நஞ்சீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

முந்தைய பதிவில் (https://guruparamparaitamil.wordpress.com/2015/07/29/parasara-bhattar/) பராசர பட்டரைப் பற்றி அனுபவித்தோம். இப்பொழுது ஓராண்  வழி ஆசார்யர்களில் அடுத்த ஆசார்யனான நஞ்சீயரைப் பற்றி அனுபவிப்போம் .

நஞ்சீயர் – திருநாராயண புரம்

திருநக்ஷத்ரம்: பங்குனி, உத்திரம்

அவதார ஸ்தலம்: திருநாராயண புரம்

ஆசார்யன்: பராசர பட்டர்

சிஷ்யர்கள்: நம்பிள்ளை, ஸ்ரீ ஸேனாதிபதி ஜீயர் மற்றும் பலர்

பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்

அருளிச்செய்தவை: திருவாய்மொழி 9000 படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், திருப்பாவை வ்யாக்யானம்,  திருவந்தாதிகளுக்கு வ்யாக்யானம், சரணாகதி கத்ய வ்யாக்யானம், திருப்பல்லாண்டு வ்யாக்யானம், நூற்றெட்டு (108) என்ற ரஹஸ்ய த்ரய விவரண க்ரந்தம் – இவற்றுள் பல தற்பொழுது இல்லை.

இவருடைய பெற்றோர்கள் ஸ்ரீமாதவர் என்ற திருநாமத்தை இவருக்கு சூட்டினார்கள். சிறிய வயதில் மிகப் பிரபலமான அத்வைத பண்டிதராக ஆனார். இறுதியில் பட்டர் இவருக்கு நஞ்சீயர் என்ற திருநாமத்தைச் சூட்டினார். இவருக்கு நிகமாந்த யோகி மற்றும் வேதாந்தி என்ற திருநாமங்களும் உண்டு.

மாதவாசார்யர் மிகப் பெரிய அத்வைத பண்டிதர். இவர் திருநாராயணபுரத்தில் வாழ்ந்து வந்தார். எம்பெருமானார் இவரை திருத்திப்பணிகொண்டு நமது சம்பிரதாயத்திற்க்கு அழைத்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். எம்பெருமானார் மாதவாசார்யரை திருத்திப்பணிகொள்வதற்க்காக பட்டரை நியமித்தார். குருபரம்பரையிலிருந்து தெளிவாக புரிவது என்னவென்றால், மாதவாசார்யர் அத்வைதத்தில் இருந்தாலும் எம்பெருமானார் அவர் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தார்.

மாதவாசார்யர் பட்டருடைய பெருமை மற்றும் புகழைத் தெரிந்துகொண்டு, பட்டரை சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தார். எம்பெருமானாரின் ஆசை மற்றும் நியமனப்படி, பட்டர் திருநாராயணபுரத்திற்குச் சென்று மாதவாசார்யருடன் விவாதித்து, அவரை சிஷ்யராக ஏற்றுக்கொண்டார் (இதை முந்தைய பதிவில் பட்டர் வைபவத்தில் அனுபவித்தோம்). வாதம் முடிந்தவுடன், திருவரங்கத்திலிருந்து பட்டருடன் வந்த அவருடைய சிஷ்யர்கள் அனைவரும் மாதவாசார்யரின் இடத்திற்கு வந்தார்கள். பட்டரின் பெருமைகளை உணர்ந்த மாதவாசார்யர் அவருடைய சிஷ்யர்களைக் கண்டவுடன் மிகவும் பூரிப்படைந்தார். “தேவரீருடைய பெருமையயும் ஸ்தானத்தையும் விட்டு, அபார கருணையோடு அடியேனைத் திருத்திப் பணிகொள்வதற்காக  திருவரங்கத்திலிருந்து எழுந்தருளி, சாஸ்த்திரத்தில் உள்ள உண்மையான அர்த்தங்களை விவரமாக விவரித்துத் திருத்தினீர். இப்பேர்பட்ட உதவிக்காக அடியேன் என்ன கைம்மாறு தேவரீருக்கு செய்யப் போகிறேன்?” என்று மாதவசார்யார் பட்டரிடம் கேட்டார். இதற்கு பட்டர் அருளிசெயல் மற்றும் சகல விசேஷார்த்தங்களை கற்றுத்தேர்ந்து திருவரங்கம் வந்து சேருமாறு கூறித் திருவரங்கம் திரும்பினார்.

