அல்லாத ஒரு ஸ்ரீவைஷ்ணவரின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஏற்பதே ஒரே வழி என்று ஸாதித்தார் . அப்படியாகப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரை பட்டர்  கண்டறிந்து அவரின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ப்ரார்த்தித்தார் . முதலில் பட்டரின் பெருமையைக் கண்டு ஸ்ரீவைஷ்ணவர் மறுத்தும் பட்டர்  மிகவும் ப்ரார்த்தித்ததால் குடுத்தலானார் .
 • ஒரு முறை காவேரி அருகில் ஒரு மண்டபத்தில் பட்டர் திருவாலவட்ட கைங்கர்யத்தில் இருந்தார். அப்போது ஸ்ரீவைஷ்ணவர்கள் பட்டரிடம் ஸந்தியாவந்தனத்திற்கான பொழுது வந்தது என்று கூற பட்டர் தான் பெருமாளின் அந்தரங்க கைங்கர்யத்திலே இருப்பதால் சித்திரகுப்தன் இதைப் பாவக்கணக்கோடு சேர்க்கமாட்டான் என்று ஸாதித்தார் . இதே கோட்பாட்டை  அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் “அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்” என்று விளக்குகிறார். ஆனால் கைங்கர்யம் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக நித்யகர்மாவை விடுத்தல் ஆகாது என்று அறிதல் வேண்டும்.
 • ஒரு முறை அத்யயநோத்சவத்தில் ஆண்டாள் அம்மங்கார் பட்டரிடம் த்வாதஶி பாரணை செய்ய நினைவூட்டினார். அதற்க்கு பட்டரோ “பெரிய உத்ஸவ வேளையிலே ஆரேனும் ஏகாதஶி/த்வாதஶியை நினைவு கொள்வார்களோ?” என்று கேட்டார். கருத்து யாதெனில், பகவதனுபவத்தில் இருக்கும் வேளையிலே உண்டி உள்ளிட்டவைகளை நினைவு கொள்ளுதல் ஆகாது என்பதேயாம் (மாறாக கர்த்தவ்யமான ஏகாதஶி விரதத்தை அனுட்டித்தல் அவசியமில்லை என்பதல்ல).
 • பட்டர் தனது ஶிஷ்யர்களிடம் சரீரத்திலும் சரீர அலங்காரத்திலும் பற்றை விட வேண்டும் என்று ஸாதித்தார். அதற்கு அடுத்தநாளே பட்டர் பட்டு வஸ்த்ரங்கள் திருவாபரணங்கள் உள்ளிட்டவைகளை சாற்றிக்கொண்டார்  . இதனை கண்ட ஶிஷ்யர்கள் பட்டரின் உபதேசமும் செயல்களும் முன்னிற்குப்பின் முரணாய் அமைந்ததை பட்டரிடம் கேட்க, பட்டர் தான் தமது திருமேனியைப் பெருமாளின் நித்யவாஸ ஸ்தலமாய் காண்பதாகவும், எவ்வாறு பெருமாள் சிறிய காலத்துக்கே எழுந்தருளும் மண்டபத்திற்கும் அலங்காரம் உண்டோ அதே போலத்தான் இதுவும் என்றும் இப்படியாகப்பட்ட அத்யவஸாயம் ஒருவருக்கு ஏற்படுமேயானால் அவர்  தனது சரீரத்தைப் பலவகையிலும் அலங்கரித்தல் ஒக்கும் என்றும் ஸாதித்தார்.
 •  ஆழ்வானின் ஶிஷ்யனான வீரஸுந்தர ப்ரம்மராயன் என்னும் சிற்றரசன் திருவரங்கத்தில் மதிள்  எழுப்ப ஆசைப்பட்டான். அவ்வாறு செய்கையில் பிள்ளைப் பிள்ளை ஆழ்வானின் திருமாளிகைக்கு இடையூறு செய்ய தீர்மானித்தான். பட்டர் அறிவுறுத்தியும் மன்னன் கேட்காததையடுத்து பட்டர் திருவரங்கத்தை விடுத்துத்  திருக்கோட்டியூருக்குச்  சென்று விட்டார். அரங்கனின் பிரிவைத்  தாள முடியாததால் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தார். பின் மன்னன் இறந்துவிடுகிறான். இதனையடுத்து பட்டர் திருவரங்கத்திற்குத் திரும்பிவிட்டார். திரும்பும் வழியிலே பட்டர் ஸாதித்ததே ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் ஆகும் .
 • ஒருமுறை சில வித்வான்களை பட்டர் வாதத்தில் தோற்கடித்தார். பட்டரை ஏமாற்ற நினைத்த அவர்கள் குடத்தில் ஓர் பாம்பை வைத்து மூடிவிட்டு இதில் என்ன இருக்கிறது என்று பட்டரிடம் கேட்டனர். அதில் பாம்பிருப்பதை அறிந்த பட்டர் “திருவெண்கொற்ற குடை இருக்கிறது ”  என்று பதில் ஸாதித்தார். இதைக் கேட்டு அவ்வித்வான்கள் குழப்பம் அடைய, பொய்கை ஆழ்வார்சென்றால் குடையாம்”  பாசுரத்தில் சாதிப்பதற்கு ஒக்கும் வண்ணம் பாம்பைக் குடை என்று கூறலாம் என்று ஸமாதானம் ஸாதித்தார்.

இவற்றைப் போலவே எத்தனை முறை அனுபவித்தாலும் ஆராவமுதமாய் விளங்கும் பட்டரின் வைபவங்கள் பல உள்ளன.

ஸ்ரீரங்கநாயகியார் மீது பெரும் பற்றுடையவராய் பட்டர் எழுந்தருளியிருந்தார். நம்பெருமாளைக் காட்டிலும் நாச்சியாரிடத்திலேயே பெரும் அன்புடையவராய் பட்டர் எழுந்தருளி இருந்தார். ஒரு முறை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தைச் சாற்றிக்கொண்டு பட்டரிடம் தான் ரங்கநாயகியைப் போல் இருக்கிறாரா என்று கேட்க பட்டர் எல்லாம் பொருத்தமாக உள்ளன ஆயினும் திருக்கண்களில் தாயார் வெளிப்படுத்தும் கருணையை நும்மிடத்தே காண இயலவில்லை என்று ஸாதித்தார்.    ஸீதா பிராட்டியையும் சக்ரவர்த்தி திருமகனாரையும் கண்டு அனுமன், ஸீதையையே அஸிதேக்ஷணை (அதாவது அழகிய கண்கள் உடையவள்), ராமனைக்காட்டிலும் கண்களில் அழகு பெற்றவள், என்று கொண்டாடியதை  இது நமக்கு நினைவூட்டுகிறது. ஸ்ரீரங்கநாயகி மீது பட்டர் கொண்டுள்ள பக்தியின் பெருக்கே ஸ்ரீகுணரத்ன கோஶம் ஆகும் .

பட்டர் புரிதலுக்குக் கடினமாய் இருந்த பல பாசுரங்களுக்கு மிக ஆச்சர்யமான விளக்கங்களை அருளக்கூடியவர் . அவற்றில் இரண்டை நாம் இப்போது காண்போம் .

 • பெரிய திருமொழியில் 7.1.1 கறவா மடநாகு பாசுரத்திற்கு விளக்கம் ஸாதிக்கையில் பிள்ளை அமுதனார் ஆழ்வார் பசுமாடு என்றும் எம்பெருமான் கன்று என்றும் ஸாதித்தார். அதாவது தாய்ப்பசு கன்றுக்கு ஏங்குவது போலவே ஆழ்வார் பெருமாளுக்கு ஏங்குகிறார் என்பதே இதன் பொருள். பட்டர் இதைச் சற்றே  மாற்றி விளக்கினார். “கறவா மட நாகு தன் கன்று “ என்று சேர்த்தே கொள்ள வேண்டும் என்று பட்டர் ஸாதித்தார் . அதாவது “எப்படி கன்றாகப்பட்டது தாய் பசுவிற்கு ஏங்குமோ அதே போல ஆழ்வார் பெருமாளுக்கு ஏங்குகிறார் ” என்பதேயாம். பூர்வர்களும் பட்டரின் இந்த விளக்கத்தையே மிகவும் உகந்துள்ளனர் .
 •  பெரிய திருமொழியில் 4.6.6 பாசுரத்தின் வ்யாக்யானத்தில், ஆப்பான் திருவழுந்தூர் அரையர் மற்றுமான ஸ்ரீவைஷ்ணவர்கள் இப்பாசுரத்தின் அர்த்தத்தை விளக்குமாறு பட்டரிடம் ப்ரார்த்தித்ததாக வருகிறது . பட்டரும் அவர்களை பாசுரத்தை அனுசந்திக்கச்செய்து சடக்கென்று ஆழ்வார் இராவணனின் தோரணையில் ஆழ்வார் இந்த பாசுரத்தைச் ஸாதிப்பதாக ஸாதித்தார். இராவணன் மிகவும் செருக்கோடே “மூன்று உலகங்களையும் வென்ற என்னிடம் ஒரு ஸாதாரண மானுடன் தன்னைப் பெரும் வீரனென எண்ணி போர் இடுகிறான் ” என்று நினைத்து இறுதியில் தோல்வியுற்று மாண்டதாக, பட்டர்  விளக்கமருளினார் .

திருநாராயனபுரத்திற்குச் சென்று வேதாந்தியிடம் (நஞ்சீயர்) வாதம் செய்து அவரை திருத்திப்பணிகொண்டு எம்பெருமானார் தரிசனத்திற்கு கொண்டு சேர்த்தது பட்டரின் பெருமைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். நஞ்சீயரை திருத்திப்பணி கொள்ளவேண்டும் என்பது எம்பெருமானாரின் திவ்ய ஆணை ஆகும் . மாதவாசார்யரிடம் (நஞ்சீயரின் பூர்வாஶ்ரமப் பெயர்) சித்தாந்த வாதம் நடத்த பட்டர் வாத்ய  கோஷங்கள் முழங்க, பெரிய ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியுடன் திருநாராயணபுரம் வரை பல்லக்கில் எழுந்தருளினார். செல்லும் வழியில், இவ்வாறாகப்  பெருத்த விருதுகளோடே சென்றால், மாதவாசாரியாரின் ஶிஷ்யர்கள் வழியிலே தடுத்து வாதத்திற்கு அழைத்து, மாதவாசாரியாருடனான சந்திப்பை தாமதிப்பர் , என்று அறிந்த பட்டர் , மிக எளிமையான ஆடைகளை தரித்துக்கொண்டு மாதவாச்சாரியாரின் ததியாராதனக் கூடத்திற்குச் சென்றார். அங்கே பட்டர் உணவருந்தாமலேயே உட்கார்ந்திருப்பதைக் கண்ட மாதவாசாரியார் பட்டரிடம் வந்து உணவருந்தாமைக்கு காரணமும், பட்டர்க்கு  வேண்டியது யாதென்றும் கேட்டார். அதற்கு பட்டர் , தான் மாதவாசாரியாரோடே வாதம் செய்ய விரும்புவதாகக் கூறினார். பட்டரைப் பற்றி முன்பே கேட்டிருந்த மாதவாசாரியார், பட்டரை  விடுத்தால் தம்மை வாதத்திற்கு அழைக்கும் தைர்யம் வேறொருவருக்கு வராது என்பதால், வந்தவர் பட்டர் என்று உணர்ந்து , பட்டரோடு வாதத்தில் ஈடு பட்டார். எம்பெருமானின் பரத்துவத்தை திருநெடுந்தாண்டகத்தை வைத்து ஸ்தாபித்த பட்டர், பின் ஶாஸ்திரங்களை கொண்டு அனைத்து அர்த்தங்களையும் அளித்தார். தனது தோல்வியை ஒத்துக்கொண்ட மாதவாசாரியார் பட்டரின் திருவடித் தாமரைகளில் தஞ்சம் அடைந்து தன்னை ஶிஷ்யனாய் ஏற்கவேண்டும் என்று பிரார்த்தித்தார். பட்டர் தானும் மாதவாசாரியாரை திருத்திப்பணிகொண்டு அவருக்கு அருளிச்செயல்களையும் ஸம்பிரதாய அர்த்தங்களையும் உபதேசித்து வந்தார். பின்னர், பட்டர் மாதவாசாரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு அத்யயனோத்ஸவம் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னர் திருவரங்கம் சென்று சேர்ந்தார். பட்டரை  வரவேற்கத் திருவரங்கத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பட்டர் பெரியபெருமாளிடத்தே நடந்த வ்ருதாந்தங்களையும் தாம் வாதப்போரில் வென்றதையும் ஸாதித்தார். பெரியபெருமாள் திருவுள்ளம் குளிர்ந்து பட்டரிடம் திருநெடுந்தாண்டகம்   ஸேவிக்க உத்தரவிட்டார். இதை முன்னிட்டு, அன்று தொட்டு இது நாள் வரை வேறெங்கும் இல்லாது  திருவரங்கத்தில் மட்டும் அத்யயனோத்ஸவம் திருநெடுந்தாண்டக அனுஸந்தானத்தோடே தொடங்குகிறது.

பட்டரே ரஹஸ்ய த்ரயத்தை முதலில் க்ரந்தப்படுத்தியவர். பட்டர் ஸாதித்ததான அஷ்டஶ்லோகி திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகங்களை, எட்டே ஶ்லோகங்களுக்குள் விளக்கும் ஒரு அறிய அருளிச்செயல் ஆகும். ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்தில் மிகவும் கடினமான ஶாஸ்த்ரார்த்தங்களை மிக எளிமையான ஶ்லோகங்களைக்கொண்டு விளக்கியுள்ளார். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கான தனது வ்யாக்யானத்தில், ஒவ்வொரு  திருநாமமும் பகவானின் ஒவ்வொரு குணத்தை எடுத்துக்காட்டுகின்றன என்று பட்டர் காட்டுகிறார். ஸ்ரீரங்கநாயகியார் மீது பட்டர் ஸாதித்ததான ஸ்ரீ குணரத்ன கோஶம் மற்றோரொப்பில்லாதது.

சுமார் நூறாண்டுகள் அல்லது அதற்கு மேலாக எழுந்தருளியிருந்த பூர்வாசார்யர்களைக் காட்டிலும் பட்டர்  மிக குறுகியகாலமே எழுந்தருளி இருந்தார். பட்டர் இன்னும் சில காலங்கள் எழுந்தருளி இருந்திருந்தால் இங்கிருந்து பரமபதத்திற்குப் படிக்கட்டுகளைக் கட்டி இருப்பார் என்றே கூறுவர் நல்லோர். பட்டர் நஞ்சீயரை திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப்பணித்தார் . மேலும் நஞ்சீயரை தர்ஶன ப்ரவர்த்தகராகவும் நியமித்தார்.

