Monthly Archives: ஜூலை 2016

கூர நாராயண ஜீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

திருநக்ஷத்ரம்: மார்கழி கேட்டை

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

ஆசார்யன்: கூரத்தாழ்வான், பராசர பட்டர்

பரமபதம் அடைந்த இடம்: ஸ்ரீரங்கம்

நூல்கள்: சுதர்சன சதகம், ஸ்தோத்ர ரத்ன வ்யாக்யானம், ஸ்ரீ சூக்த பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், நித்ய கிரந்தம்(திருவாராதனம்)

சிஷ்யர்கள்: சேமம் ஜீயர், திருக்குருகைப்பிரான் ஜீயர், சுந்தர பாண்டிய தேவன் போன்றோர்

எம்பாரின் இளைய ஸஹோதரர் சிறிய கோவிந்தப் பெருமாளின் குமாரரான இவர் சன்யாசம் பெற்றபின் கூர நாராயண ஜீயர், நலம் திகழ் நாராயண ஜீயர், நாராயண முனி, பெரிய ஜீயர், ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்றெல்லாம் பெயர் பெற்றார்.

emperumanar-azhwan-bhattarஎம்பெருமானார், கூரத்தாழ்வான், பட்டர்

சன்யாசம் பெறுமுன் இவர்க்கொரு குமாரர், “எடுத்தகை அழகிய நாராயணர்” என்றிருந்தார். இவர் முதலில் ஆழ்வானிடமும் பின் பட்டரிடமும் காலக்ஷேபம் கேட்டார்.

இவர் ஸ்ரீரங்கம் கோயிலில் பார்த்தசாரதி ஸந்நிதி, கருடாழ்வார் ஸந்நிதி முதலியன காட்டினார். பெரிய பெருமாளுக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தார்.

இவர்க்கு நெடுங்காலத்துக்குப் பின் வாழ்ந்த வேதாந்தாசார்யர் இவரைத் தம் நூல்களில் பெரிய ஜீயர் என்று குறிப்பிடுகிறார். வேதாந்தாசார்யருக்குப் பின் ஒரு கூர நாராயண ஜீயர் இருந்தார் எனத்  தெரிகிறது. வேதாந்தாசார்யர் தம் ஸ்தோத்ர வ்யாக்யானத்தில் இவரது ஸ்தோத்ர வ்யாக்யானத்தையும், ரஹஸ்ய த்ரய ஸாரத்தில் ஸ்ரீசூக்த பாஷ்யத்தையும் நித்ய கிரந்தத்தையும் குறிப்பிடுகிறார். இவர் ஆழ்வான் சிஷ்யராதலால் நஞ்சீயரை விட வயதில் மூத்தவராக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே, நஞ்சீயரிடத்தில் இருந்து இவரை வேறு படுத்திக் காண்பிக்க, வேதாந்தாசார்யார் இவரை பெரிய ஜீயர் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மாமுனிகள் ஈடு பிரமாணத் திரட்டில் இவரது உபநிஷத் பாஷ்யத்தை மேற்கோள் காட்டுகிறார், மேலும் மாமுனிகள் இவரை “ஸுத்த ஸம்ப்ரதாய நிஷ்டர்” என்று மிகவும் கொண்டாடுகிறார்.

கூரநாராயண ஜீயர் சுதர்சன உபாசகர். ஒருமுறை ஆழ்வான் இவரிடம்,”நாம் ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமானையே முழுதாக நம்புகிறோம், ஸ்வப்ரவ்ருத்தி நிவிருத்தியே அமையும்  நமக்குத் பிற உபாசனைகள்  தகா” என்னவும், இவர்,  “அடியேன் ஸ்வார்த்தமாக ஏதும் பிரார்த்திப்பேனல்லன், எம்பெருமானுக்கும்  பாகவதருக்கும்  மங்களம் வேண்டியே பிரார்த்திப்பேன்”என்றாராம்.

இவரைப் பற்றி ஓரிரு ஐதிஹ்யங்கள் உள,

 • முன்பு நம்பெருமாள் திருக்காவேரியில்  கண்டருளும்போது திடீர் பெள்ளப் பேருக்கு வர, இவர் தம் உபாசனை சித்தியால் அதை நிறுத்தித் தெப்பத்தைச் சேமமாகக் கரை சேர்த்தார். பின் ஸ்ரீ ரங்க நகருக்குள்ளேயே பெரிய திருக்குளம் வெட்டி, தெப்போத்சவம் அதில் ஏற்பாடு செய்தார்.

namperumal-theppamநம்பெருமாளும் நாச்சியார்களும் தெப்பத்தில்

 • ஒருமுறை திருவரங்கப்பெருமாள் அரையர் நோவு சாத்திப் பெரிய பெருமாள் கைங்கர்யம் தடைபட, ஜீயர் சுதர்சன சதகம் செய்தருளி அவர் நோவு தீர்ந்தது, இது சுதர்சன சதக தனியனில் தெளிவு.

thiruvarangapperumal arayarதிருவரங்கப்பெருமாள் அரையர்

எம்பெருமானார்க்குப் பிறகு, ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார் மடத்துப் பொறுப்பு இவர்க்குத் தரப்பட்டது. இதுவே ஸ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம் என்று பிரசித்தி பெற்று இன்றளவும் கோயில் கைங்கர்யங்களைப் பார்த்து வருகிறது.

இப்படிப்பட்ட சிறந்த பெருமைகள் பெற்ற கூர நாராயண ஜீயர் திருவடிகளில் பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் நமக்கும் கிட்டப்  ப்ரார்த்திப்போமாக.

இவரது தனியன்:

ஸ்ரீபராஸர பட்டார்ய சிஷ்யம் ஸ்ரீரங்கபாலகம்
நாராயண முநிம் வந்தே ஜ்ஞாநாதி குணஸாகரம்

ஸ்ரீபராசர பட்டர் சிஷ்யரும் ஸ்ரீரங்கத்தைப் பாதுகாப்பவரும் ஞான பக்தி வைராக்யக் கடலுமான ஸ்ரீ நாராயண முனியை வணங்குகிறேன் என்று இதன் பொருள்.

கூர நாராயண ஜீயர் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2013/12/30/kura-narayana-jiyar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

சோமாசியாண்டான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

ramanujar-sriperumbudhurஎம்பெருமானார்

திருநக்ஷத்ரம்: சித்திரைத் திருவாதிரை

அவதார ஸ்தலம்: காராஞ்சி

ஆசார்யன்: எம்பெருமானார்

கிரந்தங்கள்: ஸ்ரீ பாஷ்ய விவரணம், குரு குணாவளி (எம்பெருமானார் பெருமை பேசுவது), ஷடர்த்த ஸம்க்ஷேபம்

சோம யாகம் செய்யும் குடியில் பிறந்த ஸ்ரீ ராம மிச்ரர் எம்பெருமானார் தாமே நியமித்தருளிய 74 சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவர். ஸோமயாஜியார் என்றும் கூறுவர். ஸ்ரீபாஷ்யத்துக்கு முதலில் வ்யாக்யானம் சாதித்தவர் இவரே. ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் பஞ்சாங்கம் தொகுக்கும் கைங்கர்யம்  இவர் பரம்பரையே இன்றும் செய்து வருகிறது. ச்ருத பிரகாசிகா பட்டர், நாயனாராச்சான் பிள்ளை, வேதாந்தாசார்யர் போன்றோர் தம் வ்யாக்யானங்களில் இவரை உதாஹரிக்கின்றனர். க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் நாயனாராச்சான் பிள்ளை இவரது குரு குணாவளி  ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபதப்ரபந்நாந் ஸ்வகீயகாருண்ய குணேந பாதி |
ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ் ததைவ ஸத்பி: பரிகீர்த்யதேஹி ||

ஆசார்யன் தன்னுடைய பெருங்கருணையால், தன்னிடய் சரணடைந்த சிஷ்யனை ரக்ஷித்து உஜ்ஜீவிக்கிறான்  – அந்த ஆசார்யனே முக்யமானவன். இவ்விஷயம் ஆப்த தமர்களால் காட்டப்பட்டுள்ளது.

சரமோபாய நிர்ணயத்தில் எம்பெருமானார் இவர்க்குச் செய்த பெருங்கருணை விளக்கப் படுகிறது.

எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து, திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க, தம் வழிபாட்டுக்கு ஒரு எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக, சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார். அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து, ”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே. நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில் இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ, விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார். எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார். உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம். நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால் உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார் – இவ்வாறு நம் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்வர்.

சோமாசியாண்டானின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

 • திருநெடுந்தாண்டகம் 27 –  பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – ஆழ்வார் பரகால நாயகியாக ஒரு பக்ஷியைத் திருக்கண்ணபுரத்துக்குத் தூது விடுகிறார். ஆழ்வார் திருக்கண்ணபுரம் என்னும் போதுள்ள பாவம் (உணர்வு/ஆநந்தம்) பிறர்க்கு வாராது எனும் பெரியவாச்சான் பிள்ளை, “அநந்தாழ்வான் திருவேங்கடமுடையான் என்று கூறுவது விசேஷம். பட்டர் அழகிய மணவாளப் பெருமாள் என்று கூறுவது விசேஷம். சோமாசியாண்டான் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று கூறுவது விசேஷம்” என அதே பெயர்களைப் பிறர் சொன்னால் அந்த பாவ விசேஷம் வாராது என்று காட்டுகிறார்.
 • திருவாய்மொழி 6.5.7 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – இதே விஷயம் வேறு மாதிரி வருகிறது. ஆழ்வார் ஆகிய பராங்குச நாயகி திருத்தொலைவில்லி மங்கலம் எம்பெருமான் மீது விசேஷப் பற்றுக் கொண்டுள்ளாள். அவள் அவ்வெம்பெருமான் திருநாமம் சொல்வது, அநந்தாழ்வான், பட்டர், சோமாசியாண்டான் போன்றோர் திருவேங்கடமுடையான், அழகிய மணவாளப் பெருமாள், எம்பெருமானார் என்று சொல்வதுபோல் விசேஷமாய் இருக்கும் என்கிறார்.

வார்த்தாமாலையிலும் சோமாசியாண்டான் விஷயமான சில ஐதிஹ்யங்களுண்டு:

 • 126 – சோமாசியாண்டான் ப்ரபன்னருக்கு எம்பெருமானே உபாயம், பக்தியோ ப்ரபத்தியோ அன்று என்று நிலை நாட்டுகிறார். பகவான் நம்மைக் கைகொள்ள, நம்மைக் காத்துக்கொள்வதில் நம்முடைய முயற்சியை நாம் கைவிட வேண்டும். பக்தியோ ப்ரபத்தியோ உண்மையான உபாயம் அன்று. நாம் சரணடையும் எம்பெருமானே உயர்ந்த பலத்தை அளிப்பதால், அவனே உண்மையான உபாயம்.
 • 279 – சோமாசியாண்டானைவிட வயதில் குறைந்த ஆனால் ஞானம் அனுஷ்டான மிக்க அப்பிள்ளை என்ற ஸ்ரீவைஷ்ணவர், ஆண்டானிடம்,”ஸ்வாமி! தேவரீர் வயதிலும், ஆசாரத்திலும் சிறந்தவர்; ஸ்ரீபாஷ்யம் பகவத் விஷயாதி அதிகாரி; இருந்தாலும், பாகவத அபசாரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கு உம் வேஷ்டியில் ஒரு முடிச்சு முடித்துக்கொள்ளும்!” என்று கூறினாராம்,  பாகவதாபசாரம் மிகக் கொடிது என்பதே விஷயம் – எத்தனை பெரியவராக இருந்தாலும், அபசாரங்களை விலக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை அப்பிள்ளை இங்கு எடுத்துரைத்தார்.
 • 304 – ஸ்ரீ வைஷ்ணவன் விஷய சுகத்தில் ஆசை கொள்ளக் கூடாது என்கிறார் ஆண்டான். ஏனெனில்:
  • ஜீவாத்மா முற்றிலும் பெருமாளை நம்பியுள்ளது என்பதாலும்
  • நம் லக்ஷ்யம் பெருமாளை அடைவதொன்றே, வேறல்ல என்பதாலும்
  • எம்பெருமானுக்கு நமக்குமுள்ள சம்பந்தமே உண்மை, வேறல்ல என்பதாலும்
  • எம்பெருமான், அவன் சம்பந்தம் மட்டுமே சாஸ்வதம், மற்றவை நிலையற்றவை என்பதாலும் விஷய சுகம் தள்ளுபடி.
 • 375 – ஓர் இடையன் பால் திருடியதற்காகத் தண்டிக்கப் பட்டான் என்று கேட்ட ஆண்டான் மூர்ச்சை ஆனாராம்! கண்ணன் எம்பெருமான் யசோதையால் தண்டிக்கப்பட்டதை நினைவு படுத்தியதால் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டாராம்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த சோமாசியாண்டான் திருவடிகளே நமக்குப்  புகல்.