மாதவசார்யாருடைய மனைவிகள் அவருடைய கைங்கர்யத்திற்கு ப்ரதிகூலமாக இருப்பதால் மிகவும் விரக்தியடைந்தார் மற்றும் ஆசார்யனை விட்டு பிரிந்து இருக்கமுடியாமல், சந்யாசம் பெற்றுக்கொண்டு திருவரங்கத்திற்குச் சென்று ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். தன்னுடைய செல்வத்தை 4 பாகமாகப் பிரித்து, 2 மனைவிக்கும் 2 சமமான பங்காகக் கொடுத்தார், ஏனென்றால் சந்யாசாச்ரமம் ஏற்றுக் கொள்வதற்கு முன்பு மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. பிறகு சந்யாசாச்ரமம் ஏற்றுக் கொண்டு திருவரங்கத்திற்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் அனந்தாழ்வானைச் சந்தித்தார். அனந்தாழ்வான் “சந்யாசாச்ரமம் ஏற்றுக் கொள்ள  அவசியம்என்ன? உம்முடைய ஆசார்யரான பட்டருக்கு கைங்கர்யம் செய்தால், எம்பெருமான் நிச்சியமாக மோக்ஷம் கொடுப்பார்” என்று கூறினார். “திருமந்த்திரத்தில் பிறந்து (ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்து கொண்டு), த்வயத்தில் வளர வேண்டும் (பெருமாளும் பிரட்டியுமாக இருக்கும் சேர்த்தியில் கைங்கர்யம் செய்யவேண்டும்)” என்று அனந்தாழ்வான் மாதவாசர்யரிடம் கூறினார். பட்டர் மாதவாசார்யருடைய ஆழ்ந்த ஈடுபாட்டை பார்த்து அவரை ஏற்றுக்கோண்டு, “நீர்தான் நஞ்சீயர்” என்று அழைத்தார். அன்றிலிறுந்து இன்று வரை அவருக்கு நஞ்சீயர் என்ற திருநாமமே மிகப் ப்ரபலமாக இருக்கிறது.

பட்டரும் நஞ்சீயரும் மிகச் சிறந்த ஆசார்ய-சிஷ்ய சம்பந்தத்தோடு இருந்தார்கள். நஞ்சீயர் தனது வாழ்கையைத் துறந்து ஆசார்யருடனே இருந்து கைங்கர்யம் செய்து வந்தார். திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த திருவாய்மொழி 6000 படி வ்யாக்யனத்தை பட்டர் நஞ்சீயருக்குக் கற்றுக் கொடுத்தார். திருவாய்மொழிக்கு மற்றோரு வ்யாக்யானம் இயற்றும்படி பட்டர் நஞ்சீயரை நியமித்தார். ஆசார்ய நியமனத்திற்கேற்ப நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை இயற்றினார். நஞ்சீயர் வாழ்வில் என்ன சிறப்பு என்றால் அவர் தனது 100 வருட வாழ்வில், 100 முறை திருவாய்மொழி காலக்ஷேபம் சாதித்துள்ளார்.

நஞ்சீயர் எல்லையற்ற ஆசார்ய பக்தி உடையவர். இதோ சில சம்பவங்களின் மூலம் நாம் அவருடைய ஆசார்ய பக்தியைத் தெரிந்து கொள்ளலாம்.