ஒரு முறை பட்டர் பெரியபெருமாள் திருமுன்பே சில பாசுரங்களையும் அதன் அர்த்தங்களையும் ஸாதிக்க , பெரிய பெருமாள் திருவுள்ளம் உகந்து “உமக்கு மோக்ஷம் அளித்தோம் ”  என்று ஸாதிக்க பட்டரும் பேரானந்தத்தோடே “மகா பிரஸாதம்! ஆயினும் அங்கு நமக்கு நம்பெருமாளை காண இயலவில்லை எனில் , பரமபதத்திலிருந்து ஓட்டை போட்டு குதித்து திருவரங்கத்திற்கு வந்து விடுவோம்” என்று ஸாதித்தார். பட்டர் இதனை தனது தாயாரிடம் சென்று கூற, அவர் மிகவும் ஆனந்தம் அடைந்தார் . (இதுவே பூர்வர்களின் நிஷ்டையாகும். அவர்கள் வந்த காரியத்தை நன்கு அறிந்திருந்தனர்). இச்செய்தியை செவியுற்ற சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பட்டரின் பிரிவை எண்ணித் தாளாது பட்டரிடம் சென்று , “பெரியபெருமாள் ஆனந்தத்தில் அளித்தாராகில் நீர் ஏன்  அதைப் பெற்றுக்கொண்டீர்? உம்மைப் பிரிந்த நாங்கள் எவ்வாறு இங்கு இருப்போம்? உம்மால் திருத்திப்பணி கொள்ளவேண்டியவர் பலரிருக்க இவ்வாறு செய்தருளியதே?” என்று கேட்டனர். அதற்கு  பட்டர் , “எவ்வாறாக உயர்வகை நெய்யாகப்பட்டது நாயின் வயிற்றில் இருப்புக்கொள்ளாதோ நாமும் அவ்வாறே இருள்தருமாஞாலத்தில் இருப்புக்கொள்ளோம்” என்று ஸாதித்தார்.

அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் அழைத்து மிகச் சிறந்த விதத்தில் பட்டர் தனது திருமாளிகையில் ததியாராதனம் செய்தார். பிறகு பத்மாஸனத்திலிருந்து திருநெடுந்தாண்டகத்தை ஸாதித்துக்கொண்டே புன்முறுவல் தரித்துக்கொண்டு, திருநாட்டுக்கு எழுந்தருளினார். அனைவரும் பட்டரின் பிரிவை  தாங்கமாளாது கண்ணீர் வடித்தாலும் சரம கைங்கர்யத்தை செவ்வனே செய்துக்கொண்டிருந்தனர். ஆண்டாள் அம்மங்காரும் பட்டரின் திருமேனியை ஆரத்தழுவி விடையளித்தார்.

கல்லையும் உருக்கும் பிரபாவம் கொண்டது பட்டரின் வைபவம். எம்பெருமானாரிடத்திலும் ஆசார்யனிடத்திலும் மாறாத பற்று ஏற்பட நாமும் பட்டரின் திருவடித்தாமரைகளை சரணடைவோம் .

பட்டர் திருவடிகளே சரணம்

பட்டரின் தனியன்:

ஸ்ரீ பராஶர பட்டார்ய: ஸ்ரீரங்கேஶ புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ஶ்ரேயஸே மேஸ்து பூயஸே ||

பட்டரின் வாழி திருநாமம்:

தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே

அடியேன் ராமானுஜ தாஸன்
எச்சூர் ஸ்ரீநிவாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/09/11/parasara-bhattar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

எம்பார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/07/22/emperumanar/) எம்பெருமானரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் விஷயமாகக் காண்போம் .

எம்பார் , மதுரமங்கலம்

திருநக்ஷத்ரம்: தை புனர்பூசம் 

திரு அவதாரத்தலம்: மதுரமங்கலம்

ஆசார்யன்: பெரிய திருமலை நம்பிகள்

ஶிஷ்யர்கள்: பராசர பட்டர் , வேத வ்யாஶ  பட்டர்

திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம்

அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி , எம்பெருமானார் வடிவழகு பாசுரம்

மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர் ஸ்ரீதேவி அம்மாள் தம்பதியினருக்கு திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் கோவிந்தப்பெருமாள். இவர் கோவிந்த  தாஸர், கோவிந்த  பட்டர்  மற்றும் ராமானுஜ பதச்சாயையார் என்றும் அழைக்கப் படுகிறார். நாளடைவில் இவர் எம்பார் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார். இவர் எம்பெருமானாரின் சிரத்தியார் (சிறிய தாயார்) திருமகனாவார். இவர்  யாதவப்ரகாசரின் வாரணாஸி யாத்திரையில் இளையாழ்வாரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பதில் முக்கியமான பங்கு வகித்தார். எம்பெருமானாரைக் காப்பாற்றிய பின்பு, இவர் தம் குருவான யாதவப்ரகாஶருடன் வாரணாசி யாத்திரையைத் தொடர்ந்தார் . இந்த யாத்திரையில் இவர் பரமசிவனாரின் பக்தராகி காளஹஸ்தியோடே இருந்து விட்டார்.

இவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்ட எம்பெருமானார், அப்பணியை செவ்வனே செய்து முடிக்கப் பெரிய திருமலை நம்பிகளை ப்ரார்த்தித்தார். பெரிய திருமலை நம்பிகளும் உடனே உகந்து , காளஹஸ்திக்குச் சென்று, கோவிந்தப்பெருமாள் நந்தவனத்திற்குப் பூக்களைப் பறிக்க வரும் வேளையிலே , “தேவன் எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே ” (அதாவது ஸ்ரீமன் நாராயணனே பூக்களைக்கொண்டு ஆராதிக்கத்தக்கவன் தவிர வேறாரும் அல்லன்) என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தை அனுசந்தித்தார் . இதை கேட்ட கணமே, கோவிந்தப்பெருமாள்  தமது தவறை உணர்ந்து , பரமசிவனாரிடத்தே தாம் வைத்த பற்றையும் துறந்து, பெரிய திருமலை நம்பிகளை சரண் புகுந்தார். பெரிய திருமலை நம்பிகள் தானும் இவருக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்து வைத்து இவருக்கு அர்த்தங்களை உபதேசித்தார். கோவிந்தப்பெருமாளும் தேவுமற்றறியாதவராய் பெரிய திருமலை நம்பிகள் திருவடிகளே எல்லாமாகக் கொண்டு , பெரிய திருமலை நம்பிகளிடத்தே இருந்து வந்தார் .

ஸ்ரீமத் ராமாயணத்தை பெரிய நம்பிகளிடமிருந்து கற்பதற்காக எம்பெருமானார் திருவேங்கடம் (கீழ் திருப்பதி ) அடைகிறார் . அந்த சமயத்தில் நடந்த சிலவற்றை கொண்டு நாம் எம்பாரின் வைபவங்களை அறியலாம். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம்

 • ஒரு சமயம், கோவிந்தப்பெருமாள் தனது ஆசார்யனான பெரிய திருமலை நம்பிகளுக்குப் படுக்கை தயாரித்து அதில் தான் முதலில் படுத்துப் பார்க்கிறார். இதைக் கண்ட எம்பெருமானார் இதைப்  பெரிய திருமலை நம்பிகளிடத்தே தெரிவிக்க , அவரும் இது பற்றி கோவிந்தப்பெருமாளிடம் விசாரிக்கிறார். அதற்கு கோவிந்தப்பெருமாள், இவ்வாறு செய்வதால் தமக்கு நரகம் வாய்க்கும் என்றாலும் ,ஆசார்யன் படுப்பதற்குப் படுக்கை பாங்காக இருக்கிறதா என்பதை அறியவே தாம் இவ்வாறு செய்வதால், தமக்கு நரகம் வாய்க்கும் என்ற கவலை இல்லை என்றும்  ஆசார்யன் திருமேனியை பற்றியே தாம் கவலை கொள்வதாகவும் சாதித்தார். மணவாளமாமுநிகள்  தனது உபதேச ரத்தினமாலையில் “தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன் நோக்குமவன் ” என்று ஸாதிப்பதையும், எம்பாரின் இந்த வைபவத்தையும் நாம் சேர்த்து அனுபவிக்கலாமே !
 • ஒரு முறை கோவிந்தப்பெருமாள் ஒரு பாம்பின் வாயில் ஏதோ செய்து விட்டுத்  தேக சுத்திக்காக குளித்து விட்டு வருவதை கண்ட எம்பெருமானார், இதை பற்றி கோவிந்தப்பெருமாளிடம் விசாரிக்க , கோவிந்தப்பெருமாள் தாமும், அந்தப்  பாம்பின் வாயில் முள் சிக்கி இருந்ததையும் அதை தாம் நீக்கியதையும் கூறினார். இதை கேட்ட எம்பெருமானார் , இவரின் ஜீவ காருண்யத்தை எண்ணிப் பூரித்தார்.
 • திருவேங்கடத்திலிருந்து எம்பெருமானார் கிளம்பும் தருவாயில், பெரிய நம்பிகள் எம்பெருமானார்க்கு தாம் ஏதேனும்  தர விழைவதாகக் கூறினார். எம்பெருமானார் தானும் , கோவிந்தப்பெருமாளைக் கேட்டார். நம்பிகளும் மகிழ்ந்து, கோவிந்தப் பெருமாளிடம் எம்பெருமானாரைத் தாமாக கொள்ளும் படிக்கு அறிவுறுத்தி அனுப்பிவைக்கிறார். கோவிந்தப்பெருமாள் எம்பெருமானாரோடே காஞ்சி வரை வந்து, ஆசார்யனைப் பிரிந்த துயர் தாளாது திருமேனி வெளுத்திருந்தார். இதைக் கண்ட எம்பெருமானார், இவரைப் பெரிய திருமலை நம்பிகளை ஸேவிக்க அனுப்ப, வந்த கோவிந்தப்பெருமாளுக்கு  “விற்ற பசுவிற்கு புல்  இடுவாருண்டோ ” என்று திருமுகம் காட்டாமலேயே பெரிய திருமலை நம்பிகள் அனுப்பி  விட்டார். தனது ஆசார்யனின் திருவுள்ளம் அறிந்த கோவிந்தப்பெருமாள் , நம்பிகளின் திருமாளிகை வாசலிலிருந்தே தெண்டன் ஸமர்பித்து விட்டு எம்பெருமானாரிடம் திரும்பினார்.

எம்பெருமானார் திருவரங்கத்திற்குத்  திரும்பிய பின் , கோவிந்தப்பெருமாளின் திருத்தாயார் வேண்ட, எம்பெருமானார் கோவிந்தப்பெருமாளின் திருமணத்தைச் செய்துவைக்கிறார் . கோவிந்தப்பெருமாள் தனது இல்லற வாழ்கையில் ஈடு படாதிருந்தார். எம்பெருமானார் இவரை ஏகாந்தத்தில் ஈடுபடும்படிக்கு அறிவுறுத்த, இவர் எம்பெருமானாரிடத்தே வந்து தாம் எல்லா இடங்களிலும் பெருமாளைப் காண்பதால் தன்னால் ஏகாந்தத்தில் இருத்தல் இயலவில்லை என்று கூறினார். இதைக் கேட்ட எம்பெருமானார் இவரின் நிலையை அறிந்து இவர்க்குத்  துறவறம் அளித்து , எம்பார் என்னும் திருநாமத்தைச் சாற்றித் தம்மோடே இருக்கும் படிக்கு ஆணையிட்டார்.

ஒரு முறை ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பாரின் ஞானம் பக்தி வைராக்கியம் உள்ளிட்ட குணங்களைக் கொண்டாட, எம்பாரும் “ஒக்கும்” என்று ஆமோதித்தார். இதைக் கண்ட எம்பெருமானார் இவரை அழைத்து “நைச்யானுஸந்தானம் இன்றி இவற்றை ஏற்பது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் அல்லவே? ” என்று கேட்க, எம்பார் அதற்கு, கீழ் நிலையில் இருந்த தம்மைத் திருத்திப்பணிகொண்டது தேவரீர் ஆகையால் இப்பெருமைகள் யாவும் தேவரீரையே சாரும் என்று சாதித்தார். இதை எம்பெருமானாரும் ஆமோதித்து எம்பாரின் ஆசார்ய பக்தியைக் கொண்டாடினார் .

கூரத்தாழ்வானின் மனைவியாரான ஆண்டாள், பெரிய பெருமாள் கிருபையோடு அனுப்பிவைத்த பிரசாதத்தால் , இரண்டு திருக்குமாரர்களை ஈன்றெடுக்க , எம்பெருமானார் எம்பாரோடே  அக்குழந்தைகளின் நாம கரணத்திற்கு (பெயர் இடும் வைபவத்திற்கு) கூரேஶரின் திருமாளிகைக்கு வருகை தந்தார். எம்பெருமானார், குழந்தைகளை எடுத்துகொண்டு வரும்படிக்கு எம்பாரைப் பணிக்க , எம்பார் குழந்தைகளை எடுத்து வரும்போது அவர்களின் ரக்ஷைக்கு வேண்டி த்வயானுஸந்தானம் செய்தார். குழந்தைகளைக் கண்டவுடன், அவர்கள் எம்பாரிடமிருந்து த்வய மஹாமந்திரத்தை உபதேசிக்க பெற்றார்கள், என்று உணர்ந்த எம்பெருமானார் , எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யனாய் இருக்கும் படி நியமித்தார். இதனைத் தொடர்ந்து பராஶர பாட்டரும் வேத  வ்யாஶ   பட்டரும்  எம்பாரின் ஶிஷ்யர்கள் ஆனார்கள்.

