Author Archives: andalrajagopalan

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

nampillai-goshti1நம்பிள்ளை காலக்ஷேப கோஷ்டி – நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் (இடப் பக்கத்தில் இருந்து மூன்றாவது)

திருநக்ஷத்திரம் : ஐப்பசி அவிட்டம்
அவதாரஸ்தலம் : ஸ்ரீரங்கம்
ஆசார்யன்  : அவருடைய தகப்பனார் (பட்டர்), நம்பிள்ளை
சிஷ்யர் : வலமழகியார்
பரமபதம் அடைந்த இடம்  :  ஸ்ரீரங்கம்
அவர் எழுதிய நூல்கள் :  திருவாய்மொழி 125000  படி வ்யாக்யானம் ,  பிஷ்ட பசு நிர்ணயம், அஷ்டாக்ஷர  தீபிகை, ரஹஸ்ய த்ரயம், த்வய பீடக்கட்டு,  தத்வ விவரணம், ஸ்ரீவத்ச விம்சதி முதலியவை

இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும் பேரன் என்றும் சொல்லப்படுகிறார். இவர்  முதலில் உத்தண்டபட்டர் என்று பெயரிடப்பட்டு பிற்காலத்தில் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் என்று புகழப்பட்டார்.

பின் குறிப்பு: பெரிய திருமுடி அடைவு என்னும் நூலில் இவர் பராசர பட்டரின் குமாரன் என்றும், 6000 படி  குரு பரம்பரை ப்ரபாவத்தில்  இவர் கூரத்தாழ்வானின் பேரன் என்றும் அறியப்படுகிறார். பட்டோலையில் இவர் வேத வ்யாஸ பட்டரின் கொள்ளுப்பேரன் என்றும் அறியப்படுகிறார்.இவ்வாறு சில அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் அவர் நம்பிள்ளையின் அன்பிற்குப் பாத்திரமான சிஷ்யரானார்.

ஸ்ரீரங்கத்தில் நம்பிள்ளையின் காலமே ஸ்ரீவைஷ்ணவத்தின் மிகுந்த பெருமை வாய்ந்த பொற்காலமாகக் கருதப்பட்டது. ஏனென்றால் அந்தக்காலத்தில் தான் எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் தொடர்ந்து பகவதனுபவம் கிடைத்தது. நம்பிள்ளைக்கு அப்போது ஏராளமான சிஷ்யர்களும் தொண்டர்களும் இருந்தனர். அவர்கள் நம்பிள்ளையின் காலக்ஷேபங்களைத் தவறாமல் கேட்டு வந்தனர். இருந்தாலும் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டருக்கு நம்பிள்ளையிடம் ஒரு அனுகூலமான மனப்பான்மை  இல்லை.இவர் உயர்ந்த பரம்பரையிலிருந்து வந்ததால் கர்வம் நிறைந்து ஆரம்பத்தில் நம்பிள்ளையை மதிக்காதவராக இருந்தார்.