சோமாசியாண்டான் தனியன்:

நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம் ||

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/04/09/somasiyandan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

கூரத்தாழ்வான்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

kurathazhwan

திருநக்ஷத்ரம் : தை, ஹஸ்தம்

அவதார ஸ்தலம் : கூரம்

ஆசார்யன் : எம்பெருமானார்

சிஷ்யர்கள் : திருவரங்கத்தமுதனார்

பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்

அருளிச்செய்தவை : பஞ்ச ஸ்தவம் (அதிமானுஷ ஸ்தவம், ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம்), யோநித்யம் அச்யுத மற்றும் லக்ஷ்மிநாத தனியன்கள்.

 • கி.பி 1010 (சௌம்ய வருஷம், தை மாதம், ஹஸ்த நக்ஷத்ரத்தன்று) ஒரு உன்னத குடும்பத்தில் கூரம் என்னும் கிரமத்தில் உள்ள கூரத்தாழ்வார் மற்றும் பெருந்தேவி அம்மாள் என்பவர்களுக்கு திருக்குமாரராக திருவவதரித்தார். இவருக்கு ஸ்ரீவத்ஸாங்கன் என்ற திருநாமத்தை சூட்டினார்கள்.
 • இவருடைய திருத்தாயார் சிறு வயதிலேயே ஆசார்யன் திருவடி (பரமபதித்தார்) அடைந்தார். சாஸ்திரம் ஒருவர் ஏதாவது ஒரு ஆச்ரமத்தில் நிலையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினாலும் (அதாவது ஒருவனுடைய திருமணத்திற்கு பின் அவன் தர்மபத்னி பரமபதித்தால், அவன் மறுபடியும் திருமணம் செய்து கொண்டு க்ருஹஸ்தாச்ரமத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்) இவருடைய திருத்தகப்பனாரோ மறுபடியும் திருக்கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அதற்கு “நான் திருமணம் செய்து கொண்டால், வரும் புது மனைவி கூரத்தாழ்வானை நன்றாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால், அது மிகப் பெரிய பாகவத அபச்சாரம்” என்று கூறினார். இவருக்கு இத்தகைய உயர்ந்த பண்புகள் சிறு வயதிலேயே இருந்தது.
 • தேவப்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பி இவரை வழிநடத்தி வந்தார்.
 • தன்னுடைய நல்ல குணங்களுக்கு ஏற்றவரான ஆண்டாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
 • எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளையே புகலிடமாகக் கொண்டு அவரிடம் பஞ்ச சம்ஸ்காரத்தையும் பெற்றுக்கொண்டார்.
 • தன்னுடைய அனைத்து செல்வங்களையும் கூரத்திலேயே விட்டு, தன்னுடைய தர்மபத்னியுடன் திருவரங்கம் சென்று அங்கு உஞ்சவ்ருத்தி  (பிக்ஷை) பண்ணி வாழ்ந்து வந்தார்.
 • போதாயன வ்ருத்தி க்ரந்தம் என்ற க்ரந்தத்தை மீட்டெடுக்க  எம்பெருமானாருடன் இவரும் காஷ்மீரம் சென்றார். திரும்பி வரும் வழியில் அந்த க்ரந்தத்தை இழந்த பின்னர், இதைக் கண்டு எம்பெருமானார் வருந்த, அதற்கு கூரத்தாழ்வான் தான் அந்த க்ரந்தம் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டேன் என்று எம்பெருமானாருக்கு ஆறுதல் கூறினார். பிறகு திருவரங்கம் வந்தவுடன், எம்பெருமானாருடைய மிகப் பெரும் க்ரந்தமான “ஸ்ரீ பாஷ்யம்” என்னும் க்ரந்தத்தை எம்பெருமானார் அருளிச்செய்ய அதை இவர் பனை ஓலைகளில் ஏடுபடுத்துவதற்கு உதவி புரிந்தார்.

amudhanar-azhwan-emperumanarஅமுதனார் – ஆழ்வான் – எம்பெருமானார்

 • இவர் திருவரங்கத்தமுதனாரை திருத்திப்பணிகொண்டு எம்பெருமானார் திருவடிகளில் ஆச்ரயிக்கச் செய்தார். எப்படி என்றால், முதலில் ஏகாகம் என்ற சடங்கில் உட்கார்ந்து, அவரிடமிருந்து கோயில் பொறுப்பு மற்றும் சாவியை பெற்று எம்பெருமானாரிடம் ஒப்படைத்தார்.
 • எம்பெருமானாருக்குப் பதிலாக இவர் சைவ அரசனிடம் சென்று, “ருத்ரன் தான் மிகப் பெரியவன்” என்று அரசன் கூறும் கூற்றை மறுத்து பேசி, “ஸ்ரீமன் நாராயணனே மிகவும் உயர்ந்தவன்” என்று ஸ்தாபித்தார். இந்த விவாதத்தின் இறுதியில் ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தை (சம்பிரதாயம்) காப்பதற்காக தன்னுடைய தர்சனத்தை (கண்கள்) இழந்தார்.
 • இவர் திருவரங்கத்தை விட்டு திருமாலிருஞ்சோலைக்குச் (எம்பெருமானார் திருநாராயணபுரத்திற்குச் (மேல்கோட்டை) சென்ற பிறகு) சென்று அங்கு 12 வருடங்கள் இருந்தார்.
 • பஞ்சஸ்தவத்தில் ஒன்றான ஸுந்தரபாஹு ஸ்தவத்தை இவர் கள்ளழகருக்காக (திருமாலிருஞ்சோலை எம்பெருமான்) அருளிச்செய்தார்.
 • எம்பெருமானார் திருவரங்கத்திற்கு எழுந்தருளிவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் இவர் திருவரங்கம் எழுந்தருளினார்.
 • எம்பெருமானார் நியமனத்தினால் இவர் வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாளிடம் அருளிச்செய்தார். இறுதியில் தன்னுடைய அனைத்து சம்பந்திகளுக்கும் மோக்ஷம் வேண்டும் என்றும், முக்கியமாக நாலூரானுக்கும் (ஆழ்வான் கண்களை இழப்பதற்கு இவனும் ஒரு முக்கியமான காரணம்) மோக்ஷம் வேண்டும் என்று கேட்டார்.
 • மொத்தமாக இவர் பஞ்ச ஸ்தவத்தை இவர் அருளிச்செய்தார் – ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம், ஸுந்தரபாஹு ஸ்தவம், வரதராஜ ஸ்தவம் மற்றும் ஸ்ரீ ஸ்தவம். இவை அனைத்துமே வேதாந்த அர்த்தங்களின் சாராம்சமாக விளங்குகிறது.
 • எம்பெருமானர் திருவரங்கம் கோயிலில் இவருக்கு பௌராணிக கைங்கர்யத்தை (பெருமாளுக்கு புராணங்கள் வாசிப்பது) நியமித்தார். மேலும் இவரது காலத்தில் இவரே நமது சம்ப்ரதாயத்திற்கு க்ரந்த நிர்வாகியாக (காலக்ஷேபாதிகாரி) இருந்தார்.

azhwan_bhattarsஆழ்வான் மற்றும் அவருடைய திருக்குமாரர்கள் பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்

 • இவரும், இவருடைய தர்ம பத்னியும், ஸ்ரீரங்கநாதனிடமிருந்து ப்ரசாதத்தை பெற்றனர். அந்த ப்ரசாதத்தை ஸ்வீகரித்ததால், இரண்டு அழகான குழந்தைகளை ஈன்றெடுத்தார்கள். அவர்களுக்கு பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர் என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள்.
 • இவர் அருளிச்செயல் (4000 திவ்ய ப்ரபந்தம்) அனுபவத்தில் மிகவும் மூழ்கி இருந்தார். இதை எப்படி கண்டுகொள்ளலாம் என்றால், எப்பொழுது உபன்யாசத்தை தொடங்கினாலும், சொல்லப்போகும் விஷயத்தின் அனுபவத்தை நினைத்து மிகவும் உருகி அழுவார் இல்லையெனில் மூர்சையுற்றுக்கிடப்பார்.
 • பெரிய பெருமாள் நேரடியாக இவருடன் பேசுவார்.
 • இறுதியில் இவர் பெரிய பெருமாளிடம் மோக்ஷத்தைக் கேட்டார், பெரிய பெருமாளும் தந்தோம் என்றருளினார். இதைத் கேட்டறிந்த எம்பெருமானார், விரைந்து இவரிடம் வந்து, “எனக்கு முன்பாக எப்படி நீர் செல்லலாம்?” என்று கேட்க, அதற்கு இவர் “திருவாய்மொழியில் சூழ்விசும்பணிமுகில் பதிகத்தில் ஆழ்வார் கூறின படி, ஒருவன் பரமபதத்திற்குச் செல்லும் போது, நித்யர்கள் மற்றும் முக்தர்கள் வந்து, புதிய முக்தாத்மாவின் திருவடியை விளக்குவார்கள். இதை எப்படி தேவரீர் வந்து அடியேனுக்குச் செய்வதை அனுமதிக்கமுடியும். அதனால் தான் அடியேன் தேவரீருக்கு முன்பாகச் செல்கிறேன்” என்று கூறினார்.
 • பல ஐதீஹ்யங்கள் (சம்பவங்கள்) கூரத்தாழ்வானைப் பற்றி வ்யாக்யானங்கள் மற்றும் குரு பரம்பரா ப்ரபாவத்தில் விஸ்தரமாக கூறப்பட்டுள்ளது.
 • இந்த ஒரு பக்கத்தில் கூரத்தாழ்வான் வைபவத்தைக் கூறி முடித்து விடமுடியுமா? கூரத்தாழ்வான் வைபவத்தைக் கூறுவதற்கு எனது இயலாமை அல்ல என்றால், இந்த பக்கம் முடிவற்றதாக இருக்கும்.

ஆழ்வானுடைய தனியன்

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே:
யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

ஆழ்வானுடைய மிகச்சிறந்த மகத்துவம் (ஆழ்வானுடைய 1000 வது வருஷம் வைபவத்தன்று, வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம் சாதித்ததை அடிப்படையாகக் கொண்டு எழுதி வெளியிடப்பட்டதை இந்த இணைய தளத்தில் http://koorathazhwan1000.webs.com காணலாம்).

அர்வாஞ்சோ யத்பத ஸரஸிஜ த்வந்த்வமாச்ரித்ய பூர்வே
மூர்த்நா யஸ்யாந்வயமுபகதா தேசிகாமுக்திமாபு:
ஸோயம் ராமனுஜமுனிரபி ஸ்வீயமுக்திம் கரஸ்தாம்
யத் ஸம்பந்தாதமநுத கதம் வர்ண்யதே கூரநாத:

கூரத்தாழ்வானுடைய வைபவத்தை எப்படி நாம் வார்த்தையினால் சொல்லி முடிக்க முடியும் (மொழியைக் கடக்கும் பெரும்புகழான் / வாசா மகோசர)? ஒவ்வொருவருக்கும் எம்பெருமானார் மூலமாகவே மோக்ஷம் கிடைக்கிறது. சிலர் (எம்பெருமானாருக்கு முன்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருமுடி சம்பந்தம் மூலமாகவும், மற்றவர்கள் (எம்பெருமானாருக்கு பின்புள்ள ஆசார்யர்கள்) அவருடைய திருவடி சம்பந்தத்தின் மூலமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். இத்தகைய எம்பெருமானாரே தனக்கு மோக்ஷம் கிடைத்தது கூரத்தாழ்வானாலே என்று கருதினார்.

