ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
திருநக்ஷத்ரம்: ஆடி – பூசம்
அவதார ஸ்தலம்: காஞ்சிபுரம் (திருத்தண்கா, தீபப்ரகாசர் சந்நிதி அருகே)
ஆசார்யன்: மணவாள மாமுனிகள்
சிஷ்யர்கள்: தமது திருக்குமாரர்களான அண்ணனப்பா, அனந்தாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
அருளிச்செயல்கள்:
- ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீமத் பாகவதம், ஸுபாலோபநிஷத் ஆகியவைகளுக்கு குறுகிய வ்யாக்யானங்கள்.
- பராசர பட்டரின் அஷ்டச்லோகீ வ்யாக்யானம்
- மாமுனிகளின் நியமனப்படி : ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம், ப்ரபத்தி, மங்களாசாசனம் – http://acharya.org/books/ebooks/index-all.html (வேங்கடேச ஸுப்ரபாதம் காணவும்).
- வரவரமுனி சதகம் (மாமுனிகளை மேன்மைப்படுத்தி 100 ஸம்ஸ்க்ருத ச்லோகங்கள் )
- வரவரமுனி மங்களம் – http://acharya.org/sloka/pb-anna/index.html
- வரவரமுனி ஸுப்ரபாதம் – http://acharya.org/sloka/pb-anna/varavaramuni-suprabhatam-tml.pdf.
- மாமுனிகளின் வாழி திருநாமமாகிய “செய்யதாமரைத் தாளினை வாழியே…” (அருளிச்செயல் கோஷ்டியில் இறுதியில் சேவிக்கப்படும்)
- மற்றும் பல ச்லோகங்கங்கள் / ஸ்தோத்ர க்ரந்தங்கள்.
முடும்பை நம்பி திருவம்சத்தில் “ஹஸ்திகிரிநாதர்” என்னும் திருநாமம் கொண்டு அவதரித்தார். இவரை அண்ணா என்றும் அழைப்பார்கள். ப்ரதிவாதி பயங்கரர் என்றும் பிரபலமாக அறியப்பட்டார்.
எப்படி கூரத்தாழ்வான் எம்பெருமானாருக்கு முற்பட்டு அவதாரம் செய்திருந்தாலும் எம்பெருமானாருடைய ப்ரியமான சிஷ்யரானாரோ, அதேபோல் அண்ணாவும் மாமுனிகளுக்கு முற்பட்டு அவதாரம் பண்ணியிருந்தாலும் மாமுனிகளுக்கு இவர் ப்ரியமான சிஷ்யரானார். இவர் மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களில் (மாமுனிகளின் எட்டு முக்கிய சிஷ்யர்கள்) ஒருவருமாவார்.
தமது சிறுப்ராயத்தில் அண்ணா காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வேதாந்தாசார்யரின் அருளுக்குப் பாத்திரமானார். வேதாந்தாசார்யரின் திருக்குமாரரான நாயனாராசார்யரிடம் சம்ப்ரதாயம் பயின்றார். அண்ணா ஸம்ப்ரதாயத்தில் சிறந்து திகழ்ந்து மாற்று ஸம்ப்ரதாய வல்லுனர்களை தன் வாதத் திறமையினால் வென்றார். மாற்று ஸம்ப்ரதாயத்தில் இருந்து தன்னை வாதத்திற்கு அழைப்பவர்களின் மனதில் அண்ணா ஒரு பயங்கரமாகவே திகழ்ந்தார். அதோடு வாதத்தைத் தெளிவாக நிறுவும் திறன் கொண்டிருந்தார். இதை விளம்பும் வகையில் அனைவரும் இவரை ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா எனத் திருநாமம் சாத்தினர்.
