Monthly Archives: செப்ரெம்பர் 2015

திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

thirumangai-azhwarதிருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை

அவதாரஸ்தலம்: திருக்குறையலூர்

ஆசார்யன்: விஷ்வக்சேனர்

ஶிஷ்யர்கள்: ஆழ்வாரின் மைத்துனர் இளையாழ்வார், பரகால ஶிஷ்யர், நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான், உயரத் தொங்குவான்

பிரபந்தங்கள்: பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம்

பரமபதம் அடைந்த இடம்: திருக்குறுங்குடி

பெரியவாச்சான் பிள்ளை தம் பெரிய திருமொழி வ்யாக்யான அவதாரிகையில் திருமங்கை ஆழ்வாரைத் தன நிர்ஹேதுக க்ருபையால் திருத்திப் பணிகொண்ட எம்பெருமான் ஆழ்வார்மூலம் ஜீவாத்மாக்களைக் கரை ஏற்றுகிறான் எனும் ஶாஸ்த்ரார்த்தத்தை அழகாகக் காட்டினார்.

ஆழ்வார் தம் ஆத்மாவை வெயிலில் போட்டு, உடம்பை நிழலில் வைத்தார். ஆத்மாவை வெயிலில் வாட விடுவதாவது பகவத் விஷயத்தில் ஈடுபாடின்றி இருத்தல், ஶரீரத்தை நல்ல குளிர் நிழலில் வைப்பதாவது லௌகிக விஷயங்களில் ஈடுபட்டு அநுபவித்து அவற்றையே லக்ஷ்யமாகக் கொள்தல்.”வாசுதேவ தருச் சாயா” என்பதில் சொன்னாப்போலே உண்மையான நிழல் தரும் மரம் வாஸுதேவனே. கிருஷ்ணனாகிய இம்மரம் உண்மையில் நல்ல நிழல் தந்து ஆத்மாவைக் காக்கும். அதி சீதளமும் அத்யுஷ்ணமும் இன்றிப் புலன்களாலும் இந்த்ரிய போகங்களாலும் உண்டாகும் தாபம் தீர்க்கும். ஆழ்வார் விஷயாந்தரங்களில் மிக ஆழ்ந்து கிடந்தவர் திவ்ய தேசத்தெம்பெருமான்களின்   ஸௌந்தர்யத்தில் கண்களையும் மனதையும் திருப்பி, அவ்வனுபவம் இன்றேல் க்ஷணமும் தரிக்கவொண்ணாது  என்ற நிலை எய்தினார். எம்பெருமான் அவர்க்கு இவ்வுலகிலே நித்ய முக்தரின் அனுபவங்களைத் தந்து, பரமபதத்தில் ஆசையைக் கிளர்த்தி, பரமபதமும் தந்தருளினான்.

ஆழ்வாரின் விஷயத்தில் எம்பெருமான் தன்  திறத்தில் முதலில் அத்வேஷத்தைக் கிளப்பி அதாவது ஈஶ்வரன் மீது சேதனனுக்குள்ள வெறுப்பை மாற்றி அவனுக்கு விஷயங்களில் உள்ள பற்றைத் தன்புறம் திருப்பி, பின் ஆபிமுக்யம் விளைத்து அதாவது ஈஶ்வரனே முக்கியம் பிற புலன் அனுபவங்கள் யாவும் வீண் என உணர்த்தி திருமந்திர அர்த்தம் ஆழ்வார் மனதில் இருத்தி ஈஶ்வரனின் ஸ்வரூப ரூப குண விபவங்களில் ருசி ஏற்படுத்தி இந்த ஞானம் இன்றேல் தன் ஸ்வரூபம் தெரியாது என்பதால் மயர்வற மதிநலம் அருளினான். ஆனது பற்றி எம்பெருமான் திறத்தில் தம் நன்றி/க்ருதஞதையை வெளிப்படுத்தவே  ஆழ்வார் பிரபந்தங்கள் அமைந்தன.

பெரியவாச்சான் பிள்ளை ஆழ்வாருக்கு எம்பெருமானின் நிர்ஹேதுக கிருபையால் இது விளைந்தது  என ஆழ்வாரே பாடிய பெரிய திருமொழிப் பாசுரம் 4.9.6 “நும்மடியாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர்” என்பதற்கான வ்யாக்யானத்தில் அழகாகக் காட்டுகிறார்.

இராமானுச நூற்றந்தாதி இரண்டாம் பாசுரத்தில் அமுதனார்,  இராமானுசரைப் பற்றி, “குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன்”என எம்பெருமானாரின் அசைக்கமுடியாத கலியன் பக்தியைப் பாடுகிறார்.

மாமுனிகள் திருவாலி திருநகரி திவ்யதேசங்களுக்குச் சென்ற பொழுது, ஆழ்வாரின் திவ்ய திருமேனி ஸௌந்தர்யத்தில் மிகவும் ஈடுபட்டு, அந்தத் திருமேனி அழகு நம் கண்ணுக்கும் அழகாகப் புலப்படும்படி ஒரு பாசுரத்தை உடனே ஸமர்ப்பித்தார். அதை இப்பொழுது அனுபவிப்போம்.

thiruvali_kaliyan

அணைத்தவேலும், தொழுதகையும், அழுந்திய திருநாமமும், ஓம் என்றவாயும், உயர்ந்த மூக்கும், குளிர்ந்த முகமும், பரந்த விழியும், பதிந்த நெற்றியும், நெறித்த புருவமும், சுருண்ட குழலும், வடித்த காதும், அசைந்த காது காப்பும், தாழ்ந்த செவியும், சரிந்த கழுத்தும், அகன்ற மார்பும் திரண்ட தோளும், நெளிந்த முதுகும், குவிந்த இடையும், அல்லிக்கயிறும், அழுந்திய சீராவும், தூக்கிய கருங்கோவையும், தொங்கலும் தனிமாலையும், தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும், சாற்றிய திருத்தண்டையும், சதிரான வீரக்கழலும் தஞ்சமான தாளிணையும், குந்தியிட்ட கனணக்காலும் குளிரவைத்த திருவடி மலரும், வாய்த்த மணங்கொல்லையும், வயலாலி மணவாளனும், வாடினேன் வாடி(என்று) வாழ்வித்தருளிய, நீலக்கலிகன்றி, மருவலர்தம் உடல்துணிய வாள்வீசும் பரகாலன், மங்கைமன்னனான வடிவே.

உறை கழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல்,
உருகவைத்த மனமொழித்திவ்வுலகளந்த நம்பிமேல்,
குறையைவைத்து மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான்,
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்க, அவன்முனே
மடியொடுக்கி மனமடக்கி வாய்புதைத்து, ஒன்னலார்
கறைகுளித்த வேலணைத்து நின்றவிந்தநிலைமை, என்
கண்ணைவிட்டு கன்றிடாது கலியனாணை ஆணையே.

காதும் சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்,
தாதுபுனை தாளிணையும் தனிச்சிலம்பும்
நீதுபுனை தென்னாலி நாடன் திருவழகைப்போல,
என்னாணை ஓப்பாரில்லையே.

வேலணைத்தமார்பும், விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத்தாழ்த்த வலச்செவியும்
தாளினிணைத் தண்டையும், தார்க்கலியன் கொண்ட நன்முகமும்
கண்டு களிக்குமென்கண்.

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர்
இதுவோதான் வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்.

[வெண்பா இலக்கணம் அமைந்த பாடபேதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]
ஈதோ திருவரசு! ஈதோ மணங்கொல்லை
ஈதோ  எழிலாலி என்னுமூர் — ஈதோதான்
வெட்டுங் கலியன் வெருட்டி நெடுமாலின்
எட்டெழுத்தும் பெற்ற இடம்.

பரகாலனின் இந்த திவ்ய மங்கள விக்ரஹம் எப்போதும் என் நெஞ்சில் உள்ளது. திருத்தோள் தாங்கிய வேலும், எம்பெருமானைத்தொழுத திருக்கரங்களும், அழகிய ஊர்த்வ புண்ட்ரமும், ஓம் என்னும் திருப்பவளமும், கூர்த்த சிறிது தூக்கிய நாசியும், குளிர நோக்கும் விழிகளும்,சுருண்டு இருண்டு கருத்த குழலும், எம்பெருமானிடம் திருமந்த்ரம் கேட்ட செவ்விய செவி மடல்களும், வட்டமான கழுத்தும், அகன்ற திருமார்வும், வழிய திருத்தோள்களும், வனப்பான மேல்முதுகும், குறுகிய இடையும், எழிலார் மாலைகளும்  மனங்கவர் கைவளையங்களும், வீரம் செறிந்த திருக்கழல்களும், மறம் செறிந்த கணைக்கால்களும், பகைவர்களை அழித்து ஒழிக்கும் ஒள் வாளும்  மாமுனிகளின் வர்ணனை.

ஆழ்வார்க்கு பரகாலன், கலியன், நீலன், கலி த்வம்ஶன், கவிலோக திவாகரன், சதுஷ்கவி ஶிகாமணி ஷட் பிரபந்தக் கவி, கலிவைரி, நாலுகவிப் பெருமாள், திருநாவீறுடைய பெருமான், மங்கையர்கோன், அருள்மாரி, மங்கைவேந்தன், ஆலிநாடன், அரட்டமுக்கி, அடையார் சீயம், கொங்குமலர்க் குழலியர் வேள், கொற்றவேந்தன், கொற்றவேல் மங்கை வேந்தன் என்னும் பல பெயர்களால் ப்ரஶித்தி உண்டு.

ஆழ்வாருடைய சரித்திரத்தை இப்பொழுது அனுபவிப்போம்.

ஆழ்வார்  திருவாலி திருநகரி அருகே திருக்குறையலூரில் சதுர்த்த வர்ணத்தில் கார்முக அம்ஶமாய்  தம் நிறத்துக்கேற்ப நீலன் எனும் பெயருடன் அவதரித்தார் என கருட வாஹன பண்டிதரின் திவ்ய ஸூரி சரிதை கூறுகிறது. பால்யத்தில் பகவத் விஷயத்தில் ருசியின்றியே வளர்ந்த இவர் வாலிபத்தில் வழிய திருமேனியும் பொருள் ஆர்வமும் போர்க்கலையில் தேர்ச்சியும் பெற்றுத் திகழ்ந்தார். இவர்தம் போராற்றலறிந்த சோழ பூபதி இவரைத்தன் சேனாபதிகளில் ஒருவர் ஆக்கிக்கொண்டனன்,

அப்போது திருவாலியில் விளையாடவந்த அப்ஸரஸுகளில் திருமாமகள் (குமுதவல்லி) என்பாளை அவள் தோழிகள் ஆட்டமுடிவில் மறந்து விட்டுச் செல்ல, அம்மானிட உடல்தாங்கிய அப்ஸரஸை அவ்விடம் வந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவ வைத்தியன் பரிவினால் காக்கவும், அவள் அழகுபற்றிக் கேள்வியுற்ற நீலன் அவளை மனம் புணர விரும்பினாராக, அவள் ஓர் ஆசார்யனிடம்  பஞ்ச   ஸம்ஸ்காரம் ஆன ஸ்ரீவைஷ்ணவனையே மணப்பேன் என்ன அவரும் உடனே திருநறையூர் நம்பியிடம் ஓடி இரக்க எம்பெருமான் மிக்க கருணையோடு ஶங்க சக்கர முத்திரை செய்து திருமந்தரம் ஓதுவித்தான். பாத்ம புராணத்தில் இது பற்றி

ஸர்வை: ஶ்வேதம்ருதா தார்யம் ஊர்த்வபுண்ட்ரம் யதாவிதி
ருஜுநி ஸாந்தராளாநி  ஹ்யங்கேஷு த்வாதஶஸ்வபி

என்று சொல்லப்படுகிறது.

பன்னிரு ஊர்த்வபுண்ட்ர  தாரணத்தோடு வந்த நீலன் குமுதவல்லியை மணம் புரியக் கேட்க, குமுதவல்லி, தான் எவர் ஒருவர் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஓராண்டு காலம் ததீயாராதனம் செய்கிறார்களோ, அவரையே மணப்பேன் என்று சொல்ல, ஓராண்டு காலம் அவர் 1008 ஸ்ரீ வைஷ்ணவர்க்குத் ததீயாரதனம் செய்ய வேணும் என்றனள். இதுவும் நிறைவேறின பின்பே திருமணம் ஆயிற்று.

ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதநம் பரம்
தஸ்மாத் பரதரம் ப்ரோக்தம் ததீயாராதநம் ந்ரூப

என்று பாத்ம புராண வசனமுண்டிறே.  ஓ அரசனே விஷ்ணு ஆராதனத்திற் காட்டிலும் விஷ்ணு பக்த ஆராதனமே மேலானது என்பதை அறிந்து ஆழ்வார் அதில் ஊன்றித் தம் பொருள் முழுதும் அதிலேயே செலவழிக்கலானார்.

இது கண்ட சிலர் அரசனிடம் பரகாலன் அரசுப் பணம் முழுதும் அடியார்க்கு  உணவளிப்பதில் ஒழித்துவிடுவதாகப் புகார் சொல்ல, அரசன் அவரை அழைத்துவர ஆட்களை அனுப்ப, அவர் அவர்களிடம் ஹிதமாகப் பேசவும் அந்த வீரர்களின் தலைவன் அவரிடம் பணங்கேட்டுப் பேருஞ்சேநையோடு பொருதனன். சினமுற்ற ஆழ்வார் அவர்களைத்தோற்கடித்து  அனுப்ப அரசன் மீண்டும் அனுப்பிய பெரும் சேனையும் தோற்க அவர் வீரங்கண்டுகந்த அரசன் தானே வந்து ஸமாதானம் ஆகினான் என ஆழ்வார் அவனிடம் செல்ல அவன் அவரை வளைத்துப் பிடித்து ஒரு கோயிலில் சிறையிட அவர் மூன்றுநாட்கள் உணவின்றி, திருவேங்கடத்தானையும் பெரிய பெருமாளையும்  தொழுது மறுபடி அவர்களை வென்றார். தேவப்பெருமாள் இவர் கனவில் வந்து  காஞ்சீபுரம் அருகே பெரும் செல்வம் உண்டென்ன, அவர் அரசனிடம் சொல்ல அவன் ஆட்களோடு அவரைக் காஞ்சீபுரம் அனுப்பினான். அங்கு செல்வம் இல்லாதபோது அடியாரை விடாத தேவப்பெருமாள் மீட்டும் அவர் கனவில் வந்து வேகவதிக்கரையில் தோண்டச் சொல்ல அவர்கள் தோண்டி அவர் தந்த வெறும் மணல் நெல்லாக மாறியது  கண்டு அவ்வீரர்கள் வியந்து அரசனிடம் கூறினர். ஆழ்வார் பெருமை உணர்ந்த அவன் தனது பிழையுணர்ந்து அவரிடம் க்ஷமாபனம் வேண்டி. தானும் அறம்  செய்யத் தொடங்கினான். தேவப்பெருமாள் தெரிவித்தபடியே வேகவதிப் படுகையில் ஆழ்வார் பெரும்புதையல் கண்டெடுத்து, அரசனின் கப்பமும் கட்டித் தம் கைங்கர்யமும் நிறைவேறத் திருக்குறையலூர் திரும்பித் தொடர்ந்தார்.