எம்பெருமானாருடைய ப்ரதான சிஷ்யர்களுள் ஒருவர் கூரத்தாழ்வான். காஞ்சிபுரம் அருகில் உள்ள கூரம் என்ற கிராமத்தில் ஒரு உன்னதமான குடும்பத்தில் அவதரித்தார். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களுக்கு ஒரு உதாரணம் காட்ட வேண்டும் என்றால் அது கூரத்தாழ்வான் தான். இவர் முக்குறும்பை தொலைத்தவர் அதாவது 3 மதங்களை தொலைத்தவர் (வித்யா மதம் – மிகச்சிறந்த ஞானம் உடையவன் என்று பெருமைப்படுவது, தன மதம் – மிகுந்த செல்வம் உடையவன் என்று பெருமைப்படுவது, ஆபிஜாத்ய மதம் – ஒரு உயர்ந்த செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தேன் என்று பெருமைப்படுவது). இவருடைய பெருமையை திருவரங்கத்தமுதனார், இராமானுச நூற்றந்தாதியிலும் “மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான்”, மணவாள மாமுனிகள், யதிராஜ விம்சதியிலும், “வாசாமகோசர மஹாகுண தேசிகாக்ர்ய கூராதிநாத” கூறினார்கள். இவர்கள் இருவருமே கூரத்தாழ்வானுடைய பெருமையை வாக்கினால் சொல்லி முடிக்க முடியாது என்று கூறினார்கள். உண்மையில் இராமானுச நூற்றந்தாதி மற்றும் யதிராஜ விம்சதி இரண்டுமே எம்பெருமானாருடைய பெருமைகளை கூற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அருளிச்செய்யப்பட்டது [இருந்தாலும் ஆழ்வான் பெருமை பேசப்பட்டது].

எம்பெருமானார் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்திற்கு மிகவும் முக்கியமான ஆசார்யராகக் கருதப்படுகிறார். இந்த சம்ப்ரதாயம் உண்மையில் சனாதன தர்மத்தையே (வைதிக மதம் – வேதத்தை அடிப்படையாக கொண்டு விளங்கும் மதம்) பிரதிபலிக்கிறது. மேலும் தத்வத்ரயத்தைப் (சித் – ஜீவாத்மா, அசித் – உயிரற்ற பொருள், ஈச்வரன் – ஸ்ரீமன் நாராயணன்) பற்றி மிகவும் தெளிவாகவும் எல்லையற்ற ஞானத்தையும் உடையது. எம்பெருமானார் பாரத தேசம் முழுவதும் இந்த உயர்ந்த தர்மத்தை போதித்தார். இவர் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் பலவித நிலைகளில் இருந்து பலரையும் திருத்திப் பணிகொண்டார் – போதகர், கோயில் நிர்வாகம், சமூக சீர்திருத்தம், மனித நேயம் உடையவர், மற்றும் பல. வேதம், வேதாந்தம், பகவத் கீதை, சரணாகதியின் விளக்கம் (பகவானே புகல் என்றிருப்பது) மற்றும் வைதீக அனுஷ்டானங்களை விளக்குவதற்காக இவர் ஒன்பது க்ரந்தங்களை அருளிச்செய்தார்.

எம்பெருமானாருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கும் ஒரு நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஏனென்றால் இவருடைய திருத்தகப்பனார் திருவல்லிக்கேணியில் முக்கியமாக இருக்கும் பார்த்தசாரதி எம்பெருமானிடம் ப்ரார்தித்ததால் தான் எம்பெருமானர் இந்த உலகில் அவதரித்தார். திருவல்லிக்கேணி 108 திவ்யதேக்சங்களுள் ஒன்று. இந்த திவ்யதேசத்தை பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

கீதாசாரியனும் ஆழ்வானும் – 1

ஸ்ரீ பார்த்தசாரதி – அர்ஜுனனுக்கு ஸ்ரீபகவத் கீதையை அருளிச்செய்த கீதாசார்யன் . கிருஷ்ணர் தாமே தன் சோதிவாய் மலர்ந்தருளி சாதித்தால் ஸ்ரீ பகவத் கீதை சனாதன தர்மத்திற்கு, அதிலும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு முக்கியமான ப்ரமாணமாகக் கருதப்படுகிறது.

பகவத் கீதையில் 13 வது அத்யாயத்தில் கண்ணன் எம்பெருமான் க்ஷேத்ரம் (உடல்) மற்றும் க்ஷேத்ரஜ்ஞ (ஆத்மா) என்னுமவற்றைப் பற்றி விளக்குகிறார். அவர் கூறும் உபதேசத்தின் ஒரு பகுதியில், பகவானை உணர்ந்த ஒரு ஜீவாத்மாவினுடைய 20 குணங்களைப் பற்றி விளக்குகிறார். இந்த குணங்கள் கூரத்தாழ்வானிடத்தில் மிகவும் தெளிவாக ப்ரகாசிக்கிறது. இப்படிப்பட்ட குணங்களை ஆழ்வானின் வாழ்வில் நடந்த சரித்திரங்களைக் கொண்டு உதாரணங்களுடன் இப்பொழுது அனுபவிப்போம்.

ஸ்ரீ பகவத் கீதா, அத்யாயம் 13, ஸ்லோகம் 7 – 11

அமானித்வம் அதம்பித்வம் அஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் ।
ஆசார்யோபாஸனம் சௌசம் ஸ்தைர்யமாத்மவினிக்ரஹ: ॥

இந்த்ரியார்த்தேஷு வைராக்யம் அநஹங்கார ஏவ ச ।
ஜன்மம்ருத்யுஜராவ்யாதிதுக்க தோஷானுதர்ஸனம் ॥

அஸக்திர் அநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு ।
நித்யம் ச ஸமசித்தத்வம் இஷ்டானிஷ்டேபபத்திஷு ॥

மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிச்ஹாரிணி ।
விவிக்ததேசசேவித்வம் அரதிர்ஜனஸம்ஸதி ॥

அத்யாத்மஞானநித்யத்வம் தத்த்வஞானார்த்த தர்ஸனம் ।
ஏதத் ஞானம் இதி ப்ரோக்தமஜ்ஞானம் யததோந்யதா ॥

 1. அமானித்வம் – பணிவு
 • இவர் உயர்ந்த மற்றும் பணக்காரக் குடும்பத்தில் அவதரித்திருந்தாலும் கூட, ஸ்ரீரங்கத்திற்குச் சென்று எம்பெருமானாருக்கு கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதற்காக இவர் இவை அனைத்தயும் கைவிட்டார்.
 • முன்பொருகாலத்தில் ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானார், தீமைகள் செய்வோரிடமிருந்து கோயிலைக் காப்பாற்றுவதற்காக அதைச் சுற்றி மந்திதிரிக்கப்பட்ட மணலைத் தூவுமாறு பெரிய நம்பியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பெரிய நம்பி அவருடன் யாரேனும் ஒருவர் வரவேண்டும் என்று கேட்டார் – ஆனால் அவர் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் – மேலும் ஏன் நான் மற்றொருவர் பின்னால் நடக்க வேண்டும் என்று அவர் ஒரு கணம் கூட நினைக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஒரு நிமிடம் எம்பெருமானார் இதைச் சிந்தித்து, தன்னுடைய சிஷ்யர்களைப் பார்க்கும் பொழுது, “கூரத்தாழ்வானை அனுப்பும், ஏனென்றால் அவரைவிட மிகவும் எளிமையாக யவரும் இருக்க முடியாது” என்று பெரிய நம்பியே கூறிவிட்டார்.
 1. அதம்பித்வம் செறுக்கின்மை
 • போதாயன வ்ருத்தி க்ரந்தத்தை (ப்ரஹ்ம சூத்திரத்தினுடைய சுருக்கமான வ்யாக்யானம்) மீட்டெடுக்க எம்பெருமானாருடன் இவர் சென்று, அந்த க்ரந்தத்தை மீட்டெடுத்துத் திரும்பினார்கள். அந்த நேரத்தில் எம்பெருமானாரைப் பிடிக்காத ஒரு சிலர் (அங்கு இருக்கும் உள்ளூர் பண்டிதர்கள்) சில வீரர்களை அனுப்பி அந்த க்ரந்தத்தை மீண்டும் அவரிடமிருந்து பறித்து விட்டார்கள். அப்பொழுது எம்பெருமானார் அதிர்ச்சியுடன், மிகுந்த வருத்ததிலும் இருந்தபோது, கூரத்தாழ்வான் எம்பெருமானாரிடம் “தேவரீருக்குக் கைங்கர்யத்தை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் அந்த க்ரந்தம் முழுவதையும் மனனம் செய்துவிட்டேன்” என்றுகூறினார். அந்த நேரத்திலும் கூட அவர் சிறு துளி அளவும் செறுக்கைக் காட்டவில்லை.
 1. அஹிம்ஸா வன்முறையின்மை
 • ஒரு பாம்பு, தவளையை உண்ணும் போது தவளை அழும் சப்தத்தை ஆழ்வான் கேட்டார். உடனே அவரும் வருத்தப்பட்டு அழுது பின்பு மயக்கம் அடைந்தார். இதன் மூலம் இவர் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு வைத்திருந்தது தெரிகிறது. அயோத்தி மக்கள் யவரேனும் ஒருவருக்கு ஏதாவது தீங்கு நடந்தால், பாதிக்கப்பட்ட நபர் வருந்துவதற்கு முன் ஸ்ரீராமர் மிகவும் வருந்தி அழுவார். அதேபோல், யவரேனும் ஒருவருக்கு ஏதாவது நன்மை நடந்தால், அந்த நபர் சந்தோஷப்படுவதற்கு முன் ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷப்படுவார். இவ்வாறு வால்மீகி ராமாணத்தில் கூறிய படி இருப்பதால், இவர் ஸ்ரீராமருடைய அவதாரமாகக் கருதப்படுகிறார்.
 1. க்ஷாந்திர் – சகிப்புத்தன்மை
 • எம்பெருமானார், ஸ்ரீபகவத் கீதா சரமச்லோகத்தின் (சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்…..) அர்த்தத்தை, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றுக்கொண்டார். கடினமான சோதனைகளுக்கு பிறகு தான் இந்த அர்த்தத்தை தனது சிஷ்யர்களுக்கு உபதேசிக்க வேண்டும் என்று ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பி எம்பெருமானாருக்கு அறிவுறுத்தினார். கூரத்தாழ்வான் இந்த அர்த்த விசேஷத்தை உபதேசிக்குமாறு கேட்ட பொழுது, எம்பெருமானார் நம்பி கூறியதைக் கூறினார். அதற்கு ஆழ்வான் 1 மாத காலம் மடத்து வாசலில் உபவாசம் இருந்தார். இறுதியில் சரம ச்லோகார்த்தத்தை எம்பெருமானாரிடம் பெற்றுக் கொண்டார்.
 • இவர் நாலூரானை க்ஷமித்து, அவனுக்கும் (இவர் சைவ ராஜா சபையில் தன் கண்களை இழக்க ஒரு காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கொடுக்குமாறு கேட்டார்.
 1. ஆர்ஜவம் – நேர்மை
 • ஆழ்வான், திருவரங்கத்தமுதனாருக்கு பகவத் விஷயம் உபதேசித்த பிறகு, அமுதனார் இவரிடம் தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும் படி கேட்ட பொழுது, அதற்கு “எம்பெருமானார் திருவடிகளையே சார்ந்து இரும்” என்று ஆழ்வான் கூறினார்.
 • பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை திருத்திய பிறகு, அவரையும் எம்பெருமானாரையே சார்ந்து இருக்குமாறு கூறினார்.
 1. ஆசார்ய-உபாஸனம் – எப்பொழுதும் ஆசார்யரையே சார்ந்திருப்பது
 • எம்பெருமானார் தனது திருவடிகளை திருவரங்கத்தில் இருக்கும் வாய் பேசமுடியாத (ஊமை) மற்றும் காது கேட்காத (செவிடு) ஒருவனுடைய தலையில் வைத்தார். இதைப் பார்த்த கூரத்தாழ்வான் மிகவும் வருந்தி அழுதார். ஏனென்றால் “ஸ்வாசர்யரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை தலையில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்?”. “த்ருணி க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய: ராமானுஜ பதாம்போஜ ஸமாச்ரயண சாலின:” – இந்த ச்லோகத்தினுடைய அர்த்தமும் அதே பொருளைக் குறிக்கிறது.
 1. சௌசம் – தூய்மை – அகத் தூய்மை மற்றும் புறத் தூய்மை