ஒருமுறை நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் மன்னரின் அரசவைக்குச் சென்று கொண்டு இருந்தார். வழியில் பின்பழகிய பெருமாள் ஜீயரைச் சந்தித்து அவரையும் மன்னரின் அரசவைக்கு வருமாறு அழைத்தார். ஜீயருக்கு பட்டர் குடும்பத்தின் மீது இருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக அவருடன் சென்றார். மன்னர் அவர்களை வரவேற்று நன்கு உபசரித்து மரியாதைகள் செய்து அவர்களை நல்ல இருக்கைகளில் அமரச் செய்தார். மன்னர் நன்கு படித்தவராக விளங்கியதால் பட்டரின் அறிவாற்றலைத் தெரிந்து  கொள்ள ஸ்ரீராமாயணத்திலிருந்து அவரிடம் ஒரு கேள்வி  கேட்டார். அரசர் கேட்டார் “ஸ்ரீராமன் தன்னை ஒரு மனிதப் பிறவியாகவும் தசரதனின் அன்பான பிள்ளையாகவும் சொல்லிக் கொண்டவன், எப்படி ஜடாயுவின் இறுதி காலத்தில் அவருக்கு ஸ்ரீவைகுண்டம் செல்ல ஆசீர்வாதம் வழங்கினான்? இது மாறுபாடான கருத்தல்லவோ?” என்றார். பட்டர் இதைக் கேட்டு ஒரு பொருத்தமான காரணத்தைக் கூற முடியாமால் பேசமுடியாமல் வாயடைத்து நின்றார்.  அதற்குள் மன்னர் வேறு வேலைகளால் கவனம் கலைந்தார். அதற்குள் பட்டர் ஜீயரைப் பார்த்து இதற்கு நம்பிள்ளை எவ்வாறு விளக்கம் அளிப்பார் எனக் கேட்டார். அதற்கு ஜீயர், நம்பிள்ளை “ஸத்யேன லோகான் ஜயதி” என்ற ச்லோகத்தின் மூலம் அதை விளக்குவார் என்றும், அதற்கு அர்த்தம் — ஒரு முழுமையான ஸத்யவானாகில், அவனால் எல்லா உலகங்களையும் கட்டுப்படுத்த முடியும். எனவே ஸத்யத்தினால் மட்டுமே அவரால் எல்லா உலகங்களையும் ஜயிக்க முடிந்தது என்கிறார். மன்னர் திரும்பி வந்ததும் இதை பட்டரே அவரிடம் விளக்கினார். மன்னரும்  சிறந்த அறிவாற்றல் மிக்கவராகையால்  இதனைப் புரிந்து கொண்டு பட்டருக்கு வேண்டிய செல்வத்தைக் கொடுத்து அவரை கௌரவித்தார். பட்டர் உடனே நம்பிள்ளையின் மேல் ஏற்பட்ட நன்றியாலும் பக்தியாலும் ஜீயரிடம் அவரை நம்பிள்ளையிடம் அழைத்துச் செல்லுமாறு கூறி உடனே நம்பிள்ளையின் திருமாளிகைக்குச்  சென்று   தனக்கு மன்னரிடமிருந்து கிடைத்த அத்தனை செல்வத்தையும் அவருடைய திருவடிகளில் ஸமர்ப்பித்து, அவருடைய பாடங்களிலிருந்து ஒரு சிறிய விளக்கம் மூலமாகக் கிடைத்ததே அச்செல்வம் என்று கூறி அனைத்தையும் அவருக்கே ஸமர்ப்பித்தார். பின்பு அவர் நம்பிள்ளையிடம் “நான் இத்தனை நாளகத் தங்களுடைய விலை மதிப்பற்ற வழிகாட்டுதலை இழந்தே போனேன்” என்று கூறினார். அதன் பின்பு அவர் , “இந்த நொடியிலிருந்து அடியேன் தங்களுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டு ஸம்ப்ரதாய விஷயங்களை எல்லாம் தங்களிடமிருந்து அறிந்து கொள்வேன்” என்று உறுதியாகக் கூறினார். உடனே நம்பிள்ளை பட்டரைத் தழுவிக்கொண்டு அவருக்கு  நம்முடைய ஸம்ப்ரதாய விஷயங்களைத் தெளிவுறக் கற்றுக் கொடுத்தார்.   நம்பிள்ளை பட்டருக்குத் திருவாய்மொழி முழுவதும் கற்றுக் கொடுத்தார். பட்டரும் அவைகளைத் தினமும் காலையில் கற்றுக் கொண்டு பிறகு அதை பற்றியே சிந்தித்து அவற்றின் அர்த்தங்களை எல்லாம் விரிவாக இரவில் எழுதி வைப்பார். காலக்ஷேபம் முடிந்ததும் பட்டர் தாம் எழுதி வைத்திருப்பதை நம்பிள்ளையின்  பாதார விந்தங்களில் சமர்ப்பித்தார். பட்டரின் மிக விரிவான அதாவது 125000 படி நீளமான மஹாபாரதத்துக்கு இணையான அளவில் இருந்த அவரின் விளக்க உரைகளைப் பார்த்து நம்பிள்ளை சிறிது கலங்கினார். ஏனென்றால் இவ்வளவு விரிவான மிக நீண்ட விளக்க உரையை மக்கள் படித்தால், அவர்கள் குரு சிஷ்யர்கள் இடையேயான கற்றுக்கொடுத்தல் , கற்றுக்கொள்ளுதல் மற்றும் கற்றுக் கொடுக்கும் விதம் இவைகளைப் புறக்கணித்து, அப்புத்தகத்தை வெறுமனே படித்து விட்டு அவரவர்களுடைய சொந்த முடிவுகளுக்கு  வந்து விடுவார்களே என்று மனம் கலங்கினார். பின் நம்பிள்ளை பட்டரிடம்  சொன்னார் – இது போன்று பிள்ளான் 6000  படி (விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் அளவு) வ்யாக்யானம் எழுதியபோது அவர் எம்பெருமானாரின் உத்தரவு பெற்ற பின்பே  அதை எழுதினார் என்று விளக்கினார். ஆனால் இப்போது பட்டர் இந்த வ்யாக்யானத்தை எழுதுவதற்கு முன் நம்பிள்ளையிடம் உத்தரவு பெறவில்லை. ஆனால் பட்டர் தான் நம்பிள்ளை ஸாதித்ததைமட்டுமே   எழுதியதாகவும் தான் ஸ்வயமாக எதுவுமே எழுதவில்லை என்றும் கூறினார். இறுதியில் நம்பிள்ளை அந்த க்ரந்தத்தை   வெளியிட ஒப்புக் கொள்ளாமல் அதை அழித்துவிட்டார்.

