Author Archives: srinivasan echchur

அழகிய மணவாள மாமுனிகள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

நமது கடந்த பதிவில் திருவாய்மொழிப் பிள்ளையின் (https://guruparamparaitamil.wordpress.com/2015/10/22/thiruvaimozhi-pillai/) வைபவங்களை அனுபவித்து மகிழ்ந்தோம் . இப்பொழுது ஓராண் வழி குருபரம்பரையில் அடுத்த ஆசார்யனான ஸ்ரீ மணவாள மாமுனிகளின் வைபவங்களை அனுபவிப்போம்.

திருநக்ஷத்ரம் : ஐப்பசியில் திருமூலம்

அவதார ஸ்தலம் : ஆழவார்திருநகரி

ஆசார்யன் : திருவாய்மொழிப் பிள்ளை

ஶிஷ்யர்கள் : அஷ்ட திக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர் ,கோயில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார் , பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்னங்கள் : ஸேனை முதலியாண்டான் நாயனார், ஶடகோப தாஸர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார், கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள மாமுநிகளுக்கு பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகையிலிருந்தும் மற்றும் திவ்ய தேஶங்களிலிருந்தும் மேலும் பல ஶிஷ்யர்கள் இருந்தார்கள்.

பரமபதித்த இடம் : திருவரங்கம்

அருளிச் செய்தவை : தேவராஜ மங்களம், யதிராஜ விம்ஶதி, உபதேஶ ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி , ஆர்த்தி பிரபந்தம்.  வ்யாக்யானங்கள் : முமுக்ஷுப்படி, தத்வத்ரயம், ஸ்ரீ வசனபூஷணம் , ஆசார்ய ஹ்ருதயம் , பெரியாழ்வார் திருமொழி (பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களிலிருந்து கரையானுக்கு இரையான பகுதிக்கு மட்டும் ) , இராமானுச நூற்றந்தாதி . ப்ரமாண திரட்டு (ஒரு கிரந்தத்தைச் சார்ந்த அனைத்து ஶ்லோகங்கள் மற்றும் ஶாஸ்த்ர வாக்கியங்களைத் திரட்டுதல்) : ஈடு 36000 படி, ஞான ஸாரம், ப்ரமேய ஸாரம் , தத்வ த்ரயம் , ஸ்ரீ வசன பூஷணம்.

ஆழ்வார்திருநகரியிலே திகழக்கிடந்தான் திருநாவீறுடையபிரான் ஸ்ரீரங்க நாச்சியார் தம்பதிக்கு, ஆதிஶேஷன் திருவவதாரமாகவும் அனைத்துலகும் வாழப்பிறந்த யதிராஜர் புனரவதாரமாகவும் ஜனித்த வள்ளல் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அழகிய மணவாள மாமுனிகள், ரம்யாஜாமாத்ரூ முனி, காந்தோபயந்த்ரூ முனி, ரம்யாஜாமாத்ரூ யோகி, வரவரமுனி, யதீந்த்ர ப்ரவணர், இராமானுசன் பொன்னடி, ஸௌம்யஜாமாத்ரூ யோகீந்த்ரர் , பெரிய ஜீயர், ஸுந்தரஜாமாத்ரூ முனி, மற்றும் பல திருநாமங்களால் இவர் அறியப்படுகிறார் .

அவதார வைபவம் – சுருக்கமாக

பெரிய பெருமாள் திருவருளால் ஆழ்வார்திருநகரியிலே ஆதிஶேஷனே வரயோகியாய் திருவவதாரம் செய்தருளினார்.

(மணவாள மாமுனிகள் – ஆழ்வார்திருநகரி . திருவடிவாரத்தில் அஷ்ட திக் கஜங்கள்)

 • இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்திலே இவரது தந்தையார் இடத்திலே வேதாத்தியயனம் செய்து ஸாமான்ய ஶாஸ்திரங்களையும் கற்றுத் தேறுகிறார். நாளடைவிலே திருமணமும் செய்து வைக்கப் படுகிறார்.
 • திருவாய்மொழிப் பிள்ளையின் வைபவங்களைச் செவியுற்று ஆழ்வார்திருநகரிக்குத் திரும்பிய இவர், திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைத் தஞ்சம் அடைகிறார். இதை நாம் முந்தைய பதிவிலேயே வாசித்து இன்புற்றோம்.
 • இவருக்கு ஓர் திருமகனார் பிறக்க , அவருக்குத் திருநாமம் சாற்றி அருளவேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளையை ப்ரார்த்திக்கிறார். திருவாய்மொழிப் பிள்ளை , இராமானுச நூற்றந்தாதியிலே இராமானுச என்று 108 முறை வருவதால், அந்தத் திருநாமமே உகந்ததென்று ஸாதித்தருளி, இவரது திருக்குமாரருக்கு “எம்மையன் இராமானுசன் ” என்று திருநாமம் சாற்றி அருளுகிறார்.
 • திருவாய்மொழிப் பிள்ளை இன்பமிகு விண்ணாடு (பரமபதம்) எய்தியபின், இவரே ஸத் ஸம்பிரதாய ப்ரவர்த்தகர் ஆகிறார்.
 • அருளிச்செயலிலே குறிப்பாக திருவாய்மொழியிலே மற்றும் ஈடு 36000 படியிலே தேர்ந்தவர் ஆகும் இவர், அவைகளுக்கான ப்ரமாணங்களையும் திரட்டி அவற்றை பதிவும் செய்கிறார்.
 • இவரது வைபவங்களைக் கேட்டறிந்த அழகிய வரதர் என்னுமவர் இவரின் முதல் சீடராய் வந்தடைகிறார். அழகிய வரதர் ஆசார்யனுக்கு அடிமை செய்யும் பொருட்டு துறவு புகுகிறார். அவருக்கு மணவாள மாமுனிகள் “வானமாமலை ஜீயர்” (அழகிய வரதரின் ஊர் வானமாமலை ஆதலால்) என்றும் பொன்னடிக்கால் ஜீயர் (இவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை வந்தடைந்தாரோ மணவாள மாமுனிகளின் சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று ஆதலால் செம்பொற்கழலடி செல்வா பலதேவா என்னுமாப்போலே) என்றும் திருநாமம் சாற்றியருளினார் .
 • ஆசார்யனின் திருவுள்ளத்தை நினைவு கூர்ந்த இவர், ஆழ்வாரிடம் நியமனம் பெற்றுக்கொண்டு திருவரங்கத்திற்குத் தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுந்தருளுகிறார்.
  திருவரங்கம் செல்லும் வழியிலே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார்க்கும், மாலிரும்சோலை அழகர்க்கும் மங்களாஶாஸனம் செய்தார்.
  திருவரங்கம் சென்றடைந்த பின், காவேரி கரையிலே மணவாள மாமுனிகள் நித்யகர்மாவை அனுஷ்டிக்கிறார். அச்சமயம் திருவரங்கத்திலே எழுந்தருளியிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் கோஷ்டியாய் பெரிய ஜீயரை எதிர்கொண்டு அழைத்து ஆண்டாள், உடையவர், நம்மாழ்வார், ப்ரணவாகார விமானம், ஸேனை முதல்வர், கருட பகவான், பெரிய பிராட்டியார், பெரிய பெருமாளை முறையே ஸேவை செய்து வைத்தனர். உடையவரை வரவேற்றார் போலே வரயோகியையும் வரவேற்று இவருக்குத் தீர்த்த ப்ரஸாதங்கள் மற்றும் ஸ்ரீஶடகோபம் அருளினார் திருவரங்கநகரப்பன் .
 • இதனைத் தொடர்ந்து இவர் பிள்ளை உலகாரியன் திருமாளிகைக்குச் சென்று பிள்ளை உலகாரியனையும் அவர் திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரையும் அவர்கள் ஸம்ப்ரதாயத்திற்காக ஆற்றிய கைங்கர்யங்களை எண்ணி கொண்டாடி மகிழ்ந்தார்.
 • திருவரங்கத்திலே சிலகாலம் கழித்துக்கொண்டு எழுந்தருளி இருந்த இவரை, நம்பெருமாள் திருவரங்கம் திருப்பதியை இருப்பாகக் கொள்ளும்படிக்கும் ஆழமான ஸம்பிரதாய அர்த்தங்களை அடியார்களுக்கு அளித்தருளும் படியும் நியமிக்க மிக்க மகிழ்ந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், துலுக்கர்கள் படை எடுப்பால் தொலைந்த கிரந்தங்களைச் சேகரிக்க துவங்குகிறார் .
 • உத்தம நம்பியின் கைங்கர்யங்களிலே இருக்கும் குறைகளை இவரிடத்தில் விண்ணப்பம் செய்த பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியை, உத்தம நம்பியை திருத்திப் பணிக்கொள்ளுமாறு நியமனம் செய்கிறார்.
 • திருவேங்கடத்திற்கு (திருமலை திருப்பதி) மங்களாஶாஸனம் செய்ய திருவுள்ளம் கொண்ட இவர், பொன்னடிக்கால் ஜீயரோடு திருவேங்கட யாத்திரை மேற்கொள்கிறார். செல்லும் வழியிலே திருக்கோவலூர் மற்றும் திருக்கடிகை (சோழசிம்மபுரம்/சோளிங்கர்) கை தொழுகிறார். திருமலையிலே, எம்பெருமானாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் ஸ்வாமி ஒரு கனவு காண்கிறார். அந்த கனவிலே ஒரு க்ருஹஸ்தர் பெரிய பெருமாளை போன்று திருமலை அளவுக்கு நீண்டு படுத்துக்கொண்டு இருக்க அவரது திருவடிவாரத்தில் ஒரு ஸந்நியாசி இருந்து பணிவிடை செய்து கொண்டிருக்கிறார். அந்தக் கனவிலே இவர்கள் யாரென்று ஸ்ரீவைஷ்ணவர்களை வினவ, கிடப்பவர் ஈட்டுப் பெருக்கரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்றும் அவர் திருவடிகளில் இருப்பவர் அவரது ப்ராண ஸுக்ருதான (மூச்சுக்காற்று) பொன்னடிக்கால் ஜீயர் என்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் சுவாமி தானும் கண் விழித்துக்கொண்டு இவ்விருவரும் விரைவில் அப்பனுக்குப் பல்லாண்டு பாட வரவிருப்பதை அறிந்து, வரவேற்பதற்குத் தக்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தானும் முறையே திருமலை ஆழ்வார் (திருவேங்கடமாமலை), கோவிந்தராஜன் மற்றும் ந்ருஸிம்ஹனைத் தொழுது திருவேங்கடம் வந்தடைந்தார். திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயர் இவ்விருவரையும் திருவேங்கடமுடையானிடம் அழைத்துச் செல்ல, இவர்களைக் கண்டு போர உகந்த திருவேங்கடமுடையான் தீர்த்தம் ஸ்ரீ ஶடகோபம் மற்றும் பிரஸாதங்களை தந்தருளினார். இதனை பெற்றுக் கொண்டு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் , திருவேங்கடமுடையானிடம் பிரியா விடை பெற்று கிளம்பினார்.
 • இவர் காஞ்சிக்கு எழுந்தருளி, தேவப்பெருமாளை மங்களாஶாஸனம் செய்தார். தேவப்பெருமாள் இவரை எம்பெருமானார் என்று கொண்டாடி பிரஸாதம் ஸ்ரீ ஶடகோபம் உள்ளிட்டவைகளைத் தருகிறார்