ததீயாராதனம் தொடர்ந்த ஆழ்வார் மீண்டும் பொருள் செலவாகிவிடவே மேல்செலவுக்குப் பொருள் களவில் சேர்க்க எண்ணிச் செல்வர்களைக் கொள்ளையடித்தார். இவ்வளவில் இவரைத் திருத்திப்பணிகொள்ள நினைத்த எம்பெருமான் ஏற்கெனவே சரம புருஷார்த்த நிலை நின்ற இவர் விஷயமாக ஒரு திருவிளையாடல் நிகழ்த்தத் திருவுளம் பற்றினானாக, திருநகரியில் திருமணம் ஆகிய புதுமண மக்களாக அவனும்  பிராட்டியும் வர, நிறையப் பொருளோடு இவர்கள் வருவதைச் ஶிஷ்யர்கள் மூலமறிந்த நீலன் அவர்களைத் திருமணங்கொல்லையில் வழிப்பறிக்கு ஆளாக்கினார். எல்லாப் பொருள்கள் அணிகலன்களையும் எடுத்துக்கொண்ட ஆழ்வாரால் பெருமாளின் திருவடியில் இருந்த மோதிரத்தைக் கழற்ற அவன் திருவடியைப்பிடித்த அளவில் அவர்க்கு மெய்ஞானம் ஸ்வரூபம் பிறந்ததாக, “நீர் யார்” எனக் கேட்க அவன் “நீர் நம் கலியனோ” என்றான். கலியன் எனில் பெருவீரன், ஆனால் அவர் வீரம் அவன் முன் தோற்றுக் காதலாகியது.

thirumangai-adalma

நகைகளை மூட்டை கட்டியவரால் அவற்றைத் தூக்க முடியவில்லை. அவனிடம் நீ மந்த்ரம் போட்டாயோ என்று வினவ அவன் ஆம் என்று அவர் காதில் திருமந்தரம் சொல்ல அவரது மீதி பிரகிருதி மாயைகளும் விலக மயர்வற மதி நலம் அருளப் பெற்றவராய், அந்த ஆனந்த ப்ரகர்ஷத்தை “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று தொடங்கி அவன்பால் தம் க்ருதஜ்ஞதையை அங்கேயே அப்போதே வெளியிட்டாராயிற்று.

வ்ருத்த ஹாரீத ஶ்ருதி

ருசோ யஜுகும்ஷி ஸாமாநி ததைவ அதர்வணாநி ச
ஸர்வம் அஷ்டாக்ஷராந்தஸ்த்தம் யச்சாந்யதபி வாங்மயம்

என்றாப்போலே எல்லாம் அஷ்டாக்ஷர மந்தரப் பொருளே என்ற தத்துவம் உணர்த்தினார்.

நாரதீய புராணம்

ஸர்வவேதாந்த ஸாரார்த்தஸ் ஸம்ஸாரார்ணவ தாரக:
கதிர் அஷ்டாக்ஷரோ ந்ருணாம் அபுநர்பவகாங்க்ஷிணாம்

என்றாப்போலே மோக்ஷம் பெற இச்சித்தானுக்கு வேதாந்த ஸாரம் அதுவே என உறுதிப்படுத்தினார்.

நாராயண உபநிஷத்

ஓமித்யக்ரே வ்யாஹரேத், நம இதி பச்சாத், நாராயணாயேத்யுபரிஷ்டாத், ஓமித்யேகாக்ஷரம், நம இதி த்வே அக்ஷரே, நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி

என்றாப்போலே ஓம் என ஓர் எழுத்திலே தொடங்கி நம என்கிற ஈரெழுத்து நடுவாகி நாராயணாய எனும் பஞ்சாக்ஷரம் ஈறாகி இது அமைந்துள்ளது.என்று ஶாஸ்திரம் இதன் வடிவை வர்ணிக்கிறது.

நாரதீய புராணம்

மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யமுத்தமம்
பவித்ரஞ்ச பவித்ராணாம் மூலமந்த்ரஸ் ஸநாதந:

மந்த்ரங்களில் பரம பவித்ரமானது, ரஹஸ்யங்களில் பரம ரஹஸ்யம், மிகத் தொன்மையானது மூல மந்த்ரமும் ஆனது அஷ்டாக்ஷரம்.

“பேராளன் பேரோதும் பெரியோர்” என ஆழ்வார் திருநாம மஹிமை சொன்னார். “பெற்ற தாயினும் ஆயின செய்யும்” என்றார். எம்பெருமான் பிராட்டிமாரோடும் தன் திவ்ய ஸ்வரூபம் காட்டி நிர்ஹேதுக க்ருபையடியாக அவர்க்கு அருள் செய்தான்.

எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையால் திருமந்த்ரோபதேஶம் பெற்று மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் அவனருளால் திவ்ய மஹிஷிகளோடு கருடாரூடனான அவன் திவ்ய தர்ஶனம் பெற்று ஆனந்தக் களிப்பில் ஆறு ப்ரபந்தங்களில் நம்மோடு தம் பாவநாப்ரகர்ஷத்தைப்பகிர்ந்துகொண்டார். அவை பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திரு எழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருநெடுந்தாண்டகம் என்பன. அவ்வாறு திவ்ய பிரபந்தங்களும் நம்மாழ்வாரின் நான்கு வேதங்களுக்கு ஆறங்கமாய் அமைந்தன. பிராட்டியின் புருஷகாரத்தால் தாம் பெற்ற பேற்றை ஆழ்வார் நாமுமடையத் திருவுளம் பற்றி இத்திவ்ய பிரபந்தங்களை அருளினார்.

ஆசுகவி, விஸ்தாரகவி, மதுரகவி, சித்திரகவி என நால்வகைக் கவிதைகள் யாப்பதில் வல்லவரானதால் ஆழ்வாருக்கு நாலுகவிப் பெருமாள் வந்தார் என ஶிஷ்யர்கள் முழங்க. அங்கு வந்த சைவ அடியார் திருஞான சம்பந்தரடியார்கள் ஆக்ஷேபிக்கவும், ஆழ்வார் சம்பந்தர் விரும்பியபடியே  “ஒரு குறளாய் ஈரடியால்” என்று தொடங்கிப் பாடிய பாசுரங்கள் கேட்டு சம்பந்தர் உகந்து நீரே நாலு கவிப் பெருமாள் எனப் பாராட்டித் தம் கை வேலையும் அளித்துச் சென்றனர். ஆழ்வாரும் எல்லாதிவ்ய தேசங்களுக்கும் ஆவலோடு சென்று மீதூராக் காதலோடு எம்பெருமானை மங்களாசாசநம் செய்து வந்தார்.

ஆழ்வார் திருவரங்கம் செல்ல விழைந்தார். விமாநம் ப்ரணவாகாரம் வேதஶ்ருங்கம் மஹாத்புதம் ஸ்ரீரங்கஸாயீ  பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாஶக: – எனும்படியான திருவரங்கத்தை சேவிக்க ஆழ்வார் திருவுளம் பற்றி ஆங்கே கைங்கர்யமும் செய்ய ஆவலுற்றார்.

ஆச்சர்யகரமான ஸ்ரீரங்க விமானம் ஓங்கார வடிவானது, அதன் முடி வேத ஸ்வரூபம், அங்குள்ள ஸ்ரீரங்கநாதனே ப்ரணவப் பொருள்.

ஆழ்வார் அரங்கன் சன்னிதியைச் சுற்றித் திருமதிள்  எடுக்க விரும்ப, ஶிஷ்யர்கள் அதற்காம்  பெரும் செலவுக்கு, நாகப்பட்டினத்து புத்த விஹாரத்துள்ள பொன் விக்ரஹம் சரியாயிருக்கும் என, அந்த விக்ரஹத்தைக் களவாட அவர் விக்ரஹத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்த ஸ்தபதி வேறு தீவில் இருப்பதைக் கேள்விப்பட்டு உடனே அவர்களோடு அங்கே செல்ல முற்பட்டு, அங்குச் சென்ற அளவில் அவ்விடத்து ஸ்தபதி தன் ஆகாராதிகளை முடித்துவர அவனிடம் இவர், “நாகைக் கோயிலில் களவு போயிற்றாம்” என்று வருந்துவதுபோல் சொல்ல அவன் “ஐயோ யார் குறும்போ இது. நான் விமானத்தில் வழியே பூட்டுப் போட்டேனே, இதுபோல்” என்று திறக்கும் வழியைச் சொல்லிக் காட்ட அதைக் கிரஹித்துக்கொண்ட இவர் அக்கோயிலை உடைத்து உள்ளே புகும் வழி அறிந்துகொண்டார். அங்கே அப்போது ஒரு கப்பல் கிளம்ப, இவர் அந்த மாலுமியிடம் ஒரு கொட்டைப் பாக்கில் பாதியை வெட்டித் தந்து “இதை வைத்துக்கொள்ளும், பயணம் முடிந்து நான் வாங்கிக்கொள்வேன் அதற்கு ஒரு சீட்டு மட்டும் கொடும்” என்ன அவன், “ஆழ்வாரிடம் இக்கப்பலின் அரைப் பாக்குப் பெற்றேன்” என எழுதித் தர, பயணம் தொடங்கியது. நாகப்பட்டினம் சேர்ந்த அளவில் இவர் அவனிடம் கப்பல் சரக்கில் பாதியைத் தமக்குத் தரக் கேட்க, அவன் மறுக்க அவ்விடத்து வணிகர்களிடம் இவர் முறிச்சீட்டுக் காட்டவும் அவர்கள் இவர்க்கு ஸாதகமாகத் தீர்ப்பு சொல்லிப் பொருள் சேர்ந்ததும், மீண்டும் ததீயாராதனம் தொடங்கியது.

பின் ஆழ்வார் ஶிஷ்யர்களோடு அப்புறமதக் கோயிலில் நுழைந்து பளபளக்கும் ஸ்வர்ண விக்ரஹம் கண்டு எடுக்கப்போக, அது “ஈயத்தால் ஆகாதோ இரும்பினால் ஆகாதோ, பூயத்தால் மிக்கதொரு பூதத்தால் ஆகாதோ, தேயத்தேய் பித்தளை நற்செம்புகளாலாகாதோ, மாயப்பொன் வேணுமோ மதித்தென்னைப் பண்ணுகைக்கே” என்று வினவ, ஆழ்வார் தன் மைத்துனனைக் கொண்டு அந்த விக்ரஹத்தை எடுத்தார். ஆழ்வார் அவ்விக்ரஹத்தை எடுத்து ஶிஷ்யர்களோடு அருகிலுள்ள சிற்றூரில் அப்போதே உழுது ஈரமாயிருந்த ஒரு நிலத்தில் பாதுகாப்புக்காகப் புதைத்துச் சென்றனர்.  பின்னர் அவர் அதைத் தோண்டப் போகவும் உழவர்கள் எங்கள் நிலம் நீர் யார் இதில் என்று சினக்க, ஆழ்வார் இது நம் நிலம் நாளை நாம் நிரூபகம் காட்டுவோம் என்று போக, விக்ரஹக் களவறிந்த ஊரார் அறியாமல் அதை உத்தமர் கோயிலில் சென்று சேர்ப்பித்தார்.  அவர்கள் வந்து கேட்க முதலில் ஏதும் அறியேன் என்றவர் பின் பங்குனியில் மழை நின்றபின் விரலளவும் தருகிறேன் என்று எழுதிக் கொடுத்தார். அவர் உடனே அதை உருக்கி விற்றுக் காசாக்கி, பெரிய கோயிலின் பெரு மதிள்  கட்டலானார். இடையில் தொண்டரடிபொடி ஆழ்வார் திருநந்தவநம் வர, அங்கு சுவரை வளைத்து நந்தவனத்தோடே சேர்த்துக் கட்டினார். தொண்டரடிப்பொடிகள்பால் தம் ஆதரத்தால் தம் பூக்குடலைக்கு அருள்மாரி என்று பேரிட்டுக் க்ருதஜ்ஞதானுஸந்தானம் பண்ணினாராயிற்று.

மழைக்காலத்துப்பின் அவர்கள் மீளவும் வந்து விக்ரஹத்தைக் கேட்க, வாக்குவாதம் முற்றி அவர்கள் நீதிபதியிடம் சென்று முறையிட, நீதிபதியின் முன்னால் விரலளவும் தருகிறேன் என்று எழுதிக் கொடுத்துள்ளதால் தன் விரலைத் தருகிறேன் என்கிறார். நீதிபதியும் அதை ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொல்ல, அவர்கள் ஆழ்வாரின் ஸாமர்த்தியத்தைப் புரிந்து கொண்டனர். பின்னர், ஆழ்வார் அந்தக் கட்டிடத் தொழிலாளிகளை அழைத்து, ஒரு தீவில் தன் சொத்து உள்ளதாகவும், அங்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறும் கூறுகிறார். அவர்கள் படகில் செல்லும் பொழுது படகோட்டியிடம் சொல்லி அவரகளை மூழ்கடித்துவிடுகிறார். இறந்தவர்களின் பேரன்கள் ஆழ்வார்மீது சந்தேகப்பட்டு அவர்கள் தம் மூத்தோர் என்னாயினர் என்றும் கேட்க இவர் கவலையுற்றார். பெரிய பெருமாளின் ஆணைப்படி, அவர்களிடம், காவிரியில் நீராடி ஊர்த்வ புண்ட்ர தாரணம் செய்து பெரிய பெருமாளை ஶரண் புகுருங்கோள் என்ன அவர்களும் அவ்வாறே செய்து எம்பெருமான் திருமுன்பே வர, பெரிய பெருமாள் அவர்களை நோக்கி “உங்கள் பாட்டனார்களின் பெயர்களைக் கூப்பிட்டு அழையும்” என, அவரகளும் அவ்வாறு செய்ய, இறந்த ஒவ்வொருவரும் பெருமாளின் பின்புறம் இருந்து வெளி வந்து “நாங்கள் ஆழ்வார் ஸம்பந்தத்தால் மோக்ஷம் பெற்றோம், நீங்களும் அவ்வாறே செய்யுங்கோள்” என, அவர்களும் அவரை ஆசார்யனாய் ஏற்று ஊர் திரும்பினர்.

பெரியபெருமாள் இவரை, உமக்கு ஏதும் ஆசையுண்டோ என வினவ, ஆம் உம் தஶாவதாரம் சேவிக்க வேணும் என்றாராய் அவர் “ஆகில் நீரே ஒரு தஶாவதார   ஸந்நிதி கட்டுவியும்” என்ன அவ்வாறே கட்டினார்.

பெரியபெருமாள் ஆழ்வாரின் மைத்துனரை அழைத்துத்  திருக்குறையலூர்க் கோயிலில் ஆழ்வார் அர்ச்சையை எழுந்தருளப் பண்ணுவித்தார், ஆழ்வாரும் எப்போதும்போல் சேதனர்களை உஜ்ஜீவிப்பித்துக் கொண்டு எம்பெருமானே உபாய உபேயம் என உபதேசித்து எழுந்தருளியிருந்தார்.