(குறிப்பு:- யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டதுபோல் ஒரு ஆசார்யன் பரமபதம் அடைந்துவிட்டால் அவருடைய சிஷ்யர்கள் மற்றும் குமாரர்கள்  தங்களுடைய தலையைச் சிரைத்துக் கொள்ள வேணும் என்றும், மற்றவர்கள் அதாவது ஆசார்யர்களின் நேரடி சிஷ்யர்களாக இல்லாமல் அவரை ஆச்ரயித்தவர்களாக இருந்தால் அவர்கள் தங்களுடைய உடல் மற்றும் முகத்தில் உள்ள உரோமத்தை மழித்துவிடவேண்டும்)  நம்பிள்ளை பரமபதம் அடைந்தபோது சிஷ்யர்கள்  போல நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரும் தன்னுடைய தலையைச் சிரைத்துக் கொண்டார். இதைப் பார்த்த பட்டருடைய ஒரு சகோதரர் “கூரத்தாழ்வான் பரம்பரையில் பிறந்த ஒருவர் நம்பிள்ளை பரமபதித்தற்கு எதற்குத் தன்னுடைய தலையைச் சிரைத்துக் கொள்ளவேண்டும்?” என வினவினார்.  இதைக் கேட்ட பட்டர் மிகவும் கேலியாக “ஓ ! நான் கூரேசர் பரம்பரையைப் பழித்துவிட்டேன். நீ இதை எப்படி சரி செய்யப்போகிறாய்?” என்று கேட்டார். இதைச் சகித்துக் கொள்ள முடியாமல் பட்டருடைய சகோதரரும் நேரே நம்பெருமாளிடம் போய் முறையிட்டார். நம்பெருமாளும் பட்டரை வரவழைத்து அர்ச்சக முகனே தாம் உயிரோடு இருக்கும்போது (பெருமாளே பராசர பட்டர் மற்றும் அவருடைய சந்ததியினருக்குத் தந்தை) ஏன் இவ்வாறு செய்தீர்? என வினவ, அதற்கு பட்டர் தன்னுடைய அச்செயலுக்கு மன்னித்துவிடுமாறு கூறினார். மேலும் அவர், கூரேசர் பரம்பரையில் வந்த  எவருக்கும் இருக்கும் இயற்கையான குணம்  போன்று, (ஸ்ரீவைஷ்ணவர்களிடம் சரணாகதி பண்ணுவது) தாமும் நம்பிள்ளையிடம் முழுவதும் சரணாகதி பண்ணி, தம்முடைய உடல் மற்றும் முகத்தில் உள்ள ரோமத்தை  மழித்து இருக்கவேண்டும். மாறாக தான் ஒரு சிஷ்யர்கள்/குமாரர்கள் போன்று தான்  தலையை மட்டும் மழித்து விட்டு மிகக் குறைந்த அனுஷ்ட்டானத்தையே பண்ணியதாகச் சொல்லி “இதற்காக நம்பெருமாளே தேவரீர் வருத்தப்படுகிறீரா?” என வினவினார்.  நம்பெருமாள் நம்பிள்ளையிடம் பட்டருக்கு இருந்த அளப்பற்ற ப்ரதிபத்தியைக் கண்டு பேரானந்தம் கொண்டு பட்டருக்குத் தம்முடைய தீர்த்தம், மாலைப் பிரஸாதம் மற்றும் வஸ்த்ரங்களைக்  கொடுத்து கௌரவித்தார். இத்தகைய பெருமை மிக்கவர் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர்.

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைப் பற்றி வ்யாக்யானங்களில் குறிப்பிடப்பற்றவற்றைப் பார்ப்போம்.:

 • திருவாய்மொழி  – 9-3 :- நம்பிள்ளை ஈடு ப்ரவேசம் (முன்னுரை) : இந்தப் பதிகத்தில் நம்மாழ்வார் நாராயண நாமத்தின் (மற்றும் மந்த்ரத்தின்) மகிமையைப் பற்றிச் சொல்கிறார். முக்கியமான மூன்று வ்யாபக மந்திரங்கள் (பகவானின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையைக் குறிப்பது) அதாவது அஷ்டாக்ஷரம் (ஓம் நமோ நாராயணாய) ஷடாக்ஷரம் (ஓம் நமோ விஷ்ணவே) மற்றும் த்வாதசாக்ஷரம் (ஓம் நமோ பகவதே வாசுதேவாய) நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் சொல்கிறார்; ப்ரணவத்தினுடைய அர்த்தம், நம:வின் அர்த்தம் மற்றும் பகவானின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மை எல்லாம் இந்த மூன்று வ்யாபக மந்திரங்களில் கூறப்பட்டிருந்தாலும் ஆழ்வாருடைய ஹ்ருதயம் /மனம் நாராயண மந்திரத்திற்கருகிலேயே இருந்தது. குறிப்பு: இந்த நாராயண மந்திரத்தின் முக்கியத்துவம் ஸ்ரீ பிள்ளைலோகாசார்யரின் முமுக்ஷுபடியின் துவக்கத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

