Monthly Archives: திசெம்பர் 2016

வேதாந்தாசார்யர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:

vedanthachariarThiruvallikeni

ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

எதிர்த்து வாதாடும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும், சிறந்த செல்வத்தைப் பெற்றவரும் (ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் பல), வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரும் ஆகிய ஸ்ரீ வேதாந்தாசார்யர்  என்னுடைய மனதில் எப்பொழுதும் உறைவாராக.

திருவவதாரம்

திருநாமம்: வேங்கடநாதன்

அவதரித்த வருடம்: கலியுகம் 4370 (1268 கி.பி.)

மாதம், திருநக்ஷத்ரம்:  புரட்டாசி,  திருவோணம் (திருவேங்கடமுடையான் திருநக்ஷத்ரம்)

அவதாரஸ்தலம்: காஞ்சிபுரம்,  திருத்தண்கா

கோத்ரம்: விச்வாமித்திர கோத்ரம்

அவதாரம்: திருவேங்கமுடையானின் கண்டம் (மணி) – சங்கல்ப ஸூர்யோதய என்று தன்னுடைய கிரந்தத்தில் கூறியது போல.

பெற்றோர்கள்: அநந்த சூரி, தோத்தாரம்பா

பரமபதம்: சுமார் நூறு வயதிருக்கும் பொழுது, அதாவது  கலியுக வருடம் 4470 (கி.பி. 1368 ல்) ஸ்ரீரங்கத்திலிருந்து பரமபதத்துக்கு எழுந்தருளினார்.

இவர் ஸ்ரீ ரங்கநாதரிடமிருந்து ” வேதாந்தாசார்யர் ” என்கின்ற திருநாமமும், ஸ்ரீ ரங்க நாச்சியாரிடமிருந்து ” கவிதார்க்கிக கேசரீ ” மற்றும் “ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்ற திருநாமங்களையும் பெற்றார்.

இவருக்கு “வரதாசாரியார்” என்ற திருநாமம் உடைய ஒரு புதல்வரும், “ப்ரஹ்மதந்திர ஸ்வதந்திரர் ஜீயர்” என்ற ஜீயரும் சிஷ்யர்களாக இருந்தனர்.

கிடாம்பி ஆச்சானின் பேரன் கிடாம்பி அப்புள்ளார், ஸ்ரீ நடாதூர் அம்மாளின் சிஷ்யர்களில் ஒருவர் ஆவார்.

திருவிருத்தம் 3 ல் “அப்புள்” என்பது கருடனை குறிப்பிடும். அப்புள்ளார் என்ற இவருடைய பெயரில் உள்ள வார்த்தைக்கு,  கருடனைப் போன்ற குணங்கள் உடையவர் என்பதாகும். இவர்க்கு “வாதி ஹம்ஸாம்புவாஹர்” என்ற மற்றொரு திருநாமம் உள்ளது. இதற்கு ஹம்சங்களை தோற்கடிக்கக் கூடிய மேகத்தைப் போன்றவர் என்ற பொருளாகும். “ராமானுஜர்” என்பது இவருடைய இயற் பெயராகும்.

இப்படியாகிய ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாரின் மருமகனும், சிஷ்யரும்தான் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ வேதாந்தாசார்யர்  ஆவார்.

வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்கு தன்னுடைய மாமா (ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார்) உடன் சென்றார்.  வேதாந்தாசார்யர்  தனது சிறு பிராயத்திலேயே நடாதூர் அம்மாளின் காலக்ஷேப கோஷ்டிக்குத்  தன்னுடைய மாமா ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளாருடன் சென்றார்.  இது பற்றி வேதாந்தாசார்யர் ,  ஸ்ரீ  நடாதூர் அம்மாள்  இவர்  விசிஷ்டாத்வைத  ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை  எதிர்க்கும் அனைத்தையும்  அகற்றி நிலை நாட்டுவார் என்று  தன்னை ஆசிர்வதித்ததாக  குறிப்பிடுகிறார்.

அருளிச்செய்த கிரந்தங்கள் –

ஸ்ரீ  நடாதூர் அம்மாள் ஆசிர்வதித்ததுபோல் ஸ்ரீ வேதாந்தாசார்யர்  எண்ணற்ற கிரந்தங்களையும், விசிஷ்டாத்வைதத்தை எதிர்த்த பல தத்துவ ஞானிகளையும், வாதிகளையும் வென்றார்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர்  நூற்றுக்கணக்கான கிரந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை ஸம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் மணிப்ரவாளம் (ஸம்ஸ்க்ருதமும் தமிழும் கலந்த) போன்ற மொழிகளில் அருளியுள்ளார்.

இவருடைய கிரந்தங்களில் முக்கியமானவை பின்வருமாறு:

  • தாத்பர்ய சந்திரிகை – கீதா பாஷ்யத்தின் வ்யாக்யானம்
  • தத்வதீகை – ஸ்ரீ பாஷ்யத்தின் ஒரு பகுதிக்கு வ்யாக்யானம்
  • ந்யாய சித்தாஞ்சனம் – நம்முடைய சம்பிரதாயத்தின் தத்துவத்தை ஆய்வு செய்யும் நூல்
  • சத தூஷணி- அத்வைத தத்துவத்தை எதிர்த்து வாதிடும் நூல்.
  • அதிகரண  சாராவளி -ஸ்ரீ பாஷ்யத்தின் உட்பிரிவுகளைப் பற்றியது.
  • தத்வ முக்தாகல்பம் – நம்முடைய தத்துவத்தைப் பற்றி விளக்கும் நூல்; “ஸர்வார்த்த ஸித்தி” என்பது இதனுடைய வ்யாக்யானம்.
  • சது:ச்லோகிக்கும், கத்ய த்ரயத்திற்கும் ஸம்ஸ்க்ருதத்தில் பாஷ்யங்கள்.
  • நாடக வடிவில் அமைந்துள்ள ஸங்கல்ப சூர்யோதயம்.
  • தயா சதகம், பாதுகா சஹஸ்ரம், யாதவப்யுதயம், ஹம்ச ஸந்தேசம்.
  • ரஹஸ்யத்ரய ஸாரம், ஸம்ப்ரதாய பரிஸுத்தி , அபயப்ரதான ஸாரம், ஸ்ரீபரமதபங்கம்.
  • முனிவாஹன போஹம் – அமலனாதிபிரானின் வ்யாக்யானம்.
  • ஆகார நியமம் – ஆகார பழக்க வழக்கங்களை பற்றிய தமிழ் நூல்.
  • ஸ்தோத்ரங்கள்- தசாவதார ஸ்தோத்ரம், கோதா ஸ்துதி, ஸ்ரீ ஸ்துதி, யதிராஜ சப்ததி.
  • த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, த்ரமிடோபநிஷத் ஸாரம் – இவை திருவாய்மொழியின் உள்ளர்த்தங்களையும் மேலும் பலவற்றையும் விளக்கும்.

இக்கட்டுரையில் இது வரை கொடுக்கப்பட்டுள்ளவை பெரும்பாலும் புத்தூர் ஸ்வாமி பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள ஒரு மலரை அடிப்படையாக கொண்டதாகும்.

SriVedanthachariar_Kachi_IMG_0065காஞ்சி ஸ்ரீ தூப்புல் வேதாந்தாசார்யர் , அவதார உத்சவத்தின்போது

வேதாந்தாசார்யாரும் மற்ற ஆசார்யார்களும்

  • வேதாந்தாசார்யர், பிள்ளை லோகாசாரியரை பெருமைப்படுத்தும்படியான “லோகாசார்ய பஞ்சாசத்” என்ற அற்புதமான பிரபந்தத்தை அருளிச் செய்துள்ளார். வேதாந்தாசார்யர்  பிள்ளை லோகாசாரியரை விட ஐம்பது வயது இளையவராயினும், இவர் பிள்ளை லோகாசாரியரை போற்றிப் புகழ்வதைப் பற்றி இந்த கிரந்தத்திலிருந்து எளிதில்  புரிந்து கொள்ளலாம்; இந்த கிரந்தத்தை இன்றும் திருநாராயணபுரத்தில் (கர்நாடக மாநிலத்தில் உள்ள மேலக்கோட்டை) சேவிக்கப்படுகிறது.
  • வாதி கேஸரி அழகிய மணவாள ஜீயர், “தத்வதீபம்” என்ற தன்னுடைய கிரந்தத்தில் வேதாந்தாசார்யருடைய க்ரந்தங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.
  • ஸ்ரீ மணவாள மாமுனிகள், தனது தத்வத்ரயம் மற்றும் முமுக்ஷுப்படி(பிள்ளை லோகாசார்யார் எழுதிய) வ்யாக்யானங்களில் வேதாந்தாசார்யர்  அருளிய வார்த்தைகளை மேற்கோள் காட்டியுள்ளார்; மேலும் மணவாள மாமுனிகள், வேதாந்தாசார்யரை அன்புடன் ” அப்யுக்தர்” என்று அழைக்கின்றார்.
  • மணவாள மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகிய ஸ்ரீ எறும்பியப்பா, தனது விலக்ஷணமோக்ஷதிக்நிர்ணயத்தில் வேதாந்தாசார்யரின் “ந்யாய விம்சதி”யை மேற்கோள் காட்டி அதன் சாரார்த்தத்தையும் கொடுத்துள்ளார்.
  • ஸ்வாமி  தொட்டாசார்யர், சோழசிம்மபுரம்  (சோளிங்கர்) , வேதாந்த தேசிகனின் “சத தூஷணி”க்கு “சண்டமாருதம்” என்ற விளக்க உரை எழுதியுள்ளார். அதனால் இவர் ” சண்டமாருதம் தொட்டாசார்யர்” என்று அழைக்கப்பட்டார். இவரை தொடர்ந்து வரும் ஆசார்யர்கள் இன்றும் இப்பெயரை வைத்துக் கொள்கின்றனர்.
  • பிரதிவாதி பயங்கரம் அண்ணாவும் அவருடைய சிஷ்யர்களும் மற்றும் அவர்களுடைய வம்சத்தில் வந்தவர் அனைவரும் , வேதாந்தாசார்யரிடம் கொண்டுள்ள ஈடுபாடு மிகவும் தெரிந்ததே. திருவிந்தளூரில் வசிக்கும் மற்றும் தெற்கு பகுதியில் உள்ளவர்களும் வேதாந்தாசார்யரின் திருகுமாரராகிய நயினாராசாரியரின் திருநாமத்தைத் தங்களுடைய திருநாமத்துடன் சேர்த்து அழைக்கின்றனர். இது  வேதாந்தாசார்யரின் திருகுமாரரிடம் தங்களுடைய  ஈடுபாட்டைத் தெரியப் படுத்துவதாக உள்ளது.
  • வேதாந்தாசார்யரின் க்ரந்தங்களுக்கு பல்வேறு ஆசார்யர்களும் வித்வான்களும் வ்யாக்யான உரை எழுதியும், மேற்கோள் காட்டியும் உள்ளார்கள்.

இவற்றுள் சில பின்வருமாறு:

  • ஸ்வாமி தொட்டாசார்யரின் சீடராகிய நரசிம்மராஜாசார்ய ஸ்வாமி , “ந்யாய பரிஸுத்தி” என்ற வேதாந்தாசார்யரின் கிரந்தத்திற்கு வ்யாக்யான உரை எழுதியுள்ளார்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த மைசூர் (மண்டயம்) அனந்தாழ்வான், வேதாந்தாசார்யரின் கிரந்தங்களை தான் அருளிச் செய்தவைகளில் பல இடங்களில் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின்  பிற்பகுதியில்  காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குன்றப்பாக்கம் ஸ்வாமி, தனது “தத்வ-ரத்னாவளி”யில், வேதாந்தாசார்யரை “ஜயதி பகவான் வேதாந்தராயஸ் ஸ தார்க்கிக-கேஸரீ” என்று மிகவும் அன்புடன் அழைத்துள்ளார்.

ஸ்ரீ வேதாந்தாசார்யரும் , தனது  பூர்வாசார்யர்களுக்கும் மற்றும்  அவருடைய காலத்தில் வாழ்ந்த ஆசார்யர்களுக்கும் அபிமான அன்பையும் மதிப்பையும் தந்துள்ளார். இது ” ஸ்ரீ அபீதி-ஸ்தவம்” என்ற ச்லோகத்தின் மூலம் உறுதியாகின்றது. “க்வச ந ரங்கமுக்யே  விபோ! பரஸ்பர ஹிதைஷிணாம் பரிஸரேஷு மாம் வர்த்தய” (ஆண்டவனே!  ஸ்ரீ ரங்கத்தின் நலம் கருதும் அடியார்களுடைய பாத கமலங்களில் அடியேன் என்றும் இருக்க அருள் புரிவீராக).

“பகவத்-த்யான சோபனத்தின்” கடைசி ச்லோகத்தில், ஸ்ரீ வேதாந்தாசார்யர் பல அறிவார்ந்த அறிஞர்களையும், ஸ்ரீரங்கத்தின் கலை ப்ரியர்களையும் மிகவும் உயர்த்திப் பாராட்டியுள்ளார். ஏனென்றால் தன்னுடைய    எண்ணங்கள் தெளிவு பெறவும், எளிய மகிழ்வளிக்கக்கூடிய பாணியை அடைவதற்கும் அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

ஸ்ரீ வேதாந்தாசார்யர், ஸ்ரீ ராமாநுஜரிடம் கொண்டுள்ள பக்தி நன்றாக அறிந்ததே. இவரது ந்யாஸ திலகத்தில் “உக்த்ய தனஞ்சய” என்று தொடங்கும் வரிகளில், எம்பெருமானிடம்  அவருடைய கருணனையை மட்டும் அருளுமாறு வேண்டுகிறார். ஏனென்றால்  ஸ்ரீ ராமானுஜருடன் தமக்கு ஏற்பட்ட சம்பந்தத்தால் மோக்ஷம் உறுதியாக கிட்டும் என்று கூறுகிறார், இதிலிருந்து ஸ்ரீ இராமாநுஜரிடம் இவர் கொண்டுள்ள பக்தி புலப்படுகிறது.