மணவாளமுனிப்பரன் – காஞ்சிபுரம்

 • பின்னர் ஸ்ரீபெரும்புதூர் சென்று எம்பெருமானாரின் வடிவழகில் மூழ்கி எம்பெருமானாருக்கு மங்களாஶாஸனம் செய்கிறார்.
 • காஞ்சிக்குத் திரும்பிய இவர், கிடாம்பி ஆச்சான் திருவம்ஶத்தில் தோன்றியவரான கிடாம்பி நாயனாரை அடைந்து ஸ்ரீ பாஷ்யம் காலக்ஷேபம் கேட்கத் தொடங்குகிறார். இந்த வேளையிலே இவரை சிலர் தர்க்க வாதத்துக்கு அழைக்க, ஆசார்யன் தன்னை பகவத் விஷயத்தில் மட்டும் ஈடுபடச் சொன்னதைச் சுட்டிக் காட்டி , மறுத்துவிடுகிறார். பின் , சில நலன் விரும்பிகள் பணிக்க, வாதம் செய்து வாதிகளுக்கு தக்க விளக்கங்களைக் கொடுக்க, அவர்களும் இவரின் மேன்மை கண்டு கொண்டாடிச் செல்கிறார்கள்.
 • இவரது புத்திக் கூர்மையைக் கண்டு வியந்த கிடாம்பி நாயனார் இவரை, இவரின் உண்மையான ஸ்வரூபத்தை காட்டும் படி பணிக்க, ஆசார்யன் சொல் கேட்டு நடக்கத் திருவுள்ளம் கொண்டமையால் தனது ஆதிஶேஷ ஸ்வரூபத்தை வெளிக்காட்டுகிறார். இதனைக் கண்டு கிடாம்பி நாயனார் தானும் பரவஶித்து இவர் பால் மேலும் பரிவு காட்டத் துவங்குகிறார். ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபங்களை நன்கு கேட்டறிந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்யனிடம் விடை பெற்றுக் கொண்டு திருவரங்கத்திற்குத் திரும்புகிறார்.
 • திருவரங்கம் திரும்பிய அழகிய மணவாள பெருமாள் நாயனாரை கண்டு திருவுள்ளம் பூரித்த அரங்கன், இவரைத் திருவரங்கத்திலேயே இனி எழுந்தருளி இருக்கும் படியும், இனி மேலும் யாத்திரைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் நியமித்தார்.
 • இந்தத் தருவாயில், இவரின் சில உறவினர்கள் சில ஆஶௌசங்களை இவரிடம் தெரிவிக்க, இவைகள் காலக்ஷேப கைங்கர்யங்களுக்கு இடையூறுகளாக இருந்தமையால், ஆழ்வார்திருநகரியில் இவருடன் திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளில் ஸத்விஷயம் பயின்றவரான ஶடகோப யதியிடம் ஸன்யாஸம் பெற்றுக்கொள்கிறார். பிறகு இதை பெரிய பெருமாளிடம் தெரிவிக்க, பெரிய பெருமாள் பிற்காலத்தில் தனது ஆசார்யன் திருநாமத்தையே தான் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால், அழகிய மணவாள முனி என்ற திருநாமத்தையே இவருக்குச் சாற்றி, காலக்ஷேபம் ஸாதித்துக் கொண்டு தங்குவதற்கு பல்லவராயன் மடத்தையும் அளித்தருளினார். உத்தம நம்பி தலைமையில் அணைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் பல்லவராயன் மடத்திற்கு எழுந்தருளி “மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றண்டிரும்” என்று இவருக்குப் பல்லாண்டு பாடினர் .
 • பொன்னடிக்கால் ஜீயர் சுவாமி தலைமையில் சீடர்கள் மடத்தை புதுப்பிக்க, பிள்ளை உலகாரியன் திருமாளிகையிலிருந்து மண் கொணரப்பட்டுத் திருமலை ஆழ்வார் என்ற ஒரு அழகான மண்டபம் கட்டப் படுகிறது. அல்லும் நன் பகலும் இந்த மண்டபத்தில் எழுந்தருளி இருந்து மணவாள மாமுனிகள் தானும் ஈடு, மற்ற ப்ரபந்தங்களின் உரைகள், எம்பெருமானாரின் வைபவம், ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்திரம் உள்ளிட்டவைகளைச் சீடர்களுக்கும் அபிமானிகளுக்கும் காலக்ஷேபம் செய்து காலத்தைக் கழிக்கிறார்.
 • இவரது வைபவங்கள் காட்டுத்தீ எனப் பரவ, பலர் இவரது திருவடிகளை வந்தடைகின்றனர் . திருமஞ்சனம் அப்பா , அவரின் திருகுமாரத்தியான ஆய்ச்சி, பட்டர்பிரான் ஜீயர் போன்றோர் இவரின் சீடர்கள் ஆகிறார்கள்.
 • திருவரங்கத்திற்கு அருகாமையில் உள்ள வள்ளுவ ராஜேந்திரம் என்னும் ஊரிலிருந்து சிங்கரையர் என்னும் ஒரு ஸ்வாமி பெரிய ஜீயரான மணவாள மாமுனிகளின் மடத்திற்கு தனது நிலங்களில் விளைந்த காய்களை ஸமர்ப்பிக்க, இதனால் திருவுள்ளம் உகந்த பெரிய பெருமாள் தானும் சிங்கரையர் கனவில் வந்து தோன்றி மணவாள மாமுனிகள் தனது திருவனந்தாழ்வானே அன்றி வேறாரும் அல்லர் என்பதை உணர்த்தினார். பெரிய பெருமாள் திருவுள்ளப்படி பெரிய ஜீயரைத் தஞ்சமாகப் புகச் சிங்கரையர் திருவரங்கம் சென்றடைந்து கோயில் கந்தாடை அண்ணன் திருமாளிகையில் தங்கி அவரிடம் இவற்றை தெரிவித்தார். இதையே நினைத்துக் கொண்டு திருக்கண்வளர்ந்த கோயில் அண்ணன் கனவிலே எம்பெருமானார் முதலியாண்டானோடே தோன்றி, தாமே மணவாள மாமுனிகள் என்று உணர்த்தி மேலும் அண்ணனையும் உத்தம நம்பியையும் செல்வ மணவாள மாமுனிகளிடம் தஞ்சம் புக உத்தரவிட்டார். கனவிலிருந்து விழித்த கோயில் கந்தாடை அண்ணன் தானும் தமது பரிவாரத்துடன் , பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடு (பரிந்துரை) மணவாள மாமுனிகளின் திருவடிகளை அடைய , மணவாள மாமுனிகள் தானும் போர உகந்து இவர்களை ஏற்று பஞ்ச ஸம்ஸ்காரம் செய்துவைக்கிறார்.
 • ஆய்ச்சியாரின் திருமகனாரான அப்பாய்ச்சியாரண்ணா மணவாள மாமுனிகளை ஆஶ்ரயிக்க வேண்டும் என்று திருவுள்ளம் கொள்ள, மணவாள மாமுனிகள் தனது ப்ராண ஸுஹ்ருதான பொன்னடிக்கால் ஜீயரை தனது ஸிம்மாசனத்தில் அமர்த்தி தனது திருவாழி திருச்சங்குகளையும் அளித்து அப்பாய்ச்சியாரண்ணாவிற்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்விக்கச் சொன்னார். முதலில் மறுக்க முற்பட்டாலும் ஆசார்யன் திருவுள்ளத்தை ஏற்றாக வேண்டியபடியால் பொன்னடிக்கால் ஜீயர் தானும் அப்பாய்ச்சியாரண்ணாவிற்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்கிறார்.
 • மணவாள மாமுனிகளின் பூர்வாஶ்ரம திருக்குமாரரான எம்மையன் இராமானுசன் ஆழ்வார் திருநகரியில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மணவாள மாமுனிகள் பால் இவர் கொண்ட ஈடுபாட்டினால் பின்னாட்களில் ஜீயர் நாயனார் என்று வழங்கப்படுகிறார்) மற்றும் பெரியாழ்வார் அய்யன் என்னும் இரண்டு திருகுமாரர்களைப் பெற்றெடுத்தார்.
 • நம்மாழ்வாருக்கு மங்களாஶாஸனம் செய்யத் திருவுளம் கொண்ட பெரிய ஜீயர் , பெரிய பெருமாளின் உத்தரவு பெற்றுக் கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரையை அடைந்து தனது நித்ய கர்மங்களைச் செய்து பின்னர் முறையே பவிஷ்யதாசார்யனையும், திருவாய்மொழிப் பிள்ளையையும் மற்றும் அவரது திருவாராதனப் பெருமாளான இமையோர் தலைவனையும் , நம்மாழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் மங்களாஶாஸனம் செய்தார்.
 • பின்னர் ஆசார்ய ஹ்ருதயத்தின் ஒரு சூர்ணிகையில் சந்தேகம் ஏற்பட அதற்குத் தெளிவு வேண்டி, மணவாள மாமுனிகள்  திருவாய்மொழிப் பிள்ளையுடன் பயின்ற திருநாராயணபுரத்து ஆயியை காணப் புறப்படுகிறார். இந்நிலையில் இவரைக் காண திருவுள்ளம் கொண்ட ஆயி திருநாராயணபுரத்திலிருந்து புறப்பட்டுவர இருவரும் ஆழ்வார்திருநகரியின் எல்லையில் சந்திக்கின்றனர். ஆயியை கண்டதும் இவர் ஒரு தனியன் ஸாதித்து அவரைக் கொண்டாட அவரோ இவரை எம்பெருமானாரோ அல்ல காரிமாறனோ அல்ல பொலிந்து நின்ற பிரானோ என்று பாடி பரவஶித்தார் . சிலகாலம் கழித்து ஆயி திருநாராயணபுரத்திற்கு மீளப் பெரிய ஜீயர் தானும் ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளி இருந்தார்.
 • இதனிடையே மணவாள மாமுனிகளின் பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் இவரது மடத்திற்குத் தீ வைக்க, ஒரு பாம்பின் உருக்கொண்டு மடத்தை விட்டு வெளியேறி ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே நின்று கொண்டு நடப்பதைக் கண்டார் பெரிய ஜீயர். இதனை அறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க முயன்ற அரசனைக் தடுத்து தன்பால் குற்றம் செய்தவர்களைக் காத்தருளினார் மாமுனிகள். இவ்வாறாக இவரின் பெரும் கருணையை உணர்ந்த அவர்களும் தமது குற்றத்தை உணர்ந்து, பெரிய ஜீயர் திருவடிகளைத் தஞ்சம் அடைந்தார்கள். லோக குருவான பெரிய ஜீயரின் வைபவங்களை கண்டு உருகிய அரசனும் பெரிய ஜீயரிடத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து ஆழவார் ஆதிநாதன் ஸந்நிதிக்கும் திருக்குறுங்குடி ஸந்நிதிகளுக்கும் பல தொண்டுகளை ஜீயர் திருவுள்ள இசைவிற்குச் செய்தார் .
 • மாமுனிகள் திருவரங்கம் திருப்பதிக்குத் திரும்பி மீண்டும் தனது கைங்கர்யங்களைத் தொடர்ந்தார். இந்நிலையில் எறும்பி என்னும் கிராமத்திலிருந்து எறும்பியப்பா என்னுமவர் கோயில் கந்தாடை அண்ணனுடன் வந்து பெரிய ஜீயரைச் ஸேவித்துப் பின் ததியாராதனையில் பிரஸாதம் பெற்றுக் கொள்ளாது தனது கிராமத்திற்குத் திரும்பி விட்டார். இதனால் எறும்பியப்பாவின் திருவாராதன பெருமாளான சக்கரவர்த்தித் திருமகனார் இவர் திருவாராதனம் செய்ய முயலுகையில் திருக்காப்பை நீக்காமலேயே இருந்து விட்டார். பின்னர் பெருமாள் எறும்பியப்பாவிடம் தனது இளையபெருமாளான செல்வ மணவாள மாமுனிகளிடம் எறும்பியப்பா அபசாரபட்டதாகவும், பெரிய ஜீயரிடத்தில் பிரஸாதம் பெற்றாலே அன்றித் தான் திருக்காப்பை நீக்கப் போவதில்லை என்றும் ஸாதிக்க, திருவரங்கம் விரைந்த எறும்பியப்பா கோயில் கந்தாடை அண்ணன் புருஷகாரத்துடன் பெரிய ஜீயரைத் தஞ்சம் அடைந்தார். பின்னர் எறும்பிக்கு மீண்ட எறும்பியப்பாவிற்கு தனது கோயிலாழ்வாரின் திருக்காப்பை நீக்கி எம்பெருமான் அருள் புரிந்தார். பின்னர் திருவரங்கத்தில் பெரிய ஜீயரிடம் இருந்த இவர்க்கு, தனது தகப்பனாரின் அழைப்பின் பெயரில் மாமுனிகள் இவர்க்கு எறும்பிக்கு விடை கொடுக்க, ஆசார்யனை பிரிந்த துயர் தாளாது பூர்வ தினசர்யை உத்தர தினசர்யை என்று மணவாள மாமுனிகளின் அன்றாடச் செயல்களை அனுபவிக்கும் இரண்டு பகுதிகளைக் கொண்ட ப்ரபந்தத்தை இவர் அனுகிரஹித்தார்.
 • இளம் வயதிலேயே பாண்டித்ய பேரறிவாற்றலை வெளிப்படுத்திய கந்தாடை நாயனை ஜீயர் தானும் பாராட்டினார் .
 • அப்பிள்ளை மற்றும் அப்பிள்ளார் பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடே பெரிய ஜீயர் திருவடிகளை தஞ்சம் அடைந்தனர்.
 • ஒருநாள், திருவரங்கத்தில் கைங்கர்யங்களில் முக்கியமான பங்கு வகித்துப் பெரிய பெருமாளிடம் திருவாலவட்டம் வீசித் தொண்டாற்றிவந்த உத்தம நம்பி , மணவாள மாமுனிகள் திருவரங்கன் மங்களாஶாஸனத்திற்கு வந்த வேளையிலே அவரை விரைவாகக் கிளம்பச் சொல்ல மணவாள மாமுனிகளும் அவ்வாறே செய்தார். இதனைத் தொடர்ந்து உத்தம நம்பி சற்றே கண் அயர்ந்த வேளையிலே பெரிய பெருமாள் தானும் அவரது கனவில் தோன்றி தனது திருவனந்தாழ்வானும் மணவாள மாமுனிகளும் வேறல்ல என்பதை உணர்த்தத் தான் செய்த அபசாரத்தை பொருத்தருளும்படி பெரிய ஜீயர் மடத்திற்கு விரைந்து பெரிய ஜீயரை பிரார்த்திக்கலானார் உத்தம நம்பி. அன்று தொட்டுப் பேரன்போடு பெரிய ஜீயர் திருவடிவாரங்களில் தொண்டாற்றி வந்தார் உத்தம நம்பி.
 • ஶடகோபக் கொற்றி என்னும் அம்மையார் ஆய்ச்சியாரிடம் அருளிச் செயல்களைக் கற்றுக் கொண்டு வந்தார். ஒரு பகல் பொழுதில் மணவாள மாமுனிகள் எழுந்தருளியிருந்த அறையின் சாவி துவாரம் வழியாக உள்ளே பார்க்க முயன்ற ஶடகோபக் கொற்றி , மணவாள மாமுனிகள் தனது ஆதிஶேஷ ஸ்வரூபத்துடன் உள்ளே இருப்பதைக் கண்டு திகைத்தார். வெளியிலே கேட்ட சத்தத்தைத் தொடர்ந்து காரணத்தை விசாரித்த மணவாள மாமுனிகளிடம் தான் கண்டதை அம்மையார் கூற, புன்முறுவலுடன் கண்டதை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படி பெரிய ஜீயர் அறிவுறுத்தினார்.
 • ரஹஸ்ய கிரந்தங்களுக்கு உரை எழுதத் திருவுள்ளம் கொண்ட மணவாள மாமுனிகள் முமுக்ஷுப்படி, தத்வ த்ரயம் மற்றும் ஸ்ரீ வசனபூஷணத்திற்கு வேதம், வேதாந்தம், புராணங்கள், அருளிச் செயல் போன்றவைகளைக் கொண்டு பரக்க உரை எழுதினார். இவற்றைத் தொடர்ந்து இராமானுச நூற்றந்தாதி, ஞான ஸாரம் மற்றும் ஆசார்யனேயே அனைத்துமாய் உணர்த்தக்கூடிய ப்ரமேய ஸாரம் உள்ளிட்டவைகளுக்கு உரை அருளிச்செயதார் .
 • திருவாய்மொழியின் சொற்களையும் பொருளையும் தொகுத்துச் சுருங்க அளிக்கும்படிக்குச் சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பெரிய ஜீயரை ப்ரார்த்திக்கத் திருவாய்மொழி நூற்றந்தாதி என்னும் வெண்பா அமைப்பிலுள்ள நூறு பாசுரங்களை சாதித்தார். வெண்பா என்பது கற்க எளிமையாக இருப்பினும் அமைக்கக் கடினமான ஒன்று. அதிலும் இந்தத் திருவாய்மொழி நூற்றந்தாதியில் ஒரு பதிகத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களே பாசுரத்தின் முதல் மற்றும் இறுதிச் சொற்களாய் வைத்து, முதல் இரண்டு வரிகளில் பதிகத்தின் பொருளையும் அடுத்த இரண்டு வரிகளில் நம்மாழ்வார் விஷயமான கொண்டாட்டத்தையும் வைத்து அமைத்துள்ளார்.
 • பூர்வர்கள் ஸாதித்த விஷயங்கள் அனைத்தையும் பதிவிட்டுச் ஸாதிக்கும் படி சில ஸ்ரீவைஷ்ணவர்கள் ப்ரார்த்திக்க, மாமுனிகள் தானும் ஆழ்வார்கள் திருநக்ஷத்ரம் மற்றும் திருவவதார ஸ்தலங்கள், திருவாய்மொழியின் ஏற்றம், திருவாய்மொழி வ்யாக்யானங்களின் ஏற்றம், அவைகளைச் ஸாதித்தவர்களின் விவரங்கள், பிள்ளை உலகாரியனின் திருவவதாரம் மற்றும் ஏற்றம், சீர் வசனபூஷணத்தின் ஏற்றம் , ஆசார்யனுக்கு ஆற்றும் தொண்டின் ஏற்றம் போன்றவற்றை எடுத்துரைக்கக் கூடிய ப்ரபந்தமான உபதேஶ ரத்தின மாலையைச் ஸாதித்தார்.
 • மாயவாதிகள் சிலர் இவரை வாதத்திற்கு அழைக்க, வாதம் செய்வதில்லை என்ற தனது கோட்பாட்டில் இருந்து கொண்டு அந்த அழைப்பை மறுத்து தனது சீடரான வேடலைப்பையை வாதத்திற்கு அனுப்பி வெற்றி பெறச் செய்தார் . ஆயினும் அதனைத் தொடர்ந்து வேடலைப்பை தனது ஊருக்கு விடைபெற்றுக் கொண்டார்.
 • இதனிடையே காஞ்சிபுரத்திலிருந்து பெரும் வித்வானான பிரதிவாதி பயங்கரம் அண்ணா திருவேங்கடமுடையான் மீது தான் கொண்ட பெரும் அன்பினால் தனது தேவிகளோடே அப்பன் பொன் மலையை வந்து அடைந்து திருமலையிலே தீர்த்தம் சுமந்து கைங்கர்யம் செய்து வந்தார். இவ்வாறிருக்க திருவரங்கத்திலிருந்து ஒரு அடியார் திருவேங்கடம் வந்தடைந்து பிரதிவாதி பயங்கரம் அண்ணாவைச் சந்தித்து, இவர் அப்பனுக்கு தீர்த்தம் எழுந்தருளப்பண்ணும் வேளையிலே திருவரங்கத்தில் நடக்கும் விஶேஷங்களைக் கேட்க , மணவாள மாமுனிகள் எழுந்தருளியிருந்து காலக்ஷேபம் ஸாதிக்கும் வைபவத்தை விரிவாகக் கூறுகிறார். மணவாள மாமுனிகளின் வைபவத்தைக் கேட்டு மெய்மறந்து தீர்த்தம் கொண்டு வரும் வேளையிலே காலதாமதம் ஆக, தீர்த்தப் பரிமளம் சேர்ப்பதற்கு முன்னராகவே தீர்த்தம் ஸமர்ப்பிக்கப்பட்டு விடுகிறது. பரிமளமின்றி தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டதை உணர்ந்து பரிமளங்களை எடுத்துக் கொண்டு ஸந்நிதிக்கு விரைந்த வேளையிலே அப்பன் தானும் என்றைக்கும் இல்லாது இன்று தீர்த்தம் நன்றாகவே மணந்தது என்று திருவாய்மலர்ந்தருள, இதனால் பெரிய ஜீயர் வைபவத்தை உணர்ந்த அண்ணா தானும் அப்பனிடம் விடைபெற்றுக்கொண்டு பெரிய ஜீயரை அடைய பெரிய கோயில் சென்றார். பெரிய ஜீயர் மடத்தில் பிரதிவாதி பயங்கரம் அண்ணா நுழையும் வேளையிலே, பெரிய ஜீயர் திருவாய்மொழியில் “ஒன்றும் தேவும்” பதிக்கத்திற்குக் காலக்ஷேபம் அருளிக் கொண்டிருக்க , பெரிய ஜீயர் அனைத்து ஶாஸ்த்ரார்த்தங்களைக் கொண்டு விளக்குவதைக் கண்டு அண்ணா ப்ரமிக்கலானார் . இதனைத் தொடர்ந்து 3 வது பாசுரத்தின் அர்த்தம் பெற வேண்டுமானால் அதற்கு ஓராண் வழி ஆசார்ய சம்பந்தம் மூலமாக ஆழ்வார் சம்பந்தம் வேண்டும் என்று காலக்ஷேபத்தை நிறுத்தி விடுகிறார் மணவாள மாமுனிகள். இதனைத் தொடர்ந்து அண்ணா பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்யச் சென்ற வேளையிலே அர்ச்சக முகமாய் பெரிய பெருமாள் அண்ணாவை மணவாள மாமுனிகளை ஆஶ்ரயிக்கும் படி நியமிக்க அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயர் புருஷகாரத்தோடே ஆஶ்ரயித்து மணவாள மாமுனிகளோடே சில காலம் திருவரங்கம் திருப்பதியில் அண்ணா எழுந்தருளியிருந்தார்.
 • மீண்டும் மணவாள மாமுனிகள் திருவேங்கடத்தானுக்குப் பல்லாண்டு பாட யாத்திரை மேற்கொண்டார். திருவேங்கடம் அடையும் வழியிலே காஞ்சிபுரம் சென்று தேவப் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிப் பின் சில காலங்கள் அங்கேயே எழுந்தருளி இருந்து அடியார்களைத் திருத்தி பணிகொண்டார். பின் அப்பாச்சியாரண்ணாவைத் தன் பிரதிநிதியாய் காஞ்சியிலே எழுந்தருளியிருந்து அடியார்களைத் திருத்திப் பணிகொள்ள நியமித்தார். பிறகு திருக்கடிகை, எறும்பி, திருப்புட்குழி வழியாகத் திருவேங்கடத்தை வந்தடைந்தார் .
 • திருவேங்கடமுடையானை மங்களாஶாஸனம் செய்துவிட்டு பின்னர் எம்பெருமானாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருவேங்கடம் கோயில் பெரிய கேள்வி அப்பன் ஜீயருக்கு துணையாய் திருவேங்கடம் கோயில் சிறிய கேள்வி அப்பன் எனும் ஒரு ஜீயர் ஸ்வாமியை நியமித்தார், பிறகு திருவேங்கடத்திலிருந்து திருஎவ்வுளூர் சென்று வீரராகவனையும், திருவல்லிக்கேணி சென்று வேங்கட கிருஷ்ணனையும் மற்ற எம்பெருமான்களையும் மங்களாஶாஸனம் செய்தார் . பின்னர் மதுராந்தகத்திலே பெரிய நம்பிகள் இளையாழ்வார்க்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்த இடத்தைச் சேவித்துத் திருவாலி-திருநகரியைச் சென்றடைந்தார். அங்கே மங்கைவேந்தனான திருமங்கை ஆழ்வாரின் வடிவழகில் மயங்கி ஆழவார்க்கு வடிவழகு பாசுரம் சமர்ப்பித்து அங்கிருந்த எம்பெருமான்களுக்கு மங்களாஶாஸனம் செய்தார். பின் திருக்கண்ணபுரம் சென்று ஸர்வாங்க ஸுந்தரனான அவ்வூர் எம்பெருமானைக் கைதொழுது அங்கு மங்கைவேந்தனுக்கு ஒரு ஸந்நிதியை அமைத்துவிட்டுத் திருவரங்கத்திற்கு திரும்பினார்.
 • தாம் முன்னரே பணித்த படிக்கு அப்பாச்சியார் அண்ணாவைக் காஞ்சிபுரம் செல்லப் பணிக்க , தனது பிரிவால் துன்புறுதலை உணர்ந்து மணவாள மாமுனிகள், தனது சொம்பு ராமானுஜத்தைக் கொண்டு தனது இரண்டு திருமேனிகளை செய்து அதில் ஒன்றை அப்பாச்சியார் அண்ணாவிடமும் ஒன்றைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் கொடுத்தருளினார். இந்தத் திருமேனிகளை இன்றளவும் சிங்கபெருமாள் கோயில் முதலியாண்டான் திருமாளிகையிலும், நாங்குநேரி வானமாமலை மடத்திலும் நாம் சேவிக்கலாம். மேலும் தனது பெருமாளான “என்னைத் தீமனம் கெடுத்தாய்” – அவரையும் அப்பாச்சியார் அண்ணாவிற்கு அருளினார். இந்த எம்பெருமானையும் நாம் சிங்கப்பெருமாள் கோயிலிலே இன்றளவும் சேவிக்கலாம் .
 • மணவாள மாமுனிகள் பிரதிவாதி பயங்கரம் அண்ணாவை ஸ்ரீ பாஷ்ய ஆசார்யனாகவும், கோயில் கந்தாடை அண்ணன் மற்றும் ஸுத்த ஸத்வம் அண்ணனை பகவத் விஷய ஆசார்யனாகவும் நியமித்தார். மேலும் கந்தாடை நாயனை ஈடு 36000படிக்கு அரும்பதம் ஸாதிக்குமாறு நியமித்தார்.
 • மணவாள மாமுனிகளிடமிருந்து திருவாய்மொழியின் விஶேஷ அர்த்தங்களைத் தான் எவ்வித இடையூறுகளும் இன்றிக் கேட்க வேண்டும் என்ற ஏக்கமும் , மணவாள மாமுனிகளைத் தனக்கு ஆசார்யனாகப் பெற வேண்டும் என்ற திருவுள்ளமும் பெரிய பெருமாளுக்கு ஏற்பட, ஒரு பவித்ரோத்ஸவ சாற்றுமறை நன்னாளிலே, மங்களாஶாஸனம் செய்யத் திருப்பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருளிய மணவாள மாமுனிகளை அங்கே எழுதருளியிருந்த நம்பெருமாள் அனைத்து கைங்கர்யபரர்கள் , ஜீயர் ஸ்வாமிகள் போன்றோர் முன்னிலையில் , ஈடு 36000த்தின் வ்யாக்யானங்களைக் கொண்டு நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களைத் தனக்குக் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்று நியமித்தார். இந்தக் காலக்ஷேபம் எந்த விதமான இடையூறுகளும் இடைஞ்சல்களும் இன்றி நடக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனை மணவாள மாமுனிகள் பெருமிதத்தோடும் , இப்பணிக்குத் தன்னைப் பெரிய பெருமாள் தேர்ந்தெடுத்ததை மிக நைச்யத்தோடும் (தன்னடக்கத்தோடும்) ஏற்று மகிழ்ந்தார்.
 • இதனைத் தொடர்ந்து ,அடுத்த நாள் மணவாளமாமுனிகள் பெரிய பெருமாள் ஸந்நிதி துவாரபாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள் தனது தேவிமார்களோடும், ஸேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி , 24000 படி, 12000 படி உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப் பதபதார்த்தம் (சொல்) இது என்றும், ஶ்ருதி, ஸ்ரீபாஷ்யம், ஶ்ருதப்ரகாஶிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம் போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விஶதமாக நெய்யிடை நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம் ஸாதித்து வந்தார். இறுதியிலே சாற்றுமறைக்கான தினம் ஆனி திருமூலத்தன்று அமைகிறது. இதனைத் தொடர்ந்து நம்பெருமாள் அரங்கநாயகம் என்ற சிறு பிள்ளையின் வடிவில், மண்டபத்தில் உள்ளோர் தடுத்தும், பெரிய ஜீயர் திருமுன்பே வந்து தோன்றி “ஸ்ரீஶைலேஶ தயாபாத்ரம் ” என்று ஸாதித்து மேலும் ஸாதிக்குமாறு கேட்க “தீபக்த்யாதி குணார்ணவம்” என்றும் மேலும் ஸாதிக்கப் பணிக்கும் பொழுது “யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முனிம் ” என்று முடித்து ஓடி சென்றுவிட்டார். இந்த தனியன் ஶ்லோகத்தை ஓலைப்படுத்தி அச்சிறுவனை மீண்டும் வாசிக்கக் கூறுகையில், அச்சிறுவனால் அதைப் படிக்க இயலாமையைக் கண்டு அனைவரும் முன்னர் வந்த சிறுவன் நம்பெருமாளே அன்றி ஸாதாரண பாலகன் அல்லன் என்று உணர்ந்தனர். நம்பெருமாள் இவ்வாறாக ஆசார்யனுக்குத் தனியன் ஸமர்பித்ததனைத் தொடர்ந்து அந்தத் தனியனை பட்டோலைப் படுத்தி பெரிய பெருமாள் திருமுன்பே ஸமர்ப்பிக்கையிலே, எம்பெருமான் அனைத்து திவ்யதேஶ விலக்ஷணர்களினாலும் அருளிச்செயல் தொடங்குவதற்கு முன்னரும் அருளிச்செயல் ஸாதித்த பின்னரும் இந்தத் தனியன் அனுஸந்திக்க படவேண்டியது என்று நியமிக்க ஸேனை முதல்வரிடமிருந்து அனைத்து திவ்ய தேஶ விலக்ஷணர்களுக்கும் ஸ்ரீமுகம் அனுப்பப்பட்டது . இந்த வேளையிலே , ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஆணைக்கிணங்க மணவாள மாமுனிகளைக் கொண்டாடும் ஒரு வாழி திருநாமத்தை அப்பிள்ளை ஸாதித்தார். மணவாள மாமுனிகளின் ஒப்பற்ற இந்த வைபவம் காட்டு தீ போல் அனைத்து திக்குகளிலும் பரந்தது .

 • மணவாள மாமுனிகளின் பெருமைகளை நமக்கு உணர்த்தும் வகையில் திருவேங்கடமுடையான், திருமாலிரும்சோலை அழகர் மற்றும் பத்ரீ நாராயணன் தானும் இந்தத் தனியனை வெளியிட்டு இதனை அனுஸந்திக்க நியமிக்கிறார்கள்.
 • மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்தில் வட நாட்டு திவ்யதேஶங்களின் நினைவு வர, இவரின் சார்பில் இவரது ஶிஷ்யர்கள் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
 • தனது திவ்ய பாதுகைகளை மணவாள மாமுனிகள் எறும்பியப்பாவிற்கு தந்து அருளுகிறார்.
 • பின்னர் தனது திருவாராதன பெருமாளான அரங்கநகரப்பனைப் பொன்னடிக்கால் ஜீயரிடம் அளித்து, வானமாமலையில் ஒரு மடத்தை நிறுவி அங்கே தெய்வநாயகனுக்குக் கைங்கர்யம் செய்து வருமாறு பணிக்கிறார்.
 • மணவாளமாமுனிகள் பாண்டியநாட்டு யாத்திரையை மேற்கொள்கிறார் இம்முறை அவ்வூர்களை ஆண்டு வந்த சிற்றரசனான மஹாபலி வாணநாத ராயன் இவரைத் தஞ்சம் அடைந்து , பெரிய ஜீயரின் திருவுள்ளப்படிப் பல திவ்யதேஶ கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து வருகிறான்.
 • மதுரைக்கு செல்லும் வழியிலே ஒரு புளியமரத்தின் அடியில் தங்கி ஒய்வு எடுக்கிறார். பின் மணவாள மாமுனிகள் புறப்படும் வேளையிலே அடியார்கள் வேண்ட, அதை உகந்து தானும் அம்மரத்தை தொட்டு அதற்குப் பெரிய வீடளிக்கிறார். பின் எம்பெருமான்களுக்கு பல்லாண்டு பாடிவிட்டு திருவரங்கம் மீளுகிறார்.
 • தன் சீடர்கள் மூலமாக பல கைங்கர்யங்களைத் தானும் செய்து முடிக்கிறார். மேலும் திருமாலிரும்சோலை அழகருக்குக் கைங்கர்யம் செய்ய ஒரு ஜீயரை நியமித்து அங்கு அனுப்பிவைக்கிறார்.
 • பெரியவாச்சான் பிள்ளை, அருளிச் செயலுக்குச் செய்த வ்யாக்யானங்களிலிருந்து பெரியாழ்வார் திருமொழியின் சில பகுதிகள் காணாமல் போக, அவற்றுக்குச் சரியாகத் தொலைந்த வார்த்தைகள் வரை வ்யாக்யானம் செய்து அருளுகிறார்.
 • நாளடைவில் மணவாள மாமுனிகள் நோவு ஸாற்றிக்கொள்கிறார் (உடல் நலம் குன்றி விடுகிறது) ஆயினும் எழுதிக் கொண்டு வருகிறார். ஆசார்ய ஹ்ருதயத்திற்கு உரை எழுதுகையில் தன்னை மிகவும் வருத்திக் கொண்டு எழுதுகிறார். இவ்வாறு தன்னை வருத்திக் கொள்வதற்குக் காரணம் என்ன என்று ஶிஷ்யர்கள் வினவியதற்கு, இதனை வரும் ஸந்ததியினர் அறிவதற்காகத் தாம் மேற்கொள்வதாகச் ஸாதித்தார்.
 • மணவாளமாமுனிகளுக்கு தனது திருமேனியை விடுத்து திருநாட்டிற்கு எழுந்தருளவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிநிற்க , எம்பெருமானாரிடம் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி ப்ரார்த்தித்து உருகி ஆர்த்தி ப்ரபந்தத்தை அருளிச் செயதார். ஏராரும் எதிராசனாக உதித்திருந்தும் இதனைச் செய்ததற்குக் காரணம் இவ்வாறே தான் நாம் அனைவரும் கேட்கவேண்டும் என்பதை நமக்கு உணர்த்தும் பொருட்டேயாம்.
 • இறுதியில் லீலா விபூதியை விட்டு புறப்படத் தான் திருவுள்ளம் பூண்டார் பெரிய ஜீயர். ஓர் முறை அருளிச் செயல்களைக் கேட்டு அனுபவிக்கவேண்டும் என்று இவர் திருவுள்ளம் கொள்ள அதனை பக்தியோடும் பெருத்த மையலினோடும் அடியார்கள் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து விஶேஷமான ததீயாராதனையும் செய்து வைத்து அனைவரிடமும் அபராத க்ஷாமணம் கேட்டு நிற்க, சூழ்ந்த அடியார்கள் செல்வ மணவாள மாமுனிகளைக் குற்றொமொன்றும் இல்லாதவர் என்று கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் பெரிய பெருமாளின் கைங்கர்யங்களைச் செவ்வனே அன்புடனும் கவனத்துடனும் செய்து கொண்டுவருமாறு நியமித்தார்.
 • இதனை அடுத்து “பிள்ளை திருவடிகளே சரணம்” என்றும் “வாழி உலகாசிரியன் ” என்றும் “எம்பெருமானார் திருவடிகளே சரணம் ” என்றும் அனுஸந்தித்து , எம்பெருமானைக் காணவேண்டும் என்ற மையல் பெருகத் தனது நலமுடைய கருணை விழிகளை மலரத் திறந்து எழுந்தருளியிருக்க, அம்மாத்திரமே எம்பெருமான் கருடன் மீது ஸேவை ஸாதித்துப் பெரிய ஜீயரை தன்னடிச்சோதியில் சேர்த்துக் கொண்டான். கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் துயரம் தாளாது வேரற்ற மரம் போல் சாய்ந்து விழுந்தனர். பெரிய ஜீயர் திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு அவர் பிரிவைத் தானும் தாளமுடியாத படியினால் லட்சுமிநாதனான பெரிய பெருமாளும் போகத்தை மறுத்துவிட்டார். பின்னர் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு, பெரிய பெருமாளின் ஆணைக்கு இணங்க, ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைப் பெரிய பெருமாளின் ப்ரம்மோத்ஸவத்தை காட்டிலும் சிறப்பாகச் செய்வித்தனர்.
 • வடநாட்டு யாத்திரையிலிந்து திரும்பிய பொன்னடிக்கால் ஜீயர் தாமும் ஆசார்யனின் சரம கைங்கர்யங்களைச் செவ்வனே செய்து முடிக்கிறார்.