திருமங்கை ஆழ்வார் தனியன்:

கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகாரம்
யஸ்ய கோபி: ப்ரகாஶாபிர் ஆவித்யம் நிஹதம் தம:

திருமங்கை ஆழ்வார் வாழி திருநாமம்:

கலந்திருக் கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே

அய்யன் அருள்மாரி கலை ஆய்ந்துரைத்தோன் வாழியே

அந்துகிலும் சீராவும் அணியுமரை வாழியே

மையிலகு வேலணைத்த வண்மை மிகு வாழியே

மாறாமல் அஞ்சலிசெய் மலர்க்கரங்கள் வாழியே

செய்ய கலனுடன் அலங்கல் சேர்மார்பும் வாழியே

திண்புயமும் பணியமர்ந்த திருக்கழுத்தும் வாழியே

மையல் செய்யும் முகமுறுவல் மலர்க்கண்கள் வாழியே

மன்னுமுடித் தொப்பாரம் வலயமுடன் வாழியே

திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-thirumangai.html

திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்

அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2013/01/23/thirumangai-azhwar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

கோயில் கந்தாடை அண்ணன்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீமத் வரதநாராயண குரவே நம:

koilannanகோயில் கந்தாடை அண்ணன் – ஸ்ரீரங்கம் அண்ணன் திருமாளிகை

திருநக்ஷத்ரம்: புரட்டாசி பூரட்டாதி

ஆசார்யன்: மணவாள மாமுனிகள்

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

சிஷ்யர்கள்: கந்தாடை அண்ணன் (திருமகனார்), கந்தாடை இராமாநுஜ ஐயங்கார் மற்றும் பலர்

அருளிச்செயல்கள்: ஸ்ரீ பராங்குச பஞ்ச விம்சதி, வரவரமுனி அஷ்டகம், மாமுனிகள் கண்ணிநுண்சிறுத்தாம்பு

உயர்ந்ததான யதிராஜ பாதுகை என்று அழைக்கப்பட்ட முதலியாண்டான் திருவம்சத்தில், தேவராஜ தோழப்பர் என்பாருடைய திருமகனாராக அவதரித்தார். இவருடைய திரு அண்ணனார் கோயில் கந்தாடை அண்ணன் என்பார். இவருக்கு பெற்றோர் சாற்றிய பெயர் “வரதநாராயணன்”. இந்த ஸ்வாமியே பிற்காலத்தில் மணவாள மாமுனிகளுடைய ப்ரதான சிஷ்யர்களில் ஒருவரும், அஷ்டதிக்கஜங்களில் ஒருவருமாக விளங்கும்படித் திகழ்ந்தார்.

கோயில் அண்ணன் (ப்ராபல்யமாக விளங்கும் திருநாமம்) தன் சிஷ்யர்களோடு ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மாமுனிகளின் க்ருஹஸ்தாஸ்ரமம்) ஸ்ரீரங்கம் வந்து வந்தடைந்தார். அவரை ஸ்ரீரங்கநாதனும், கைங்கர்யாபரர்களும் விமர்சையாக வரவேற்றனர். சில காலம் கழிந்து நாயனார் சந்யாஸ்ரமம் ஏற்றார். அவருக்கு ஸ்ரீரங்கநாதன் அழகிய மணவாள மாமுனிகள் என்று திருநாமம் சாற்றினார் (தன்னுடைய விசேஷ திருநாமமான அழகிய மணவாளன் என்னும் திருநாமத்தையே சாத்தி அருளுதல்). எம்பெருமான் மணவாளமாமுனிகளை பல்லவராயன் மடத்தை (ராமாநுஜர் தங்கியிருந்த ப்ராசீனமான மடம்) ஏற்கச்செய்து ராமாநுஜரைப்போலே பரமபதம் அடையும் வரை அங்கேயே ஸ்ரீரங்கத்தில் தங்கப் பணித்தார். மாமுனிகள் போன்னடிக்கால் ஜீயர் முதற்கொண்டு தன் சிஷ்யர்களை மடத்தைப் புதுப்பிக்கும் படி ஆணையிட்டு, மண்டபத்தை தன் நித்ய காலக்ஷேபதிற்காக உபயோகித்தார். மடத்தைப் புதுப்பிக்கும் போது பிள்ளைலோகாசார்யரின் திருமாளிகயிலிருந்து ஸ்ரீ பாததூளி (பிள்ளைலோகாசார்யர் திருப்பாதம் பட்ட மண்) சேகரித்து அதனைக்கொண்டு கட்டினார் (பிள்ளைலோகாசார்யர் சம்ப்ரதாயதிற்கான அஷ்டாதச ரஹச்யங்களை அருளிச்செய்தார்). ஸ்ரீரங்கத்தில் படையெடுப்பின்போது பாதிக்கப்பட்டிருந்த சத்சம்ப்ரதாயத்தையும், திருவோலக்கங்கங்களயும், ஸ்ரீகோசங்களயும் மீண்டும் நிர்மாணம் செய்வதற்காகவே தன் திருநக்ஷத்ரங்கள் (வாழ்நாள்) முழுவதையும் சமர்ப்பித்தார். இந்த காருண்யத்தைக் கேள்வியுற்ற மக்கள் பலரும் அவரை அடைந்து சிஷ்யர்களாயினர்.

திருமஞ்சனம் அப்பா என்பாருடைய திருமகளார் ஆய்ச்சியார் ஒருமுறை மாமுனிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். ஆய்ச்சியார் மாமுனிகளிடம் பக்தி மிகுந்தமையால் தன்னை சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். மாமுனிகள் முதலில் மறுத்து பின்னர் ஆய்ச்சியாருடைய பக்தியைக்கண்டு சிஷ்யையாக ஏற்றார். இந்த விஷயத்தை தன் பர்த்தா (கணவன்) கந்தாடை சிற்றண்ணர் முதற்கொண்டு யாரிடமும் ஆய்ச்சியார் தெரிவிக்கவில்லை. அப்போது கோயில் அண்ணனுடைய திருத்தகப்பனாருக்கு ச்ரார்த்தம் நடக்கையில் ஆய்ச்சியார் தளிகை செய்யும் கைங்கர்யமேற்று மிக பக்தி ச்ரத்தையுடன் செய்து முடிக்கிறார். ச்ரார்த்தம் முடிந்தவுடன் அனைவரும் மடத்தின் வாயிலருகே சயனிக்கலாயினர்.

அந்த சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பெரிய ஜீயர் மடத்தை விட்டு வெளியில் வருவதைக் கோயில் அண்ணன் கண்டார். உடனே அந்த ஸ்ரீவைஷ்ணவரை அங்கு எழுந்தருளியதன் காரணத்தை வினவினார். அதற்க்கு அந்த ஸ்ரீவைஷ்ணவர் தன் திருநாமம் சிங்கரைய்யர் என்றும் தான் வள்ளுவ ராஜேந்திரம் கிராமத்திலிருந்து வருவதாகவும், பெரிய ஜீயரிடதில் சிஷ்யராக விருப்பம் என்றும் ஆனால் இதுவரை அந்த ஆசை நிறைவேறவில்லை என்றும் தெரிவித்தார். அண்ணன் அதற்கு ஸ்ரீரங்கத்தில் பல ஆசார்யர்கள் இருக்கிறார்கள், தேவரீர் அவர்களில் யாருக்கும் சிஷ்யராகலாம் என்று தெரிவித்தார். அதற்கு அந்த ஸ்ரீவைஷ்ணவர் , தாம் மாமுனிகளிடம் சிஷ்யராகவேண்டும் என்பது பகவானின் திருவுள்ளம் என்று சாதித்தார். அண்ணன் ப்ரமித்துப்போய் மேற்கொண்டு விஷயத்தை அறிய வினவினார். ஆனால் அந்த ஸ்ரீவைஷ்ணவர் விஷயம் மிகவும் ரஹஸ்யம் என்றும் மேற்கொண்டு கூற இயலாதென்றும் கூறினார். அண்ணன் சிங்கரைய்யரை உள்ளே அழைத்து பிரசாதமும் தாம்பூலமும் அளித்து அன்றிரவு அங்கேயே சயனிக்கும்படி செய்தார். இரவுப்போதில் அண்ணன் மற்றும் அவரது திருத்தம்பியார் வெளியே உறங்க, உள்ளே இருந்த ஆய்ச்சியார் சயனிக்க முற்பட்டு , “ஜீயர் திருவடிகளே சரணம், பிள்ளை திருவடிகளே சரணம், வாழி உலகாசிரியன்” என்று சாதித்தார். அதை அண்ணனும், திருத்தம்பியாரும் கேட்டு ஒருவர் உள்ளே செல்ல முற்பட, அண்ணன் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று தடுத்தார்.

அண்ணன் மாமுனிகள் மீது பயபக்தி மிகுந்து அன்றிரவு உறக்கம் வரவில்லை. ஆகவே இரவுப் போதானாலும் சிங்கரைய்யரை மீண்டும் சந்தித்து வினவினார். சிங்கரைய்யர் ஒரு பெரிய சம்பவத்தை விண்ணப்பித்தார். “அடியேன் வழக்கமாக காய்கறிகள் முதலியவைகளை அடியேன் கிராமத்திலிருந்து சேகரித்தது ஸ்ரீரங்கத்திலுள்ள மடங்களுக்கும் திருமாளிகைகளுக்கும் வழங்கி வருகிறேன். ஒரு சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் அடியேனை பெரிய ஜீயர் மடத்திற்கு வழங்கும் படி சொன்னார். அதனை சிரமேற்கொண்டு பெரிய ஜீயர் மடத்திற்கு காய்கறிகளோடு சென்றேன். ஜீயர் அடியேனை பல கேள்விகள் கேட்டார் – “எங்கே இந்த காய்கறிகள் விளைகின்றன? யார் இவைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர்? “எனப் பல கேள்விகள் கேட்டார். “இவைகள் சுத்தமான பகுதியிலிருந்து விளைகின்றன, இவைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது தங்கள் சிஷ்யர்கள் தான்” என்று பவ்யமாக சாதித்தேன். பெரிய ஜீயர் அகமகிழ்ந்து காய்கறிகளை ஏற்றார். மேலும் மாமுனிகள் அடியேனை ஊர் திரும்பு முன் பெரியபெருமாளை சேவித்துச்செல்லச் சொன்னார். அர்ச்சகர் என்னை இந்த முறை யாருக்கு வினியோகித்தீர் என வினவினார். அடியேன் இந்த முறை பெரியஜீயர் மடத்திற்கு சமர்பித்ததைச் சொன்னேன். அர்ச்சகர் இதைக்கேட்டதும் மிகவும் மகிழ்ந்து போய் இனி உமக்கு ஆசார்ய ஸம்பந்தம் கிட்டிவிடும் என சாதித்தார். அடியேனுக்கு தீர்த்தம் (சரணாம்ருதம்), ஸ்ரீசடகோபம், மாலை, அபயஹஸ்தம் முதலியன சாதித்தார். அதனால் அடியேன் எம்பெருமான் அருளுக்கு மிகவும் பாத்திரமானேன். அடியேன் மீண்டும் ஜீயரிடம் சென்று தங்கள் கிருபையால் பெரியபெருமாள் அனுக்ரஹத்திற்கு பாத்திரமானேன் என்று சொல்லி ஊர் திரும்ப நியமனம் பெற்றேன். மடத்திலிருந்த கைங்கர்யபரர்கள் அடியேனுக்கு பிரசாதம் அழித்து வழியனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அடியேன் பிரசாதத்தை ஸ்வீகரித்தேன். அதனால் அடியேன் ஆத்மா சுத்தி அடைத்தது”. அன்றிரவு ச்வப்னம் ஒன்று கண்டேன். அடியேன் பெரியபெருமாள் சந்நிதியில் இருந்தேன். பெரிய பெருமாள் ஆதிசேஷனை நோக்கிக் காட்டினார் “அழகிய மணவாள ஜீயர் ஆதிசேஷனுக்குச் சமம். நீர் அவருடைய சிஷ்யனாகக் கடவது”. அந்த நேரம் முதல் மாமுனிகளுடய சிஷ்யனாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்” – என்று முடித்தார் சிங்கரைய்யர். இதைக்கேட்ட அண்ணன் ஆழ்ந்து சிந்தித்து சயநித்தார்.

அண்ணன் கண்மலர்ந்து ஒரு ச்வப்னம்  கண்டார். ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மச்சில் (மாடி) படிகளிலிருந்து இறங்கிவந்து சவுக்கினால் அண்ணனை அடிக்கத் தொடங்கினார். அண்ணனால் அதைத் தடுக்க முடியும் ஆயினும் தான் ஏதோ தவறு செய்ததாக எண்ணித் தடுக்கவில்லை. பிறகு அந்த சவுக்கு உடைந்து விடுகிறது. அந்த ஸ்ரீவைஷ்ணவர் படிகளின் வழியாக அண்ணனை ஒரு சன்யாசியிடம் அழைத்துச் செல்கிறார். அந்த சன்யாசி மிகவும் கோபமாகக் காணப் படுகிறார். மேலும் அவரும் ஒரு சவுக்கைக் கொண்டு அண்ணனை அடிக்கிறார். சவுக்கு உடைந்து விழுகிறது. உடனே அந்த ஸ்ரீவைஷ்ணவர் சன்யாசியை நோக்கி “இவர் ஒரு சிறு பிள்ளை. தான் செய்வதறியாது செய்துவிட்டார்” என்று தெரிவிக்கிறார். சன்னியாசியும் சாந்தமடைந்து அண்ணனைத் தன் திருமடியின் மீது அமரச் செய்து “நீயும் உத்தம நம்பியும் தவறு செய்திருக்கிறீர்கள்” என்று சாதித்தார். “மணவாள மாமுனிகளின் பெருமை அறியாது, குழப்பமடைந்து தவறிழைத்து விட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று அண்ணன் தன் கலக்கத்தை தெரிவித்தார். அன்போடு அந்த சன்யாசி “நான் பாஷ்யகாரர் (ஸ்ரீ ராமாநுஜர்), இந்த ஸ்ரீவைஷ்ணவர் முதலியாண்டான். நான் ஆதிசேஷன். இங்கு மாமுனிகளாக அவதாரம் செய்திருக்கிறேன். நீரும் உமது சொந்தங்களும் சிஷ்யர்களாக அடைந்து உய்யப் பாருங்கள்” என்று சொன்னார். உடனே அண்ணனுக்கு ச்வப்னம் கலைந்து திடுக்கிட்டு விழிக்கிறார். மிகுந்த பூரிப்புடன் தன் சகோதரர்களிடம் இதைத் தெரிவிக்கிறார். உறங்கிக் கொண்டிருந்த ஆய்ச்சியாரை எழுப்பி ச்வப்னத்தில் கண்டதைச் சொல்கிறார். ஆய்ச்சியாரும் மாமுனிகள் தன்னை உய்வித்ததாகவும், ஆசீர்வதித்ததாகவும் அருளினார். அண்ணன் அதைக்கேட்டு மிகவும் அகமகிழ்ந்தார். உடனே சிங்கரையரிடமும் சென்று ச்வப்னம் பற்றிக் கூறினார். பிறகு காவிரிக்குச் சென்று தன் நித்ய அனுஷ்டானங்களைச் செய்கிறார்.

அடுத்து அண்ணன் தன திருமாளிகை அடைந்து, உத்தம நம்பி மற்றும் கந்தாடை திருமேனி சம்பந்திகளை அழைக்கிறார். பலர் அண்ணன் திருமாளிகையை அடைந்து இதே போல் தங்களுக்கும் அதே ச்வப்னம் வந்ததைச் சொல்லி ஆச்சர்யமடைந்தனர். எல்லோரும் எம்பா (ஆசார்யர் லக்ஷ்மணாசார் என்பாருடைய திருப்பேரனார்) என்னும் ஆசார்ய ச்ரேஷ்டரை அடைந்து விவரத்தை சொல்ல, எம்பா மிகவும் சீற்றமுற்றார். இன்னொரு ஜீயரிடம் தஞ்சம்புகுதல் நம் குடும்பத்திற்கு எந்த நன்மையும் செய்யது என்றார். இதையே அங்கு பலரும் வழிமொழிந்தனர்.

கந்தாடை திருமேனி சம்பந்திகளோடே அண்ணனும் ஜீயர் மடத்தை அடைந்து ஜீயரோடே தஞ்சம் புகுந்தனர். அண்ணன் தன்னுடைய சிஷ்யரான திருவாழியண்ணன் மற்றும் மாமுனிகளுடைய நெருங்கிய சிஷ்யரான சுத்த சத்வம் அண்ணனையும் மாமுனிகளை அடைய உடன் கூட்டிச்சென்றார். சுத்த சத்வம் அண்ணன் சதா மாமுனிகளுடய வைபவங்களை அண்ணனுக்கு சொல்லி வந்தார். ஆகவே அதுவே அண்ணனுக்கு சுத்த சத்வம் அண்ணாவின் உதவியை நாடக் காரணமாய் அமைந்தது. கோயில் அண்ணன் அடுத்து தன் திருமேனி சம்பந்திகளோடே மாமுனிகள் மடத்தை அடைந்தனர். அந்த சமயம் மாமுனிகள் திருமலை ஆழ்வார் மண்டபத்தில் காலக்ஷேபம் செய்து கொண்டிருந்தார். அண்ணன் குறுக்கிட விரும்பாமல், ஆய்ச்சியாரிடம் விஷயத்தைத் தெரிவிக்க, ஆய்ச்சியார் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை அனுப்பி மாமுனிகளிடம் சென்று விஷயத்தை தெரிவிக்கச் சொன்னார். அந்த ஸ்ரீவைஷ்ணவர் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு மாமுனிகளிடம் தவறான செய்தியைச் சொன்னார் (அதாவது மாமுனிகளிடம் வாக்குவாதம் செய்வதற்காக வந்துள்ளனர் என்று சொல்லி விட்டார்). மாமுனிகள் குழப்பத்தைத் தவிர்க்க மடத்தின் புழைக்கடைக்கு சென்றார். இந்த சமயம் அண்ணனும், திருமேனி சம்பந்திகளும் வானமாமலை ஜீயரை அடைந்து தண்டன் சமர்ப்பித்தனர். ஆய்ச்சியார் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தேடி விஷயத்தை வினவி பிறகு உண்மையான விஷயத்தை மாமுனிகளிடம் தெரிவித்தார். மாமுனிகள் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் திருத்திப் பணிகொண்டு, அண்ணனையும் அவர் திருமேனி சம்பந்திகளையும் வெகுவாக வரவேற்றார். கோயில் அண்ணனும் திருமேனி சம்பந்திகளும் ஜீயருடைய பாத கமலங்களில் விழுந்து வணங்கி பழங்கள், பூ முதலியவைகளை சமர்ப்பித்தனர். மாமுனிகள் “திருப்பல்லாண்டு” மற்றும் நம்மாழ்வாருடைய “பொலிக! பொலிக! பொலிக!” என்னும் திருவாய்மொழிப் பதிகத்துக்கும் சுருங்க விவரணம் அளித்தார். அண்ணன் பொன்னடிக்கால் ஜீயர் வாயிலாக தம்மையும் தம் குடும்பத்தினரையும் ஆச்ரயித்து ஜீயரின் சிஷ்யராக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். மாமுனிகள் தனித்ததோர் ஒரு இடத்திற்கு சென்று அண்ணனை பொன்னடிக்கால் ஜீயர் வாயிலாக அழைத்தார். மாமுனிகள் அண்ணனிடம் “நீர் ஏற்கனவே வாதூல குலத்தில் பிறந்திருக்கிறீர் (முதலியாண்டான் திருவம்சத்தார்). இதுவே பெரிய திருவம்சமும், திருமாளிகையும் ஆகும். இப்படியிருக்க ஏன் தம்மிடம் தஞ்சம் புக விரும்புகிறீர்?” என வினவினார். அண்ணன் மிகவும் வற்புறுத்தி, இதற்கு முன்னால் ஜீயருடைய வைபவம் அறியாது தவறிழைத்தமைக்கு வருந்தி, தன ச்வப்ன விஷயங்களையும் தெரிவித்தார். மாமுனிகள் அதனை ஏற்று ஒருசிலரே எம்பெருமான் கிருபையால் ச்வப்னத்தில் கண்டருளி ஆணையிடுவான் என்று சொல்லி, மூன்று நாட்களுக்குப் பின்னே ஸமாச்ரயணம் பெற வரச் சொன்னார். அண்ணன் அகமகிழ்ந்து ஏற்று குடும்பத்தோடு மடத்தை விட்டுக் கிளம்பினார்.

எம்பெருமான் பலர் ச்வப்னத்திலும் தன் அர்ச்சா சமாதியை (தன்னுடைய சங்கல்பமான அர்ச்சா திருமேனியில் யாரோடும் தொடர்பு கொள்வதில்லை என்பதை மீறி) விடுத்துத் தோன்றி, மாமுனிகளுக்கும் எனக்கும் வேறுபாடில்லை, எல்லோரும் உய்வு பெற அவருடைய திருப்பாத கமலங்களில் தஞ்சம் புகுவீர் என்று உரைத்தான்.

mamuni-koilannan-3மாமுனிகளும் கோயில் அண்ணனும் – அண்ணன் திருமாளிகை, ஸ்ரீரங்கம்

மூன்று நாட்களுக்குப் பிறகு எல்லோரும் பெரிய ஜீயர் மடத்தில் ஒன்று கூடினர். தன் குலப்பெருமைகளை நினைத்து செருக்குக் கொள்ளாமல் மாமுனிகளிடம் தஞ்சம் புக நினைத்த அண்ணன் மாமுனிகளை நெருங்கி, தனக்கும் உடனுள்ள மற்றையெல்லோருக்கும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து அருளுமாறு பிரார்த்தித்தார். மாமுனிகள் வானமாமலை (பொன்னடிக்கால்) ஜீயரிடம் ஏற்பாடுகளை செய்யச் சொல்லி ஆணையிட்டு, பஞ்ச ஸம்ஸ்காரம் (தாபம் – தோள்களில் திருச்சங்கு/திருச்சக்கரம் பொரித்தல், புண்டரம் – ஊர்த்வ புண்டரம், நாம – தாஸ நாமம் தரித்தல், மந்த்ரம் – ரஹஸ்ய த்ரய மந்த்ரங்கள், யாகம் – திருவாரதன க்ரமம்) செய்துவித்தார்.

உடனே மாமுனிகளுக்குப் பொன்னடிக்கால் ஜீயர் நினைவு தோன்றி, அந்த பெரிய சபை முன்பே பொன்னடிக்கால் ஜீயரைக் காட்டி “பொன்னடிக்கால் ஜீயர் அடியேனுடைய பிராண ஸுஹ்ருது மற்றும் நலம் விரும்பி. தமக்கிருக்கும் அத்துணை பெருமைகளும் அவருக்கும் கிடைக்க வேண்டும்” என்று அறிவித்தார். அண்ணனுக்கு மாமுனிகளின் உள்ளம் புரிந்து “தாங்கள் எங்களை பொன்னடிக்கால் ஜீயருக்கு சிஷ்யராக்கி இருக்கலாம்” என்று கூறினார். மாமுனிகள் அகமகிழ்ந்து “தான் எப்படி எம்பெருமானின் ஆணையை மீற முடியும்?” என்று கேட்டார். ஆய்ச்சியாருடய திருமகனாரான அப்பாச்சியாரண்ணா உடனே எழுந்து, தன்னை பொன்னடிக்கால் ஜீயரின் சிஷ்யராக ஏற்கச் செய்யுமாறு பிரார்த்தித்தார். மாமுனிகள் மிகவும் அகமகிழ்ந்து அவரை “நம் அப்பாச்சியாரண்ணாவோ?” எனப் புகழ்ந்தார். மாமுனிகள் தன் சிம்மாசனத்தில் வற்புறுத்தலாகப் பொன்னடிக்கால் ஜீயரை எழுந்தருளச் செய்து , சங்க-சக்கரங்களைத் தந்து அப்பாசியாரண்ணாவிற்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவிக்கச் செய்தார். முதலில் மறுத்த பொன்னடிக்கால் ஜீயர் பிறகு மாமுனிகள் தனக்கு உள்ளம் குளிரும் எனக்கூற ஆணையை ஏற்றார். அப்பாசியாரண்ணாவுடனே அவரது திருச் சகோதரரான தாசரதியும் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றார். பொன்னடிக்கால் ஜீயர் சிம்மாசனத்தை விட்டுப் பணிவுடன் எழுந்து, மாமுனிகளுக்கு வெகு மரியாதையுடன் தன் ப்ரணாமங்களைத் தெரிவிக்கிறார். இதற்குப் பிறகு அண்ணனுடைய திருத்தம்பியாரான கந்தாடை அப்பன் என்பாரும், உடனிருந்த பலரும் மாமுனிகளிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றனர். அந்த சமயம், பெரிய பெருமாளின் ப்ரசாதம் வந்து சேருகிறது. மாமுனிகள் பிரசாதத்தை பெருமதிப்புடன் ஸ்வீகரித்தார். பிறகு எல்லோரும் சந்நிதிக்குச் சென்று மங்களாசாசனம் செய்து, மட்டத்திற்குத் திரும்பி, ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேஷ ததியாரதனையை ஸ்வீகரிக்கின்றனர்.

ஒரு தினம் மாமுனிகள் சுத்த சத்வம் அண்ணா கோயில் அண்ணனோடு இருக்கும் பற்றுதலைப் புகழ்ந்தார். அதனாலே ஆண்ட பெருமாள் (கொமாண்டூர் இளையவில்லியாச்சானின் வழித்தோன்றலில் இருந்த பேரறிஞர்) என்பாரை அண்ணனுடைய சிஷ்யராகும்படியும், முழுமையாக அண்ணனுடைய சத் சம்ப்ரதாயத்தைப் பரப்பும் கைங்கர்யத்தில் ஈடுபடும்படியும் நியமித்தார்.
கோயில் அண்ணனின் திருமேனி சம்பந்தியான எறும்பி அப்பா அண்ணனின் புருஷகாரத்தில் மாமுனிகளை அடைந்து நெருங்கிய சிஷ்யரானார்.
அண்ணனின் திருக்குமாரரான கந்தாடை நாயன் சிறுவயதிலேயே அறிவில் சிறந்து விளங்கினார். ஒருசமயம் மாமுனிகள் திவ்யப் பிரபந்தத்தில் சில விஷயங்களை விளக்க, நாயன் அதற்கு விசேஷ குறிப்புகளை நல்கினார். இது கண்டு பூரிப்படைந்த மாமுனிகள் கந்தாடை நாயனைத் தன் திருமடியில் அமரச் செய்து, புகழ்ந்து, சம்ப்ரதாயத்திற்குத் தலைவராய் விளங்க ஆசீர்வதித்தார். கந்தாடை நாயன் “பெரிய திருமுடி அடைவு” என்னும் சிறந்த கிரந்தத்தை அருளிச் செய்கிறார்.

பிரதிவாதி பயங்கரம் அண்ணன் மாமுனிகளை அடைந்து சிஷ்யராகிறார். அவரும் முதலில் அண்ணனின் திருமாளிகையைத்தான் அடைந்தார், பிறகு இருவருக்கும் இடையே மிகுந்த மரியாதையான தொடர்பு நீடித்தது.

கோயில் அண்ணனை மாமுனிகள் பகவத் விஷயத்தை (நம்மாழ்வாரின் ஸ்ரீசூக்தியான திருவாய்மொழி மற்றும் அதன் வ்யாக்யானங்கள்) கந்தாடை அப்பன், திருக்கோபுரத்து நாயனார் பட்டர், சுத்த சத்வம் அண்ணன், ஆண்ட பெருமாள் நாயனார் மற்றும் அய்யனப்பா ஆகியோருக்கு உபதேசிக்குமாறு பணித்து, அண்ணனுக்கு “பகவத் சம்பந்த ஆசார்யர்” என்னும் பட்டம் சாற்றி, அண்ணனை முக்கியமான பகவத் விஷய ஆசார்யனாக நியமிக்கிறார். ஒருமுறை கந்தாடை நாயனும் (அண்ணனின் திருக்குமாரர்) ஜீயர் நாயனாரும் (மாமுனிகளுடைய பூர்வாச்ரமத் திருப்பேரனார்) பகவத் விஷயத்தை விஸ்தரமாக விவாதிப்பதைக் கண்ட மாமுனிகள், இருவரையும் ஸம்ஸ்க்ருதத்தில் ஈடு வ்யாக்யானத்திற்கு அரும்பதம் அருளுமாறு பணித்தார்.

மாமுனிகள் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதன் முன்னிலையில் பகவத்விஷயத்தை காலக்ஷேபம் செய்ய, மாமுனிகள் முன்பு ஒரு ஆணி-திருமூலத்தன்று ஸ்ரீ ரங்கநாதன் தோன்றி “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற ஆச்சர்ய தனியன் சாதித்து மாமுனிகளைத் தன் ஆசார்யனாக ஏற்கிறார். உடனே இந்தத் தனியனை எல்லா திவ்ய தேசங்களிலும் நித்யப்படித் தொடக்கமாகவும் சாற்றுமுறையின்போதும் சேவிக்கக் கடவது என்று எம்பெருமானே சாதிக்கிறான். அதே சமயம் அண்ணன் திருமாளிகையில் அண்ணனின் தேவியாரும் மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களும் மாமுனிகளின் வைபவத்தை பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு சிறு குழந்தை அங்கு தோன்றி சிறியதான அதே தனியன் குறிக்கப்பட்ட திருவோலையைச் சமர்ப்பித்து மறைந்து போகிறது.

ஒருமுறை மாமுனிகள் அண்ணனிடம் திருவேங்கடமுடையானுக்கு மங்களாசாசனம் செய்யும் விருப்பமா என்று கேட்டார். அச்சமயம் அப்பிள்ளை அண்ணனை “காவேரி கடவாத கந்தாடை அண்ணனாரோ” என்று பெருமிதமாய் புகழ்ந்தார். ஆனால் மாமுனிகள் ஸ்ரீரங்கநாதன் திருவேங்கடத்தில் நித்யசூரிகள் சந்திசெய்ய நின்றிருப்பதை சுட்டிக்காட்டினார். அண்ணன் அகமகிழ்ந்து மாமுனிகளிடம் திருவேங்கட யாத்திரைக்கு உத்தரவு பெற்றுக்கொண்டார். மாமுனிகள் அண்ணனை பெரியபெருமாள் சந்நிதிக்கு அழைத்துச் சென்று திருவேங்கட யாத்திரைக்கு பெருமானின் அனுமதியையும் ஆசீர்வாதத்தையும் பெற்று அருளி, உத்தம நம்பியையும் (பெரிய பெருமாளின் அந்தரங்க கைங்கர்ய பரர்) உடன் அனுப்பி அருளினார். அண்ணனுடன் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் சேர்ந்து கொண்டனர். அப்போது அண்ணனுக்கு பல்லக்கு அளித்ததை அண்ணன் மறுத்து ஸ்ரீவைஷ்ணவர்களுடன் சேர்ந்து வரவே விருப்பம் தெரிவித்தார். இது அண்ணனின் பணிவை விளம்பிற்று. அண்ணன் திருமலையின் அடிவாரத்தை அடைந்தவுடன் அனந்தாழ்வான் (திருமலை அனந்தாழ்வானின் திருவம்சம்சதில் அப்போதிருந்து திருமலையில் கைங்கர்யம் செய்தவர்), பெரிய கேள்வி ஜீயர், ஆசார்ய புருஷர்கள், மற்றும் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆடம்பரமாக வரவேற்றனர்.
அண்ணன் ரதோத்சவத்தில் கலந்துகொண்டு எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்தார். அண்ணன் ஸ்ரீபதரீகாச்ரமத்தில் கைங்கர்யம் செய்யும் அயோத்யா ராமானுஜ ஐய்யங்காரை தண்டன் சமர்ப்பித்தார். அயோத்யா ராமானுஜ ஐய்யங்கார் மாமுனிகளை தஞ்சம்புக எண்ணினார், ஆனால் அனந்தாழ்வான் அண்ணனை ஆச்ரயித்தால் மாமுனிகள் மிகவும் அகமகிழ்வார் எனக் கூறினார். ஐய்யங்கார் மிகுந்த பூரிப்புடன் தன்னை ஆசிர்வதிக்குமாறு அண்ணனை வேண்ட, அவ்வாறே அண்ணன் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தருளினார். திருவேங்கடமுடையானும் ஐயங்காரின் அண்ணன் சம்பந்தத்தை ஆமோதித்து “கந்தாடை ராமானுஜ ஐயங்கார்” என்று ஐயங்காருக்கு பட்டம் சாற்றியருளினார். கந்தாடை ராமானுஜ ஐயங்கார் குறிப்படத்தக்க பல கைங்கர்யங்களைச் செய்கிறார்.

அண்ணன் திருவரங்கம் திரும்ப முடிவுசெய்து திருவேங்கடமுடையானின் ஆணையைப் பெற்றார். அப்போது எம்பெருமான் தன்னுடைய வஸ்த்ரத்தை அண்ணனுக்கு அருளினார், அண்ணன் மிகவும் மகிழ்ந்து அதையேற்றார். எம்பெருமான், ஐயங்கார் அண்ணனுக்குப் பல்லக்கு சமர்ப்பித்ததை ஏற்கச்செய்து, அதிலேயே அண்ணன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். வரும் வழியில் பல திவ்யதேசத்தில் மங்களாசாசனம் செய்து, எறும்பியப்பாவையும் அவரது மூத்தோரையும் எறும்பி என்னும் இடத்தில் சந்தித்தார். காஞ்சிபுரத்தில் அண்ணன் சாலைக் கிணற்றிலிருந்து (எம்பெருமானார் தேவப்பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்ய உபயோகித்த கிணறு) தீர்த்தம் பூரிக்க விரும்பினார். அண்ணன் மகிழ்ச்சியுடன் இந்த கைங்கர்யத்தைச் செய்து, அப்பாசியாரண்ணாவை இந்த கைங்கர்யத்தைத் தொடருமாறு நியமித்தார்.

அண்ணன் காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதனருகே உள்ள திவ்யதேசங்களுக்கு சென்றுவர உத்தேசமானார். தேவப்பெருமாளின் நியமனதைக் கேட்டறிந்தார். அந்த சமயம் தேவப்பெருமாள் திருவாராதனம் கண்டருளிக் கொண்டிருந்தான். தளிகை (போகம்) சமர்ப்பித்த பிறகு தேவப் பெருமாள் அண்ணனை முன்னேயழைத்து தான் சாற்றியிருந்த வஸ்த்ரம், புஷ்பமாலை, சந்தனம், மற்றும் பூண் (வாசனை த்ரவ்யம்) முதலியவற்றை அண்ணனிடம் தந்தருளி மாமுனிகளிடம் சமர்ப்பிக்குமாறு அருளினான். அண்ணனுக்கு விசேஷமாக வழியனுப்பி வைக்கப்பட்டது. அண்ணன் விடைபெற்று கச்சிக்கு வைத்தான் மண்டபத்தில் எழுந்தருளி மாமுனிகள் வைபவத்தை காலக்ஷேபம் செய்தார். அங்கிருந்த பெரியோர்கள் தேவப் பெருமாள் மாமுனிகளை “அண்ணன் ஜீயர்” (கோயில் அண்ணனின் ஆசார்யன் மாமுனிகள்) என்று பிரமிப்புடன் அருளுவதைக் கூறினர். அதேபோல் பெரிபெருமாளும் “ஜீயர் அண்ணன்” (பெரிய ஜீயரின் சிஷ்யர் கோயில் அண்ணன்) என்று அருளுவதையும் அச்சமயம் மாமுனிகள் காலம் கடந்ததால் ஸ்ரீரங்கம் திரும்புமாறு அண்ணனுக்கு செய்தி அனுப்பினார். அண்ணன் ஆணையை சிரமேற்கொண்டு, ஸ்ரீபெரும்பூதூரையும், மற்ற திவ்யதேசங்களயும் நோக்கி வணங்கி, ஸ்ரீரங்கம் வந்தடைந்தார்.
பெரிய ஜீயர் அண்ணனின் திருமாளிகை வந்து சேர்கிறார், அப்போது திருமாலை தந்த பெருமாள் பட்டர் மற்றும் கோயில் கைங்கர்யபரர்கள் பெரிய பெருமாளின் ப்ரசாதமும் மாலையும் கொண்டு வருகின்றனர். எல்லோரும் அண்ணனை வெகுவாக வரவேற்கின்றனர். மாமுனிகள் அண்ணனை ஆசீர்வதித்தார். அங்கிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவப்பெருமாள் அண்ணனை “அண்ணன் ஜீயர்” என்று அருளியதைக் கூறினர். மாமுனிகள் இதனைக்கேட்டு பூரிப்படைந்து தனக்கு அண்ணன் சிஷ்யராக வாய்த்ததை நினைத்து அகமகிழ்ந்தார். ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் “அண்ணன் ஜீயர்’ என்பது “ஸ்ரீய:பத்தி” (எம்பெருமான் பிராட்டி போன்று) சப்தத்திற்கு நிகராய் இருப்பதைக் குறிப்பிடுகின்றார். எம்பெருமான் பிராட்டி போன்று ஜீயரும் அண்ணனும் அவரவர் ப்ரபாவங்களை புகழுமாறு உள்ளனர்.

மாமுனிகள் அந்திம காலத்தில் ஆசார்ய ஹ்ருதயத்திற்குத் தன் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் வியாக்யானம் அருளிக் கொண்டிருந்தார். ஏன் இவ்வளவு ச்ரமதோடு இதைச் செய்ய வேண்டும் என்று அண்ணன் வினவ, “இதை உமது புத்ர பௌத்ரர்களுக்காக எழுதுகிறேன்” என்று பெரும் கருணையுடன் கூறினார்.

படையெடுப்பின் போது கோயில் அண்ணன் இழந்த முறைகள் மற்றும் பஹுமானங்களயும் மீட்டுக் கொடுத்து மாமுனிகள் பேருபகாரம் செய்தார்.

எறும்பியப்பா (மாமுனிகளின் சிஷ்யர்) தனது பூர்வ தினசர்யாவில் (மாமுனிகளின் நித்ய கைங்கர்யங்களை கூறும் க்ரந்தம்) அழகான ஒரு விஷயத்தை எடுத்துரைக்கிறார்.

ஸ்லோகம் 4:

பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ |
விந்யஸ்யந்தம் சநைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே ||

விளக்கம்:
எறும்பியப்பா மாமுனிகளிடம் “தேவரீர் உம்முடைய இரண்டு  பிரியமான சிஷ்யர்களான கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் ஆகியோரை அருகில் வைத்து, அவர்களை தேவரீரின் ம்ருதுவான கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டு, ம்ருதுவான திருவடிகளால் இந்த பூமியில் நடக்கிறீரே”.

mAmunigaL-aNNan-appan(இதனை கோயில் அப்பன் திருமாளிகையில் சித்திரமாய்க் காணலாம்)

திருமழிசை அண்ணாவப்பங்கார் தமது தினசர்யா வ்யாக்யானத்தில் இரு பிரியமான சிஷ்யர்கள் என்பது கோயில் அண்ணனையும் கோயில் அப்பனையும் குறிக்கும் என குறிப்பிடுகின்றார். இங்கு ஒரு ஐயம் எழும்; பாஞ்சராத்ர தத்வ ஸம்ஹிதையில் கூறியபடி ஸந்யாஸியான மாமுனிகள் எப்பொழுதும் கையில் திரிதண்டத்தை ஏந்திக் கொண்டிருக்க வேண்டமோ?

அண்ணாவப்பங்கார் இதை மிக அழகாக விளக்குகிறார் :

 • முற்றும் உணர்ந்த ஸந்யாஸி  ஒரு ஸந்யாஸி சில காரணங்களினால் த்ரிதண்டத்தை ஏந்தவில்லையெனில் குறையாகாது;
 • ஒரு ஸந்யாஸி பகவானையே த்யானித்து, ஒழுக்கத்துடனும், சாஸ்த்ர விஷயங்களை முறையாகத் தனது ஆசார்யனிடம் பயின்று, பகவத் விஷய ஞானம் பெற்று, புலன்களை ஒடுக்கி இருக்குமளவில் த்ரிதண்டமாவது அவசியமில்லை;
 • எம்பெருமானை ஸாஷ்டாங்கமாக சேவிக்கும்போது த்ரிதண்டமானது இடைஞ்சலாக இருக்கக்கூடும்; அந்நேரத்தில் த்ரிதண்டமாவது அவசியமில்லை

மாமுனிகளே அண்ணனை தமது பாசுரத்தில் அழகாய் விவரிக்கிறார்:

எக்குணத்தோர் எக்குலத்தோர் எவ்வியல்வோர் ஆயிடினும்
அக்கணத்தே நம்மிறைவராவரே
மிக்கபுகழ்க் காரார் பொழில் கோயில் கந்தாடை அண்ணனென்னும்
பேராளனை அடைந்த பேர்

விளக்கம்:

கோயில் அண்ணனிடம் சரண் புகுந்தோர் எந்த குணம், குலம், பண்பு  உடையோராயினும் அப்பொழுதே என் தலைவர் ஆவார்.

இவ்வாறாக கோயில் அண்ணனுடைய ப்ரபாவங்கள் சிலவற்றை அனுசந்தித்தோம். அவர் மாமுனிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதனையும் பார்த்தோம். நாமும் அவரது கமலபாதங்களில் நமக்கும் அவ்வாறே ஆசார்யாபிமானம் சிறிதளவாவது பெற ப்ரார்த்திப்போம்.

கோயில் கந்தாடை அண்ணன் தனியன்:

ஸகல வேதாந்த ஸாரார்த்த பூர்ணாசயம்
விபுல வாதூல கோத்ரோத்பவாநாம் வரம்
ருசிர ஜாமாத்ரு யோகீந்த்ர பாதாச்ரயம்
வரத நாராயணம் மத் குரும் ஸம்ச்ரயே

அடியேன் மகிழ்மாறன் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/10/16/koil-kandhadai-annan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வடக்குத் திருவீதிப் பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/09/22/nampillai/) நம்பிள்ளையை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான வடக்குத் திருவீதிப் பிள்ளையைப் பற்றி அனுபவிப்போம் .

வடக்கு திருவீதிப் பிள்ளை – காஞ்சிபுரம்

திருநக்ஷத்ரம்: ஆனி ஸ்வாதி

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

ஆசார்யன்: நம்பிள்ளை

ஶிஷ்யர்கள்: பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மற்றும் பலர்.

பரமதித்த இடம்: திருவரங்கம்

அருளிச்செய்தது: ஈடு 36000 படி

ஸ்ரீ க்ருஷ்ண பாதர் என்று அவருடைய இயற்பெயர். இவருக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்ற திருநாமமே ப்ரஸித்தமாக உள்ளது. நம்பிள்ளையின் முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை முழுமையாக ஆசார்ய நிஷ்டையோடு இருந்தார். க்ருஹஸ்தாஶ்ரமத்திற்கு வந்த பின்னரும் அவர் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆர்வமே இல்லாமல் இருந்தார். இதைக் கண்டு மிகவும் வருத்தமடைந்த அவருடைய திருத்தாயார், நம்பிள்ளையிடம் அவருடைய இருப்பைப் பற்றிக் கூறினார். இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை வடக்கு திருவீதிப் பிள்ளையையும் அவருடைய பார்யாளையும் கூப்பிட்டு, தன்னுடைய க்ருபையினால் அவர்களை கடாக்ஷித்து, வடக்குத் திருவீதிப் பிள்ளையை பார்யாளுடன் ஏகாந்தத்தில் இருக்குமாறு நியமித்தார். ஆசார்ய நியமனத்தின் படி நடந்ததால் அவர்கள் இருவரும் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தார்கள். நம்பிள்ளையினுடைய (லோகாசார்யன்) க்ருபா கடாக்ஷத்தில் பிறந்ததால், வடக்குத் திருவீதிப் பிள்ளை அந்தக் குழந்தைக்கு பிள்ளை லோகாசார்யன் என்ற திருநாமத்தைச் சூட்டினார். இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை “அழகிய மணவாளன்” என்ற திருநாமத்தைச் சூட்ட வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகக் கூறினார். இதைக் கேட்ட நம்பெருமாள், வடக்குத் திருவீதிப் பிள்ளையை கடாக்ஷிக்க, அவர்கள் இருவரும் மற்றொரு குழந்தையை ஈன்றெடுத்தார்கள். அழகிய மணவாளனுடைய (நம்பெருமாள்) க்ருபா கடாக்ஷத்தால் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள். இப்படித்தான் வடக்குத் திருவீதிப் பிள்ளை இரண்டு ரத்தினங்களை நமது ஸம்ப்ரதாயத்திற்குக் கொடுத்தார். இவரைப் பெரியாழ்வாரோடு ஒப்பிடலாம்:

 • பெரியாழ்வார், வடக்குத் திருவீதிப் பிள்ளை இருவரின் திருநக்ஷத்ரமும் ஆனி ஸ்வாதி.
 • ஆழ்வார் எம்பெருமான் கடாக்ஷத்தினால் திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி அருளிச்செய்தார். நம்பிள்ளை கடாக்ஷத்தினால் வடக்குத் திருவீதிப் பிள்ளை 36000 படி வ்யாக்யானம் அருளிச்செய்தார்.
 • ஆழ்வார் ஆண்டாளை இந்த ஸம்ப்ரதாயத்திற்காகக் கொடுத்தார், அவளை க்ருஷ்ணானுபவத்தை ஊட்டியே வளர்த்தார். வடக்குத் திருவீதிப் பிள்ளை பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை இந்த ஸம்ப்ரதாயத்திற்காகக்  கொடுத்தார். அவர்களை பகவத் அனுபவத்தை ஊட்டியே வளர்த்தார்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளையிடம் திருவாய்மொழி காலக்ஷேபம் கேட்கும்பொழுது, பகல் நேரத்தில் ஆசார்யனோடு இருந்து கொண்டு கேட்பார், இரவு நேரத்தில் அதை ஒலைச்சுவடியில் ஏடுபடுத்துவார். இப்படித்தான் நம்பிள்ளைக்குத் தெரியாமல் இவர் ஈடு 36000 படி வ்யாக்யானத்தை எழுதி முடித்தார். ஒருநாள் வடக்குத் திருவீதிப் பிள்ளை ததியாராதனத்திற்காக நம்பிள்ளையை தன் திருமாளிகைக்கு அழைத்தார். நம்பிள்ளையும் அதை ஏற்றுக்கொண்டு அவர் திருமாளிகைக்கு எழுந்தருளினார். நம்பிள்ளை திருவாராதனத்தைத் தொடங்கியபொழுது, கோயிலாழ்வாரில் ஒலைச்சுவடியில் வ்யாக்யானம் இருப்பதைக் கண்டார். ஆர்வத்தோடு அதை எடுத்து சிலவற்றைப் படித்து, இது என்ன என்று வடக்குத் திருவீதிப் பிள்ளையிடம் கேட்டார். வடக்குத் திருவீதிப் பிள்ளை நம்பிள்ளையுடைய காலக்ஷேபத்தை தினமும் ஏடுபடுத்துவதாகக் கூறினார். உடனே நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளையை திருவாராதனம் பண்ணச் சொல்லிவிட்டு, அவர் அந்த ஏட்டில் இருக்கும் வ்யாக்யானங்களை படிக்க ஆரம்பித்தார். “என்னுடைய அனுமதி இல்லாமல் ஏன் எழுதினீர்? பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானத்திற்குப் போட்டியாக இயற்றுகிறீரா?” என்று நம்பிள்ளை கேட்டார். இதைக் கேட்டவுடன் மிகவும் வருத்தமுற்றார் வடக்குத் திருவீதிப் பிள்ளை. உடனே நம்பிள்ளையின் திருவடித்தாமரைகளில் விழுந்து, பிற்காலத்தில் பார்த்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்பதற்காகத் தான் எழுதினதாக விவரித்தார். அதைக் கேட்டவுடன் ஸமாதானமடைந்த நம்பிள்ளை, அந்த வ்யாக்யானத்தை மிகவும் கொண்டாடினார். வடக்குத் திருவீதிப் பிள்ளைஒரு அவதார விஶேஷமாக இருப்பதாலேயே அவரால் ஒரு வார்தையைக் கூட விடாமல் இதை இயற்ற முடிந்தது என்று நம்பிள்ளை கூறினார். இந்த வ்யாக்யானத்தைத் தன்னுடைய ஶிஷ்யரான ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் (நஞ்சீயருடைய பூர்வாச்ரம திருநாமத்தை உடையவர்) கொடுப்பதாகவும் அவருடைய ஶிஷ்யர்கள் மூலமாக மாமுனிகளைச் சென்றடைந்து தகுந்த காலத்தில் மாமுனிகளால் இந்த உலகோருக்கு வெளியிடப்படும் என்றும் கூறினார். எம்பெருமானின் பரம க்ருபையால் நம்பிள்ளை மாமுனிகளுடைய அவதாரத்தை முன்பே கண்டு அதை ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கூறினார்.