 • ஒருமுறை பட்டர் பல்லக்கில் எழுந்தருளும் பொழுது, நஞ்சீயர் அவரை எழுந்தருளப்பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டு, த்ரிதண்டத்தை ஒரு கையிலும், பல்லைக்கை மற்றொரு தோளிலும் வைத்துக் கோண்டு எழுந்தருளப்பண்ணினார். இதற்கு பட்டர் “ஜீயா உம்முடைய சந்யாசாச்ரமத்திற்கு இது பொருந்தாது. நீர் என்னை எழுந்தருளப்பண்ணக் கூடாது” என்று கூறினார். அதற்கு நஞ்சீயர் “அடியேனுடைய த்ரிதண்டம் தேவரீருக்கு கைங்கர்யம் செய்வதற்குத் தடையாக இருந்தால், அதை உடைத்து விட்டு, சந்யாசாச்ரமத்தை விட்டு விடுகிறேன்” என்று கூறினார்.
 • ஒரு முறை நஞ்சீயருடைய ஏகாங்கிகள் அவரிடம் வந்து பட்டர் எழுந்தருளும்பொழுது தோட்டத்தில் சில தொந்தரவுகள் ஏற்படுகிறது என்று குறை கூறினார்கள். அதற்கு நஞ்சீயர் “இந்த தோட்டமே பட்டருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கைங்கர்யம் செய்வதற்காகத்தான், நம்பெருமாளுக்காக இல்லை. இதை எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும்” என்று ஏகாங்கிகளிடம் கூறினார்.
 • ஆசார்யன் சிஷ்யனுடைய மடியில் படுத்து திருக்கண்வளர்வது ஒரு பழக்கமாக இருந்தது. ஒரு முறை பட்டர் ஓய்வு எடுக்கவேண்டும் என்று என்னி, நஞ்சீயருடைய மடியில் படுத்து வெகு நேரம் உறங்கினார். அத்தனை நேரமும் நஞ்சீயர் கொஞ்சம் கூட அசையாமல் இருந்தார். பட்டர் திருக்கண் மலர்ந்தவுடன் நஞ்சீயரின் ப்ரதிபத்தியைப் பார்த்து மிகவும் சந்தோஷமடைந்து இன்னொறு முறை த்வயார்த்தத்தைக் கூறினார் (சிஷ்யனால் ஆசார்யன் சந்தோஷமடைந்தால் மட்டுமே த்வயத்தினுடைய அர்த்தத்தைக் கூறுவார்கள்).
 • நஞ்சீயர் மிகவும் குறைந்த காலத்திலேயே அருளிச்செயலைக் கற்றுத்தேர்ந்தார். பட்டர் நஞ்சீயரை ஒரு பாசுரத்தை கூறச்சோல்லி அதற்கு அற்புதமான அர்த்தங்களைக் கூறுவார். ஒரு முறை நஞ்சீயர் திருவாய்மொழி 7.2.9 (“என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடையாவியே என்னும்”) பாசுரத்தை எங்கும் இடைவெளி இல்லாமல் முழு வாக்கியமாகக் கூறினார். இதைக் கேட்டவுடன் பட்டர் மூர்ச்சித்து விழுந்தார். பட்டர் சிறிது நேரம் கழித்து எழுந்தவுடன் இந்த வாக்கியத்தை இடைவெளி இல்லாமல் சேர்த்துத் தான் கூற வேண்டும். அப்பொழுது தான் பராங்குச நாயகியுடைய உண்மையான திருவுள்ளம் நமக்குப் புரியும். ஏனென்றால் திருமகளைத் தன் மார்பில் வைத்திருப்பதாலேயே எம்பெருமான் ஆழ்வாரின் ஆவியாகிறார். ஆனால் இந்த வாக்கியத்தை இரண்டாகப் பிரித்துக் கூறினால், அது சாதாரணமாக “எம்பெருமான் திருமகளைத் தான் மார்பில் வைத்துள்ளான், எனக்கு ஆவியாக உள்ளான்” என்று தான் அர்த்தம் வரும் என்று கூறினார்.
 • முன்னம் சம்ஸ்க்ருத வேதாந்தியாக (அத்வைதி) இருந்துகொண்டு, தமிழும் தாய் மொழியாக இல்லாதபொழுதிலும் அருளிச்செயலைக் கற்றுத் தேர்ந்ததால், பட்டர் நஞ்சீயருடைய வித்வத்தை மிகவும் உகந்தார்.

பட்டருக்கும் நஞ்சீயருக்கும் பல சுவரஸ்யமான உரையாடல்கள் நடந்துள்ளது. என்னதான் நஞ்சீயர் மிகப் பெரிய வித்வானாக இருந்தாலும், தன்னுடைய ஆசார்யனிடம் சந்தேகம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதில் அவர் தயங்கினதில்லை.  இதோ சில உரையாடல்களைப் பார்ப்போம்.

