Category Archives: AzhwArs

குலசேகர ஆழ்வார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

kulasekarazhwarதிருநக்ஷத்ரம்:  மாசிப் புனர்ப்பூசம்
அவதாரஸ்தலம்:  திருவஞ்சிக்களம்
ஆசார்யன்: விஷ்வக் சேனர்
பிரபந்தங்கள்: முகுந்தமாலா, பெருமாள் திருமொழி
பரமபதம் அடைந்த இடம்: திருநெல்வேலி அருகிலுள்ள மன்னார்கோயில்

கர்வம் கொள்ள ஸ்வபாவமாகவே  நிறைய வாய்ப்பும் அனுமதியுமுள்ள அரச குலத்தில் பிறந்தும் எம்பெருமானிடத்தும் அவன் அடியார்களிடமும் அளவிலாப் பணிவு காட்டியதே குலசேகரப் பெருமாளின் ஈடற்ற பெருமை.  பெருமாள் (ஸ்ரீராமன்) பக்கல் இருந்த இவரது இணையிலா ஈடுபாட்டினாலேயே இவர் தாமே குலசேகரப் பெருமாள் எனப்படுகிறார்.  இவர் தம் பெருமாள் திருமொழியில் முதல் பதிகத்திலே பெரிய பெருமாளை மங்களாஶாஸனம் செய்தவுடனே இரண்டாம் பதிகத்திலேயே (தேட்டறும் திறல் தேன்) ஸ்ரீவைஷ்ணவர்களைப் போற்றிப் பாடுகிறார். அவர்களிடத்தில் இவர்க்கிருந்த எல்லையற்ற பக்தி ஈடுபாட்டை நாம் அவர் சரித்திரத்தில் காண்போம்.

ஶேஷத்வமே   ஜீவனின் ஸ்வரூபம் என்பதை அவர் பெருமாள் திருமொழியில் இறுதியில் (பத்தாம் பதிகம் ஏழாவது பாசுரம்), “தில்லை நகர்ச் சித்திரகூடம் தன்னுள் அரசமர்ந்தான் அடிசூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன்  மற்றரசுதானே” எனத் தெளிவுபடக் கூறுகிறார்.

அசித்வத் பாரதந்த்ர்யமே ஜீவாத்ம ஸ்வரூபம், அதாவது  எம்பெருமான் கைங்கர்யத்தில் ஒரு  ஜீவாத்மா அவன் கைப்பொருளாக அவன் அனுபவத்துக்குறுப்பாக  ஸ்வ ஞானமோ போக உணர்வோ அற்றிருக்கவேண்டும் என்பதாம்.  இதை அவர் நான்காம் பதிகம்  ஒன்பதாம் பாசுரத்தில் மிக அழகாகக் கூறுகிறார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனே

என் வலிய தீவினைகளைப் போக்கி என்னை ரக்ஷிக்கவல்ல வேங்கடவனே! அடியேன் உன்னிடம் பலன்களை வேண்டி உன்னைத்தொழ வரும் தேவரும் உன்னைக் கண்டு களிக்கவே வரும் அடியவரும் தம் திருவடிகளால் மிதித்து நிற்கும் படிக்கட்டாய் உன் திருமலையில் நிற்கக் கடவேன் என்கிறார்.

பெரியவாச்சான் பிள்ளை இப்பாசுர வ்யாக்யானத்தில் இதை அழகாக விளக்குகிறார். இங்கு படியாய் என்று சந்தனம், மலர் போலத் தாம் அசித்துப் போலிருக்க விரும்புவதையும், பவளவாய் காண்பேனே என்று அவன் முகோல்லாஸத்தைக் கண்டு தன்னுடைய சைதந்யத்தின் வெளிப்பாடான ஆனந்தத்தையும்  காட்டியருளினார். இதுவே அசித்வத் பாரதந்தர்யம் எனும் மிக உன்னத ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடாகும்.

http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-kulasekara.html என்கிற பதிவில் மாமுனிகள் குலசேகரப் பெருமாளைக் கொண்டாடியுள்ளதை அனுபவிக்கலாம்.

ஆசார்ய ஹ்ருதயம் 87வது சூர்ணிகையில் அடியார்களிடையே ஜன்மம் அடியாக வேறுபாடுகள் காணலாகாது என விளக்கும்போது, நாயனார், நம்மாழ்வார் பெருமை கூற முற்பட்டு, கைங்கர்ய மேன்மை அடியார் மேன்மை என விளக்குகையில் எவ்வாறு மஹா பக்தர்கள் கீழான பிறப்பையும், அப்பிறப்பு கைங்கர்யத்துக்கு உறுதுணையாகுமேல் அதை விரும்பிப் பற்றி வேண்டினார்கள் என்று காட்டுகிறார். “அணைய ஊர  புனைய அடியும் பொடியும் பட பர்வத பவனங்களிலே  ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற திர்யக்  ஸ்தாவர ஜன்மங்களைப் பெருமக்களும் பெரியோர்களும் பரிக்ரஹித்துப் ப்ரார்த்திப்பர்கள்” என்பது அவர்தம் அமுத மென்மொழி.

நித்ய  ஸூரிகளான  அனந்தன், கருடன் போன்றோர் எம்பெருமானின் படுக்கை, வாகனங்களாக இருக்க விரும்பி வேண்டிப் பெற்றனர்.  நம்மாழ்வார் திருத்துழாய் எம்பெருமானுக்கு மிகப்ரியமாய் இருந்தது அவன்றன் திருமார்விலும் திருமுடியிலும் தோளிணை மீதும் தாளிணை மீதும் கிடக்கின்றது என்பதை உணர்த்துகிறார். பராஶர வியாஸ ஶுகாதிகள் பிருந்தாவனத்தில் அவன் நடந்த பாதையில் தூளியாய்க் கிடக்க விரும்பினார்கள்.

பெருமாள் திருமொழி நாலாம் பதிகத்தில் குலசேகர ஆழ்வார் திருமலையில் நித்யமாகக் கைங்கர்யம் செய்யும் வகையில்  எம்பெருமானுக்கருகில் எதேனுமாக இருப்பைப் ப்ரார்த்திக்கிறார்.

sri-srinivasar

 • அம்மலையில் ஒரு பக்ஷியாக
 • பக்ஷி பறந்து விடும் என்பதால் அங்குள்ள குளத்திலே ஒரு மீனாக
 • மீன் நீந்திச் சென்றுவிடும் என்பதால் எம்பிரான் உமிழும் பொன் எச்சில் வட்டிலாக
 • பொன் எனும் கர்வம் வாராதிருக்க ஒரு மலராக
 • மலர் வாடுமென்பதால் மரமாக
 • மரத்தை வெட்டிவிடலாமமெனவே திருமலைமேல் பெருகும் ஓர் ஆறாக
 • ஆறு வற்றிவிடலாமெனவே சந்நிதிக்கு இட்டுச்செல்லும் படிக்கட்டாக
 • என்றேனும் படிக்கட்டுகளை இடிக்கலாமெனவெ அவன் திருமுன்பே ஒருபடியாக (எனவேதான் குலசேகரன் படி என வழங்குவதாயிற்று)
 • திருவேங்கட மலைமேல் ஏதாவதொன்றாக இருக்கவேணும் என்றார். இதைப் பெரியவாச்சான் பிள்ளை விளக்கி, திருவேங்கடவன் ஆகவும் ஆம் என்றார். பட்டர், “நான் உளேன் எனத் திருவேங்கடவனும் அறிய வேண்டா, ஆர்க்கும் தெரிய வேண்டா என்னைப் போற்றவேண்டா நான் அங்கு நித்யவாஸம் செய்யப் பெறில் போதும் காண் ” என்றார்.  பகவத், பாகவத சம்பந்தத்தில் குலசேகர ஆழ்வாரின் ஊற்றம் இவ்வாறாய் இருந்தது.

ஆழ்வார் சரித்ரம்

ஸ்ரீ குலசேகரப் பெருமாள் கொல்லிநகரில் (திருவஞ்சிக்களம்) ஸ்ரீ கௌஸ்துபாம்ஶராக  அரசர் குலத்தில் அவதரித்தார்.  சிலர் ஆழ்வார்தம் சிறப்புகளைக் கருதி அவர்களை நித்யஸூசூரிகள் என்பர்.  ஆயினும் நம் பூருவர்கள் ஆழ்வார்கள் முன்பு   ஸம்ஸாரிகள், எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் என்றே அறுதியிட்டு வைத்தார்கள். மாற்றலரை, வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன் வில்லவர்கோன், சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணி) என்பன இவரின் திருநாமங்களாய் இருந்தன.  இவர் மாற்று மன்னவர்களைத் தோற்கடித்த சேர குலத் திலகர், பெருவலியர், தேர் வல்லவர். ஶாஸ்த்ர மர்யாதைக்குட்பட்டு அரசாட்சி சிறப்பாகச் செய்தார். ஸ்ரீராமன் போல் எதிரிகட்கு   ஸிம்ஹமாயும், நல்லோர்மாட்டு வினயமும் வள்ளண்மையும் பூண்டிருந்தார்.

பேரரசரானபடியால் தனித்துவமும் தைரியமும் மிக்கு விளங்கினார். ஆனால் இவர் தனித்வமும் ஸ்வாதந்த்ர்யமும் ஸ்ரீமன் நாராயணன் திருவருளால் நீங்கி மயர்வற  மதிநலம் எய்தி, ராஜஸ தாமஸ  குணங்களை எம்பெருமான் நீக்கக் கருதினான். ஆட்சியில் விசேஷப்பற்றின்றி  எப்பொருளிலும் விருப்பின்றி விபீஷணாழ்வான் போலே செல்வங்களிலிருந்து விலகியே எம்பெருமானுக்காட்பட்டு  இருந்தார். அவர் மனதில் ஸ்ரீரங்கத்தின்பால் பேரவா கிளர்ந்தது. அரங்கநாதன் மீதும் அவனையே எப்போதும் நினைத்திருந்த அடியார்கள் மீதும் பெருங்காதல் எழுந்தது. வைஷ்ணவாக்ரேஶரான சாதுக்களோடும், அணியரங்கன் திருமுற்றத்தடியார்களோடும் வாழ விரும்பினார்.

கங்கை யமுனையினும் மேம்பட்ட  ஸ்வாமி புஷ்கரிணியை உடைய திருவேங்கடமும் இவர் மனத்தைக் கொள்ளை கொண்டது.  “வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்” என ஆண்டாள் பாடினாப்போல் மஹரிஷிகளையும் மஹாத்மாக்களையும்போல் அங்கு நித்யவாஸம் செய்ய விரும்பினார்.  நாம் முன்பே பார்த்தபடி அங்கே அவர் ஒரு பறவையாகவோ, மீனாகவோ, நதியாகவோ, மரமாகவோ, மலையாகவோ அங்கேயே இருக்க விரும்பினார்.  மேலும் அர்ச்சாவதார எம்பெருமான்கள் எழுந்தருளியுள்ள திவ்யதேஶங்களில் எம்பெருமானுக்கும் அடியார்களுக்கும் கைங்கர்யஞ்செய்திருக்க விரும்பினார்.

எல்லாப் புராணங்களையும் இதிகாஸங்களையும் நன்கு கற்றரிந்தபின் அவர் உலகுக்கு “முகுந்த மாலா” எனும் திவ்ய க்ரந்தத்தை உபகரித்தார்.

“வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே
வேத: ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணத்மநா”

என்கிற ஶ்லோகம் சொன்னபடி எவ்வாறு வேதத்தல் சொல்லப்படும் ஸ்ரீமன் நாராயணன் ஸ்ரீ ராமனாய் அவதரித்தானோ, அது போல வேதமும் வால்மீகியின் ஸ்ரீ ராமாயணமாக அவதரித்தது என்பதால் இவர் ஸ்ரீராம பக்தியில் எப்போதும் ஆழ்ந்து கிடந்தார்.

rama-pattabishekam

சில நேரங்களில் இவர் பக்திபாரவஶ்யத்தில் எம்பெருமான் பதினாலாயிரம் ராக்ஷஸர்களைத்  தனி ஒருவனாக எதிர் கொண்டான் என்று ஸ்ரீராம கதையைக் கேட்கும்போது கதாஶ்ரவணம் என்பதும் மறந்து, ஆ! எம்பெருமான் தனியே சென்றானா!  உடன் ஆரும் இல்லையா! ஐயோ படை திரட்டுவீர்! வாரீர்! பெருமாளுக்குப் பக்கபலமாய் இருப்போம் என்று படைகளை ஏந்திப் புறப்படும் உணர்ச்சி தீட்சிதராய்  இருந்தார். அப்போது தாம் யார் என்பதும் மறந்திடுவார்.   ஸீதா தேவியை விட்டு, ஸ்ரீராமன் கர தூஷணாதியரை அழிக்கப்போரில் தனியே சென்றான் என்று கதை கேட்கும்போது உணர்ச்சிவயப்பட்டு    ஸேனாதிபதியை அழைத்துப் படைதிரட்டச்  சொல்லவும், பௌராணிகர் ஸமயோசிதமாய், “அரசரேறே! அவ்வளவில் ஸ்ரீராமன் ஒருவனே தன் வில்வலியால் அவ்வளவு அரக்கரையும் முற்றாக ஒழித்தான், பிராட்டி அவனது வீரப் புண்களுக்கு மருந்திட்டுத் தடவி ஒத்தடம் தந்தாள்” என்று கூற ஸமாஹிதரானார்.

அவரது அமைச்சர்களுக்கு அவரது வைஷ்ணவ ஸஹவாசம் வெறுத்துப்போக, அவர்களாலேயே அரசர் இவ்வாறு ராமப் பித்திலுள்ளார் என்பதால் எவ்வாறாயினும் அவர்களை விரட்ட விரும்பி அதற்கொரு திட்டம் தீட்டினர்.  திருவாராதனத்திலிருந்த ஒரு மாணிக்க மாலையை எடுத்து ஒளித்து வைத்து அதை வைஷ்ணவர்கள் களவாடினார் என்று பழிக்கவும், அடியார் அது செய்யார் என்று மறுத்த அரசர் தாம் ஒரு பாம்பையிட்ட குடத்தில் கையிட்டு இந்தச் ஸபதம் செய்வேன் என்றார்.  அவ்வளவில் அமைச்சர்கள் நடுங்கியபடி ஒருபாம்பையிட்ட குடம் கொணர இவர் அதில் சூளுரைத்துக் கையிட பாம்பும் கடிக்காமல் சாதுவாய் இருக்க அமைச்சர்கள் உண்மையை ஒப்புக்கொண்டு வைஷ்ணவ த்வேஷத்தை விட்டொழித்தனர்.

ஆழ்வார் ஸம்ஸாரிகளோடு வாழ வெறுப்புற்று “ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று அனைத்துப் பொறுப்புகளும் துறந்து இனி செல்வமும் அரசும் போகங்களும் எனக்கு வேண்டா என்று விட்டு, திருவரங்கம் சென்றார். அங்கே ஸ்ரீ வைஷ்ணவர்கள் சூழ, திருவரங்கப் பொன்னி நடுவில் அரவணையில் மணிபோல் பள்ளிகொண்ட கண்ணனை அரங்கனைக் கண் குளிரக் கண்டு மங்களாஶாஸனம் செய்து வித்தரானார். இவ்வாறு திவ்ய தேஶ வாஸமும், அர்ச்சாவதார மங்களாஶாஸனமுமே பொழுது போக்காய் இருந்து ஸம்ஸாரம் விட்டு திருநாடேகினார்.

ஆழ்வார் தனியன்:

குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே |

தமஹம் ஶிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் ||

ஆழ்வார் வாழி திருநாமம்:

அஞ்சனமா மலைப்பிறவியாதரித்தோன் வாழியே
அணியரங்கர் மணத்தூணையடைந்துய்ந்தோன் வாழியே
வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே
மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
அஞ்சலெனக் குடப்பாம்பிலங்கையிட்டான் வாழியே
அநவரதமிராமகதை அருளுமவன் வாழியே
செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே
சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே.

குலசேகர ஆழ்வாரின் அர்ச்சாவதார அனுபவம்: http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-kulasekara.html .

குலசேகர ஆழ்வார் திருவடிகளே சரணம்

அடியேன் ஶடகோப ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/01/18/kulasekara-azhwar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருமழிசை ஆழ்வார்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்ரம்:  தை மகம்
அவதாரஸ்தலம்திருமழிசை
ஆசார்யன்: விஷ்வக் சேனர், பேயாழ்வார்
சிஷ்யர்கள்: கணிகண்ணன், த்ருடவ்ரதன்
பிரபந்தங்கள்: நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்
பரமபதம் அடைந்த இடம்: திருக்குடந்தை

thirumazhisaiazhwar

ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே தொழத்தக்கவன் என்கிற  ஶாஸ்த்ர ஞானம் பூரணமாகக் கைவரப் பெற்று, தேவதாந்தர உபாசனத்தை    ஸவாஸநமாக  விடுத்தவர் என்பதால் மாமுனிகள் திருமழிசை ஆழ்வாரை, “துய்ய மதி பெற்ற” என்று உபதேஶ  ரத்னமாலையில் போற்றினார்.

இதற்கு வியாக்யாநமிட்டருளிய  பிள்ளைலோகம் ஜீயர், எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு எவர்க்கும் பரத்வம் கிடையாது என்பதில் எள்ளளவும் ஐயமின்றித் திட சித்தராக ஆழ்வார் தாமும் இருந்து, நம்போல்வார் மனங்களிலும் தெளிவு ஏற்படுத்தியதைப் பல பாசுரங்கள் வாயிலாகக்காட்டுகிறார். உதாரணமாக:

 • நான்முகன் திருவந்தாதி பா 53 – திருவில்லாத் தேவரைத் தேரேன்மின் தேவு –  திருமாமகள் ஸம்பந்தமில்லாதவர்களைத் தேவராக எண்ணித் தொழவே தொழாதீர்கள்
 • நான்முகன் திருவந்தாதி பா 68 – திருவடிதன் நாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் –  ஸர்வஸ்வாமியான திருமாலை மறந்தாலும் ஸ்ரீவைஷ்ணவர்கள்  பிற தெய்வங்களை வணங்க மாட்டார்கள்.

இவ்வியாக்யானங்களுக்கு அருளிய தம் அவதாரிகைகளில் நம்பிள்ளையும்  பெரியவாச்சான் பிள்ளையும் எம்பெருமானின் ஸர்வஸக்தத்வ பூர்த்தியையும் தேவதாந்தரங்களின் அபூர்த்தியையும் மிக அழகாக ஐயம் திரிபற விளக்கியுள்ளார்கள்.

பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கம்

முதலாழ்வார்கள் எம்பெருமான் ஒருவனே காணவும் அனுபவிக்க்கவும்படக் கூடியவன் என்று நிலைநாட்டினார்கள்.  இவ்விஷயத்தில் திருமழிசையாழ்வார் களை எடுத்தார். அவர் தேவதாந்தரங்களை ஈஶ்வரனாகக் கருதும் ஸம்ஸாரிகளுக்கு இத்தேவதாந்தரங்களும் க்ஷேத்ரஞர்களே, அவர்களும் ஸ்ரீமந் நாராயணனால் நியமிக்கப் படுவோரே, அவன் ஒருவனே எல்லாவுலகங்களுக்கும் நியந்தா என்கிற அறிவைப் புகட்டினார்.

நம்பிள்ளையின் விளக்கம்

முதலாழ்வார்கள் ஸர்வேஶ்வரனை இவ்வுலகப் பொருள்கள்/காட்சிகள் மூலமாகவே அவனது நிர்ஹேதுக க்ருபையினால் அறிந்து கொண்டனர், அனுபவித்தனர். ஆழ்வார் தம் அபார கிருபையினால் வேத மர்மங்களை உணர்த்தினார். படைப்புக் கடவுள் பிரம்மனும் ஒரு ஜீவாத்மாவே நாராயணன் ஒருவனே முழுமுதல்வன் உயிருள்/உயிரல்  பிற யாவற்றுக்கும் அவனே  அந்தர்யாமியாய் இருந்து இயக்குகிறான் என்பதை ஆழ்வார் தெளிவாகக் காட்டுகிறார்.

“முதல் ஸ்ருஷ்டிகர்த்தாவான    பிரமன் தாமே ஒரு ஜீவாத்மா, அவர் நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் நியமிக்கப்பட்டு, அவருக்கும் மற்றெல்லா உயிருள்/உயிரல் பொருட்கள் யாவுக்கும் அந்தர்யாமியாய் நாராயணனே இருப்பதையும் வேதங்கள் தெளிவாய் ஓதும்” என்று நம்பிள்ளை அருளிச்செய்வர்.

இவ்வாறாக மாமுனிகளும், பெரியவாச்சான் பிள்ளையும் நம்பிள்ளையும் திருமழிசை ஆழ்வாரின் ஏற்றத்தை அழகாகத்தம் க்ரந்தங்களில் காட்டுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, திருவிருத்தத்துக்கு அமைந்த தனியன் பாசுரமும் மகரிஷிகள் தவம் செய்தற்கு ஏகாந்தமான ஏற்றதோர் இடம் தேடியபோது அண்டம் முழுவதும் ஆய்ந்து ஆழ்வார் திருஅவதாரம் செய்தருளிய திருமழிசையையே தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறது.   ஆழ்வார் ஆசார்யர்கள் அவதாரத்தலங்களின் மகிமை இப்படி இருப்பதாலன்றோ எம்பெருமான் அநுபவத்திலாழ்ந்த அவர்களின் அவதாரத்தலங்களானவை திவ்ய தேசங்களிலும் மேலாகக் கொண்டாடப் படுகின்றன!

இதை நெஞ்சில் இருத்தி நாம் ஆழ்வாரின் திவ்ய சரிதையை இப்போது நோக்குவோம்.

ஆழ்வார் திருஅவதாரம் கிருஷ்ணாவதாரம் போலே ஆயிற்று, க்ருஷ்ணன் தேவகிக்குப் பிறந்து யசோதையிடம் வளர்ந்தான், ஆழ்வார் பார்கவ மஹரிஷிக்கும் கனகாங்கிக்கும்  பிறந்து மரம் வெட்டுபவரான திருவாளனுக்கும் அவர் பத்னி பங்கயச்செல்விக்கும் மகனாக வளர்ந்தார்.  இவருக்கு பக்திஸாரர், மஹிஸாரபுராதீசர், பார்கவாத்மஜர் , இவற்றினும் மேலாகத் திருமழிசைப்பிரான்  என்கிற திருநாமங்கள் உண்டு.  பிரான் எனில்,  பெருங்கருணை செய்பவர் என்று பொருள்.  ஆழ்வார் செய்த பெருங்கருணை நாராயண பரத்வத்தை நிலைநாட்டியதேயாம்.

ஒருகால் அத்ரி ப்ருகு வஸிஷ்டர், பார்கவர், ஆங்கிரஸர் போன்ற மகரிஷிகள் சதுர்முக பிரம்மனிடம் சென்று, “நாங்கள் இருந்து தவம் செய்யச் சிறந்ததோரிடம் தேவரீர் செய்து தரவேண்டும்” என்று வேண்டினபோது பிரமன் எல்லா இடங்களையும்  துலாக்கோலில் ஒரு தட்டிலும், திருமழிசையை மற்றொரு தட்டிலும் வைத்தபோது திருமழிசை இருந்த தட்டே தாழ, அதுவே சிறந்ததாயிற்று.  இதுவே மஹீஸார க்ஷேத்ரம் என்றாயிற்று.  மகரிஷிகள் அங்கு சில காலம் தங்கி இருந்து தவமியற்றினர்.  அப்போது ஆங்கே தவம் இயற்றிக்கொண்டிருந்த பார்கவ ரிஷியின் மனைவி அவர் எம்பெருமான் நாராயணனைக் குறித்து  தீர்க்க சத்திர யாகம் செய்துகொண்டிருந்தபோது கருவுற்று, பன்னிரு திங்கள்கள் கழிந்து  ஒரு தசைப்பிண்டம் உருவாயிற்று. இவர் ஸுதர்ஶன அம்சராய்ப் பிறந்தார். சிலர் ஆழ்வார்தம் சிறப்புகளைக் கருதி அவர்களை நித்யஸூரிகள் என்பர்.  ஆயினும் நம் பூருவர்கள் ஆழ்வார்கள் முன்பு ஸம்ஸாரிகள், எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் என்றே அறுதியிட்டு வைத்தார்கள். வடிவமற்ற இத்தசைப் பிண்டத்தைக் காக்க மனமின்றி, பார்க்கவரும் அவர் பத்னியும் அதை ஒரு செடிப் புதரில் விட்டுச் செல்ல ஸ்ரீதேவி நாச்சியார் அருளால் பூதேவி நாச்சியார் ,அக்குழந்தையைக் காக்க அவள் ஸ்பர்ஶத்தால் அது உயிர் பெற்று அழகிய ஆண்  குழந்தை ஆகி  பசிதாகத்தால் அழவும், அங்கே  ஸந்நிதி   கொண்டுள்ள எம்பெருமான் ஜகந்நாதன்  தன் திவ்யமங்கள ஸ்வரூபத்தைக் குழந்தைக்குக் காட்சி தந்து அவர்க்கு மயர்வற மதினலம்  அருளி மறைய, அவ்வளவில் பிரிவு தாளாது குழந்தை மீண்டும் அழ, அங்கு வந்த மரம் வெட்டுபவரான திருவாளனும்  குழந்தையைக் கண்டு தம் மனைவியை அழைத்துவர, மகப் பேறில்லாத அவளும் மகிழ்ந்து குழந்தையை ஏற்றுக் கொண்டதும் அப்பிண்டம் ஓர் அழகிய குழந்தை  வடிவுபெற அன்புடன்  வளர்க்கத் தொடங்கினாள்.  அப்போது மீண்டும் அழத்தொடங்கிய அக்குழந்தையின் முன் திருமழிசை ஜகன்னாதப் பெருமாள் தோன்றி அனுக்ரஹிக்க, திருக்குடந்தை ஆராவமுதன் திருவுருக் காட்டி ஞானமூட்டவும் அமுதன் காட்சி மறைந்ததும் பெருமான் பிரிவினால் குழந்தை மறுபடி அழுதது! அவள் அன்போடு குழந்தைக்குப் பாலூட்ட முயற்சி செய்ய, குழந்தை உணவு முதலியவற்றில் ஆர்வமின்றியே இருந்தது.  எனினும் எம்பெருமான் திருவருளால் அழகாக வளர்ந்துவந்தது. இக்குழந்தையின் இவ்வியத்தகு விஷயம் கேள்விப்பட்ட ஒரு நான்காம் வருணத்துப்பெரியவர் தன் மனைவியுடன் வந்து, இத்தேஜஸைக் கண்டு வியந்து மிக்க பக்தியோடு பாலமுது தர, அதை அவரும் பரிவோடு பெற்றுப் பருகி, சிறிதளவு பாலை அவரிடமே தந்து அதைப்  பருகினால் ஸத்புத்திரன் உண்டாவான் என்னவும், அவரும் பருக அவ்விருவரும் இளமை எய்தி பத்தாம் மாதம் கண்ணனிடம் அளவற்ற காதல் கொண்ட  ஸ்ரீ விதுரரைப் போன்ற ஓர் அழகான ஆண்மகனைப் பெற்றனர்.  அம்மகனுக்குக் கணிகண்ணன் என்று பெயரிட்டனர்.

இவ்வளவில் ஏழு வயதான ஆழ்வாருக்குப் பிறப்பிலேயே அவர் பார்க்கவ  ரிஷி புத்ரரானபடியால் ஞானமளித்திருந்த எம்பெருமான் அஷ்டாங்க யோகத்தில் ருசி விளைப்பித்து, சாக்கியம், உலுக்யம், அக்ஷபாதம். க்ஷபனம், பாதஞ்சல்யம் முதலான பாஹ்ய மதங்களையும் ஶைவம், மாயாவாதம், ந்யாயம், வைசேஷிகம், பாட்டம், ப்ரபாகரம் போன்ற முரண்பட்ட குத்ருஷ்டி உட்சமயங்களையும் நன்கு கற்று அவற்றில் குறைகளைக் கண்டுகொண்டு இவை எதுவும் மெய்ப்பொருளைக் காட்டவல்லதன்று என நிரூபித்து பரமாத்மா நிர்ணயமும்,  ஸம்பிரதாய ஸ்தாபனமும் செய்ய எம்பெருமான் திருவுள்ளமாயிற்று.  ஆகவே, இறுதியில் அவர்  ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் நிலை நின்று   ஸநாதன தர்மானுஷ்டானம் செய்யும்போது அவர்க்கு எழுநூறு திருநக்ஷத்ரங்கள் ஆகியிருந்தன.  இந்நிலையில் இறுதியாக அவர் ஸ்ரீவைஷ்ணவத்தில் ஸ்திரமாக ஊன்றி, ஊறி ஆழ்ந்தாரானார்.

இவ்வாறாக எழுநூறாண்டுகள் கழியவும், எம்பெருமான் அவர்க்கு மயர்வற மதினலம் அருளி, தன்

 • திவ்ய ஸ்வரூபம்
 • திருக்கல்யாண குணங்கள்
 • திவ்ய மங்கள விக்ரஹம்
 • திவ்யாபரணங்கள்
 • அனுகூலர்க்குத் திவ்யாபரணங்களாகவே தோற்றும் திவ்யாயுதங்கள்
 • ஸ்ரீ, பூ, நீளா தேவிகள்,  மற்றும் அவன் ஸ்வரூப ரூப குண விபவைஶ்வர்யாதிகளை எப்போதும் அநுபவிக்கும் நித்யஸூரிகள்
 • இவர்கள் அனைவரும் எப்போதும் இன்புற்றிருக்கும் பரமபதம் ……ஈறாக
 • ப்ரக்ருதி , புருஷன், கால தத்வம் ஆனவற்றோடு எப்போதும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரம் என்பவை எம்பெருமானால் தானாகவேயும் பிற தேவதைகள் மூலமும் நடக்கும் ஸம்ஸாரம் ஆகிய

எல்லாவற்றையும் காட்டியருளி, ஶ்வேதாஶ்வரோபநிஷத்தில் “யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்” என்று ஸ்ருஷ்டிக்காக எம்பெருமானே பிரமனைப் படைத்தான் என்பது தெரியத் தன திருநாபியில் அயனைப் படைத்ததைக் காட்ட, “ப்ரஹ்மணப் புத்ராய ஜ்யேஷ்டாய ஶ்ரேஷ்டாய”  என அவன்தன் முதல் விசேஷ புத்ரனாக ருத்ரன் பிறந்ததும் காட்ட ஆழ்வாரும்,“நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முகமாய்ச் ஶங்கரனைத் தான் படைத்தான்” எனத் தொடங்கி யாதோர் ஐயமும் இன்றித் தெளிவாகப் பிரமனைப் பெருமான் படைத்தான், பிரமன் அரனைப் படைத்தான் என்பதால் பரத்வம் எம்பெருமானுக்கே உளது என அறுதியிட்டார். ஆழ்வார் தாமே தம் பாசுரத்தில் தாம் எல்லா மதங்களையும் கற்றறிந்து எம்பெருமான் திருவருளால் அவன் திருவடி அடைந்த்தைதக் கூறுகிறார்.  அதன்பின் அவர் ஶ்ரியப் பதியான எம்பெருமானின் திவ்ய கல்யாண  குணங்களைச் சிந்தித்திருந்து பிருந்தாரண்ய க்ஷேத்ரம் எனப்படும் பரம பவித்ரமான திருவல்லிக்கேணியில் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.

ஒருநாள் ருத்ரன் தன பார்யையோடு தன் ரிஷபத்தின் மீதேறி அவ்வழியேறச் செல்லும்போது, அவன் நிழல் இவர்மீது படவிருக்கையில் இவர் நகர்ந்தார்.  இது  கண்ட பார்வதி ருத்ரனிடம், நாம் இவரைச் சந்திப்போம் என்ன, அவன் இவர் மஹாமதி பெற்ற எம்பெருமான் அடியார் நம்மை நோக்கார் என்ன, அவளும் இவரைப் பார்க்கவே வேண்டும் எனப் பிடிவாதம் செய்யவே அவனும் இசைந்தனன். ஆழ்வார் இவர்களைக் காணவுஞ்செய்யாதே இருக்க, ருத்ரன் அவரிடம், “நாம் உமக்கு அருகில் வரவும் நீர் நம்மை நோக்காததென்?” எனவும், இவர் “நமக்கு உன்னோடு ஒரு வ்யாபாரமுமில்லை காண் ” என்ன, ருத்ரன், “நாம் உமக்கொரு வரம் கொடுப்போம்” என்ன இவர் “நமக்கு உன்னிடமிருந்து ஒன்றும் வேண்டா” என்ன, அவன் “ஆகில் நான் வந்தது வீணாகும், ஏதாவது கேட்டுப் பெறும்” என்ன ஆழ்வார் புன்னகைத்து, “மோக்ஷம் தரவல்லையோ?” என்ன, அவன் “அதற்கு நமக்கு அதிகாரமில்லை,ஸ்ரீமன் நாராயணனே தரவல்லான்” என்ன இவர் “மரணத்தைத் தள்ளிப் போட வல்லையோ?” என்ன அவன்  “அது அவனவன் கர்ம வழி வந்தது, என் கட்டுப்பாட்டில் இல்லை”  என்ன இவர்  ஓர் ஊசியையும்  நூலையும் காட்டி, “இந்நூலை இவ்வூசியினுள் நுழைக்க வல்லாயோ?” என அசங்கதமாகக் கேட்க, அவன் முனிந்து காமதேவனைப்போல் உம்மையும் எரிப்பேன் என்று நெற்றிக் கண்ணைத் திறக்க அதினின்றும் பெருந்தீ கிளம்பிற்று.  ஆழ்வாரும் தம் வலதுகாற்பெரு விரலில் மூன்றாம் கண் திறக்க அதினின்றும் கிளம்பிய மஹாஜ்வாலை அவனால் தாங்க முடியாது ஸ்ரீமான் நாராயணனிடம் சரண் புக்கான்.  தேவ ரிஷி கணங்கள் அனைவரும் எம்பெருமானை இக்குழப்பம் தீர்க்க வேண்ட எம்பெருமான் ப்ரளய மேகங்களை அழைத்து ஏவ அவை எம்மால் ஆழ்வார் அக்நியை ஶமிக்க இயலுமோ என்ன அவன் அவற்றுக்கு அவ்வாற்றலை அளித்து, பெருமழையால் தீ அணைந்துபோக ஆழ்வாரும் முன்புபோல் யோகத்திருப்ப, ருத்ரன் இவர் ஆற்றலை வியந்து “பக்திஸாரர்” என்று போற்றி பார்வதியிடம், “துர்வாஶர் அம்பரீஷனிடம் அபசாரப்பப்டான். எம்பெருமான் அடியாரிடம் நாம் அபசாரப் படலாகாது”என்று கூறிச்  சென்றனன்.

ஆழ்வார் தம் தபஸ்ஸைத் தொடர்வாராக, அப்போது அவ்வழியே வானேறச் சென்ற கேசரன்  எனும் கந்தர்வன் இவரது தவ வலிமையால் இவரைத்தாண்டி வான்வழியே தன புலி மீது ஊர்ந்து  செல்ல இயலாமல் கீழறங்கி வந்து இவர் தேஜஸ் கண்டு வியந்து வணங்கி, தன்  மாயா ஜால வித்யையால் ஒரு விசித்ர ஆடையை உருவாக்கி அளித்து தேவரீரின் கந்தல் ஆடையைத் தந்தருளும் என வேண்ட ஆழ்வார் அவனுக்கு அதனினும் சிறந்ததொரு மாணிக்கப் பொன்னாடையை எளிதாய் வரவழைத்துத்தர அவன் வெட்கி அவர்க்குத் தான் கழுத்தில் அணிந்திருந்த மிக உயர்ந்த வைர ஆரத்தைக் கழற்றித்தர அவரும் தாமணிந்திருந்த துளசிமாலையை அவனுக்கு வைரமாலையாய்க் காட்ட கேசரன் இவர் யோகமஹிமை உணர்ந்து இவரைக் கைதொழுது வணங்கிச் சென்றான்.

ஆழ்வார் மகிமையைக் கேள்வியுற்ற கொங்கன சித்தன் என்பானொருவன் அவரிடம் வந்து எதையும் தங்கமாக்கவல்ல ஒரு கல்லைக்காட்ட, அது கண்ட ஆழ்வார் தம் காதிலிருந்து சிறிது குரும்பியை எடுத்துத் தர அவனும் அதைப் பரீக்ஷித்துப் பார்த்து அது எதையும் பொன்னாக்கும் அதிசயம் கண்டு வியந்து வணங்கிப் போனான்.

ஆழ்வார்  பின் குகைகளில் தங்கித் தவம் செய்வாராக, அவர் தேஜஸ் கண்டு ஓடித்திரியும் யோகிகளாய் எங்கும் திரிந்து எம்பெருமானைப் பாடிக்களித்திருந்த முதல் ஆழ்வார்கள் மூவரும் இவரிடம் வந்து பரிவுடன் சல்லாபிக்க, அவரும் அவர்கள் பெருமை உணர்ந்து அவர்களோடு போதயந்தப் பரஸ்பரம் என்று ஆனந்தராயிருந்தார். பகவதனுபவத்தில் சிலகாலம்  இவ்வாறு சென்றபின் அந்நால்வரும் கிளம்பி, பேயாழ்வார் அவதாரஸ்தலம் சேர்ந்து கைரவிணி தீர்த்தக் கரையில் சிலகாலம் இருந்தனர்.

அப்போது திருமண்   காப்பு வேண்டியிருக்கவே இவர் தேட, திருவேங்கடமுடையான் வந்து இவர்க்குக் காட்டித்தர இவரும் அதுகொண்டு த்வாதஶ ஊர்த்வபுண்டர தாரணம் செய்து பகவதநுபவத்தில் ஆழ்ந்திருந்தார்.  பொய்கை ஆழ்வார் அவதாரஸ் தலம் செல்லவிரும்பி இவர் திருவெஃகாவை அடைந்து ஸ்ரீதேவி பூதேவிகள் பணிசெய்ய அரவணையில் பள்ளிகொண்ட எம்பெருமானைத் தொழுது   எழுநூறாண்டுகள் எம்பெருமானை வணங்கியிருந்தபோது பொய்கை ஆழ்வாரை த்யானிக்க அவரும் அக்குளக்கரையில் இவருக்குத் தோன்றினார்.

yathokthakari-swamyநாச்சியார்களுடன் திருவெக்கா யதோக்தகாரிப் பெருமாள்

அப்போது கணிகண்ணன் அங்கு  வந்து ஆழ்வாரடி பணிந்து புகல் அடைந்தார்.   ஒரு வயதான கிழவியும் அவர்க்குப் பணிவிடை செய்ய மிக்க பக்தியுடன் தினமும் வந்து சென்றாள். அவளது பணிவிடைக்கு மெச்சி ஆழ்வார் உனக்கு என்ன வேண்டுமென்ன அவளும் தனக்குத் தன் இளமையைத் திரும்பத்தர வேண்ட ஆழ்வார் அருளால் அவளும் மீண்டும் பொலிவுமிக்க கன்னியானாள். அந்த ஊர் அரசன் பல்லவராயன் அவளால் கவரப்பட்டு அவளை மணக்க விரும்ப அவளும் இசைந்து இருவரும் மணமுடித்து இன்பந்துய்த்த அளவில் ஒருநாள் தான் வயோதிகமடைவது உணர்ந்த அரசன் ஆழ்வாரால் அருளப்பட்ட அவளை அவள் யௌவனம் பற்றி உசாவ அவளும் தன்  சரிதை சொல்லி அரசனை, கணிகண்ணன் பக்கல் அவர் அரசனிடம் தம் ஆழ்வார் கைங்கர்யம்பற்றிப் பொருள்பெற வரும் போது அவர்வழி ஆழ்வாரை அணுகி அரசனும் தன்னைப் போன்றே தெய்வீக இளமை பெறலாம் என்றாள்.

அரசனும் கணிகண்ணனை  அழைத்து அவரிடம் ஆழ்வாரைத் தான் தொழ  அரண்மனைக்கு அழைத்துவருமாறு  வேண்டினான். கணிகண்ணன் “ஆழ்வார் ஶிஷ்டாசாரத்தை மீறி எம்பெருமான் ஸந்நிதி தவிர அரண்மனைக்கும் வாரார்”  என்றார். அரசன் கணிகண்ணனைத் தன்னைப் புகழ்ந்து பாடச் சொல்லவும், அவர் நாராயணனைத் தவிர வேறு நரர்களைப் பாடுவதில்லை என்று கூறவும் அரசன் கடுஞ்சினம் கொண்டு தன்னைப் பாடாதவர் தன நாட்டில் இருக்கலாகாது உடனே வெளியேற வேண்டும் எனக் கட்டளையிட்டான்.  உடனே கணிகண்ணன் ஆழ்வாரிடம் சென்று நடந்ததைக் கூறி விடை வேண்ட, ஆழ்வார் “நீர் சென்றீராகில் நாமும் செல்வோம். நாம் சென்றால் எம்பெருமானும் செல்வான், அவன் சென்றால் அனைத்துத் தேவர்களும் இங்கிருந்து கிளம்புவர். நான் இப்போதே சந்நிதிக்குச் சென்று எம்பெருமானுக்குச் சொல்லி, அவனை எழுப்புகிறேன்” என்று கிளம்பினார்,  ஆழ்வார் திருவெஃகா சென்று, எம்பெருமான் முன்னே நின்று

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்
<

என்று பாடினவளவில் எம்பெருமான் கணிகண்ணனோடும் ஆழ்வாரோடும் மகிழ்ச்சியோடு பின்தொடர்ந்து கிளம்பினான்.  இவ்வாறாக அடியார் சொன்னபடி செய்ததால் எம்பெருமான் சொன்னவண்ணம் செய்த பெருமாள் = யதோக்த காரி என்று பெயர் பெற்றான்.  யதா உக்த = எப்படிச் சொல்லப்பட்டதோ, அப்படி, காரி = செய்தவன்.  எம்பெருமானோடு அனைத்துத் தேவதைகளும் கிளம்பவே, காஞ்சி நகரமே தெய்வ சூன்யமாகி இருண்டு போனது. ஸூர்யோதயமும் ஆகாததால் அரசனும் அமைச்சர்களும் விஷயமறிந்து  கணிகண்ணன் பின்னாடி அவர் திருவடிகளில் விழுந்து பிழைபொறுக்க விண்ணப்பிக்க அவர் ஆழ்வாரிடம் தெண்டனிட்டு ப்ரார்த்தித்து, ஆழ்வார்

கணிகண்ணன் போக்கொழிந்தான்
காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டும்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்
நீயும் உன்றன் பைந்நாகப்பாய் படுத்துக்கொள்

என்று பெருமாளிடம் விண்ணப்பிக்க எம்பெருமானும் பழையபடியே திருவெஃகாவுள் சென்று தன் அரவணையில் தேவிமார் திருவடியில் நிற்க இன்புடன் பள்ளிகொண்டருளி, சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்பதை மீண்டும் உலகுக்குக் காட்டி, தான் பக்த பராதீனன் என்றும், பாகவதாபசாரம் கொடியது என்றும் காட்டியருளினன்.

பைந்நாகப் பாயை மீண்டும் விரித்துப் படுத்துக்கொள் என்று ஆழ்வார் வேண்டியதும், இடம்-வலம் மாறியது கூட அறியாமல் சொன்ன வண்ணமே ஸயனித்தருளினான் பெருமான். ஆழ்வார் தம்மிடம் அவன் காட்டிய க்ருபையை “வெக்கணைக் கிடந்ததென்ன நீர்மையே!”…. இப்படி ஒரு நீர்மை,  ஸௌலப்யம் இருந்தபடியே என்று கொண்டாடினார்.

இன்றும் திருவெஃகாவில் ஸேவார்த்திகளின் இடப்புறம் திருவடிகள் அமையுமாறு மற்ற பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் காணக்கிடைக்காத ஸேவை ஸாதித்துக்கொண்டு பெருமாள் பள்ளி கொண்டிருப்பதைச் ஸேவிக்கலாம்.

இதன்பின் ஆழ்வார் பெருவிருப்போடும் தவிப்போடும் திருக்குடந்தை ஆராவமுதனை மங்களாசாசனம் செய்யத் திருவுளம் கொண்டு கிளம்பினார் – ”திருக்குடந்தையில் ஒரு கணம் இருந்தாலும் ஸ்ரீவைகுண்ட ப்ராப்தியுண்டு எனில் அதனில் வேறு செல்வமுண்டோ?”.

அவ்வாறு செல்லும் வழியில், பெரும்புலியூர் என்னும் க்ராமத்தில், ஆழ்வார் ஒரு இல்லத்தின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாற எண்ணி அமர்ந்தார். அங்கே சில ப்ராஹ்மணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர். இவரின் கந்தல் உடையையும் களைப்பால் வாடின திருவுருவத்தையும் கண்டு தாழ்வாக நினைத்து வேதம் ஓதுவதை நிறுத்தினர். பின்பு மறுபடியும் தொடங்க முயற்சிக்கும் பொழுது, தாங்கள் விட்ட இடம் நினைவுக்கு வராமல் தவிக்க, ஆழ்வார் ஒரு நெல்லை எடுத்து நகத்தால் பிளந்து, யஜுர் காண்டத்தை சேர்ந்த “க்ருஷ்ணாநாம் வ்ரீஹிநாம் நகநிர்ப்பிந்நம்” என்னும் வாக்கியத்தை உணர்த்தினார். அந்த ப்ராஹ்மணர்கள் ஆழ்வாரின் பெருமையை உடனே உணர்ந்து ஆழ்வாரிடம் தங்களின் நடத்தைக்கு மன்னிப்புக் கோரினர்.

ஆழ்வார் திருவாராதனத்துக்குப் பொருள் சேகரிக்க முற்பாடானபோதெல்லாம் அவ்வூரிலுள்ள கோயிலில் இருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான் அவர் இருக்குந்திசைதொறும் திரும்பியதால் சந்நிதி அர்ச்சகர்கள் வியந்து அங்குப் பெருவேள்வியொன்று இயற்றிக்கொண்டிருந்த பெரும்புலியூரடிகளிடம் இவ்வதிசயத்தைக்கூற அடிகளாரும் ஆழ்வாரை அழைத்து வேள்வியில் ஆழ்வாருக்கு அக்ர பூஜை (முதல் பூஜை) செய்து கௌரவிக்க, அங்குள்ள பிராமணர்கள் சிலர் தர்மபுத்ரனின் ராஜஸூயத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அக்ரபூஜையை ஶிஶுபாலாதிகள் போன்று எதிர்க்கவும் அடிகளார் மனம் நொந்தார்.

அடிகளார் வருத்தம் கண்டு ஆழ்வாரும் இவ்யக்திகளுக்குத்தம் மேன்மைகாட்டத் திருவுள்ளம்கொண்டு, உடனே அங்கேயே அப்பொழுதே யாவருங்காணலாம்படி தம் ஹ்ருதய கமலத்தில் அரவிந்தப் பாவையும் தானும் அரவத்தமளியினோடு அழகிய பாற்கடலுள் எம்பெருமான் எழுந்தருளியிருப்பதைக் காட்ட எதிர்த்தோர் யாவரும் ஆழ்வார் திருவடிகளிலே விழுந்து ஶரணாகதராயினர்.

அவர்க்கு ப்ரம்மரதம் அலங்கரித்து எழுந்தருளப்பண்ணி மிகவும் உபலாளித்து ஸத்தை பெற்றார்கள். ஆழ்வாரும் அவர்களுக்குப் பேரன்போடு சாஸ்த்ரார்த்தங்கள் விரிவாகக்கூறி அனுக்ரஹித்து, ஆராவமுதனைத் தொழக் குடந்தை ஏகினார்.

திருக்குடந்தை சென்ற ஆழ்வார் தம் கிரந்தச் சுவடிகள் யாவற்றையும் காவிரியாற்றில் எறிய எம்பெருமான் திருவுளப்படி, நான்முகன் திருவந்தாதி திருச்சந்தவிருத்தம் எனும் ப்ரபந்தங்களைக் கொண்ட இரு ஓலைச்சுவடிகளும் நீரின் போக்கை எதிர்த்து வந்து நின்றன. அவர் அவற்றை எடுத்துக்கொண்டு அமுதனின் சந்நிதி சென்று அவனைத் திருவடிமுதல் திருமுடிவரை அழகை அநுபவித்து, காதல் மீதூர எம்பெருமானை விளித்து “காவிரிக் கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு” என்று கட்டளையிடவும், எம்பெருமான் உள்ளபடியே தன அரவப் பள்ளியிலிருந்து எழுந்து நிற்கத் தொடங்கினான். அவனது அந்த எளிய செயலால் உருகிய ஆழ்வார் “வாழி கேசனே” என்று மங்களாசாசனம் செய்து முடித்தார். ஆராக் காதலோடு அவ்வெம்பெருமான் அருகிலேயே 2300 ஆண்டுகள் அன்ன ஆஹாரமின்றி  தவம் இருந்தார். பூலோகத்தில் 4700 ஆண்டுகள் எழுந்தருளியிருந்து ஶாஸ்த்ரார்த்தங்களின் ஸாரத்தைப் பிரபந்தங்களால் உபகரித்து உலகை வாழ்வித்தருளினார்.

aarAvamuthanதிருக்குடந்தை கோமளவல்லி சமேத ஆராவமுதன்

இவ்வளவில் ஆழ்வார் திருமழிசைப் பிரான் என்று புகழ்பெற்றார், பிரான் எனில் பேருபகாரம் செய்கிறவர் என்று பொருள், இது எம்பெருமானையே குறிக்கும். ஆழ்வாரும் இப்பேரால் அழைக்கப்பெற்றார் ஆராவமுதனோ ஆராவமுதாழ்வார் என்று அழைக்கப்பெற்றான்!

ஆழ்வார் திருவருளால் நாமும் எம்பெருமானிடமும் அவனடியார்களிடமும் அதே பக்தியை அடையப் பெறுவோமாக!

இவரது தனியன்:

ஶக்தி பஞ்சமய விக்ரஹாத்மநே சூக்திகாரஜத சித்த ஹாரிணே
முக்திதாயக முராரி பாதயோர் பக்திஸார முநயே நமோ நம:

இவரது வாழி திருநாமம்:

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே
அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே
இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே
எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே
முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே
முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே
நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே
நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே

திருமழிசை ஆழ்வாரின் அர்ச்சாவதார அனுபவம்:  http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-thirumazhisai-azhwar.html.

அடியேன் சடகோப ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/01/16/thirumazhisai-azhwar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

முதலாழ்வார்கள்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

இந்த கட்டுரையில் முதலாழ்வார்கள் (பொய்கையார், பூதத்தார், பேயார்) வைபவத்தை பேசுவோம்.

பொய்கை ஆழ்வார் :

திருநட்சத்திரம் : ஐப்பசி திருவோணம்

அவதார திருத்தலம் : திருவெஃகா (காஞ்சிபுரம்)

ஆசாரியன் : சேனை முதலியார்

பிரபந்தம் : முதல் திருவந்தாதி

திருவெஃகா யதோக்தகாரி பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் (புஷ்கரணி) பொய்கை ஆழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் காஸார யோகி மற்றும் ஸரோ முனீந்திரர் ஆகியவை ஆகும்.

இவரது தனியன்:

காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதம் காஸார யோகிநம்
கலயே : ஶ்ரிய:பதி ரவிம் தீபம் அகல்பயத்

இவரது வாழி திருநாமம்:

செய்யதுலாவோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே

பூதத்தாழ்வார்:

திருநட்சத்திரம் : ஐப்பசி அவிட்டம்

அவதார திருத்தலம் : திருக்கடல்மல்லை

ஆசாரியன் : சேனை முதலியார்

பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி

திருக்கடல்மல்லை ஸ்தலசயனப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள குளத்தில் பூதத்தாழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் பூதஹ்வயர் மற்றும் மல்லாபுரவராதீசர் ஆகியவை ஆகும்.

இவரது தனியன்:

மல்லாபுர வராதீஶம் மாதவீ குஸுமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோர் ஜ்ஞானதீபம் அகல்பயத்

இவரது வாழி திருநாமம்:

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன்புகழ்சேர் குருக்கத்தி நாண்மலரோன் வாழியே
நல்லதிருக் கடன்மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தைதிரியிட்ட பிரான் வாழியே
எழின்ஞானச் சுடர் விளக்கையேற்றினான் வாழியே
பொன்புரையுந் திருவரங்கர் புகழுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணையிப் பூதலத்தில் வாழியே

பேயாழ்வார்:

திருநட்சத்திரம் : ஐப்பசி சதயம்

அவதார திருத்தலம் : திருமயிலை (மயிலாப்பூர்)

ஆசாரியன் : சேனை முதலியார்

பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி

திருமயிலை கேஶவப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள கிணற்றில் பேயாழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் மஹதாஹ்வயர் மற்றும் மயிலாபுராதிபர் ஆகியவை ஆகும்.

இவரது தனியன்:

த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம்
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆச்ரயே

இவரது வாழி திருநாமம்:

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே
நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே

முதலாழ்வார்கள் சரித்திரம்/ வைபவம்:

மூன்று ஆழ்வார்களையும் ஒரு சேர்ந்து போற்றப்படும் காரணங்கள் பின் வருமாறு.

 • பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூவரும் முறையே அடுத்தடுத்த மூன்று நாட்களில் அவதரித்தார்கள். இவர்கள் த்வாபர யுக முடிவுக்கும் கலியுக ஆரம்பத்திற்கும் இடையிலான யுக சந்தியில் அவதரித்தார்கள். (யுக சந்தி – யுக மாற்றம் ஏற்படும் இடைவெளிக்காலம் – விவரத்திற்கு கட்டுரையின் கடைசியில் காண்க)
 • இவர்கள் மூவருமே அயோனிஜர்கள் – அதாவது தாயின் கருவிலிருந்து பிறவாதவர்கள். இவர்கள் எம்பெருமானின் தெய்வீகக்  கருணையால் பூவிலிருந்து தோன்றினர்.
 • இவர்கள் பிறந்ததிலிருந்தே எம்பெருமான் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் – எம்பெருமானால் பரிபூரணமாக அனுக்கிரகிக்கப் பட்டு, நாள் திங்கள் ஊழிதோறும் (ஸர்வ காலமும்) பகவத் அனுபவத்தில் திளைத்திருந்தவர்கள்.
 • வாழ்வின் ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்ட இவர்கள் மூவரும், அப்போதிலிருந்து ஒன்றாகவே தங்கவும், பற்பல திவ்ய தேஶங்களுக்கு பயணிக்கவும் செய்தனர். இவர்கள் ஓடித் திரியும் யோகிகள் – அதாவது எப்போதும் யாத்திரை செய்பவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மூன்று ஆழ்வார்களும் வெவ்வேறு இடங்களில் பிறந்து எம்பெருமானை ஆழ்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தார். தனது அடியார்களை தனது உயிராக கொண்டிருக்கும் எம்பெருமான் (கீதை – “ஞானி து ஆத்ம ஏவ மே மதம்”) இவர்களை ஒரு சேரக் காண திருவுள்ளம் கொண்டான். ஆதலால் அவன் ஒரு தெய்வீகத்  திருவிளையாடல் புரிந்து மூவரையும் திருக்கோவிலூருக்கு ஒரு இரவுப் பொழுதில் வரவழைத்தான்.

அன்று இரவு பலத்த மழை பெய்த காரணத்தால் ஒருவர் பின் ஒருவராக ஒரு சிறிய கொட்டாரத்தை (இடை கழி) வந்தடைந்தனர். அந்த இடமோ ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்கிற அளவாகவே இருந்தது. மூவரும் வந்ததால் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் தங்கள் தங்கள் முகவரியை பற்றி விசாரித்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் இறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கையில் திடீரென்று எம்பெருமான் திருமாமகளோடு அந்த இருட்டு மிகுந்த இடை கழியில் புகுந்தான். தன் அடியார்கள் இருக்கும் இடத்தில் தான் எம்பெருமானுக்கு எவ்வளவு ஆசை! எவர் புகுந்தார் என்று பார்ப்பதற்காக,

 • பொய்கை ஆழ்வார் வெளிச்சத்திற்காக இவ்வையத்தை (உலகத்தை) தகளியாக (விளக்கு), கடலை நெய்யாக மற்றும் கதிரவனை விளக்கொளியாக ஏற்றினார்.
 • பூதத்தாழ்வார் வெளிச்சத்திற்காக தன் அன்பையே விளக்காக, ஆர்வத்தையே நெய்யாக மற்றும் தன் சிந்தையை விளக்கொளியாக ஏற்றினார்.
 • பேயாழ்வார், மேலே கூறியபடி மற்ற இரண்டு ஆழ்வார்களின் உதவியைக் கொண்டு திருமாமகளோடு கூடிய சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையனான எம்பெருமானின் ஒப்பற்ற அழகினை கண்டு, அதற்கு மங்களாசாசனம் செய்கிறார். கண்டதோடு மட்டுமல்லாமல் தான் கண்டதை மற்ற இரு ஆழ்வார்களுக்கு காட்டியும் மகிழ்ந்தார் (…கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன் என்ற பேயாழ்வாரைப் பற்றிய திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி பாசுர வரிகளை நினைவில் கொள்வது சுவை கூட்டும்)

இவ்வாறு இம்மூவரும் இந்த லீலா விபூதியில் ( நித்ய லோகமான ஸ்ரீவைகுண்டத்தை தவிர்த்த மற்றைய லோகங்கள் லீலா விபூதியாகும் ) இருக்கும் காலத்தில் திருக்கோவலூர் ஆயனையும் மற்றும் பல திவ்ய தேஶ எம்பெருமான்களையும் ஒன்று கூடி அனுபவித்து மகிழ்ந்தனர்.

தனது ஈடு வியாக்கியானத்தில் நம்பிள்ளை முதலாழ்வார்களின் பெருமைகளை தகுந்த இடங்களில் வெளிக்கொணர்கிறார். அவற்றில் சில உதாரணங்களை நோக்குவோம்:

 • “பாலேய் தமிழர்” (1.5.11) – நம்பிள்ளை இங்கு அளவந்தாரின் நிர்வாகத்தை/கருத்தை கண்டுகொள்கிறார். இங்கு நம்மாழ்வார் முதலாழ்வார்களைத் தான் புகழ்ந்து ஏற்றுவதாக தெரிவிக்கிறார். ஏனெனில் முதலாழ்வார்கள் தான் முதலில் எம்பெருமானின் பெருமைகளை தேனிலும் இனிய தமிழில் பாடினவர்கள்.
 • “இன்கவி பாடும் பரமகவிகள்” (7.9.6) – இங்கு நம்பிள்ளை, ஆழ்வார்களின் தமிழ் பெரும்புலமையைத் தெரிவிப்பதற்காக, பொய்கையாரும் பேயாரும் பூதத்தாழ்வாரை எம்பெருமானின் கல்யாண குணங்களைப் பாடுமாறு விண்ணப்பிக்க, அவரும் அங்கே அப்பொழுதே பாடியதைக் கொண்டு குறிப்பிடுகிறார். இது எது போல் எனில், பெண் யானை கேட்க ஆண் யானை எவ்வாறு தேனைக் கொணருமோ அது போலவே (இந்த யானை வர்ணனை பூதத்தாரின் “பெருகு மத வேழம்” என்ற இரண்டாம் திருவந்தாதியின் 75 ஆம் பாசுரத்தில் காணலாம்) முதலாழ்வார்களுக்கு “செந்தமிழ் பாடுவார்” என்னும் திருநாமமும் இருப்பதைக்  குறிப்பிடுகிறார்.
 • “பலரடியார் முன்பருளிய” (7.10.5) – நம்மாழ்வாரின் திருவுள்ளத்தை நம்பிள்ளை இங்கு மிக அழகாக வெளிக் கொணர்கிறார். இந்த பாசுரத்தில், ஸ்ரீ வேதவியாசர், ஸ்ரீ வால்மீகி, ஸ்ரீ பராசரர் மற்றும் முதலாழ்வார்களுக்கு பதிலாக தன்னைத் திருவாய்மொழி பாடுவிக்க எம்பெருமான் தேர்ந்தெடுத்து அருளாசி வழங்கியமையை ஆழ்வார் தெரிவிக்கிறார்.
 • “செஞ்சொற் கவிகாள்” (10.7.1) – இங்கு நம்பிள்ளை முதலாழ்வார்களை “இன்கவி பாடும் பரமகவிகள்” “செந்தமிழ் பாடுவார்” என்றெல்லாம் குறிப்பிட்டு, இவர்கள் அநந்ய பிரயோஜனர்கள் (எம்பெருமானை பாடுவதற்கு கைம்மாறாக எதையும் எதிர்பாராதவர்கள்) என்று கண்டு கொள்கிறார்.

மாமுனிகள் தனது உபதேசரத்தினமாலையில் இவர்களை “முதலாழ்வார்கள்” என்று குறிப்பிட காரணத்தை அருளிச்செய்கிறார்.

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நல் தமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த
பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும்
பெயரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து.

சுருக்கமான மொழி பெயர்ப்பு:

இம்மூன்று ஆழ்வார்களும் ஏனைய 7 ஆழ்வார்களுக்கு முன்னே அவதரித்து இந்த நாட்டை தமிழ்ப்  பாசுரங்களைக் கொண்டு உய்வித்தபடியால் இவர்களுக்கு “முதலாழ்வார்கள்” என்ற பிரபலமான பெயர் ஏற்பட்டது.

மேலும் ஐப்பசி ஓணம், அவிட்டம், சதயத்தின் புகழை முதலாழ்வார்கள் இந்த மூன்று நாட்களில் பிறந்தபடியால் வெளிக்காட்டுகிறார் மாமுனிகள்.

பிள்ளை லோகம் ஜீயர் தனது வியாக்கியானத்தில் சில அருமையான கருத்து கோணங்களை அருளிச்செய்கிறார். அவையாவன:-

 • முதலாழ்வார்கள் பிரணவம் போல – எப்பொழுதும் தொடக்கமாகிற படியால்.
 • திருமழிசை ஆழ்வாரும் இவர்கள் காலத்தில் அவதரித்தார் (துவாபர-கலியுக சந்தி / இடைவெளிக்காலம்). இவர்களையடுத்து கலியுகத் தொடக்கத்தில் மற்ற ஆழ்வார்கள் ஒருவர் பின் ஒருவர் அவதரித்தார்கள்.
 • முதலாழ்வார்களே திராவிட வேதமாம் திவ்ய பிரபந்தத்திற்கு உயர்ந்த திராவிட மொழியில் (தமிழ்) அஸ்திவாரம்/ அடித்தளம் இட்டனர்.

பெரியவாச்சான் பிள்ளையின் “திருநெடுந்தாண்டகம்” வியாக்கியான அவதாரிகையில் கண்டுகொண்டபடி, முதலாழ்வார்கள் எம்பெருமானின் பரத்துவத்தில் ஆழங்கால் பட்டு அதிலே அதிகம் ஈடுபட்டனர். இதனாலேயே இவர்கள் த்ரிவிக்ரமாவதாரத்தை அடிக்கடி போற்றி பாசுரங்கள் பாடினர். மேலும் இயற்கையிலேயே அர்ச்சாவதார எம்பெருமான்கள் மீது எல்லா ஆழ்வார்களுக்கும் ஈடுபாடு உண்டாதலால், பல அர்ச்சாவதார எம்பெருமான்களை இவர்கள் மங்களாசாசனம் செய்தனர். முதலாழ்வார்களின் அர்ச்சாவதார அனுபவங்கள் பற்றிய கட்டுரை இங்கே காண்க (http://ponnadi.blogspot.in/2012/10/archavathara-anubhavam-azhwars-1.html)

அடியேன் லக்ஷ்மீநரஸிம்ஹ ஸ்ரீவைஷ்ணவ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/10/22/mudhalazhwargal/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

யுக சந்தி :

யதீந்திர மத தீபிகை பல்வேறு சம்பிரதாய கருத்துகளை விளக்கும் அதிகார பூர்வமான மூல நூலாகும். இதில் கால தத்துவம் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு யுகங்கள் மற்றும் அவைகளின் சந்தி காலங்கள் வரையறுக்கப் பட்டுள்ளன.

 • தேவர்களின் 1 நாள் (சுவர்க்க லோகம்) = மனிதர்களின் 1 வருடம்.
 • 1 சதுர் யுகம் என்பது 12000 தேவ வருடங்கள் – (க்ருத 4000, த்ரேதா 3000, த்வாபர 2000 & கலி 1000)
 • பிரமனின் (பிரம்மா) 1 நாள் = 1000 சதுர் யுகங்கள். இவரின் இரவும் இதே நீளம் கொண்டது. ஆனால் இரவின் போது சிருஷ்டி நடக்காது. இந்த கணக்கில் பிரம்மா 100 வருடங்கள் (1 வருடம் = 360 நாட்கள்) வாழ்கிறார்.
 • யுகங்களுக்கு இடையிலான சந்தி பொழுது மிகவும் நீண்டது. அவற்றின் கணக்கு பின் வருமாறு :-
 • க்ருத – த்ரேதா யுகங்களுக்கு இடையிலான சந்தி காலம் = 800 தேவ வருடங்கள்.
 • த்ரேதா-த்வாபர யுகங்களுக்கு இடையிலான சந்தி காலம் = 600 தேவ வருடங்கள்.
 • த்வாபர-கலி யுகங்களுக்கு இடையிலான சந்தி காலம் = 400 தேவ வருடங்கள்.
 • மேலும், கலியுகத்திற்கும் அடுத்த க்ருத யுகத்திற்கும் இடையிலான சந்தி காலம் = 200 தேவ வருடங்கள்.
 • பிரமனின் 1 நாள் ஆயுள் காலத்தில் 14 மனுக்கள், 14 இந்திரர்கள் மற்றும் 14 சப்த ரிஷிகள் இருப்பார்கள்/மாறுவார்கள்.(இவைகள் அனைத்தும் குறிப்பிட்ட ஜீவாத்மாக்களுக்கு அவர் கருமங்களின் அடிப்படையில் கொடுக்கப்படும் பதவிகளே ஆகும்.)