பெரியவாச்சான் பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்ரம்: ஆவணி ரோகிணி
அவதார ஸ்தலம்: சங்கநல்லூர் (சேங்கனூர்)
ஆசார்யன்: நம்பிள்ளை
சிஷ்யர்கள்:  நாயனாரச்சான்  பிள்ளை, வாதிகேசரிஅழகிய மணவாள ஜீயர், பரகால  தாசர் முதலியவர்கள்

க்ருஷ்ணரின் அவதாரமாக,  சேங்கனூரில் இருந்த யாமுனர்  என்பவருக்கு  பிறந்த இவர் பெரியவாச்சான் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். இவர் நம்பிள்ளையின் பல சிஷ்யர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து அவரிடமிருந்தே எல்லா சாஸ்திர அர்த்தங்களையும் கற்றுக கொண்டார். நம்பிள்ளையின் அனுகிரஹத்தால் நம்முடைய சம்ப்ரதாயத்தின் ப்ரஸித்தி பெற்ற ஆச்சார்யனாகத் திகழ்ந்தார்.

periyiavachanpiLLai-nampillai

பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை

பெரிய திருமொழி 7-10-10 இல் குறிப்பிட்டுள்ளபடி திருக்கண்ணமங்கை எம்பெருமான் , திருமங்கையாழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களைக் கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார். எனவே அருளிச்செயலின் அர்த்த விசேஷங்களைக் கற்பதற்காக கலியன் நம்பிள்ளையாகவும், எம்பெருமான் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாக பெரியோர்கள் நிர்வாகம்.  இவருக்கு வ்யாக்யானச் சக்கரவர்த்தி என்றும் அபய ப்ரத ராஜர் என்றும்  வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு. நாயனாராச்சான் பிள்ளையை தன் ஸ்வீகார புத்ரராக ஏற்றுக் கொண்டார்.

இவர் வாழ்ந்த காலத்தில், பின்வரும் ஸ்ரீ ஸூக்திகளை அருளி உள்ளார்

  • 4000 திவ்ய பிரபந்தம் (அருளிச்செயல்  பாசுரங்கள்) – எல்லாவற்றுக்கும் இவர் வ்யாக்யானம் அருளியுள்ளார். அவற்றுள் பெரியாழ்வார் திருமொழியிலிருந்து சுமார் 400 பாசுரங்களின் வ்யாக்யானங்கள் தொலைந்துபோக அவற்றுக்கு மட்டும் மாமுனிகள் வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
  • ஸ்தோத்ர க்ரந்தங்கள் – இவர் பூர்வாசார்யர்களின் ஸ்தோத்ர ரத்னம், சதுச்லோகி, கத்யத்ரயம் , மற்றும் ஜிதந்தே ஸ்தோத்ரம் போன்றவைகளுக்கு வ்யாக்யானம்  அருளியுள்ளார்.
  • ஸ்ரீராமாயணம் – ஸ்ரீராமாயணத்திலிருந்து முக்கியமான  சில ச்லோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுற்கு விளக்கமான வ்யாக்யானத்தை ஸ்ரீராமாயண தனி ச்லோகியில்  எழுதியுள்ளார். இவருடைய விபீஷண சரணாகதி பற்றிய புலமைமிக்க மிகச் சிறந்த விளக்கங்களுக்காக இவர்  அபய ப்ரத ராஜர் என்ற பெயர் சூட்டப்பட்டார்.
  • இவர் மாணிக்க மாலை, பரந்த ரஹஸ்யம், ஸகல பிரமாண தாத்பர்யம் போன்ற பல ரஹஸ்ய க்ரந்தங்களை எழுதியுள்ளார். அவைகள் ரஹஸ்ய த்ரயம் பற்றி மிகச் சிறப்பாக விளக்குகின்றன.ர ஹஸ்ய த்ரயம் பற்றிய விளக்கங்களை ஏடு படுத்தியதில் இவர் முதன்மையாகத் திகழ்ந்தார். பிள்ளை லோகாசார்யார் நம்பிள்ளை மற்றும் பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கங்களிருந்து முக்கியமான ஸாராம்சத்தைக் கொண்டு தன்னுடைய அஷ்டாதச ரஹஸ்ய கிரந்தத்தை எழுதினர்.

அருளிச்செயல் மற்றும் ராமாயணத்தில் அவருக்கிருந்த புலமை/திறமை அவருடைய  பாசுரப்படி ராமாயணம் என்ற க்ரந்தத்திலிருந்து அறியப்படுகிறது. இந்த நூலில் அவர் அருளிச் செயலிலிருந்தே வார்த்தைகளைக் கையாண்டு ராமாயணம் முழுவதையும் ரத்தினச் சுருக்கமாக எழுதியுள்ளார்.