மண்ணுலக விஷயங்களில் எப்போதும்  வெறுப்பு கொண்டிருந்த எம்பார் பகவத் விஷயங்களில் பெரும் ஈடுபாட்டை கொண்டிருந்தார். பகவத் விஷயத்தை கொண்டாடி மகிழும் ரஸிகராகவும் எம்பார் எழுந்தருளி இருந்தார் . எம்பாரின் பகவத் அனுபவங்களைப் பற்றி வியாக்யானங்களில் பல இடங்களில் கோடிட்டு காட்டப் பட்டுள்ளது . அவற்றில் சிலவற்றை நாம் இப்போது கண்டு அனுபவிப்போம்:

 • பெரியாழ்வார் திருமொழின் இறுதிப் பாசுரத்தில் , “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே ” என்பதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்த்தம் ஸாதிக்கும்படி கேட்க , அதற்கு எம்பார் இந்தப் பாசுரத்திற்கு தான் எம்பெருமானாரிடம் அர்த்தம் கேட்டதில்லை என்று ஸாதிக்கிறார். ஆயினும் எம்பெருமானாரின் பாதுகைகளைத்  தமது திருமுடி மேல் வைத்து ஒரு கணம் த்யானித்த பின் அக்கணமே எம்பெருமானார் இதற்கான விளக்கத்தை தமக்கு உணர்த்தியதாகவும், இது “பாடவல்லார் – சாயை போல – தாமும் அணுக்கர்களே ” , அதாவது எவர் ஒருவர் இப்பாசுரங்களைப் பாடுகிறார்களோ அவர் எம்பெருமானின் நிழல் போன்று அவரை விட்டுப் பிரியாமல் இருப்பார், என்று புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்றும் ஸாதித்தார் .
 • கண்ணன் எவ்வாறு அனைவரையும் அச்சுறுத்துகிறான் என்று விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் 2.1 பதிகத்திற்கு அபிநயம் காட்டுகையில் உய்ந்தபிள்ளை அரையர் , கண்ணன் தன்  திருக்கண்களை அச்சுறுத்தும் விதத்தில் வைத்து கோப குமார்களை (ஆயர் பிள்ளைகளை) அச்சுறுத்துகிறார் என்று காட்டுகிறார். இதைப் பின்னே இருந்து கவனித்து வந்த எம்பார் , திருவாழியாழ்வானையும் திருச்சங்காழ்வானையும் தோளில் வைத்துக் காட்டி கண்ணன் ஆயர் சிறுவர்களை அச்சுறுத்துகிறார் என்று காட்ட, அதைப் புரிந்துகொண்ட அரையர் எம்பார் காட்டிய படி அடுத்த முறை அபிநயம் காட்டினார். இதை கண்ட எம்பெருமானார் , எம்பாராலேயே இவ்வாறாக அர்த்தங்கள் தர இயலும் என்பதால் , ” கோவிந்தப்பெருமாளே இருந்தீரோ?”  என்று கேட்டார்.
 • கண்ணனிடத்தே நம்மாழ்வார் , திருவாய்மொழியில் “மின்னிடை மடவார்கள் ” (6.2) பதிகத்தில், அனுபவித்த விஶ்லேஷத்தை , ஒரு  ஸந்யாஸியாய் இருந்தும் எம்பாரால் உணர முடிந்தது . இப்பதிகத்திற்கு அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆச்சர்யித்து  உகக்கும் வண்ணம் எம்பார் விளக்கமும் ஸாதித்தார். இது “பரமாத்மநி ரக்த: அபரமாத்மநி  நிரக்த: ” என்னும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதாவது “எம்பெருமான் விஷயத்தில் பெருத்த ஈடுபாடோடே இருத்தல் , எம்பெருமானை தவிர்த்த விஷயங்களில் ஈடுபாடின்றி இருத்தல் ” . 
 • திருவாய்மொழியின் 10.8.3 பாசுரத்தின் வ்யாக்யானத்தில் மிக ஆச்சர்யமான நிகழ்வு காட்டப்படுகிறது. திருவாய்மொழியில் ஆழ்ந்து மடத்தில் நடந்து கொண்டிருக்கையில் எம்பெருமானார் திடீரென்று திரும்பி பார்க்கிறார் . இதைக்  கதவுகளின் பின்நின்று கண்ட எம்பார் , இப்பாசுரத்தில் “மடித்தேன்” என்பதை பற்றி எம்பெருமானார் சிந்தித்து கொண்டிருக்கிறாரோ என்று கேட்க எம்பெருமானாரும் அதை ஆமோதித்தார் . எம்பெருமானாரின் செய்கைகளைக் கொண்டே அவரின் திருவுள்ளத்தை அறியக்கூடியவர் எம்பார் . 

தனது சரம தசையில் எம்பார் பட்டரை  அழைத்து, சச்சம்பிரதாயத்தைத் திருவரங்கத்தே இருந்து  நிர்வகித்து வரும்படியும், எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து வரும்படியும்  உபதேஶிக்கிறார் . எம்பெருமானார் த்யானத்தில் ஆழ்ந்து தமது சரம திருமேனியைத் துறந்து, எம்பார், நித்ய விபூதியில் எம்பெருமானாரோடே இருக்கத் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

நாமும் எம்பார் திருவடித்தாமரைகளிலே “நம் ஆசார்யனிடத்திலும் எம்பெருமானாரிடத்திலும் பற்றுடையோர் ஆவோம்” என்று பிரார்த்திப்போம்.

எம்பாரின் தனியன்:
ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ |
ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||

 

எம்பாரின் வாழி திருநாமம்:

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே

நமது அடுத்த பதிவில் நம்பெருமாளின் அபிமான திருக்குமாரரான  பட்டரின் வைபவத்தை காண்போம்.

அடியேன் ராமானுஜ தாசன்
எச்சூர் ஸ்ரீநிவாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/07/embar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

எம்பெருமானார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/07/14/periya-nambi/) பெரிய நம்பியை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.

தானான திருமேனி (ஸ்ரீரங்கம்) தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்) தமருகந்த திருமேனி (திருநாரயணபுரம்)

திருநக்ஷத்ரம்: சித்திரை, திருவாதிரை

அவதார ஸ்தலம்: ஸ்ரீபெரும்பூதூர்

ஆசார்யன்: பெரிய நம்பி

ஶிஷ்யர்கள்: கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், அனந்தாழ்வான், 74 ஸிம்ஹாஶனாதிபதிகள், 700 ஸந்யாசிகள், மற்றும் பல ஆயிரம் ஶிஷ்யர்கள் -12000 ஸ்ரீவைஷ்ணவர்கள்,  மற்றும் பல ஆயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் இவருக்கு ஶிஷ்யர்களாக இருந்தார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

எம்பெருமானார் அருளிச்செய்தவை: நவரத்தினங்களாகக் கருதப்பட்ட ஒன்பது (9) க்ரந்தங்களை அருளிச்செய்தார். அவை ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதார்த்த ஸங்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், ஶரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம்.

இளையாழ்வார் கேஶவ தீக்ஷிதர் மற்றும் காந்திமதி அம்மங்காருக்கு, ஆதிஶேஷனுடைய அபராவதாரமாக ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்தார். இவருக்குப் பல திருநாமங்கள் உண்டு. மேலே அவருடைய திருநாமத்தையும், யார் அதைக் கொடுத்தார்கள் என்றும் பார்ப்போம்.

 • இளையாழ்வார் என்ற திருநாமத்தை அவருடைய பெற்றோர்கள் சார்பில் பெரிய திருமலை நம்பி சூட்டினார்.
 • ஸ்ரீராமானுஜ என்ற திருநாமத்தை பஞ்ச  ஸம்ஸ்காரத்தின் போது பெரிய நம்பி சூட்டினார்.
 • யதிராஜ மற்றும் ராமானுஜ முனி என்ற திருநாமத்தை ஸன்யாஸாஶ்ரம ஸ்வீகாரத்தின் போது தேவப்பெருமாள் சூட்டினார்.
 • உடையவர் என்ற திருநாமத்தை நம்பெருமாள் சூட்டினார்.
 • லக்ஷ்மண முனி என்ற திருநாமத்தை திருவரங்கப் பெருமாள் அரையர் சூட்டினார்.
 • திருக்கோஷ்டியூரில் எம்பெருமானார் சரமஶ்லோக அர்த்தத்தை ஆசையுடையோர்க்கெல்லாம் கூறியபொழுது, திருக்கோஷ்டியூர் நம்பி “எம்பெருமானார்” என்ற திருநாமத்தை சூட்டினார்.
 • ஶடகோபன் பொன்னடி என்ற திருநாமத்தை திருமாலை ஆண்டான் சூட்டினார்.
 • எம்பெருமானார் 100 தடா வெண்ணை மற்றும் 100 தடா அக்கார அடிசில் திருமாலிருஞ்சோலை அழகருக்கு சமர்பித்தவுடன், “கோயில் அண்ணன்” என்ற திருநாமத்தை ஆண்டாள் சூட்டினாள்.
 • ஸ்ரீ பாஷ்யகாரர் என்ற திருநாமத்தை ஸரஸ்வதி காஷ்மீரில் சூட்டினாள்.
 • பூதபுரீஶர் என்ற திருநாமத்தை ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியிருக்கும் ஆதி கேஶவ பெருமாள் சூட்டினார்.
 • தேஶிகேந்த்திரர் என்ற திருநாமத்தை திருவேங்கடமுடையான் சூட்டினார்.

சுருக்கமான வாழ்க்கை வரலாறு

 • திருவல்லிக்கேணி பார்த்தஸாரதி எம்பெருமான் பேரருளினால், அவருடைய அம்ஶாவதாரமாக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.

உபய நாச்சிமர்களுடன் பார்த்தசாரதி மற்றும் உடையவர் – திருவல்லிக்கேணி

 • தஞ்சம்மாள் (ரக்ஷகாம்பாள்) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
 • ஸாமான்ய ஶாஸ்திரம் மற்றும் பூர்வ பக்ஷம் காஞ்சிபுரத்திற்குச் சென்று யாதவ ப்ரகாஶரிடம் கற்றுக்கொண்டார்.
 • யாதவ ப்ரகாஶர் தவறாக ஶாஸ்திர வ்யாக்யனங்களை கூறும்பொழுது அதை இளையாழ்வார் திருத்துவார்.
 • வாரணாஸிக்கு யாத்திரை செல்லும்பொழுது, யாதவ ப்ரகாஶருடைய சீடர்கள் சிலர் இளையாழ்வரை கொல்லவேண்டும் என்று திட்டம் செய்தனர். கோவிந்தர் (எதிர்காலத்தில் எம்பார்), இளையாழ்வருடைய திருத்தம்பியார், இந்தத் திட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று இளையாழ்வரை காஞ்சிபுரம் வழியில் அனுப்பிவைத்தார். இளையாழ்வர் காட்டில் வழி தெரியாமல் இருக்கும்பொழுது, தேவப்பெருமாளும், பெருந்தேவித்தாயாரும் வேடன் வேடுவச்சி உருவத்தில் வந்து அவரைக் காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
 • அவர் காஞ்சிபுரம் வந்தவுடன், திருக்கச்சி நம்பியின் வழிகாட்டலின் படி தேவப்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்தார்.
 • ஆளவந்தாரை  ஸேவிப்பதற்காக இளையாழ்வார் பெரிய நம்பியுடன் ஸ்ரீரங்கம் வந்தார். ஆனால் ஆளவந்தாருடைய சரம திருமேனியை மட்டுமே அவரால் பார்க்கமுடிந்தது. அவர் ஆளவந்தாருடைய 3 ஆசைகளை நிறைவேற்றுவதாக ஶபதம் பூண்டார்.
 • இளையாழ்வார் திருக்கச்சி நம்பியை தனது ஆசார்யனாகக் கருதி அவரை பஞ்சஸம்ஸ்காரம் செய்யச் சொன்னார், ஆனால் திருக்கச்சி நம்பி ஶாஸ்திரத்தை ப்ரமாணமாக காட்டி மறுத்துவிட்டார். இளையாழ்வார் திருக்கச்சி நம்பியினுடைய ஶேஷ ப்ரஸாதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார், ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.
 • தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பி மூலம் ஆறு வார்த்தைகளை இளையாழ்வாருக்குக் கொடுத்தார்.
 • இளையாழ்வாரும் பெரிய நம்பியும் மதுராந்தகத்தில் சந்தித்தார்கள். பெரிய நம்பி அவருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்து, ராமானுஜன் என்ற தாஸ்ய நாமத்தையும் கொடுத்தார்.
 • பெரிய நம்பி ராமானுஜருடைய திருமாளிகையிலையே இருந்து அவருக்கு ஸம்ப்ரதாய அர்த்தங்களை கற்றுக்கொடுத்தார். ஒரு ஸமயத்தில் பெரிய நம்பி ஸ்ரீரங்கதிற்குத் திரும்பி விடுகிறார்.
 • ராமானுஜர் தேவப்பெருமாளிடமிருந்து ஸன்யாஸாஶ்ரமத்தை ஏற்றுக்கொண்டார்.
 • ஆழ்வானும், ஆண்டானும் ராமானுஜருக்கு ஶிஷ்யர்களானார்கள்.
 • யாதவ ப்ரகாஶர் ராமானுஜருக்கு ஶிஷ்யரானார். அவருக்கு கோவிந்த ஜீயர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. அவர் “யதி தர்ம ஸமுச்சயம்” என்ற க்ரந்தத்தை இயற்றினார். அந்த க்ரந்தம் தான் ஸ்ரீவைஷ்ணவ யதிகளுக்கு வழிகாட்டுதலாக உள்ளது.
 • பெரிய பெருமாள், திருவரங்கப் பெருமாள் அரையரை தேவப்பெருமாளிடம் அனுப்பி ராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வரச்சொன்னார். தேவப்பெருமாளும் அதற்கு இசைந்து ராமானுஜரை அனுப்பினார். பிறகு ராமானுஜரும் ஸ்ரீரங்கவாஸியானார்.
 • ராமானுஜர் பெரிய திருமலை நம்பி மூலம் கோவிந்த பட்டரை (எம்பார்) திருத்திப்பணிகொண்டு மீண்டும் ஸ்ரீவைஷ்ணவ தர்மத்திற்கு அழைத்து வந்தார்.
 • ராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சரம ஶ்லோகத்தினுடைய அர்த்தத்தை கற்றுக் கொள்வதற்காக திருக்கோஷ்டியுருக்குச் சென்றார். ஆசையுடையோர்க்கெல்லாம் சரம ஶ்லோகத்தினுடைய அர்த்தத்தைக் கற்றுக்கொடுத்தார். அதனால் திருக்கோஷ்டியூர் நம்பி அவருக்கு எம்பெருமானார் என்ற திருநாமத்தை சூட்டினார்.
 • எம்பெருமானார் திருமாலை ஆண்டானிடம் திருவாய்மொழி காலக்ஷேபம் கேட்டார்.
 • எம்பெருமானார் பஞ்சமோபாய (ஆசார்ய) நிஷ்டையை திருவரங்க பெருமாள் அரையரிடம் கற்றுக்கொண்டார்.
 • எம்பெருமானார் தன்னுடைய பரம க்ருபையினால் தன்னை பின்பற்றுபவர்கள் உஜ்ஜீவனத்திற்காக, பங்குனி உத்திர நன்னாளன்று நம்பெருமாள் மற்றும் ஸ்ரீரங்க நாச்சியார் திருமுன்பு ஶரணாகதி அனுஷ்டித்தார்.
 • எம்பெருமானாருக்கு விஷம் கலந்த உணவை சிலர் கொடுத்தார்கள். இதைக் கேட்டவுடன் திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீரங்கத்திற்கு வந்து கிடாம்பி ஆச்சானை எம்பெருமானாருடைய பிக்ஷைக்காக நியமித்தார்.
 • யஞ்ய மூர்த்தியை எம்பெருமானார் வாதத்தில் வென்றார். யஞ்ய மூர்த்தி அருளாளப் பெருமாள் எம்பெருமானாராக மாறினார். அவருக்குத் தன் திருவாராதன எம்பெருமானுக்கு திருவாராதனம் பண்ணும் கைங்கர்யத்தை எம்பெருமானார் நியமித்தார்.
 • எம்பெருமானார் அனந்தாழ்வன் மற்றும் பலரை அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை ஆஶ்ரயிக்குமாறு கட்டளையிட்டார்.
 • எம்பெருமானார் அனந்தாழ்வனைத் திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யம் பண்ணுவதற்காகத் திருமலைக்கு அனுப்பினார்.
 • இறுதியில் புனித யாத்திரையாக எம்பெருமானார் திருமலைக்குச் சென்றார்.
 • திருவேங்கடமுடயான் விஷ்ணு மூர்த்தி (விக்ரஹம்) என்று எம்பெருமானார் நிரூபித்து, இல்லை என்று கூறிய சில குத்ருஷ்டிகளை வென்றார். திருவேங்கடமுடயானுக்கு ஆசார்யன் என்ற புகழையும் பெற்றார். அதனால் இன்றும் திருமலையில் ஞான முத்திரையில் ஸேவை சாதிக்கிறார்.