நம்பிள்ளை பரமபதித்த பிறகு வடக்குத் திருவீதிப் பிள்ளை தர்ஶன ப்ரவர்த்தகரானார். ஸம்ப்ரதாயத்தில் அனைத்து அர்த்த விஶேஷங்களையும் பிள்ளை லோகாசார்யருக்கும், அழகிய மணவாள பெருமாள் நாயனாருக்கும் கற்றுக்கொடுத்தார். பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசனபூஷண திவ்ய ஶாஸ்த்ரத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளை கூறிய சில உபதேஶங்களை உதாகரித்துள்ளார்:

 • ஸூத்ரம் 77 ல், அஹங்காரத்தை நீக்கிப் பார்த்தால், ஆத்மாவை அடியேன் என்றே அறிய முடியும் என்கிறார். யதீந்த்ர ப்ரவண ப்ரபாவத்தில், இதை வடக்குத் திருவீதிப் பிள்ளை விளக்கியுள்ளது காட்டப்பட்டுள்ளது.
 • ஸூத்ரம் 443 ல், “ஒரு ஜீவாத்மா தன்னுடைய ஸ்வாதந்த்ரியத்தால் ஈஶ்வரனின் அபிமானத்தை இழந்து இந்த ஸம்ஸாரத்தில் அநாதி காலமாக இருக்கிறான். ஸதாசார்யனின் அபிமானத்தைப் பெறுவதன் மூலமே அவன் இந்த ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட முடியும் என்று வடக்குத் திருவீதிப் பிள்ளை எப்பொழுதுமே கூறுவார்” என்று பிள்ளை லோகாசாரியர் கூறினார்.

தன்னுடைய ஆசார்யனான நம்பிள்ளையை நினைத்துக் கொண்டே, வடக்குத் திருவீதிப் பிள்ளை இந்தச் சரம திருமேனியை விட்டுத் திருநாடலங்கரித்தார்.

நாமும் எம்பெருமானார் மீதும், நமது ஆசார்யன் மீதும் பற்று வளர வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடித்தாமரைகளை வணங்குவோம்.

வடக்குத் திருவீதி பிள்ளையினுடைய தனியன்:

ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே நமாமி ஶிரஸா ஸதா|
யத் ப்ரஸாதப் ப்ரபாவேந ஸர்வ ஸித்திரபூந்மம ||

மிதுநே ஸ்வாதிஸம்பூதம் கலிவைரி பதாஶ்ரிதம்|
உதக்ப்ரதோளீ நிலயம் க்ருஷ்ணபாதமஹம் பஜே||

வடக்குத் திருவீதி பிள்ளையினுடைய வாழி திருநாமம்:

ஆனிதனிற் சோதிநன்னா ளவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள்தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

மேலே, அடுத்த ஆசார்யரான பிள்ளை லோகசார்யரின் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/17/vadakku-thiruveedhi-pillai/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

நம்பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

சென்ற பதிவில் நஞ்சீயரை (https://guruparamparaitamil.wordpress.com/2015/08/01/nanjiyar/) பற்றி  அனுபவித்தோம். இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான நம்பிள்ளை விஷயமாக அனுபவிப்போம்.

(நம்பிள்ளை – திருவல்லிக்கேணி)

திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை

அவதார ஸ்தலம்: நம்பூர்

ஆசார்யன்: நஞ்சீயர்

ஶிஷ்யர்கள்: வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்  மற்றும் பலர்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

அருளிச்செய்தவை: திருவாய்மொழி 36000 படி ஈடு வியாக்யானம் , கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்யானம், திருவந்தாதி வ்யாக்யானங்கள், திருவிருத்தம் வியாக்யானம் .

நம்பூர் என்ற கிராமத்தில் வரதராஜன் என்ற திருநாமத்தோடே திருவவதாரம் செய்த இவரே பிற்காலத்தில் நம்பிள்ளை என்று பிரஸித்தர் ஆனார் . இவர் திருக்கலிக்கன்றி தாஶர், கலிவைரி தாஶர் , லோகாசார்யர், சூக்தி மஹார்ணவர், ஜகதாசார்யர் மற்றும் உலகாசிரியர் என்ற திருநாமங்களாலும் போற்றி வணங்கப்படுகிறார்.

பெரிய திருமொழி 7.10.10 பதிகத்தில் கண்டது போல, திருமங்கை ஆழ்வார் பாசுரங்களுடைய அர்த்தங்களை திருக்கண்ணமங்கை எம்பெருமான் கலியனிடமிருந்தே கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் கலியனே நம்பிள்ளையாக அவதரித்து, எம்பெருமான் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்து அருளிச்செயலினுடைய அனைத்து விஶேஷார்த்தங்களையும் கற்றுக்கொண்டார். நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை அழகாக ஏடுபடுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியில் இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது, நம்பூர் வரதராஜர் தான் இதைச் செய்வதற்கு ஏற்றவர் என்று அவர்கள் கூறினார்கள். நஞ்சீயரின் திருவுள்ளத்  திருப்திக்கேற்ப இந்த வ்யாக்யானத்தை எழுதுவதாக வரதராஜர் நஞ்சீயரிடம்  கூறினார். நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை முழுமையாக விளக்கி, பின்பு வரதராஜருக்கு மூல ப்ரதியைக் கொடுத்தார். வரதராஜர் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று எழுதினால் தான் அதில் கவனம் செலுத்த முடியும் என்பதால், காவிரியைக் கடந்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார். காவிரியைக் கடந்து செல்லும் பொழுது திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதனால் வரதராஜர் காவிரியை நீந்திக்கடந்து சென்றார். அந்த சமயத்தில் அவர் கையில் இருந்த மூல ப்ரதி நழுவி விழுந்து, அதை வெள்ளம் அடித்துச் சென்றது. மிகவும் வருத்தமுற்ற வரதராஜர், தன்னுடைய ஊருக்கு வந்தவுடன், ஆசார்யனையும் அவர் கூறிய அர்த்த விஶேஷங்களையும் த்யானித்துக் கொண்டு 9000 படி வ்யாக்யானத்தை மறுபடியும் எழுதத்தொடங்கினார். வரதராஜர் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் வல்லுனராக இருந்தமையால், பொருந்தக்கூடிய இடத்தில் சில நல்ல அர்த்தங்களைச் சேர்த்து எழுதி, நஞ்சீயரிடம் சென்று ஸமர்ப்பித்தார். நஞ்சீயர் அந்த வ்யாக்யானத்தைப் படித்துவிட்டு, மூல ப்ரதியை விட சற்று மாறுதல்கள் இருப்பதைக் கண்டு, ஏன் இந்த மாற்றம்? என்ன நடந்தது என்று கேட்டார். வரதராஜர் நடந்த விஷயத்தைக் கூறினார், அதைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ந்தார். வரதராஜருடைய உண்மையான பெருமையை உணர்ந்து, நஞ்சீயர் அவருக்கு “நம்பிள்ளை” மற்றும் “திருக்கலிகன்றி தாஸர்” என்ற திருநாமத்தைச் சூட்டினார். பட்டர்-நஞ்சீயர் ஆசார்ய ஶிஷ்ய பாவம் மற்றும் அவர்களுடைய ஸம்பாஷணைகளைப் போல, நஞ்சீயர்-நம்பிள்ளை விஷயத்திலும் மிகவும் சுவரஸ்யமானதாகவும் மற்றும் மிகச் சிறந்த அர்த்தங்களை உடையதாகவும் இருக்கும். அவற்றில் சிலவற்றை இப்பொழுது அனுப்பவிப்போம்.

 • உபாயாந்தரத்திற்குப் (கர்ம, ஞான, பக்தி) பல ப்ரமாணங்கள் இருப்பதைப் போல, சரணாகதிக்கு ஏன் பல ப்ரமாணங்கள் இல்லை என்று நம்பிள்ளை நஞ்சீயரிடம் கேட்டார். அதற்கு நஞ்சீயர் “ப்ரத்யக்ஷமாக புரிந்து உணர்ந்து கொள்ளும் விஷயத்திற்கு, ப்ரமாணம் தேவையில்லை. அதாவது ஒருவன் நதியில் மூழ்கும் பொழுது, நதியில் மூழ்காத மற்றொருவனை சரணடைவது போல – நாம் அனைவரும் இந்த ஸம்ஸாரமாகிர பெருங்கடலிலே மூழ்கியிருக்கிறோம் ஆனால் எம்பெருமானோ இந்த ஸம்ஸாரத்தினுடைய அழுக்கு ஒட்டாதவனாய் இருக்கிறான், அதனால் அவனே உபாயம் என்று பற்றுவதே மிகவும் பொருத்தமானதாகும். அது மட்டுமல்லாமல் சரணாகதியைப் பற்றி சில ப்ரமாணங்களை ஶாஸ்திரத்திலிருந்து கூறி அதை நிரூபித்தார். அதோடு என்றும் ப்ரமாணத்தினுடைய எண்ணிக்கைகளை வைத்துக் கொண்டு ஒரு விஷயம் உயர்ந்தது என்று கூறமுடியாது, உதாரணத்திற்கு இந்த உலகத்தில் பல ஸம்ஸாரிகள் உள்ளனர் ஆனால் ஸன்யாஸிகளோ மிகக் குறைந்த அளவில் தான் உள்ளார்கள், அதற்காக ஸம்ஸாரிகள் சிறந்தவர்கள் என்று கூற முடியுமா?” என்று விவரித்தார். இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை மிகவும் திருப்தி அடைந்தார்.
 • “ஒருவன் தனக்கு ஸ்ரீவைஷ்ணவத்வம் உள்ளது என்று எப்பொழுது உணர்வான்?” என்று நம்பிள்ளை நஞ்சீயரிடம் கேட்டார். அதற்கு நஞ்சீயர் “எவன் ஒருவன் அர்ச்சாவதாரத்தில் பரத்வத்தைப் பார்க்கிறானோ, அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களிடமும் வேற்றுமை இல்லாமல் உண்மையான பற்றை வைத்துள்ளானோ அதாவது தன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கொண்டிருக்கும் அதே பற்றை மற்றைய ஸ்ரீவைஷ்ணவர்களிடம் வைத்துள்ளானோ மற்றும் எவன் ஒருவன் யாரேனும் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தன்னை நிந்தித்தாலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கோண்டு அவருக்கும் ஸ்ரீவைஷ்ணவ்த்வம் உள்ளது என்று நினைக்கிறானோ” அப்பொழுது உணர்வான் என்று கூறினார்.
 • நம்பிள்ளை நஞ்சீயரிடம் ஸ்ரீ பாஷ்யம் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் , நஞ்சீயர் தமது  பெருமாளுக்கு திருவாராதனம் செய்யுமாறு நம்பிள்ளையைப் பணித்தார். தமக்கு திருவாராதனம் செய்ய முழுமையாக தெரியாது என்று ஸாதித்த நம்பிள்ளையிடம் , நஞ்சீயர் த்வய மஹா மந்திரத்தை (அதாவது அர்ச்சாவிக்ரஹ ரூபமாய் அனைத்து இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் எளிமையைக் கொண்டாடும் வண்ணம் த்வய மஹாமந்திரத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் நடுவில் “ஸர்வ மங்கள விக்ரஹாய” என்று சேர்த்து) அனுசந்தித்து எம்பெருமானுக்கு போகத்தை கண்டருளப்பண்ணும் படி நியமித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில், நம் பூருவர்கள் அனைத்துக்கும் த்வய மஹா மந்திரத்தையே ஶரணாகக் கொண்டிருந்தனர் .
 • நம்பிள்ளை நஞ்சீயரிடம் , “எம்பெருமானின் திருவவதாரங்களின் நோக்கம் யாது?” என்று கேட்க, அதற்கு நஞ்சீயர் , “பாகவதர்கள் பக்கலிலே அபசாரப்பட்டவர்கள் அதற்கான தகுந்த தண்டனைகளைப் பெறுவதற்காகவே எம்பெருமான் பெரிய காரியங்களை மேற்கொள்வதாக ஸாதித்தார். (உதாரணமாக கண்ணனாக எம்பெருமான் , தன் அடியாரிடம் அபசாரப்பட்ட துரியோதனன் கொல்லப்படவேண்டும் என்பதற்காக, தான் பல துன்பங்களை ஏற்றான் )
 • பின், நம்பிள்ளை நஞ்சீயரிடம் “பாகவத அபசாரம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நஞ்சீயர் “மற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களையும் நம்மைப் போன்றவர்கள்” என்று எண்ணுதல் பாகவத அபசாரம் என்று ஸாதித்து, பாகவதர்களின் பெருமைகளை எடுத்துக்காட்டும் ஆழ்வார்களின் பாசுரங்களைச் ஸாதித்து , அவற்றை ஆதாரமாகக் கொண்டு நாம் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி  பாகவதர்களை நம்மில் பன்மடங்கு மேலானவர்கள் என்று கொள்ளுதல் வேண்டும் என்றும் ஸாதித்தார். மேலும் ஆழ்வார்கள் மற்றும் பூருவாசாரியர்கள் நடந்து காட்டிய வண்ணம் நாமும் பலவைகைகளில் திருமால் அடியார்களைக் கொண்டாடுதலில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஸாதித்தார் .
 • மேலும், நம்பிள்ளையிடத்தே நஞ்சீயர் ,”பகவத் விஷய அனுபவத்திலே ஈடுபடும் ஒருவருக்கு லோக விஷய அனுபவங்களான ஐஶ்வர்யம், அர்த்தம், காமம் போன்றவைகளின் மீது ஈடுபாடு அறுபடுதல் வேண்டும் என்று ஸாதித்தார் . இதை ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு விளக்கினார். மேலும் எம்பெருமானின் பெருமைகளை உணர்ந்த மாத்திரத்திலேயே “வாடினேன் வாடி வருந்தினேன்  ..நாராயணா என்னும் நாமம்” என்று எவ்வாறு திருமங்கை ஆழ்வார் உலக விஷயப்பற்றுகளைத் துறந்தார் என்பதையும் மேற்கோளாகக் காட்டினார். இதைக் கேட்ட நம்பிள்ளை தானும் பரவசித்து மிகவும் தெளிந்து நஞ்சீயரோடே எழுந்தருளியிருந்து அவருக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்து கொண்டும் காலக்ஷேபங்கள் கேட்டுக்கொண்டும் இருந்தார்.
 • நஞ்சீயர் திருவாய்மொழி காலக்ஷேபத்தை நூறு முறை செய்தருளினார் . இதனை அடுத்து நம்பிள்ளை நஞ்சீயருக்கு ஶதாபிஷேக மஹோத்ஸவம் செய்தருளினார். இக்காலக்ஷேபங்கள் வாயிலாக நம்பிள்ளை நஞ்சீயரிடமிருந்து பூர்வாசாரியர்கள் சாதித்த அனைத்து அர்த்தங்களையும் பெற்றார்.