இவருடைய பெருமைகளை வாதி கேசரி அழகிய மணவாள ஜீயருடன் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் மேலும் தெரிந்து கொள்ளலாம். வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் பூர்வாச்ரமத்தில் (ஸந்யாஸி ஆவதற்கு முன்பு) பெரியவாச்சான் பிள்ளையின் திருமாளிகையில் திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அவர் ஞானத்தில் (கல்வி கேள்விகளில்) சிறந்தவராக இல்லாவிட்டாலும் அவருடைய ஆசார்யனிடத்தில் அபார அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். ஒரு நாள் திருமாளிகையில் சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வேதாந்த விஷயமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அவர்களிடம் எந்த விஷயம் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய அறிவின்மை காரணமாக மிகவும்  கடுமையாகப் பேசி “முசல கிசலயம்” என்ற இல்லாத ஒரு க்ரந்த்ததை பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். இதை அப்படியே தன்னுடைய ஆசார்யனிடம்  தெரிவித்தார். அதன் பின்பு இவர் மேல் மிகவும் கருணை கொண்டு இவருடைய ஆசார்யன் பெரியவாச்சான் பிள்ளை அவருக்கு எல்லாவற்றையும் கற்றுத் தர முடிவு செய்தார். சில வருடங்கள் கழித்து அவர் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து, ஸந்யாஸியாகி “வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர்”  என்று அழைக்கப்பட்டார். பின்பு நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் நிறைய கிரந்தங்களை எழுதினார்.

பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, பெரிய திருவடி, பெரியாழ்வார் பற்றும் பெரிய கோயில் என்பதைப் போல , தன்னுடைய பெருமைகளால் ஆச்சான் பிள்ளையும் பெரிவாச்சான் பிள்ளை என்று அழைக்கப்பட்டார். மணவாள மாமுனிகள் தன்னுடைய “உபதேச ரத்தின மாலை” என்ற க்ரந்தத்தில் பெரியவாச்சான் பிள்ளைக்காகவே இரண்டு பாசுரங்கள் எழுதியுள்ளார்.

பாசுரம் 43:

நம்பிள்ளை தம்முடைய நல்லருளால் ஏவியிடப்
பின் பெரியவாச்சான் பிள்ளை அதனால்
இன்பா வருபத்தி மாறன் மறைப் பொருளை சொன்னது
இருபத்து நாலாயிரம்.

உரை –  நம்பிள்ளை தம்முடைய கருணையினால் பெரியவாச்சான் பிள்ளையிடம் திருவாய்மொழிக்கு உரை எழுதப் பணிக்கிறார். அதை மனதில்  கொண்டு பெரியவாச்சான் பிள்ளையும், சகல வேதங்களின் சாரமான திருவாய்மொழிக்கு  மிகவும் அனுபவிக்கத்தகுந்த ஒரு வ்யாக்யானம் எழுதினார் . 24000 ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீ ராமாயணத்தைப் போன்றே 24000 படிகள் கொண்டதாக
எழுதினார்.

பாசுரம் 46:

பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும்
தெரிய வியாக்கியைகள் செய்வால்
அரிய அருளிச்செயல் பொருளை ஆரியர்கட்கிப்போது
அருளிச்செயலாய்த் தறிந்து.

உரை – பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தினாலே தான் பிற்காலத்தில் உள்ளவர்கள் அருளிச்செயலின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவும் அதன் உண்மையான அர்த்தங்களைப் பரப்பவும் முடிந்தது. இவருடைய வ்யாக்யானம் நமக்குக் கிடைக்காமல் போயிருந்தால் யாராலும் அருளிச்செயலின் அர்த்தத்தையறிந்து கொண்டிருக்கவே முடியாது.

மேலும் மாமுனிகள் தம்முடைய 39 வைத்து பாசுரத்தில், திருவாய்மொழியின் பிரதான 5 வ்யாக்யான கர்த்தாக்களில் இவரும் ஒருவர் என்றும்அந்த வ்யாக்யானங்களைப் பாதுகாத்து நம்மிடையே பரப்பியிராவிட்டால் நம்மால் அருளிச்செயலின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டே இருக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்.

அவருடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை வார்த்தை மாலை என்ற க்ரந்த்தத்தின் மூலமும் நம் பூர்வாசார்யர்களின்  க்ரந்தங்களின் மூலமும் அறிந்து கொள்ளலாம். அவைகளில் சில கீழே:

  1. “நாம் எல்லோரும் “எம்பெருமானின் கிருபைக்குப் பாத்திரர்களா அல்லது அவருடைய லீலைக்குப் பாத்திரர்களா?” என்று ஒருவர் கேட்க,
    அதற்கு பெரியவாச்சான் பிள்ளை “அகப்பட்டோம் என்றிருந்தால் க்ருபைக்கு விஷயம் உடன்பட்டோம் என்றிருந்தால் லீலைக்கு விஷயம் [நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் பிடிபட்டு உழல்கிறோமே என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் க்ருபைக்குப் பாத்திரர்கள். ஆனால் நாம் எல்லோரும் இந்த சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக எண்ணினால் அப்போது நாம் எம்பெருமானின் லீலைக்குப் பாத்திரர்களாகிறோம்]” என்கிறார்.
  2. இன்னொருவர் கேட்கிறார் “பாரதந்த்ரியம் என்றால் என்ன” என்று. பெரியவாச்சான் பிள்ளையின் பதில் “எம்பெருமானின் சக்தியில் முழுமையாகச் சார்ந்து இருப்பது, உபாயாந்தரங்களை முழுவதுமாக விட்டு விடுவது (சுய முயற்சியும் சேர்த்து), எப்பொழுதும் பகவத் கைங்கர்ய மோக்ஷத்திற்காகவே ஏங்குவது. இவையே பாரதந்த்ரியம்”.
  3. மற்றொருவர்  கேட்கிறார்.  “உபாயம் என்றால் என்ன?  நாம் நம்முடைய எல்லாவிதமான பற்றுதல்களையும் விடுவதா அல்லது அவனைப் பிடித்துக் கொள்வதா”. பெரியவாச்சான் பிள்ளையின் பதில “இரண்டுமே உபாயம் அல்ல. எம்பெருமானே நாம் விடுவதற்கும் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாகிறான். அவனே உபாயம்”.
  4. ஒரு சமயம் பெரியவாச்சான் பிள்ளையின் பந்துக்களில் ஒருவர் அவரிடம் ” நான் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் அநாதி காலம் இந்த சம்சார சாகரத்தில் உழன்று கொண்டுச் கர்மங்களை சேர்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு எம்பெருமான் எப்படி மோக்ஷம் அளிப்பான்”. அதற்கு அவர் பதிலுரைக்கிறார “நாம் எல்லோரும் எம்பெருமானின் சொத்து, அவன் நம்மை எப்பொழுது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானோ அப்போது நம் கர்மாக்களை எதுவும் பார்க்காமல் நம்மை சேர்த்துக் கொள்வான்” என்று கூறினார்.
  5. ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இன்னொரு ஸ்ரீவைஷ்ணவனிடம் குறை காணும் பொழுது, பெரியவாச்சான் பிள்ளை “எமன் தன்னுடைய வேலையாட்களிடம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குறையைப் பார்க்காது அவர்களிடமிருந்து தள்ளியே  இருக்கச் சொல்கிறார். பிராட்டியும் சொல்கிறாள் ‘ந கஸ்ச்சின் ந அபராத்யாதி‘ – பிறரிடம் குற்றம் காணாதீர்கள். எம்பெருமான் ‘என்னுடைய பக்தர்கள் குற்றம் செய்தாலும் அதுவும் நன்மைக்கே’ என்கிறான். ஆழ்வார் பெருமானின் பக்தர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்கிறார். இவர்கள் எல்லோரும் பக்தர்களைக் கொண்டாடும் பொழுது, பக்தர்களை நிந்திக்கவும் ஒருவர் வேண்டுமே, அதை நீரே செய்யக் கடவது” என்கிறார்.
  6. ஒரு முறை பாகவதர்களின் பெருமைகளை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது  வேறு ஒருவர் எம்பெருமான் விஷயமாகப் பேச உடனே பெரியவாச்சான் பிள்ளை விசேஷ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது  எதற்கு சாமான்ய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று கூறினாராம்.
  7. ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அருளிச்செயலில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

பெரியவாச்சான் பிள்ளையின் தனியன்

ஸ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய  நமோ யாமுன ஸுனவே
யத் கடாஷை லக்ஷ்யானாம் ஸுலப: ஸ்ரீதரஸ் ஸதா

யாமுனரின் திருக்குமாரரும், யாருடைய கடாக்ஷம் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் கிருபையையும் நமக்கு எளிதாக அளிக்க வல்லதோ அந்தப் பெரியவாச்சான் பிள்ளையை வணங்குகிறேன் .

நாம் எல்லோரும் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து நம் ஸம்ப்ரதாயத்திற்கு  அவருடைய அர்ப்பணிப்பை எப்பொழுதும் ஞாபகத்தில் கொள்வோமாக.

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2013/10/05/periyavachan-pillai/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

2 thoughts on “பெரியவாச்சான் பிள்ளை

Raghupathyraju -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி