Monthly Archives: ஓகஸ்ட் 2016

பிள்ளை உறங்கா வில்லி தாஸர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்ரம்: மாசி, ஆயில்யம்

அவதார ஸ்தலம்: உறையூர்

ஆசார்யன்: எம்பெருமானார்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

பிள்ளை உறங்கா வில்லி தாஸர்  என்பவர் அவருடைய பத்தினி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவர் உறையூர் அரசவையின் சிறந்த மல்யுத்த வீரராக விளங்கினார். இவருடைய இயற்பெயர் தனுர் தாசர் என்பதாகும். தன் பத்தினியிடம் மிகவும் ஆசையுடன் இருந்தார் (இதற்குக் காரணம் பொன்னாச்சியாரின் மிக அழகிய கண்கள்). இவர் பெரிய செல்வந்தராகவும் மற்றும் அந்த ராஜ்யத்தில் வீரம் பொருந்தியவராக இருந்ததால் நன்மதிப்புடன் விளங்கினார்.

pud-1

ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களுடன் நடந்து சென்ற பொழுது, தாஸர் பொன்னாச்சிக்கு வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக  ஒரு கையால் குடை பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் அவள் நடக்கும் பொழுது அவளது கால்கள் புண்ணாகாமல் இருப்பதற்குத் தரையில் ஒரு துணியை விரித்துக் கொண்டும் செல்வதைக் கவனித்தார். தாஸருடைய  அன்யோன்யமான இச்செயலைக் கண்டு வியப்படைந்த எம்பெருமானார், தாஸரை அழைத்து அந்த பெண்மணிக்கு சேவை செய்வதற்குக் காரணம் என்ன என்று வினவினார். அதற்கு, தாஸர் அவளுடைய கண்களின் அழகில் முழுமையாக அடிமையாகி விட்டேன்; மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கத் தான் எதையும் செய்யத் தயார் என்றும் கூறினார். இதைக் கேட்ட உடனேயே அப்பொழுதொரு சிந்தை செய்த எம்பெருமானார் தாஸரிடம் , தாஸரின் பத்தினியின் கண்களைவிட வேறு அழகான கண்களைக் காண்பித்தால் அதற்கு அடிமையாகி விடுவாரா என்று கேட்க தாஸரும் உடனே அத்தகைய கண்களுக்கு தான் அடியாமையாவதாக ஒப்புக்கொண்டார். எம்பெருமானாரும் தாஸரை ஸ்ரீரங்கநாதரிடம் அழைத்துக் கொண்டு சென்று , எம்பெருமான்  திருப்பாணாழ்வாருக்குத் தாம் காட்டியருளிய அழகிய கண்களை தாஸருக்குக் காண்பித்தருளும்படி வேண்டினார். எம்பெருமானும் தம்முடைய  அழகிய கண்களைக்  காட்டியருள, தாஸரும் அக்கண்களின் உண்மையான அழகை உணர்ந்து கொண்டார். தாஸர் உடனேயே எம்பெருமானாரிடம் சரணடைந்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பம் செய்தார். தாஸருடைய பத்தினியும் எம்பெருமான் மற்றும்  எம்பெருமானாருடைய பெருந்தன்மையை உணர்ந்து , எம்பெருமானரிடம் சரணடைந்து தங்களுக்கு வழிகாட்ட வேண்டினாள். தம்பதிகள் இருவரும் தங்களுடைய உடைமைகளைத் துறந்து, எம்பெருமானை மற்றும் எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளுக்குத் தொண்டு செய்வதற்காக ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர். எம்பெருமானும் தாஸரை முழுமையாக கடாக்ஷித்தருளினார். மேலும் ஸ்ரீராமரின் வனவாசத்தின்பொழுது லக்ஷ்மணர் எப்படி உறங்காமல் இருந்தாரோ , அதுபோல் தாஸரும் எம்பெருமானை இடைவிடாது துதித்துக் கொண்டிருந்ததால் பிரபலமாக அவருக்குப் பிள்ளை உறங்கா வில்லி தாஸர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