மணவாளமாமுனிகளின் உபதேசங்கள் (ஞான அனுஷ்டான பூர்த்தி)

 • ஒரு முறை இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அதே சமயம் இரண்டு நாய்களும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்தன . இந்நிலையில் மணவாள மாமுனிகள் அவ்விரு நாய்களையும் கண்டு “நீங்கள் இருவரும் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் போல் ஸ்ரீ வசனபூஷணம் கற்றிருக்கிறீர்களோ, இத்தனைச் செருக்குடன் இருக்க ?” என்று கேட்க, அம்மாத்திரத்திலேயே அவ்விருவரும் தங்கள் பிழையை உணர்ந்து மணவாள மாமுனிகள் பொன்னடியில் மன்னிப்பு வேண்டி அன்று தொடங்கி ஸாத்விகர்களாய் இருந்தனர்.
 • ஒருமுறை வட தேஶத்திலிருந்து ஒருவர் இவரிடம் சில பணத்தை ஸமர்ப்பிக்க, அது நேரான வழியில் ஸம்பாதித்ததல்ல என்பதை புரிந்துக்கொண்ட பெரிய ஜீயர், அதனை திருப்பித்தந்து விடுகிறார். பொருள் மீது அறவே ஆசை இன்றி, ஸ்ரீவைஷ்ணவர்கள் கொடுக்கும் ஸமர்பணைகளையே கைங்கர்யத்திற்கும் ஏற்றுக்கொண்டார்.
 • ஒருமுறை ஒரு வயதான மூதாட்டி இவரது மடத்திற்கு வந்து தான் ஓரிரவு தங்குவதற்கு அனுமதி வேண்ட, அதை மறுத்த ஜீயர் தானும், “கிழட்டு அணிலும் மரம் ஏறும்” என்று ஸாதித்தார். அதாவது வயதான பெண்மணி தங்கினாலும் , வெளியிலுள்ளோர் மணவாள மாமுனிகளின் வைராக்கியத்தைச் சந்தேகப் பட நேரும் என்பதால் , அது போன்ற அபசாரங்களுக்கு சிறிதும் இடம் கொடுக்காது வந்தார் மணவாளமாமுனிகள்.
 • ஒரு ஸ்ரீ வைஷ்ணவ அம்மங்கார், தளிகைக்கு காய்களைத் திருத்தி கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இதனை அவர் பக்தி பாவம் இன்றி செய்வதை உணர்ந்த பெரிய ஜீயர், கைங்கர்யத்தில் ஈடுபடுவோர் முழு பாவத்துடன் ஈடுபடவேண்டும் என்பதால் தண்டனையாக அவரை 6 மாத காலம், கைங்கர்யத்தை விட்டு விலக்கினார் .
 • வரம்தரும்பிள்ளை என்ற அடியவர், மணவாள மாமுனிகளைத் தனியாக வந்து வணங்கினார். இதனைத் தொடர்ந்து பெரிய ஜீயர் எம்பெருமானிடத்திலோ ஆசார்யனிடத்திலோ ஸ்ரீ வைஷ்ணவர்கள் தனியே செல்லக் கூடாது என்றும் கூடி இருந்தே குளிர்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
 • பாகவத அபசாரம் கொடுமைமிகவாய்ந்தது என்பதை அறிவுறுத்தும் மணவாள மாமுனிகள் ஸ்ரீவைஷ்ணவர்கள் பரஸ்பரம் மரியாதை வைத்துக்கொள்வதை கண்காணித்து வந்தார்.
 • அர்ச்சகர் ஒருவர், மாமுனிகளின் சீடர்கள் தம்மை மதிப்பதில்லை என்று மணவாள மாமுனிகளிடம் தெரிவிக்க,  அர்ச்சகரை எம்பெருமானும் பிராட்டியாராகவும் காணுமாறு தன ஶிஷ்யர்களுக்கு அறிவுறுத்தினார்.
 • செல்வந்தரான ஒரு ஸ்ரீவைஷ்ணவர், மணவாளமாமுனிகளிடத்தே ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கள் யாவை என்று கேட்க, இதனை தொடர்ந்து பெரிய ஜீயர் அவற்றை நன்கு விளக்கினார். அவை இங்கே சுருங்க காண்போம், அதாவது உண்மையான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு,
  • எம்பெருமானின் திருவடிகளை தஞ்சமடைதல் மட்டும் போறாது.
  • எம்பெருமானின் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திருச்சக்கரத்தின் லாஞ்சனம் மட்டும் பெற்றுக்கொண்டால் போறாது.
  • ஆசார்யனிடத்தே பாரதந்த்ரனாய் இருத்தல் மாத்திரம் போறாது
  • பாகவதர்களுக்கு அடிமை செய்தல் மாத்திரம் போதாது
  • இந்த குணங்களோடு
   • சரியான நேரத்தில் எம்பெருமான் திருவுள்ளம் உகக்கும் கைங்கர்யங்களை செய்து வருதல் வேண்டும்.
   • ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவுள்ளபடி வந்து தங்கி தங்களுக்குப் பிடித்தவைகளைச் செய்வதற்குப் பாங்காக இல்லத்தை வைத்திருத்தல் வேண்டும்.
   • பெரியாழ்வார் “என்தம்மைவிற்கவும் பெறுவார்களே ” என்று ஸாதித்ததற்கு அனுகூலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்மை விற்பதற்கும் நாம் தயாராக இருத்தல் வேண்டும்.
  • பாகவத ஶேஷத்வத்தை வளர்த்துக்கொள்வோம் ஆகில், எம்பெருமான் நமக்கு அனைத்து ஸம்பிரதாய அர்த்தங்களும் விளங்குமாறு அருளிவிடுகிறார். நிஷ்டையில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள், தனித்து எதையும் பயிலவேண்டியது இல்லை ஏனென்றால்,அவர்கள் இருப்பதே சரம நிஷ்டையில் தான் என்பதால்.
  • கடைபிடிக்காது உபதேஶம் செய்தல் வீணான செயல். அவ்வாறு செய்தல் பதிவ்ரதையின் கடமைகளை தாஸி அறிவுறுத்துதல் போன்றுபொருந்தாத ஒன்று.
  • ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதை விட உயர்ந்ததோர் தொண்டும் அல்ல அவர்களைப் பழிப்பதை விட கொடூரமான பாவமும் அல்ல.

இவ்வாறு ஜீயர் தம் அறிவுரைகளைப் பெற்ற அந்த ஸ்ரீவைஷ்ணவர் மணவாள மாமுனிகளிடத்தே பெருத்த பக்தி கொண்டு தன கிராமம் திரும்பியும் இவரை வணங்கிக் கொண்டே இருந்தார்.

செல்வ மணவாளமாமுனிகளின் ஒப்பற்ற நிலை

எல்லையற்ற பெருமைகளின் உறைவிடமான நம் பெரிய ஜீயர் வைபவத்தை முழுவதாகக் கூறி முடிக்கவல்லார் யார்? சுருங்க கண்டோம் என்ற திருப்தி அடைவோம்.

 • பெரியபெருமாள் இவரை ஆசார்யனாக ஏற்க, ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரையின் இறுதி ஆசார்யனாக எழுந்தருளி இருந்து குருபரம்பரா ஹாரத்தை பூர்த்தி செய்கிறார் .
 • பெரிய பெருமாள் இவரின் சீடர் ஆன படியால், இவர்க்கு தனது ஶேஷ பர்யங்கத்தைச் ஸமர்ப்பித்தார். இன்றும் மணவாள மாமுனிகள் ஶேஷ பீடத்திலேயே எழுந்தருளி இருப்பதை நாம் ஸேவிக்கலாம். இதை மற்ற ஆழ்வார் ஆசார்யர்களிடத்தே காண இயலாது.
 • தனது ஆசார்யனுக்குப் பெரிய பெருமாள் தானே தனியன் செய்து, மேலும் அனைத்து கோயில்கள், மடங்கள், திருமாளிகைகள் போன்ற இடங்களில் அருளிச்செயல் ஸேவிப்பதற்கு முன்னும் பின்னும் இதனைச் ஸேவிக்க உத்தரவும் இட்டார்.
 • ஆழ்வார்திருநகரியிலே அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலத்தன்று ஆழ்வார் மணவாள மாமுனிகளுக்குத் தன்னுடைய பல்லக்கு, திருக்குடை, திருவாலவட்டம், வாத்தியங்கள் போன்றவற்றை அனுப்பிப் பின் இவரைத் தனது ஸந்நிதிக்கு வரவழைக்கிறார். இதன் பின்னரே ஆழ்வார் திருமண் காப்பு அணிந்து கொண்டு பெரிய ஜீயருக்கு பிரஸாதங்களை அளிக்கிறார்.
 • மணவாளமாமுனிகளுக்கு இன்றும் திருவத்யயனம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவருக்குச் சீடர்களோ திருக்குமாரர்களோ தாங்கள் இருக்கும் வரை திருவத்யயனம் செய்து வைப்பார்கள். இவர் விஷயத்திலோ பெரிய பெருமாளே சீடனான படியால், இன்றைக்கும் தானே தனது அர்ச்சக பரிசாரகர்கள், வட்டில், குடை போன்ற விருதுகளை அனுப்பி திருவத்யயன உத்ஸவத்தைச் சிறப்பாக நடத்திவைக்கிறார். இது பெரிய ஜீயருக்கே உரிய தனிப்பெருமை. இதனை மேலும் அனுபவிக்க இங்கே பார்க்கவும்: http://www.kaarimaaran.com/thiruadhyayanam.html.
 • தனக்கென்று எவ்வித கோலாகலங்களோ உத்ஸவங்களோ விரும்பாத பெரிய ஜீயர், திருவரங்கம் திருப்பதியிலும் ஆழ்வார்திருநகரியிலும் தனது திருமேனி மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்றே நிர்ணயித்து நம் கவனம் யாதும் எம்பெருமானிடத்திலும் ஆழ்வார் இடத்திலுமே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
 • யாரையும் கடிந்து பேசாத மென்மையான திருவுள்ளம் கொண்டவர் அழகிய மணவாள மாமுனிகள். சில இடங்களில் பூருவாசார்ய வ்யாக்யானங்களில் முன்னிற்குப் பின் முரணாக சில வார்த்தைகள் காணப்பட்டாலும், அதனைப் பெரிது படுத்தாது குற்றம் காணாது எழுந்தருளி இருந்தார்.
 • அருளிச் செயலிலேயே ஈடுபட்டிருந்த பெரிய ஜீயர், அருளிச் செயல்களையே கொண்டு வேதாந்த அர்த்தங்களை விளக்குவார். இவர் வந்து நம்மை கடாக்ஷிக்காது போயிருந்தால் ஆற்றில் கரைத்த புளியை போலே நம் ஸம்ப்ரதாயம் வீணாகி இருக்கும் .
 • பல தலைமுறைகள் பெற்ற பேற்றைப் பெற, பெரிய ஜீயர் அனைத்து வ்யாக்யானங்களையும் திரட்டித் தாமே பட்டோலைப் படுத்தினார்.
 • தன்னை நிந்தித்தோரிடமும் அபார கருணை காட்டுமவர் நம் பெரிய ஜீயர். அனைவரிடமும் மிருதுவாய் பேசுமவராம்.
 • மணவாள மாமுனிகளின் திருவடிகளைத் தஞ்சம் புகுவோம் ஆகில், விரஜை நதியைக் கடக்க உதவும் அமானவன் , நம் கையைப் பிடித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளித்தல் திண்ணம்.
 • இராமன் பெரிய பெருமாளை வணங்குவது போல், தானே எம்பெருமானாராய் இருந்தும் நாம் அறிந்து அதன் படி நடக்கவேண்டும் என்பதற்காகத் தானே எம்பெருமானர் மீது பெருத்த மையல் கொண்டு எழுந்தருளி இருந்தார். இவரைப் போல் வேறொருவர் எம்பெருமானாராய் கொண்டாடுதல் அரிது. பூருவர்கள் ஸாதித்த நேர் தன்னின் படி வாழ்ந்த இவரின் வாழ்க்கையே நம் அனைவர்க்கும் உதாரணமாம்.
 • ஒருவர் எழுந்தருளி இருந்த காலத்திலேயே பல சீடர்கள் அவரைப் பல்வகையால் கொண்டாடுதல் என்பது இவர் விஷயத்தில் மாத்திரமே நடந்தது. வேறாருக்குமின்றி மணவாள மாமுனிகளுக்கே ஸுப்ரபாதம், மங்களம், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான், பூர்வ தினசர்யை ,உத்தர தினசர்யை, வரவரமுனி ஶதகம், வரவரமுனி அஷ்டகம் இன்னும் எவ்வளவோ துதிகள் பாடப் பட்டன. இது போன்ற ஒரு கொண்டாட்டத்தை வேறொருவரிடத்தில் காண்பதரிது.

மணவாளமாமுனிகளின் தனியன்:

ஸ்ரீஶைலேஶ தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

திருவாய்மொழிப்பிள்ளையின் திருவருளுக்கு இலக்க்கானவரை, ஞானம் பக்தி வைராக்யம் போன்றவைகளின் கடலை, எம்பெருமானார் மீது பெருத்த மையல் உடையவரான அழகிய மணவாளமாமுனிகளை அடியேன் (அரங்கநகரப்பன்) வணங்குகிறேன் .

மணவாளமாமுனிகளின் வாழிதிருநாமம்:

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

(திருநாள்பாட்டு – திருநக்ஷத்ர தினங்களில் சேவிக்கப்படுவது)

செந்தமிழ்வேதியர் சிந்தைதெளிந்து சிறந்து மகிழ்ந்திடு நாள்
சீருலகாரியர் செய்தருள் நற்கலை தேசுபொலிந்திடு நாள்
மந்த மதிப் புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடு நாள்
மாசறு ஞானியர் சேர் எதிராசர் தம் வாழ்வு முளைத்திடு நாள்
கந்த மலர்ப் பொழில் சூழ் குருகாதிபன் கலைகள் விளங்கிடு நாள்
காரமர் மேனி அரங்க நகர்க்கிறை கண்கள் களித்திடு நாள்
அந்தமில் சீர் மணவாளமுனிப் பரன் அவதாரம் செய்திடு நாள்
அழகு திகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலமதெனு நாளே

இத்தோடு ஓராண் வழி ஆசார்யர்கள் வைபவத்தை அனுபவித்து முடித்து விட்டோம். முடித்தல் ஆவது இனிமையாய் முடியவேண்டுமாம். இதனாலேயே ஓராண் வழி ஆசார்ய குருபரம்பரை மணவாள மாமுனிகளிடத்தே முடிந்ததென்பர் நல்லோர். மணவாள மாமுனிகளின் வைபவத்தை விட இனியதொன்று இரண்டு விபூதிகளிலும் இல்லை என்பதைக் கற்றோர்களும் கற்க விரும்புவர்களும் கொண்டாடி ஏற்றுக்கொள்வர்.

நம் அனைவருக்கும் மூலமாகத் திகழுவது ஐப்பசியில் திருமூலமே. இதனை அனைத்து திவ்யதேஶங்களிலும் (திருவரங்கம், திருவேங்கடம், திருக்கச்சி, திருநாராயணபுரம், திருமாலிரும்சோலை, ஆழ்வார்திருநகரி, வானமாமலை முதிலியன) அடியார்கள் பெருத்த பக்தியோடு கொண்டாடி வருகிறார்கள் . அரங்கனுக்கே ஆசார்யனான இவரின் உத்ஸவங்களில் பங்கு கொண்டு இவரின் அருள் விழிக்கு இலக்காகி எம்பெருமானார் அருளுக்கு சதிராக வாழ்ந்திடுவோம்.

அடியேன் ராமானுஜ தாஸன்
எச்சூர் ஸ்ரீநிவாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/23/azhagiya-manavala-mamunigal/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

பிள்ளை லோகாசார்யர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/09/23/vadakku-thiruvidhi-pillai) வடக்குத் திருவீதிப் பிள்ளையை அனுபவித்தோம். இப்பொழுது ஓராண் வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான பிள்ளை லோகாசாரியரைப் பற்றி அனுபவிப்போம் .

பிள்ளை லோகாச்சார்யர் - ஸ்ரீ ரங்கம்

பிள்ளை லோகாசார்யர் – ஸ்ரீ ரங்கம்

திருநக்ஷத்ரம்: ஐப்பசி திருவோணம்

அவதார ஸ்தலம்: திருவரங்கம்

ஆசார்யன்: வடக்குத்திருவீதிப்பிள்ளை

ஶிஷ்யர்கள்:  கூரகுலோத்தம தாஸர், விளாஞ்சோலைப் பிள்ளை ,திருவாய்மொழிப் பிள்ளை, மணப்பாக்கத்து நம்பி ,கோட்டூர் அண்ணர், திருப்புட்குழி ஜீயர், திருக்கண்ணங்குடி பிள்ளை, கொல்லி காவல தாஸர் மற்றும் பலர்.

பரமதித்த இடம்: ஜ்யோதிஷ்குடி (மதுரை அருகிலே)

அருளிச்செய்தது: யாத்ருச்சிக படி, ஶ்ரிய:பதி படி, முமுக்ஷுப்படி, பரந்த படி, தனி ப்ரணவம், தனி த்வயம், தனி சரமம், அர்த்த பஞ்சகம், தத்வ த்ரயம், தத்வ ஶேகரம், ஸார ஸங்க்ரஹம், அர்ச்சிராதி , ப்ரமேய ஶேகரம் , ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ப்ரபன்ன பரித்ராணம், நவரத்ன மாலை, நவ வித ஸம்பந்தம், ஸ்ரீ வசன பூஷணம் மற்றும் பல

நாம் முன்னரே வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவத்தில் கண்டது போல, நம்பிள்ளையின் திருவருளால் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்குத் திருவரங்கத்திலே திருக்குமாரராய் தோன்றியவர் பிள்ளை லோகாசாரியர். அயோத்தியில் பெருமாளும் இளையபெருமாளும் போல கோகுலத்தில் கண்ணனும் நம்பி மூத்த பிரானும் போல திருவரங்கத்தில் பிள்ளை லோகாசாரியரும் அவரது திருத்தம்பியார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் வளர்ந்து வந்தனர் . இவ்விருவரும் நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்ற பெரியவர்களின் திருவருட்பார்வைக்கும் வழிகாட்டுதலுக்கும் ஒரே சமயத்தில் பாத்திரமாகும் பேற்றை பெற்றிருந்தனர். ஸத் ஸம்ப்ரதாயத்தைத் தங்களது திருதகப்பனாரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளிலே பயின்றனர். மேலும் இவ்விரு ஆசார்ய சிங்கங்களின் தனிச்சிறப்பு யாதெனில் இவ்விருவரும் தங்கள் வாழ்நாளில் நைஷ்டிக ப்ரஹ்மசர்யம் அனுட்டிக்கபோவதாய் ஶபதம் மேற்கொண்டு அதன் படி நடந்தும் காட்டினர் .

ஸம்ஸாரத்திலிருந்து பெரும் துயர் அனுபவிக்கும் ஜீவாத்மாக்களின் மீது தாம் கொண்ட பெரும் கருணையாலும் ஸ்வப்னத்தில் பெரியபெருமாள் இட்ட கட்டளையின் பேரிலும், பிள்ளை லோகாசாரியர், ஸத் ஸம்ப்ரதாயத்தின் பொருட்களை விளக்கும் பல க்ரந்தங்களைப் பெரும்பாலும் ஆசார்யன் ஶிஷ்யனுக்கு உபதேஶிக்கும் பாங்கிலே வெளியிட்டார் .

பிள்ளை லோகாசாரியர் ஸம்ப்ரரதாய ப்ரவர்த்தகர் ஆகித் தன் ஶிஷ்யர்களுக்கு ஸம்ப்ரதாயத்தை திருவரங்கத்திலிருந்து உபதேஶித்து வந்தார். மணப்பாக்கத்து நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவர் தேவப் பெருமாளிடம் சென்று புக , தேவப்பெருமாள் தாமும் அவருக்கு ஸம்பிரதாயத்தின் மிக உயர்ந்த அர்த்தங்களைக் கற்பித்து வந்தார். இவ்வாறிருக்க ஓர் நாள், பாதியிலேயே உபதேஶங்களை நிறுத்தி , மணப்பாக்கத்து நம்பியை திருவரங்கத்திற்குச் செல்லுமாறும் தாம் அவருக்கு திருவரங்கத்திலே உபதேஶங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் ஸாதித்தார். இதனைத் தொடர்ந்து நம்பி, திருவரங்கம் நோக்கி பயணித்து காட்டழகிய சிங்கர் ஸன்னிதிக்கு வந்து சேர அங்கே பிள்ளை லோகாசாரியர் கோஷ்டியை கண்டார் . ஒரு தூணிற்குப் பின்னே நின்று , பிள்ளை லோகாசாரியரின் உபதேஶங்களைக் கேட்ட நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதை கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து பிள்ளை லோகாசாரியரின் திருவடிகளில் தெண்டனிட்டு “அவரோ நீர்” என்று கேட்க, பிள்ளை லோகாசாரியர் “ஆவது எது ? ” (அதாவது, ஆமாம் இப்பொழுது அதற்கு செய்யவேண்டியது என்ன ? ) என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே அன்றி பிள்ளைலோகாசாரியர் வேறாரும் இல்லை என்பதாம்.

யதீந்த்ர ப்ரவண பிரபாவத்திலே, பிள்ளைலோகாசாரியர் தேவப் பெருமாளே என்று எடுத்துக் காட்டும் வேறொரு நிகழ்ச்சியும் காட்டப்பட்டுள்ளது. ஜ்யோதிஷ்குடியில் தனது அந்திமதஶையில் பிள்ளை லோகாசாரியர், நாலூர் பிள்ளையிடம், திருவாய்மொழிப் பிள்ளைக்குத் (திருமலை ஆழ்வார்)  திருவாய்மொழி வ்யாக்யானங்களை உபதேஶிக்குமாறு உத்தரவிடுகிறார். திருமலை ஆழ்வார் தேவப் பெருமாள் மங்களாஶாஸனத்திற்கு எழுந்தருளுகையில், தேவப் பெருமாள் அருகிருந்த நாலூர் பிள்ளையிடம் “நாம் முன்னரே ஜ்யோதிஷ்குடியில் உமக்கு ஆணையிட்டாற்போலே நீர் திருமலை ஆழ்வாருக்கு அருளிச் செயல்களின் அனைத்து அர்த்தங்களையும்  உபதேஶிக்க வேண்டும்” என்று நேரே ஸாதித்தார் .

நித்ய பகவத் கைங்கர்யமாகிற மோக்ஷத்திலேயே கண்ணுடயவர்களான முமுக்ஷுக்களின் உஜ்ஜீவனம் பொருட்டு பிள்ளை லோகாசாரியர் பல க்ரந்தங்களை ஸாதித்துள்ளார். ரஹஸ்ய த்ரயம் , தத்வ த்ரயம் , திருவாய்மொழியின் ஆழ் பொருள்கள் போன்ற ஸம்ப்ரதாயத்தின் முக்கியமான அர்த்தங்களை எடுத்துரைக்கும் 18 க்ரந்தங்களை பிள்ளை லோகாசாரியர் ப்ரஸாதித்தார் . இவற்றில் கீழ் வருமவை மிக முக்கியமானவை .