எம்பெருமானார் – திருமலை

 • திருமலையில் பெரிய திருமலை நம்பியிடம் ஸ்ரீ ராமாயண காலக்ஷேபம் கேட்டார்.
 • கோவிந்த பட்டருக்கு எம்பெருமானார் ஸன்யாஸாஶ்ரமத்தைக் கொடுத்து எம்பார் என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
 • போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை கொண்டு வருவதற்காக எம்பெருமானார் காஷ்மீருக்கு கூரத்தாழ்வானுடன் சென்றார். அந்த க்ரந்தம் கிடைத்தது – ஆனால் துஷ்ட பண்டிதர்கள் அவர்களுடைய வீரர்களை அனுப்பி அதை எம்பெருமானாரிடம் இருந்து பறித்துச் சென்றுவிட்டனர். அதை இழந்தபொழுது, அனைத்தையும் மனப்பாடம் செய்து விட்டதாக ஆழ்வான் கூறினார்.
 • ஆழ்வானுடைய உதவியினால் எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்து ஆளவந்தாருடைய முதல் ஆசையை நிறைவேற்றினார்.
 • திருக்குறுங்குடிக்கு எம்பெருமானார் எழுந்தருளினார். திருக்குறுங்குடி எம்பெருமான், எம்பெருமானாருக்கு ஶிஷ்யராகி “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்ற திருநாமத்தையும் பெற்றார்.

 • நம்பெருமாள் ப்ரஸாதத்தின் மூலம் ஆழ்வானும் ஆண்டாளும் 2 குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள். எம்பெருமானார் அந்த குழந்தைகளுக்கு பராஶர மற்றும் வேத வ்யாஶ என்ற திருநாமத்தைச் சூட்டி ஆளவந்தாருடைய இரண்டாவது ஆசையை நிறைவேற்றினார்.
 • எம்பாருடைய திருத்தம்பியார் சிறிய கோவிந்தப் பெருமாளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எம்பெருமானார் அந்த குழந்தைக்குப் “பராங்குஶ நம்பி” என்ற திருநாமத்தை இட்டு ஆளவந்தாருடைய மூன்றாவது ஆசையையும் நிறைவேற்றினார். எம்பெருமானார் திருக்குருகைப் பிரான் பிள்ளானை திருவாய்மொழி வ்யாக்யானம் இயற்றச்சொல்லி நியமித்து ஆளவந்தாருடைய மூன்றாவது ஆசையையும் நிறைவேற்றினார் என்றும் சிலர் சொல்வர்.
 • எம்பெருமானார் திருநாராயணபுரத்திற்குச் சென்று, ஒரு கோயிலை ஏற்படுத்தி பலரை நமது ஸம்ப்ரதாயத்தில் ஈடுபடுத்தினார்.
 • எம்பெருமானார் 1000 முகம் கொண்ட ஆதிஶேஷன் உருவத்தை எடுத்துக்கொண்டு, ஒரே ஸமயத்தில் 1000 சமண மதத்து அறிஞர்களை வென்றார்.
 • செல்வப்பிள்ளை உத்ஸவ மூர்த்தியை துலுக்க ராஜாவினுடைய பெண்ணிடமிருந்து எம்பெருமானார் மீட்டு, அந்த பெண்ணுடன் செல்வப்பிள்ளைக்கு திருமணம் செய்துவைத்தார்.
 • ஶைவ ராஜா இறந்தவுடன் எம்பெருமானார் ஸ்ரீரங்கத்திற்க்கு மீண்டும் எழுந்தருளினார். தேவப் பெருமாளை புகழ்ந்து கண்களை பெற்றுக்கொள்ளுமாறு ஆழ்வானுக்கு எம்பெருமானார் கட்டளையிட்டார்.
 • ஆண்டாளின் ஆசைக்கிணங்க எம்பெருமானார் திருமாலிருஞ்சோலைக்குச் சென்று அழகருக்கு 100 தடா அக்கார அடிசில் மற்றும் 100 தடா வெண்ணை சமர்ப்பித்தார்.
 • பிள்ளை உறங்கா வில்லி தாஸரின் மேன்மையை மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எம்பெருமானார் காட்டினார்.
 • இறுதியில் எம்பெருமானார் தன்னுடைய ஶிஷ்யர்களுக்குப் பல உபதேஶங்களைக் கூறினார். பராஶர பட்டரைத் தாமாகவே நினைத்துக் கொள்ளுமாறு கட்டளையிட்டார். நஞ்ஜீயரைத் திருத்திப்பணிகொண்டு நமது ஸம்ப்ரதாயத்திற்கு அழைத்துவருமாறு பராஶர பட்டருக்குக் கட்டளையிட்டார்.
 • பின்பு ஆளவந்தாருடைய திருமேனியை த்யாநித்துக் கொண்டே, எம்பெருமானார் இந்த லீலா விபூதியில் தன்னுடைய லீலையை முடித்துக்கோண்டு பரமதத்திற்கு எழுந்தருளித் தன்னுடைய லீலையை நித்ய விபூதியில் நடத்திக் கொண்டு போனார்.
 • எப்படி ஆழ்வாருடைய சரம திருமேனியை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதன் கோயிலில் பாதுகாக்கபட்டு வருகிறதோ, அதே போல் எம்பெருமானாருடைய சரம திருமேனியும் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதன் கோயிலில் (எம்பெருமானார் சன்னிதியில் மூலவர் திருமேனிக்குக் கீழ்) பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 • அவருடைய அனைத்துச் சரம கைங்கர்யங்களும் திருவரங்கநாதனுடைய ப்ரஹ்மோத்ஸவம் போல் மிக நன்றாக நடந்தது.

நமது ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானாருடைய தனித்துவம்

நமது ஆசார்ய ரத்ன ஹாரத்தில் எம்பெருமானார் நாயக மணியாக (நடு நாயகமாக) கருதப்படுகிறார். சரமோபாய நிர்ணயம் என்ற க்ரந்தத்தில் நாயனார் ஆச்சான் பிள்ளை (பெரியவாச்சான் பிள்ளையுடைய திருக்குமாரர்) எம்பெருமானாருடைய அனைத்து பெருமைகளையும் கூறியுள்ளார். மிகச் சிறப்பு வாய்ந்த இந்த க்ரந்தத்தில் உள்ள சில துளிகளை இப்பொழுது அனுபவிப்போம்.

 • பல ஆசார்யர்கள் (எம்பெருமானாருக்கு முன்னும் பின்னும்) இருந்தாலும், எம்பெருமானார் மட்டுமே அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் சரமோபாயம் என்பது நிரூபிக்கப்பட்டது.
 • நமது பூர்வாசார்யர்கள் தங்கள் தங்கள் ஆசார்யர்களைச் சார்ந்திருந்தாலும், அனைவருடைய ஆசார்யர்களும் “நாம் அனைவரும் எம்பெருமானாரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்” என்று காட்டினார்கள் –  இங்கே எம்பெருமானாருடைய உத்தாரகத்வமும் நிறுவப்பட்டது.
 • பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்ய ஸ்தானம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, எம்பெருமானார் மட்டுமே அந்த ஸ்தானத்திற்குத் தகுதியானவர்” என்று மாணிக்க மாலையில் கூறினார்.
 • எம்பெருமானாருக்கு முன்னால் உள்ள ஆசார்யர்கள் அனைவரும் அனுவ்ருத்தி ப்ரஸன்னாசார்யர்கள், அதாவது ஒருவன் தொடர்ந்து கைங்கர்யம் செய்துகொண்டே வரவேண்டும், அதில் ஆசார்யர்கள் மகிழ்ந்து மதிப்பு வாய்ந்த அறிவுரைகளை அவனுக்குக் கூறி ஶிஷ்யனாக ஏற்பார்கள். ஆனால் எம்பெருமானார், இந்த கலியுகத்தில் உள்ள கஷ்டங்களைப் பார்த்து, ஆசார்யர்கள் அனைவரும் க்ருபா மாத்ர ப்ரஸன்னாசார்யர்களாக இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்டினார், அதாவது ஆசார்யர்கள் க்ருபையினால் நிறைந்திருக்கவேண்டும், அதோடு ஶிஷ்யனுடைய இதயத்தில் இருக்கும் ஆசையை வைத்தே ஶிஷ்யனை ஏற்கவேண்டும் என்று காட்டினார்.
 • எப்படி பித்ரு லோகத்தில் உள்ள பித்ருக்கள் தங்களுடைய குடும்பத்தில் இருக்கும் ஸத்ஸந்தானத்தினால் (நல்ல குழந்தையினால்) பயனடைவார்களோ அதே போல் அவனுக்கு பின் உள்ள ஸந்ததியினரும் பயனடைவார்கள். ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் எம்பெருமானார் அவதரித்ததால் எம்பெருமானாருக்கு முன்னும் பின்னும் உள்ள ஆசார்யர்யர்கள் பயனடைவார்கள். எப்படி வஸுதேவன்/தேவகி, நந்தகோபன்/யஶோதா மற்றும் தஶரதன்/கௌஸல்யா கண்ணன் எம்பெருமான் மற்றும் பெருமாளைப் பெற்றெடுத்து, பேற்றைப் பெற்றார்களோ அதே போல் எம்பெருமானார் ப்ரபன்ன குலத்தில் அவதரித்ததால் எம்பெருமானாருக்கு முன்னால் உள்ள ஆசார்யர்கள் பேற்றைப் பெற்றார்கள்.
 • எம்பெருமானாருடைய பெருமையை/அவதாரத்தை “பொலிக பொலிக பொலிக” பதிகத்தில் நம்மாழ்வார் காட்டியுள்ளார். அதோடு பவிஷ்யதாசார்யன் (எம்பெருமானார்) விக்ரஹத்தையும் எம்பெருமானார் அவதரிப்பதற்கு முன்பே நாதமுனிகளுக்குக் கொடுத்தார் (முன்னதாக நம்மாழ்வாரின் அருளால் மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி ஆற்றின் நீரைக் காய்ச்சி அதிலிருந்து ஒரு பவிஷ்யதாசார்ய விக்ரஹம் வரப் பெற்றார்).

பவிஷ்யதாசார்யன் – ஆழ்வார்திருநகரி

 • இந்தத் திருமேனியை  நாதமுனிகள் முதல் திருக்கோட்டியூர் நம்பி வரை பாதுகாத்துத் திருவாராதனம் செய்து போனார்கள். (தாமிரபரணி நீரைக் காய்ச்சிப் பெற்ற திருமேனியை திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரியில் உள்ள பவிஷ்யதாசார்யன் சன்னிதியில் திருவாரதனம் செய்தார்கள்).
 • எப்படிப் பெருமாள் ரகு குலத்தில் அவதரித்து அந்தக் குலத்தைப் பெருமை மிக்கதாக மாற்றினாரோ, எம்பெருமானாரும் ப்ரபன்ன குலத்தில் அவதரித்து இந்த குலத்தை பெருமை மிக்கதாக மாற்றினார் என்று பெரிய நம்பி கூறினார்.
 • “எப்பொழுதும் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று நினைக்கவேண்டும் அதோடு எம்பெருமானாரை எனக்கும் மேலான ஆசார்யனாக நினைக்கவேண்டும்” என்று பெரிய திருமலை நம்பி எம்பாரிடம் கூறினார்.
 • “எம்பெருமானாருடைய ஸம்பந்தத்தினால், தான் பாக்யசாலி” என்று திருக்கோஷ்டியூர் நம்பி தனது கடைசி காலத்தில் கூறினார். மேலும் திருமாலை ஆண்டான் எம்பெருமானாரைப்பற்றித் தவறாகப் புரிந்துகொண்டபோது, “எம்பெருமானாருக்கு நாம் எதுவும் புதிதாக கற்றுக்கொடுக்கப் போவதில்லை, ஏற்கனவே அவர் ஸர்வஜ்ஞர். எப்படி கண்ணன் எம்பெருமான் ஸாந்தீபனியிடம் கற்றுக்கொண்டரோ, பெருமாள் வஸிஷ்டரிடம் கற்றுக்கொண்டரோ, எம்பெருமானார் நம்மிடமிருந்து கற்றுக்கொள்கிறார்” என்று திருக்கோஷ்டியூர் நம்பி கூறினார்.
 • பேரருளாளன், பெரிய பெருமாள், திருவேங்கடமுடையான், திருமாலிருஞ்சோலை அழகர், திருக்குறுங்குடி நம்பி மற்றும் பலர் எம்பெருமானாருடைய முக்கியத்துவத்தையும் / பெருமையையும் காட்டி, அனைவரையும் எம்பெருமானாரையே சார்ந்திருக்குமாறு கட்டளையிட்டார்கள்.
 • அருளாளப் பெருமாள் எம்பெருமானார், ஆழ்வான், ஆண்டான், எம்பார், வடுக நம்பி, வங்கிப் புரத்து நம்பி, பட்டர், நடாதூர் அம்மாள், நஞ்ஜீயர், நம்பிள்ளை மற்றும் பல ஆசார்யர்கள் “நாம் அனைவரும் எப்பொழுதும் எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்று இருக்கவேண்டும்” என்று தமது சிஷ்யர்களுக்குக் காட்டினார்கள்.
 • எம்பெருமானாரையே நாம் உபாயமாகவும் உபேயமாகவும் நினைக்க வேண்டும் என்று நமது பூர்வாசார்யர்கள் விளக்கியுள்ளார்கள். இது தான் சரமோபாய நிஷ்டை அல்லது அந்திமோபாய நிஷ்டை.
 • கூரத்தாழ்வானால் திருத்திப் கொள்ளப்பட்ட பிறகு திருவரங்கத்தமுதனாருக்கு எம்பெருமானார் மீது மிகுந்த பற்றுதல் உண்டானது. அந்த உணர்வைத் தன்னுடைய ப்ரபந்தத்தில் “இராமானுச நூற்றந்தாதியில்” காட்டியுள்ளார். எம்பெருமானாருக்குப் பொருத்தமான பெருமையை கூறும் இந்த ப்ரபந்தத்தை, அவர் திருவரங்கத்தில் வாழ்ந்திருக்கும் காலத்திலேயே, நம்பெருமாளின் ஆணைக்கிணங்க அவர் புறப்பாட்டில் வாத்யங்கள் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸேவித்தார்கள். நமது பூர்வாசார்யர்கள் எம்பெருமானாருடைய பெருமை மற்றும் நமது ஸம்ப்ரதாயதிற்காக அவர் செய்ததையும் கருதி இந்த ப்ரபந்தத்தை 4000 திவ்ய ப்ரபந்தத்தில் ஒரு பகுதியாகச் சேர்த்தார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த ப்ரபந்தம் ப்ரபன்ன காயத்ரி என்று அழைக்கப்பட்டது, இதை ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் ஒருநாளில் ஒருமுறையாவது கூறவேண்டும்.