தாஸரும் பொன்னாச்சியாரும் எம்பெருமானாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் ஆனர். எம்பெருமானாருக்குப் பணிவிடை செய்து தங்களுடைய எளிமையான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை நம்பெருமாளின் தீர்த்தவாரியன்று (கடைசி நாள் உத்ஸவம்) எம்பெருமானார் ஏற தாஸரின் கரங்களை பற்றிய வண்ணம் கோயிலின் குளத்திலிருந்து ஏறி வந்தார். சில சிஷ்யர்கள் ஸந்யாஸியாகிய எம்பெருமானார் ஒரு தாஸரின் (பிறந்த குலத்தால்) கரங்களை பிடிப்பது முறையன்று என்று நினைத்தார்கள். சிஷ்யர்களும் தாம் நினைத்ததை எம்பெருமானாரிடம் கூற எம்பெருமானாரும், தாஸர்  மற்றும் பொன்னாச்சியாரின் மகிமையை அவர்கள் புரிந்து கொள்வதற்காக ஒரு அற்புத நிகழ்ச்சியின் மூலம் நிரூபணம் செய்தார்.

எம்பெருமானார் அந்த சிஷ்யர்களை தாஸரின் இல்லத்திற்குச் சென்று அங்கேயுள்ள நகைகள் எத்தனை களவாட முடியுமோ அத்தனையையும் களவாடிக் கொண்டு வரச்சொன்னார். சிஷ்யர்கள் தாஸரின் இல்லத்திற்குச் சென்ற பொழுது பொன்னாச்சியார்  உறங்கிக் கொண்டிருந்தார். மிகவும் நிசப்தமாக அவரிடம் சென்று அவர் அணிந்திருந்த நகைகளைக் கழற்ற முற்பட்டனர். பொன்னாச்சியாரும் இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் வறுமையின் காரணமாக களவாடுகிறார்கள் என்று எண்ணி அவர்கள் நகைகளை எளிதில் கழற்றுவதற்கு இடம் கொடுத்தார். அந்த சிஷ்யர்கள் அவருடைய ஒரு பக்கத்தின் நகைகளை கழற்றியபின், அடுத்த பக்கத்தின் நகைகளை எளிதில் கழற்றுவதற்காக தான் இயல்பாக தூக்கத்தில் திரும்புவது போல பாசாங்கு செய்தார். ஆனால் அவர் திரும்புவதைக் கண்டு அச்சமடைந்து அந்த சிஷ்யர்கள் தாஸரின் இல்லத்திலிருந்து  எம்பெருமானாரிடம் ஓடினர். நடந்த சம்பவங்களைக் கேட்டபின், எம்பெருமானார் சிஷ்யர்களை மறுபடியும் அவர்களை  தாஸரின் இல்லத்திற்கு சென்று அங்கு நடப்பவைகளை கவனிக்கச் சொன்னார்.  திரும்ப வந்த அவர்கள்,  தாஸர் தன் இல்லத்தில்  பொன்னாச்சியாரிடம் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். தாஸர், பொன்னாச்சியாரின் ஒரு பக்க நகைகளை மட்டும் காணவில்லையே என்று வினவினார். அதற்கு பொன்னாச்சியார் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அவள் அணிந்திருந்த நகைகளை களவாட வந்த பொழுது, நான் உறங்குவது போல் பாவனை செய்து அவர்கள் எளிதில் களவாடும்படி செய்தேன். பிறகு அவர்கள் அடுத்த பக்கம் களவாடுவதற்கு ஏதுவாக நான் திரும்பிப் படுக்கும் பொழுது அவர்கள் பயந்து ஓடி விட்டார்கள் என்று சொன்னாள். அதைக் கேட்ட தாஸர் மன வருத்தமுற்று நீ கல்லை போல கிடந்து அவர்கள் விருப்பம் போல  நகைகளை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்க வேண்டும் என்று கூறினார். அவர்கள் இருவரும் களவாட வந்தவர்களுக்குக் கூட உதவும் மனப்பான்மை உடையவர்களாக இருந்தனர். தாஸர் தம்பதிகளுடைய உரையாடலைக் கேட்ட அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானரிடம் திரும்பச் சென்று நடந்தவைகளை விவரித்து அந்த சிறந்த தம்பதிகளின் பெருந்தன்மையை ஒப்புக் கொண்டனர். அதற்கு மறுநாள் எம்பெருமானார் தாஸரிடம் நடந்தவற்றை விவரித்து நகைகளை அவரிடம் திருப்பிக் கொடுத்தார்.