இப்பேர்ப்பட்ட ஆசார்யன் நிச்சயமாக புறத் தூய்மையுடன் தான் இருப்பார் என்று வெளிப்படையாக தெரிகிறது. மேலே அவருடைய அகம் எப்படி தூய்மையாக உள்ளது என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

 • சைவ ராஜவினுடைய செயல்களினால் எம்பெருமானார் திருவரங்கத்தை விட்டு மேல்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஆழ்வான் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவர் கோயிலுக்குச் செல்லும் போது, ஒரு காவலாளி அவரைத் தடுத்து “எம்பெருமானருடைய சம்பந்திகள் யவரேனும் வந்தால் கோயிலினுள் அனுமதிக்கக் கூடாது என்று அரசனின் ஆணை” என்று கூறினார். அதற்கு மற்றொரு காவலாளி “கூரத்தாழ்வான் மிகவும் நல்ல குணங்களுடன் கூடியவர். ஆதலால் நாம் அவரை உள்ளே விடவேண்டும்” என்று கூறினார். அதற்குக் கூரத்தாழ்வான் “என்னிடம் ஏதேனும் நல்ல குணங்கள் இருந்தால் அது எம்பெருமானாருடைய சம்பந்தத்தினாலேயே வந்தது” என்று கூறி கோயிலுக்குள் நுழையாமலேயே சென்று விட்டார். யாரேனும் இவரைத் தனித்து நல்லவர் என்று கருதினால், ஸ்ரீரங்கநாதனை சேவிப்பதற்காகக் கூட அதை அவர் ஒப்புக் கொள்வதில்லை. இந்த அளவுக்கு அவருடைய மனம் தூய்மையாக இருந்தது.
 1. ஸ்தைர்யம் – மன உறுதி
 • “ஏன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் தேவதாந்தரங்களை வணங்குவதில்லை?” என்று சில பக்தர்கள் கேட்டபொழுது, “நமது முன்னோர்கள் (பூர்வாசாரியர்கள் – வேதங்களை நன்றாக அறிந்தவர்கள்) அதைச் செய்ததில்லை, அதனால் நாங்களும் செய்வதில்லை” என்று கூரத்தாழ்வான் கூறினார். இப்படி நமது பூர்வாசாரியர்கள் மீது இவர் ஸ்திரமான மனமும், நம்பிக்கையும் வைத்திருந்தார்.
 1. ஆத்ம-வினிக்ரஹ: சுய கட்டுப்பாடு (வைராக்யம்)
 • அவருடைய திருக்குமாரர்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் (யுவா பருவம்) அவருடய தர்ம பத்னி மற்றும் பலரும், தகுந்த மணப்பெண் பார்க்குமாறு கேட்டபொழுது, “ஈச்வர குடும்பதுக்கு நாம் யார் கரைவது?” என்று கூரத்தாழ்வான் கூறினார். அதாவது “பகவானுடைய குடும்பத்திற்கு நான் ஏன் கவலைப்படவேண்டும்? இது ஸ்ரீரங்கனாதனுடைய கடமை” என்று கூறினார்.
 • எம்பெருமானார் கூரத்தாழ்வானை தேவப்பெருமாளிடம் ஸ்தோத்ரம் செய்து கண்களை அவரிடம் வேண்டுமாறு நியமித்த பொழுது, கூரத்தாழ்வான் அவரிடம், அவருக்கும் நாலூரனுக்கும் (அவருடைய கண்களை இழக்கக் காரணமாக இருந்தவன்) மோக்ஷம் கேட்டார்.
 1. இந்த்ரிய-அர்த்தேஷு வைராக்யம் – புலன்களின் ஆசையை துறத்தல்
 • திருவரங்கத்து அமுதனார் தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் (தங்கம் மற்றும் பல) ஆழ்வானிடம் கொடுத்த பொழுது, கூரத்தாழ்வான் அனைத்தயும் தெருவிலே விட்டெறிந்து விட்டு, எம்பெருமானாரிடம் “தான் அனைத்து தேவையற்ற சுமைகளையும் கைவிட்டேன்” என்று கூறினார்.
 1. அனஹங்கார தற்பெருமை கொள்ளாமல் இருத்தல்
 • மிகச்சிறந்த ஞானியாகவும், மிகுந்த செல்வந்தராக இருந்தலும் கூட, கூரத்தாழ்வான் ஸ்ரீபாஷ்யம் எழுதும் போது, ஒரு நேரத்தில் எம்பெருமானாருக்கு கூரத்தாழ்வான் மீது வருத்தம் ஏற்பட்டது. அதற்கு ஆழ்வான் “எம்பெருமானார் என் ஸ்வாமி, நான்  அவருக்கு தாசன். ஆதனால் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறினார்.
 1. ஜன்ம-ம்ருத்யு-ஜரா-வ்யாதி-துக்க-தோஷானுதர்ஸனம் எப்பொழுதும் இந்த சம்சாரத்தில் உள்ள கஷ்டத்தை பார்பது
 • ஒருமுறை யாரோ ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற விஷயத்தை கேட்டவுடன், கூரத்தாழ்வான் ரங்கநாதர் திருமுன்பே சென்று அழுதார். ஏன்? என்று சிலர் கேட்டதற்கு, “யவரேனும் ஒருவர் இந்த சம்சாரம் என்கிற சிறையில் பிறக்கும் போது, இந்த சம்சாரதிலிருந்து யாரால் விடுவிக்க முடியுமோ அவரிடம் சென்று நாம் அழவேண்டும். ரங்கநாதர் மட்டுமே நாம் அனைவரையும் இந்த சம்சாரத்திலிருந்து விடுவிக்க முடியும் என்பதால் தான், நான் அவரிடம் சென்று இந்த குழந்தை பிறந்ததற்காக அழுதுவிட்டு வந்தேன்” என்று கூறினார்.
 1. அஸக்திர் – பற்றின்மை
 • எம்பெருமானாருடைய திருவடி சம்பந்தத்தை பெறுவதற்காகக் காடு வழியே ஆழ்வானும், ஆண்டாளும் ஸ்ரீரங்கத்திற்குச் செல்லும் போது, ஆழ்வானுடைய தர்மபத்னி ஆண்டாள் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். ஏன் பயம் என்று ஆழ்வான் கேட்டபொழுது, தேவரீர் அமுது செய்ய உபயோகப்படுத்தும் தங்கப் பாத்திரத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். உடனே அதை வாங்கித் தூக்கி எறிந்துவிட்டு, ரங்கநாதரும், எம்பெருமானாரும் இருக்கும்பொழுது இந்தப் பாதிரத்தால் என்ன பயன் என்று கேட்டார். இதன் மூலம் ஆழ்வானுக்கு சிறிதளவும் கூட எந்தப் பொருளிலும் ஆசை இல்லை என்று நன்றாகத் தெரிகிறது.
 1. புத்ரதாரக்ருஹாதிஷு அனபிஷ்வங்க: குழந்தை, மனைவி , வீடு மற்றும் பல விஷயங்களில் பற்றில்லாமல் இருத்தல்
 • அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஸ்ரீரங்கம் சென்று உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார். தனக்கென்று ஒரு குடும்பம் இருந்த பொழுதிலும், இவர் சாஸ்திரத்தை கண்டிப்பாக பின்பற்றி வந்தார்.
 • ஒரு நாள் இவர் தனது சிஷ்யர்களுக்கு ரஹஸ்யத்ரய (திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம்) காலக்ஷேபம் சாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, முதலில் அவருடைய குழந்தைகளை அந்த இடத்தை விட்டுச் செல்லச் சொன்னார். ஆனால் பின்னர் அவர்களை அழைத்து விசேஷார்த்தங்களைக் (உட்கருத்துக்களை) கூறினார். ஏன் என்று கேட்டபொழுது “யாருக்குத் தெரியும் இவர்கள் எவ்வளவு நாட்கள் இருப்பர்கள் என்று. இவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் தங்களுடைய உயிரை இழந்து விடலாம், அதனால் தான் அவர்களுக்கு இதைக் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறினார். இது இவர் தன் குழந்தைகள் மீது உள்ள பற்றினால் அல்ல, அவர்களையும் ஒரு ஆத்மாவாகப் பார்த்து, அவர்களும் உண்மையான அறிவைப் பெற வேண்டும் என்றும், அவர்களும் இந்த சம்சாரதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகச் செய்தார் என்பதை மிகத் தெளிவாக் காட்டுகிறது.
 • இவர் தனது தர்மபத்னியுடன் உடல் சம்பந்தம் வைத்துகொண்டதில்லை என்றும், இவருடைய குழந்தைகள் (பராசர பட்டர் மற்றும் வேதவ்யாச பட்டர்) ஸ்ரீரங்கநாதனுடைய கடாக்ஷத்தினாலேயே அதாவது அவருடைய அரவணைப் பிரசாதத்தினாலேயே அவதரித்தனர் என்றும் கூறுவர்கள்.
 1. இஷ்ட அனிஷ்ட உபபத்திஷு நித்யம் ஸமசித்தத்வம் – விருப்பு வெறுப்பு அற்று ஸம நிலையுடன் இருத்தல்
 • கூரத்தாழ்வான் தனது கண்களை இழந்த போது பெரிதும் வருத்தமில்லாமல் இருந்தார். “பகவானுடைய விரோதியான அந்த ராஜாவைப் பார்த்த பிறகு இந்தக் கண்களினால் என்ன பயன் ?” என்று அவர் கேட்டார். எம்பெருமானார், கூரத்தாழ்வானை, காஞ்சி வரதரிடம் கண்களை திருப்பித் தருமாறு கேட்க வேண்டும் என்று நியமித்த பொழுது, கூரத்தாழ்வானுக்கு ஒன்றும் அவ்வளவாக சந்தோஷமாக இல்லை, அதோடு அவர் “நான் ஏற்கனவே எம்பெருமானார் மற்றும் எம்பெருமானை தன்னுடைய அகக்கண்களால் சேவித்துக் கொண்டிருக்கிறேன், புறக்கண்களுக்கு என்ன அவசியம்?” என்று கேட்டார்.
 1. மயி சாநந்யயோகேன பக்திர் அவ்யபிசாரிணி – என் (கிருஷ்ணன்) மேல் மட்டுமே நிலையான பக்தி
 • மிகவும் பாதகமான நேரத்தில் கூட, அதாவது தனது கண்களை இழந்த போதிலும், திருவரங்கத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் என்ற நிர்பந்தத்திலும் மற்றும் பல நிலைகளிலும் கூரத்தாழ்வான் நிலையான பக்தியோடு எம்பெருமானை மட்டுமே வழிபட்டார். அவர் ஒருகலத்திலும் இதர தேவதைகளிடம் சென்றது இல்லை, அதுமட்டுமல்லாமல் எம்பெருமானிடமும் பக்தியைத் தவிர வேறு எதையும் கேட்டதில்லை.
 1. விவிக்ததேசசேவித்வம் – தனிமையான இடத்தில் வசித்தல்
 • ஒரு ஸ்ரீவைஷ்ணவர், தனிமையான இடத்தில் வசிக்க வேண்டும் என்பது, புனிதமான இடத்தில் வசிப்பது அதாவது அந்தச் சுற்றுச்சூழலில் பகவானைப் பற்றி மட்டுமே பல விசேஷங்கள் நடக்கும் என்பது தான் அதன் பொருள். கூரத்தாழ்வான் எப்பொழுதுமே தனது ஆசார்யரான எம்பெருமானாரோடே வசித்து வந்தார் மற்றும் எப்பொழுதுமே எம்பெருமான், எம்பெருமானாருடைய கைங்கர்யத்தையே சிந்தித்தும் செய்தும் வந்தார்.
 1. அரதிர்ஜனஸம்ஸதி – பொது மக்களிடம் பற்றில்லாமல் இருத்தல்
 • சிறந்த பக்தர்கள் பொது மக்களோடு சேர்ந்து இருந்தாலும் கூட, அவர்கள் மீது பற்றில்லாமல் இருப்பார்கள். கூரத்தாழ்வான் ஒரு சில சாதாரண மக்களோடு (ராஜா,.. மற்றும் பலர்) இருந்தாலும், அதாவது அவரிடம் அறிவுரைகளைக் கேட்கும் சிலரோடு இருந்தாலும் கூட, அவர்களிடம் எந்த வித பற்றையும் காட்டியதில்லை.
 1. அத்யாத்மஞானநித்யத்வம் – நித்யமான ஆத்ம ஞானம்
 • தனது சிறு வயதிலிருந்தே, கூரத்தாழ்வான் ஆத்ம ஞானத்தில் ஈடுபாடு காட்டினார். அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவுக்கு அடிமைப்பட்டது என்பதைத் தெளிவாக இருந்தார்.
 1. தத்த்வ-ஞான அர்த்த சிந்தனம் – உண்மையான அறிவைப் பற்றி சிந்தனை செய்வது
 • அனைத்து ஜீவாத்மக்களும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமைப் பட்டவர்கள் என்று. கூரத்தாழ்வான் எப்பொழுதுமே உண்மையான அறிவைப் பற்றிச் சிந்தனை செய்வார். அதனால்தான் அவர் பரமபதித்த பொழுது, எம்பெருமானார் த்வய மஹா மந்திரத்தைக் கூரத்தாழ்வான் திருச்செவியில் ஓதுமாறு ஸ்ரீவைஷ்னவர்களை நியமித்தார். ஏனென்றால் அதைத் தான் அவர் எப்பொழுதுமே சிந்தனை செய்தார்.

முடிவுரை

இந்த அனைத்து சிறந்த குணங்களும் ஒருவரிடம் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அதனால் தான் பெரியவாச்சான் பிள்ளை “ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே கூரத்தாழ்வானிடத்தில் முழுமையாக  வெளிப்பட்டது” என்று மாணிக்க மாலையில் கூறியுள்ளார். நாம் இதிலுள்ள சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு, நமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி, கூரத்தாழ்வான் மற்றும் அனைத்து பூர்வாசாரியர்களையும் மகிழ்விப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமானுஜ தாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/10/05/kurathazhwan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் –

வங்கிபுரத்து நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

sriramanuja-vangi-purathu-nambi-artஸ்ரீ எம்பெருமானாரும் வங்கிபுரத்துநம்பியும்

திருநக்ஷத்ரம் : அறிய இயலவில்லை

அவதார ஸ்தலம்: அறிய இயலவில்லை (இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சியின் சொந்த ஊர் வங்கிபுரம் அல்லது இவருடைய தகப்பனார் வங்கிபுரத்து ஆச்சி , மணக்கால் நம்பியின்  சிஷ்யரான பிறகு வாழ்ந்த ஸ்ரீரங்கம்)

ஆசார்யன்: எம்பெருமானார்

சிஷ்யர்: சிறியாத்தான்

வங்கிபுரத்து நம்பி அருளிச் செய்தவை : விரோதி பரிஹாரம்

வங்கிபுரத்து ஆச்சி என்பவர் மணக்கால் நம்பியின் சிஷ்யராவார். இவருடைய மகனாகிய வங்கிபுரத்து நம்பி எம்பெருமானரிடம் சிஷ்யராக சென்று சேர்ந்தார்.

வங்கிபுரத்து நம்பி விரோதி பரிஹாரம் என்ற கிரந்தத்தை நம்முடைய  சம்ப்ரதாயம் பெறுவதற்கு காரணமானவர். வங்கிபுரத்து நம்பி எம்பெருமானாரிடம் சென்று, ப்ரபன்னர் ஒருவர் தனது சம்சார வாழ்க்கையில் இருக்கும் பொழுது எதிர்நோக்கும் தடைகள் யாவை என்று வினவ எம்பெருமானாரும் எண்பத்தி மூன்று தடைகளை விவரித்தார். வங்கிபுரத்து நம்பியும் எம்பெருமானரிடமிருந்து தான் செவியுற்றபடி  அந்த எண்பத்தி மூன்று தடைகள் ஒவ்வொன்றிற்கும் மிகவும் விளக்கமான  உரையை அருளிச்செய்தார். இந்த கிரந்தத்தில் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் நன்கு ஆராய்ந்து, அந்த சூழ்நிலைகைளில் எவ்வாறு நடக்க வேண்டும் என்கிற முறையையும் காட்டியுள்ளார்.

வங்கிபுரத்து நம்பி தன்  மகனிற்கு வங்கிபுரத்து ஆச்சி என்ற திருநாமம் சூட்டினார். இவரைப் பற்றி சில ஐதிஹ்யங்களில் காட்டப் பட்டுள்ளன.

நமது வ்யாக்யானங்களில், வங்கிபுரத்து நம்பியின் சிறப்பை சில ஐதிஹ்யங்களில் காணலாம். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

 • நாச்சியார் திருமொழி 9.6 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – ஆண்டாள் இப்பாசுரத்தில் எம்பெருமானுடைய மகத்துவத்தை “மஹாலக்ஷ்மி என்கிற பெரும் செல்வத்தை எம்பெருமானே பெற்றிருக்கின்றார்” என்று விளக்குகின்றாள். இது தொடர்பாக வங்கிபுரத்து நம்பி தனது சிஷ்யரான சிறியாத்தானிடம் “பல மதங்கள், உயர்வான சக்தி ஒன்று இருப்பதை ஒப்புக்கொண்டாலும் , நாம் (ஸ்ரீவைஷ்ணவர்கள்) சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளபடி – ஸ்ரீமந்நாராயணனே ஒப்பற்ற இறைவன் என்றும் அவனே எல்லோருக்கும் அடைக்கலமாக இருப்பவன் என்றும் ஒப்புக்கொள்கிறோம்” என்று உபதேசித்தார்.
 • பெரிய திருமொழி 6.7.4 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – இந்தப் பாசுரத்தில், திருமங்கை ஆழ்வார் “கண்ணன் எம்பெருமான் (பரம்பொருளான தானே) ஒரு முறை வெண்ணை திருடும்போது யசோதையிடம் பிடிபட்டு அவளுக்கு பயந்து அழத்தொடங்கினான்” என்று விளக்கம் அளித்தார். இது தொடர்பாக அழகான நிகழ்ச்சி ஒன்று விளக்கப்பட்டுள்ளது. வங்கிபுரத்து நம்பி ஒரு முறை எம்பெருமானரிடம் தனக்கு திருவாராதன க்ரமத்தை (இல்லங்களில் தினசரி கடவுள் ஆராதனை செய்வது) கற்பிக்கும்படி  வேண்டிக் கொண்டார். எம்பெருமானார் தன்னுடைய நேரமின்மை காரணத்தால் வங்கிபுரத்து நம்பிக்கு இதைக் கற்பிக்க இயலவில்லை. ஆனால் ஒரு முறை நம்பி இல்லாத பொழுது எம்பெருமானார் ஆழ்வானுக்கும் மாருதி சிறியாண்டானுக்கும் (ஹனுமத் தாசர்) திருவாராதன க்ரமத்தைக் கற்பிக்கத் தொடங்கினார். அச்சமயம் வங்கிபுரத்து நம்பி அவ்வறைக்குள் நுழைந்த போது எம்பெருமானார் அவரை பார்த்ததும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். அப்பொழுது எம்பெருமானார் “அடியேன் மனதில் நெடு நாளாக இந்த சந்தேகம் இருந்தது. எதனால் எம்பெருமான் (பரம்பொருளாக இருப்பினும்) வெண்ணை திருடியபொழுது பயந்தார் என்பது தெளிவாகிறது.  அடியேனும் தற்பொழுது அதே உணர்ச்சியில் உள்ளேன். ஏனென்றால் நீர் திருவாராதன க்ரமத்தை கற்பிக்க வேண்டும் என்று கேட்ட போது அடியேனால் அதை உமக்கு உபதேசிக்காமல் ஏனோ இவர்கள் இரண்டு பேருக்கும்  உபதேசிக்கத் தொடங்கிவிட்டேன். அடியேன் ஆசார்யனாகவும் நீர் சிஷ்யராக இருக்கும் பட்சத்தில் உம்மிடம் பயப்பட வேண்டாம் என்றாலும், அடியேன் செய்த காரியத்தால் உம்மைப் பார்த்தவுடன் ஒரு முறை நடுங்கி விட்டேன்” என்று கூறினார். எம்பெருமானார் தான் செய்த தவறை  வெளிப்படையாக ஒப்புக்கொண்டு அதற்கு ஒரு வ்யாக்யானத்தை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார் என்பது அவருடைய பெருந்தன்மையை குறிப்பதாகும்.
 • திருவிருத்தம் – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் ப்ரவேசம் – நம்பிள்ளை தனது வ்யாக்யானத்தில் நம்மாழ்வார் முதலில்  ஒரு சம்சாரியாக இருந்து பின்  எம்பெருமானின் நிர்ஹேதுக (காரணமில்லாத) கருணையினால் ஆழ்வாரானார் என்கிறார். ஆனால் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவராதலால் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வேறுபடுகிறது. சிலர் அவரை முக்தர் என்று (சம்சாரத்தை துறந்தவர்) கூறுகின்றனர். அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் சிஷ்யர்  ஒருவர் நம்மாழ்வாரை முக்தர் அல்லர்  ஆனால் முக்தரைப் போன்றவர் என்றார். சிலர் அவரை நித்யஸூரி என்றனர். வங்கிபுரத்து நம்பி, எம்பெருமானே நம்மாழ்வாராக அவதரித்திருக்கிறார் என்றார்.
 • திருவாய்மொழி 7.2.7 – நம்பிள்ளை ஈடு வ்யாக்யானம் – கங்குலும் பகலும் என்ற  பதிகத்தில் ஆழ்வார் தன்னைத் தாயாக பாவித்து இந்தப் பாடலில் அவருடைய மகளின் நிலைமையை எடுத்துரைப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது . ஒவ்வொரு பாசுரத்திலும் திருவரங்கத்தாய் என்று அழைக்கிறார், ஆனால் இந்தப் பாசுரத்தில்  மட்டும் அவ்வாறு அழைக்கவில்லை. இதற்கு வங்கிபுரத்து நம்பி ” ஒரு நோயாளியின் உடல் நலம் மிகவும் மோசமடைந்தால் மருத்துவர் நோயாளியின் உறவினர்களின் கண்களை நேரே பார்க்காமல் வேறு திசையில் பார்த்துக்கொண்டு நோயாளியின் நிலைமையை எடுத்துரைப்பார். அதுபோல  எம்பெருமானை பிரிந்த துக்கத்தால் தாயும் (ஆழ்வார்),  இந்தப் பாசுரத்தில் திருவரங்கத்தாய் என்று அழைக்கவில்லை”, மேலும் இது அவளுடைய வேதனையை வெளிப்படுத்தும் நிலை என்று விவரிக்கிறார்.
 • திருவாய்மொழி 9.2.8 – நம்பிள்ளை ஈடு வியாக்யானம் – ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ஜயந்தி புறப்பாடு நடக்கும் வேளையில் வங்கிபுரத்து நம்பி இடைப் பெண்கள்  கூட்டத்தில் சேர்ந்து  எம்பெருமானை வழிபட்டார். அந்த கூட்டத்தில் இருக்கும்போது என்ன சொன்னார் என்று முதலியாண்டான் கேட்க  நம்பியும் நான் “விஜயஸ்வ” என்று கூறினேன் என்றார். அதற்கு ஆண்டான் நீங்கள் அந்தப் பெண்கள் கூட்டத்தில் இருக்கும்போது கடினமான ஸமஸ்க்ருத  மொழியில் சொல்லாமல் அவர்கள் சொந்த மொழியில் பெருமாளை வாழ்த்தி, பெருமைப்படுத்தி இருக்க வேண்டும் என்றார்.