இதிலிருந்து ஸ்ரீ வேதாந்தாசாரியரும்   மற்ற அறிஞர்களும் ஒருவருக்கொருவர் மதிப்பும், மரியாதையை, மற்றும் அன்பும் கொண்டு உரையாடல்களை மேற்கொண்டு சுமுகமான ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு வழி வகுத்தனர்.

ஆசார்ய சம்பு

ஸ்ரீ. சத்தியமூர்த்தி ஐயங்கார், குவாலியர் (குவாலியர் ஸ்வாமி) 1967 ல் வெளியிட்ட தனது “A critical appreciation of Sri Vedanta Desika Vis-à-vis the Srivaishnavite World”, என்னும் ஆங்கிலப்  புத்தகத்தில் ஸ்ரீ வேதாந்தாசாரியரைப் பற்றி அறிந்து கொள்ள ஆதாரமான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். கீழே கொடுக்கப்பட்டுள்ளவையுள் அநேகமாக இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

கி.பி. 1717 ஆம் ஆண்டு வாழ்ந்த “கௌசிக கவிதார்க்கிக சிம்ஹ வேதாந்தாசாரியர்”  பெரும் பண்டிதரும் கவிஞரும் ஸம்ஸ்க்ருதத்தில் கவிதையாகவும் உரை நடையாகவும் எழுதிய “வேதாந்தாசார்ய விஜயா” என்றும் “ஆசார்ய சம்பு ” எனவும் அறியப்படும் நூலை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த சம்பூ கிரந்தம் ஒன்று தான் வேதாந்தாசாரின் வைபவத்தை உள்ளபடி உணர்த்தும் நூலாகும். இதில் ஆறு ஸ்தபகங்கள் உள்ளன.