ஸ்ரீவிதுரரும்  மற்றும் பெரியாழ்வாரும், எம்பெருமானிடம் மிக ஈடுபாட்டுடன் இருந்தது போல தாஸரும் இருந்ததால் மஹாமதி (மிகவும் அறிவுள்ளவர்) எனப் போற்றப்படுகிறார். பொன்னாச்சியாரின் அறிவுக் கூர்மையைப் பற்றி பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களின் சில இடங்களில் விளக்கி உள்ளதைக் கொண்டு பொன்னாச்சியார் சாஸ்திர அறிவு மிக உள்ளவராக இருந்தார் என்பதை அறியலாம்.

தாஸரும் அவருடைய தர்ம பத்தினியாரையும் பற்றி நமது பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களின் பல ஐதிஹ்யங்களில் காணலாம். அவற்றில் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.

  • 6000 படி குருபரம்பரா ப்ரபாவம் – ஒருமுறை எம்பெருமானார் விபீஷண சரணாகதி பற்றி வ்யாக்யானம் அருளிக்கொண்டிருந்தார். கோஷ்டியிலிருந்த தாஸர் எழுந்திருந்து ” ஸ்ரீராமர் சுக்ரீவனுடனும்  ஜாம்பவானுடன் விவாதம் செய்து  எல்லாவற்றையும் துறந்த விபீஷணரை ஏற்றுக் கொண்டதைப் போல், தனக்கும்  (இன்னும் க்ருஹாஸ்ரமத்தில் ஈடுபாட்டுடன் இருக்கின்ற படியால்)  எவ்வாறு மோக்ஷம் கிட்டும்” என்று வினவினார். எம்பெருமானாரும் ” தமக்கு மோக்ஷம் கிட்டினால், உமக்கும் மோக்ஷம் கிட்டும், பெரிய நம்பிக்கு மோக்ஷம் கிட்டினால், தமக்கு அது  கிட்டும், ஆளவந்தார் மோக்ஷமடைந்தால் பெரிய நம்பிக்கு அது கிட்டும்; இது சங்கிலித்தொடர் போல்  பரம்பரையில் மேற்செல்லும்; மேலும்  நம்மாழ்வார் தமக்கு மோக்ஷம் கிட்டியதென்று அறிவித்ததைப் போலவும்,  பெரிய பிராட்டியாரும் நாம் அனைவரும் மோக்ஷம் அடைய எம்பெருமானிடம் பரிந்துரைக்கிறார்” என்று பதிலளித்தார். விபீஷணனுடன் உடன் வந்த நான்கு ராக்ஷஸர்களும் விபீஷணனையே நம்பி வந்ததால் எப்படி  ஸ்ரீராமர் தானாக அந்த ராக்ஷஸர்களுக்கும் நற்கதி அளித்தரோ  அதே போல் பாகவத சேஷத்வம் கொண்டவர்கள் அனைவரும் நற்கதி அடைவார்கள் என்பது திண்ணம்.
  • பெரிய திருமொழி 2.6.1- பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – எம்பெருமானிடம் தாஸருக்கு உள்ள அளவு கடந்த பற்று (யசோதை, பெரியாழ்வாரைப் போல) இங்கு எடுத்து காட்டப்படுகிறது. நம்பெருமாள் (ஸ்ரீரங்கநாதர்) புறப்பாடு நடக்கும் வேளையில் தாஸர் எப்பொழுதும் தன் கையில் வாளை ஏந்திக்கொண்டு நம்பெருமாள் முன்பாக நடந்து செல்வது வழக்கம். நம்பெருமாளுக்குச் சிறிதேனும் இடையூறு அல்லது இடறுதல் ஏற்படினும் தன்னை வாளால் முடித்துக்கொள்வார், (ஆனால் அவர் அப்படி முடித்துக்கொள்ளவில்லை. இதிலிருந்து நம்பெருமாளை மிக கவனத்துடன் எழுந்தருளிக்கொண்டு சென்றார்கள் என்பது தெரிய வருகிறது). இதன் காரணத்தால் தாஸரை மஹாமதி என்று அழைக்கிறோம். மஹாமதி என்றால் எம்பெருமானின் நலனில் அக்கறை கொண்டவர் என்று பொருள்படும்.
  • திருவிருத்தம் 99 – நம்பிள்ளை வ்யாக்யானம் – எப்பொழுதெல்லாம் கூரத்தாழ்வான் திருவாய்மொழியை விளக்க ஆரம்பித்தாலும், தாஸர் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு கிருஷ்ண சரிதத்திலே ஆழ்ந்து அனுபவிக்க ஆரம்பித்து விடுவார். இதனால் தாஸரின் பெருமையைக் கண்ட ஆழ்வான் “நாங்களெல்லாம் பகவத் விஷயத்தைக் கற்றதற்குப்பின் மற்றவர்களுக்கு அதை விளக்குவதைப் போல் அல்லாமல், தாங்களோ பகவானை எண்ணி உருகுகின்றீர்கள் – தங்கள் குணம் மேன்மையுடையதாக உள்ளது” என்று தாஸரிடம் கூறினார். ஆழ்வானும் எப்பொழுதும் எம்பெருமானை நினைத்து உருகுவார் – அவரே தாஸரைப் பற்றி இவ்வாறு கூறினால், தாஸர் எவ்வளவு சிறந்தவர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
  • திருவிருத்தம் 9 – நம்பிள்ளை  ஸ்வாபதேசம் – ஒருமுறை எம்பெருமானார் ஸ்ரீரங்கத்திலிருந்து திருமலைக்கு செல்லச் உத்தேசித்தார். அந்த சமயம் ஒரு ஸ்ரீவைஷ்ணவரை (தாஸரின் கட்டுப்பாட்டில் உள்ள) ஸ்ரீ பண்டாரத்திற்குச் சென்று அரிசி வாங்கி வரும்படி சொன்னார். அச்சமயம், தாஸர் எம்பெருமானார் ஸ்ரீரங்கங்கத்தை விட்டு செல்லத் திட்டமிட்டிருப்பதை  அறிந்து மிகவும் வருத்தத்துடன்  அங்கே அழுது கொண்டிருந்தார். இது எம்பெருமானாரிடம் தாஸர் கொண்டுள்ள பற்றைக் காட்டுகிறது. ஸ்ரீ பண்டாரத்திற்குச் சென்ற ஸ்ரீவைஷ்ணவர் எம்பெருமானரிடம் வந்து இதைக் கூற, எம்பெருமானாரும் தாஸரின் மனநிலையைப் புரிந்து கொண்டு தாஸரை விட்டுப் பிரிந்திருக்க தன்னாலும் முடியாது என்று கூறினார்.
  • திருவாய்மொழி  4.6.6 – நம்பிள்ளை வ்யாக்யானம் –  தாஸரின்  வண்டர் மற்றும் சொண்டர் என்ற பெயரையுடைய  மருமகன்கள் இருவரும் ஒருமுறை மன்னனுடன்  நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, அந்த மன்னன் ஓர் சமணக் கோயிலைக் காண்பித்து அது ஒரு விஷ்ணுவின் ஆலயம் என்றும்  அவர்களிருவரையும் அந்த ஆலயத்தை வணங்கும்படியும்  சொன்னான். அந்த கோவிலின் கட்டமைப்பைப் பார்த்து ஸ்ரீவைஷ்ணவக் கோயிலின் கட்டமைப்பைப் போல் இருந்ததால் அவ்விருவரும் உடனே வணங்கினார்கள், மன்னனும் தான் அவர்களை நையாண்டி செய்வதற்காகவே அது போல் செய்தான் என்று கூறினான். ஆனால் வண்டரும் சொண்டரும் ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை வழிபட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து மயக்கமுற்று விழுந்தார்கள். இச்சம்பவத்தைக் கேட்ட தாஸர் உடனே  ஓடிச்சென்று தன்னுடைய திருவடித் தாமரைகளின் தூசியை எடுத்து அவர்களிருவரின் மேலேயும் தடவ அவர்களும் உடனே தன் சுயநிலைமைக்கு மீண்டும் வந்தார்கள். இதிலிருந்து பாகவதர்களின் திருவடித் தாமரைகளின் தூசு கொண்டே தேவதாந்தர பஜனத்தால்  (தெரியாமல் செய்தாலும் கூட) வந்த குறையைப் போக்க முடியும் என்பது தெளிவாகிறது.
  • திருவாய்மொழி 1.5.11 – நம்பிள்ளை வ்யாக்யானம் –  “பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர்” என்ற வாக்கியத்திற்கு, ஆழ்வான் ஒருமுறை ” ஸ்ரீபராங்குச நம்பிதான் – பாலேய் தமிழர் (தமிழில் பெரிய வல்லுநர்) என்றும், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர்தான் – இசைகாரர் (இசையில் வல்லுநர்) மற்றும் பிள்ளை உறங்கா வில்லி தாஸர்தான் பத்தர் (பக்தர் – சிறந்த பக்தன்) என்றும் கூறினார்.