 • “ஏன் ஆழ்வார்கள் எப்பொழுதும் கண்ணன் எம்பெருமான் மீது அதிக பற்று வைத்துள்ளார்கள்?” என்று நஞ்சீயர் பட்டரிடம் கேட்டார். அதற்கு பட்டர் “அனைவருக்கும் சமீபத்தில் நடந்த விஷயங்களே நினைவில் இருக்கும், ஏனென்றால் க்ருஷ்ணாவதாரமே மிகவும் சமீபத்தில் எம்பெருமான் எடுத்த அவதாரம், ஆழ்வார்கள் சமீபத்தில் பிறந்து இருந்தும் எம்பெருமானைச் சேவிக்க முடியவில்லையே என்பதால் தான் அவர் மீது மிகவும் பற்று வைத்துள்ளார்கள்” என்று கூறினார்.
 • க்ருஷ்ணாவதாரத்தை பற்றி பட்டர் மேலும் விவரமாகக் கூறினார். அதாவது எம்பெருமான் கோப குலத்தில் வாழ்ந்தார், அவர் எங்கு சென்றாலும் கம்சன் அசுரர்களை அனுப்பி அவரைக் கொல்ல முயற்சி செய்வான். ஆனால் ராமாவதரத்திலோ (மற்ற அவதாரங்களிலும்) எம்பெருமானே அனைத்து ஆயுதங்களையும் உபயோகப்படுத்துவதில் வல்லவராக இருந்தார். அவருடைய தகப்பனார் இந்திரனுக்கே கஷ்டம் வரும்பொழுது உதவுபவர். அவருடைய தம்பிமார்களோ (லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன்) அவருக்கு சமமாக வீரமுடையவர்கள். அதனால் தான் பெரியாழ்வார் மற்ற அவதாரங்களை விட கண்ணன் எம்பெருமானைப் பார்த்து மிகவும் பயந்தார் என்று கூறினார்.
 • கலியன் திருமொழியில் “ஒரு நல் சுற்றம்” பதிகத்தில் (திருமொழி முடிவில்) பல திவ்யதேசங்களுக்கு மங்களாசாசனம் செய்தார். அதற்கு என்ன காரணம் என்று நஞ்சீயர் கேட்க, ஒரு பெண் திருமணமாகித் தன் கணவனுடய இடத்திற்குச் செல்லும்பொழுது, தனது நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்களிடம் விரைவாகக் கூறிவிட்டுச் செல்வாள். அதே போல் ஆழ்வார் பரமபதம் செல்வதற்கு ஆயத்தமானதால், தான் செல்வதற்கு முன் அனைத்து எம்பெருமான்களிடமும் கூறிவிட்டுச் சென்றார் என்று பட்டர் கூறினார்.
 • எம்பெருமானை மதிக்காமல் இருப்பதால் அனைத்து செல்வங்களையும் இழந்து விடுவாய் என்று ப்ரஹலாதன் மஹாபலிக்குச் சாபம் கொடுத்தான். அதற்கு நஞ்சீயர் ப்ரஹலாதனோ செல்வத்தைப் பற்றி கவலைப் படாதவன், அவன் ஏன் இப்படி சபிக்க வேண்டும் என்று பட்டரிடம் கேட்டார். ஒரு நாயைத் தண்டிக்க வேண்டும் என்றால், அது பிடித்து உண்ணும் மலத்தை ஒதுக்குகிறோமோ, அதே போல் மஹாபலிக்கு பிடித்த செல்வத்தை ஒதுக்க வேண்டும் என்பது ப்ரஹலாதனுடைய திருவுள்ளம் என்று பட்டர் கூறினார்.
 • வாமன சரித்திரத்தில் “ஏன் மஹாபலி பாதாளத்திற்குச் சென்றான், சுக்ராசாரியார் ஏன் கண்ணை இழந்தார்?” என்று நஞ்சீயர் கேட்டார். அதற்கு பட்டர் “சுக்ராசாரியார் மஹாபலி செய்யும் தானத்தை தடுத்ததால் அவருக்குக் கண் போனது, ஆசார்யன் சொல்வதை கேட்காமல் இருந்ததால் மஹாபலி பாதாளத்திற்குச் சென்றான்” என்று கூறினார்.
 • “தசரதன் பெருமாளுடைய பிரிவைத் தாங்கமுடியாமல் தன் உயிரை விட்டான் ஆனால் ஏன் அவன் சுவர்க்கத்திற்குச் சென்றான்?” என்று நஞ்சீயர் கேட்டார். அதற்கு பட்டர் “சாமான்ய தர்மத்தில் (உண்மை பேசுவதில்) பற்று வைத்து, தன் வார்த்தையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எம்பெருமானை விட்டான். உண்மையில் அவன் நரகத்திற்குத் தான் சென்றிருக்கவேண்டும், ஆனால் பெருமாளுடைய தகப்பனாரானதால், எம்பெருமான் க்ருபையுடன் அவனுக்கு சுவர்க்கத்தைக் கொடுத்தார்” என்று பட்டர் கூறினார்.
 • கம்சனை அழித்த பிறகு கண்ணன் எம்பெருமான் தேவகியையும், வசுதேவரையும் சென்று பார்த்தான். கண்ணனை பார்த்தவுடன் தாய்ப் பாசத்தினால் தேவகிக்கு மார்பகங்களிலிருந்து பால் சுரந்ததாம், எம்பெருமான் குழந்தையாக இல்லாத போதிலும் அதை ஏற்றுக் கொண்டானாம். நஞ்சீயர் இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்க, அதற்கு பட்டர் இது அம்மாவிற்கும் குழந்தைக்கும் இடையே உள்ள விஷயம், இதைக் கேள்வி கேட்பதற்கு நாம் யார்? என்று நகைச்சுவையாக கேட்டு அதற்கான பதிலையும் விளக்கமாகக் கூறினார். அரக்கியான பூதனை, அவள் எம்பெருமானுக்குத் தாயும் இல்லை மற்றும் அவளுக்கு அவர் மீது உண்மையான அன்பும் இல்லை, அவள் பால் கொடுக்கும் பொழுதே எம்பெருமான் அதை ஏற்றுக் கொண்டான் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம், உண்மையான தாய், எம்பெருமான் மீது அதிகமாக அன்பு கொண்டவள், அவருக்குப் பால் கொடுத்து அவர் அதை ஏற்றுக்கொண்டார் என்பதைப் புரிந்து கொள்வதில் என்ன கஷ்டம் இருக்கிறது என்று பட்டர் கூறினார்.
 • யயாதி சரித்திரத்தை பட்டர் தன் காலக்ஷேபத்தில் கூறினார். யயாதி 100 அச்வமேத யாகத்தைச் செய்து, இந்திரனுடைய பதவியைப் பகிர்ந்து கொள்வதற்காக சுவர்க்கத்திற்குச் சென்றான். இந்திரனுக்கு இது பிடிக்காமல், ஒரு தந்திரத்தினால் யயாதியைத் தவறு செய்ய வைத்து, அவனை கீழே தள்ளிவிட்டான். இந்த சரித்திரத்தின் நோக்கம் என்ன என்று நஞ்சீயர் கேட்டார்? அதற்கு பட்டர் “இந்த சரித்திரம் எம்பெருமானுடைய பெருமையையும், இதர தேவதைகளுடைய சிறுமையையும் கூறுகிறது. அதாவது எம்பெருமான் அவனிடம் சரணடந்தைவர்களுக்கெல்லாம் சாம்யாபத்தி மோக்ஷத்தை கொடுக்கிறான். அனால் இதர தேவதைகள் 100 அச்வமேத யாகத்தை செய்தாலும் தனக்கு சமமாக யார் இருந்தாலும் அவர்களைக் கீழே தள்ளி விடத்தான் பார்ப்பார்கள்” என்று கூறினார்.