க்ருஹஸ்தாச்ரமம் ஏற்று அண்ணா திருமலை (திருவேங்கடம்) சென்று திருவேங்கடமுடையானுக்குக் கைங்கர்யம் செய்தார். அவரது தர்மபத்னியும் அண்ணாவிற்குச் சரிசமமாக சாஸ்த்ரங்களில் தேர்ந்தவர். கூரத்தாழ்வானின் தர்மபத்னியான ஆண்டாளுக்கு நிகராய் (ஆழ்வானின் தர்மபத்னியான ஆண்டாள் என்பார் சாஸ்த்ரங்களில் சிறந்தும், எல்லாப்பெண்டிர்க்கும் பகவானிடத்திலும் பாகவதர்களிடத்தும் பூரணமாய் ஆச்ரயித்திருக்கத் தாமே சிறந்ததோர் எடுத்துக்காட்டாய்த் திகழ்தார்) பாண்டித்யம்/வைராக்கியம் ஆகியவைகொண்ட அவர் மூன்று திருக்குமாரர்களை ஈன்றார். அவர்களும் மிகுந்த பாண்டித்யம் பெற்றவர்களாய் வளர்ந்தார்கள். உலக விஷயங்களிலே ஈடுபாடின்றி அண்ணா திருவேங்கடமுடையானிடத்தே சென்று வழுவிலா கைங்கர்யத்தைப் பிரார்த்தித்தார் (ஆழ்வார் திருவாய்மொழி 3.3 யில் “ஒழிவில் காலமெல்லாம்” பதிகத்தில் ப்ரார்த்தித்ததைப் போலே). இதற்குத் திருச்செவி சாய்த்த திருவேங்கடமுடையான், தோழப்பர் (திருவேங்கடத்தில் இருந்த ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்) முகமாக அண்ணாவிற்கு திருமஞ்சனத்திற்கும், திருவாராதனத்திற்கும் தீர்த்தம் பூரிக்கும் கைங்கர்யத்தை நியமித்தார். தோழப்பர் அண்ணாவிடத்தில், எம்பெருமான் எளிதில் அகமகிழ்வான் என்றும், நித்யப்படி தீர்த்தம் ஸமர்ப்பிப்பதினாலேயே எம்பெருமான் மிகவும் ப்ரீதியடைவான் என்றும் கூறினார். தோழப்பர் அண்ணாவிடம் ஒரு வெள்ளிக்குடத்தை ஸமர்ப்பித்து ஆகாச கங்கையிலிருந்து தீர்த்தம் பூரித்து, அர்ச்சகரிடத்தில் திருவாராதனத்திற்காக ஸமர்ப்பிக்குமுன் தீர்த்தத்தில் தீர்த்தப் பரிமளம் (ஏலக்காய், கிராம்பு முதலியன) சேர்க்குமாறு ஆணையிட்டார். அண்ணா இதனை ஆனந்தத்துடன் சிரமேற்கொண்டு இந்தக் கைங்கர்யத்தை மிகுந்த அன்புடனும் பகவானிடத்தில் கைங்கர்ய ச்ரத்தைக்கு எடுத்துக்காட்டாய் செய்து வந்தார்.