கண்ணன் எம்பெருமானிடம் தாஸர் கொண்டுள்ள பற்றுதல் பல சம்பவங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

  • திருவிருத்தம் 95 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – ஒரு சமயம் இடையர் சிறுவன் அரசருக்கு எடுத்து செல்ல வேண்டிய பாலை களவாடியதற்காகப் படைவீரர்கள் அச்சிறுவனை அடித்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த தாஸர், அச்சிறுவனையே ஆயர்குல க்ருஷ்ணனாக பாவித்து அப் படை வீரர்களிடம் சென்று அவர்கள்  கொடுக்கும் தண்டனையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவ்விடைச் சிறுவனை விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
  • நாச்சியார் திருமொழி 3.9 – பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் – தாஸர் “க்ருஷ்ணன் பிறந்த குழந்தையாக இருந்ததால் தன்னைத்தானே காத்துக் கொள்ள இயலாது. மேலும் அவருடைய பெற்றோர் சிறைப் பட்டிருந்ததாலும், மென்மையான குணம் உடையவர்கள் ஆனதாலும் க்ருஷ்ணரைக் காப்பாற்ற முடியவில்லை. கம்சனும் அவனுடைய ஆட்களும் க்ருஷ்ணரை அழிப்பதற்காக எப்போதும் தயார் நிலையில் இருந்தனர். காரிருள் ஒன்றே (இரவு நேரத்தில் கிருஷ்ணன் பிறந்ததால்) அவனை பிழைக்க வைத்தது. ஆகவே எம்பெருமானைக் காத்த அந்த காரிருளை நாம் வணங்குவோம்” என்று கூறுவார்.
  • பெரியாழ்வார் திருமொழி 2.9.2 – திருவாய்மொழிப் பிள்ளை வ்யாக்யானம் – க்ருஷ்ணர் வெண்ணெய் திருடியதைப்பற்றி யசோதையிடம் கோபியர்கள் பரிபவம் செய்ததைக் கேட்ட தாஸர் க்ருஷ்ணருக்காகப்  பரிந்து இவ்வாறு பேசலானார் – க்ருஷ்ணன் என்ன பூட்டை உடைத்தானா? நகைகளைத் திருடினானா? எதற்காக கோபியர்கள் பரிபவம் செய்கிறார்கள். அவனுடைய வீட்டிலேயே நிறைய பசுக்களும் வெண்ணெயும் இருக்கும் போது அவன் ஏன் அயலகத்தாரிடம் திருட வேண்டும்? அவன் தன்னுடைய வீடு என்று எண்ணி அவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கலாம். ஏன் அவர்கள் அவன் வெண்ணெயையும் பாலையும் திருடினான் என்று பரிபவம் செய்கிறார்கள்?.