நம்பிள்ளை தனித்துவம் பொருந்திய பல ஆத்ம குணங்களோடு கூடியவராய் அளவிலடங்கா பெருமைகளுக்குறைவிடமாய் எழுந்தருளி இருந்தார். தமிழ் மற்றும் வடமொழிகளில் மிகவும் தேர்ந்தவராய் நம்பிள்ளை விளங்கினார். இவர் தனது விரிவுரைகளில் திருக்குறள், நன்னூல், கம்ப இராமாயணம் போன்றவைகளிலிருந்தும் வேதாந்தம், விஷ்ணுபுராணம் , ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் போன்றவைகளிலிருந்தும் மிக எளிதாக மேற்கோள் காட்டியருளினார். எப்பொழுதாவது எவருக்கேனும் ஆழ்வார்களின் வைபவங்களிலோ அருளிச்செயல்களிலோ ஸந்தேகங்கள் வருகையில், அனைத்து வைதீகர்களாலும் ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் ஏற்கப்பட்டிருந்தமையால் , அதைக்கொண்டு அந்த ஸந்தேகங்களை தீர்த்து வைப்பதில் நம்பிள்ளை தேர்ந்தவராய் இருந்தார். அவரின் பெருமைகளையும் பணிவையும் பறைசாற்றக்கூடிய சில வைபவங்களை நாம் இப்பொழுது காணலாம் .

 • நம்பிள்ளை , பெரிய பெருமாள் பாதம் நீட்டிக்கொண்டிருக்கும் கிழக்கு திசை திருச்சுற்றிலே  எழுந்தருளியிருந்து காலக்ஷேபம் சாதித்து வந்தார். அதனால் தான் இன்றளவும் நாம் ஸந்நிதியைவிட்டு வெளியே வந்தவுடன் இவ்விடதிற்கு நமது ப்ரணாமங்களைச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் . நம்பிள்ளையின் காலக்ஷேபத்தில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைமிகுதியால் பெரிய பெருமாள் தமது அர்ச்சை நிலையைக் கலைத்து எழுந்து நின்றார். ஸந்நிதியின் திருவிளக்குகளைக் கண்காணிக்கும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவரான திருவிளக்குப்பிச்சன் என்பவர் இதனைக்கண்டு அர்ச்சை நிலையை தாம் கலைத்தல் ஆகாது என்று கூறி பெரியபெருமாளைத் திருவனந்தாழ்வான் மீது கிடக்குமாறு தள்ளிவிட்டார் .
 • நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ என்று கண்டவர் வியக்கும் வண்ணம் நம்பிள்ளையின் காலக்ஷேபங்கள் அமைந்தன. எவ்வாறு அரங்கனகரப்பன் தனது நடை அழகால் அடியார்களை ஈர்த்தானோ அவ்வாறே நம்பிள்ளை தனது உரையால் அடியார்களை ஈர்த்தார் .
 • நம்பிள்ளையின் பணிவு தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஒருமுறை முதலியாண்டான் திருவம்ஶத்தில் வந்துதித்தவரான கந்தாடை தோழப்பர் என்பவர், நம்பிள்ளையின் பெருமைகளை உணராதிருந்தமையால் அது கடும் சொற்களாக நம்பெருமாள் திருமுன்பே வெளி வந்தது. இதனைக் கண்டு , நம்பிள்ளை மறுவார்த்தை ஒன்றும் ஸாதிக்காமல் தனது திருமாளிகைக்கு எழுந்தருளி விட்டார். பிறகு தனது திருமாளிகைக்குத் திரும்பிய கந்தாடை தோழப்பருக்கு, நடந்தவற்றை பிறர் வாயிலாகக் கேட்டறிந்த அவரது தேவிகள், நம்பிள்ளையின் பெருமைகளை கூறி உணர்த்தி மேலும் நம்பிள்ளை திருவடிகளில் விழுந்து மன்னிப்பு வேண்டுவது பற்றியும் அறிவுறுத்தினார். தம் பக்கல் இருந்த குற்றத்தை உணர்ந்த கந்தாடை தோழப்பர் தானும் நம்பிள்ளையிடம் மன்னிப்பு வேண்ட புறப்பட்டார். அதற்காக தனது திருமாளிகையின் வாயிற்கதவுகளைத் திறந்த பொழுது அங்கே யாரோ ஒருவர் காத்துக்கொண்டிருப்பதை கவனித்தவர், அது நம்பிள்ளை என்றும் உணர்ந்தார். தோழப்பரைக் கண்ட நம்பிள்ளை தானும் தெண்டனிட்டு, தோழப்பர் திருவுள்ளம் கன்றும் வண்ணம் தாம் அபசாரம் செய்து விட்டதாகக் கூறினார். தம்மீது குற்றம் இருந்த போதிலும் அதை நம்பிள்ளை பெருந்தன்மையோடு  தானெடுத்துக்கொண்டு மன்னிப்பு கோரியதைக் கண்ட தோழப்பர்  நம்பிள்ளையின் பெருமையைக்கண்டு திடுக்கிட்டார். உடனே தோழப்பர் தானும் நம்பிள்ளைக்கு தெண்டன் ஸமர்பித்து நம்பிள்ளைக்கு “உலகாரியன்” என்னும் திருநாமத்தை சாற்றினார். இத்தனை பெருமைகளால் நிரம்பப்பெற்றும் பணிவோடு இருக்ககூடிய ஒருத்தரே உலகாரியன் என்று போற்றப்படவேண்டியவர் என்றும் அந்து பணிவு நம்பிள்ளையிடத்தே இருப்பதால், அவரே உலகாரியன் என்று போற்றப்பட வேண்டியவர் என்று தோழப்பர் ஸாதித்தார். பின் நம்பிள்ளை மீது தனக்கு இருந்த வெறுப்பைத் துறந்து, தோழப்பர் தனது தேவிகளோடு நம்பிள்ளையிடம் கைங்கர்யத்தில் ஈடுபட்டார். நம்பிள்ளை இடத்தே அனைத்து ஶாஸ்த்ரார்த்தங்களையும் கற்றார். இந்த வைபவத்தை விஶதவாக் ஶிகாமணியான  மணவாளமாமுநிகள் தனது உபதேஶரத்தினமாலையில் துன்னுபுகழ் கந்தாடை தோழப்பரையும் நம்பிள்ளையையும் கொண்டாடி அனுபவிக்கிறார். இது நம்பிள்ளையின் தூய்மையை நமக்கு எடுத்து காட்டுகிறது . மேலும் நம்பிள்ளையோடே ஏற்பட்ட ஸம்பந்தத்தினால் கந்தாடை தோழப்பருக்கும் இந்த தூய்மை ஏற்பட்டது என்று நாம் புரிந்துக்கொள்ளலாம் .
 • ஸ்ரீ பராஶர பட்டரின் திருவம்ஶத்தில் வந்தவரான நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் என்பவருக்கு நம்பிள்ளையின் பெருமைகளைக்கண்டு பொறாமை ஏற்பட்டது. ஒரு முறை அவர் அரசவைக்கு செல்லும் போது நம்பிள்ளை ஶிஷ்யரான பின்பழகிய பெருமாள் சீயரையும் தன்னுடன் அழைத்து சென்றார். அரசன் இவ்விருவரையும் வரவேற்று ஸம்பாவனை ஸமர்பித்து, அவர்களுக்கு அமர்வதற்கு  நல்ல ஆஸனங்களையும் அளித்தான். அரசன் பட்டரிடத்தே ஸ்ரீமத் ராமயணத்திருந்து சில ஸந்தேகங்களை கேட்டான். அது யாதெனில் , பெருமாள் ஸ்ரீ ராமாவதாரத்தில் தனது பரத்துவத்தை வெளிக்காட்ட போவதில்லை என்று உரைத்திருக்க எவ்வாறு ஜடாயுவை பார்த்து “கச்ச லோகான் உத்தமான் ” (உயர்ந்த லோகமான பரமபதத்திற்கு செல்வீர் )  என்று ஸாதித்தார் என்பதேயாம். இந்த ஸந்தேகத்திற்கான தக்க ஸமாதானம் தோன்றாது எங்கே தமது பெருமைக்குக் களங்கம் நேர்ந்துவிடுமோ என்ற கவலையோடு பட்டர் எழுந்தருளியிருக்கும் தருவாயில் அரசன் வேறு சில அரசுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவனாய் இருந்தான் . அப்பொழுது பட்டர் ஜீயரைக்கண்டு , “இதை நம்பிள்ளை எவ்வாறு ஸாதிப்பார்? என்று கேட்க, சீயர் உடனே “ஸத்யேன லோகன் ஜயதி ராகவ : ”  என்ற ஶ்லோகத்தை ஸாதித்தார் . (அதாவது தனது உண்மையை மட்டுமே கூறும் தன்மையினால் உலகங்களை வென்றவன் ரகுகுலத்தோன்றல் ஸ்ரீ ராமன்). இந்த ஶ்லோகத்தை தியானித்த பட்டருக்கு சடக்கென்று தக்க ஸமாதனம் விளங்க, அரசனிடம் கூறினார். ஸமாதானம் கேட்டு அகமகிழ்ந்த அரசன் தானும் பட்டரைக்  கொண்டாடி அவருக்கு தக்க பரிசுப்பொருட்களை ஸமர்பித்தான். நம்பிள்ளையின் ஒரு ஸமாதானம் கேட்டே அவர் பெருமையை உணர்ந்த பட்டர் தானும். தான் பெற்ற பரிசுகளை நம்பிள்ளையிடத்தே ஸமர்ப்பித்து மேலும் தானும் நம்பிள்ளையைச் சரணடைந்து , நம்பிள்ளைக்கு அடிமை செய்வதையே அன்றுதொட்டு செய்துக்கொண்டிருந்தார் .

நம்பிள்ளை தான் எழுந்தருளியிருந்த காலத்தில் தன் ஶிஷ்யர்களுக்கு நல்ல உபதேஶங்களையும் அறிவுரைகளையும் வழங்கிய தருணங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பொழுது கண்டு அனுபவிப்போம்