வார்த்தமாலை என்ற நூலிலும் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

 • 216  – நம்பிள்ளைக்கும் பின்பழகிய பெருமாள் ஜீருக்கும் நடந்த ஒரு உரையாடலை இதை காட்டுகிறார் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர். ஜீயர் நம்பிள்ளையிடம் கேட்கிறார் ” ஒவ்வொரு முமுக்ஷுவும் ஆழ்வாரைப் போன்று (எம்பெருமானை மட்டுமே பற்றிக்கொண்டு அவனை மட்டுமே சிந்தித்துக்கொண்டு) இருக்க வேண்டாமா? ஆனால் நமக்கு இன்னும் பிற விஷயங்களில் ஆசை /பற்று வைத்துக்கொண்டு உள்ளோமே. ஆழ்வாரைப் போன்ற  கதி ( பரமபதத்தில் கைங்கர்ய பிராப்தி) நமக்கு எப்போது ஏற்படும் ?” என்று.அதற்கு நம்பிள்ளை , நமக்கு எல்லாம் இந்த சரீரத்தில்  ஆழ்வாரைப் போன்று நிலை ஏற்படாவிட்டாலும்கூட  மிகவும் பரிசுத்தமான நம் ஆசார்யர்களின் க்ருபையால் பகவான் நமக்கு அதே ஆசையை (ஆழ்வாரைப் போன்று) நாம் மரணித்து பரமபதம் அடைவதற்கு முன் நம்முள் ஏற்படுத்திவிடுவான் என்று பதிலுரைத்தார். எனவே நாம் எல்லோரும் பரமபதம் அடைவதற்கு முன் எல்லோரும் ரொம்ப சுத்தமானவர்களாக ஆகி எம்பெருமானுக்கு சாஸ்வதமான கைங்கர்யத்திலேயே நாம் ஊன்றி விடுவோம்
 • 410  – ஒரு ஸ்ரீவைஷ்ணவன் எப்படி  இருக்க வேண்டும் என்று நடுவில் திருவீதிப் பிள்ளை சொல்கிறார்:
  • இந்த உலகில் வாழும் சம்சாரிகளிடத்தில் நாம் ஏதேனும் குறை கண்டால் , நமக்கு,  அவனை பகவான் போன்று மாற்றி அமைக்கும்/காட்டும் திறமை இல்லாததால் அவைகளை  அலட்சியப்படுத்திவிடவேண்டும் .
  • ஸாத்விகர்களிடத்தில் (ஸ்ரீவைஷ்ணவர்களிடத்தில்) குறைகள் கண்டால் அவைகளையும் அலட்சியப்படுத்திவிடவேண்டும். ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் பகவானையே அண்டி இருப்பவர்கள்/சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஆகையால் அவர்கள் தங்களின் குறைகளை பகவானின் துணையோடு சரிபடுத்திக் கொண்டுவிடுவார்கள்.
  • ஸாமான்ய மனிதர்கள்  தங்களின் மீது ஏதோ ஒரு ரசாயனக் கலவையை பூசிக்கொள்வதன் மூலம் தங்கள் மேல் நெருப்பு பற்றிக் கொள்ளாமல் காத்துக் கொள்வது போல் நாமும் நம்மை  பகவத் ஞானத்தினால் போர்த்தி கொண்டு லௌகீக பற்றுக்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.
  • நமக்கு இரண்டு விதமான ஞானம் வேண்டும்
   1 ) நமக்கு அந்த பரமபதம் அடைவது ஒன்றே குறிக்கோளாக இருக்க வேண்டும். 2) இந்த ஸம்ஸார பந்தத்திலிடுந்து முற்றிலும் விடுபடவேண்டும் என்ற ஞானம் (ஸம்ஸாரமே அறியாமையின் இருப்பிடம்)  இந்த  ஸம்ஸார  பந்தத்தில் துளி பற்று இருந்து விட்டாலும் கூட அதுவே நம்மை இங்கேயே இருத்தி விடும்.

இவ்வாறாக நாம் நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டரைப் பற்றியும் அவரது மேன்மையையும் பற்றி சிறிது அறிந்து கொண்டோம். அவர் மிக சிறந்த ஞானி மற்றும் நம்பிள்ளையின் அன்புக்குப் பாத்திரமானவர். எனவே நாம் அவருடைய திருவடித் தாமரைகளில் பணிந்து, நமக்கும் சிறிதளவாவது அவரைப் போன்று பாகவத நிஷ்டை ஏற்பட வேண்டுமென்று பிரார்த்திப்போம்!

நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் தனியன்

லோகாசார்ய பதாஸக்தம் மத்யவீதி நிவாஸிநம்  |
ஸ்ரீவத்சசிஹ்னவம்சாப்திஸோமம் பட்டார்யாமாச்ரயே ||

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2013/04/20/naduvil-thiruvidhi-pillai-bhattar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org