ஒரு நாள் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீரங்கத்திலிருந்து திருமலைக்கு எழுந்தருளினார். அண்ணா அவரை எம்பெருமான் முன்னிறுத்தி சேவை செய்து வைத்தார். பிறகு அந்த ஸ்ரீவைஷ்ணவர் மூலமாக ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீரங்கநாச்சியார், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் ஆகியோருக்கு நடக்கும் மேன்மையான கைங்கர்யங்கள் குறித்துக் கேட்கலானார். அதற்கு மேலாக ஸ்ரீரங்கத்தில் மணவாள மாமுனிகளின் மேன்மை மற்றும் தெய்வீக அனுஷ்டானங்கள் பற்றியும் கேட்கலானார். கேட்ட மாத்திரத்தில் மணவாள மாமுனிகளின் கருணை மற்றும் புலமை குறித்து அண்ணா மிகுந்த ஈடுபாடு கொண்டார். சில நாட்களுக்குப் பின்னர் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தன்னுடைய கைங்கர்யத்தை முன்னிட்டு ஆகாச கங்கைக்கு அழைத்துச் சென்றார். அந்தப் பாதையில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் அண்ணா அந்த ஸ்ரீவைஷ்ணவர் மூலம் மாமுனிகளின் அனுபவத்திலே ஆழ்ந்து இருந்தார். இதனாலே தீர்த்தத்தில் தீர்த்தப் பரிமளம் சேர்க்க மறந்து விட்டார். இதை உணர்ந்தவுடன் அதை சரி செய்ய முற்பட்டார். இதனிடையில் ஒரு ஏகாங்கி (பரிபூர்ணமாக பகவத் கைங்கர்யத்தில் தன்னை அற்பணித்துக்கொண்டவர்) திருவாராதனத்திற்கு நேரமாகவே தீர்த்தக்குடத்தை எழுந்தருளப் பண்ணிவிட்டார். அண்ணா பரிமளம் சேர்க்காததை சொன்ன போது ஏகாங்கி அதனைக் கேட்கவில்லை. ஆகவே பதட்டத்துடன் சந்நிதிக்குச் சென்றார். அங்கே திருவாரதனம் தொடங்கிவிட்டதைக் கண்டார். அர்ச்சகரிடம் தீர்த்தப் பரிமளத்தை ஸமர்ப்பித்தார். ஆனால் அர்ச்சகர், “இன்றுதான் தீர்த்தம் மிகவும் பரிமளத்துடன் விளங்குகின்றது” என அண்ணாவிடம் கூறினார். அண்ணாவிற்கு விஷயம் புரிந்துவிட்டது. தான் மாமுனிகளின் வைபவத்தை ஆழ்ந்து கேட்டமையால் பகவானும் உகப்பில் அகமகிழ்ந்து, தீர்த்தப் பரிமளம் சேர்க்காமலேயே பகவானின் கருணையினால் தீர்த்தமும் பரிமளத்துடன் விளங்கியது. அண்ணா அந்த ஸ்ரீவைஷ்ணவருக்கு இனிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக மிகவும் நன்றி தெரிவித்து, தான் மாமுனிகளை விரைவில் தரிசிக்கவேண்டுமென தெரிவித்தார். சில நாட்கள் கழித்து திருவேங்கடமுடையானிடம் நியமனம் பெற்றுத் தன் குடும்பத்துடன் மாமுனிகளிடம் தஞ்சம்புக ஸ்ரீரங்கம் சென்றடைந்தார்.