 • ஒருமுறை, நம்பிள்ளை தன்  ஶிஷ்யர்களோடே திருவெள்ளறையிலிருந்து திருவரங்கத்திற்கு பரிசிலில் திரும்பிக்கொண்டிருக்க , காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பரிசிலோட்டி, யாரேனும் ஒருவர் கீழே குதித்தால் தான் படகு கவிழாது இருக்கும் என்று கூற, உடனே அங்கிருந்த ஒரு அம்மையார் பரிசில் விடுவானைக் கண்டு ‘கண் போன்ற நம்பிள்ளையை பத்திரமாகக் கரை சேர்த்து விடு ” என்று கூறி குதித்தார். இதனைக் கண்ட நம்பிள்ளை “ஒரு ஆத்மா தட்டுப்போயிற்றே” என்று மிகவும் வருந்தினார். கரைசேர்ந்த பின்னர் அந்த அம்மையாரின் குரல் கேட்க, அந்த அம்மையாரும் நம்பிள்ளையிடத்தே தெண்டன் ஸமர்பித்து “ஒரு மேடாய் இருந்து நம்மை ரக்ஷித்ததே” என்று பரவசித்துக் கூற , நம்பிள்ளை தானும் “உமது நம்பிக்கை அதுவாயின் அப்படியும் ஆகலாம் ” என்று ஸாதித்தார், இதிலேருந்து நாம் உணரவேண்டியாது யாதெனில் உயிரை விட நேர்ந்தாலும் ஆசாரியனுக்கு அடிமை செய்தலில் ஈடு பட்டிருக்கை ஆகும். நம்பிள்ளை தாமும் மிக இக்கட்டான நிலைமைகளில் இருந்து ஶிஷ்யர்களை ஆசாரியன் காப்பதை இது மூலமாக வெளிப்படுத்தினார் .
 • நம்பிள்ளையின் திருமாளிகைக்கு அடுத்த அகத்தில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவப் பெண்மணி வசித்து வந்தார். அவ்வம்மையாரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நீர் உமது இடத்தையும்  நம்பிள்ளையிடம்  ஸமர்ப்பிப்பீரே ஆனால், பெரியதான நம்பிள்ளையின் கோஷ்டி எழுந்தருளுவதற்கு உதவியாக இருக்கும் என்று விண்ணப்பித்தார். அவ்வம்மை முதலில் சற்று தயங்கினாலும், பின்னர் நம்பிள்ளையிடத்தே  சென்று நாம் உமக்கு நம் இடத்தை ஸமர்ப்பிக்கிறோம், தேவரீர் அடியேனுக்கு ஸ்ரீவைகுண்டத்திலே ஓர் இடம் அருள வேண்டும், மேலும் நாம் பெண் பிள்ளை ஆதலால் நமக்கு ஒரு சீட்டு எழுதித்தரவேண்டும் என்று பிரார்த்திக்க, ஆசார்யன் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை மிகவும் உகந்த நம்பிள்ளை, “இவருக்கு இந்த வருஷம் இந்த மாதம் இந்த திதி, திருக்கலிக்கன்றி தாஶனான நாம் பரமபதத்தில் ஓர் இடம் எழுதிக்கொடுத்துள்ளோம், அனைத்து உலகங்களுக்கும் எமக்கும்  ஸ்வாமியான வைகுண்டநாதன், இதை  அருள வேண்டும்” என்று சீட்டு எழுதி கொடுக்க அவ்வம்மையார் அன்றைக்கு மூன்றாம் நாள் திருநாடைந்தார் .
 • நம்பிள்ளைக்கு இரண்டு தேவிகள் எழுந்தருளி இருந்தனர். அவர்களில் பெரிய தேவிகளைப் பார்த்து நம்பிள்ளை அவர் தம்மை எவ்வாறாகக் கொண்டுள்ளார் என்று கேட்க, அதற்குப் பெரிய தேவிகள் , தாம் நம்பிள்ளையை எம்பெருமானின் திருவவதாரமாகவும் தனக்கு ஆசார்யனாகவும் கொண்டுள்ளதாகச் ஸாதித்தார். இதனை கேட்ட நம்பிள்ளை திருவுள்ளம் மகிழ்ந்து பெரிய தேவிகளை ததீயாராதனை கைங்கர்யத்தில் ஈடுபடுமாறு கூறினார்.  பின்னர் நம்பிள்ளை இதே கேள்வியை தனது இளைய தேவிகளைக் கேட்க அவர் தாம் நம்பிள்ளையை தனது கணவராகக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நம்பிள்ளை அவரை, பெரிய தேவிகளுக்கு உதவியாக இருந்து தினமும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஶேஷத்தை உண்டு வருமாறு பணித்தார். இதனால் சிறிய தேவிகளுக்கு நிஷ்டை பெருகி தனது ஶரீர ஸம்பந்தமான கணவன் மனைவி என்ற எண்ணத்திலிருந்து ஆசார்யன் ஶிஷ்யை என்ற எண்ணம் மேலோங்கும் என்று ஸாதித்தார் .
 • மஹா பாஷ்ய பட்டர் என்பவர் நம்பிள்ளையிடத்தே, சைதன்யம் உணர்ந்த ஸ்ரீ வைஷ்ணவரின் எண்ணம் என்னவாய் இருக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு நம்பிள்ளை, அப்படி பட்ட ஒரு ஸ்ரீவைஷ்ணவர் எம்பெருமானே உபாயம் மற்றும் உபேயம் என்று எண்ணவேண்டும். மேலும் நமக்கு ஸம்ஸாரம் என்னும் நோயை போக்கிக்கொடுத்தாரே என்ற நன்றி உணர்வோடு ஆசார்யனிடத்தில் இருத்தலும், ஸ்ரீ பாஷ்யத்தால் ஸ்தாபிக்கப்பட்டதான எம்பெருமானார் தரிஶனமே உண்மை என்று இருத்தலும், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கொண்டு பகவத் குணாநுஶந்தானத்திலும், அருளிச்செயல்களில் ஈடுபட்டிருத்தலும் வேண்டும் என்று ஸாதித்தார். இறுதியாக, இவ்வாழ்கையின் முடிவில் பரமபதத்தைக் காண்போம் என்ற உறுதி வேண்டும் என்று ஸாதித்தார்.
 • பாண்டிய நாட்டிலிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்பிள்ளையிடத்தே வந்து தங்களுக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தின் ஸாரத்தைச் சாதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்க, அதற்கு நம்பிள்ளை, கடற்கரையை நினைத்திருக்கச் சொன்னார். இதனைக் கேட்டுக் குழப்பமடைந்த அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நம்பிள்ளை, ராவணனோடு போரிடுவதற்கு முன் சேதுக்கரையில் ஸ்ரீ ராமன் குடில் அமைத்து தங்கிக்கொண்டிருக்கையில் சுற்றிக் குரங்குகள் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். ஆனால் களைப்பால் குரங்குகள் உறங்க, சக்கரவர்த்தித் திருமகனார் தான் சென்று பாதுகாப்பிற்கு எழுந்தருளினார். இதனால் நாம் உறங்கும் வேளையிலும் காக்கும் எம்பெருமான் நம்மை உறங்காத வேளைகளிலும் காத்துக் கொண்டிருக்கிறான் என்ற உறுதியோடு, நாம் நம்மை காத்து கொள்ளுதலைத் (அதாவது ஸ்வ ரக்ஷணே ஸ்வ அந்வயம்) தவிர்த்தல்  வேண்டும் என்று ஸாதித்தார்.
 • இதர தேவதைகளைப் பூசிப்பது பற்றி நம்பிள்ளை ஸாதித்த மிக உன்னதமான விளக்கத்தை இப்போது காண்போம். ஒருவர் நம்பிள்ளையினிடத்தே வந்து, நித்ய கர்மாக்களில் இந்திரன் வருணன் அக்னி போல்வார்களைத் தொழும் நீங்கள் ஏன் அவர்கள் கோவில்களுக்குச் செல்வதில்லை என்று கேட்டார். அதற்கு நம்பிள்ளை மிகவும் அழகாக “நீர் அக்னியை யாகத்தில் வணங்குகிறீர் பிறகு ஏன் சுடுகாட்டில் எரியும் தீயிலிருந்து விலகுகிறீர்? ” என்று கேட்டு, பின்னர் இந்த நித்ய கர்மாக்களை பகவத் கைங்கர்யமாக, இந்த தேவைதைகளுக்கு அந்தர்யாமியாக பகவான் இருப்பதை உணர்ந்து செய்ய வேண்டும் என்று ஶாஸ்த்ரம் அறிவுறுத்துகிறது, அதனால் தான் இவைகளைச் செய்கிறோம். மேலும் அதே ஶாஸ்திரம் ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம், அவரைத் தவிர்த்து வேறொருவருக்குப் பூசனைகள் தகாது என்று கூறுகிறது. அதனால் தான் நாங்கள் இதர தெய்வங்களின் கோவில்களுக்குச் செல்வதில்லை. மேலும் இந்த தெய்வங்களுக்குத் தனி ஸந்நிதி அமையும் போது  தாங்களே மேலானவர்கள் என்ற ரஜோ குணம்  பெருகப் பெற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவர்களோ ஸாத்வீக குணம் மேலோங்கப் பெற்றவர்கள். அதனால் எங்கள் பூசனைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள் என்று ஸாதித்தார் .
 • ஒரு ஸ்ரீவைஷ்ணவர் நம்பிள்ளையிடம்  சென்று அவர் முன்பிருந்ததை விட மெலிந்திருப்பதாகக் கூற அதற்கு நம்பிள்ளை ஆத்மவாகப்பட்டது வளரும் போது  ஶரீரம் மெலியும் என்று ஸாதித்தார்
 • மற்றொரு ஸ்ரீவைஷ்ணவர் நம்பிள்ளையை நோக்கி தேவரீர் ஏன்  திருமேனியில் தெம்பின்றி எழுந்தருளி இருக்கிறீர் என்று கேட்க அதற்கு நம்பிள்ளை, எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்ய அடியேனின் உடலில் தெம்பு உள்ளது. அதற்கு மேல் சக்தி இருந்து அடியேன் ஒன்றும் போர் தொடுக்கப் போவதில்லை என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தேக ஶக்தியில் ஈடுபாடிருத்தல் கூடாது.
 • ஒருமுறை நம்பிள்ளை திருமேனியில் நோவு சாற்றிக்கொண்டிருக்க, இதைக் கண்ட ஒரு ஸ்ரீவைஷ்ணவர் திருவுள்ளம் நொந்தார். அதற்கு நம்பிள்ளை, ஒருவருக்கு இன்னல்கள் நேர்வதும் நன்மையே ஏனென்றால் ஶாஸ்திரம் “எவன் ஒருவன் எம்பெருமானை சரணாகக் கொண்டுள்ளானோ அவன் ம்ருத்யு தேவதைக்காகக் காத்திருக்கிறான்” என்று கூறிகிறது, என்று ஸாதித்தார்.
 • நம்பிள்ளை மீது கொண்டுள்ள அன்பினால், சில ஸ்ரீவைஷ்ணவர்கள், எங்களாழ்வான் கூறியதன் பெயரில், நம்பிள்ளை நோயிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக அவருக்கு ரக்ஷை கட்ட முயல்கின்றனர். இதனை நம்பிள்ளை ஏற்க மறுத்துவிடுகிறார். நம்பிள்ளையின் இந்த செயலுக்குக் காரணம் கேட்ட அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் “ஒருவர் தனது நலனில் ஈடு படுவது தவறு ஆனால் பிறர் நலத்திற்காக முயற்சி எடுப்பது  எவ்விதத்தில் தவறாகும்” என்றும் கேட்டனர். அதற்கு நம்பிள்ளை நாம் பட்ட நோவை நாமே சரி படுத்த முயல்கையில் நாம் எம்பெருமானையே அண்டி உள்ளவர்கள் என்ற ஸ்வரூபத்தை உணராதவர்கள் ஆகிறோம். அதே போன்று வேறொருவர் நோவிற்கு நிவாரணத்தை நாம் செய்கையில், எம்பெருமானின் ஞானம் மற்றும் ஶக்திகளை உணராமலும், மற்ற பக்தர்களின் நலனுக்கும் நாம் அவனையே  நாட வேண்டும் என்ற உண்மையை மறந்தவர்கள் ஆகிறோம் என்று விளக்கம் ஸாதித்தார். நம்பிள்ளையின் நிஷ்டையாகப்பட்டது இவ்வண்ணம் மிக உயர்ந்ததாக இருந்தது. நாம் ஒன்றை நினைவில் கொள்ளுதல் சாலச் சிறந்தது. அது யாதெனில் மாறனேரி நம்பியைப் போல, மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஏதேனும் துன்பங்கள் நேர்கையில் அவர்களுக்கு உதவியாய் இருத்தலும் நம் கடமையே .
 • பல ஆசார்ய திருவம்ஶங்களில் வந்து தோன்றியவர்கள் நம்பிள்ளையினிடத்தே ஶிஷ்யர்களாக எழுந்தருளியிருந்தனர். இவரது ஶிஷ்யர்களான நடுவில் திருவீதிப் பிள்ளை (125000 படி) மற்றும் வடக்குத் திருவீதிப் பிள்ளை (ஈடு 36000 படி) இருவருமே திருவாய்மொழிக்கு வியாக்யானம் செய்தருளினார். அதில் நடுவில் திருவீதிப் பிள்ளையின் வியாக்யானத்தை நம்பிள்ளை, மிக பெரியதாக இருந்ததால், கரையானுக்கு இரையாக்கி விட்டார். வடக்குத் திருவீதிப் பிள்ளை செய்தருளிய வியாக்யானத்தை, வரும் காலங்களில் கோயில் நாயனாரான அழகிய மணவாளமாமுனிகள் தானே வெளிப்படுத்தட்டும் என்று திருவுள்ளம் கொண்டு, ஈயுண்ணி மாதவர் என்பவரிடம் கொடுத்துவிட்டார். மேலும், நம்பிள்ளை  பெரியவாச்சான் பிள்ளையை திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப் பணிக்க அவரும் ஆசார்யன் திருவுள்ளப்படி 24000 படி வியாக்யானத்தைச் ஸாதித்தார். நம்பிள்ளை திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த காலத்தை நல்லடிக்காலம் என்றே கொண்டாடுவர் அடியார்கள்.
 • நம்பிள்ளை கோயில் வள்ளலார் என்பவரிடம் “குலம் தரும் “ என்று தொடங்கும் பாசுரத்திற்கு விளக்கமருளும்படி கேட்க, அதற்கு அவர், “குலம்  தரும் என்பது அடியேன் பிறந்த குலத்திலிருந்து தேவரீரின் குலமான  நம்பூர் குலத்தை  நமக்கு அருளியதே, அதே ஆகும்” என்று ஸாதித்தார். இது பண்டைக்குலத்தைத் தவிர்ந்து தொண்டக்குலத்தில் இருப்பதான பெரியாழ்வார் ஸ்ரீ    ஸூக்திகளுக்கு நிகராக உள்ளது. நம்பிள்ளையின் பெருமைகள் இவ்வாறு சிறந்து விளங்கின.

பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளை விஷயமாகக் கூறுவதை இப்பொழுது காண்போம். ஏழை எதலன் பதிகத்தில், “ஓது வாய்மையும்” பாசுரத்தில் (பெரிய திருமொழி 5.8.7) , ‘அந்தணன் ஒருவன் ‘ என்ற இடத்திற்கு விளக்கமருளுகையில், பெரியவாச்சான் பிள்ளை தனது ஆசார்யனையே சிறந்த அந்தணன் (தனித்துவம் பெற்ற பண்டிதர்) என்று கொண்டாடுகிறார். பெரியவாச்சான் பிள்ளையின் அற்புத விளக்கம் “முற்பட த்வயத்தைக் கேட்டு, இதிஹாஸ புராணங்களையும் அதிகரித்து, பரபக்ஷ ப்ரத்க்ஷேபத்துக்குடலாக ந்யாயமீமாம்ஸைகளும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிச் செயலிலேயாம்படி பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிரே ஒருவன் என்பது”. இவ்விடத்திலே ஸாந்தீபனி முனி சற்றே நம்பிள்ளயைப் போலே என்று ஸாதிக்கிறார். எனினும் நம்பிள்ளை ஸாந்திபனியைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தவர் – காரணம், நம்பிள்ளை எப்பொழுதும் பகவத் விஷயத்திலேயே ஈடுபட்டிருந்தவர். ஸாந்திபனியோ முகுந்தனான எம்பெருமான் கண்ணனிடம் இறந்த தனது மகனை திரும்பவும் கொண்டுவருமாறு கேட்டார்.

தமிழ் மற்றும் ஸமஸ்க்ருதத்தில் இருந்த ஆழ்ந்த ஞானத்தால், நம்பிள்ளை தன்னிடம் காலக்ஷேபம் கேட்க வருபவர்களை இன்பக் கடலில் ஆழ்த்தி விடுவார் . மேலும் நம்பிள்ளையினால் தான் திருவாய்மொழியும் மற்ற அருளிசெயல்களும் நன்கு பரவுவதில் புதிய உயரத்தை கண்டன. 6000 படி தவிர்த்த திருவாய்மொழிக்கான மற்ற நான்கு வ்யாக்யானங்கள் நம்பிள்ளையோடே தொடர்புடையவை ஆகும்

 • நஞ்சீயரால் ஸாதிக்க பட்டிருந்தாலும் 9000 படி வியாக்யானம் நம்பிள்ளையால் இன்னொரு முறை இன்னும் ஆழமான அர்த்தங்களோடு திரும்ப எழுதப்பட்டது.
 • நம்பிள்ளையிடம் கேட்டவைகளைக்கொண்டும் நம்பிள்ளையின் உத்தரவின் பெயரிலும் பெரியவாச்சான் பிள்ளை ஸாதித்ததே 24000 படி ஆகும் .
 • நம்பிள்ளையிடம் கேட்டதைக்கொண்டு வடக்கு திருவீதிப்பிள்ளை ஏடு படுத்தியதே 36000 படி வியாக்யானம் ஆகும்.
 • பெரியவாச்சான்பிள்ளையின் ஶிஷ்யரான வாதிகேஶரி அழகியமணவாள ஜீயர் ஸாதித்ததே 12000 படி வ்யாக்யானமாகும் . இதில் காணும் அர்த்தங்களைக்கொண்டு இது 36000 படியை மிகவும் நெருக்கமாக பின்பற்றுகிறது என்று நாம் உணரலாம். 

இவைகளோடன்றி தனது பெருத்த கருணையினால், நம் ஸம்பிரதாயத்தின் இரு தூண்களான, பூருவர்களிடமிருந்து கேட்டவைகளைக்கொண்டு சீர் வசனபூடனம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயங்களை ஸாதித்தவர்களான  பிள்ளை உலகாரியன் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கு நம்பிள்ளையின் அருளே காரணமாக அமைந்தது. நமது அடுத்த பதிவில் வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவத்தைக் காண்போம். 

nampillai-pinbhazakiya-perumal-jeer-srirangam
(பின்பழகராம் பெருமாள் சீயரோடு நம்பிள்ளை, திருவரங்கம் )

திருவரங்கத்தில் தனது சரம திருமேனியை விடுத்து மேலான திருநாட்டுக்கு நம்பிள்ளை எழுந்தருளினார். இதனைக் கண்ட நடுவில் திருவீதிப் பிள்ளை  பட்டர் தானும் சவரம் செய்துக்கொண்டு விடுகிறார் . (ஶிஷ்யர்களும் மகன்களும் ஆசார்யானோ தந்தையோ பரமபதிக்கையில் சவரம் செய்துகொள்வர்). கூர குலத்தில்  பிறந்தும் இவ்வாறு செய்ததை பட்டரின் திருத்தமையனார் நம்பெருமாளிடம் கூற, நம்பெருமாள் பட்டருக்கு அருளப்பாடிட்டு அனுப்பினார். இவ்வாறு செய்தருளியது ஏன் என்று கேட்ட நம்பெருமாளிடம், தமது குடும்பத்தை காட்டிலும் நம்பிள்ளையோடு  தாம் கொண்டுள்ள ஸம்பந்தத்தைப் பெரிதும் உகப்பதாக பட்டர் ஸாதித்தார். இதனைக்கேட்ட நம்பெருமாள் திருவுள்ளம் உகந்தார். 

நம் ஆசார்யனிடத்திலும் எம்பெருமானிடத்திலும் இவ்வாறான பற்று நமக்கும் ஏற்பட , நாம் அனைவரும் நம்பிள்ளையின் திருவடிகளைப் பிரார்த்திப்போம் . 

நம்பிள்ளையின் தனியன்:

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்

நம்பிள்ளையின் வாழி திருநாமம்:

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே

காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே

நமது அடுத்த பதிவில் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்
அடியேன் ராமானுஜ தாசன் – எச்சூர் ஸ்ரீநிவாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/16/nampillai/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org