இதைப் போல் சாஸ்திரம் மற்றும் அருளிச்செயலில் உள்ள உட்கருத்தை உணர்த்தும் வகையில் பல உரையாடல்கள் நடந்துள்ளது. உண்மையிலேயே நஞ்சீயருக்கு இந்த உரையாடல்கள் தான், அருளிச்செயலுக்கு வ்யாக்யானம் இயற்றுவதற்கும், தன்னுடைய சிஷ்யர்களுக்குச் சம்ப்ரதாய விஷயங்களை  விவரித்துக் கூறுவதற்கும் ஹேதுவாய் இருந்தது.

நஞ்சீயர் 9000 படி வ்யாக்யானத்தை சிறந்த முறையில் ஏடுபடுத்த வேண்டும் என்று நினைத்த பொது, நம்பூர் வரதாசாரியார் சிறந்த எழுத்தாளர் என்று கேள்வியுற்று அதை ஏடுபடுத்தும்படி நியமித்தார். அவரும் அதை ஏடுபடுத்தித் தலைக்கட்டிய பிறகு, நஞ்சீயர் அவரைப் பாரட்டி, அவருக்கு நம்பிள்ளை என்ற திருநாமத்தைச் சூட்டினார். பிறகு அவரையே அடுத்த தர்சன ப்ரவர்த்தகராக நியமித்தார். நம்பிள்ளை ஏடுபடுத்தும் பொழுது நஞ்சீயரை விட மிகச் சிறந்த விளக்கங்களைக் கொடுத்தால், நஞ்சீயர் அவற்றை ஏற்றுக்கொண்டு நம்பிள்ளையைக் கொண்டாடுவார். இதன் மூலம் அவருடைய மேன்மை தெரிகிறது.

நஞ்சீயர் நமது சம்ப்ரதாயத்தை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தார். “ஒரு ஸ்ரீவைஷ்ணவன் கஷ்டப்படுவதைப்பார்த்து, மற்றொறு ஸ்ரீவைஷ்ணவன் வருந்தினால் அவனே உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்” என்று அவர் கூறினார். அவர் இருந்த காலத்தில் ஆசார்யர்கள் மீதும், ஸ்ரீவைஷ்ணவர்கள் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.

பெரிய திருமொழியில், 3.6 (தூவிரிய மலருழக்கி) பதிகத்தில் ஒரு நிகழ்வு காட்டப்பட்டுள்ளது. நஞ்சீயர் தன்னுடைய கடைசி காலத்தில், மிகவும் நோவுபட்டிருக்கும் காலத்தில், பெற்றி என்ற திருநாமமுள்ள ஒரு ஸ்வாமி அவரைப்பார்த்து ஏதேனும் செய்ய வேண்டுமா என்று கேட்டார். அதற்கு நஞ்சீயர் இந்தப் பதிகத்தைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகச் சொன்னார். ஏனென்றால் இந்தப் பதிகத்தில் திருமங்கை ஆழ்வார் எம்பெருமானுக்கு தூது விடுகிறார் (முதல் 4 பசுரங்களில் ஆழ்வார் தூது விடுகிறார், பிறகு அவருடைய மென்மையான தன்மையினால் அவரால் அதைத் தொடரமுடியவில்லை). பிறகு அரையர் ஸ்வாமி அந்தப் பாசுரங்களை நம்பெருமாள் திருமுன்பு அனுசந்தித்துக் காட்ட, நஞ்சீயர் அந்த பாசுரத்தின் அர்த்த விசேஷத்தில் மூழ்கினார்.

தன்னுடைய கடைசி காலத்தில் எம்பெருமானுடைய ஸ்வயம் திருமேனியை சேவிக்க வெண்டும் என்று எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்ய, அவருக்காக மட்டும் நம்பெருமாள் ஸ்வயம் திருமேனியைக் காட்டி அருளினார். அவரைச் சேவித்ததில் மிகவும் திருப்தி அடைந்த நஞ்சீயர், தன்னுடைய சிஷ்யர்களுக்குக் கடைசி உபதேசங்களைக் கூறிவிட்டு, தன் சரம திருமேனியை விட்டுத் திருநாடலங்கரித்தார்.

நாமும் நம் ஆசாரியரிடமும், எம்பெருமானிடமும் பற்று வளர்வதற்கு நஞ்சீயருடைய திருவடித்தாமரைகளை வணங்குவோம்.

நஞ்சீயருடைய தனியன்

நமோ வேதாந்த வேத்யாய ஜகந் மங்கள ஹேதவே
யஸ்ய வாகாம்ருதாஸார பூரிதம் புவந த்ரயம்

மேலே, அடுத்த ஆசார்யரான நம்பிள்ளையின் வைபவத்தை அனுபவிப்போம்.

அடியேன் ரெங்க ராமானுஜம் ராமாநுஜ தாஸன்

ஆதாரம்: https://guruparamparai.wordpress.com/2012/09/14/nanjiyar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Advertisements

2 thoughts on “நஞ்சீயர்

 1. Pingback: vEdhAnthi jIyar (nanjIyar) | guruparamparai – AzhwArs/AchAryas Portal

 2. Pingback: திருக்கோஷ்டியூர் நம்பி | guruparamparai thamizh

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s