ஸ்ரீரங்கம் அடைந்து ஸன்னிதிக்குசென்ற அண்ணா, முறைப்படி சேவிக்கலானார் (ஆண்டாள், எம்பெருமானார், சேனைமுதலியார் என முறைப்படி சேவித்து இறுதியில் பெரியபெருமாளும் பெரியபிராட்டியாரும்). பெரியபெருமாளை சேவிக்கும் முன்னர், மாமுனிகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழி 4.10 பதிகம் – ஒன்றும் தேவும் – காலக்ஷேபம் செய்துகொண்டிருப்பதை அண்ணா கண்டார். அர்ச்சாவதாரத்தில் முக்கியமாக ஆழ்வார்திருநகரி எம்பெருமான் ஆதிநாதனிடத்தில் பகவானின் பரத்வத்தை ஆழ்வார் இதில் நிர்ணயிக்கிறார். அண்ணா கோஷ்டி முன்பே தண்டன் (சாஷ்டாங்கமாக திருமேனி பூமியில் படுமாறு சேவித்தல்) சமர்ப்பித்தார். மாமுனிகள் மிக்க மகிழ்ச்சியுடன் அண்ணாவைத் தழுவிக்கொண்டு அண்ணாவின் நலம் கேட்டறிந்தார். அண்ணாவை சந்திப்பதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என மாமுனிகள் தெரிவித்தார். மாமுனிகள் பதிகத்தில் முதல் மூன்று பாசுரங்களை காலக்ஷேபம் செய்து நிறுத்திக்கொண்டார். மாமுனிகளின் உபய வேதாந்த (ஸம்ஸ்க்ருத வேதாந்தமும் திராவிட வேதாந்தமும்) நிபுணத்துவத்தைக் கண்டு களிப்படைந்த அண்ணா , தான் மாமுனிகளின் சிஷ்யரானாலொழிய மாமுனிகளின் பரிபூர்ண அனுக்ரஹத்தைப் பெறமுடியாது என்றும், எம்பெருமானின் அர்ச்சாவதார நிலையில் உள்ள கல்யாண குணங்களை அனுபவிக்க முடியாது என்றும் தெளிவாக எடுத்துரைத்தார். மாமுனிகள் தன் காலக்ஷேபத்தை நிறுத்திக்கொண்டு அண்ணாவை பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்றார். பெரிய பெருமாள் அண்ணாவை அனுக்ரஹித்து தீர்த்தம், ஸ்ரீ சடகோபம், புஷ்பம் முதலியன அருளி, அர்ச்சகர் வாயிலாக திருவாய்மலர்ந்து அருளினான்: “ப்ரதிவாதி பயங்கராசாரியரே! நினைவிருக்கிறதா, ஒருமுறை நீர் திருமலையில் மாமுனிகளின் வைபவத்தில் மூழ்கியதால் ஆகாச கங்கையிலிருந்து பூரித்த தீர்த்தம் தானாகவே பரிமளம் கமழ்ந்தது. இப்போது நீர் இங்கு வந்திருப்பது எம்மை மகிழ்விக்கிறது. இனி நீர் மாமுனிகளுடன் சிறந்ததோர் சம்பந்தியாய் வாய்க்கப் பெற்றீர்” என மாமுனிகளை சுட்டிக் காட்டினான். இதையடுத்து பெரிய ஜீயர் தன் மடத்திற்கு எழுந்தருளினார்.
அண்ணா மிகவும் அகமகிழ்ந்து கந்தாடை அண்ணன் திருமாளிகையை அடைய அண்ணாவும் கந்தாடை அண்ணனும் ஒருவரை ஒருவர் தண்டன் சமர்ப்பித்துகொள்கின்றனர் (இது ஸ்ரீவைஷ்ணவர்களிடையே இயல்பான வழக்கமாதலால்). “வைஷ்ணவோ வைஷ்ணவம் த்ருஷ்ட்வா தண்டவத் ப்ரணமேத் புவி” என்கிறது சாஸ்த்ரம் – ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மற்றோர் ஸ்ரீவைஷ்ணவரை தரிசித்தால் பரஸ்பரம் தண்டன் சமர்ப்பிக்க வேண்டும். இருவரும் தத்தம் ஆத்ம க்ஷேம லாபங்களைக் குறித்து விசாரித்து , கந்தாடை அண்ணன் திருமாளிகை உள்ளே சென்றனர். தற்செயலாக பொன்னடிக்கால் (வானமாமலை) ஜீயரும் அங்கே எழுந்தருளியிருந்தார். அண்ணா பொன்னடிக்கால் ஜீயருக்கு “அருள்கொண்டாடும் அடியவர்” (கண்ணிணுன்சிறுத்தாம்பு – 7) என்று பல்லாண்டு பாடினார் – அதாவது மனவாள