பொன்னாச்சியாரும், இவருக்கு நிகரான ஞானம் உள்ளவராகக் கருதப்படுகிறார் என்பதைப் பல சம்பவங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரமோபாய நிர்யணத்தில் எம்பெருமானார், பொன்னாச்சியாரின் சிறந்த அறிவாற்றலை அறிந்து, தன்னுடைய ஏற்றத்தை அவர் மூலம் நிரூபிக்கிறார். இதைப் பற்றிய முழு நிகழ்வை அறிந்துகொள்ள இந்த வலைத்தளம் உதவும்.  http://ponnadi.blogspot.com/2012/12/charamopaya-nirnayam-ramanujar-our-saviour-2.html

பிள்ளை லோகாசார்யர் தனது தலை சிறந்த க்ரந்தமான ஸ்ரீவசன பூஷணத்தில் எம்பெருமானின் மங்களாசாஸனத்தை (எம்பெருமானின் நலனுக்காக வழிபடுதல் ) விவரிக்கும்பொழுது, பிள்ளை உறங்கா வில்லி தாஸரைக் கொண்டாடியுள்ளார்.

சில நாட்கள் கழித்து தாஸர் தனது இறுதி நாட்களின் பொழுது ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரையும் தனது திருமாளிகைக்கு அழைத்துத் ததியாராதனம் செய்து வைத்து அவர்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தைப் பெற்றார். அப்பொழுது பொன்னாச்சியாரிடம் தாம் பரமபதத்தை அடையப் போவதாகவும், அவரைத் தொடர்ந்து வாழ வேண்டும் என்றும் சொன்னார்.  எம்பெருமானாரின் பாதுகைகளை சிரஸில் வைத்துக் கொண்டே தனது  சரம திருமேனியை நீத்தார். ஸ்ரீவைஷ்ணவர்கள் அவருடைய அந்திம பயணித்திற்கான  ஏற்பாடுகளைச் செய்து திருக்காவிரி நதியிலிருந்து தீர்த்தம் கொணர்ந்து ஸ்ரீசூர்ண பரிபாலனம் (புண்ட்ரம் தரித்தல்) ஆகியவற்றைச் செய்தார்கள். பரமபதத்தில் தாஸருக்கு கிடைக்கப்போகும் வரவேற்பை அறிந்த பொன்னாச்சியார் மிகுந்த சந்தோஷத்துடன் திருமாளிகையை அலங்கரித்து, வந்திருந்த ஸ்ரீவைஷ்ணவர்களை நன்றாக உபசரித்தார். தாஸரின் திருமேனியை பல்லக்கில் வைத்து தெருக்கோடி வரை சென்றவுடன் தாஸரின் பிரிவை தாங்கமுடியாமல் பொன்னாச்சியார் வாய்விட்டு கதறி அழுது தன் உயிரை அப்பொழுதே நீத்தார். அதைக்கண்டு திகைத்த ஸ்ரீவைஷ்ணவர்கள் பொன்னாச்சியாரையும் தாஸருக்கு பக்கத்தில் வைக்க ஏற்பாடு செய்தனர். இதிலிருந்து சிறிது நேரம் கூட பாகவதர்களின் பிரிவை தாங்க முடியாமல் இருப்பது பாகவதர்களின் மீதுள்ள எல்லையற்ற பற்றை உணர்த்துகிறது.

