மதுரகவி ஆழ்வார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

madhurakavi

திருநக்ஷத்ரம் : சித்திரையில் சித்திரை

அவதார ஸ்தலம் : திருக்கோளூர்

ஆசாரியன் :  நம்மாழ்வார்

அருளிச்செயல் : கண்ணிநுண் சிறுத்தாம்பு

திருநாட்டுக்கு எழுந்தருளியது :  ஆழ்வார் திருநகரியில்

நம்பிள்ளை தனது  ஈட்டு வ்யாக்யான அவதாரிகையில் மதுரகவி ஆழ்வாரின் வைபவத்தைத் திறம்பட சாதித்தருளியுள்ளார்.  அவற்றில் சிலவற்றை அனுபவிப்போம்.

ரிஷிகள் எல்லோரும் சாமான்ய சாஸ்திரத்தில் கவனம் செலுத்தினார்கள். அப்படி அனுஷ்டித்து, மூன்றுவிதமான பலன்களுக்காக பகவானைப் பணிந்தார்கள். சாமானிய சாஸ்திரம் அறுதியிடுவது ஐஸ்வர்யம், கைவல்யம், மற்றும் பகவத் கைங்கரியங்களாகிற  புருஷார்த்தம் (ஆத்மா அடைய வேண்டிய இலக்கு). ஸ்ரீமன் நாராயணனுக்கு அன்புத்தொண்டு செய்யும் உத்தம புருஷார்த்தத்திலே நோக்கத்தோடு ஆழ்வார்கள் இருந்தார்கள்.  ஆனால், இவர்களுக்கு மாறாக இருந்தவர் மதுரகவி ஆழ்வார்.  பகவானுடைய கைங்கர்யத்தைக் காட்டிலும், பாகவத கைங்கர்யமே உயர்ந்தது என்றும், ஆசார்யனே உயர்ந்த புருஷார்த்தம் ஆவார் என்றும் கொண்டு, நம்மாழ்வாரின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றி, ஆசார்யன் திருவடிகளே உய்யும் வழி என்பதை ஸ்தாபித்து அருளினார்.  தனக்குச் செய்யும் தொண்டைக் காட்டிலும், தன் அடியவர்களுக்குச் செய்யும் தொண்டே உயர்ந்தது என்று (மதுரகவிகள் கொண்ட சிந்தையை) எம்பெருமானும் ஏற்றுக்கொள்கிறான் .

இதையே நாம் ஸ்ரீ ராமாயணத்திலும் காணலாம்.  இராமாயணமானது உபப்ருஹ்மணம் (வேதத்தின் உட்பொருளை விளக்குவது) ஆகையால், நான்கு வேதங்களில் காட்டப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. நான்கு வேதங்களும் எம்பெருமானைத்தான் உயர்ந்தவனாகக் காட்டிற்று. இராமபிரான் தர்மத்தின் மறுவடிவமாகவே தோன்றியவர் ஆவார். சாமான்ய தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டி, உலகத்தாருக்கு உயர்ந்த வழிகாட்டியாக இருந்தவர் இராமபிரான். தந்தையின் சொல்லைக் கேட்டு நடப்பதே பித்ரு வசன பரிபாலனம் என்று வழங்கப்படுகிறது.

இளையபெருமாளான லக்ஷ்மணர் விசேஷ தர்மமான சேஷத்வத்தை (சேஷன்- சேவகன்; சேஷத்வம் – தன எஜமானன் எங்குச் சென்றாலும் பின் சென்று சேவை புரிவது)  நிலைநாட்டி அருளினார்; “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” (உனக்கு நானே எல்லாவற்றையும் செய்வேன்) என்று சேஷத்வத்தை நிலைநாட்டி அருளினார்.

பரதாழ்வான் (பரதன்) பாரதந்திரியத்தில் ஊற்றம் கொண்டவராய் இருந்தார்.  அதாவது பகவானின் விருப்பப்படி நடந்து, அதற்குப் பிரதிபலன் எதையும் எதிர்பாராமல் இருப்பதே பாரதந்த்ரியமாகும். இதுவே ஜீவாத்மாவுக்கு ஸ்வரூபம், அதாவது லக்ஷணம் ஆகும்.  நீ அயோத்திக்குச் சென்று, அந்த நகரத்தை நன்கு ஆண்டு, மக்களைக் காப்பதில் கண்ணாக இரு என்று இராமபிரான் இட்ட கட்டளையை ஏற்று, அதன்படி நடந்து காட்டியவர் பரதன். இவ்வாறே அயோத்தி மாநகருக்கு வெளியேயே 14 ஆண்டுகள் இருந்துகொண்டு, இராமபிரான் வனவாசத்தில் எந்தவிதமான உடைகளை (வஸ்திரங்கள்) அணிந்திருந்தாரோ, அதேபோன்று தானும் அணிந்து, அதே அனுஷ்டானத்தில் ஒழுகி, தன்னுடைய கடமைகளை ஆற்றினார் பரதாழ்வான்.

இப்படி இளைய பெருமாள் சேஷத்வத்திலும், பரதாழ்வான் பாரதந்த்ரியத்திலும் சிறந்து நிற்க, சத்ருக்நாழ்வான்(சத்ருக்நன்) ஆத்மாவின் உயர்ந்த நிலையான பாகவத சேஷத்வத்தைக் காட்டி அருளினார்.  அதாவது, பகவானுக்கு அடியவராக இருப்பவருக்கு அடியவராக இருக்கும் நிலை.  பரதனையே தனக்கு ஸ்வாமியாகக் கொண்டு, அவருக்குத் தொண்டாற்றுவதையே தனக்குப் பேறாகக் கொண்டு, வேறு எதிலும் விருப்பமற்றவராய் இருந்தவர் சத்ருக்நாழ்வான்.

“பகவானுக்கு அடியவர்களாக இருந்த இளையபெருமாளைக் காட்டிலும், பரதாழ்வானைக் காட்டிலும், இராமன் உகந்தது சத்ருக்நாழ்வானையே   என்று ஸ்ரீ பாஷ்யகாரர் (ஸ்ரீ ராமானுஜர்) அருளிச் செய்துள்ளதை  நம்பிள்ளை ஈட்டில், மேற்கோள் காட்டியுள்ளார்.  சத்ருக்நாழ்வான் எப்படி பரதனிடத்தில் அடிமைப் பட்டிருந்தாரோ, அதேபோன்று, நம்மாழ்வாரிடத்தில் அடிமைப்பட்டிருந்தவர் மதுரகவி ஆழ்வார்.  தனக்கு ஸ்வாமியான நம்மாழ்வாரையே உபாயமாகவும், உபேயமாகவும் கொண்டு, அவருக்கு அடிமைப்பட்டிருந்தவர் மதுரகவிகள்.  அப்படித் தான் அனுஷ்டித்துக் காட்டியதைத்தான், தன்னுடைய திவ்யப் பிரபந்தத்தில் (கண்ணிநுண் சிறுத்தாம்பு) அருளிச்செய்தார்.

பிள்ளைலோகாசார்யருடைய படைப்புகளில் தலை சிறந்ததான ஸ்ரீவசனபூஷணத்தின் கடைசி ப்ரகரணத்தில் ஆசார்ய அபிமான நிஷ்டையின் பெருமைகளையெல்லாம் விளக்கும்போது, தனக்கு ஸ்வாமியான நம்மாழ்வாரே அனைத்தும் ஆவார் என்று அவரிடத்தில் மதுரகவி ஆழ்வார் கொண்ட பக்தியை எடுத்துக்காட்டியுள்ளார்.  எட்டாவது ப்ரகரணத்தில் எம்பெருமானின் நிர்ஹேதுகமான கருணையைப் பற்றி (அதாவது எந்தக் காரணமுமின்றி, நமக்குக் கிருபை செய்பவன் எம்பெருமான் என்று) விவரித்துள்ளார்.  அதேசமயம், ஒரு ஜீவனின் கர்ம பலன்களைக் கொண்டே அவனுக்கு அருள் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றான் எம்பெருமான் என்றும் தெரிவிக்கிறார்.  ஆதலால், எம்பெருமான் தன்னை ஏற்பானோ மாட்டானோ என்று ஒருவர் சங்கை (சந்தேகம்) கொள்ளலாம்.  அந்த சந்தேகத்தையும் தீர்க்கும் வண்ணம், 9ஆவது ப்ரகரணத்தில் உபாயத்தின் ஏற்றத்தைக் (இறுதி வழி) காட்டி அருளியுள்ளார் பிள்ளைலோகாசார்யர். சரம உபாயமானது ஆசாரியனையே சார்ந்து இருத்தல். அதாவது, பகவானை நமக்கு எளிதில் அடைவித்துத் தருபவர் ஆசாரியனே; இந்த உபாயம் எவ்வாறு ஜீவாத்மாவை வாழ்விக்கும் என்று தெரிவிக்கிறார் பிள்ளைலோகாசார்யர்.  இதனைச் சற்று அனுபவிப்போம்.

ஸூத்ரம் 407இல், ஒருவருக்கு  “எம்பெருமான் ஸ்வாதந்த்ரியம் (சுதந்திரம்) உடையவன் என்பதால் அவன் நம்மை ஏற்பானோ அல்லது புறந்தள்ளுவானோ என்ற ஐயம் (சந்தேகம்) ஏற்படும்.  அவனது ஸ்வாதந்த்ரியமானது எப்படிப்பட்டது என்றால், ஒருவரது கர்மாவைக் கொண்டு அவரைப் புறம் தள்ளக்கூடிய உரிமையும், அல்லது, தன்னுடைய க்ருபையால் ஒருவர் எப்படிப்பட்டவரானாலும் அவரை ஏற்பதும் ஆகும்.  இதற்கு வியாக்யானம் அருளிச்செய்துள்ள ஸ்ரீ மணவாள மாமுனிகள், “நாம் பரதந்திரனான (பரதந்திரன் – பகவானையே சார்ந்து இருப்பவன்) ஆசாரியனைத் தஞ்சமாகப் பற்றினால் (புகலிடமாகக் கொண்டால்)  கருணைக்கு இருப்பிடமாகத் திகழும் அவர் (அந்த ஆசாரியர்) தன்னுடைய கருணையைக் கொண்டு, எம்பெருமானிடத்தில் நம்மை சேர்த்து வைத்து நம்மை உயர்ந்த கதிக்கு ஆளாக்கி, அந்த ஜீவனின் முக்திக்கு வழிகாட்டிவிடுவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்று இந்தச் ஸூத்ரத்தின் வியாக்யானத்தைத் தலைக்கட்டுகிறார்.

ஸூத்ரம் 408இல், இதை எம்பெருமானையே சரணமாகப் பற்றிய மற்ற பத்து ஆழ்வார்களின்  (மதுரகவி ஆழ்வார் மற்றும் ஆண்டாளைத் தவிர) பாசுரங்களைக் கொண்டு நிரூபிக்க இயலாது. ஏனென்றால் அந்தப் பத்து ஆழ்வார்களும் எம்பெருமானே எல்லாம் என்று இருந்தவர்கள்.  மேலும், இவர்கள் எம்பெருமானால்  மயர்வற மதிநலம் அருளப்பட்டு நேரே கடாக்ஷிக்கப்பட்டவர்கள்.  “உண்டபோது ஒரு வார்த்தை; உண்ணாதபோது ஒரு வார்த்தை பேசுபவர்கள் அந்தப் பத்து ஆழ்வார்கள்” என்று விளக்கி அருளுகிறார் பிள்ளைலோகாசார்யர்.    அதாவது, பகவத் அனுபவம் கிட்டப்பெற்றால், அவனது அடியவர்களாக இருப்பவர்களின் பெருமையைப் பேசி, அவர்களைக் கொண்டாடுவார்கள்;  அதேசமயம், பகவத் அனுபவம் கிட்டவில்லை என்றால் பாகவதர்களின்  மீது வருத்தம் கொள்வார்கள். இதற்கும் மாமுனிகள், “பத்து ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு ஆசார்ய வைபவத்தின் மகிமையை நம்மால் ஒருபொழுதும் முழுமையாக அனுபவிக்கமுடியாது; ஆனால், மதுரகவிகளின் பாசுரங்களைக் கொண்டு, ஆசார்யரின் மகிமைகளை நன்கு அனுபவிக்கலாம் என்று காட்டி இந்தச் ஸூத்ரத்தின் வியாக்யானத்தைத்  தலைக்கட்டுகிறார்.

அதேபோன்று, ஸூத்ரம் 409லும், ஆசார்யனைச் சரணமாகப்பற்றி உய்யும் சாஸ்திரத்தைக் காட்டித்தந்த மதுரகவி ஆழ்வாரே மற்ற பத்து ஆழ்வார்களைக் காட்டிலும் உயர்ந்தவர்!   ஏனென்றால், அவர்களைப் போல் இவர், உண்டபோது ஒருவாறும், அல்லாதபோது ஒருவாறும் பேசியவர் அல்லர்.   எல்லா நிலைகளிலும், நம்மாழ்வாரே தனக்கு எல்லாம் என்று ஆசார்ய அபிமானத்தில் சிறந்து விளங்கியவர் மதுரகவி ஆழ்வார் என்பதை அவர் (பாசுர) வார்த்தைகளைக் கொண்டே அறியலாம் என்று இதற்கு வியாக்யானம் அருளிச்செய்துள்ளார் மாமுனிகள்.

மதுரகவி ஆழ்வார் பெருமைகளை பேசும் வண்ணம் இரண்டு பாசுரங்களை மாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச்செய்துள்ளார் :

பாசுரம் 25இல், மதுரகவி ஆழ்வார் திரு அவதரித்த “சித்திரையில் சித்திரையானது” ப்ரபன்னர்களின் (சரணாகதர்கள்) ஸ்வரூபத்தை (லக்ஷணத்தை) உணர்த்தும் மகத்தான நாளாகும் என்றும், ஆகையால், இந்த நாளுக்குரிய ஏற்றமானது, மற்ற ஆழ்வார்கள் திரு அவதரித்த நாள்களைக் காட்டிலும் உயர்ந்தது என்று அருளிச்செய்துள்ளார்.

பாசுரம் 26இல், மதுரகவி ஆழ்வாரின் மகிமைகளையும், அவர் அருளிச்செய்துள்ள பிரபந்தத்தின் (“கண்ணிநுண் சிறுத்தாம்பு”) பெருமையையும் உரைக்கின்றார் மாமுனிகள்:

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய் கலையை
ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிசெயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து

பிள்ளைலோகம் ஜீயர் இந்தப் பாசுரத்திற்கு வியாக்யானம் அருளிச்செய்கையில், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தத்தை, அஷ்டாக்ஷர மந்திரத்தின் (திருமந்திரம்) மத்திய பதமாக அமைந்துள்ள “நம:” சப்தத்திற்கு ஈடாகக் காட்டியுள்ளார்.  திருமந்திரமானது, இந்த ஜீவாத்மாவிற்குப் பேறானது “ஆத்மாவால்” என்று உபதேசிக்கின்றது.  ஆத்மாவை பகவானுக்கு உரியதாகக் கொண்டு, அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதே அதற்கு (ஆத்மாவிற்கு) உண்டான லக்ஷணமாகும் என்பதே திருமந்திரத்தால் உணரப்படவேண்டிய ஞானமாகும்.  இதில் “நம:” பதமே முக்கியமானதாகும்  – இது  ஜீவாத்மாவுக்கு தன்னைக் காத்துக்கொள்ளும் (இரட்சித்துக் கொள்ளும்) சுதந்திரம் (உரிமை) கிடையாது; நம்மை இரட்சிக்கும் பொறுப்பு எம்பெருமான் ஒருவனுக்கே உள்ளது என்று தெளிவிக்கிறது . ஆனால், இதற்கு சற்றே மாறாக, இந்த ஆத்மாவானது, எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பதைக் காட்டிலும், ஆசார்யனுக்கு உரியது என்று கொண்டு, அவருக்கு ஆட்பட்டு, அதோடு, அவரே நமக்கு ரக்ஷகர் ஆவார் என்று உரைக்கும் பிரபந்தமாகும் மதுரகவிகள் அருளியுள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு. ஆகையாலேயே, சாஸ்திரங்களில் ரஸமாக இருக்கும் ஆசார்ய நிஷ்டையை உரைக்கும் இவரது பிரபந்தத்தை, மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள நாலாயிர திவ்யப் பிரபந்தங்களில் ஒன்றாகச் சேர்த்து, மதுரகவி ஆழ்வாருக்கு ஏற்றத்தை அளித்துள்ளார்கள் நம் பூர்வாசார்யர்கள். இவ்வாழ்வார் திரு அவதரித்த நக்ஷத்திரமான சித்திரையும் 27 நக்ஷத்திரங்களில் மத்யமாக அமைந்தது போல இவர் அருளிச்செய்துள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு திவ்யப் பிரபந்தமானது 4000 திவ்விய பிரபந்த ரத்தின ஹாரத்தின்  நடு நாயகக் கல்லாக இவர் அருளிச்செய்துள்ள பிரபந்தமும் அமைந்துள்ளது என்பது இவருடைய பிரபந்தத்திற்கும் உள்ள பெருமை ஆகும்.

ஆக. மதுரகவி ஆழ்வாரைக் கொண்டே எம்பெருமானார் (ஸ்ரீ ராமானுஜர்), நம்பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள் மற்றும் பிள்ளை லோகம் ஜீயர் ஆகியோர் ஆசார்ய நிஷ்டையின் மகிமையை விதம் விதமாக விவரித்து அருளியுள்ளார்கள் என்பதை இவற்றைக் கொண்டு அனுபவித்தோம்.

இவற்றின் மூலமாகக் கொண்டே, இவ்வாழ்வாரின் சரித்திரத்தை இனி நாம் மேலும் அனுபவிப்போம்:

மதுரகவி ஆழ்வார் சித்திரை மாதம், சித்திரை நக்ஷத்ரத்தில் தோன்றியவர் ஆவார். இவர் திரு அவதரித்தது திருக்கோளூர் என்னும் திவ்ய தேசமாகும்.   சூர்யோதயத்திற்கு முன் கிழக்கில் காணப்படுகின்ற அருணோதயம் போல, பராங்குசர் (நம்மாழ்வார்) உதிப்பதற்கு முன் தென் தேசத்தில் தோன்றியவர் மதுரகவி ஆழ்வார்.  ஆழ்வார்கள் அனைவரும் எம்பெருமானுடைய அருளால் தெய்வீகத்தன்மை பெற்று, ஸம்ஸார ஸாகரத்திலிருந்து மீட்கப்பட்டவர்களானாலும், வயதில் தனக்கு இளையவரான நம்மாழ்வாரின் தாள் பணிந்து நின்ற இவரது பெருந்தன்மையைப் பார்த்து, கருடவாஹன பண்டிதர், மதுரகவி ஆழ்வாரை ஸூரி கணங்களுக்குத் தலைவரான குமுதருடைய அம்சமும், கருடாழ்வாருடைய அம்சமுமாய்த் தோன்றியவர் என்று காட்டுகிறார்.

இவ்வாழ்வார், ஸாம வேதத்தை ஓதும் பூர்வ சிகை பிராம்மணர் குலத்தில் தோன்றியவர் ஆவார்;   உரிய பருவத்தில், ஜாத கர்ம, நாமகரணங்கள் சூட்டப்பெற்று, தக்க வயதில் உபநயன இத்யாதிகள் நடத்தப்பட்டு வேத சாஸ்திரங்களோடு, இதிஹாச புராணங்களையும் இளமையிலேயே பயின்று நன்கு தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார்.  கடவுள் அருளால் உண்மை உணர்வு  கொண்டு, உலகப் பற்றை அறவே துறந்தார்.  அவருக்கு இன்ப துன்பங்களில் அகப்பட்டு துன்புறும் மக்களுடன்  வாழவும் பழகவும்  பிடிக்கவில்லை. அதனால் அவர் அயோத்தி, வடமதுரை, மாயை, காசி, காஞ்சி அவந்தி, துவாரகை என்னும் ஏழு திருத்தலங்களுக்குச் சென்று புண்ணிய நீராடி, பரந்தாமனைத் தரிசித்து வரவேண்டும் என்று  விரும்பினார். உடனே அவர் தன் யாத்திரையைத் தொடங்கினார். வடநாட்டிலுள்ள பல திவ்யதேசங்களையும் தரிசித்துக்கொண்டு, அயோத்தி மாநகரை  வந்தடைந்தார்.  விக்கிரக வடிவில் அங்கே எழுந்தருளியிருக்கும் இராமபிரானை வணங்கிச் சில காலம் அங்கேயே தங்கி  வாழ்ந்துவந்தார்.

nammazhwar-madhurakavi-nathamuniமதுரகவி ஆழ்வார், நம்மாழ்வார், நாதமுனிகள் – காஞ்சிபுரம்

மதுரகவி ஆழ்வாருக்குப் பின்னே அவதரித்த நம்மாழ்வார் உலக நடைக்கு உள்ள இயல்பான பால் குடித்தல், அழுதல் போன்றவற்றைச் செய்யாதவராக இருந்தார். ஆழ்ந்த யோகத்தில் ஈடுபட்டவராக இருந்தார் நம்மாழ்வார்.  அவருடைய பெற்றோர்கள் காரி (தந்தை) மற்றும் உடைய நங்கை (தாய்) ஆவர்.  நம்மாழ்வார் பிறந்த 12ஆம் நாள், தங்களுக்குப் பிறந்த இந்தக் குழந்தை இப்படி உலக இயல்புக்கு மாறாக இருக்கின்றதே என்று அவரது பெற்றோர்கள். தென்திசையில் குளிர்ந்த தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள திருக்குருகூரில் எழுந்தருளியுள்ள பொலிந்து நின்ற பிரான் ஸந்நிதிக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்தனர்.  இந்த எம்பெருமான் தெய்வீகமான சங்கையும் சக்கரத்தையும் தன்னுடைய திருக்கைகளில் தாங்கியவனாவான்.  தாமரைக் கண்களை உடையவான இருந்தான்; நானே உனக்கு ரக்ஷகன்! ஆகையால் அஞ்சேல் என்று காட்டும் அபயஹஸ்தத்தை உடையவன்; ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவி நாச்சிமார்களோடு எழுந்தருளியிருப்பவன்.  இப்படித் தங்களுக்குப் பிறந்த குழந்தையானது, உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால், அக்குழந்தைக்கு “மாறன்” என்ற திருநாமத்தைச் சூட்டி, அந்தக் குழந்தையை அந்த ஸந்நிதிக்கு வெளியே இருக்கின்ற புளியமரத்துக்கு அடியில் விட்டுவிட்டு, அதன் தெய்வீகத் தன்மையை அறிந்தவர்களாக, அந்தக் குழந்தையை அடிக்கடி வந்து தரிசித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தார்கள்.  அப்போது, பரமபதநாதனான எம்பெருமான், தன்னுடைய தளபதியான விச்வக்ஸேனரை அழைத்து, கீழே சென்று, நம்மாழ்வாருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் முதலியவற்றைச் செய்துவைத்து, திராவிட வேதங்களை உபதேசித்துவிட்டு வாரும் என்று பணித்து அருளி, விச்வக்ஸேனரும் எம்பெருமான் திருவுள்ளம் பற்றியவராய், அதனைச் செவ்வனே செய்யும் வண்ணனும், ஆழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவித்து, ரஹஸ்ய மந்த்ரங்களை அதன் அர்த்தங்களுடன் ஓதி, திராவிட வேதங்களையும் உபதேசித்து அருளினார் (இதிலிருந்து நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் கூறியபடி த்ராவிட வேதமும் அநாதி என்பதை அறிந்து கொள்ளலாம்).

அதன் பின்னே, நம்மாழ்வார் அந்த தெய்வீகத்தன்மையுடைய புளியமரத்தின் கீழேயே 16 ஆண்டுகள் தங்கியிருந்தார்.  இதைப் பார்த்த அவரது பெற்றோர்கள் ஆழ்வாரது பெருமைகளை நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள்.  ஆனால், அதை ஊராருக்கு எடுத்துச்சொல்லி, புரியவைத்தாலும், அவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று அறிந்து, ஆழ்வாரின் பெருமைகளைத் தங்களுக்குள்ளே அனுபவித்துக் கொண்டு, திருக்குறுங்குடி நம்பி எம்பெருமானை தியானித்தும், வணங்கியும் நின்றார்கள்.  (வடதேசத்தில் இருந்த பொழுது) மதுரகவி ஆழ்வாரும் இதைப்பற்றி கேள்விப்பட்டார், அங்கிருந்த ஆற்றங்கரையைக் கடந்து சென்றபோது, தென்திசையில் ஒரு அதிசயமான பேரொளி தோன்றியது.  அதைப் பார்த்த இவர், அருகில் இருக்கும் கிராமங்களில் ஏதாவது ஒன்று தீக்கரையாகி இருக்கும் அல்லது காட்டில் மூண்ட தீயாக இருக்கும் என்று நினைத்தார்.

ஆனால், அடுத்தடுத்து மூன்று நாட்களிலும், இரவுப் பொழுதுகளில் இப்படிப்பட்ட வெளிச்சம் தோன்றுவதை கவனித்தார் மதுரகவிகள்.  அதை மேலும் ஆராய முற்பட்டு, அந்த இரவுப் பொழுது முடிந்து, விடிந்தவுடன், அந்த ஒளி தோன்றிய திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.  அப்படிச் சென்றபோது, வழியில் பல திவ்யதேசங்களைத் தரிசித்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்தை அடைந்தார். அங்கும் அந்த திவ்யமயமான ஒளி தோன்றவே, அந்த ஒளி வரும் தென்திசையை நோக்கி  மேலும் நகர, இறுதியாக திருக்குருகூரை (ஆழ்வார் திருநகரி) அடைந்தார்.  திருக்குருகூரை அடைந்தவுடன், அவரது கண்களிலிருந்து அந்த ஒளி விலகியது.  ஆகவே, அந்த ஒளியானது இங்கிருந்துதான் தோன்றியிருக்கிறது என்று அறிந்துகொண்டார்.  பின்னர், திருக்குருகூர் எம்பெருமானின் கோயிலுக்குள் நுழைந்து, அங்கே இருக்கும் திருப்புளியாழ்வாருக்குக் (புளியமரம்) கீழே, ” திவ்யமயமான திருமேனியோடே., அதாவது, ஞானமே வடிவெடுத்தவராய், பொலிந்த (பிரகாசாமான) கண்களை உடையவராய், 16 ஆண்டுகள் நிரம்பிய யௌவனனாய், அமாவாசை நாளிலும் வெளிச்சத்தைத் தரக்கூடிய முழுநிலவாய், பத்மாசனத்தில் அமர்ந்த யோகியாய், எம்பெருமானைத் தொழுது எழவேண்டிய உபதேச முத்திரையை உடையவராய், ஸ்ரீவைஷ்ணவ குலத்துக்கே ஆசாரியராய்” நம்மாழ்வார் அமர்ந்திருப்பதைக் கண்டார்.   இப்படி, பகவத் அனுபவத்தில் முற்றும் ஆழ்ந்து அருகில் நடக்கும் விஷயங்கள் எதையும் அறியாதவராய் இருக்கின்ற இவரை சோதிக்கும் வண்ணம், அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து அவர்முன் போட, உடனே நம்மாழ்வார் கண்விழித்து, தன் முன்னே நிற்கும் மதுரகவி ஆழ்வரைப் பார்த்தார்.  ஓ! இவருக்குக் கண்கள் இருக்கின்றன என்று அறிந்துகொண்ட மதுரகவிகள், இவருக்குப் பேச வருமா? என்பதை சோதிக்க விரும்பி, அவரிடம், “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.  அதன் உட்பொருளாவது, “ஞானமற்ற பிரகிருதியினால் உருவான உடம்பில், ஞானத்தை உடைய, அணு வடிவமான ஜீவாத்மா பிறந்தால், எதை அனுபவித்துக் கொண்டு, எங்கே (இன்பம் உண்டென்று) கிடக்கும்?”  என்று பொருள்படக் கேட்டார்?    அதற்கு சடகோபர், “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”  என்று பதில் கூறினார்.  அதாவது, “மெய்ஞான உணர்வு நினைவு பெற்ற ஜீவாத்மாவாக இருந்தால், அத்தை (பரமாத்மாவை) தின்று (அனுபவித்துக் கொண்டு) அங்கே (பரமாத்விலேயே) கிடக்கும்.  ஒருவேளை அப்படிப்பட்ட ஞானத்தைப் பெறாத ஆத்மாவாக இருந்தால், அத்தைத் தின்று, அதாவது, உடலின் தொடர்பால் உருவாகும் ஐம்புலன் இச்சைகளின் நல்வினை தீவினைகளை அனுபவித்துக் கொண்டு அங்கேயே கிடக்கும்.  இதனால், அந்த ஆத்மாவானது பிறவிச் சுழலிலேயே கட்டுண்டு கிடக்கும்” என்று விடை கொடுத்தார்.   இதைக் கேட்ட மதுரகவிகள் இவர் “ஸர்வஞ்ஞர்” அதாவது, முற்றும் உணர்ந்த ஞானி என்று உணர்ந்து, எழுந்து, ஆழ்வாரின் திருவடித்தாமரைகளில்  சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, அதுமுதலாக, ஆழ்வாருடனேயே நிரந்தரமாகத் தங்கி, அவருக்கு சகல கைங்கர்யங்களும் செய்துகொண்டு, அவரது பெருமைகளை பாடிக் கொண்டிருப்பதையே பொழுதுபோக்காகக் கொண்டு வாழ்ந்தார்.

அதன்பின்னே, அனைத்துக்கும் காரணனும் (ஆதியும்), அனைத்துக்கும் நிர்வாஹகனும், அனைத்தையும் தன் கட்டுக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பவனும், அனைத்து ஜீவாத்மாக்கள் மற்றும் மற்ற அனைத்து பொருள்களிலும் பரமாத்மாவாய் நிறைந்திருப்பவனும், அழகிய கருநீல நிறத்தோடே கூடிய திருமேனியை (உடல்) உடையவனுமான ஸ்ரீவைகுண்டநாதன் (பரமபதநாதன்) நம்மாழ்வாரை சந்திக்க முற்பட, உடனே பெரிய திருவடியான கருடாழ்வான் எம்பெருமானுக்கு முன்னே வந்து நிற்க, எம்பெருமான் பிராட்டியோடு சேர்ந்து கருடாழ்வானின் மீது ஏறி அமர்ந்துகொள்ள, அவர்கள் திருக்குருகூரை அடைந்து, ஒருமுறை ஆழவாருக்குத் தங்கள் தெய்வீகமான தரிசனத்தை அருளி, அவரை போரக் கடாக்ஷித்து, வாழ்த்தி, அவருக்கு மயர்வற மதிநலத்தை அருளினான். இப்படி திருமாலால் அருளப்பட்ட நம்மாழ்வார், மேலும் பகவத் அனுபத்தில் மூழ்க, அந்த அனுபவம் கட்டுக்கடங்காத ஆறாய், பெருக்கெடுத்த வெள்ளமாய் ஓட, அதன் விளைவாக நான்கு வேதங்களின் அம்சங்களாக, எம்பெருமானின் தெய்வீக லக்ஷ்ணம், தெய்வீக வடிவம், தெய்வீகத் தன்மைகள், அதாவது, ஸ்வரூப, ரூப, குண விபூதிகளை உடையவன் எம்பெருமான் என்பவற்றை உணர்த்தும்  நான்கு திவ்யப் பிரபந்தங்கள் ஆழ்வாரின் திருவாயிலிருந்து புறப்பட்டு வெளிவந்தது. அவை முறையே, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகியவைகள் ஆகும். அதன் பின்னர், நம்மாழ்வார் அவற்றையெல்லாம் மதுரகவிகளுக்கும்,  தன்னைச் சரணமாகப் பற்றிய மற்றவர்களுக்கும் உபதேசித்து அருளினார்.  அனைத்து திவ்யதேசத்து எம்பெருமான்களும் நம்மாழ்வார் எழுந்தருளியிருந்த அந்தப் புளியமரத்துக்கு அருகில் வந்து, ஆழ்வாருக்குத் தங்கள் தரிசனங்களைத் தந்தருளி, மங்களாசாசனத்தைப் பெற்றுச் சென்றார்கள்.  அதன்பின்னர், நம்மாழவார் எல்லோரையும் போரக் கடாக்ஷித்து, அனைவரும் தன்னைப் போலவே பகவத் பக்தியில் திளைத்து,  எம்பெருமான் ஒருவனிடத்திலே மட்டும் பற்றுவைத்து, உயரவேண்டும் என்று வாழ்த்தினார்.

பின்னர், பரமபதத்திலிருந்து நித்யஸூரிகளும்,  ச்வேத த்வீப வாசிகளும் (திருப்பாற்கடலில் வசிப்பவர்கள்) நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் இடத்துக்கு வர, நம்மாழ்வார் தன்னைக் காணவந்த  அந்த உயர்ந்தவர்களின் பெருந்தன்மைக்குத் தோற்று, அவர்களுக்கும் மங்களாசாசனங்களை அருளிச்செய்து, அவர்கள் இங்கு வந்து தன்னை வாழ்த்தியதால், எம்பெருமானின் அருள் பெற்றதால், தான் உயர்ந்தவன் என்ற  ஸாத்வீக அஹங்காரம் தலைக்கேற  நின்று, அளவற்ற பெருமைகளுடனே, எப்பொழுதும் கண்ணன் எம்பெருமானையே தியானித்துக் கொண்டு வாழ்ந்தார்.  ” பரமாத்ம ஸ்வரூபம், ஜீவாத்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், உபேய ஸ்வரூபம், விரோதி ஸ்வரூபம்”  ஆகியவற்றைக் கொண்ட அர்த்த பஞ்சகத்தை வெளியிட்டு, த்வய மஹாமந்திரத்தின் ஆழ்ந்த அர்த்தங்களையும் தன்னுடைய சரமப் பிரபந்தமான (கடைசிப் பிரபந்தம்) திருவாய்மொழியில், வெளியிட்டு, பரம பாகவதர்களுக்கு அமிர்தமாக கொடுத்து அருளினார்.  32 ஸம்வத்ஸரங்கள் வாழ்ந்த இவர்,  இந்த ஸம்ஸார பந்தத்தை அறுத்துக் கொண்டு., எம்பெருமானின் திவ்யமயமான அருளோடு திருநாட்டுக்கு (பரமபதம்)  எழுந்தருளினார்.

அதன் பின்னே, ப்ரபந்ந ஜன கூடஸ்தர் (ஸ்ரீவைஷ்ணவர்களின் முதல்வர்) என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் பிரதான சிஷ்யரான மதுரகவி ஆழ்வார் ஸ்ரீவைஷ்ணவ குலத்துக்கே தலைவராகத் திகழ்ந்தார்.   நம்மாழ்வாரைப் போற்றி பக்திப் பரவசத்துடன் 11 பாசுரங்கள் கொண்ட “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்னும் பிரபந்தத்தை  அருளிச்செய்து, அதை பஞ்சமோபாய நிஷ்டர்களான முமுக்ஷக்களுக்கு (மோக்ஷத்தில் இச்சை உடையவர்களிடத்தில்) அளித்தார்.  அதாவது, ஐந்தாவது நிஷ்டையான ஆசார்ய நிஷ்டையிலேயே இருப்பவர்கள். அதாவது, ஆசார்யனே உயர்ந்த புருஷார்த்தம் என்று ஆசார்ய அபிமானத்தால் உயர்ந்த கதியைப் பெற்றவர்கள்.  மற்ற நான்கு புருஷார்த்தங்கள் யாவை என்றால், ஸாத்யோபாயமான கர்ம, ஞான, பக்தி யோகங்களாகிய மூன்று உபாயங்களும் ஸித்தோபாயமான சரணாகதியும் ஆகும்.

பிறகு மதுரகவியார் நம்மாழ்வாரின் அர்ச்சா திருவுருவத்தை அப்பெருமான் கோயிலினுள்ளே எழுந்தருளச் செய்து, அதற்கான திருமண்டபத்தையும், மதிள்களையும், விமானத்தையும் தோற்றுவித்தார்.  நாள்தோறும், பலவகை மலர்களைக் கொண்டு மாலை தொடுத்து, சூட்டி மகிழ்ந்தார்.  நம்மாழ்வார் பாடிய பாசுரங்களையெல்லாம் உலகெங்கும் பரவுமாறு பக்தியுடன் பாடினார். நம்மாழ்வாரின் விக்கிரகத்திற்கு மாலைகள் சூட்டி வழிபாடுகள் செய்து, திருவிழாக்களையும் ஏற்படுத்திக் கொண்டாடினார்.  அப்பொழுது அழகிய பொன் விமானத்தில் அத்தெய்வ உருவை எழுந்தருளச் செய்து, வீதிகள் தோறும் வலம் வரச் செய்தார்.  விமானத்தின் முன்னே அடியார்களுடன் அவரும் சேர்ந்து, “நம்மாழ்வார் வந்தார் நற்குணச் சீலர் வந்தார், தமிழில் வேதம் பாடிய பெருமான் வந்தார், திருக்குருகூர் நம்பி வந்தார், திருவாய்மொழி ஈந்த அருளாளர் வந்தார், திருவழுதி வளநாடர் வந்தார், வகுளாபரணர் வந்தார், காரி மாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார், பவனிநாதர் வந்தார்” என்று விருதுகள் உரைத்து திருவுலா வருவார்.  இவற்றின் அர்த்தங்களானது “வேதங்களின் சாரங்களை வெளியிட்டவர் வந்தார்; திருவாய்மொழி பாடிய நாவீரர் வந்தார்; திருநகரிக்குத் தலைவர் வந்தார்; திருவழுதிவளநாடு (ஆழ்வார் திருநகரி) மற்றும் அதைச் சூழுந்துள்ள இடத்தில் இருப்பவர்  வந்தார்; அனைவரையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவர் வந்தார்”.

அச்சமயம், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே புலவர்களாக இருந்த சிலர் அங்கே வந்து, நம்மாழ்வாரின் புகழ் பாடுபவர்களைப் பார்த்து, உங்களுடைய ஆழ்வார் பக்தர் அன்றி (தவிர) பகவான் இல்லை.  இவர் சங்கமேறிய புலவரோ? (சங்கத்தால் அங்கீகரிப்பட்டவரோ? என்றார்கள்). இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுள் அல்லவே!  இவரைப் போய் வேதம் தமிழ் செய்தவர் என்று போற்றுவது தகுதி அல்லவே! என்று குதர்க்க (இழிவான) வார்த்தைகளை பேசி, ஆழ்வார் புகழ் பாடுவதைத் தடுத்தனர்.  இதனைப் பொறுக்காத மதுரகவிகள் மனம் வருந்தி, இவர்கள் கர்வத்திற்குப் பங்கம் (அழிவு) ஏற்படும்படி தேவரீர் (நீர்) செய்தருள வேணும் என்று பிரார்த்திக்க,  நம்மாழ்வார் “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” என்ற திருவாய்மொழிப் பாசுரத்தை ஒரு சிற்றேட்டில் எழுதிக் கொண்டுபோய் சங்கப் பலகையில் வைத்திட்டால், அவர்களது செருக்கு (அகம்பாவம்) அடங்கும் என்று கூறி அருள, அதன்படியே மதுரகவிகள் செய்து, அதைச் சில சங்கத் தமிழ் புலவர்களிடம் கொடுத்தார்.  அப்படிக் கொடுத்துவிட்டு, இதை உங்கள் சங்கப் பலகையில் ஏற்றுங்கள்; அப்படி ஏற்றப்பட்ட இந்தப் பாசுரத்தை சங்கப் பலகை ஏற்றுக்கொண்டால், ஆழ்வாரின் பெருமைகள் நிரூபிக்கப்பட்ட படியாகும் என்று கூறினார்.  சங்கப் புலவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.  பின்னர் அவர்கள் அதை எடுத்துக் கொண்டுபோய், மதுரையில் இருந்த தமிழ் சங்கத் தலைவரிடம் கொடுத்து, மதுரகவிகள் சொன்னதைச் சொல்ல, அந்தத் தலைவரும், ஏற்றுக் கொண்டு, ஆழ்வாரது அந்தப் பாசுரத்தை ஒரு சிற்றேட்டில்  எழுதி, சங்கப் பலகையில் வைத்து, அதோடே 300 சங்கத் தமிழ் புலவர்களின் பாடல்களையும் அந்தப் பலகையில் ஏற்றினார்.  அந்த சங்கப் பலகையும், ஆழ்வார் பாசுரத்தை மட்டும் அங்கீகரித்து, அதோடே சேர்ந்து நின்ற 300 புலவர்களின் பாடல்களையும் கீழே தள்ளி, ஆழ்வாரின் பெருமைகளை நிரூபித்தத்து.

பிறகு அச்சங்கப் புலவர்களுக்கெல்லாம் தலைவராகிய அவர்,

ஈ ஆடுவதோ கருடர்க்கு எதிரே? இரவிக்கு எதிர் மின்மினியா ஆவதோ?
நாய் ஆடுவதோ உருவம் புலிமுன்? நரி ஆடுவதோ நரகேசரி முன்?
பேய் ஆடுவதோ அழகர் வசிமுன்? பெருமான் வகுளாபரணன் அருள்கூர்ந்து
தோலா துரையர் வீரமா மறையின் ஒரு சொற் பெறுமோ உலகிற் கவியே?

என்று நம்மாழ்வார் என்னும் பெரியவருக்கு முன், மற்ற அனைத்தும் தாழ்ந்தவைகளே என்று ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பாடினார்.   அதாவது, கருடனுக்கு எதிரே ஈ ஆடுமோ?  சூரியனுக்கு எதிரே மின்மினிப் பூச்சி பிரகாசிக்குமோ?  புலியின் முன்பு நாய் ஆடுமோ?  நரி ஆடுமோ சிங்கத்தின் முன்? பேய் ஆடுமோ ஆழ்வாரின் அழகான தோற்றத்தின் முன்?  நம்மாழ்வார் என்னும் தெய்வம் அருளிய தெய்வப் பாசுரங்களுக்கு முன் வேறு எந்தச் சொல்லும் ஏற்றம் பெறுமோ? என்று அர்த்தம்.

பின்னர் அவர்கள் அனைவரும் மதுரகவிகளிடமும் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு, உங்கள் ஆழ்வாரின் மேன்மையை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.  தங்களால் எங்கள் அகந்தையும் அழிந்தது.  இனி நீங்கள் ஆழ்வாருடைய புகழை வான் முட்டும் அளவு கூறுங்கள்.  இவ்வுலகம் முழுதும் அவருடைய அருட்புகழ் சென்று பரவட்டும்.  திக்கெட்டும் அவருக்குத் திருவிழா நடைபெறட்டும்.  நாங்களும் அவ்விழாவிலே கலந்து கொள்கிறோம்.  உடனே சென்று விழா நடத்துங்கள்” என்று கூறினார்கள்.   அவர்கள் மனம் திருந்தியதைக் கண்டு மதுரகவிகளும் பெருமகிழ்ச்சி கொண்டு, அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

நம்மாழ்வார் பாடிய பாசுரங்களின் பொருள்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி, நல்வழிப்படுத்தி நெடுங்காலம் மதுரகவி ஆழ்வார் வாழ்ந்து, இறுதியில் ஆசாரியன் திருவடியை அடைந்து, பரமபதத்திலும் ஆசார்யனுக்கு நித்ய கைங்கர்யம் செய்ய விழைந்தார்.

மதுரகவிகளின் தனியன்

அவிதித விஷயாந்தரஸ் சடாரேர்
உபநிஷதாம் உபகான மாத்ர போக:
அபி ச குண வசாத் ததேக சேஷி
மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து

அடியேன் வேங்கட க்ருஷ்ண ராமாநுஜ தாஸன்
அடியேன் லக்ஷ்மி நரஸிம்ஹ ஸ்ரீவைஷ்ணவ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/01/17/madhurakavi-azhwar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s