மாமுனிகளின் வைபவத்தைப் பொன்னடிக்கால் ஜீயர் அனுபவித்தும், போற்றியும் வருவதை அனுசந்தித்தார். பிறகு பொன்னடிக்கால் ஜீயருக்கு தண்டன் சமர்ப்பித்தார். பொன்னடிக்கால் ஜீயர் அண்ணாவை அரவணைத்து, யதிபுனரவதார (ராமானுசர் மாமுனிகளாக அவதரித்தமை) விசேஷங்களை அருளினார். அண்ணா தனது திருமேனி சம்பந்திகளோடே (தர்மபத்தினியார் – குழந்தைகள்) பொன்னடிக்கால் ஜீயர் மற்றும் கந்தாடை அண்ணன் உதவியோடு பெரிய ஜீயர் மடத்தை அடைந்தார். எல்லோரும் ஜீயரிடம் பஞ்சசம்ஸ்காரம் பெற்று, ஜீயரே ஒரே புகல் என ஏற்றுக்கொண்டனர். அண்ணா மாமுனிகளிடமிருந்து ஸ்ரீபாத தீர்த்தமும் ப்ரசாதமும் பெற்றார். மாமுனிகள் அண்ணாவை நோக்கி “நீரோ ப்ரதிவாதி பயங்கராசார்யர். நீர் எவ்வாறு எம்மை ஆசார்யனாக ஏற்பீர் ? ” என வினவினார். அதற்கு அண்ணா மிகுந்த பணிவுடன், தாம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்திற்கு புறம்பானவர்களுக்கு மட்டுமே ப்ரதிவாதி பயங்கராசார்யர் என்றும், ஆனால் ஸ்ரீவைஷ்ணவர்களின் பாதாரவிந்தங்களில் தொண்டன் என்றும் பதிலளித்தார். மாமுனிகள் இதுகேட்டு மிகவும் அகமகிழ்ந்து அண்ணாவிற்கு “ஸ்ரீவைஷ்ணவ தாசன்” எனத் திருநாமம் சாத்தினார். எப்போழுதும் ஆசார்ய நிஷ்டையில் மூழ்கியிருந்ததால் அண்ணா தன் திருநக்ஷத்ரங்கள் முழுக்க மாமுனிகளையே ஆச்ரயித்திருந்தார். கூரத்தாழ்வான் எம்பெருமானாருக்கு சித்தாந்தத்தை ஸ்திரப்படுத்த உதவியது போலவே அண்ணா தம் வாழ்நாள் முழுவதும் மாமுனிகளுக்கு சத் சம்பிரதாய சித்தாந்தத்தை ஸ்திரப்படுத்த உதவினார்.
மாமுனிகள் காஞ்சிபுரம், சோளசிம்ஹபுரம், எறும்பி முதலான திவ்ய தேசங்கள் வழியாக திருமலைக்கு செல்ல முற்பட்டார். அண்ணாவும் யாத்திரையில் சேர்ந்துகொண்டார். திருமலையில் திருவேங்கடமுடையானுக்கு ஸுப்ரபாதம் இல்லாததை உணர்ந்து மாமுனிகள் அண்ணாவை எம்பெருமானுக்கு ஸுப்ரபாதம் சாதித்து அருளும்படி ஆணையிட்டார். அண்ணா ஆசார்யனை நோக்கித் த்யானித்து, ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம், ஸ்தோத்ரம், பிரபத்தி, மற்றும் மங்கல ச்லோகங்களை சாதித்தார். மாமுனிகள் அண்ணாவின் பாண்டித்யம் கண்டு மிகவும் அகமகிழ்ந்து, இந்த ஸ்தோத்ரங்களை இனி தினமும் திருமலையில் திருவேங்கடமுடையானின் ப்ரீதிக்காக சேவிக்கும் படி ஆணையிட்டார்.
ஸ்ரீரங்கத்திற்கு திரும்பிய பிறகு, மாமுனிகள் ஒரு நாள் அண்ணாவை அழைத்து ஸ்ரீ பாஷ்யத்தைக் கந்தாடை அண்ணன், போரேற்று நாயனார், ஆனந்தய்யனப்பை, எம்பெருமானார் ஜீயர் நாயனார், கந்தாடை நாயன் மற்றும் பலருக்கு உபதேசிக்கும்படி ஆணையிட்டார். மாமுனிகள் பிறகு அண்ணாவிற்கு “ஸ்ரீபாஷ்யாசார்யர்” என பட்டம் சாற்றி, அண்ணாவை ஸ்ரீபாஷ்ய சிம்ஹாசனத்திற்குத் தலைவராக உயர்த்தினார்.