வங்கிபுரத்து நம்பி மற்றும் அவருடைய  திருக்குமாரரின் பெருமைகள் வார்த்தா மாலையின் சில ஐதிஹ்யங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. அவைகளை இப்பொழுது நாம் காண்போம்.

 • 71 – வங்கிபுரத்து நம்பி யதிவர சூடாமணி தாஸருக்கு உபதேசிக்கிறார் – மிக நுண்ணியதும், திறனற்றதாகவும் உள்ள ஒரு ஜீவாத்மா, உயர்ந்த மற்றும் எங்கும் வ்யாபித்துள்ள எம்பெருமானை அடைய எந்த ஒரு முயற்சியும் மற்றோருடைய உதவியும் தேவைப்படாது. ஜீவாத்மாவிற்கு இரண்டு வழிகள் உள்ளது – ஒன்று ஆசார்யனின் கிருபையால் த்வய மஹா மந்திரத்தைத் தியானித்து உஜ்ஜீவனம் அடைவது, மற்றொன்று சம்சாரத்திலே உழன்று கொண்டு நித்ய சம்சாரியாக வாழ்வது.
 • 110 – வங்கிபுரத்து நம்பி கிடாம்பி ஆச்சானுக்கு உபதேசிக்கிறார் – அநாதி காலமாக சம்சாரத்தில் உழன்று கொண்டிருக்கும் இந்த ஜீவாத்மா, எம்பெருமானை அடைவதற்கு பெரிய பிராட்டியார் உதவுவாள் என்று எப்பொழுதும் நம்பியிருக்க வேண்டும் .
 • 212 – த்ரைலோகியாள் என்பவள் வங்கிபுரத்து ஆச்சியின் சிஷ்யை. அனந்தாழ்வான் ஸ்ரீரங்கம் வருகை வந்த சமயம் ஆறு மாதம் அவருக்குப் பணிவிடை செய்யச் சென்றாள். அனந்தாழ்வார் சென்ற பின், அவள் திரும்பி ஆச்சியிடம் வந்தாள். ஆச்சி அவள் ஆறு மாதம் வராததற்குக் காரணம் கேட்க   அதற்கு த்ரைலோகியாள் அனந்தாழ்வானுக்குப் பணிவிடை செய்யச் சென்றேன் என்றாள். ஆச்சி அவளிடம் அனந்தாழ்வார் அரிய கொள்கைகள் ஏதாவது கற்றுக் கொடுத்தாரா என்று வினவ, அவளும் ” நான் இத்தனை காலம் தங்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் “எம்பெருமானின் திருவடித் தாமரைகளையே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும்” என்று நான் தங்களிடம் கற்றுக்கொண்டேன். அனந்தாழ்வானிடம் பணி செய்த ஆறு மாதத்தில் நான் தங்களையுடைய திருவடித் தாமரைகளையே சார்ந்து இருக்க வேண்டும் என்று அனந்தாழ்வான் கற்றுக் கொடுத்தார். “நாம் அனைவரும் ஆசார்யனின் திருவடித் தாமரைகளையே முழுவதுமாக நம்பி இருக்க வேண்டும்” என்று இந்த அற்புதமான நிகழ்ச்சி எடுத்துக்காண்பிக்கிறது.

பிள்ளை லோகாசார்யர் சரம ச்லோகத்தின் வங்கிபுரத்து நம்பியின்  விளக்கத்தை முமுக்ஷுப்படியில் சுட்டிக் காட்டியுள்ளார். சரம ச்லோக ப்ரகாரணத்தின் கடைசிப் பிரிவில் சரம ச்லோகத்தின் மகிமை முழுமையாக வெளிக்காட்டப் பட்டிருக்கிறது. “கண்ணன் எம்பெருமான் தனது மகத்துவத்தையும் பெருமைகளையும் வெவ்வேறு நிகழ்ச்சியில் விவரித்த பின்னரே  சரம ச்லோகத்தை  அர்ஜுனனுக்கு அருளினார், அப்பொழுது தான் சுலபமாக அர்ஜுனனால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் ” என வங்கிபுரத்து நம்பி கூறியுள்ளார் என்று தனது முமுக்ஷுபடியின் இருநூற்று அறுபத்து ஐந்தாவது சூத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மாமுனிகள் தனது வ்யாக்யானத்தில், வங்கிபுரத்து நம்பியை ” ஆப்த தமர்” (நம்முடைய ஆன்மீக நலத்தில் முக்கிய இடம் வகிப்பவர்) என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இது வரை நாம், வங்கிபுரத்து நம்பியின் பெருமை மிக்க வாழ்க்கைச் சம்பவங்களை அனுபவித்தோம். அவர் முழுமையாய்  பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொண்டவர் மற்றும் எம்பெருமானாரின் அன்புக்கு   மிகவும் பாத்திரமானவர் ஆவார். நாமும் சிறிதளவாவது பாகவத நிஷ்டையில் ஈடுபாடு கொள்ள வங்கிபுரத்து நம்பியின் திருவடித் தாமரைகளில் பிரார்த்தனை செய்வோம்.

வங்கிபுரத்து நம்பியின் தனியன்

பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம்
வந்தே வங்கிபுராதீஸம் ஸம்பூர்ணாயம் க்ருபாநிதிம்

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/04/10/vangi-purathu-nambi/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வடுக நம்பி

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

vaduganambi-avatharasthalam

திருநக்ஷத்ரம்: சித்திரை அஸ்வினி

அவதார ஸ்தலம்: சாளக்ராமம், கர்நாடகா

ஆசார்யன்: எம்பெருமானார்

பரமபத ப்ராப்தி ஸ்தலம்: சாளக்ராமம்

கிரந்தங்கள்: யதிராஜ வைபவம், ராமானுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம், ராமானுஜ அஷ்டோத்தர சத நாமாவளி

எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் சென்று, முதலியாண்டானை அங்கிருந்த தீர்த்தத்தில் திருவடி நனைக்கச் சொல்லவும், பின்னர் அதில் நீராடிய உள்ளூரார் அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி. இவர் எம்பெருமானாரிடம் பூண்ட ஆசார்ய பக்தி அளப்பரியது, ஈடற்றது. எம்பெருமானார் இவர்க்கு சகல சாரார்த்தங்களும் போதித்தருளினார். அதனாலும் இவர் ஆசார்ய ப்ரதிபத்தி பள்ளமடை ஆயிற்றது.

வடுக நம்பி ஆசார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். தினமும் இவர் எம்பெருமானார் திருவடி நிலைகளுக்கே திருவாராதனம் செய்வர். ஒரு நாள் ஸ்வாமி யாத்திரை கிளம்புகையில் அவரது திருவாராதன எம்பெருமான்களோடு, தாம் பூசித்து வந்த ஆசார்யன் திருவடி நிலைகளையும் மூட்டை கட்ட, அது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார், “நம்பீ! என் செய்தீர்!” என்று கடிந்தபோது, இவர், “ஸ்வாமி! உம் திருவாராதனப் பெருமாளைவிட நம் திருவாராதனப் பெருமாள் குறைவிலரே” என்றாராம்.

எம்பெருமானார் பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்யப் போகும்போதெல்லாம் நம்பியும் உடன் எழுந்தருளி, அவர் பெருமாளின் அழகை அனுபவிக்கும்போது இவர் ஸ்வாமியையே நோக்கியிருக்க, அவர் இவரைப் பெருமாளின் திருக்கண் அழகைப் பாரீர் என்ன, நம்பி, ஆசார்யன் திருவுள்ளம் குளிர, “என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே!” (அதாவது, என்னுடைய ஸ்வாமியான தேவரீரைக் (எம்பெருமானாரை) கண்ட கண்கள் எம்பெருமானையேகூட காணாது) என்று திருப்பாணாழ்வார் திருவாக்கைக் கூறினாராம்.

வடுக நம்பி எப்போதும் எம்பெருமானார் அமுது செய்த மிச்சில் ப்ரஸாதத்தையே ஸ்வீகரித்து அமுது செய்தபின், கைகளை அலம்பாமல் தம் தலையில் துடைத்துக் கொள்வார், பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாதென்பதால். ஒரு நாள், இது கண்டு துணுக்குற்ற எம்பெருமானார் கேள்வி எழுப்பவே, நம்பி தம் கைகளை அலம்பினார். பிற்றைநாள் பெருமாள் பிரசாதம் தாம் உட்கொண்ட மிகுதியை ஸ்வாமி தர வாங்கி உண்ட நம்பி கைகளை அலம்ப எம்பெருமானார் வியப்புற்று வினவ, “தேவரீர் நேற்று உபதேசித்தபடியே அடியேன் செய்தேன்” என்றாராம். அதைக் கேட்ட எம்பெருமானார், ”உம்மிடம் நாம் தோற்றோம்!” என்றார்.

ஒரு முறை வடுக நம்பி எம்பெருமானாருக்கு, திருமடைப்பள்ளியில் பால் அமுது காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதியில் புறப்பாடாக  மடத்து வாசலில் எழுந்தருள, எம்பெருமானார் வெளியே சென்று சேவித்து, வடுக நம்பியை வெளியே வருமாறு கூப்பிட்டார். அப்பொழுது, நம்பியோ, வெளியே வராமல், உள்ளிருந்தபடியே “அடியேன் உம் பெருமாளைக் காண வெளியே வந்தேன் என்றால், என் பெருமாளின் பால் பொங்கிவிடும், ஆதலால் அடியேன் வெளியே வர முடியாது” என்று கூறும்படியான ஆசார்ய நிஷ்டையுடன் திகழ்ந்தார்.

நம்பிகளின் அவைஷ்ணவ உறவினர் சிலர் வந்து, தங்கிச் சென்றதும், நம்பிகள் எல்லாப் பாத்திரங்களையும் எடுத்து வீசிவிட்டு, முதலியாண்டான் திருமாளிகையின் பின்புறத்தில் வைத்திருந்த பழைய உபயோகித்த பாத்திரங்களைப் பயன்படுத்த எடுத்துக் கொண்டார். ஆசார்யர்கள் சம்பந்தம் நம்மை எல்லா வகையிலும் சுத்தி செய்யும் என இப்படி அனுஷ்டித்து விளக்கினார்.

vaduganambi-emperumanar

எம்பெருமானார் திருவனந்தபுரம் சேவிக்கச் சென்றபோது அங்கு ஆகம முறையைச் சீர்திருத்தத் திருவுளம் பற்றினார். ஆனால் எம்பெருமான் திருவுள்ளம் வேறுமாதிரி இருந்ததால், அவன் அவரை இரவோடிரவாக உறங்குகையில் திருக்குறுங்குடி சேர்ப்பித்துவிட்டான். விடிவோரை திருக்கண் மலர்ந்த ஸ்வாமி நீராடித் திருமண் காப்புத் தரிக்க இன்னும் திருவனந்தபுரத்திலேயே இருந்த நம்பியை “வடுகா!” என்றழைக்க, திருக்குறுங்குடி நம்பியே வடுக நம்பி போல் வந்து திருமண் காப்பு தந்தருளினார். பின்னர் எம்பெருமானார் திருக்குறுங்குடி நம்பியையும் தம் சிஷ்யனாய் ஏற்றார்.

எம்பெருமானார் திருநாடலங்கரித்தபின் வடுக நம்பி மீண்டும் சாளக்கிராமம் வந்து எம்பெருமானார் க்ரந்தங்களைக் காலக்ஷேபம் செய்தும், தன் சிஷ்யர்களுக்கு எம்பெருமானார் திருவடிகளே தஞ்சம் என்ற உபதேசம் செய்து கொண்டும், எப்பொழுதும் எம்பெருமானாருக்குத் திருவாராதனம் செய்தும், வேறு ஒரு ஸ்ரீ பாத தீர்த்தமும் ஏற்காமல் ஆசார்ய நிஷ்டையோடே எம்பெருமானார் திருவடியைச் சென்று அடைந்தார்.

வடுக நம்பியின் வைபவம் வ்யாக்யானங்களிலும் ஐதிஹ்யங்களிலும் காணக் கிடைக்கிறது. அவற்றில் சில:

 • பெரியாழ்வார் திருமொழி 4.3.1 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம். இப்பதிகம் “நாவகாரியம்” – சொல்லக்கூடாத சொற்களைச் சொல்லுதல். வடுக நம்பி அருகே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் திருமந்திரம் ஓதவும், நம்பி, ”இது நாவகாரியம்” என்று வெறுத்து அகன்றாராம். ஏனெனில் திருமந்திரம் ஓதுமுன் குருபரம்பரையை ஒத வேண்டும், பிறகே திருமந்திரம் ஒத வேண்டும் என்பது முறை, பிள்ளை லோகாசார்யரும் ஸ்ரீ வசன பூஷணம் 274வது ஸூத்ரத்தில், “ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும்” என்று அருளினார்.
 • பெரியாழ்வார் திருமொழி 4.4.7 – மணவாள மாமுனிகள் வ்யாக்யானம், வடுக நம்பி திருநாடு  எய்தினார் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தகவல் கூறவும், அவர் ஆசார்ய நிஷ்டர் ஆகையால் அவர் ஆசார்யர் திருவடி அடைந்தார் என்று கூற வேண்டும் என்று அருளாளப்  பெருமாள் எம்பெருமானார் திருத்தியருளினாராம்.
 • வடுக நம்பி யதிராஜ வைபவம் என்றோர் அழகிய நூல் சாதித்துள்ளார். அதில் எம்பெருமானாரோடு 700 சன்யாசிகளும், 12000 ஸ்ரீ வைஷ்ணவர்களும், கணக்கற்ற ஸ்ரீ வைஷ்ணவிகளும் இருந்தனர் என்கிறார்.

தம் மாணிக்க மாலையில், பெரியவாச்சான் பிள்ளை, ஆசார்ய பதவி  தனிச் சிறப்புள்ளது, அது எம்பெருமானார் ஒருவருக்கே பொருந்தும் என வடுக நம்பி கூற்று என்கிறார்.

பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீ வசன பூஷணம் 411வது ஸூத்ரத்தில் “வடுக நம்பி ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று சாதிக்கிறார். இதை மாமுனிகள் விளக்குகையில், மதுரகவிகள் முற்றிலும் ஆழ்வாரையே பற்றினாப் போலே நம்பி எம்பெருமானாரையே பற்றினார், ஆண்டானும் ஆழ்வானும் எம்பெருமான் எம்பெருமானார் இருவரையும் பற்றி இருந்தார்கள் என்கிறார்.

இறுதியாக, ஆர்த்தி ப்ரபந்தம் 11ஆம் பாசுரத்தில் மாமுனிகள் எம்பெருமானாரிடம் தம்மையும் அவரையே பற்றியிருந்த வடுக நம்பிகளைப்  போலே ரக்ஷித்தருள வேணும் என்று இறைஞ்சுகிறார். வடுக நம்பி எம்பெருமானாரிடம் கொண்டிருந்த அளவற்ற ஈடுபாட்டினால், எம்பெருமானைத் தனியாக வணங்கவில்லை. ஆசார்யனை நாம் வழிபடும்போது, இயற்கையாகவே அவ்வாசார்யன் அண்டி இருக்கும் எம்பெருமானையும் வழிபட்டதாக ஆகி விடும். ஆனால், எம்பெருமானை மட்டும் வழிபட்டால், ஆசார்யனை வணங்கியதாக ஆகாது என நம் பூர்வர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர். ஆகையால் ஆசார்யனையே எல்லாமாகக் கொண்டு இருப்பதே நம் ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான கொள்கை. இந்த அம்சம் வடுக நம்பியிடம் அழகாகப் பொருந்தியுள்ளது என்கிறார் மாமுனிகள்.

இவ்வாறாக பாகவத நிஷ்டையை ஆசார்ய பக்தியால் அனுஷ்டித்த வடுக நம்பி திருவடிகளே நமக்குப்  புகல்.

வடுக நம்பியின் தனியன்:-

ராமானுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸிநம்
பஞ்சமோபாய ஸம்பந்நம் ஸாளக்ராமார்யம் ஆச்ரயே

அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/04/01/vaduga-nambi/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

அருளாளப் பெருமாள் எம்பெருமானார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – திருப்பாடகம்

திருநக்ஷத்ரம்: கார்த்திகை, பரணி

அவதார ஸ்தலம்: விஞ்சிமூர்

ஆசார்யன்: எம்பெருமானார்

சிஷ்யர்கள்: அநந்தாழ்வான், எச்சான், தொண்டனுர் நம்பி, மருதூர் நம்பி

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளிச்செய்தவை: ஞான சாரம், ப்ரமேய சாரம்

ஆந்திர பிரதேசத்தில் உள்ள விஞ்சிமூரில் பிறந்த இவருடைய இயற்பெயர்  யஞ்ய மூர்த்தி என்பதாகும். அத்வைதியான இவர் ஒரு முறை கங்கையில் ஸ்னானம் செய்யச் சென்றபோது அங்குள்ள வேத பண்டிதர்களை வாதிட்டு அவர்களை வென்று பின்பு மாயாவாத ஸந்யாஸி ஆனார். இவரது பரந்த சாஸ்திர ஞானத்தினால் சிறந்த பேரும் புகழும் பெற்று அதனால் இவரிடம்  நிறைய சிஷ்யர்கள் சேர்ந்தனர். எம்பெருமானாரின் பெரும் புகழை அறிந்த யஞ்ய மூர்த்தி அவருடன் வாதம் செய்ய விரும்பினார். இவர் நிறைய கிரந்தங்களைத் தயார் செய்து, அவைகளை தன் சிஷ்யர்கள் மூலம் தூக்கிக் கொண்டு எம்பெருமானாரைச் சந்திக்க ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.

எம்பெருமானார்  யஞ்ய மூர்த்தியை  வரவேற்று அவர்கள் இருவரும் பதினெட்டு நாட்கள் வாதம் செய்ய ஒப்பு கொண்டு ஏற்பாடு செய்தனர். வாதத்தில் யஞ்ய மூர்த்தி தோற்றால் தன் பெயரை எம்பெருமானாரின் பெயருடன் சேர்த்து கொள்வதாகவும், எம்பெருமானாரின் பாதுகையை தன் சிரசில் வைத்துக்கொள்வதாகவும், எம்பெருமானாரின் சிஷ்யராக ஆவேன் என்று அறிவித்தார். எம்பெருமானாரும் வாதத்தில் தோற்றால் எந்த கிரந்தங்களையும் தொட மாட்டேன் என்று அறிவித்தார்.

விவாதம் ஆரம்பித்து பதினாறு  நாட்கள் சென்றன. அவர்களின் வாதத் திறமை இரண்டு யானைகள்  ஆக்ரோஷமாக சண்டை போடுவது போல இருந்தது. பதினேழாம்  நாள் அன்று   வெற்றி யஞ்ய மூர்த்தியின் பக்கம் இருந்தது போல் தெரிந்தது. எம்பெருமானார் சிறிது  வருத்தத்துடன் தன் மடத்திற்குச்  சென்றார். இரவில் த்யானம் செய்து தனது திருவாராதனப் பெருமாள் பேரருளாளனிடம் நான் இந்த வாதத்தில் யஞ்ய மூர்த்தியிடம் தோற்றால் நம்மாழ்வார், ஆளவந்தார் போன்றோர்களால்  வளர்க்கப்பட்ட பெரும் சம்ப்ரதாயம் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமோ  என்று கேட்டார். மேலும் வீழ்ச்சிக்கு  தானே  காரணம் ஆவேனோ என்று வருத்தமும்  கொண்டார். பேரருளாளன்  கனவில் தோன்றி வருத்தப்பட வேண்டாம் என்றும், தகுந்த புத்திசாலியான சிஷ்யனை  உம்மிடம் கொண்டு வருவதன் நோக்கத்திலேயே  இந்த தெய்வீக லீலை என்றார். பேரருளாளன் மேலும் அவரை ஆளவந்தாரின் மாயாவாதத்தின் மறுப்புகளை வாதத்தில் உபயோகப்படுத்தி  வாதத்தில் யஞ்ய மூர்த்தியை  தோற்கடிக்கும்படி  அறிவுறுத்தினார். எம்பெருமானின் கீர்த்தியை உணர்ந்த  எம்பெருமானார் அதிகாலை வரை தொடர்ந்து அவரின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். பிறகு  நித்யானுஷ்டங்களையும் திருவாராதனத்தையும் முடித்துக்கொண்டு கம்பீரமாக பதினெட்டாம் நாள் வாதத்திற்கு வந்து சேர்ந்தார். எம்பெருமானார் அவைக்கு வந்த உடனேயே அவரின் கம்பீரமான தேஜஸ்ஸை தன்னுடைய அறிவாற்றலினால் உணர்ந்தார் யஞ்ய மூர்த்தி. எம்பெருமாரின் தாமரை பாதங்களை சிரம் தாழ்த்தி வணங்கி அவருடைய பாதுகைகளை தன்னுடைய சிரஸில் வைத்துக்கொண்டு தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டார். எம்பெருமானார் வாதத்தை தொடரலாமா என்று கேட்டதற்கு, யஞ்ய மூர்த்தி “பெரிய பெருமாளுக்கும் தேவரீருக்கும் வேறுபாடு எதுவுமில்லை, வாதத்திற்கு இனி அவசியமில்லை” என்று கூறினார். ஆனால் எம்பெருமானார் க்ருபையுடன், எம்பெருமானின் ஸகுணத்வத்தைத் தக்க பிரமாணத்தை கொண்டு விவரித்தார். யஞ்ய மூர்த்தி அவரிடம் தனக்கு முறையான ஸந்யாஸாச்ரமம் கொடுத்து அருள  வேண்டினார். முதலில் யஞ்ய மூர்த்தியை முன்பு மாயாவாத ஸந்யாஸியாக  இருக்கும் போது சிகையையும்  யக்ஞயோபவீதத்தையும் துறந்ததால்  அதற்குப் பிராயச்சித்தம் பண்ணுமாறு எம்பெருமானார் அறிவுறுத்தினார். அதற்கு யஞ்ய மூர்த்தியும் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு த்ரிதண்டம், காஷாயம் முதலானவற்றைக் கொடுத்து பேரருளாளப் பெருமாளின்  தயையின் ஞாபகார்த்தமாக  அருளாளப் பெருமாள்   என்ற பெயரையும் மற்றும் யஞ்ய மூர்த்தியின் வேண்டுகோளின்படி  எம்பெருமானார் என்ற பெயரையும் இணைத்து அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்ற திருநாமம்  சூட்டினார். மேலும் எம்பெருமானார்  அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை நம்பெருமாளிடமும் அவருடைய திருவாராதனப் பெருமாளையும் சேவிக்கச் செய்து, இந்த ஆசார்ய சிஷ்ய சம்பந்தம் ஏற்பட்டது  தெய்வ லீலை என்று உணர்த்தினார்.

எம்பெருமானாரே  அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்கு அருளிச்செயலையும் அதன் அர்த்தத்தையும், காலப்போக்கில்  கற்பித்தார். அநந்தாழ்வான், எச்சான் முதலானோர்   எம்பெருமானாரின் சிஷ்யர்களாவதற்கு ஸ்ரீரங்கம் வந்த போது , எம்பெருமானார் அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் கீழ் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்தார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அவரது சிஷ்யர்களிடம் எம்பெருமானாரே உபாயம் என்று எப்பொழுதும் நினைக்கும்படி அறிவுறுத்தினார் .

பேரருளாளப் பெருமானுக்கு நித்ய திருவாராதனம் செய்வதே  எம்பெருமானாருக்கு , .அருளாளப் பெருமாள் எம்பெருமானார் செய்யும்  முக்கிய கைங்கர்யம்  என்று கூறப்படுகிறது.

ஒரு முறை இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வந்த பொழுது தெருவில் உள்ள ஒரு ஸ்ரீரங்காவாசியை எம்பெருமானாரின் மடம் எங்கே உள்ளது என்று கேட்க அதற்கு அவர் எந்த எம்பெருமானார்  என்று வினவினார். ஸ்ரீ வைஷ்ணவர்கள் அதற்கு நம் சம்பிரதாயத்தில் இரண்டு எம்பெருமானார் உள்ளனரா  என்று அதிசயித்து  நாங்கள் உடையவர் மடத்திற்கு செல்ல விரும்புகிறோம் என்றவுடன் அந்த ஸ்ரீரங்கவாசி உடையவர் மடத்தை காண்பித்தார். அச்சமயத்தில் அங்கு வந்த அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நடந்ததை அறிந்து இரண்டு மடங்கள் ஒரே பெயரில் இருந்ததால்தான் இந்த குழப்பம் என்று உணர்ந்து தனி மடத்தில் வசிப்பதை விரும்பாமல் தன் மடத்தை இடித்துவிட்டார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நடந்தவற்றை எம்பெருமானாருக்கு எடுத்துரைத்து இனிமேல் தனக்கு  தனியான மடம் வேண்டாம் என்றார். எம்பெருமானார் அதற்கு சம்மதித்து அவருடைய மடத்திலேயே வந்து வசிக்கச் சொன்னார் , மேலும் அவருக்கு  எல்லா  ரஹஸ்யார்த்தங்களையும் விளக்கினார்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் மிக்க க்ருபையுடன் தமிழில் ஞான  சாரம், ப்ரமேய சாரம் என்று  இரண்டு பிரபந்தங்களை எழுதினார். அவை நமது சம்பிரதாயத்தின்  அழகான அர்த்தங்களை வெளியிடுவதாக உள்ளன. இவை ஆசார்யனின்  சிறப்பை வெகு அழகாக விவரிக்கிறது. இந்த பிரபந்தங்களின் கருத்துக்களை பின்பற்றி பிள்ளை லோகாசார்யர் தனது ஸ்ரீவசன பூஷணத்தில் எடுத்துக்காட்டியுள்ளார். இந்த ப்ரபந்தங்களுக்கு மாமுனிகளும் அழகாக வியாக்யானம் செய்துள்ளார்.

பட்டர் அவரது இளம் வயதில் ஆழ்வானிடம் சிறுமாமனிசர் என்ற பாடலுக்கு பொருள் அறியும் வேளையில் முரண்பாடு உள்ளது என்று சொல்ல ஆழ்வான் அதற்கு முதலியாண்டான், எம்பார் மற்றும் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் போன்றோர் உருவத்தில் சிறியவராயினும் பகவத் பக்தியில் நித்யஸூரிகளைப்போல் பெரியவர்கள் என்று விளக்கினார். இந்தச் சரித்திரத்தை நம்பிள்ளையின் ஈடு வ்யாக்யானத்தில் கண்டு கொள்ளலாம்.

எப்பொழுதும் எம்பெருமானாரையே  நினைந்திருக்கும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை நாம் நினைவில் கொள்வோம்.

அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் தனியன்

ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம்
சதுர்த்தாச்ரம ஸம்பந்தம் தேவராஜ முநிம் பஜே

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/11/28/arulala-perumal-emperumanar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம:

OLYMPUS DIGITAL CAMERA

திருநக்ஷத்ரம் : கார்த்திகை புனர்பூசம்

அவதார ஸ்தலம் : காஞ்சிபுரம்

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

சிஷ்யர்கள்: கோயில் அப்பன் (தன்னுடைய பூர்வாச்ரம திருக்குமாரர்), பரவஸ்து அண்ணன், பரவஸ்து அழகிய மணவாள ஜீயர், அண்ணராய சக்ரவர்த்தி, மேல்நாட்டுத் தோழப்பர் நாயனார் எனப் பலர்.

அருளிச் செயல்கள்: அந்திமோபாய நிஷ்டை

திருநாடு அலங்கரித்த திவ்யதேசம் : திருமலை

கோவிந்தர் என்னும் திருநாமத்துடன் மதுரகவி ஐயர் (அரணபுரத்தாழ்வான் திருவம்சம் என்றும் நடுவில் ஆழ்வான் திருவம்சம் என்றும் கூறுவர்) என்பவருடைய திருக்குமாரராக பரவஸ்து திருவம்சத்தில் அவதரித்தார். இவரை கோவிந்த தாஸரப்பன் என்றும் பட்டநாதன் என்றும் பூர்வாச்ரமத்தில் அழைப்பர். ஸந்யாஸாச்ரமம் ஏற்ற பின் பட்டர்பிரான் ஜீயர் என்றும் பட்டநாத முனி என்றும் அழைக்கப் பெற்றார். மாமுனிகள் அஷ்டதிக்கஜங்களில் ஒருவர் (மாமுனிகள் பிரதான சிஷ்யர்களும் நம் சம்பிரதாயத்தின் முக்கியத் தலைவர்களும் அஷ்டதிக் கஜங்கள் ஆவர்). நம் சம்பிரதாயத்திற்குப் பல கிரந்தங்களை அருளிச்செய்த பிள்ளைலோகம் ஜீயர் இவருடைய திருப்பேரனார் ஆவார்.

மாமுனிகளே இவரைத் தன் கோஷ்டியில் கோவிந்தப்பாதசர் (பட்டர் பிரான் ஜீயர்)  என்று போற்றியிருக்கிறார். ஒருமுறை மாமுனிகள் தன் கோஷ்டியார் குழுமியிருந்த போது பட்டர்பிரான் ஜீயர் ஒருவரே “தேவுமற்றறியேன்” என்ற  மதுரகவியாழ்வார் நிலைக்குத் தகுதியானவர் (நம்மாழ்வரைத் தவிர வேறு தெய்வம் அறியேன்) என்று சாதித்தார். பட்டர்பிரான் ஜீயரை மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாருக்கும், தெய்வவாரியாண்டான் ஆளவந்தாருக்கும், வடுக நம்பி எம்பெருமானாருக்கும் போன்று ஒப்பிட்டுக் கூறுவர். எம்பார் எப்படி எம்பெருமானாரை விட்டுப் பிரியாமல் இருந்தாரோ அதேபோல் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளை விட்டுப் பிரியாமல் இருந்தார். இதனால் அனைத்து சாஸ்திரங்களையும் மாமுனிகளிடத்தே நேரடியாய்க் கற்று தொடர்ந்து மாமுனிகளுக்குத் தொண்டு பூண்டார்.

பட்டர்பிரான் ஜீயர் தன் பூர்வாச்ரமத்தில் முப்பது ஆண்டுகளாக மாமுனிகள் போனகம் செய்த சேடத்தை (பெரியோர்கள் சுவீகரித்த பிரசாதத்தின் மீதம்) உண்டார். “மோர் முன்னார் ஐயர்” என்று ப்ரஸித்தமாய் அழைக்கப் பட்டார் (பக்தி ச்ரத்தையாலே மோர் பிரசாதத்தை முதலில் சுவீகரிப்பவர்). வழக்கமாக நாம் முதலில் அருரிசி சோறுடன் பருப்பு – குழம்பு முதலியன உண்டு இறுதியாய் மோர் பிரசாதத்தை உண்போம். ஆனால் பட்டர்பிரான் ஜீயர் மாமுனிகளின் இலையில் அமர்ந்து மாமுனிகள் சுவீகரித்த மோர் பிரசாதத்தை சுவை மாறாமலிருக்க மோர் பிசாதத்தை முதலில் தினப்படி உண்பார் (மோர் பிரசாதம் ஆரம்பித்து பருப்பு – குழம்பு முதலியன). இதனாலேயே இவர் “மோர் முன்னார் ஐயர்” என்று என்னும் திருநாமம் கொண்டு வழங்கப் பெற்றார்.

மாமுனிகள் சிஷ்யர்கள் மாமுனிகளை “பட்டநாத முனிவர அபீஷ்ட தைவதம்” எனக் குறிப்பிடுவர்கள். பட்டர்பிரான் ஜீயரின் அன்பைப் பெற்ற ஆசார்யன் என்று பொருள். அதேபோல் பட்டர்பிரான் ஜீயரை மாமுனிகளிடம் மதுரகவி நிஷ்டை உடையவராய்க் கொண்டாடுவர்.

மாமுனிகள் அந்திம காலத்தில் அண்ணராயச் சக்ரவர்த்தி (திருமலை நல்லான் சக்ரவர்த்தி வம்சத்தில் அவததரித்தவர்) திருமலையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளினார். பெரியகோயிலை மங்களாசாசனம் செய்யது விட்டு, தன் தாயார் சொன்னதை சிரமேற்கொண்டு, பெரிய ஜீயரை தண்டன் சமர்ப்பிக்க பெரிய ஜீயர் மடத்தை அடைந்தார். தன் குடும்பத்துடன் பட்டர்பிரான் ஜீயர் மூலமாக மாமுனிகளை அணுகுகிறார். பெரிய ஜீயர் தன் திவ்ய பாதத்தை அண்ணராயச் சக்ரவர்த்தி சென்னியில் (தலையில்) பதித்து பரிபூரணமாய் அனுகிரஹிக்கிறார். அண்ணராயச் சக்ரவர்த்தியின் திருமலை கைங்கர்யங்களை புகழ்ந்து, பிறகு பட்டர்பிரான் ஜீயரிடம் அண்ணராயச் சக்ரவர்த்தியை தன் சிஷ்யராக ஏற்கும்படி அழைத்தார். மாமுனிகள் “ராமஸ்ய  தக்ஷிணோ பாஹு” என்று சாதித்து , இராமனுக்கு இலட்சுமணன் வலது கரம்போலே – அடியேனுக்குப் பட்டர்பிரான் ஜீயர் வலது கரம் போலே; எனவே பட்டர்பிரான் ஜீயர் உமக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்யது வைத்து, சிஷ்யராய் ஏற்று நம் சம்பிரதாயத்தின் ஒரு தலைவராய் உம்மை நியமனம் பண்ணட்டும் – என சாதித்தருளினார். இதை அண்ணராயச் சக்ரவர்த்தி மகிழ்வுடன் ஏற்று பட்டர்பிரான் ஜீயரை தன் ஆசார்யராக ஏற்றுக்கொண்டார்.

மாமுனிகள் திருநாடு அலங்கரித்த பிறகு பட்டர்பிரான் ஜீயர் திருமலையில் இருந்து பல ஜீவாத்மாக்களை உய்வித்தார். அந்திமோபாய நிஷ்டை என்னும் அற்புதமான கிரந்தத்தை அருளி அதில் நம் ஆசார்ய பரம்பரையைக் கொண்டாடி, எப்படி நம் பூர்வாசார்யர்கள் தம் தமது ஆசார்யர்களை ஆச்ரயித்து இருந்தனர் என விவரித்தருளினார். இந்த கிரந்தத்தின் ஆரம்பத்திலேயே அனைத்து சம்பவங்கள் மற்றும் தாத்பர்யங்கள் அனைத்தும் மாமுனிகள் தன் திருவாய் மலர்ந்து அருளியது என்றும் , தான் எழுதும் கரணமாகவே இருப்பதாயும் அறிவித்திருக்கிறார்.

இதுவரை நாம் பரவஸ்து பட்டர்பிரான் ஜீயரின் விசேஷமான வைபவத்தில் சிலவற்றை அனுபவித்தோம். இவர் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் மாமுனிகளின் அபிமானத்துக்கு மிகவும் பாத்திரமானவர். இவரின் திருவடிகளை வணங்குவதன் மூலம் சிறிதேனும் இவரைப் போல் பாகவதநிஷ்டையைப் பெறுவோம்.

பரவஸ்து பட்டர்பிரான் தனியன்:

ரம்யஜாமாத்ருயோகீந்த்ர பாதஸேவைக தாரகம் |
பட்டநாத முநிம் வந்தே வாத்ஸல்யாதி குணார்ணவம் ||

அடியேன் மகிழ்மாறன் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/06/01/paravasthu-pattarpiran-jiyar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org