எம்பெருமானார் தரிஶனம் என்றே இதற்கு நம்பெருமாள் பேரிட்டு நாட்டிவைத்தார்” என்று மணவாள மாமுனிகள் உபதேஶ ரத்தின மாலையில் காட்டியுள்ளார். எம்பெருமானாருக்கு முற்பட்ட ஆசார்யர்கள் அனைவரும் அனுவ்ருத்தி ப்ரஸன்னாசார்யர்கள். ஒருவன் உண்மையாக நீண்ட காலம் தனக்குக் கைங்கர்யம் செய்து வந்தால் மட்டுமே அவனுக்கு சம்ப்ரதாய விஷயங்களைக் கற்றுக்கொடுப்பார்கள். ஆனால் எம்பெருமானார் அந்தப் பழக்கத்தை மாற்றி, இந்த கலியுகத்தில் உள்ள ஆசார்யர்கள் அனைவருக்கும் கருணையே நிறைந்திருக்க வேண்டும் என்று காட்டினார். இந்த ஸம்ஸாரத்தில் உள்ள கஷ்டங்களைப் பார்த்து, எவன் ஒருவனுக்கு இந்த ஸம்ஸாரத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளதோ, அவனுக்கு ஸம்ஸாரத்தை விட்டுச்செல்லும் வழியை கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கூறினார். எம்பெருமானார் மட்டுமல்லாமல், அவர் 74 ஸிம்ஹாஶனாதிபதிகளை நியமித்து ஸநாதன தர்மத்தை உலகெங்கும் பரப்பிக் கருணையைக் காட்டச்சொன்னார்.

எம்பெருமான் வைபவத்தைச் சொல்லி முடித்து விடலாம் ஆனால் எம்பெருமானார் வைபவத்தைச் சொல்லி முடிக்கவே முடியாது. ஏன் எம்பெருமானார் தன்னுடைய 1000 நாவினால் (ஆதிஶேஷனாக) கூடத் தன் பெருமையைக் கூறி முடிக்க முடியாது. பிறகு எப்படி நமது முழுமையான திருப்திக்கு இதைக் கூறி முடிக்க முடியும்? நாம் இன்று அவருடைய வைபவத்தைப் பற்றி “வாசித்தும், கேட்டும், வணங்கி வழிபட்டோம்” என்று நினைத்து நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொள்ள வேண்டியது தான்.

எம்பெருமானாரின் தனியன்:

யோநித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேநே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே

எம்பெருமானார் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எண்டிசையெண் இளையாழ்வார் எதிராசன் வாழியே
எழுபத்து நால்வருக்கும் எண்ணான்குரைத்தான் வாழியே
பண்டை மறையைத் தெரிந்த பாடியத்தோன் வாழியே
பரகாலன் அடியிணையைப் பரவுமவன் வாழியே
தண்டமிழ் நூல் நம்மாழ்வார் சரணானான் வாழியே
தாரணியும் விண்ணுலகும் தானுடையோன் வாழியே
தெண்டிரை சூழ்பூதூர் எம்பெருமானார் வாழியே
சித்திரையில் செய்யதிருவாதிரையோன் வாழியே

மாமுனிகள் ஆர்த்தி ப்ரபந்தத்தில் அருளியன:

சீராருமெதிராசர் திருவடிகள் வாழி
திருவரையிற்சாத்திய செந்துவராடை வாழி
ஏராரும் செய்யவடிவெப்பொழுதும் வாழி
இலங்கிய முன்னூல்வாழி இணைத் தோள்கள் வாழி
சோராத துய்யசெய்ய முகச்சோதி வாழி
தூமுறுவல் வாழி துணை மலர்க் கண்கள் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி
இனிதிருப்போடு எழில் ஞானமுத்திரை வாழியே

அறுசமயச் செடியதனை அடியறுத்தான் வாழியே
அடர்ந்து வரும் குதிருட்டிகளை அறத்துறந்தான் வாழியே
செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்துவிட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்திவைத்தான் வாழியே
மறை அதனில் பொருளனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறனுரைசெய்த தமிழ்மறை வளர்த்தோன் வாழியே
அறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாருமெதிராசர் அடியிணைகள் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

சங்கர பாற்கர யாதவ பாட்டப் பிரபாகரர் தங்கள்மதம்
சாய்வுற வாதியர் மாய்குவர் என்று சதுமறை வாழ்ந்திடுநாள்
வெங்கலி இங்கினி வீறு நமக்கிலை என்று மிகத் தளர் நாள்
மேதினி நம் சுமை ஆறுமெனத்துயர்விட்டு விளங்கிய நாள்
மங்கையராளி பராங்குச முன்னவர் வாழ்வு முளைத்திடு நாள்
மன்னியதென்னரங்காபுரி மாமலை மற்றும் உவந்திடு நாள்
செங்கயல் வாவிகள் சூழ் வயல் நாளும் சிறந்த பெரும்பூதூர்ச்
சீமானிளையாழ்வார் வந்தருளிய நாள் திருவாதிரை நாளே

எம்பார் அருளிய எம்பெருமானார் வடிவழகு பாசுரம்:

பற்பம் எனத் திகழ் பைங்கழலுந்தண் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்
முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்
கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்
எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!

மேலே, அடுத்த ஆசார்யரான எம்பார் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/09/06/emperumanar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

thondaradipodi-azhwar-mandangudi

திருநக்ஷத்ரம்: மார்கழி, கேட்டை

அவதாரஸ்தலம்: திருமண்டங்குடி

ஆசார்யன்: விஷ்வக்சேனர்

பிரபந்தங்கள்: திருமாலை, திருப்பள்ளியெழுச்சி

பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

நஞ்சீயர் தம் திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யானத்தில் “அநாதி மாயயா ஸுப்த:” என்கிற கணக்கிலே ஸம்ஸாரத்திலே கிடந்த ஆழ்வாரை எம்பெருமான் மயர்வற மதிநலமருளி விழிப்பித்தான் என்கிறார். ஆழ்வாரே, பின்பு யோக நித்ரையிலிருக்கும் எம்பெருமானைத் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பினார்.

பெரியவாச்சான்பிள்ளை ஆழ்வாரின் பெருமைகளை அவரது பாசுரங்களாலேயே , தம் திருப்பள்ளியெழுச்சி வ்யாக்யான அவதாரிகையில்  காட்டுகிறார். ஆழ்வார் உணர்ந்து பெரிய பெருமாளை  ஸேவிக்கச் செல்கையில் அவர் இவரது க்ஷேம லாபங்களைப் பேசாது, திருக்கண் வளர்ந்திருந்தார். ஆனது பற்றி எம்பெருமானுக்கு ஆழ்வார்பால் ஆதாரம் இல்லை என்றாகாது, ஆழ்வார் அவனுக்கு மிக உகந்தவராதலால்.  ஆகில் ஶரீர உபாதையால் எம்பெருமான் உபேக்ஷித்திருந்தான் எனவும் ஆகாது, அவன் ஶரீரம் தமோ குணங்களற்ற திவ்ய தேஜோமய பஞ்சோபநிஷத்மய  திவ்ய ஶரீரம். பெரியபெருமாள் இந்த ஆழ்வாரைப் போன்றே சேதனர் அனைவரையும்  எங்கனம் நெறிப்படுத்துவம் என நினைந்தே விழிகள் மூடியிருந்தனன். ஆழ்வாரிடம் இக்குணங்களிருந்தன:

 • அவர் பிரக்ருதி ஸம்பந்தம் ஜீவனுக்குத் தகாது என்று உணர்ந்திருந்தார் எனவேதான் “ஆதலால் பிறவி வேண்டேன்” என்றார்.
 • அவர் ஸ்வரூப யாதாத்ம்ய ஞானம் பெற்றிருந்தார் ஆகவே, “போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம்”=பாகவத ஶேஷம் அவர்களே தருவராகில் உணவாக உட்கொள்ள உசிதம் என்றார்.
 • லௌகிக பாரமார்த்திக ஐஸ்வர்ய பேதம் நன்குணரப் பெற்றிருந்ததால், “இச்சுவை தவிர அச்சுவை பெறினும் வேண்டேன்” என்றார்.
 • இந்த்ரிய நிக்ரஹம் கைவரப் பெற்றிருந்ததால், “காவலில் புலனை வைத்து” எனப் புலன்களை அடக்கியது சொன்னார்.
 • தாம் கர்ம யோகாதிகளை உபாயங்களாகக் கருதாது கை விட்டதை, “குளித்து மூன்றனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒழித்திட்டேன்” என்றார்.
 • அவர்க்கு உபாய யாதாத்ம்ய ஞானம் (உண்மையில் உபாயம் எதுவோ அது பற்றி) முழுதாகக் கைவரப் பெற்றிருந்ததால் “உன் அருள் என்னும் ஆசைதன்னால் பொய்யனேன் வந்து நின்றேன்” என்றார்.

இறுதியாகப் பெரியவாச்சான்பிள்ளை ஆழ்வாரின் இத்திருக்குணங்களால் எம்பெருமானுக்கு மிக்க அணுக்கரானார், “வாழும் சோம்பரை உகத்தி போலும்” என அவரே சாதித்தாப்போல்  வேத மார்க்கம் அறிந்து தம் கைநிலை ஒன்றுமில்லை என ஆகிஞ்சந்யமும் அநந்யகதித்வமும் உடையார்போல் ஆழ்வாரை உகந்தான் எம்பெருமான்.

மாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தின மாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை மாமறையோன் என்றும், வேதத்தின் உட்பொருளை உணர்ந்தவர்களால் கொண்டாடப்படுபவர் என்றும் போற்றுகிறார். ஆழ்வாரின் அர்ச்சாவதார அனுபவத்தை http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-thondaradippodi.html என்னும் பதிவில் காணலாம்.

இனி ஆழ்வார் திவ்ய சரித்திரம்.

ஆழ்வார் ஸுத்த ஸத்வ நிஷ்டராக நம்பெருமாளின் கருவிலே செய்த திருவருளோடு விப்ரநாராயணர் எனும் பெயரோடு பிறந்து, க்ரமமாக ஸம்ஸ்காரங்கள் பெற்று நம்பெருமாள் அருளால் திருவரங்கமே நித்ய வாசமாகப் பெற்று அவன் அழகிலீடுபட்டு பக்தி பாரவச்யராய் இருந்தார். ஒரு நந்தவனம் சமைத்து,  கண்ணனுக்கும் நம்பி மூத்தோனுக்கும்  முன்பு மாலாகாரர் போலே பேரன்போடு பெரிய பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார்.

ஒருநாள் அழகியான திருக்கரம்பனூர் வேசி தேவதேவி உறையூரிலிருந்து தன் ஸஹோதரியோடு வந்தவள் ஆழ்வார் நந்தவனம் புக்கு, ஆங்கிருந்த செடி கொடிகள் மலர்க்கூட்டங்களால் மனம் கவரப்பட்டாள்.

அப்போது தூய ஆடையும் ஊர்த்வ புண்டரங்களும்  தரித்து எழில்மிகு தோற்றத்தோடு தோட்டவேலைக்கான ஸாமக்ரியைகளோடு விப்ர நாராயணர் தம் வேலையிலேயே ஈடுபட்டிருக்கக்கண்டவள் தன ஸஹோதரியிடம், ”அடி இவ்வாணழகர் ஆணோ அலியோ நம் அழகைக் கணிசிக்கவில்லையே” என்றாள். பின் அவள் அவர் அருகில் சென்று வணங்கி, எம்பெருமானுக்கு அந்தரங்க கைங்கர்யம் செய்யும் பாகவதருக்குத் தான் ஶரணடைய விரும்புவதைச் சொன்னாள். அவள் உடன் இருந்த தோழிகள் அவர் நம்பெருமாளின் தொண்டர் என்றும் அவளிடம் எவ்வித ஈடுபாடும் கொள்ள மாட்டார் என்றும் கூறினர். அவர்கள் அவளிடம் ஆறு மாதத்திற்குள் அவரை மயக்கி தன் வசத்தில் கொண்டு வந்தால் தாங்கள் அவளைப் பேரழகி என்று இசைந்து அவளுக்கு ஆறு மாத காலம் அடிமை செய்வோம் என்றனர். தேவ தேவியும் அப்பந்தயத்திற்கு இசைந்தாள். தேவ தேவியும் அப்பந்தயத்திற்கு இசைந்து தன்னுடைய விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களைத் துறந்து, ஸாத்விக உடை அணிந்து, அவரிடம் சென்றாள்.

பின் அவள் அவர் அருகில் சென்று வணங்கி, எம்பெருமானுக்கு அந்தரங்க கைங்கர்யம் செய்யும் பாகவதரைத் தான் ஶரணடைய விரும்புவதைச் சொன்னாள். அவர் மாதுகரம் பெற்று வரும்வரை தான் காத்திருப்பதாய்ச் சொல்ல அவரும் இசைந்தார்.