அண்ணா மாமுனிகள் விஷயமாக பல கிரந்தங்களை அனுக்ரஹித்தார். “செய்யதாமரைத் தாழிணை வாழியே .. ” என்பது இவருடைய மாமுனிகளின் வடிவழகும், எல்லையில்லா கருணையையும் விளம்பும் ஸ்ரீசூக்தியாகும். இதுபோல் மாமுனிகள் விஷயமாக பல அழகான கிரந்தங்களை அருளியிருக்கிறார். இப்போது நாம் அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்:
ஸ்ரீ வேங்கடேச பிரபத்தி (ஸ்லோகம் 15)
ஸத்வோத்தரைஸ் ஸதத ஸேவ்ய பதாம்புஜேந
ஸம்ஸார தாரக தயார்த்ர த்ருகஞ்சலேந
ஸௌம்யோபயந்த்ரு முநிநா மம தர்ஷிதௌ தே
ஸ்ரீவேங்கடேச சரணௌ சரணம் ப்ரபத்யே
தனது அளவிலாக் கருணையினால் மணவாள மாமுனிகள் காட்டி அருளிய ஸ்ரீ வேங்கடேசனின் பாதாரவிந்தத்தில் நான் சரணம் அடைகிறேன். பரம சாத்விகர்கள் தமது தூய ஹ்ருதயத்தினால் மாமுனிகளை வணங்குகின்றனர். அப்படிப்பட்ட மாமுனிகள் எம்பெருமானுடைய இந்தத் திருப்பாதங்கள்தான் சம்சாரத்திலிருந்து நம்மை உயர்த்தி பரமபதத்தில் வைக்கும் எனக் காட்டியருளினார்.
ஸ்ரீ வேங்கடேச மங்களம் :
ஸ்ரீமத் ஸுந்தரஜாமாத்ருமுநி மாநஸ வாஸிநே
ஸர்வலோகநிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
எல்லா மங்கலங்களும் சர்வவ்யாபகனான திருவேங்கடமுடையானிடம் மேம்படட்டும், அப்படிப்பட்ட அவன் திருமார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மி குடிகொண்டிருப்பாள், மேலும் அவனே என்றென்றும் மணவாள மாமுனிகளின் ஹ்ருதயத்தில் தங்கியிருக்கிறான்.
திருவேங்கடமுடையான் விஷயமாக ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனின் எல்லா ஸ்தோத்ரங்களும் பல்வேறு மொழிகளில் இங்கு http://acharya.org/acharya/pbanna/index.html என்ற இணைய தளத்தில் உள்ளது
இதுவரையில் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனின் உன்னத வாழ்வில் சில துளிகளைத் தெரிந்துகொண்டோம். அவர் உபயவேதாந்தத்தில் மிக்க அறிஞராகவும், ஆசார்ய நிஷ்டையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும், மாமுனிகளின் மிக்க அன்புக்குப் பாத்திரமாகவும் விளங்கினார். நாம் எல்லோரும் அவருடைய திருப்பாதங்களில் துளியேனும் இப்படிப்பட்ட பாகவத நிஷ்டையைப் பிரார்த்திப்போம்.
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனின் தனியன் :
வேதாந்த தேசிக கடாக்ஷ விவ்ருத்தபோதம்
காந்தோபயந்த்ரு யமிந: கருணைக பாத்ரம்
வத்ஸாந்வவாயமநவத்ய குணைருபேதம்
பக்த்யா பஜாமி பரவாதி பயங்கரார்யம்
அடியேன் மகிழ்மாறன் ராமாநுஜ தாஸன்
ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/08/06/prathivadhi-bhayankaram-annan/
வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org