மணவாள மாமுனிகள் இயல் சாற்றுமுறையை (உத்ஸவகாலங்களின் முடிவில் ஓதப்படுவது) பல்வேறு ஆசார்யர்களின் பாசுரங்களின் அடிப்படையாக கொண்டு தொகுக்கும் பொழுது, பிள்ளை உறங்கா வில்லி தாஸர் இயற்றிய பாசுரம்தான் முதலில் இடம்பெற்றுள்ளது. அதுவே நம் சம்பிரதாயத்தின் சாரமாக விளங்குகிறது.

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறை இல்லை ஓதினோம்
குன்றம் எடுத்தான் அடிசேர் ராமனுசன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி

கோவர்தன மலையை தூக்கிப் பிடித்துத் தனக்கு பிரியமான கோப  கோபியர்களை ரக்ஷித்த கண்ணன்  எம்பெருமானுக்கு  அடியவரான ஸ்ரீ ராமானுஜரும், அவர்க்கு அடியவர்களான  ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நாங்கள்  அடியவர்களாக (தொண்டர்கள்)  இருப்பதால் எங்களுக்கு ஒரு குறையும் வருத்தமும் இல்லை, மிகுந்த செல்வம் உள்ளவர்கள் நாங்கள்  என்று அறிவிக்கிறோம்.

இச்சிறிய பாசுரத்தில் மிக முக்கியமான கொள்கைகளை தாஸர் அறிவுறுத்துக்கிறார்.

  • ஸ்ரீ வைஷ்ணவர்களின் சிறந்த செல்வம் கைங்கர்யமே (அடியார்களுக்குத்  தொண்டு செய்வது)
  • ஸ்ரீ வைஷ்ணவர்கள் உலகியல் விவகாரங்களில் ஈடுபாடு கொள்ளக்கூடாது.
  • எம்பெருமான் மற்றும் எம்பெருமானாரின் அளவு கடந்த கருணையினால் தான் ஸ்ரீவைஷ்ணவர்கள் அடியார்களுக்குத் தொண்டு செய்யும் இந்த பெருஞ்செல்வத்தை அடைகிறார்கள்.
  • ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசார்ய பரம்பரையின் மூலம்  எம்பெருமானாருடன் சம்பந்தம் பெறுகிறார்கள்.

காலம் காலமாக , ஸ்ரீ வைஷ்ணவர்களின்  தனிச்சிறப்பு   குறிப்பிட்ட குலத்தில்  பிறந்ததால் இல்லை.  அவர்களுக்கு எம்பெருமானரிடமும், மற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களிடமும் உள்ள பாகவத பக்தியே என்று  நம் பூர்வாசார்யர்கள் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளனர்.  பிள்ளை உறங்கா வில்லி தாஸரின் வாழ்க்கை மற்றும் ஆசார்யர்கள் தாஸரின் மேன்மையைப் பற்றி கூறியுள்ளது, நம் ஆசார்யர்களின் தெளிவான மனநிலையும் அணுகுமுறையையும் எடுத்துக் காட்டுகிறது.

இதுவரை நாம்  பிள்ளை உறங்கா வல்லி தாஸர், பொன்னாச்சியார் இவர்களின்  மேன்மைகள்  சிலவற்றை அனுபவித்தோம். அவர்கள் இருவரும் பாகவத நிஷ்டையில் அதிகமாகவும், எம்பெருமானாரிடம் மிகுந்த ஈடுபாட்டுடனும் இருந்தனர். நாமும் சிறிதளவாவது பாகவத நிஷ்டை அடைவதற்கு அவர்களின் திருவடித் தாமரைகளில் ப்ரார்த்திப்போம் .

பிள்ளை உறங்காவில்லி தாஸரின் தனியன் :

ஜாகரூக தநுஷ்பாணிம் பாணௌ கட்கஸமந்விதம்
ராமானுஜஸ்பர்சவேதிம் ராத்தாந்தார்த்த ப்ரகாசகம்
பாகிநேயத்வயயுதம் பாஷ்யகார பரம்வஹம்
ரங்கேசமங்களகரம் தநுர்தாஸம் அஹம் பஜே

அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் ஸ்ரீவரமங்கா ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/02/22/pillai-uranga-villi-dhasar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org