  • முதல் ஸ்தபகத்தில் மங்களா சரணம், க்ரந்த கர்த்தாவின் வம்சாவளி பற்றிய பேச்சு, காஞ்சிபுரியின் வர்ணனை மற்றும் வேதாந்தாசார்யரின் பிதாமஹரான ஸ்ரீ புண்டரீகாக்ஷ யஜ்வாவின் வர்ணனை ஆகியவை உள்ளது.
  • இரண்டாவது ஸ்தபகத்தில், வேதாந்தாசார்யருடைய திருத்தகப்பனாருமான அநந்த சூரி பற்றிய பேச்சு, அவருடைய தாயார் கர்ப்பவதியானது, திருமலை மால் திருமணி அந்த கர்ப்பத்திலே வந்து ஆவேசித்தது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது.
  • மூன்றாவது ஸ்தபகத்தில்- வேதாந்தாசார்யருடைய திருவவதாரம், பால்ய வர்ணனம், ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம் செய்து வரும் நடாதூரம்மாள் திருமாளிகைக்கு தம்முடைய மாதுலரான கிடாம்பியாப்புள்ளாரோடு சென்று அங்கு அம்மாளுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றது, தக்க காலத்தில் உபநயனம் நடைபெற்று  வேதாத்யானமும், சாஸ்த்ர பாராயணமும் செய்தது, விவாஹம் செய்து  கொண்டது, ஹயக்ரீவ மந்த்ரத்தை ஜபித்தது, வாதிகளை வென்றது, ந்யாய ஸித்தாஞ்ஜநம் முதலிய கிரந்தங்கள் சாதித்தது, கவிதார்க்கிகஸிம்ஹ என்ற விருது பெற்றது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது.
  • நான்காவது ஸ்தபகத்தில் காஞ்சி  வைகாசோத்சவத்தில் பங்கு கொள்ளுதல், வரதராஜ பஞ்சாசத் ஸ்தோத்ரம் அருளிச் செய்தது, வித்யாரண்ய யதி என்ற அத்வைத ஞானியை வாதத்தில் வென்றது, புரட்டாசி மாதத்தில் திருவேங்கடமுடையானுத்சவத்தில் கலந்து கொண்டது ஆகியவை சொல்லப்பட்டுள்ளது.
  • ஐந்தாவது ஸ்தபகத்தில் திருவேங்கடயாத்திரை, திருமலையில் தயா சதகமருளிச் செய்தது, வித்யாரண்யர் அழைப்பின் பேரில் விஜயநகரத்தரசின் இராஜ சபையில் வைராக்ய பஞ்சகத்தை அருளிச்செய்தது, வடநாட்டிற்கு சென்று கங்காநதி தீர்த்த யாத்திரை செய்தருளி பின்னர் காஞ்சிபுரம் வந்தது, வித்யாரண்யருக்கும் அக்ஷ்ஷோபிய முனி என்ற த்வைத அறிஞருக்கும் இடையே நடைபெற்ற வாதத்திற்கு மத்யஸ்தாபிப்ராயம் செய்து வைத்தது, பின்னர் ஸ்ரீரங்கநாதனைச் சேவிக்க விரும்பிய வேதாந்தாசார்யர் திருவஹீந்திரபுரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து நிறைய ஸ்தோத்ரங்களையும், கிரந்தங்களையும் இயற்றியது, ஸ்ரீமுஷ்ண யாத்திரை முடித்து பின்னர் கோயில் சேர்ந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
  • ஆறாவது ஸ்தபகத்தில், ஸ்ரீ வேதாந்தாசார்யர் ஸ்ரீரங்கநாதனை சேவித்து பகவத் த்யாந சோபனம் முதலான ஸ்துதிகளருளிச்செய்தது, க்ருஷ்ணமிச்ர என்கிற துர்வாதியோடு பதினெட்டு நாள் வாதயுத்தம் செய்து வெற்றி பெற்றது, வேதாந்தாசார்யர் என்றும் ஸர்வதந்த்ர ஸ்வதந்திரரென்றும் விருதுகள் பெற்றது, கவித்வச் செருக்குடன் வந்த துர்வாதியின் கர்வத்தை அகற்ற பாதுகா ஸஹஸ்ரமருளிச் செய்தது, முகலாயர்கள் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டது, தேசத்தின் மேற்கு பகுதியில் சில காலம் தங்கியிருந்து அபீதிஸ்தவத்தை அருளிச்செய்தது, பின்னர் காஞ்சிபுரம் வந்தது, அங்கு ஒரு பாம்பாட்டியின் செருக்கை அடக்க கருட தண்டகமருளிச் செய்தது, பிறகு திருகுமாரர் அவதரித்தது, ரஹஸ்யத்ரயசாரம் அருளிச் செய்தது ஆகியவைகளை கொண்டு இந்த கிரந்தம் முடிவு பெறுகிறது.

ஆசார்ய சம்பு என்ற புகழ் பெற்ற இந்த நூல் ஸமஸ்க்ருத பண்டிதர்கள் மிகவும் விரும்பிப் படிப்பது; பொக்கிஷமான இந்த அறிய நூலை மீண்டும் வெளியிட முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை.

———–

ஆதாரங்கள்:

  1. புத்தூர் ஸ்வாமியின் பொன் விழா மலர்.
  2. ஸ்ரீ. சத்தியமூர்த்தி ஐயங்கார், குவாலியர் (குவாலியர் ஸ்வாமி) “A critical appreciation of Sri Vedanta Desika Vis-à-vis the Srivaishnavite World”; c 1967.
  3. ‘ தமிழர் தொழு வேதாந்தவாசிரியன்’ (தமிழ்)- ஸ்ரீ. காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமி. http://acharya.org/books/eBooks/vyakhyanam/LokacharyaPanchasatVyakhyanaSaram-English.pdf , Sep 25, 2012 அன்று எடுக்கப்பட்டது
  4. பூர்வாசார்ய ப்ரபாவம்- இரண்டாவது மலர்.
  5. ஸ்ரீ. உ. வே. V. V. ராமானுஜம் ஸ்வாமியின் “லோகாசார்ய பஞ்சாசத்” தமிழ் நூலுக்கு ஸ்ரீ. உ. வே. T.C.A. வேங்கடேசனின் ஆங்கில மொழியாக்கம். அன்று எடுக்கப்பட்டது.
  6. புகைப்படம் உபகாரம்: கோயில் ஆத்தான் கஸ்தூரிரங்கன் ஸ்வாமி, திருவல்லிக்கேணி.
  7. ஏனைய புகைப்படங்கள் உபகாரம்: https://picasaweb.google.com/113539681523551495306/ Sep 25, 2012 அன்று எடுக்கப்பட்டது.

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்:  https://guruparamparai.wordpress.com/2015/06/05/vedhanthacharyar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org