 • முமுக்ஷுப்படி – இந்த க்ரந்தத்தில் ரஹஸ்ய த்ரயம் மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது . இந்த க்ரந்தத்திற்கான விரிவான வியாக்யானத்தை பொய் இல்லாத மணவாள மாமுநிகள் ஸாதித்துள்ளார். ஒரு ஸ்ரீவைஷ்ணவன் திருமந்த்ரம் , த்வய மஹா  மந்த்ரம் மற்றும் சரம ஶ்லோகம் போன்றவற்றின் பெருமைகளை  எதனை இன்றி அறிய முடியாதோ அப்படியாகப்பட்ட அடிப்படை க்ரந்தம் இதுவேயாம் . 
 • தத்வ த்ரயம்  – இது குட்டி பாஷ்யம் என்றும் அறியப்படுகிறது.  பிள்ளை லோகசாரியர் மிக்க மேதாவிகளுக்கே உரிய பாங்கில், ஸ்ரீ பாஷ்யத்தைக் கொண்டு சித், அசித் மற்றும் ஈஶ்வரன் என்ற மூன்று தத்துவங்களையும் விரிவாக இதில் விளக்கியுள்ளார் . மன்னுபுகழ் சேர் மணவாளமாமுநிவன் வியாக்யானம் தனைக் கொண்டு அன்றி இதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள இயலாது . 
 • ஸ்ரீ வசன பூஷண திவ்ய ஶாஸ்த்ரம் –  ஆழ்வார் ஆசார்யர்களின் சொற்களைக் கொண்டே ஸாதிக்கப்பட்டது இந்த க்ரந்தம். ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழ் பொருளெல்லாம் விளக்கும் பிள்ளை உலகாரியரின், மிக உயர்ந்த கிரந்தம் இதுவேயாம். இதுவே நமது ஸத் ஸம்ப்ரதாயத்தின் ஆழமான பொருட்களை விளக்கக்கூடிய க்ரந்தம். இதற்கு மிக அறிய விளக்கங்களை மணவாளமாமுநிகள் தனது வியாக்யானங்களில் ஸாதித்துள்ளார். திருநாராயணபுரத்து  ஆயி என்னும் ஆசார்யரும் இதற்கு வியாக்யானம் ஸாதித்துள்ளார் . 

நம் ஸத் ஸம்ப்ரதாயத்தின் பெருமைகளை உணரவேண்டும் ஆகில், ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த க்ரந்தங்களை காலக்ஷேபமாய் கேட்க வேண்டும்.

பிள்ளை லோகாசாரியரின் பெருமை யாதெனில், இவ்வனைத்து க்ரந்தங்களும் எளிய தமிழில், மணிப்ரவாள நடையில் ஆசையுடையோர் அனைவருக்கும் புரியும் வண்ணம் இவரால் ஸாதிக்கப்பட்டவை ஆகும். ஸத் ஸம்ப்ரதாயத்தின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில் முமுக்ஷுக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு பொறுக்க மாட்டாமல் தனது பெரும் கருணையால் தன்  ஆசார்யர்களிடமிருந்து தாம் கேட்டவை அனைத்தையும் கொண்டே இக்ரந்தங்களை இவர் ஸாதித்துள்ளார் . இவற்றில் காணப்படும் தேர்ந்த அர்த்தங்களை நாம் ஈடு 36000 படி மற்றும் ஏனைய பூர்வாசார்யர்களின் (இவருக்கு முன்னே எழுந்தருளி இருந்த) வியாக்யானங்களில் காணலாம். நம் பால் இவர் கொண்ட பேரிரக்கத்தால், தாம் தமது பூர்வர்களிடமிருந்து கேட்டவை அனைத்தையும் திரட்டி, எளிமையாகவும் சுருக்கமாகவும் தமது க்ரந்தங்களின் மூலம் நமக்கு அளித்துள்ளார் . இதிலிருந்து நாம் அறிந்து கொண்டாடவேண்டியது யாதெனில், பிள்ளை உலகாரியனே பிரமாண ரக்ஷணம் என்றழைக்கப்படும் ஸத் ஸம்ப்ரரதாய விஷயங்களைப் பேணிக் காத்தல் என்னும் அரும் பணியை செய்த ஆசார்யன் ஆவார்.

ப்ரமாண ரக்ஷணம் செய்ததோடன்றி ப்ரமேய ரக்ஷணமும் செய்து கொடுத்த வள்ளல் இவரே. திருவரங்கத்தில் அனைத்தும் நலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கும் வேளையிலே தான் திடீரென்று துலுக்கர்களின் படையெடுப்பு செய்தி காட்டுத்தீ போல் பரவியது. கோயில்களிலே இருக்கும் செல்வங்களை சூறையாடும் துலுக்க மன்னர்களின் போக்கை அறிந்தவர் அனைவரும் இச்செய்தியை அறிந்து துன்புற்று நிற்க, அக்காலத்தின் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய் எழுந்தருளி இருந்த பிள்ளை உலகாரியர் அரங்கனை காக்கும் திருப்பணியில் ஈடுபட்டார். பெரிய பெருமாள் திரு முன்பே கல் சுவுரொன்றை ஸ்ரீ வைஷ்ணவர்களைக்கொண்டு எழுப்பிவிட்டு , இவர் உத்ஸவ பேரரான நம்பெருமளுடன் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டார். தனது முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது நம்பெருமாளுடன் இவர் பயணமானார். காடுகள் வழியாக நம்பெருமாள் எழுந்தருளிச்செல்லும் போது  சில திருடர்கள் நம்பெருமாளின் திருவாபரணங்களை திருடினர். சற்றே முன்னே சென்றுகொண்டிருந்த பிள்ளை லோகாசாரியர் இதனைச் செவியுற்று வந்து திருடர்களுக்கு நன்மையை போதித்து அவர்களைத் திருத்திப் பணிகொள்ள, அவர்களும் சரணடைந்து பெருமாளின் திருவாபரணங்களை மீளவும் ஸமர்ப்பித்தனர்.

மதுரையில் ஆனை மலைக்குப் பின்புறம் உள்ள ஜ்யோதிஷ்குடி என்ற சிறு க்ராமத்தைச் சென்றடையும் நேரத்தில், வயோதிகத்தால் திருநோவு சாற்றிக் கொண்ட பிள்ளைலோகாசாரியர், திருநாட்டிற்கு எழுந்தருளத் திருவுள்ளம் கொண்டார்.அச்சமயம் பிள்ளை லோகாசாரியர் தனது சீடர்களில் ஒருவரான திருமலை ஆழ்வாரை நினைத்து, அவரே தமக்கடுத்து ஸம்ப்ரதாய தலைவர் ஆகவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். கூர குலோத்தம தாஸர் மற்றும் ஏனைய ஶிஷ்யர்களை அழைத்து, திருமலை ஆழ்வாரை அவரது அரசாங்க பணியிலிருந்து விடுவித்து தரிஶன ப்ரவர்த்தகர் ஆகும் படிக்குத் திருத்திப் பணிகொள்ளுமாறு நியமித்தார். இறுதியாய் தனது சரம திருமேனியை துறந்து இன்பமிகு விண்ணாடு என்று போற்றப்படும் பரமபதத்தை அலங்கரித்தார்.

ஜ்யோதிஷ்குடி – பிள்ளை உலகாரியன் பரமபதம் அடைந்த இடம்

பிள்ளை உலகாரியன் மற்றும் சீர் வசன பூஷண ஶாஸ்த்ரத்தைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு விஶதவாக் ஶிகாமணியான மணவாளமாமுநிகள் உபதேஶ ரத்தின மாலையை அருளினார். இதில் மணவாளமாமுநிகள் ஆழ்வார்கள் திருவவதார விஷயமாகவும், ஆசார்யர்கள் திருவவதார விஷயமாகவும், ஆசை உடையோருக்கெல்லாம் ஸத் ஸம்ப்ரதாயத்தைத் திறந்து வைத்த எம்பெருமானாரின் பேரிரக்கத்தின் விஷயமாகவும் , திருவாய்மொழி வ்யாக்யானங்களின் திருவவதார விஷயமாகவும் விளக்கி, பின்னர், பிள்ளை உலகாரியரின் திருவவதாரம் விஷயமாய் ஸாதிக்கத் துவங்கி, சீர் வசன பூஷணத்தின் பெருமைகள் மற்றும் அது கொண்டுள்ள சீரிய அர்த்தங்களின் பெருமைகள் தனை விளக்கி, இறுதியாய், அவ்வர்த்தங்கள் காட்டும் பாங்கிலே நாம் வாழ வேண்டும் என்றும் அவ்வாறாக வாழ்ந்தோமே ஆனால், எந்தை எதிராசரின் (எம்பெருமானாரின்) இன்னருளுக்கு இலக்காகுவோம் என்றும் உபதேஶிக்கிறார். மேலும் பூர்வாசார்யர்களின் ஞானம் அனுஷ்டானம் மீது நம்பிக்கை வைக்காது , நம் புரிதலை கொண்டும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கொண்டும் தர்க்கத்தைக் கொண்டும் நாமாகவே இவை தான் அர்த்தங்கள் என்று உரைக்க முற்பட்டால், நாம் மூர்க்கர் என்று ஆவோம் என்று ஸாதிக்கிறார். மூர்க்கர் போன்ற அப ஶப்தங்களை ஒரு போதும் உபயோகிக்காத அழகிய மணவாளமாமுநிகளே இவ்வாறாக ஸாதித்துள்ளார் என்றால், பூர்வர்களின் நிலைக்கு மாறாக நடப்பது அத்தனை பெரிய குற்றம் என்பதை எடுத்துக் காட்டவே ஆகும். இதுவே ஸ்ரீ வசன பூஷணத்தின் ஸாரம் என்றும் பெரிய ஜீயர் தனது அரிய உபதேஶ ரத்தின மாலை பிரபந்தத்தில் எடுத்துக் காட்டுகிறார் .

பிள்ளை லோகாசாரியரின் பெருமைகளை போற்றும் விதத்தில் நிகமாந்த மஹா தேஶிகன் என்றும் அறியப்பட்டவரான வேதாந்தாசாரியர் லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தை ஸாதித்துள்ளார். பிள்ளை உலகாரியனைக் காட்டிலும் குறைந்த பட்சம் 50 ஆண்டுகள் இளையவரான வேதாந்தாசாரியார், பிள்ளை லோகாசாரியர்பால் கொண்டுள்ள பெரும் மதிப்பை இந்த ப்ரபந்தத்தைக் கொண்டு நாம் அறியலாம். இந்த ப்ரபந்தம் இன்றளுவும் திருநாராயணபுரத்தில் தொடர்ந்து அனுசந்திக்கப்பட்டு வருகிறது .

ப்ரமாண ப்ரமேயங்களின் ரக்ஷணத்தைச் செய்தருளிய பிள்ளை லோகாசாரியரின் அளவிலா பெருமைகளில் சிலவற்றை மேலே அனுபவித்தோம். ஸ்ரீ வைஷ்ணவராய் இருக்கும் ஒருவர் உபகார ஸ்ம்ருதி என்று அழைக்கப்படும் விசுவாசத்துடன் பிள்ளை லோகாசாரியர் இடத்தில் இருத்தல் வேண்டும். பிள்ளை உலகாரியன் இல்லையேல், நம்பெருமாளையோ எம்பெருமானார் தரிசனத்தின் ஆழ்பொருள்களையோ  நாம் காணவே முடியாது .

* இங்கே கூறப்பட்ட லோகாசார்ய பஞ்சாஶத் என்னும் பிரபந்தத்தின் அர்த்தங்களை ஸ்ரீ உ. வே. V  V  ராமானுஜம் சுவாமி தமிழில் ஸாதித்தவை கொண்டு ஸ்ரீ உ.வே. T C A  வேங்கடேஶன் சுவாமி ஆங்கிலத்தில் விளக்கியுள்ளார். இதனை http://acharya.org/books/eBooks/vyakhyanam/LokacharyaPanchasatVyakhyanaSaram-English.pdf என்னும் வலைதளத்தில் காணலாம்.

எம்பெருமானார் திருவடிகளிலும் நம் ஆசார்யன் திருவடிகளிலும் மாறாத பக்தி ஏற்பட நாம் பிள்ளை லோகாசாரியர் திருவடிகளை வணங்குவோம்.

பிள்ளை லோகாசாரியர் திருவடிகளே சரணம் .

பிள்ளை லோகாசாரியரின் தனியன்: 

லோகாசார்ய குரவே க்ருஷ்ண பாதஸ்ய ஸூநவே
ஸம்ஸார போகி ஸந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம:

பிள்ளை லோகாசாரியார் மற்றும் அவர் கோஷ்டிக்கு மங்களாசாசனம் 

வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம்                                                                     வாழி முடும்பை என்னும் மாநகரம்                                                                                           வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு நல்லார்                                                                       இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .

பிள்ளை லோகாசாரியரின் வாழி திருநாமம்:

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே.

நமது அடுத்த பதிவில் மணவாளமாமுநிகளின் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளை விஷயமாக அனுபவிப்போம் .

அடியேன் ராமானுஜ தாசன்,

எச்சூர் ஸ்ரீநிவாசன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/09/18/pillai-lokacharyar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

நம்பிள்ளை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

சென்ற பதிவில் நஞ்சீயரை (https://guruparamparaitamil.wordpress.com/2015/08/01/nanjiyar/) பற்றி  அனுபவித்தோம். இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான நம்பிள்ளை விஷயமாக அனுபவிப்போம்.

(நம்பிள்ளை – திருவல்லிக்கேணி)

திருநக்ஷத்ரம்: கார்த்திகை, கார்த்திகை

அவதார ஸ்தலம்: நம்பூர்

ஆசார்யன்: நஞ்சீயர்

ஶிஷ்யர்கள்: வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்  மற்றும் பலர்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

அருளிச்செய்தவை: திருவாய்மொழி 36000 படி ஈடு வியாக்யானம் , கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்யானம், திருவந்தாதி வ்யாக்யானங்கள், திருவிருத்தம் வியாக்யானம் .

நம்பூர் என்ற கிராமத்தில் வரதராஜன் என்ற திருநாமத்தோடே திருவவதாரம் செய்த இவரே பிற்காலத்தில் நம்பிள்ளை என்று பிரஸித்தர் ஆனார் . இவர் திருக்கலிக்கன்றி தாஶர், கலிவைரி தாஶர் , லோகாசார்யர், சூக்தி மஹார்ணவர், ஜகதாசார்யர் மற்றும் உலகாசிரியர் என்ற திருநாமங்களாலும் போற்றி வணங்கப்படுகிறார்.

பெரிய திருமொழி 7.10.10 பதிகத்தில் கண்டது போல, திருமங்கை ஆழ்வார் பாசுரங்களுடைய அர்த்தங்களை திருக்கண்ணமங்கை எம்பெருமான் கலியனிடமிருந்தே கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் கலியனே நம்பிள்ளையாக அவதரித்து, எம்பெருமான் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்து அருளிச்செயலினுடைய அனைத்து விஶேஷார்த்தங்களையும் கற்றுக்கொண்டார். நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை அழகாக ஏடுபடுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியில் இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது, நம்பூர் வரதராஜர் தான் இதைச் செய்வதற்கு ஏற்றவர் என்று அவர்கள் கூறினார்கள். நஞ்சீயரின் திருவுள்ளத்  திருப்திக்கேற்ப இந்த வ்யாக்யானத்தை எழுதுவதாக வரதராஜர் நஞ்சீயரிடம்  கூறினார். நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை முழுமையாக விளக்கி, பின்பு வரதராஜருக்கு மூல ப்ரதியைக் கொடுத்தார். வரதராஜர் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று எழுதினால் தான் அதில் கவனம் செலுத்த முடியும் என்பதால், காவிரியைக் கடந்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார். காவிரியைக் கடந்து செல்லும் பொழுது திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அதனால் வரதராஜர் காவிரியை நீந்திக்கடந்து சென்றார். அந்த சமயத்தில் அவர் கையில் இருந்த மூல ப்ரதி நழுவி விழுந்து, அதை வெள்ளம் அடித்துச் சென்றது. மிகவும் வருத்தமுற்ற வரதராஜர், தன்னுடைய ஊருக்கு வந்தவுடன், ஆசார்யனையும் அவர் கூறிய அர்த்த விஶேஷங்களையும் த்யானித்துக் கொண்டு 9000 படி வ்யாக்யானத்தை மறுபடியும் எழுதத்தொடங்கினார். வரதராஜர் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் வல்லுனராக இருந்தமையால், பொருந்தக்கூடிய இடத்தில் சில நல்ல அர்த்தங்களைச் சேர்த்து எழுதி, நஞ்சீயரிடம் சென்று ஸமர்ப்பித்தார். நஞ்சீயர் அந்த வ்யாக்யானத்தைப் படித்துவிட்டு, மூல ப்ரதியை விட சற்று மாறுதல்கள் இருப்பதைக் கண்டு, ஏன் இந்த மாற்றம்? என்ன நடந்தது என்று கேட்டார். வரதராஜர் நடந்த விஷயத்தைக் கூறினார், அதைக் கேட்டவுடன் மிகவும் மகிழ்ந்தார். வரதராஜருடைய உண்மையான பெருமையை உணர்ந்து, நஞ்சீயர் அவருக்கு “நம்பிள்ளை” மற்றும் “திருக்கலிகன்றி தாஸர்” என்ற திருநாமத்தைச் சூட்டினார். பட்டர்-நஞ்சீயர் ஆசார்ய ஶிஷ்ய பாவம் மற்றும் அவர்களுடைய ஸம்பாஷணைகளைப் போல, நஞ்சீயர்-நம்பிள்ளை விஷயத்திலும் மிகவும் சுவரஸ்யமானதாகவும் மற்றும் மிகச் சிறந்த அர்த்தங்களை உடையதாகவும் இருக்கும். அவற்றில் சிலவற்றை இப்பொழுது அனுப்பவிப்போம்.

 • உபாயாந்தரத்திற்குப் (கர்ம, ஞான, பக்தி) பல ப்ரமாணங்கள் இருப்பதைப் போல, சரணாகதிக்கு ஏன் பல ப்ரமாணங்கள் இல்லை என்று நம்பிள்ளை நஞ்சீயரிடம் கேட்டார். அதற்கு நஞ்சீயர் “ப்ரத்யக்ஷமாக புரிந்து உணர்ந்து கொள்ளும் விஷயத்திற்கு, ப்ரமாணம் தேவையில்லை. அதாவது ஒருவன் நதியில் மூழ்கும் பொழுது, நதியில் மூழ்காத மற்றொருவனை சரணடைவது போல – நாம் அனைவரும் இந்த ஸம்ஸாரமாகிர பெருங்கடலிலே மூழ்கியிருக்கிறோம் ஆனால் எம்பெருமானோ இந்த ஸம்ஸாரத்தினுடைய அழுக்கு ஒட்டாதவனாய் இருக்கிறான், அதனால் அவனே உபாயம் என்று பற்றுவதே மிகவும் பொருத்தமானதாகும். அது மட்டுமல்லாமல் சரணாகதியைப் பற்றி சில ப்ரமாணங்களை ஶாஸ்திரத்திலிருந்து கூறி அதை நிரூபித்தார். அதோடு என்றும் ப்ரமாணத்தினுடைய எண்ணிக்கைகளை வைத்துக் கொண்டு ஒரு விஷயம் உயர்ந்தது என்று கூறமுடியாது, உதாரணத்திற்கு இந்த உலகத்தில் பல ஸம்ஸாரிகள் உள்ளனர் ஆனால் ஸன்யாஸிகளோ மிகக் குறைந்த அளவில் தான் உள்ளார்கள், அதற்காக ஸம்ஸாரிகள் சிறந்தவர்கள் என்று கூற முடியுமா?” என்று விவரித்தார். இதைக் கேட்டவுடன் நம்பிள்ளை மிகவும் திருப்தி அடைந்தார்.
 • “ஒருவன் தனக்கு ஸ்ரீவைஷ்ணவத்வம் உள்ளது என்று எப்பொழுது உணர்வான்?” என்று நம்பிள்ளை நஞ்சீயரிடம் கேட்டார். அதற்கு நஞ்சீயர் “எவன் ஒருவன் அர்ச்சாவதாரத்தில் பரத்வத்தைப் பார்க்கிறானோ, அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களிடமும் வேற்றுமை இல்லாமல் உண்மையான பற்றை வைத்துள்ளானோ அதாவது தன் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கொண்டிருக்கும் அதே பற்றை மற்றைய ஸ்ரீவைஷ்ணவர்களிடம் வைத்துள்ளானோ மற்றும் எவன் ஒருவன் யாரேனும் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் தன்னை நிந்தித்தாலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கோண்டு அவருக்கும் ஸ்ரீவைஷ்ணவ்த்வம் உள்ளது என்று நினைக்கிறானோ” அப்பொழுது உணர்வான் என்று கூறினார்.
 • நம்பிள்ளை நஞ்சீயரிடம் ஸ்ரீ பாஷ்யம் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் , நஞ்சீயர் தமது  பெருமாளுக்கு திருவாராதனம் செய்யுமாறு நம்பிள்ளையைப் பணித்தார். தமக்கு திருவாராதனம் செய்ய முழுமையாக தெரியாது என்று ஸாதித்த நம்பிள்ளையிடம் , நஞ்சீயர் த்வய மஹா மந்திரத்தை (அதாவது அர்ச்சாவிக்ரஹ ரூபமாய் அனைத்து இடங்களிலும் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் எளிமையைக் கொண்டாடும் வண்ணம் த்வய மஹாமந்திரத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் நடுவில் “ஸர்வ மங்கள விக்ரஹாய” என்று சேர்த்து) அனுசந்தித்து எம்பெருமானுக்கு போகத்தை கண்டருளப்பண்ணும் படி நியமித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில், நம் பூருவர்கள் அனைத்துக்கும் த்வய மஹா மந்திரத்தையே ஶரணாகக் கொண்டிருந்தனர் .
 • நம்பிள்ளை நஞ்சீயரிடம் , “எம்பெருமானின் திருவவதாரங்களின் நோக்கம் யாது?” என்று கேட்க, அதற்கு நஞ்சீயர் , “பாகவதர்கள் பக்கலிலே அபசாரப்பட்டவர்கள் அதற்கான தகுந்த தண்டனைகளைப் பெறுவதற்காகவே எம்பெருமான் பெரிய காரியங்களை மேற்கொள்வதாக ஸாதித்தார். (உதாரணமாக கண்ணனாக எம்பெருமான் , தன் அடியாரிடம் அபசாரப்பட்ட துரியோதனன் கொல்லப்படவேண்டும் என்பதற்காக, தான் பல துன்பங்களை ஏற்றான் )
 • பின், நம்பிள்ளை நஞ்சீயரிடம் “பாகவத அபசாரம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நஞ்சீயர் “மற்ற ஸ்ரீ வைஷ்ணவர்களையும் நம்மைப் போன்றவர்கள்” என்று எண்ணுதல் பாகவத அபசாரம் என்று ஸாதித்து, பாகவதர்களின் பெருமைகளை எடுத்துக்காட்டும் ஆழ்வார்களின் பாசுரங்களைச் ஸாதித்து , அவற்றை ஆதாரமாகக் கொண்டு நாம் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி  பாகவதர்களை நம்மில் பன்மடங்கு மேலானவர்கள் என்று கொள்ளுதல் வேண்டும் என்றும் ஸாதித்தார். மேலும் ஆழ்வார்கள் மற்றும் பூருவாசாரியர்கள் நடந்து காட்டிய வண்ணம் நாமும் பலவைகைகளில் திருமால் அடியார்களைக் கொண்டாடுதலில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஸாதித்தார் .
 • மேலும், நம்பிள்ளையிடத்தே நஞ்சீயர் ,”பகவத் விஷய அனுபவத்திலே ஈடுபடும் ஒருவருக்கு லோக விஷய அனுபவங்களான ஐஶ்வர்யம், அர்த்தம், காமம் போன்றவைகளின் மீது ஈடுபாடு அறுபடுதல் வேண்டும் என்று ஸாதித்தார் . இதை ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு விளக்கினார். மேலும் எம்பெருமானின் பெருமைகளை உணர்ந்த மாத்திரத்திலேயே “வாடினேன் வாடி வருந்தினேன்  ..நாராயணா என்னும் நாமம்” என்று எவ்வாறு திருமங்கை ஆழ்வார் உலக விஷயப்பற்றுகளைத் துறந்தார் என்பதையும் மேற்கோளாகக் காட்டினார். இதைக் கேட்ட நம்பிள்ளை தானும் பரவசித்து மிகவும் தெளிந்து நஞ்சீயரோடே எழுந்தருளியிருந்து அவருக்கு அனைத்து கைங்கர்யங்களையும் செய்து கொண்டும் காலக்ஷேபங்கள் கேட்டுக்கொண்டும் இருந்தார்.
 • நஞ்சீயர் திருவாய்மொழி காலக்ஷேபத்தை நூறு முறை செய்தருளினார் . இதனை அடுத்து நம்பிள்ளை நஞ்சீயருக்கு ஶதாபிஷேக மஹோத்ஸவம் செய்தருளினார். இக்காலக்ஷேபங்கள் வாயிலாக நம்பிள்ளை நஞ்சீயரிடமிருந்து பூர்வாசாரியர்கள் சாதித்த அனைத்து அர்த்தங்களையும் பெற்றார்.

நம்பிள்ளை தனித்துவம் பொருந்திய பல ஆத்ம குணங்களோடு கூடியவராய் அளவிலடங்கா பெருமைகளுக்குறைவிடமாய் எழுந்தருளி இருந்தார். தமிழ் மற்றும் வடமொழிகளில் மிகவும் தேர்ந்தவராய் நம்பிள்ளை விளங்கினார். இவர் தனது விரிவுரைகளில் திருக்குறள், நன்னூல், கம்ப இராமாயணம் போன்றவைகளிலிருந்தும் வேதாந்தம், விஷ்ணுபுராணம் , ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் போன்றவைகளிலிருந்தும் மிக எளிதாக மேற்கோள் காட்டியருளினார். எப்பொழுதாவது எவருக்கேனும் ஆழ்வார்களின் வைபவங்களிலோ அருளிச்செயல்களிலோ ஸந்தேகங்கள் வருகையில், அனைத்து வைதீகர்களாலும் ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் ஏற்கப்பட்டிருந்தமையால் , அதைக்கொண்டு அந்த ஸந்தேகங்களை தீர்த்து வைப்பதில் நம்பிள்ளை தேர்ந்தவராய் இருந்தார். அவரின் பெருமைகளையும் பணிவையும் பறைசாற்றக்கூடிய சில வைபவங்களை நாம் இப்பொழுது காணலாம் .

 • நம்பிள்ளை , பெரிய பெருமாள் பாதம் நீட்டிக்கொண்டிருக்கும் கிழக்கு திசை திருச்சுற்றிலே  எழுந்தருளியிருந்து காலக்ஷேபம் சாதித்து வந்தார். அதனால் தான் இன்றளவும் நாம் ஸந்நிதியைவிட்டு வெளியே வந்தவுடன் இவ்விடதிற்கு நமது ப்ரணாமங்களைச் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் . நம்பிள்ளையின் காலக்ஷேபத்தில் தானும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைமிகுதியால் பெரிய பெருமாள் தமது அர்ச்சை நிலையைக் கலைத்து எழுந்து நின்றார். ஸந்நிதியின் திருவிளக்குகளைக் கண்காணிக்கும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவரான திருவிளக்குப்பிச்சன் என்பவர் இதனைக்கண்டு அர்ச்சை நிலையை தாம் கலைத்தல் ஆகாது என்று கூறி பெரியபெருமாளைத் திருவனந்தாழ்வான் மீது கிடக்குமாறு தள்ளிவிட்டார் .
 • நம்பிள்ளை கோஷ்டியோ அல்லது நம்பெருமாள் கோஷ்டியோ என்று கண்டவர் வியக்கும் வண்ணம் நம்பிள்ளையின் காலக்ஷேபங்கள் அமைந்தன. எவ்வாறு அரங்கனகரப்பன் தனது நடை அழகால் அடியார்களை ஈர்த்தானோ அவ்வாறே நம்பிள்ளை தனது உரையால் அடியார்களை ஈர்த்தார் .
 • நம்பிள்ளையின் பணிவு தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஒருமுறை முதலியாண்டான் திருவம்ஶத்தில் வந்துதித்தவரான கந்தாடை தோழப்பர் என்பவர், நம்பிள்ளையின் பெருமைகளை உணராதிருந்தமையால் அது கடும் சொற்களாக நம்பெருமாள் திருமுன்பே வெளி வந்தது. இதனைக் கண்டு , நம்பிள்ளை மறுவார்த்தை ஒன்றும் ஸாதிக்காமல் தனது திருமாளிகைக்கு எழுந்தருளி விட்டார். பிறகு தனது திருமாளிகைக்குத் திரும்பிய கந்தாடை தோழப்பருக்கு, நடந்தவற்றை பிறர் வாயிலாகக் கேட்டறிந்த அவரது தேவிகள், நம்பிள்ளையின் பெருமைகளை கூறி உணர்த்தி மேலும் நம்பிள்ளை திருவடிகளில் விழுந்து மன்னிப்பு வேண்டுவது பற்றியும் அறிவுறுத்தினார். தம் பக்கல் இருந்த குற்றத்தை உணர்ந்த கந்தாடை தோழப்பர் தானும் நம்பிள்ளையிடம் மன்னிப்பு வேண்ட புறப்பட்டார். அதற்காக தனது திருமாளிகையின் வாயிற்கதவுகளைத் திறந்த பொழுது அங்கே யாரோ ஒருவர் காத்துக்கொண்டிருப்பதை கவனித்தவர், அது நம்பிள்ளை என்றும் உணர்ந்தார். தோழப்பரைக் கண்ட நம்பிள்ளை தானும் தெண்டனிட்டு, தோழப்பர் திருவுள்ளம் கன்றும் வண்ணம் தாம் அபசாரம் செய்து விட்டதாகக் கூறினார். தம்மீது குற்றம் இருந்த போதிலும் அதை நம்பிள்ளை பெருந்தன்மையோடு  தானெடுத்துக்கொண்டு மன்னிப்பு கோரியதைக் கண்ட தோழப்பர்  நம்பிள்ளையின் பெருமையைக்கண்டு திடுக்கிட்டார். உடனே தோழப்பர் தானும் நம்பிள்ளைக்கு தெண்டன் ஸமர்பித்து நம்பிள்ளைக்கு “உலகாரியன்” என்னும் திருநாமத்தை சாற்றினார். இத்தனை பெருமைகளால் நிரம்பப்பெற்றும் பணிவோடு இருக்ககூடிய ஒருத்தரே உலகாரியன் என்று போற்றப்படவேண்டியவர் என்றும் அந்து பணிவு நம்பிள்ளையிடத்தே இருப்பதால், அவரே உலகாரியன் என்று போற்றப்பட வேண்டியவர் என்று தோழப்பர் ஸாதித்தார். பின் நம்பிள்ளை மீது தனக்கு இருந்த வெறுப்பைத் துறந்து, தோழப்பர் தனது தேவிகளோடு நம்பிள்ளையிடம் கைங்கர்யத்தில் ஈடுபட்டார். நம்பிள்ளை இடத்தே அனைத்து ஶாஸ்த்ரார்த்தங்களையும் கற்றார். இந்த வைபவத்தை விஶதவாக் ஶிகாமணியான  மணவாளமாமுநிகள் தனது உபதேஶரத்தினமாலையில் துன்னுபுகழ் கந்தாடை தோழப்பரையும் நம்பிள்ளையையும் கொண்டாடி அனுபவிக்கிறார். இது நம்பிள்ளையின் தூய்மையை நமக்கு எடுத்து காட்டுகிறது . மேலும் நம்பிள்ளையோடே ஏற்பட்ட ஸம்பந்தத்தினால் கந்தாடை தோழப்பருக்கும் இந்த தூய்மை ஏற்பட்டது என்று நாம் புரிந்துக்கொள்ளலாம் .
 • ஸ்ரீ பராஶர பட்டரின் திருவம்ஶத்தில் வந்தவரான நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் என்பவருக்கு நம்பிள்ளையின் பெருமைகளைக்கண்டு பொறாமை ஏற்பட்டது. ஒரு முறை அவர் அரசவைக்கு செல்லும் போது நம்பிள்ளை ஶிஷ்யரான பின்பழகிய பெருமாள் சீயரையும் தன்னுடன் அழைத்து சென்றார். அரசன் இவ்விருவரையும் வரவேற்று ஸம்பாவனை ஸமர்பித்து, அவர்களுக்கு அமர்வதற்கு  நல்ல ஆஸனங்களையும் அளித்தான். அரசன் பட்டரிடத்தே ஸ்ரீமத் ராமயணத்திருந்து சில ஸந்தேகங்களை கேட்டான். அது யாதெனில் , பெருமாள் ஸ்ரீ ராமாவதாரத்தில் தனது பரத்துவத்தை வெளிக்காட்ட போவதில்லை என்று உரைத்திருக்க எவ்வாறு ஜடாயுவை பார்த்து “கச்ச லோகான் உத்தமான் ” (உயர்ந்த லோகமான பரமபதத்திற்கு செல்வீர் )  என்று ஸாதித்தார் என்பதேயாம். இந்த ஸந்தேகத்திற்கான தக்க ஸமாதானம் தோன்றாது எங்கே தமது பெருமைக்குக் களங்கம் நேர்ந்துவிடுமோ என்ற கவலையோடு பட்டர் எழுந்தருளியிருக்கும் தருவாயில் அரசன் வேறு சில அரசுப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவனாய் இருந்தான் . அப்பொழுது பட்டர் ஜீயரைக்கண்டு , “இதை நம்பிள்ளை எவ்வாறு ஸாதிப்பார்? என்று கேட்க, சீயர் உடனே “ஸத்யேன லோகன் ஜயதி ராகவ : ”  என்ற ஶ்லோகத்தை ஸாதித்தார் . (அதாவது தனது உண்மையை மட்டுமே கூறும் தன்மையினால் உலகங்களை வென்றவன் ரகுகுலத்தோன்றல் ஸ்ரீ ராமன்). இந்த ஶ்லோகத்தை தியானித்த பட்டருக்கு சடக்கென்று தக்க ஸமாதனம் விளங்க, அரசனிடம் கூறினார். ஸமாதானம் கேட்டு அகமகிழ்ந்த அரசன் தானும் பட்டரைக்  கொண்டாடி அவருக்கு தக்க பரிசுப்பொருட்களை ஸமர்பித்தான். நம்பிள்ளையின் ஒரு ஸமாதானம் கேட்டே அவர் பெருமையை உணர்ந்த பட்டர் தானும். தான் பெற்ற பரிசுகளை நம்பிள்ளையிடத்தே ஸமர்ப்பித்து மேலும் தானும் நம்பிள்ளையைச் சரணடைந்து , நம்பிள்ளைக்கு அடிமை செய்வதையே அன்றுதொட்டு செய்துக்கொண்டிருந்தார் .

நம்பிள்ளை தான் எழுந்தருளியிருந்த காலத்தில் தன் ஶிஷ்யர்களுக்கு நல்ல உபதேஶங்களையும் அறிவுரைகளையும் வழங்கிய தருணங்கள் அதிகம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்பொழுது கண்டு அனுபவிப்போம்

 • ஒருமுறை, நம்பிள்ளை தன்  ஶிஷ்யர்களோடே திருவெள்ளறையிலிருந்து திருவரங்கத்திற்கு பரிசிலில் திரும்பிக்கொண்டிருக்க , காவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பரிசிலோட்டி, யாரேனும் ஒருவர் கீழே குதித்தால் தான் படகு கவிழாது இருக்கும் என்று கூற, உடனே அங்கிருந்த ஒரு அம்மையார் பரிசில் விடுவானைக் கண்டு ‘கண் போன்ற நம்பிள்ளையை பத்திரமாகக் கரை சேர்த்து விடு ” என்று கூறி குதித்தார். இதனைக் கண்ட நம்பிள்ளை “ஒரு ஆத்மா தட்டுப்போயிற்றே” என்று மிகவும் வருந்தினார். கரைசேர்ந்த பின்னர் அந்த அம்மையாரின் குரல் கேட்க, அந்த அம்மையாரும் நம்பிள்ளையிடத்தே தெண்டன் ஸமர்பித்து “ஒரு மேடாய் இருந்து நம்மை ரக்ஷித்ததே” என்று பரவசித்துக் கூற , நம்பிள்ளை தானும் “உமது நம்பிக்கை அதுவாயின் அப்படியும் ஆகலாம் ” என்று ஸாதித்தார், இதிலேருந்து நாம் உணரவேண்டியாது யாதெனில் உயிரை விட நேர்ந்தாலும் ஆசாரியனுக்கு அடிமை செய்தலில் ஈடு பட்டிருக்கை ஆகும். நம்பிள்ளை தாமும் மிக இக்கட்டான நிலைமைகளில் இருந்து ஶிஷ்யர்களை ஆசாரியன் காப்பதை இது மூலமாக வெளிப்படுத்தினார் .
 • நம்பிள்ளையின் திருமாளிகைக்கு அடுத்த அகத்தில் ஒரு ஸ்ரீ வைஷ்ணவப் பெண்மணி வசித்து வந்தார். அவ்வம்மையாரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் நீர் உமது இடத்தையும்  நம்பிள்ளையிடம்  ஸமர்ப்பிப்பீரே ஆனால், பெரியதான நம்பிள்ளையின் கோஷ்டி எழுந்தருளுவதற்கு உதவியாக இருக்கும் என்று விண்ணப்பித்தார். அவ்வம்மை முதலில் சற்று தயங்கினாலும், பின்னர் நம்பிள்ளையிடத்தே  சென்று நாம் உமக்கு நம் இடத்தை ஸமர்ப்பிக்கிறோம், தேவரீர் அடியேனுக்கு ஸ்ரீவைகுண்டத்திலே ஓர் இடம் அருள வேண்டும், மேலும் நாம் பெண் பிள்ளை ஆதலால் நமக்கு ஒரு சீட்டு எழுதித்தரவேண்டும் என்று பிரார்த்திக்க, ஆசார்யன் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை மிகவும் உகந்த நம்பிள்ளை, “இவருக்கு இந்த வருஷம் இந்த மாதம் இந்த திதி, திருக்கலிக்கன்றி தாஶனான நாம் பரமபதத்தில் ஓர் இடம் எழுதிக்கொடுத்துள்ளோம், அனைத்து உலகங்களுக்கும் எமக்கும்  ஸ்வாமியான வைகுண்டநாதன், இதை  அருள வேண்டும்” என்று சீட்டு எழுதி கொடுக்க அவ்வம்மையார் அன்றைக்கு மூன்றாம் நாள் திருநாடைந்தார் .
 • நம்பிள்ளைக்கு இரண்டு தேவிகள் எழுந்தருளி இருந்தனர். அவர்களில் பெரிய தேவிகளைப் பார்த்து நம்பிள்ளை அவர் தம்மை எவ்வாறாகக் கொண்டுள்ளார் என்று கேட்க, அதற்குப் பெரிய தேவிகள் , தாம் நம்பிள்ளையை எம்பெருமானின் திருவவதாரமாகவும் தனக்கு ஆசார்யனாகவும் கொண்டுள்ளதாகச் ஸாதித்தார். இதனை கேட்ட நம்பிள்ளை திருவுள்ளம் மகிழ்ந்து பெரிய தேவிகளை ததீயாராதனை கைங்கர்யத்தில் ஈடுபடுமாறு கூறினார்.  பின்னர் நம்பிள்ளை இதே கேள்வியை தனது இளைய தேவிகளைக் கேட்க அவர் தாம் நம்பிள்ளையை தனது கணவராகக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நம்பிள்ளை அவரை, பெரிய தேவிகளுக்கு உதவியாக இருந்து தினமும் ஸ்ரீ வைஷ்ணவர்களின் ஶேஷத்தை உண்டு வருமாறு பணித்தார். இதனால் சிறிய தேவிகளுக்கு நிஷ்டை பெருகி தனது ஶரீர ஸம்பந்தமான கணவன் மனைவி என்ற எண்ணத்திலிருந்து ஆசார்யன் ஶிஷ்யை என்ற எண்ணம் மேலோங்கும் என்று ஸாதித்தார் .
 • மஹா பாஷ்ய பட்டர் என்பவர் நம்பிள்ளையிடத்தே, சைதன்யம் உணர்ந்த ஸ்ரீ வைஷ்ணவரின் எண்ணம் என்னவாய் இருக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு நம்பிள்ளை, அப்படி பட்ட ஒரு ஸ்ரீவைஷ்ணவர் எம்பெருமானே உபாயம் மற்றும் உபேயம் என்று எண்ணவேண்டும். மேலும் நமக்கு ஸம்ஸாரம் என்னும் நோயை போக்கிக்கொடுத்தாரே என்ற நன்றி உணர்வோடு ஆசார்யனிடத்தில் இருத்தலும், ஸ்ரீ பாஷ்யத்தால் ஸ்தாபிக்கப்பட்டதான எம்பெருமானார் தரிஶனமே உண்மை என்று இருத்தலும், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கொண்டு பகவத் குணாநுஶந்தானத்திலும், அருளிச்செயல்களில் ஈடுபட்டிருத்தலும் வேண்டும் என்று ஸாதித்தார். இறுதியாக, இவ்வாழ்கையின் முடிவில் பரமபதத்தைக் காண்போம் என்ற உறுதி வேண்டும் என்று ஸாதித்தார்.
 • பாண்டிய நாட்டிலிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் நம்பிள்ளையிடத்தே வந்து தங்களுக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தின் ஸாரத்தைச் சாதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்க, அதற்கு நம்பிள்ளை, கடற்கரையை நினைத்திருக்கச் சொன்னார். இதனைக் கேட்டுக் குழப்பமடைந்த அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு நம்பிள்ளை, ராவணனோடு போரிடுவதற்கு முன் சேதுக்கரையில் ஸ்ரீ ராமன் குடில் அமைத்து தங்கிக்கொண்டிருக்கையில் சுற்றிக் குரங்குகள் பாதுகாத்துக் கொண்டிருந்தனர். ஆனால் களைப்பால் குரங்குகள் உறங்க, சக்கரவர்த்தித் திருமகனார் தான் சென்று பாதுகாப்பிற்கு எழுந்தருளினார். இதனால் நாம் உறங்கும் வேளையிலும் காக்கும் எம்பெருமான் நம்மை உறங்காத வேளைகளிலும் காத்துக் கொண்டிருக்கிறான் என்ற உறுதியோடு, நாம் நம்மை காத்து கொள்ளுதலைத் (அதாவது ஸ்வ ரக்ஷணே ஸ்வ அந்வயம்) தவிர்த்தல்  வேண்டும் என்று ஸாதித்தார்.
 • இதர தேவதைகளைப் பூசிப்பது பற்றி நம்பிள்ளை ஸாதித்த மிக உன்னதமான விளக்கத்தை இப்போது காண்போம். ஒருவர் நம்பிள்ளையினிடத்தே வந்து, நித்ய கர்மாக்களில் இந்திரன் வருணன் அக்னி போல்வார்களைத் தொழும் நீங்கள் ஏன் அவர்கள் கோவில்களுக்குச் செல்வதில்லை என்று கேட்டார். அதற்கு நம்பிள்ளை மிகவும் அழகாக “நீர் அக்னியை யாகத்தில் வணங்குகிறீர் பிறகு ஏன் சுடுகாட்டில் எரியும் தீயிலிருந்து விலகுகிறீர்? ” என்று கேட்டு, பின்னர் இந்த நித்ய கர்மாக்களை பகவத் கைங்கர்யமாக, இந்த தேவைதைகளுக்கு அந்தர்யாமியாக பகவான் இருப்பதை உணர்ந்து செய்ய வேண்டும் என்று ஶாஸ்த்ரம் அறிவுறுத்துகிறது, அதனால் தான் இவைகளைச் செய்கிறோம். மேலும் அதே ஶாஸ்திரம் ஸ்ரீமன் நாராயணனே பரதெய்வம், அவரைத் தவிர்த்து வேறொருவருக்குப் பூசனைகள் தகாது என்று கூறுகிறது. அதனால் தான் நாங்கள் இதர தெய்வங்களின் கோவில்களுக்குச் செல்வதில்லை. மேலும் இந்த தெய்வங்களுக்குத் தனி ஸந்நிதி அமையும் போது  தாங்களே மேலானவர்கள் என்ற ரஜோ குணம்  பெருகப் பெற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவர்களோ ஸாத்வீக குணம் மேலோங்கப் பெற்றவர்கள். அதனால் எங்கள் பூசனைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள் என்று ஸாதித்தார் .
 • ஒரு ஸ்ரீவைஷ்ணவர் நம்பிள்ளையிடம்  சென்று அவர் முன்பிருந்ததை விட மெலிந்திருப்பதாகக் கூற அதற்கு நம்பிள்ளை ஆத்மவாகப்பட்டது வளரும் போது  ஶரீரம் மெலியும் என்று ஸாதித்தார்
 • மற்றொரு ஸ்ரீவைஷ்ணவர் நம்பிள்ளையை நோக்கி தேவரீர் ஏன்  திருமேனியில் தெம்பின்றி எழுந்தருளி இருக்கிறீர் என்று கேட்க அதற்கு நம்பிள்ளை, எம்பெருமானுக்கு மங்களாஶாஸனம் செய்ய அடியேனின் உடலில் தெம்பு உள்ளது. அதற்கு மேல் சக்தி இருந்து அடியேன் ஒன்றும் போர் தொடுக்கப் போவதில்லை என்று ஸாதித்தார். இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தேக ஶக்தியில் ஈடுபாடிருத்தல் கூடாது.
 • ஒருமுறை நம்பிள்ளை திருமேனியில் நோவு சாற்றிக்கொண்டிருக்க, இதைக் கண்ட ஒரு ஸ்ரீவைஷ்ணவர் திருவுள்ளம் நொந்தார். அதற்கு நம்பிள்ளை, ஒருவருக்கு இன்னல்கள் நேர்வதும் நன்மையே ஏனென்றால் ஶாஸ்திரம் “எவன் ஒருவன் எம்பெருமானை சரணாகக் கொண்டுள்ளானோ அவன் ம்ருத்யு தேவதைக்காகக் காத்திருக்கிறான்” என்று கூறிகிறது, என்று ஸாதித்தார்.
 • நம்பிள்ளை மீது கொண்டுள்ள அன்பினால், சில ஸ்ரீவைஷ்ணவர்கள், எங்களாழ்வான் கூறியதன் பெயரில், நம்பிள்ளை நோயிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக அவருக்கு ரக்ஷை கட்ட முயல்கின்றனர். இதனை நம்பிள்ளை ஏற்க மறுத்துவிடுகிறார். நம்பிள்ளையின் இந்த செயலுக்குக் காரணம் கேட்ட அந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் “ஒருவர் தனது நலனில் ஈடு படுவது தவறு ஆனால் பிறர் நலத்திற்காக முயற்சி எடுப்பது  எவ்விதத்தில் தவறாகும்” என்றும் கேட்டனர். அதற்கு நம்பிள்ளை நாம் பட்ட நோவை நாமே சரி படுத்த முயல்கையில் நாம் எம்பெருமானையே அண்டி உள்ளவர்கள் என்ற ஸ்வரூபத்தை உணராதவர்கள் ஆகிறோம். அதே போன்று வேறொருவர் நோவிற்கு நிவாரணத்தை நாம் செய்கையில், எம்பெருமானின் ஞானம் மற்றும் ஶக்திகளை உணராமலும், மற்ற பக்தர்களின் நலனுக்கும் நாம் அவனையே  நாட வேண்டும் என்ற உண்மையை மறந்தவர்கள் ஆகிறோம் என்று விளக்கம் ஸாதித்தார். நம்பிள்ளையின் நிஷ்டையாகப்பட்டது இவ்வண்ணம் மிக உயர்ந்ததாக இருந்தது. நாம் ஒன்றை நினைவில் கொள்ளுதல் சாலச் சிறந்தது. அது யாதெனில் மாறனேரி நம்பியைப் போல, மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஏதேனும் துன்பங்கள் நேர்கையில் அவர்களுக்கு உதவியாய் இருத்தலும் நம் கடமையே .
 • பல ஆசார்ய திருவம்ஶங்களில் வந்து தோன்றியவர்கள் நம்பிள்ளையினிடத்தே ஶிஷ்யர்களாக எழுந்தருளியிருந்தனர். இவரது ஶிஷ்யர்களான நடுவில் திருவீதிப் பிள்ளை (125000 படி) மற்றும் வடக்குத் திருவீதிப் பிள்ளை (ஈடு 36000 படி) இருவருமே திருவாய்மொழிக்கு வியாக்யானம் செய்தருளினார். அதில் நடுவில் திருவீதிப் பிள்ளையின் வியாக்யானத்தை நம்பிள்ளை, மிக பெரியதாக இருந்ததால், கரையானுக்கு இரையாக்கி விட்டார். வடக்குத் திருவீதிப் பிள்ளை செய்தருளிய வியாக்யானத்தை, வரும் காலங்களில் கோயில் நாயனாரான அழகிய மணவாளமாமுனிகள் தானே வெளிப்படுத்தட்டும் என்று திருவுள்ளம் கொண்டு, ஈயுண்ணி மாதவர் என்பவரிடம் கொடுத்துவிட்டார். மேலும், நம்பிள்ளை  பெரியவாச்சான் பிள்ளையை திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப் பணிக்க அவரும் ஆசார்யன் திருவுள்ளப்படி 24000 படி வியாக்யானத்தைச் ஸாதித்தார். நம்பிள்ளை திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த காலத்தை நல்லடிக்காலம் என்றே கொண்டாடுவர் அடியார்கள்.
 • நம்பிள்ளை கோயில் வள்ளலார் என்பவரிடம் “குலம் தரும் “ என்று தொடங்கும் பாசுரத்திற்கு விளக்கமருளும்படி கேட்க, அதற்கு அவர், “குலம்  தரும் என்பது அடியேன் பிறந்த குலத்திலிருந்து தேவரீரின் குலமான  நம்பூர் குலத்தை  நமக்கு அருளியதே, அதே ஆகும்” என்று ஸாதித்தார். இது பண்டைக்குலத்தைத் தவிர்ந்து தொண்டக்குலத்தில் இருப்பதான பெரியாழ்வார் ஸ்ரீ    ஸூக்திகளுக்கு நிகராக உள்ளது. நம்பிள்ளையின் பெருமைகள் இவ்வாறு சிறந்து விளங்கின.

பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளை விஷயமாகக் கூறுவதை இப்பொழுது காண்போம். ஏழை எதலன் பதிகத்தில், “ஓது வாய்மையும்” பாசுரத்தில் (பெரிய திருமொழி 5.8.7) , ‘அந்தணன் ஒருவன் ‘ என்ற இடத்திற்கு விளக்கமருளுகையில், பெரியவாச்சான் பிள்ளை தனது ஆசார்யனையே சிறந்த அந்தணன் (தனித்துவம் பெற்ற பண்டிதர்) என்று கொண்டாடுகிறார். பெரியவாச்சான் பிள்ளையின் அற்புத விளக்கம் “முற்பட த்வயத்தைக் கேட்டு, இதிஹாஸ புராணங்களையும் அதிகரித்து, பரபக்ஷ ப்ரத்க்ஷேபத்துக்குடலாக ந்யாயமீமாம்ஸைகளும் அதிகரித்து, போதுபோக்கும் அருளிச் செயலிலேயாம்படி பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிரே ஒருவன் என்பது”. இவ்விடத்திலே ஸாந்தீபனி முனி சற்றே நம்பிள்ளயைப் போலே என்று ஸாதிக்கிறார். எனினும் நம்பிள்ளை ஸாந்திபனியைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தவர் – காரணம், நம்பிள்ளை எப்பொழுதும் பகவத் விஷயத்திலேயே ஈடுபட்டிருந்தவர். ஸாந்திபனியோ முகுந்தனான எம்பெருமான் கண்ணனிடம் இறந்த தனது மகனை திரும்பவும் கொண்டுவருமாறு கேட்டார்.

தமிழ் மற்றும் ஸமஸ்க்ருதத்தில் இருந்த ஆழ்ந்த ஞானத்தால், நம்பிள்ளை தன்னிடம் காலக்ஷேபம் கேட்க வருபவர்களை இன்பக் கடலில் ஆழ்த்தி விடுவார் . மேலும் நம்பிள்ளையினால் தான் திருவாய்மொழியும் மற்ற அருளிசெயல்களும் நன்கு பரவுவதில் புதிய உயரத்தை கண்டன. 6000 படி தவிர்த்த திருவாய்மொழிக்கான மற்ற நான்கு வ்யாக்யானங்கள் நம்பிள்ளையோடே தொடர்புடையவை ஆகும்

 • நஞ்சீயரால் ஸாதிக்க பட்டிருந்தாலும் 9000 படி வியாக்யானம் நம்பிள்ளையால் இன்னொரு முறை இன்னும் ஆழமான அர்த்தங்களோடு திரும்ப எழுதப்பட்டது.
 • நம்பிள்ளையிடம் கேட்டவைகளைக்கொண்டும் நம்பிள்ளையின் உத்தரவின் பெயரிலும் பெரியவாச்சான் பிள்ளை ஸாதித்ததே 24000 படி ஆகும் .
 • நம்பிள்ளையிடம் கேட்டதைக்கொண்டு வடக்கு திருவீதிப்பிள்ளை ஏடு படுத்தியதே 36000 படி வியாக்யானம் ஆகும்.
 • பெரியவாச்சான்பிள்ளையின் ஶிஷ்யரான வாதிகேஶரி அழகியமணவாள ஜீயர் ஸாதித்ததே 12000 படி வ்யாக்யானமாகும் . இதில் காணும் அர்த்தங்களைக்கொண்டு இது 36000 படியை மிகவும் நெருக்கமாக பின்பற்றுகிறது என்று நாம் உணரலாம். 

இவைகளோடன்றி தனது பெருத்த கருணையினால், நம் ஸம்பிரதாயத்தின் இரு தூண்களான, பூருவர்களிடமிருந்து கேட்டவைகளைக்கொண்டு சீர் வசனபூடனம் மற்றும் ஆசார்ய ஹ்ருதயங்களை ஸாதித்தவர்களான  பிள்ளை உலகாரியன் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கு நம்பிள்ளையின் அருளே காரணமாக அமைந்தது. நமது அடுத்த பதிவில் வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவத்தைக் காண்போம். 

nampillai-pinbhazakiya-perumal-jeer-srirangam
(பின்பழகராம் பெருமாள் சீயரோடு நம்பிள்ளை, திருவரங்கம் )

திருவரங்கத்தில் தனது சரம திருமேனியை விடுத்து மேலான திருநாட்டுக்கு நம்பிள்ளை எழுந்தருளினார். இதனைக் கண்ட நடுவில் திருவீதிப் பிள்ளை  பட்டர் தானும் சவரம் செய்துக்கொண்டு விடுகிறார் . (ஶிஷ்யர்களும் மகன்களும் ஆசார்யானோ தந்தையோ பரமபதிக்கையில் சவரம் செய்துகொள்வர்). கூர குலத்தில்  பிறந்தும் இவ்வாறு செய்ததை பட்டரின் திருத்தமையனார் நம்பெருமாளிடம் கூற, நம்பெருமாள் பட்டருக்கு அருளப்பாடிட்டு அனுப்பினார். இவ்வாறு செய்தருளியது ஏன் என்று கேட்ட நம்பெருமாளிடம், தமது குடும்பத்தை காட்டிலும் நம்பிள்ளையோடு  தாம் கொண்டுள்ள ஸம்பந்தத்தைப் பெரிதும் உகப்பதாக பட்டர் ஸாதித்தார். இதனைக்கேட்ட நம்பெருமாள் திருவுள்ளம் உகந்தார். 

நம் ஆசார்யனிடத்திலும் எம்பெருமானிடத்திலும் இவ்வாறான பற்று நமக்கும் ஏற்பட , நாம் அனைவரும் நம்பிள்ளையின் திருவடிகளைப் பிரார்த்திப்போம் . 

நம்பிள்ளையின் தனியன்:

வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்

நம்பிள்ளையின் வாழி திருநாமம்:

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே

காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே

நமது அடுத்த பதிவில் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்
அடியேன் ராமானுஜ தாசன் – எச்சூர் ஸ்ரீநிவாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/16/nampillai/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

பராசர பட்டர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/07/23/embar/) எம்பாரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் மற்றும் நம்பெருமாளின் அபிமான புத்திரரான பட்டரை  பற்றி அனுபவிப்போம் .

பராஶர பட்டர்  (திருவடிகளில் நஞ்சீயர்) – திருவரங்கம்

திருநக்ஷத்ரம்: வைகாசி அனுஷம்

திரு அவதாரத்தலம்: திருவரங்கம்

ஆசார்யன்: எம்பார்

ஶிஷ்யர்கள்: நஞ்சீயர்

திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம்

அருளிச்செய்தவை: அஷ்டஶ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோஶம் , பகவத் குண தர்ப்பணம் (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வியாக்யானம் ), ஸ்ரீரங்கராஜ ஸ்தோத்ரம் .

திருவரங்கநாதனின் பிரசாதத்தை ஆண்டாள் அம்மங்கார் உண்டதால் , கூரத்தாழ்வானுக்கும் ஆண்டாள் அம்மங்காருக்கும் திருவவதாரம்  செய்த மன்னுபுகழ் மைந்தர்கள் ஸ்ரீ பராஶர பட்டர்  மற்றும் இவரது திருத்தம்பியாரான வேத  வியாஶ பட்டர் ஆவர். ஒரு நாள் ஆழ்வான் உஞ்ச வ்ருத்திக்கு சென்ற போது  மழை பெய்து அவரால் அன்று எந்த தான்யங்களையும் எடுத்துவர முடியாததால் , ஆழ்வானும் ஆண்டாள் அம்மங்காரும் உணவருந்தாமலேயே அன்றிரவு உறங்கச் சென்றுவிட்டனர். அந்த வேளையில்  பெரிய பெருமாளுக்கு, அந்த நாளின் இறுதி தளிகை கண்டருளப்பண்ணும் மணி ஓசையை அவர்கள் கேட்கின்றனர் . அப்போது ஆண்டாள் எம்பெருமானை  நோக்கி “இதோ உமது பக்தரான ஆழ்வான் பிரஸாதம் இன்றி இருக்க தேவரீர் அங்கு கூடிக்குலாவி போகம் கண்டருள்கிறீர் ” என்று நினைத்தார். இதை உணர்ந்த பெரிய பெருமாள் உத்தம நம்பி மூலம் தமது பிரஸாதங்களை வாத்யம், சத்ரம் (குடை), சாமரம் உள்ளிட்ட ஸகல விருதுகளோடு ஆழ்வானுக்கும் அவர் தேவிகளுக்கும் அனுப்புகிறார். பிரஸாதம் ஆழ்வான் திருமாளிகையை  நோக்கி வர , “இதென்  ? இன்றைக்கு என்ன விசேஷம்” என்று பதறி எழுந்தார் . பிறகு ஆண்டாளை நோக்கி “நீ பெருமாளிடம் ஏதேனும்  நினைத்தாயோ ? ”  என்று கேட்க  ஆண்டாளும்  நினைத்தவற்றை சொல்ல, ஆழ்வான் ஆண்டாள் பெருமாளிடம் இவ்வாறு ப்ரார்த்தித்ததை நினைத்து மிகவும் வருந்தினார். பின் பிரஸாதத்திலிருந்து இரண்டு திரளைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, தாம் அமுது செய்து  ஆண்டாளுக்கும் கொடுத்தார். இந்த இரண்டு திரளைகளே அவர்களுக்கு பராஶர பட்டர்  வேதவ்யாஸ பட்டர் என்கிற இரண்டு அழகான திருக்குமாரர்களை அருளுகின்றன. இவ்விருவரும் திருவவதரித்த பத்துநாளும் கடந்த இரண்டாம் நாள், எம்பார் த்வய மஹா மந்த்ரோபதேஶத்தை  செய்தருள , எம்பெருமானார் எம்பாரையே இவ்விருவருக்கும் ஆசார்யனாய் இருக்க நியமித்தார். எம்பெருமானார் ஆழ்வானை, பராஶர பட்டரை பெரிய பெருமாளின் ஸ்வீகார புத்திரராய்த் தரும்படி நியமிக்க, ஆழ்வானும் அவ்வண்ணமே செய்தார். ஸ்ரீரங்கநாச்சியார் தானே பட்டரைத் தமது ஸந்நிதியில் வைத்துப் பார்த்துக்கொண்டார். ஒருமுறை , பால ப்ராயத்திலே பட்டர் பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்து வருகையில், எம்பெருமானார் அநந்தாழ்வான் உள்ளிட்ட ஸ்ரீவைஷ்ணவர்களிடம் பட்டரைத் தம்மைப் போலவே கொள்ளும் படிக் கூறினார். பட்டர்  தமது சிறு பிராயம் முதலாகவே மிகவும் விலக்ஷணராய்த் திகழ்ந்தார். இதை நமக்குப் பல வைபவங்கள் உணர்த்துகின்றன:

 •   ஒரு முறை பட்டர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு வித்வான் “ஸர்வஞ்ய பட்டன் “ என்று விருது ஊதி வர, “இதார்? எம்பெருமானார்  கூரத்தாழ்வான் முதலியாண்டான் எம்பார் உள்ளிட்ட பெரியர்வர்கள் இங்கே திருவரங்கத்திலே எழுந்தருளி இருக்க ஸர்வஞ்யன் என்ற விருதூதி வருவது ? ”  என்று திடுக்கிட்டு , அந்த வித்வானிடம் சென்று அவரை வாதத்திற்கு அழைத்தார் . அந்த வித்வானும் பட்டர்  சிறுபிள்ளை ஆதலால் , பட்டர்  என்ன கேள்வி எழுப்பினாலும் அதற்கு தாம் விடையளிப்பதாகக் கூறினார். பட்டர்  தன்  திருக்கரத்தில் ஒரு பிடி மண்ணை  எடுத்து, இதில் எவ்வளவு மண் இருக்கிறது என்று கேட்க பதிலின்றி திகைத்தார் அந்த வித்வான். பிறகு பட்டர்  “ஒரு பிடி மண் என்று பதிலளிக்க முடியாத நீர்  ஏன்  இவ்விருதை ஊதுகிறீர் ? ”  என்று கேட்க, பட்டரின்  பேரறிவைக் கண்டு வியப்புற்ற அந்த வித்வானும் பல்லக்கிலிருந்து இறங்கி பட்டரை  பல்லக்கிலே எழுந்தருளப்பண்ணி ஆழ்வான் திருமாளிகையிலே கொண்டு சேர்த்து பலவகையால் பட்டரைப் புகழ்ந்தார் .
 • பட்டரின் குருகுல வாசத்தில் ஒரு நாள், பட்டர்  தெருவில் விளையாடுவதைக் கண்டு, பாடசாலைக்குச் செல்லாமல் விளையாடுவது ஏன் என்று கூரத்தாழ்வான் கேட்கிறார். ஒரே சந்தையில் பாடத்தை க்ரஹிக்கக் கூடியவரான பட்டர்  அதற்கு “நேற்று சொன்ன பாடத்தையே  இன்றும் சொல்லுகிறார்கள் ” என்று கூறினார். இதைக் கேட்டு ஆழ்வான் பட்டரை பரீக்ஷிக்க பட்டர்  மிக எளிதாகப் பாசுரங்களைச் ஸாதித்துவிடுகிறார்.
 • ஒரு முறை கூரத்தாழ்வான் திருவாய்மொழியில் நெடுமாற்கடிமை  பதிகத்தைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது “சிறுமா மனிசர் “ என்று வருவதைக் கேட்டு பட்டர் , “எவ்வாறு ஒரே மனிதர் சிறியவராகவும் பெரியவராகவும் இருத்தல் ஸாத்தியம் ?”   என்று கேட்க ஆழ்வான் தானும் மிகவுகந்து “நல்லாய் ! முதலியாண்டான் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் போன்றோரைப் பார், உடல் மெலிந்து சிறுமையுடயராயிருந்தும் ஞானம் அனுட்டானம் பெருத்துப் பெருமை உடையவர்களாகவும் எழுந்தருளி உள்ளனர் அல்லவா ? ”  என்று   ஸமாதானம் ஸாதிக்க, பட்டர் தானும் தெளிவடைந்தார் .

பட்டர்  வளர்ந்த பின் எம்பெருமானார் தரிசனத்தின் ப்ரவர்த்தகர் ஆனார் . பணிவு, பெருந்தன்மை, அருளிசெயலில் பெருத்த மங்களாஶாஸனம் ரஸனை உள்ளிட்ட அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பப் பெற்றவராய் எழுந்தருளி இருந்தார். நம்பிள்ளை உள்ளிட்ட பூர்வாசார்யர்கள் பல வியாக்யானங்களில் பட்டரின் கருத்தையே மிகவும் சிறந்ததாய் உகந்தனர். ஆழ்வானைப் போலவே பட்டரும் திருவாய்மொழியிலும் திருவாய்மொழி அர்த்தங்களிலும் ஆழ்ந்து விடுவார். பட்டர்  திருவாய்மொழியில் ஆழ்ந்த பல தருணங்களை வியாக்யானங்களில் காணலாம். ஆழ்வார் நாயிகா பாவத்தில் பராங்குஶ நாயகியாய்ப் பாடும் போது, “ஆழ்வார் திருவுள்ளத்தில் என்ன  ஓடிக்கொண்டிருக்கிறது என்று அறிவார் ஆரும்  இல்லை ”  என்று பட்டர்  சாதிப்பார். பட்டரின் பணிவு , ஞானம் , பெருந்தன்மை உள்ளிட்ட கல்யாணகுணங்களை விளக்கும் பல வைபவங்கள் இருக்கின்றன. பட்டரின்  பணிவை மணவாளமாமுநிகள் யதிராஜ விம்ஶதியில் ஆழ்வான் மற்றும் ஆளவந்தாருடைய பணிவோடு ஒப்பிட்டுக் கொண்டாடுகிறார். வ்யாக்யானங்கள் பட்டரின் நிர்வாகங்கள் மற்றும்  ஐதிக்யங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன .

 • தனது ரங்கராஜ ஸ்தோத்திரத்தில் பட்டர் ஓர் நிகழ்வைக் காட்டுகிறார் . ஒருமுறை எவ்வாறோ ஒரு நாய் பெரிய கோயிலுக்குள் நுழைந்துவிட அர்ச்சகர்கள் லகு ஸம்ப்ரோக்ஷணம் செய்ய முடிவெடுத்து விடுகிறார்கள். இதை அறிந்த பட்டர்  பெரிய பெருமாளிடம் விரைந்து சென்று நாள்தோறும் தாம் கோவிலுக்கு வருவதற்காக ஸம்ப்ரோக்ஷணம் செய்யாத அர்ச்சக  சுவாமிகள் நாய் நுழைந்ததற்கு செய்கிறாரேன்? என்று விண்ணப்பிக்கிறார். மிகப்பெரிய வித்வானாய்  இருந்தும் பட்டர் தன்னை ஒரு நாயை விடத் தாழ்மையானவர்  என்று கருதினார்.
 • தேவலோகத்தில் தேவனாய்ப் பிறப்பதைக் காட்டிலும் திருவரங்கத்தில் ஒரு நாயாய் பிறப்பதையே தாம் பெரிதும் உகப்பதாக தனது ஸ்ரீ ரங்கராஜ ஸ்தோத்திரத்தில் பட்டர்  ஸாதிக்கிறார்.
 • ஒரு முறை நம்பெருமாள் திருமுன்பே சில கைங்கர்யபரர்கள் பொறாமையால் பட்டரை வைதார்கள் . அதற்கு பட்டர்  “ஒரு ஸ்ரீவைஷ்ணவன் இரண்டு காரியங்களை தவறாது செய்யவேண்டும் . ஒன்று பெருமாளின் கல்யாண குணங்களை வாயினால் பாடுதல் மற்றொன்று தனது தோஷங்களை நினைத்து வருந்துதல்” என்றும் “பெருமாளின் கல்யாண குணங்களைப் பாடுவதில் ஈடுபட்டிருந்த அடியேன், அடியேனது தோஷங்களை எண்ணி வருந்த மறந்து விட்டேன். தாங்கள் அவற்றைக்கூறி  அடியேனது கடமையை முடிப்பதில் பெருத்த உபாகாரிகளாய் இருந்துள்ளீர்கள். இதற்கு அடியேன் உங்களுக்கு ஸன்மானங்களை ஸமர்பிக்கவேண்டும் ” என்று சாதித்து அந்த கைங்கர்யபரர்களுக்கு அவரது திருவாபரணங்களையும் சால்வையையும் தந்தார். பட்டரின் பெருந்தன்மயாகப்பட்டது அவ்வாறாக இருந்தது.
 • பட்டரின் காலக்ஷேப கோஷ்டியில் பலர் எழுந்தருளியிருந்தது உண்டு. ஒருமுறை பட்டர் ஶாஸ்திரங்களைப் பெரிதும் கற்காத ஒரு ஸ்ரீவைஷ்ணவருக்காக காத்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட படித்த பல வித்வான்கள் காரணம் கேட்க பட்டர் “அந்த ஸ்ரீவைஷ்ணவரே வித்வானாய் இல்லாமல் இருந்தும் ,உண்மை நிலையை அறிந்தவர்” என்று ஸாதித்தார். இதை மேலும் உணர்த்த திருவுள்ளம் கொண்ட பட்டர் கோஷ்டியில் ஒரு வித்வானை அழைத்து “உபாயம் எது? ” என்று கேட்டார் . அதற்கு அந்த ஸ்ரீவைஷ்ணவர் “ஶாஸ்திரத்தில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் உள்ளிட்ட பல உபாயங்கள் இடம் பெற்றுள்ளன “ என்று விடையளித்தார். பின் பட்டர் “உபேயம் எது ?” என்று கேட்க அந்த வித்வானும் “ஶாஸ்திரத்தில் ஐஶ்வர்யம், கைவல்யம், கைங்கர்யம் போன்ற பல உபேயங்கள் இடம் பெற்றுள்ளன ” என்று ஸாதித்தார். பட்டர் வித்வான்களாய் எழுந்தருளியிருந்தும் தெளிவு இல்லையே என்று ஸாதித்து பின் அவர் காத்துக்கொண்டிருந்த அந்த ஸ்ரீவைஷ்ணவர் வந்ததும் இதே கேள்விகளை கேட்க , அந்த ஸ்ரீவைஷ்ணவர் “எம்பெருமானே உபாயம் எம்பெருமானே உபேயம் ”  என்று ஸாதித்தார். பட்டர் இதுவே ஸ்ரீவைஷ்ணவ நிட்டை என்றும் இதற்காகவே தான் காத்திருந்ததாகவும் ஸாதித்தார்.
 • ஒரு முறை சோமாசியாண்டான் பட்டரிடம் தனக்கு திருவாராதன க்ரமம் கற்றுத்தர வேண்டும் என்று பிரார்த்திக்க பட்டர் தானும் மிக விஸ்தரமாகச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் ஒரு நாள் சோமாசியாண்டான் பட்டர் திருமாளிகைக்கு எழுந்தருளினார். அப்பொழுது பட்டர் ப்ரஸாதம் உண்ண  எழுந்தருளியிருக்கும் வேளையில்  தான் திருவாராதனம் செய்ய மறந்தது நினைவுக்கு வர உடனே பெருமாளை அங்கே எழுந்தருளப்பண்ணி தளிகை அமுதுசெய்வித்து பின் உடனே உண்டார். இதனைக்கண்ட சோமாசியாண்டான் ஏன் தனக்கு மிக விஸ்தரமான திருவாராதனம் என்று கேட்க பட்டர், நீர் சோமயாகம் உள்ளிட்ட பெரிய காரியங்களைச் செய்யக் கூடியவர், ஆதலால் இலகுவாக இருப்பதொன்று உமக்கு நிறைவளிக்காது , நாமோ சிறிய திருவாராதனதுக்கே உணர்ச்சிவசப்பட்டு மயக்கமுறுகிறோம், ஆதலால் தான் உமக்கு பெரிதாகச் சொல்லிக் கொடுத்தோம் என்று ஸாதித்தார்.
 • ஒரு முறை திருவரங்கத்தில் உறியடி உத்சவத்தில் பட்டர் வேத பாராயண கோஷ்டியை விட்டு இடையர்களோடு சென்று நின்றார் . இதை பற்றி விசாரித்ததற்கு அந்நாள் இடையர்களுக்காக ஏற்பட்ட உத்சவ நாள் ஆன படியால் பெருமாளின் கடாக்ஷம் அவர்கள் மீதிருக்கும் என்றும் பெருமாள் கடாக்ஷம் இருக்கும் இடத்திலே நாம் இருத்தல் வேண்டும் என்றும் ஸாதித்தார் .
 • ஒரு முறை திருமலை அனந்தாழ்வான் பட்டரிடம் பரமபதநாதனுக்கு இரண்டு திருத்தோள்களா அல்லது நான்கு திருத்தோள்களா என்று கேட்டார். அதற்கு பட்டர் எவ்வாறாகவும் இருக்கலாம் , இரண்டாக இருந்தால் பெரிய பெருமாளைப் போல் இருப்பார் நான்காக இருந்தால் நம்பெருமாளைப் போல் இருப்பார் என்று பதில் ஸாதித்தார் .
 • அம்மணியாழ்வான் வெகுதூரத்திலிருந்து வந்து பட்டரிடம் தனக்கு இதத்தை உபதேசிக்கும்படி பிரார்த்திக்க பட்டர் திருவாய்மொழியில் நெடுமாற்கடிமை  பதிகத்தை விளக்கி, பெருமாளை அறிதல் குறைவாக அருந்துதல் என்றும் அடியார்களை அறிதல் முழுவயிற்றுப் பசிக்கு உண்ணுதல் என்றும் ஸாதித்தார் .
 • பட்டரின் பெருமைகளைக் கேட்டறிந்த அரசன் ஒருவன் பட்டரிடம் வந்து பொருளாதார உதவிக்காகத் தம்மிடம் வருமாறு விண்ணபிக்க, பட்டர், நம்பெருமாளின் அபய  ஹஸ்தம் (அஞ்சேல் என்றுணர்த்தும் திருக்கை) திரும்பிக்கொன்டாலும் தாம் மற்றோரிடத்தில் உதவி நாடி செல்லுவதாக இல்லை என்று ஸாதித்தார்.
 • தனக்கும் ஆழ்வானுக்கும் ஆசார்யன் – ஶிஷ்யன்  என்ற உறவுமுறை உள்ளதால் திருவரங்கத்தமுதனார் தன்னை பட்டரை விட உயர்ந்தவர் என்று கருத, ஒக்குமே ஆனாலும் தானே இதை சொல்லிகொள்ளுதல் கூடாது  என்று ஸாதித்தார் .
 • யாரோ ஒருவர் பட்டரிடம் “ஸ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்திரங்களை எவ்வாறாக நடத்த வேண்டும்”  என்று கேட்க பட்டர் “அக்கேள்வியே தவறானது மாற்றாக ஸ்ரீவைஷ்ணவர்களை தேவதாந்திரங்கள் எவ்வாறு நடத்தவேண்டும் என்று கேட்கப்பட்டிருக்கவேண்டும். ரஜோ அல்லது தமோ குணத்தால் தாங்கள் நிரம்பபெற்றிருப்பதாலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸாத்வீக குணம் நிரம்பப்பெற்றிருப்பதாலும் தேவதாந்திரங்களே  ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கலிலே அடிமைத்தனம் பூண்டிருக்க வேண்டும்”  என்று ஸாதித்தார் . இதே ஐதிஹ்யம் ஆழ்வான் விஷயத்திலும் விளக்க பட்டுள்ளது .
 • பட்டரின் பெருமைகள் எல்லைகளற்றவை . பெருத்த விதுஷியாய் இருந்தும் பட்டரின் தாயாரே பட்டரின் ஸ்ரீபாத தீர்த்தத்தை விரும்புவார். சிலர் அவரிடம் இவ்வாறு செய்யலாமா என்று வினவ “சிற்பி சிற்பத்தை செதுக்குவதால் அது ப்ராணப்ரதிஷ்டை ஆகி இறைவன் ஆன பின் அவன் அதை வணங்கக்கூடாது என்றில்லையே? அதேபோல பட்டரும் தன்  திருக்குமாரராய் இருந்தாலும் வணங்கத்தக்கவர்” என்று பதில் ஸாதிப்பார் .
 • ஒரு முறை ஒரு தேவதாந்த்ரபரரின் (எம்பெருமானை தவிர வேறொருவனை பூசிப்பவன்) வஸ்திரம் பட்டர் மீது பட்டுவிட்டது. பெருத்த விஷய அறிவுடையவராய் எழுந்தருளியிருந்தும் பட்டர் தனது தாயாரிடத்தே ஓடி வந்து “என் செய்ய?” என்று கேட்டார். அதற்கு ஆண்டாள் அம்மங்கார் ப்ராம்ஹணர் அல்லாத ஒரு ஸ்ரீவைஷ்ணவரின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ஏற்பதே ஒரே வழி என்று ஸாதித்தார் . அப்படியாகப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர் ஒருவரை பட்டர்  கண்டறிந்து அவரின் ஸ்ரீபாத தீர்த்தத்தை ப்ரார்த்தித்தார் . முதலில் பட்டரின் பெருமையைக் கண்டு ஸ்ரீவைஷ்ணவர் மறுத்தும் பட்டர்  மிகவும் ப்ரார்த்தித்ததால் குடுத்தலானார் .
 • ஒரு முறை காவேரி அருகில் ஒரு மண்டபத்தில் பட்டர் திருவாலவட்ட கைங்கர்யத்தில் இருந்தார். அப்போது ஸ்ரீவைஷ்ணவர்கள் பட்டரிடம் ஸந்தியாவந்தனத்திற்கான பொழுது வந்தது என்று கூற பட்டர் தான் பெருமாளின் அந்தரங்க கைங்கர்யத்திலே இருப்பதால் சித்திரகுப்தன் இதைப் பாவக்கணக்கோடு சேர்க்கமாட்டான் என்று ஸாதித்தார் . இதே கோட்பாட்டை  அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆசார்ய ஹ்ருதயத்தில் “அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும்” என்று விளக்குகிறார். ஆனால் கைங்கர்யம் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக நித்யகர்மாவை விடுத்தல் ஆகாது என்று அறிதல் வேண்டும்.
 • ஒரு முறை அத்யயநோத்சவத்தில் ஆண்டாள் அம்மங்கார் பட்டரிடம் த்வாதஶி பாரணை செய்ய நினைவூட்டினார். அதற்க்கு பட்டரோ “பெரிய உத்ஸவ வேளையிலே ஆரேனும் ஏகாதஶி/த்வாதஶியை நினைவு கொள்வார்களோ?” என்று கேட்டார். கருத்து யாதெனில், பகவதனுபவத்தில் இருக்கும் வேளையிலே உண்டி உள்ளிட்டவைகளை நினைவு கொள்ளுதல் ஆகாது என்பதேயாம் (மாறாக கர்த்தவ்யமான ஏகாதஶி விரதத்தை அனுட்டித்தல் அவசியமில்லை என்பதல்ல).
 • பட்டர் தனது ஶிஷ்யர்களிடம் சரீரத்திலும் சரீர அலங்காரத்திலும் பற்றை விட வேண்டும் என்று ஸாதித்தார். அதற்கு அடுத்தநாளே பட்டர் பட்டு வஸ்த்ரங்கள் திருவாபரணங்கள் உள்ளிட்டவைகளை சாற்றிக்கொண்டார்  . இதனை கண்ட ஶிஷ்யர்கள் பட்டரின் உபதேசமும் செயல்களும் முன்னிற்குப்பின் முரணாய் அமைந்ததை பட்டரிடம் கேட்க, பட்டர் தான் தமது திருமேனியைப் பெருமாளின் நித்யவாஸ ஸ்தலமாய் காண்பதாகவும், எவ்வாறு பெருமாள் சிறிய காலத்துக்கே எழுந்தருளும் மண்டபத்திற்கும் அலங்காரம் உண்டோ அதே போலத்தான் இதுவும் என்றும் இப்படியாகப்பட்ட அத்யவஸாயம் ஒருவருக்கு ஏற்படுமேயானால் அவர்  தனது சரீரத்தைப் பலவகையிலும் அலங்கரித்தல் ஒக்கும் என்றும் ஸாதித்தார்.
 •  ஆழ்வானின் ஶிஷ்யனான வீரஸுந்தர ப்ரம்மராயன் என்னும் சிற்றரசன் திருவரங்கத்தில் மதிள்  எழுப்ப ஆசைப்பட்டான். அவ்வாறு செய்கையில் பிள்ளைப் பிள்ளை ஆழ்வானின் திருமாளிகைக்கு இடையூறு செய்ய தீர்மானித்தான். பட்டர் அறிவுறுத்தியும் மன்னன் கேட்காததையடுத்து பட்டர் திருவரங்கத்தை விடுத்துத்  திருக்கோட்டியூருக்குச்  சென்று விட்டார். அரங்கனின் பிரிவைத்  தாள முடியாததால் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தார். பின் மன்னன் இறந்துவிடுகிறான். இதனையடுத்து பட்டர் திருவரங்கத்திற்குத் திரும்பிவிட்டார். திரும்பும் வழியிலே பட்டர் ஸாதித்ததே ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம் ஆகும் .
 • ஒருமுறை சில வித்வான்களை பட்டர் வாதத்தில் தோற்கடித்தார். பட்டரை ஏமாற்ற நினைத்த அவர்கள் குடத்தில் ஓர் பாம்பை வைத்து மூடிவிட்டு இதில் என்ன இருக்கிறது என்று பட்டரிடம் கேட்டனர். அதில் பாம்பிருப்பதை அறிந்த பட்டர் “திருவெண்கொற்ற குடை இருக்கிறது ”  என்று பதில் ஸாதித்தார். இதைக் கேட்டு அவ்வித்வான்கள் குழப்பம் அடைய, பொய்கை ஆழ்வார்சென்றால் குடையாம்”  பாசுரத்தில் சாதிப்பதற்கு ஒக்கும் வண்ணம் பாம்பைக் குடை என்று கூறலாம் என்று ஸமாதானம் ஸாதித்தார்.

இவற்றைப் போலவே எத்தனை முறை அனுபவித்தாலும் ஆராவமுதமாய் விளங்கும் பட்டரின் வைபவங்கள் பல உள்ளன.

ஸ்ரீரங்கநாயகியார் மீது பெரும் பற்றுடையவராய் பட்டர் எழுந்தருளியிருந்தார். நம்பெருமாளைக் காட்டிலும் நாச்சியாரிடத்திலேயே பெரும் அன்புடையவராய் பட்டர் எழுந்தருளி இருந்தார். ஒரு முறை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தைச் சாற்றிக்கொண்டு பட்டரிடம் தான் ரங்கநாயகியைப் போல் இருக்கிறாரா என்று கேட்க பட்டர் எல்லாம் பொருத்தமாக உள்ளன ஆயினும் திருக்கண்களில் தாயார் வெளிப்படுத்தும் கருணையை நும்மிடத்தே காண இயலவில்லை என்று ஸாதித்தார்.    ஸீதா பிராட்டியையும் சக்ரவர்த்தி திருமகனாரையும் கண்டு அனுமன், ஸீதையையே அஸிதேக்ஷணை (அதாவது அழகிய கண்கள் உடையவள்), ராமனைக்காட்டிலும் கண்களில் அழகு பெற்றவள், என்று கொண்டாடியதை  இது நமக்கு நினைவூட்டுகிறது. ஸ்ரீரங்கநாயகி மீது பட்டர் கொண்டுள்ள பக்தியின் பெருக்கே ஸ்ரீகுணரத்ன கோஶம் ஆகும் .

பட்டர் புரிதலுக்குக் கடினமாய் இருந்த பல பாசுரங்களுக்கு மிக ஆச்சர்யமான விளக்கங்களை அருளக்கூடியவர் . அவற்றில் இரண்டை நாம் இப்போது காண்போம் .

 • பெரிய திருமொழியில் 7.1.1 கறவா மடநாகு பாசுரத்திற்கு விளக்கம் ஸாதிக்கையில் பிள்ளை அமுதனார் ஆழ்வார் பசுமாடு என்றும் எம்பெருமான் கன்று என்றும் ஸாதித்தார். அதாவது தாய்ப்பசு கன்றுக்கு ஏங்குவது போலவே ஆழ்வார் பெருமாளுக்கு ஏங்குகிறார் என்பதே இதன் பொருள். பட்டர் இதைச் சற்றே  மாற்றி விளக்கினார். “கறவா மட நாகு தன் கன்று “ என்று சேர்த்தே கொள்ள வேண்டும் என்று பட்டர் ஸாதித்தார் . அதாவது “எப்படி கன்றாகப்பட்டது தாய் பசுவிற்கு ஏங்குமோ அதே போல ஆழ்வார் பெருமாளுக்கு ஏங்குகிறார் ” என்பதேயாம். பூர்வர்களும் பட்டரின் இந்த விளக்கத்தையே மிகவும் உகந்துள்ளனர் .
 •  பெரிய திருமொழியில் 4.6.6 பாசுரத்தின் வ்யாக்யானத்தில், ஆப்பான் திருவழுந்தூர் அரையர் மற்றுமான ஸ்ரீவைஷ்ணவர்கள் இப்பாசுரத்தின் அர்த்தத்தை விளக்குமாறு பட்டரிடம் ப்ரார்த்தித்ததாக வருகிறது . பட்டரும் அவர்களை பாசுரத்தை அனுசந்திக்கச்செய்து சடக்கென்று ஆழ்வார் இராவணனின் தோரணையில் ஆழ்வார் இந்த பாசுரத்தைச் ஸாதிப்பதாக ஸாதித்தார். இராவணன் மிகவும் செருக்கோடே “மூன்று உலகங்களையும் வென்ற என்னிடம் ஒரு ஸாதாரண மானுடன் தன்னைப் பெரும் வீரனென எண்ணி போர் இடுகிறான் ” என்று நினைத்து இறுதியில் தோல்வியுற்று மாண்டதாக, பட்டர்  விளக்கமருளினார் .

திருநாராயனபுரத்திற்குச் சென்று வேதாந்தியிடம் (நஞ்சீயர்) வாதம் செய்து அவரை திருத்திப்பணிகொண்டு எம்பெருமானார் தரிசனத்திற்கு கொண்டு சேர்த்தது பட்டரின் பெருமைகளில் மிக முக்கியமான ஒன்றாகும். நஞ்சீயரை திருத்திப்பணி கொள்ளவேண்டும் என்பது எம்பெருமானாரின் திவ்ய ஆணை ஆகும் . மாதவாசார்யரிடம் (நஞ்சீயரின் பூர்வாஶ்ரமப் பெயர்) சித்தாந்த வாதம் நடத்த பட்டர் வாத்ய  கோஷங்கள் முழங்க, பெரிய ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியுடன் திருநாராயணபுரம் வரை பல்லக்கில் எழுந்தருளினார். செல்லும் வழியில், இவ்வாறாகப்  பெருத்த விருதுகளோடே சென்றால், மாதவாசாரியாரின் ஶிஷ்யர்கள் வழியிலே தடுத்து வாதத்திற்கு அழைத்து, மாதவாசாரியாருடனான சந்திப்பை தாமதிப்பர் , என்று அறிந்த பட்டர் , மிக எளிமையான ஆடைகளை தரித்துக்கொண்டு மாதவாச்சாரியாரின் ததியாராதனக் கூடத்திற்குச் சென்றார். அங்கே பட்டர் உணவருந்தாமலேயே உட்கார்ந்திருப்பதைக் கண்ட மாதவாசாரியார் பட்டரிடம் வந்து உணவருந்தாமைக்கு காரணமும், பட்டர்க்கு  வேண்டியது யாதென்றும் கேட்டார். அதற்கு பட்டர் , தான் மாதவாசாரியாரோடே வாதம் செய்ய விரும்புவதாகக் கூறினார். பட்டரைப் பற்றி முன்பே கேட்டிருந்த மாதவாசாரியார், பட்டரை  விடுத்தால் தம்மை வாதத்திற்கு அழைக்கும் தைர்யம் வேறொருவருக்கு வராது என்பதால், வந்தவர் பட்டர் என்று உணர்ந்து , பட்டரோடு வாதத்தில் ஈடு பட்டார். எம்பெருமானின் பரத்துவத்தை திருநெடுந்தாண்டகத்தை வைத்து ஸ்தாபித்த பட்டர், பின் ஶாஸ்திரங்களை கொண்டு அனைத்து அர்த்தங்களையும் அளித்தார். தனது தோல்வியை ஒத்துக்கொண்ட மாதவாசாரியார் பட்டரின் திருவடித் தாமரைகளில் தஞ்சம் அடைந்து தன்னை ஶிஷ்யனாய் ஏற்கவேண்டும் என்று பிரார்த்தித்தார். பட்டர் தானும் மாதவாசாரியாரை திருத்திப்பணிகொண்டு அவருக்கு அருளிச்செயல்களையும் ஸம்பிரதாய அர்த்தங்களையும் உபதேசித்து வந்தார். பின்னர், பட்டர் மாதவாசாரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு அத்யயனோத்ஸவம் துவங்குவதற்கு ஒரு நாள் முன்னர் திருவரங்கம் சென்று சேர்ந்தார். பட்டரை  வரவேற்கத் திருவரங்கத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பட்டர் பெரியபெருமாளிடத்தே நடந்த வ்ருதாந்தங்களையும் தாம் வாதப்போரில் வென்றதையும் ஸாதித்தார். பெரியபெருமாள் திருவுள்ளம் குளிர்ந்து பட்டரிடம் திருநெடுந்தாண்டகம்   ஸேவிக்க உத்தரவிட்டார். இதை முன்னிட்டு, அன்று தொட்டு இது நாள் வரை வேறெங்கும் இல்லாது  திருவரங்கத்தில் மட்டும் அத்யயனோத்ஸவம் திருநெடுந்தாண்டக அனுஸந்தானத்தோடே தொடங்குகிறது.

பட்டரே ரஹஸ்ய த்ரயத்தை முதலில் க்ரந்தப்படுத்தியவர். பட்டர் ஸாதித்ததான அஷ்டஶ்லோகி திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஶ்லோகங்களை, எட்டே ஶ்லோகங்களுக்குள் விளக்கும் ஒரு அறிய அருளிச்செயல் ஆகும். ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்தில் மிகவும் கடினமான ஶாஸ்த்ரார்த்தங்களை மிக எளிமையான ஶ்லோகங்களைக்கொண்டு விளக்கியுள்ளார். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கான தனது வ்யாக்யானத்தில், ஒவ்வொரு  திருநாமமும் பகவானின் ஒவ்வொரு குணத்தை எடுத்துக்காட்டுகின்றன என்று பட்டர் காட்டுகிறார். ஸ்ரீரங்கநாயகியார் மீது பட்டர் ஸாதித்ததான ஸ்ரீ குணரத்ன கோஶம் மற்றோரொப்பில்லாதது.

சுமார் நூறாண்டுகள் அல்லது அதற்கு மேலாக எழுந்தருளியிருந்த பூர்வாசார்யர்களைக் காட்டிலும் பட்டர்  மிக குறுகியகாலமே எழுந்தருளி இருந்தார். பட்டர் இன்னும் சில காலங்கள் எழுந்தருளி இருந்திருந்தால் இங்கிருந்து பரமபதத்திற்குப் படிக்கட்டுகளைக் கட்டி இருப்பார் என்றே கூறுவர் நல்லோர். பட்டர் நஞ்சீயரை திருவாய்மொழிக்கு வியாக்யானம் எழுதப்பணித்தார் . மேலும் நஞ்சீயரை தர்ஶன ப்ரவர்த்தகராகவும் நியமித்தார்.

ஒரு முறை பட்டர் பெரியபெருமாள் திருமுன்பே சில பாசுரங்களையும் அதன் அர்த்தங்களையும் ஸாதிக்க , பெரிய பெருமாள் திருவுள்ளம் உகந்து “உமக்கு மோக்ஷம் அளித்தோம் ”  என்று ஸாதிக்க பட்டரும் பேரானந்தத்தோடே “மகா பிரஸாதம்! ஆயினும் அங்கு நமக்கு நம்பெருமாளை காண இயலவில்லை எனில் , பரமபதத்திலிருந்து ஓட்டை போட்டு குதித்து திருவரங்கத்திற்கு வந்து விடுவோம்” என்று ஸாதித்தார். பட்டர் இதனை தனது தாயாரிடம் சென்று கூற, அவர் மிகவும் ஆனந்தம் அடைந்தார் . (இதுவே பூர்வர்களின் நிஷ்டையாகும். அவர்கள் வந்த காரியத்தை நன்கு அறிந்திருந்தனர்). இச்செய்தியை செவியுற்ற சில ஸ்ரீவைஷ்ணவர்கள் பட்டரின் பிரிவை எண்ணித் தாளாது பட்டரிடம் சென்று , “பெரியபெருமாள் ஆனந்தத்தில் அளித்தாராகில் நீர் ஏன்  அதைப் பெற்றுக்கொண்டீர்? உம்மைப் பிரிந்த நாங்கள் எவ்வாறு இங்கு இருப்போம்? உம்மால் திருத்திப்பணி கொள்ளவேண்டியவர் பலரிருக்க இவ்வாறு செய்தருளியதே?” என்று கேட்டனர். அதற்கு  பட்டர் , “எவ்வாறாக உயர்வகை நெய்யாகப்பட்டது நாயின் வயிற்றில் இருப்புக்கொள்ளாதோ நாமும் அவ்வாறே இருள்தருமாஞாலத்தில் இருப்புக்கொள்ளோம்” என்று ஸாதித்தார்.

அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் அழைத்து மிகச் சிறந்த விதத்தில் பட்டர் தனது திருமாளிகையில் ததியாராதனம் செய்தார். பிறகு பத்மாஸனத்திலிருந்து திருநெடுந்தாண்டகத்தை ஸாதித்துக்கொண்டே புன்முறுவல் தரித்துக்கொண்டு, திருநாட்டுக்கு எழுந்தருளினார். அனைவரும் பட்டரின் பிரிவை  தாங்கமாளாது கண்ணீர் வடித்தாலும் சரம கைங்கர்யத்தை செவ்வனே செய்துக்கொண்டிருந்தனர். ஆண்டாள் அம்மங்காரும் பட்டரின் திருமேனியை ஆரத்தழுவி விடையளித்தார்.

கல்லையும் உருக்கும் பிரபாவம் கொண்டது பட்டரின் வைபவம். எம்பெருமானாரிடத்திலும் ஆசார்யனிடத்திலும் மாறாத பற்று ஏற்பட நாமும் பட்டரின் திருவடித்தாமரைகளை சரணடைவோம் .

பட்டர் திருவடிகளே சரணம்

பட்டரின் தனியன்:

ஸ்ரீ பராஶர பட்டார்ய: ஸ்ரீரங்கேஶ புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ஶ்ரேயஸே மேஸ்து பூயஸே ||

பட்டரின் வாழி திருநாமம்:

தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே

அடியேன் ராமானுஜ தாஸன்
எச்சூர் ஸ்ரீநிவாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/09/11/parasara-bhattar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

எம்பார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/07/22/emperumanar/) எம்பெருமானரைப் பற்றி அனுபவித்தோம் . இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யன் விஷயமாகக் காண்போம் .

எம்பார் , மதுரமங்கலம்

திருநக்ஷத்ரம்: தை புனர்பூசம் 

திரு அவதாரத்தலம்: மதுரமங்கலம்

ஆசார்யன்: பெரிய திருமலை நம்பிகள்

ஶிஷ்யர்கள்: பராசர பட்டர் , வேத வ்யாஶ  பட்டர்

திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம்

அருளிச்செய்தவை: விஞ்ஞான ஸ்துதி , எம்பெருமானார் வடிவழகு பாசுரம்

மதுரமங்கலத்தில் கமலநயன பட்டர் ஸ்ரீதேவி அம்மாள் தம்பதியினருக்கு திருக்குமாரராய் திருவவதாரம் செய்தவர் கோவிந்தப்பெருமாள். இவர் கோவிந்த  தாஸர், கோவிந்த  பட்டர்  மற்றும் ராமானுஜ பதச்சாயையார் என்றும் அழைக்கப் படுகிறார். நாளடைவில் இவர் எம்பார் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப்பட்டார். இவர் எம்பெருமானாரின் சிரத்தியார் (சிறிய தாயார்) திருமகனாவார். இவர்  யாதவப்ரகாசரின் வாரணாஸி யாத்திரையில் இளையாழ்வாரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து அவரைக் காப்பதில் முக்கியமான பங்கு வகித்தார். எம்பெருமானாரைக் காப்பாற்றிய பின்பு, இவர் தம் குருவான யாதவப்ரகாஶருடன் வாரணாசி யாத்திரையைத் தொடர்ந்தார் . இந்த யாத்திரையில் இவர் பரமசிவனாரின் பக்தராகி காளஹஸ்தியோடே இருந்து விட்டார்.

இவரைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் கொண்ட எம்பெருமானார், அப்பணியை செவ்வனே செய்து முடிக்கப் பெரிய திருமலை நம்பிகளை ப்ரார்த்தித்தார். பெரிய திருமலை நம்பிகளும் உடனே உகந்து , காளஹஸ்திக்குச் சென்று, கோவிந்தப்பெருமாள் நந்தவனத்திற்குப் பூக்களைப் பறிக்க வரும் வேளையிலே , “தேவன் எம்பெருமானுக்கல்லால் பூவும் பூசனையும் தகுமே ” (அதாவது ஸ்ரீமன் நாராயணனே பூக்களைக்கொண்டு ஆராதிக்கத்தக்கவன் தவிர வேறாரும் அல்லன்) என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தை அனுசந்தித்தார் . இதை கேட்ட கணமே, கோவிந்தப்பெருமாள்  தமது தவறை உணர்ந்து , பரமசிவனாரிடத்தே தாம் வைத்த பற்றையும் துறந்து, பெரிய திருமலை நம்பிகளை சரண் புகுந்தார். பெரிய திருமலை நம்பிகள் தானும் இவருக்கு பஞ்சசம்ஸ்காரங்களைச் செய்து வைத்து இவருக்கு அர்த்தங்களை உபதேசித்தார். கோவிந்தப்பெருமாளும் தேவுமற்றறியாதவராய் பெரிய திருமலை நம்பிகள் திருவடிகளே எல்லாமாகக் கொண்டு , பெரிய திருமலை நம்பிகளிடத்தே இருந்து வந்தார் .

ஸ்ரீமத் ராமாயணத்தை பெரிய நம்பிகளிடமிருந்து கற்பதற்காக எம்பெருமானார் திருவேங்கடம் (கீழ் திருப்பதி ) அடைகிறார் . அந்த சமயத்தில் நடந்த சிலவற்றை கொண்டு நாம் எம்பாரின் வைபவங்களை அறியலாம். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம்

 • ஒரு சமயம், கோவிந்தப்பெருமாள் தனது ஆசார்யனான பெரிய திருமலை நம்பிகளுக்குப் படுக்கை தயாரித்து அதில் தான் முதலில் படுத்துப் பார்க்கிறார். இதைக் கண்ட எம்பெருமானார் இதைப்  பெரிய திருமலை நம்பிகளிடத்தே தெரிவிக்க , அவரும் இது பற்றி கோவிந்தப்பெருமாளிடம் விசாரிக்கிறார். அதற்கு கோவிந்தப்பெருமாள், இவ்வாறு செய்வதால் தமக்கு நரகம் வாய்க்கும் என்றாலும் ,ஆசார்யன் படுப்பதற்குப் படுக்கை பாங்காக இருக்கிறதா என்பதை அறியவே தாம் இவ்வாறு செய்வதால், தமக்கு நரகம் வாய்க்கும் என்ற கவலை இல்லை என்றும்  ஆசார்யன் திருமேனியை பற்றியே தாம் கவலை கொள்வதாகவும் சாதித்தார். மணவாளமாமுநிகள்  தனது உபதேச ரத்தினமாலையில் “தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை ஆசையுடன் நோக்குமவன் ” என்று ஸாதிப்பதையும், எம்பாரின் இந்த வைபவத்தையும் நாம் சேர்த்து அனுபவிக்கலாமே !
 • ஒரு முறை கோவிந்தப்பெருமாள் ஒரு பாம்பின் வாயில் ஏதோ செய்து விட்டுத்  தேக சுத்திக்காக குளித்து விட்டு வருவதை கண்ட எம்பெருமானார், இதை பற்றி கோவிந்தப்பெருமாளிடம் விசாரிக்க , கோவிந்தப்பெருமாள் தாமும், அந்தப்  பாம்பின் வாயில் முள் சிக்கி இருந்ததையும் அதை தாம் நீக்கியதையும் கூறினார். இதை கேட்ட எம்பெருமானார் , இவரின் ஜீவ காருண்யத்தை எண்ணிப் பூரித்தார்.
 • திருவேங்கடத்திலிருந்து எம்பெருமானார் கிளம்பும் தருவாயில், பெரிய நம்பிகள் எம்பெருமானார்க்கு தாம் ஏதேனும்  தர விழைவதாகக் கூறினார். எம்பெருமானார் தானும் , கோவிந்தப்பெருமாளைக் கேட்டார். நம்பிகளும் மகிழ்ந்து, கோவிந்தப் பெருமாளிடம் எம்பெருமானாரைத் தாமாக கொள்ளும் படிக்கு அறிவுறுத்தி அனுப்பிவைக்கிறார். கோவிந்தப்பெருமாள் எம்பெருமானாரோடே காஞ்சி வரை வந்து, ஆசார்யனைப் பிரிந்த துயர் தாளாது திருமேனி வெளுத்திருந்தார். இதைக் கண்ட எம்பெருமானார், இவரைப் பெரிய திருமலை நம்பிகளை ஸேவிக்க அனுப்ப, வந்த கோவிந்தப்பெருமாளுக்கு  “விற்ற பசுவிற்கு புல்  இடுவாருண்டோ ” என்று திருமுகம் காட்டாமலேயே பெரிய திருமலை நம்பிகள் அனுப்பி  விட்டார். தனது ஆசார்யனின் திருவுள்ளம் அறிந்த கோவிந்தப்பெருமாள் , நம்பிகளின் திருமாளிகை வாசலிலிருந்தே தெண்டன் ஸமர்பித்து விட்டு எம்பெருமானாரிடம் திரும்பினார்.

எம்பெருமானார் திருவரங்கத்திற்குத்  திரும்பிய பின் , கோவிந்தப்பெருமாளின் திருத்தாயார் வேண்ட, எம்பெருமானார் கோவிந்தப்பெருமாளின் திருமணத்தைச் செய்துவைக்கிறார் . கோவிந்தப்பெருமாள் தனது இல்லற வாழ்கையில் ஈடு படாதிருந்தார். எம்பெருமானார் இவரை ஏகாந்தத்தில் ஈடுபடும்படிக்கு அறிவுறுத்த, இவர் எம்பெருமானாரிடத்தே வந்து தாம் எல்லா இடங்களிலும் பெருமாளைப் காண்பதால் தன்னால் ஏகாந்தத்தில் இருத்தல் இயலவில்லை என்று கூறினார். இதைக் கேட்ட எம்பெருமானார் இவரின் நிலையை அறிந்து இவர்க்குத்  துறவறம் அளித்து , எம்பார் என்னும் திருநாமத்தைச் சாற்றித் தம்மோடே இருக்கும் படிக்கு ஆணையிட்டார்.

ஒரு முறை ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பாரின் ஞானம் பக்தி வைராக்கியம் உள்ளிட்ட குணங்களைக் கொண்டாட, எம்பாரும் “ஒக்கும்” என்று ஆமோதித்தார். இதைக் கண்ட எம்பெருமானார் இவரை அழைத்து “நைச்யானுஸந்தானம் இன்றி இவற்றை ஏற்பது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் அல்லவே? ” என்று கேட்க, எம்பார் அதற்கு, கீழ் நிலையில் இருந்த தம்மைத் திருத்திப்பணிகொண்டது தேவரீர் ஆகையால் இப்பெருமைகள் யாவும் தேவரீரையே சாரும் என்று சாதித்தார். இதை எம்பெருமானாரும் ஆமோதித்து எம்பாரின் ஆசார்ய பக்தியைக் கொண்டாடினார் .

கூரத்தாழ்வானின் மனைவியாரான ஆண்டாள், பெரிய பெருமாள் கிருபையோடு அனுப்பிவைத்த பிரசாதத்தால் , இரண்டு திருக்குமாரர்களை ஈன்றெடுக்க , எம்பெருமானார் எம்பாரோடே  அக்குழந்தைகளின் நாம கரணத்திற்கு (பெயர் இடும் வைபவத்திற்கு) கூரேஶரின் திருமாளிகைக்கு வருகை தந்தார். எம்பெருமானார், குழந்தைகளை எடுத்துகொண்டு வரும்படிக்கு எம்பாரைப் பணிக்க , எம்பார் குழந்தைகளை எடுத்து வரும்போது அவர்களின் ரக்ஷைக்கு வேண்டி த்வயானுஸந்தானம் செய்தார். குழந்தைகளைக் கண்டவுடன், அவர்கள் எம்பாரிடமிருந்து த்வய மஹாமந்திரத்தை உபதேசிக்க பெற்றார்கள், என்று உணர்ந்த எம்பெருமானார் , எம்பாரையே அவர்களுக்கு ஆசார்யனாய் இருக்கும் படி நியமித்தார். இதனைத் தொடர்ந்து பராஶர பாட்டரும் வேத  வ்யாஶ   பட்டரும்  எம்பாரின் ஶிஷ்யர்கள் ஆனார்கள்.

மண்ணுலக விஷயங்களில் எப்போதும்  வெறுப்பு கொண்டிருந்த எம்பார் பகவத் விஷயங்களில் பெரும் ஈடுபாட்டை கொண்டிருந்தார். பகவத் விஷயத்தை கொண்டாடி மகிழும் ரஸிகராகவும் எம்பார் எழுந்தருளி இருந்தார் . எம்பாரின் பகவத் அனுபவங்களைப் பற்றி வியாக்யானங்களில் பல இடங்களில் கோடிட்டு காட்டப் பட்டுள்ளது . அவற்றில் சிலவற்றை நாம் இப்போது கண்டு அனுபவிப்போம்:

 • பெரியாழ்வார் திருமொழின் இறுதிப் பாசுரத்தில் , “சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே ” என்பதற்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அர்த்தம் ஸாதிக்கும்படி கேட்க , அதற்கு எம்பார் இந்தப் பாசுரத்திற்கு தான் எம்பெருமானாரிடம் அர்த்தம் கேட்டதில்லை என்று ஸாதிக்கிறார். ஆயினும் எம்பெருமானாரின் பாதுகைகளைத்  தமது திருமுடி மேல் வைத்து ஒரு கணம் த்யானித்த பின் அக்கணமே எம்பெருமானார் இதற்கான விளக்கத்தை தமக்கு உணர்த்தியதாகவும், இது “பாடவல்லார் – சாயை போல – தாமும் அணுக்கர்களே ” , அதாவது எவர் ஒருவர் இப்பாசுரங்களைப் பாடுகிறார்களோ அவர் எம்பெருமானின் நிழல் போன்று அவரை விட்டுப் பிரியாமல் இருப்பார், என்று புரிந்து கொள்ளப்பட வேண்டியது என்றும் ஸாதித்தார் .
 • கண்ணன் எவ்வாறு அனைவரையும் அச்சுறுத்துகிறான் என்று விளக்கும் பெரியாழ்வார் திருமொழியின் 2.1 பதிகத்திற்கு அபிநயம் காட்டுகையில் உய்ந்தபிள்ளை அரையர் , கண்ணன் தன்  திருக்கண்களை அச்சுறுத்தும் விதத்தில் வைத்து கோப குமார்களை (ஆயர் பிள்ளைகளை) அச்சுறுத்துகிறார் என்று காட்டுகிறார். இதைப் பின்னே இருந்து கவனித்து வந்த எம்பார் , திருவாழியாழ்வானையும் திருச்சங்காழ்வானையும் தோளில் வைத்துக் காட்டி கண்ணன் ஆயர் சிறுவர்களை அச்சுறுத்துகிறார் என்று காட்ட, அதைப் புரிந்துகொண்ட அரையர் எம்பார் காட்டிய படி அடுத்த முறை அபிநயம் காட்டினார். இதை கண்ட எம்பெருமானார் , எம்பாராலேயே இவ்வாறாக அர்த்தங்கள் தர இயலும் என்பதால் , ” கோவிந்தப்பெருமாளே இருந்தீரோ?”  என்று கேட்டார்.
 • கண்ணனிடத்தே நம்மாழ்வார் , திருவாய்மொழியில் “மின்னிடை மடவார்கள் ” (6.2) பதிகத்தில், அனுபவித்த விஶ்லேஷத்தை , ஒரு  ஸந்யாஸியாய் இருந்தும் எம்பாரால் உணர முடிந்தது . இப்பதிகத்திற்கு அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களும் ஆச்சர்யித்து  உகக்கும் வண்ணம் எம்பார் விளக்கமும் ஸாதித்தார். இது “பரமாத்மநி ரக்த: அபரமாத்மநி  நிரக்த: ” என்னும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது . அதாவது “எம்பெருமான் விஷயத்தில் பெருத்த ஈடுபாடோடே இருத்தல் , எம்பெருமானை தவிர்த்த விஷயங்களில் ஈடுபாடின்றி இருத்தல் ” . 
 • திருவாய்மொழியின் 10.8.3 பாசுரத்தின் வ்யாக்யானத்தில் மிக ஆச்சர்யமான நிகழ்வு காட்டப்படுகிறது. திருவாய்மொழியில் ஆழ்ந்து மடத்தில் நடந்து கொண்டிருக்கையில் எம்பெருமானார் திடீரென்று திரும்பி பார்க்கிறார் . இதைக்  கதவுகளின் பின்நின்று கண்ட எம்பார் , இப்பாசுரத்தில் “மடித்தேன்” என்பதை பற்றி எம்பெருமானார் சிந்தித்து கொண்டிருக்கிறாரோ என்று கேட்க எம்பெருமானாரும் அதை ஆமோதித்தார் . எம்பெருமானாரின் செய்கைகளைக் கொண்டே அவரின் திருவுள்ளத்தை அறியக்கூடியவர் எம்பார் . 

தனது சரம தசையில் எம்பார் பட்டரை  அழைத்து, சச்சம்பிரதாயத்தைத் திருவரங்கத்தே இருந்து  நிர்வகித்து வரும்படியும், எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக நினைத்து வரும்படியும்  உபதேஶிக்கிறார் . எம்பெருமானார் த்யானத்தில் ஆழ்ந்து தமது சரம திருமேனியைத் துறந்து, எம்பார், நித்ய விபூதியில் எம்பெருமானாரோடே இருக்கத் திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

நாமும் எம்பார் திருவடித்தாமரைகளிலே “நம் ஆசார்யனிடத்திலும் எம்பெருமானாரிடத்திலும் பற்றுடையோர் ஆவோம்” என்று பிரார்த்திப்போம்.

எம்பாரின் தனியன்:
ராமானுஜ பதச்சாயா கோவிந்தாஹ்வநபாயிநீ |
ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயாந் மத் விஶ்ரமஸ்தலீ ||

 

எம்பாரின் வாழி திருநாமம்:

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே
பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன் வாழியே
மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே
மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே
தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே
திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே
பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே
பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே

நமது அடுத்த பதிவில் நம்பெருமாளின் அபிமான திருக்குமாரரான  பட்டரின் வைபவத்தை காண்போம்.

அடியேன் ராமானுஜ தாசன்
எச்சூர் ஸ்ரீநிவாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/07/embar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

கோயில் கந்தாடை அப்பன்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே  நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்திரம்: புரட்டாசி (கன்னி) மகம்

தீர்த்தம்: கார்த்திகை சுக்ல பஞ்சமி

அவதார திருத்தலம்: ஸ்ரீ ரங்கம்

ஆசாரியன்: மணவாளமாமுநிகள்

பிரபந்தம் : வரவரமுநி வைபவ விஜயம்

கோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் )

கோயில் கந்தாடை அப்பன், கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம்

யதிராஜ பாதுகை (எம்பெருமானாரின் திருவடிகள்)  என்று போற்றப்பட்ட முதலியாண்டானின் திருவம்சத்தில் தேவராஜ தோழப்பரின் திருக்குமாரராகவும் , கோயில் கந்தாடை அண்ணனின் திருத்தம்பியாராகவும் , கோயில் கந்தாடை அப்பன் அவதரித்தார். பெற்றோர்களால் ஸ்ரீநிவாசன்  என்று பெயரிடப்பட்ட இவரே பிற்காலத்தில் மணவாளமாமுநிகளின் ப்ரிய சிஷ்யரானார் .

மணவாளமாமுநிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து திருவரங்கம் எழுந்தருளிய பொழுது, பெரியபெருமாள் (ஸ்ரீ ரங்கநாதன்) அவரை சத் சம்பிரதாயத்தின் தலை நகரமான திருவரங்கத்திலேயே இருந்து சத் சம்பிரதாயத்தை வளர்த்து வரும் படி பணித்தார். பின் மணவாளமாமுநிகள்  பூர்வாசார்ய கிரந்தங்களை திரட்டி , அவற்றை ஓலையிட்டு  கொண்டு கிரந்த காலக்ஷேபங்கள்  செய்து வந்திருந்தார் . அந்தமில் சீர் மணவாளமுநிப்பரரின் பெருமைகளையெல்லாம்  கேட்டறிந்த  பல பெரியவர்கள் மற்றும் ஆசார்ய புருஷர்கள் இவர் திருவடிகளையே தஞ்சமாய் பற்ற வந்த வண்ணம் இருந்தனர் .

எம்பெருமானின் திருவுள்ளத்தால், முதலியாண்டான் திருவம்சத்தில் தோன்றிய ஆசார்யவரரான கோயில் கந்தாடை அண்ணன் , மணவாள மாமுநிகளின்  சிஷ்யரானார். இவர், பின்னர் மணவாளமாமுநிகளால்  சத் சம்பிரதாய ப்ரவர்த்தனத்திற்காக  நியமிக்கப்பட்ட அட்ட திக்கஜங்ளிலே ஒருவர் ஆனார். இவர் மணவாளமாமுநிகளின் திருவடித்தாமரைகளைத் தஞ்சமாய் பற்ற வரும் வேளையிலே தம்மோடு தம்மை சேர்ந்தவர்களையும் அழைத்துக்கொண்டார் . இவ்வாறு கோயில் கந்தாடை அண்ணனோடு வந்தவர்களில் ஒருவர் தான் கோயில் கந்தாடை அப்பன் . “வரவரமுநிவர்ய கனக்ருபா பாத்ரம்” என்று இவரை கொண்டாடும் தனியனிலிருந்தும் , “மணவாளமாமுநிகள் மலரடியோன் வாழியே ” என்று பல்லாண்டு பாடும் இவர் வாழித்திருநாமத்தினிருந்தும், இவர் எப்பொழுதுமே சரம பர்வ  நிஷ்டையிலே (ஆசார்யனுக்கும் அடியார்களுக்கும் தொண்டு புரிதலிலே) ஆழ்ந்து எழுந்தருளியிருந்தார் என்று நாம் அறிந்து கொள்ளலாம் .

 மணவாளமாமுநிகளின் இருபக்கங்களில் கோயில் அண்ணனும் கோயில் அப்பனும் . (கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் )

மணவாளமாமுநிகளின் இருபக்கங்களில் கோயில் அண்ணனும் கோயில் அப்பனும் . (கோயில் கந்தாடை அப்பன் திருமாளிகை , காஞ்சீபுரம் )

மணவாளமாமுநிகளின் மற்றுமோர் சிஷ்யரான எறும்பியப்பா மணவாளமாமுநிகளின்  அன்றாட வழக்கங்களைக் கொண்டாடும் தனது பூர்வ தினசர்யையில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக சாதிக்கிறார் ,

பார்ச்வத: பாணிபத்மாப்யாம் பரிக்ருஹ்ய பவத்ப்ரியௌ
விந்யஸ்யந்தம் நைர் அங்க்ரீ ம்ருதுலௌ மேதிநீதலே  (பூர்வ தினசர்யை  4 )

இந்த சுலோகத்தில் எறும்பியப்பா மணவாளமாமுநிகளை  பார்த்து இவ்வாறாகக் கூறுகிறார் , “தேவரீரின் அபிமான சிஷ்யர்களை (கோயில் அண்ணன் மற்றும் கோயில் அப்பன் ) இருபுறங்களிலும் தேவரீரின் திருக்கரங்களான தாமரைகளாலே பிடித்து, தேவரீரின் திருவடித்தாமரைகளை மேதினியில் மெல்ல மெல்ல ஊன்றி எழுந்தருளுகிறீர் “. 

தினசர்யைக்கான தனது வியாக்யானத்தில், திருமழிசை அண்ணாவப்பங்கார், “இந்த சுலோகத்தில் இரண்டு அபிமான சிஷ்யர்கள் என்று எறும்பியப்பா கோயில் அண்ணனையும் கோயில் அப்பனையும்  குறிப்பிடுகிறார்”, என்று கோடிட்டு காட்டுகிறார் . பாஞ்சராத்திர தத்வ சம்ஹிதை, “ஒரு சந்நியாசி எப்பொழுதும் தனது த்ரிதண்டத்தை பிடித்துக்கொண்டே இருக்கவேண்டும் ” என்று கூறுகிறது. “இவ்வாறு இருக்க , மணவாளமாமுநிகள் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளி இருக்கலாமோ ?” என்ற கேள்வி எழுமின் , அதற்கு திருமழிசை அண்ணாவப்பங்கார் கீழ்க்கண்டவாறு சமாதானங்கள் அளிக்கிறார் : 

 • முற்றிலும் உணர்ந்ததோர் சந்நியாசி த்ரிதண்டம் இன்றி இருத்தல் ஓர் குறை அல்ல .
 • எப்பொழுதும் பகவத் த்யானத்தில்  ஈடுபட்டிருப்பவராய் , நன்நடத்தை  உடையவராய், தன்  ஆசாரியனிடமிருந்து அனைத்து சாத்திரங்களையும் கற்றவராய் , பகவத் விஷயத்தில் அறிவுமிக்கவராய் , புலன்களையும் சுற்றங்களையும்  வென்றவராய் எழுந்தருளி இருக்கக்கூடிய ஒரு சந்நியாசிக்கு த்ரிதண்டம் உள்ளிட்டவையோடு இருத்தல் கட்டாயம் அல்ல.
 • எம்பெருமான் முன்னிலையில் தெண்டன் இடும் வேளையில் த்ரிதண்டம் அதற்கு இடையூறாக இருக்கக் கூடும் . அதனால் பெரிய ஜீயர் த்ரிதண்டம் இன்றி எழுந்தருளியிருக்கலாம் .

கோயில் அண்ணனின் பெருமைகள் எல்லாம் அறிந்த பலர் , அவரிடத்திலே தஞ்சம் அடைய விரும்பினர். “காவேரி தாண்டா அண்ணனாய் ” ,கோயில் அண்ணன் எழுந்தருளி இருந்ததால் , அவர் தனது திருத்தம்பியாரான கோயில் அப்பனை , பல இடங்களுக்கு சென்று அனைவரையும் திருத்தி பணிகொள்ள நியமித்தார். இதனை சிரமேற்கொண்டு கோயில் அப்பன் தானும் திருவரங்கத்திலிருந்து  பல இடங்களுக்கு சென்று பலரை பணி கொண்டார்.

பொய்யிலாத மணவாளமாமுநிகளின் அபிமான சிஷ்யரான கோயில் கந்தாடை அப்பனின் வைபவங்களில் சிலவற்றை அனுபவித்தோம். நாமும் இவரின் ஆசார்ய அபிமானத்தில் சிறிதேனும் பெற இவர் திருவடிகளை வணங்குவோம் !!

கோயில் கந்தாடை அப்பன் சுவாமியின் தனியன்:

வரதகுரு சரணம் சரணம் வரவரமுநிவர்ய கணக்ருபா பாத்ரம் |
ப்ரவகுண ரத்ண ஜலதிம் ப்ரநமாமி ஸ்ரீநிவாஸ குருவர்யம் ||
தேசிகம் ஸ்ரீநிவாஸாக்யம் தேவராஜகுரோஸ்ஸுதம் |
பூஷிதம் ஸத்குணைர்வந்தே ஜீவிதம் மம  ஸர்வதா||

அடியேன் ராமனுஜதாசன்
எச்சூர் ஸ்ரீநிவாசன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/09/30/koil-kandhadai-appan/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org