ஒருநாள் தேவதேவி நந்தவனத்தில் வேலையிலிருந்தபோது மழை பெய்தது. அவள் முழுவதும் நனைந்துவிடவே, விப்ர நாராயணர் தம் மேல் உத்தரீயத்தை அவளுக்குத் தந்தார். இருவரும் நெருக்கமாயினர்.  அதன்பின் இருவரும் நெய்யும் நெருப்பும்போல் இணைந்தனர். மறுநாள் அவள் தன் பழைய நகைகளையும் உடைகளையும் கொணர்ந்து அணியலானாள். அதன்பின் விப்ரர்   கைங்கர்யத்தையும் முழுதும் மறந்து அவளிடம் ஶரணாகதரானார். அவள் அவர் செல்வம் முழுதும் கவர்ந்துகொண்டு அவரை வெளியேற்றினாள். அவர் மனம் வருந்தி அவள்மீதே பித்தாய் அவள் வீட்டு வாயிலிலேயே கிடந்தார். அப்போது லீலார்த்தமாகப் பெரிய பெருமாளும் பெரிய பிராட்டியும் அவ்வீதி வழியே செல்ல, பிராட்டி பெருமாளிடம் இவர் ஏன் வேசி  வீட்டு வாயிலில் கிடக்கிறார் எனக் கேட்க, பெருமாள் நம் கைங்கர்யபரன் விப்ர நாராயணன் இப்போது இவளிடம் பித்தேறி இங்கே கிடக்கிறான் என்ன, பிராட்டி புருஷகாரம் செய்யுமுகமாக, “நீர் இவனை விஷய ப்ரவணன் ஆனபோதிலும் இப்படி விடலாமா? இவன் மாயையை நீக்கி நம்மிடம் சேர்த்துக்கொள்ளும்” என்றாளாக எம்பெருமானும் இசைந்தனன்.

பெருமாள் தன் ஸந்நிதிப் பஞ்சபாத்ரம் ஒன்றை எடுத்து அந்த வீடு சென்று அவளிடம் நான் விப்ர நாராயணன் சீடன் அழகிய மணவாளன், இது அவர் உனக்குத் தந்த அன்பளிப்பு என்று தர, அவளும் அந்தத் தங்கப் பாத்திரம் பெற்று அவரை உள்ளே வரவிடு  என, எம்பெருமான் இவரிடம் “ஸ்வாமீ அவள் உம்மை உள்ளே அழைக்கிறாள்” என்ன அவர் உள்ளே சென்றதும் அவள் பழையபடி அவரைக்  கொஞ்சத் தொடங்கினள். எம்பெருமான் தன் ஸந்நிதிக்குத் திரும்பி, மீளவும் பைந்நாகணையில் ஸயநித்துக் கொண்டான்.

மறுநாள் ஸந்நிதி திறந்ததும் கைங்கர்யபரர்கள் தங்கப் பஞ்சபாத்ரம் காணாமல் போயிற்றென்று தெரிந்து அரசனிடம் கூற, அவன் அவர்கள் கவனக் குறைவைக் கடிந்துகொண்டான். நீர் கொணரக் கேணிக்குச் சென்ற ஒரு தாதிப் பெண் அரசன் சினம் தன கணவன் மேல் வடியுமோ என அஞ்சிப் பேசினள். அவள் விப்ர நாராயணன் ஶிஷ்யன் அழகிய மணவாளன் என்பான் ஒரு தங்கவட்டில் வேசிக்குக் கொடுத்ததாகக் கூற, இதைக் கைங்கர்யபரர் வழி அறிந்த அரசாங்க ஆட்கள் விப்ரரை உடனே கண்டுபிடித்துச் சிறையிலிட்டனர். தேவதேவி வீட்டிலிருந்து வட்டிலைக் கைப்பற்றி அவளை விசாரிக்க, அவள், யான் அறியேன் விப்ரரின் ஆளான அழகிய மணவாளன் அவர் அனுப்பியதாகத் தந்தான் என்ன, ஆகிலும் நீ கோயில் வட்டிலை வாங்கலாமோ என அவர்கள் கேட்க, அது பெருமாள் வட்டில் என்பது எனக்குத் தெரியாது என்றாள். விப்ரநாராயணரோ தனக்கு அழகிய மணவாளன் என்கிற சீடனும் இல்லை தன்னிடம் தங்க வட்டிலும் இருந்ததில்லை என்கிறார். அரசன் வட்டிலைக் கோயிலுக்குத் திரும்பத் தந்து, வேசியை அபராதம் கட்டச் சொல்லிப் பின்பு  விடுவித்து விப்ரரைச் சிறையிலே இட்டனன்.

இந்நிலையில் பிராட்டி வேண்ட எம்பெருமான் அரசன் கனவில் வந்து விப்ரன் என் அடியான், அவனை வழிப் படுத்தவே இந்த விளையாட்டு என்னவும், அரசன் உடனே அவருக்கு எல்லா நிகழ்வும் சொல்லி, விடுவித்து அபராத க்ஷமாபனம் செய்துகொண்டனன். விப்ர நாராயணரும் தன்னுடைய தவறைத் உணர்ந்து, எம்பெருமான் தனக்குச் செய்த பேருபகாரத்தை நினைத்து உருகி, அனைத்து ஆசைகளையும் துறந்து, அனைத்துப் பாபங்களுக்கும் ப்ராயச்சித்தமான பாகவத ஸ்ரீபாத தீர்த்தத்தை உட்கொள்கிறார்.

இதன்பின் விப்ர நாராயணர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் என்றே புகழ் பெற்றார். தம் பாகவத ஶேஷத்வ ஸ்வரூபம் தோன்றப் பெயரும் பெற்ற ஒரே ஆழ்வார் இவரே. திருவடி, லக்ஷ்மணன், நம்மாழ்வார் போலே இவரும் “இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” – பரமபதமும் வேண்டா கைங்கர்யமே தலை, பெரிய பெருமாள் சேவையே ப்ரதானம் என்றிருந்தார்.  உபகார ஸ்ம்ருதி எனும் நன்றி கூறலாகிய உத்தம தரமும் இவரே காட்டியருளினார், பாசுரம்தொறும் எம்பெருமானை நினைந்தும் அவன் தமக்குச் செய்த பெருங்கருணையைப் பாடியும் வித்தரானார். இவரது அசைக்கவொண்ணா பக்தி கண்டு எம்பெருமான் தன பரத்வாதி பஞ்சகமும் (http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-parathvadhi.html) காட்டியருளினான். தேவதேவியும் பிழை உணர்ந்து தன பொருள் முழுதும் பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்து, தானும் கைங்கர்யத்தில் மூழ்கினாள்.

ஆழ்வார் பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி பெற்று, பெரிய பெருமாளே எல்லாம் என்று உணர்ந்து, பெரிய பெருமாளைத் திருமந்திர அநுஸந்தானம் மூலமும், நாம ஸங்கீர்த்தனம் மூலமும் நித்யமாக அநுபவித்து வந்தார்.  நம்மாழ்வார் மங்கவொட்டுன் மாமாயையில் அனைத்துப் பிரகிருதி தத்வங்களும் தடை என்றாப்போலே இவரும் “புறம் சுவர் ஓட்டை மாடம்” என்று ஶரீரத்தின் ஹேயதையைச் சொன்னார். யமனைக் கண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் அஞ்ச வேண்டாம் என்றும் யமபடர்கள் ஸ்ரீவைஷ்ணர்களைக் கண்டால் வணங்கிப்போவார்கள் என்றும் ஸ்ரீவைஷ்ணவர்கள் மற்ற ஸ்ரீவைஷ்ணாவர்களையே வணங்கிப் போவர்கள் என்றும் அறுதியிடுகிறார். ஸௌநகர் ஸதாநந்தருக்கு நாம ஸங்கீர்த்தன மகிமையை உரைத்ததுபோல் ஆழ்வார் பெரிய பெருமாள் திருமுன்பு அவன் திருநாம வைபவத்தைத் திருமாலையில் பரக்க உரைக்கிறார். திருமாலை திவ்ய ப்ரபந்தத்தில் நாம ஸங்கீர்த்தன மகிமை, பாகவத ஶேஷத்வம், அநந்ய கதித்வம், அநந்யார்ஹத்வம், பாகவதர் மேன்மை முதலானவை பரக்கக் காட்டினார். மேம்பொருள் பாசுரத்தில் எம்பெருமானே உபாயம் என்பதைத் தெளிவாக விளக்கினார். “மேம்பொருள்” பாசுரத்துக்கு மேல்பட்ட பாசுரங்கள் என லோகாசார்யர் திருமாலையின் ஸாரத்தை பாகவத ஶேஷத்வம் மற்றும் பாகவத கைங்கர்யம் எனக் காட்டுவர். ஆழ்வார் தம்மை உணர்த்தியருளிய பெரிய பெருமாளுக்குத் தம் உபகார ஸ்ம்ருதியாக மிக அழகிய திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களைப் பணித்தருளினார். இதிலும் பாகவத ஶேஷத்வ காஷ்டையை விளக்குமாறு, “உன்னடியார்க்கு ஆட் படுத்தாய்” என்றே எம்பெருமானை வேண்டினார். இப்படி லோகத்தை வாழ்வித்தருளினார்

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனியன்:

தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேஶயம் ராஜவதர்ஹணியம்
ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழி திருநாமம்:

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-thondaradippodi.html

தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2013/01/08/thondaradippodi-azhwar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

ஆண்டாள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

andal

திருநக்ஷத்ரம்: திரு ஆடிப்பூரம்

அவதாரஸ்தலம்: ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆசார்யன்: பெரியாழ்வார்

பிரபந்தங்கள்: திருப்பாவை, நாச்சியார் திருமொழி

பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

திருப்பாவை ஆறாயிரப்படி வியாக்யானத்தில் பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வார்கள் அனைவரையும்விட ஆண்டாளுக்குள்ள ஏற்றத்தை அழகாக எடுத்துரைக்கிறார்.

 • ஸம்ஸாரி(தேஹாத்மாபினிகள், ஐஸ்வர்யம் விரும்புபவர்கள்)களுக்கும் ஆத்ம விவேகம் அடைந்தவர்க்குமுள்ள வேறுபாடு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ளது போன்றது.
 • தாமே முயன்று விவேகம்பெற்று வீழவும்செய்யும் ரிஷிகளுக்கும் ஆழ்வார்களுக்குமுள்ள வேறுபாடு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ள வேறுபாடு.
 • எப்போதும் ஸ்வாநுபவமும் சிலநேரங்களில் மங்களாஶாஸனமும்  செய்யும் ஆழ்வார்களுக்கும் எப்போதும் மங்களாஶாஸனத்திலேயே  ஊன்றியுள்ள பெரியாழ்வாருக்கும்  சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ள வேறுபாடு.
 • ஆண்டாளுக்கும் பெரியாழ்வாருக்குமுள்ள வேறுபாடு ஒரு சிறு கல்லுக்கும் பெரிய மலைக்குமுள்ள வேறுபாடு. இதற்குக் காரணம்:
  • ஆழ்வார்கள் யாவரும் எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று, ஸம்ஸாரி சேதனர்களை அவர் தம் உறக்கத்துநின்று எழுப்பினார்கள்; ஆண்டாளோ தானே பூமிப்பிராட்டியானதால் தானே சென்று எம்பெருமானை எழுப்பிச் சேதனர் பால் அவனுக்குள்ள ரக்ஷண பாத்யதையை அறிவுறுத்தினாள். இதை நம்பிள்ளை திருவாய்மொழி, திருவிருத்த வ்யாக்யானங்களில் காட்டியுள்ளார்.ஆழ்வார்கள் ஸம்ஸாரிகளாய்ப்  போந்து, எம்பெருமானால் மதிநலம் அருளப் பெற்றவர்கள்.ஆண்டாளோ பூமிப்பிராட்டியானபடியால் தானே நித்யஸூரி, திவ்ய மகிஷிகளில் ஒருத்தி எனப் பெரியவாச்சான்பிள்ளை காட்டியருளினார்.
  • ஆண்டாள் பெண்பிள்ளை ஆதலால் எம்பெருமானோடு புருஷர்களான ஆழ்வார்கள் போலன்றி எம்பெருமான் பக்கலில் தன காதலை ஸ்வாபாவிகமாகக் காட்டவல்லவள்.

பிள்ளை லோகாசார்யர் இதை ஸ்ரீவசன பூஷணத்தில் அத்புதமாகக் காட்டியருளும் ஸ்ரீ  ஸூக்திகள் காணீர்:

 • ஸூத்திரம் 238 – ப்ராஹ்மணோத்தமரான பெரியாழ்வாரும்  திருமகளாரும் கோபஜந்மத்தை ஆஸ்தாநம் பண்ணினார்கள் –  பிள்ளை லோகாசார்யர்  ஜாதி வர்ணம் பிறப்பு இவைகளைமீறிய பாகவதர்களின் பெருமையை விளக்குமுகமாக பகவத் கைங்கர்யம், அனுபவம் ஏற்பட வழிகளாக ஆண்டாளும் பெரியாழ்வாரும் கோகுலத்தில் ஆய்ப்பிறவியும் விரும்பினார்கள் என்கிறார். இக்கைங்கர்யம் எவ்வடிவிலும் இருக்கலாம் எங்கும் இருக்கலாம் அதன் சிறப்பு குறையாது.
 • ஸூத்திரம் 285 – கொடுத்துக் கொள்ளாதே கொண்டத்துக்குக் கைக்கூலி கொடுக்கவேணும் – எம்பெருமான் உகக்கும் கைங்கர்யமே மேலானது என 238ல் காட்டினார். லோகாசார்யர் சூ.284ல்  கைங்கர்யம் எந்தப்ரதி பலனையும் எதிர்பாராது இருத்தல் வேண்டும் என்கிறார். நம் கைங்கர்யம் ஒரு பலனை அடைய உத்தேசித்ததாய் இருக்கலாகாது. நம் கைங்கர்யம் எம்பெருமான் ஏற்றுக்கொண்டதற்காக நாம் மேலும் செய்யவேண்டும்.இதை வ்யாக்யாநிக்கும் மாமுனிகள், ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாசுரம் 9.7, “இன்று வந்து இத்தனையும் செய்திடப் பேரில் ஒன்று நூறாயிரமாகக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்” என்பதை உதாஹரிக்கிறார். மாமுனிகள் இதை உதாஹரிக்கக் காரணம், இதற்கு முன் பாட்டில் ஆண்டாள் எம்பெருமானுக்கு நூறு தடா வெண்ணெயும் நூறு தடா அக்கார அடிசிலும் சமர்ப்பிப்பதாகக் கூறுகிறாள். அதை சமர்ப்பித்ததற்கு ப்ரதியாக அவள் எதிர்பார்ப்பது மேலும் 100 கைங்கர்யம் செய்யவேணும் என்பதே ஆகும்.

ஆயி ஜனந்யாசார்யர் தம் ஈராயிரப்படி, நாலாயிரப்படி திருப்பாவை வ்யாக்யானங்கள் இரண்டிலும் திருப்பாவையின் உயர்வை விளக்க ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். எம்பெருமானாரிடம் ஶிஷ்யர்கள் தேவரீர் திருப்பாவை வ்யாக்யாநித்தருள வேணுமென்னா நிற்க, அவர், “திருப்பல்லாண்டு எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம்  செய்யும்  ப்ரதம பர்வம் ஆரும் சொல்லலாம், திருப்பாவையோ பாகவத கைங்கர்யஞ்சொல்லும் சரம பர்வம் ஆராலும் சொல்லுப்போகாது” என்றாராம். எம்பெருமானார், மேலும், எம்பெருமானோடேயே எப்போதுமுள்ள நாய்ச்சிமாராலும் அவனோட்டை ஸம்பந்தத்தை ஆண்டாள் போலச் சொல்லவொண்ணாது, ஆழ்வார்கள் எல்லாரும் கூடினாலும் ஆண்டாள் போலச் சொல்லவோண்ணாது என்றாராம்.

மாமுனிகள் உபதேச ரத்தின மாலை பாசுரங்கள் 22, 23.24 என மூன்று பாசுரங்களில் ஆண்டாள் பெருமையைப் பேசுகிறார்.

 • 22ல் மாமுனிகள் பெரும் உணர்ச்சிவசராய் பிராட்டி பரமபதத்து இன்பம் அனைத்தும் துறந்து நமக்காக இங்கு ஆண்டாளாய்  ஸம்ஸார  துக்கத்தில்  வந்தாள்  ஆற்றில் வீழ்ந்த குழந்தையைத் தூக்கத் தானும் நீரில் குதிக்கும் தாய் போல.

andal-birth-mirror

 • 23ல்  ஆண்டாளுக்கு ஒப்பு இல்லாததுபோல் அவள் பிறந்த திரு ஆடிப் பூரத்துக்கும் ஒப்பில்லை என்கிறார்.
 • 24ல் அவள் ஆழ்வார்கள் எல்லாரையும் விஞ்சிய செயல் உடையவள், அஞ்சு குடிக்கு ஒரு  ஸந்ததி என்றார். பிள்ளை லோகம் ஜீயர் அஞ்சு குடியை விவரிக்கிறார்:
  • பரீக்ஷித் பஞ்ச பாண்டவர்களுக்குப்போல்
  • இவள் பிரபன்னகுலமான ஆழ்வார்களின் வழித்தோன்றல்
  • எப்போதும் எம்பெருமான் நலத்துக்க்கே அஞ்சும்=பயப்படும் பெரியாழ்வாரின்  ஸந்ததி

ஆண்டாளின் ஆசார்ய நிஷ்டை பரிசுத்தமானது. பெரியாழ்வாரிடம் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகவே ஆழ்வாருக்குப் ப்ரியமான எம்பெருமானிடம் ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டு எம்பெருமானைக் கொண்டாடினாள்.

 • நாச்சியார் திருமொழி 10.10ல்  ஆண்டாள் தானே இதைத் தெரிவிக்கிறாள் – “வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டுமே” என.
 • மாமுனிகள் 10 ஆழ்வார்களையும் பேசியபின் ஆண்டாள் மதுரகவிகள் எம்பெருமானார் மூவரையும் பேசுகிறார். ஏனெனில் இம்மூவரும் ஆசார்ய நிஷ்டர்கள் என்பதால்.

இனி ஆண்டாள் சரித்திரம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இப்போது நாச்சியார் ஸந்நிதி உள்ள இடத்தில் பூமிப்பிராட்டி ஆண்டாளாகப் பெரியாழ்வார் திருமாளிகையில் அவதரித்தாள். குழந்தை எம்பெருமானின் திவ்யகுணானுபவங்களோடே பெரியாழ்வாரால் வளர்க்கப் பட்டாள். பெரியாழ்வார் தினமும் வடபத்ரஸாயீ  எம்பெருமானுக்குப் பூமாலைகள் தொடுத்து சமர்ப்பிப்பார். ஆண்டாள் பெருமாளை மணம் செய்துகொள்ள விரும்புமளவு பக்தி வயப்பட்டாள். ஒருநாள் ஆண்டாள் ஆழ்வார் இல்லாதபோது பெருமாள் மாலையைத் தான் சூடி வைத்தாள். லீலா விநோதனான எம்பெருமான் இவள் தான் சூடிக் களைந்து, தான் அவனுக்குப் பொருத்தமா எனப் பார்த்த மாலைகளை விரும்பினான். ஒருநாள் பெரியாழ்வார் இவள் மாலையைத் தான் சூடிக் களைந்து வைத்தது கண்டு திடுக்கிட்டு அதை அவனுக்குச் சாத்தாதுபோக அவன் அவர் கனவிலே வந்து ஏன் மாலை சாத்தவில்லை என வினவ,  ஆழ்வார் நடந்தது கூற எம்பெருமான் தனக்குக் கோதை சூடிய மாலையே உகப்பு என்றனன்.  இது கேட்டுப் பேருகப்படைந்த ஆழ்வார் முன்பிலும் கோதைபால் அன்பு பூண்டவரானார். அவள் சூடிக்கொடுத்த மாலையையே தினமும் எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்கலானார்.

அவள் பூமிப் பிராட்டியானதால் இயல்வாகவே எம்பெருமானிடம் காதல் கொண்டனள். எம்பெருமானிடம் ஆண்டாள் கொண்ட காதல் மற்றைய ஆழ்வார்களின் அன்பைவிட மிக உயர்ந்தது. எம்பெருமானின் பிரிவைத் தாங்க முடியாத ஆண்டாள் அவனை மணம் புரிய வழிகளை விசாரித்தாள். ராஸக்ரீடையின் போது கண்ணன் சடக்கென மறைந்ததைக் கண்டு தரிக்க முடியாத கோபிகைகள் கண்ணனின் லீலைகளை அனுகரித்தனர் (நடித்துப் பார்த்தனர்). அதே போல ஆண்டாளும் வடபத்ரஸாயீ எம்பெருமானைக் கண்ணனாகவும் அவன் திருக்கோயிலையே நந்தகோபன் திருமாளிகையாகவும் ஸ்ரீவில்லிபுத்தூரைத் திருவாய்ப்பாடியாகவும் அங்கிருக்கும் பெண்களை கோபிமார்களாகவும் எண்ணித் திருப்பாவையைப் பாடினாள்.

திருப்பாவையில் ஆண்டாள் பல முக்கியமான விஷயங்களை விளக்குகிறாள்:

 • ப்ராப்யம் (இலக்கு), ப்ராபகம்(வழி) இரண்டுமே எம்பெருமான் எனக் காட்டினாள்
 • பூர்வாசார்ய அனுஷ்டானக்ரமத்தில் செயத்தக்கன, செய்யத்தகாதன என க்ருத்யாக்ருத்ய விவேகம் சொன்னாள்
 • பகவதநுபவம் ஸ்வார்த்தமாகத் தனியேயன்று, குழாங்களாய் ஆயிற்றுச் செய்யவேண்டுவது எனக் காட்டினாள் – பத்து பாசுரங்களில் பத்து கோபிகைகளை எழுப்பி அழைத்துச் செல்கிறாள்
 • எம்பெருமானை அணுகுமுன் த்வாரபாலகர், பலராமன்,யஶோதைப்பிராட்டி போன்றோரைப் பற்ற வேண்டும்
 • எம்பெருமானை அணுகுமுன் எப்போதும் பிராட்டி புருஷகாரம் வேணும்
 • அவனுக்கு எப்பொழுதும் மங்களாஶாஸனம்  செய்யவேணும்
 • கைங்கர்யமே ஜீவாத்ம ஸ்வரூபம். ஆதலால் அவனிடம் கைங்கர்ய ப்ரார்த்தனை தேவை
 • அவன் கைங்கர்யம்  அவனை அடைய உபாயமென்று ஒரு துளியும் நினைவு கூடாது
 • கைங்கர்யம் அவன் முகோல்லாஸத்துக்காகச் செய்யவேணும், பிரதி பலனுக்காக அன்று

ஆனபின்பும் எம்பெருமான் வந்து கோதையை ஏற்றானல்லன். ஆண்டாள் ஆற்ற ஒண்ணாக் காதலால் நைந்து தன் ஆர்த்தி வெளிப்பட மேலான ஸாம்ப்ரதாயிக அர்த்தங்கள் பொதிந்த நாச்சியார் திருமொழியைப் பாடினள். இப்பாசுரங்களின் வ்யாக்யானங்களைப் புரிந்துகொள்ள மேலான மனப் பக்குவம் வேணும் என்பர்.

மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” எனத் தனக்கு ஸரீர ஸம்பந்தம் வேண்டாவென அறுதியிட்டாள். எம்பெருமானோடு தன திருமணத்தை அவள் “வாரணம் ஆயிரம்” பதிகத்தில் கனவுரையாகக் கூறுகிறாள். பின்னையும் பெரியாழ்வார் அவளுக்கு அர்ச்சாவதார மேன்மையை உணர்த்தி அர்ச்சாவதார எம்பெருமான்களைப் பற்றி விளக்க, அவள் திருவரங்கத்தான் மீது தீராக் காதல் வயப்பட்டனள். ஓரிரவு அவன் பெரியாழ்வார் கனவில் வந்து ஆண்டாளைத் திருவரங்கம் கொணர்ந்து தனக்குத் திருமணம் முடிக்கக் கோரினன். ஆழ்வார் மிக்க மகிழ்ச்சி அடைந்தவேளையில், எம்பெருமான் அவளைத் திருவரங்கம் அழைத்துவரப் பல்லக்கும் சத்திர சாமராதிகளும் கைங்கர்யபரர்களும் அனுப்பினன். வடபத்ரஸாயீ  அனுமதி பெற்று ஆழ்வார் அவளோடு திருவரங்கம் புறப்பட மூடு பல்லக்கில் மேளதாளத்தோடு ஆண்டாள் கிளம்பினாள்.

திருவரங்கத்தில் நுழைந்ததும் அழகினுக்கு அலங்கரித்தாப்போலிருந்த ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி, பெரியபெருமாள் திருமுன்பே சந்நிதியில் சென்று, மறைந்து பரமபதம் அடைந்தனள்.

periyaperumal-andalஇது கண்ட யாவரும் பெரியாழ்வாரைப்  பெரிய பெருமாளின் ஶ்வஶுரர் (மாமனார்) –     ஸமுத்ரராஜன் போலே எனப் போற்றினர். அவரோ முன்புபோன்றே ஸ்ரீவில்லிபுத்தூரிலே வடபத்ரஸாயீக்குக் கைங்கர்யம் செய்வாராயினர்.

ஆண்டாளின் அளப்பரிய பெருமைகளை நாம் எப்போதும் சிந்திக்கிறோம், அவசியம் மார்கழி மாத முழுதும் அவள் பாட்டு, வியாக்யான அநுபவமாகிறது. பட்டர் பணித்தபடி முப்பது பாசுரங்களும் அநுஸந்திக்கில் நன்றாம்…அன்றேல் ஒரே பாட்டை அநுஸந்திக்கிலும் நன்றாம், அன்றேல் கடைசிப்பாட்டை பட்டரநுபவித்தபடியை அநுஸந்திக்கிலும் நன்றாம். எம்பெருமானார்போலே பட்டரும் திருப்பாவையில் போர உகந்து ஈடுபட்டிருப்பர். தோல் கன்றைக் கண்டு பால் சுரக்கும் தாய்ப்பசு போலே, திருப்பாவையுடன் ஏதேனும் ஒரு ஸம்பந்தம் இருந்தாலேயே, பூமிப் பிராட்டி வராஹப் பெருமானிடம் ப்ரார்த்தித்தபடி, நம்மை அவனும் உஜ்ஜீவிப்பான்.

தன் அகாத கருணையால் இந்த  ஸம்ஸாரத்தில்  நமக்காகப் பிறப்பெடுத்த ஆண்டாள் நம் உய்வுக்காகத் தன்  ஈடற்ற கருணையால் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி அளித்தாள். இவை இரண்டும் நமக்குப் பிறப்பிறப்புத் துயரறுத்துத் தொன்நெறிக்கண் நிறுத்தி பகவதனுபவ, கைங்கர்ய அந்தமில் பேரின்பம் அருளும்,

ஆண்டாள் தனியன்:

நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம் 
பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி சத  ஶிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வோசிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய:

ஆண்டாள் வாழி திருநாமம்:

திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

ஆண்டாள் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-andal-anubhavam.html.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/12/16/andal/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

கோயில் கந்தாடை அப்பன்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே  நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்

தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி

அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்

ஆசாரியன்: மணவாளமாமுநிகள்

பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்

கோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் )

கோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம்

யதிராஜ பாதுகை (எம்பெருமானாரின் திருவடிகள்)  என்று போற்றப்பட்ட முதலியாண்டானின் திருவம்சத்தில் தேவராஜ தோழப்பரின் திருக்குமாரராகவும் , கோயில் கந்தாடை அண்ணனின் திருத்தம்பியாராகவும் , கோயில் கந்தாடை அப்பன் அவதரித்தார். பெற்றோர்களால் ஸ்ரீநிவாசன்  என்று பெயரிடப்பட்ட இவரே பிற்காலத்தில் மணவாளமாமுநிகளின் ப்ரிய சிஷ்யரானார் .

மணவாளமாமுநிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கம் எழுந்தருளிய பொழுது, பெரியபெருமாள் (ஸ்ரீ ரங்கநாதன்) அவரை சத் சம்பிரதாயத்தின் தலை நகரமான திருவரங்கத்திலேயே இருந்து சத் சம்பிரதாயத்தை வளர்த்து வரும் படி பணித்தார். பின் மணவாளமாமுநிகள்  பூர்வாசார்ய கிரந்தங்களை திரட்டி , அவற்றை ஓலையிட்டு  கொண்டு கிரந்த காலக்ஷேபங்கள்  செய்து வந்திருந்தார் . அந்தமில் சீர் மணவாளமுநிப்பரரின் பெருமைகளையெல்லாம்  கேட்டறிந்த  பல பெரியவர்கள் மற்றும் ஆசார்ய புருஷர்கள் இவர் திருவடிகளையே தஞ்சமாய் பற்ற வந்த வண்ணம் இருந்தனர் .

எம்பெருமானின் திருவுள்ளத்தால், முதலியாண்டான் திருவம்சத்தில் தோன்றிய ஆசார்யவரரான கோயில் கந்தாடை அண்ணன் , மணவாள மாமுநிகளின்  சிஷ்யரானார். இவர், பின்னர் மணவாளமாமுநிகளால்  சத் சம்பிரதாய ப்ரவர்த்தனத்திற்காக  நியமிக்கப்பட்ட அட்ட திக்கஜங்ளிலே ஒருவர் ஆனார். இவர் மணவாளமாமுநிகளின் திருவடித்தாமரைகளைத் தஞ்சமாய் பற்ற வரும் வேளையிலே தம்மோடு தம்மை சேர்ந்தவர்களையும் அழைத்துக்கொண்டார் . இவ்வாறு கோயில் கந்தாடை அண்ணனோடு வந்தவர்களில் ஒருவர் தான் கோயில் கந்தாடை அப்பன் . “வரவரமுநிவர்ய கனக்ருபா பாத்ரம்” என்று இவரை கொண்டாடும் தனியனிலிருந்தும் , “மணவாளமாமுநிகள் மலரடியோன் வாழியே ” என்று பல்லாண்டு பாடும் இவர் வாழித்திருநாமத்தினிருந்தும், இவர் எப்பொழுதுமே சரம பர்வ  நிஷ்டையிலே (ஆசார்யனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு புரிதலிலே) ஆழ்ந்து எழுந்தருளியிருந்தார் என்று நாம் அறிந்து கொள்ளலாம் .

 மணவாளமாமுநிகளின் இருபக்கங்களில் கோயில் அண்ணனும் கோயில் அப்பனும் . (கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் )

மணவாளமாமுநிகளின் இருபக்கங்களில் கோயில் அண்ணனும் கோயில் அப்பனும் . (கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் )

மணவாளமாமுநிகளின் மற்றுமோர் சிஷ்யரான எறும்பியப்பா மணவாளமாமுநிகளின்  அன்றாட வழக்கங்களைக் கொண்டாடும் தனது பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,

பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ
விந்யஸ்யந்தம் நைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே  (பூர்வ தினசர்யை  4 )

இந்த சுலோகத்தில் எறும்பியப்பா மணவாளமாமுநிகளை  பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் , “தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் ) இருபுறங்களிலும் தேவரீரின் திருக்கரங்களான தாமரைகளாலே பிடித்து, தேவரீரின் திருவடித்தாமரைகளை மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “. 

தினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், திருமழிசை அண்ணாவப்பங்கார், “இந்த சுலோகத்தில் இரண்டு அபிமான சிஷ்யர்கள் என்று எறும்பியப்பா கோயில் அண்ணனையும் கோயில் அப்பனையும்  குறிப்பிடுகிறார்”, என்று கோடிட்டு காட்டுகிறார் . பாஞ்சராத்திர தத்வ சம்ஹிதை, “ஒரு சந்நியாசி எப்பொழுதும் தனது த்ரிதண்டத்தை பிடித்துக்கொண்டே இருக்கவேண்டும் ” என்று கூறுகிறது. “இவ்வாறு இருக்க , மணவாளமாமுநிகள் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளி இருக்கலாமோ ?” என்ற கேள்வி எழுமின் , அதற்கு திருமழிசை அண்ணாவப்பங்கார் கீழ்க்கண்டவாறு சமாதானங்கள் அளிக்கிறார் : 

 • முற்றிலும் உணர்ந்ததோர் சந்நியாசி த்ரிதண்டம் இன்றி இருத்தல் ஓர் குறை அல்ல .
 • எப்பொழுதும் பகவத் த்யானத்தில்  ஈடுபட்டிருப்பவராய் , நன்நடத்தை  உடையவராய், தன்  ஆசாரியனிடமிருந்து அனைத்து சாத்திரங்களையும் கற்றவராய் , பகவத் விஷயத்தில் அறிவுமிக்கவராய் , புலன்களையும் சுற்றங்களையும்  வென்றவராய் எழுந்தருளி இருக்கக்கூடிய ஒரு சந்நியாசிக்கு த்ரிதண்டம் உள்ளிட்டவையோடு இருத்தல் கட்டாயம் அல்ல.
 • எம்பெருமான் முன்னிலையில் தெண்டன் இடும் வேளையில் த்ரிதண்டம் அதற்கு இடையூறாக இருக்கக் கூடும் . அதனால் பெரிய ஜீயர் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளியிருக்கலாம் .

கோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர். “காவேரி தாண்டா அண்ணனாய் ” ,கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் , அவர் தனது திருத்தம்பியாரான கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணிகொள்ள நியமித்தார். இதனை சிரமேற்கொண்டு கோயில் அப்பன் தானும் திருவரங்கத்திலிருந்து  பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.

பொய்யிலாத மணவாளமாமுநிகளின் அபிமான சிஷ்யரான கோயில் கந்தாடை அப்பனின் வைபவங்களில் சிலவற்றை அனுபவித்தோம். நாமும் இவரின் ஆசார்ய அபிமானத்தில் சிறிதேனும் பெற இவர் திருவடிகளை வணங்குவோம் !!

கோயில் கந்தாடை அப்பன் சுவாமியின் தனியன்:

வரதகுரு சரணம் சரணம் வரவரமுநிவர்ய கணக்ருபா பாத்ரம் |
ப்ரவகுண ரத்ண ஜலதிம் ப்ரநமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||
தேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜகுரோஸ்ஸுதம் |
பூஷிதம் ஸத்குணைர்வந்தே ஜீவிதம் மம  ஸர்வதா||

அடியேன் ராமனுஜதாசன்
எச்சூர் ஸ்ரீநிவாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/09/30/koil-kandhadai-appan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

பெரிய நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/07/08/alavandhar/) ஆளவந்தாரை அநுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனைப் பற்றிக் காண்போம்.

periya-nambi

 திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

ஆசார்யன்: ஆளவந்தார்

ஶிஷ்யர்கள்: எம்பெருமானார், மலை குனிய நின்றார், ஆரியூரில் ஸ்ரீ ஶடகோப தாஸர், அணி அரங்கத்தமுதனார் பிள்ளை, திருவாய்க்குலமுடையார் பட்டர் மற்றும் பலர்.

பரமபதித்த இடம்: சோழ தேசத்தில் உள்ள பசியது (பசுபதி?) கோவில்

பெரிய நம்பி திருவரங்கத்தில் அவதரித்தார். அவருக்கு மஹா பூர்ணர், பராங்குஶ தாஸர் மற்றும் பூர்ணாசார்யர் என்ற திருநாமங்களும் உண்டு.

ஆளவந்தாரின் முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவராக இருந்தார். ராமானுஜரை திருவரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு இவரே கருவியாக இருந்தார். ஆளவந்தர் காலத்திற்கு பிறகு, ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ராமானுஜரை திருவரங்கத்திற்க்கு அழைத்து வருமாறு இவரிடம் விண்ணப்பம் செய்தனர். அதனால் அவர் குடும்பத்துடன் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார். தற்செயலாக அதே நேரத்தில் ராமானுஜரும் பெரிய நம்பியை சேவிப்பதற்காக காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டார். இவர்கள் இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்தனர். பெரிய நம்பி ராமானுஜருக்கு அங்கேயே பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தார். அவர் ராமானுஜருக்கு ஸம்ப்ரதாய அர்த்தங்களை கற்றுக்கொடுப்பதற்காக காஞ்சிபுரம் சென்றார். ராமானுஜருடைய தர்ம பத்தினியினால் சில முரண்பாடுகள் ஏற்பட்டதால், காஞ்சிபுரத்தை விட்டு அவர் குடும்பத்துடன் மீண்டும் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார்.

பெரிய நம்பியினுடைய வாழ்க்கையில் நடந்த பல ஸம்பவங்கள் நமது பூர்வாசர்யர்களுடைய ஸ்ரீஸூக்தியில் காட்டப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை நாம் கீழே அனுபவிப்போம்.

 • பெரிய நம்பி ஆத்ம குணம் நிறைந்தவர் மற்றும் ராமானுஜர் மீது மிகவும் பற்று வைத்திருந்தார். அவருடைய திருக்குமாரத்திக்கு லௌகிக விஷயத்தில் ஏதேனும் உதவி வேண்டுமனால் கூட அதை ராமானுஜரிடம் தான் கேட்கச்சொல்வார்.
 • ஒருநாள் ராமானுஜர் அவருடைய ஶிஷ்யர்களுடன் நடந்து வரும்பொழுது பெரிய நம்பி அவரை அப்படியே ஸாஷ்டங்கமாக விழுந்து ஸேவித்தார். ராமானுஜர் அதை எற்றுக்கொள்ளவில்லை, ஏனெனில் அதை ஒப்புக்கோண்டால் தன்னுடைய ஆசார்யரிடமிடருந்து ப்ரணாமத்தை எற்றுக்கொண்டதாக ஆகிவிடும். பிறகு பெரிய நம்பியிடம் ஏன் ஸேவித்தீர் என்று கேட்ட பொழுது “ஆளவந்தார் தன்னுடைய ஶிஷ்யர்களுடன் வருவது போல் இருந்தது என்று கூறினார்”. வார்த்தா மாலையில் ஒரு முக்கியமான வரி ஒன்று உள்ளது, அது என்னவென்றால் “ஆசார்யர்கள் தங்களுடைய ஶிஷ்யர்கள் மேல் மிகவும் மரியாதை வைத்திருப்பார்கள்”, இதன்படியே வாழ்ந்தவர் பெரிய நம்பி.
 • மாறநேரி நம்பி (மிகப்பெரிய ஸ்ரீவைஷ்ணவர், ஆளவந்தாருடைய ஶிஷ்யர் மற்றும் நான்காவது வர்ணத்தில் அவதரித்தவர்) பரமபதித்த போது பெரியநம்பி அவருக்கு சரம கைங்கர்யங்களை செய்தார். சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் ராமானுஜரிடம் சென்று இதைக் குறையாகக் கூறினார்கள். ராமானுஜரும் அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக பெரிய நம்பியிடம் கேட்டபோது, ஆழ்வார் திருவுள்ளத்தின் படியும், ஆழ்வார் திருவாய்மொழியில் பயிலும் சுடரொளி (3.7) மற்றும் நெடுமாற்கடிமை (8.10) பதிகத்தில் அருளிசெய்தபடியும் தான் அதைச் செய்ததாக அவர் கூறினார். இந்த ஐதீஹ்யத்தை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் காட்டியுள்ளார். குருபரம்பரா ப்ரபாவத்திலும் இந்தச் சரித்திரம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
 • ஒருநாள் பெரிய பெருமாளுக்கு ஏதொ ஒரு ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்தவுடன், பெரிய நம்பியை பெரிய கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் ப்ரார்த்தித்தார்கள். பெரிய நம்பி கூரத்தாழ்வானிடம் விண்ணப்பம் செய்து அவரையும் தன்னுடன் வருமாறு அழைத்தார், ஏனென்றால் கூரத்தாழ்வான் மட்டுமே பாரதந்த்ரியத்தை முழுமையாக உணர்ந்து நடப்பவர். இதைத் திருவாய்மொழி (7.10.5) ஈடு வ்யாக்யானத்தில் நம்பிள்ளை காட்டியுள்ளார்.
 • இதற்கெல்லாம் மேலாக, சைவ ராஜா ஒருவன் ராமானுஜரை அவனுடைய தர்பாருக்கு அழைத்த பொழுது கூரத்தாழ்வான் ராமானுஜரைப்போல் மாறுவேடத்தில் சென்றார். தள்ளாத வயதிலும் பெரிய நம்பி ஆழ்வானுடன் சென்றார். அந்த ராஜா பெரிய நம்பியினுடைய கண்களைப் பறிக்கவேண்டும் என்று உத்திரவிட்டபோது பெரிய நம்பி அதை ஒப்புக்கொண்டார். மிகவும் வயதானதால் பெரிய நம்பி வலியைத் தாங்க முடியாமல் பரமபதித்தார். அவர் பரமபதிக்கும் பொழுது ஒரு முக்கியமான ஒரு விஷயத்தை நமக்குக் காட்டிக்கொடுத்தார். ஆழ்வானும் அத்துழாயும் (பெரிய நம்பியின் திருக்குமாரத்தி) ஸ்ரீரங்கம் இன்னும் சிறுது தூரம் தான் உள்ளது, அது வரை அவருடைய மூச்சை நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டனர். பெரிய நம்பி உடனேயே நின்று அந்த இடத்திலேயே பரமபதித்தார். ஏனென்றால் யாரெனும் இந்த ஸம்பவத்தைக் கேட்டால், திருவரங்கத்தில் (அல்லது எதேனும் ஒரு திவ்ய தேசத்தில்) வந்து தான் பரமபதிக்க வேண்டும் என்று நினைத்து விடுவார்கள். அது நமது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் பெருமையை குறைத்துவிடும் என்று கூறினார். ஆழ்வார் “வைகுந்தம் ஆகும் தம்மூரெல்லாம்” – ஸ்ரீவைஷ்ணவர்கள் இருக்கும் இடமே ஸ்ரீவைகுந்தம் என்று கூறினார். எனவே நாம் எங்கிருந்தாலும் எம்பெருமானையே சார்ந்து இருக்க வேண்டும். பலர் திவ்யதேசத்தில் இருந்தும் கூட அதன் பெருமையை அறியாமல் இருப்பார்கள். ஆனால் சிலர் திவ்ய தேசத்தை விட்டுத் தொலைவான இடத்தில் இருந்தாலும் எம்பெருமனையே நினைத்துக் கொண்டிருப்பார்கள் (சாண்டிலினி-கருடன் கதையை நினைவில் கொள்க) .

இதன் மூலம் நாம் பெரிய நம்பியின் மேன்மையைத் தெரிந்து கொள்கிறோம். அவர் எம்பெருமானை மட்டுமே சார்ந்து இருந்தார். நம்மாழ்வார் மற்றும் அவர் அருளிச்செய்த திருவாய்மொழியின் மீது பெரிய நம்பி வைத்திருந்த பற்றினால் அவருக்குப் பராங்குஶ தாஸர் என்று மற்றொறு திருநாமமும் உண்டு. பெரிய நம்பி ச்ரிய:பதியினுடைய கல்யாண குணானுபவத்தில் மூழ்கிக்கிடப்பதையும், அதிலே அவர் முழுமையாக திருப்தி அடைந்ததையும் அவருடைய தனியனில்  காணலாம்.

பெரிய நம்பியின் தனியன்:

கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:

பெரிய நம்பியின் வாழி திருநாமம்:

அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே

மேலே, அடுத்த ஆசார்யரான எம்பெருமானார் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/09/01/periya-nambi/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org