பொன்னடிக்கால் ஜீயர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
ஸ்ரீ வரதநாராயண குரவே நம:

ponnadikkal-jiyarபொன்னடிக்கால் ஜீயர் – வானமாமலை

பொன்னடிக்கால் ஜீயர் – திருவல்லிக்கேணி

திருநக்ஷத்ரம் : புரட்டாசி , புனர்பூசம்

அவதார ஸ்தலம் : வானமாமலை

ஆசார்யன்: அழகிய மனவாள மாமுனிகள்

பரமபதம் அடைந்த ஸ்தலம் : வானமாமலை

க்ரந்தங்கள்: திருப்பாவை ஸ்வாபதேசம் முதலியன

பொன்னடிக்கால் ஜீயரின் பூர்வாச்ரமப் பெயர் “அழகிய வரதர்”. வானமாமலை ஜீயர், வானாத்ரி யோகி, ராமாநுஜ ஜீயர், ராமாநுஜமுனி என்று இவருக்கு பல திருநாமங்கள் உண்டு. இவர் அழகிய மணவாள மாமுனிகளின் முதல் சிஷ்யர் மட்டுமல்லாது ப்ரதான சிஷ்யருமாவார்.

அழகிய வரதரான இவர் அழகிய மணவாள மாமுனிகளுக்கு க்ருஹஸ்தராய் எழுந்தருளியிருந்த காலத்தே சிஷ்யரானார். முதல் சிஷ்யரும் இவர்தான். அழகிய வரதர் உடனே சந்யாஸாச்ரமம் ஏற்று வெகுகாலம் மாமுனிகளோடே தங்கி, கைங்கர்யம் செய்து வந்தார். மாமுனிகளின் சிறந்த சிஷ்ய செல்வத்துக்கு இவர் முதலடி இட்டமையால் இவருக்கு பொன்னடிக்கால் ஜீயர் என்ற திருநாமம் வழங்கலாயிற்று. இவர் பாரத தேசம் முழுவதும் பல இடங்களில் தோதாத்ரி மடங்களை நிறுவி நம் சம்பிரதாயத்தை விஸ்தாரம் செய்தார்.

மாமுனிகள் திருமலை திவ்யதேசத்து யாத்திரைக்கு முதல் முறையாக செல்ல, அப்போது பெரிய கேள்வியப்பன் ஜீயர் ஸ்வப்னத்தில் ஒரு க்ருஹஸ்தர் சயனித்திருக்க அவர் திருவடி நிலையில் ஒரு சந்யாசியையும் கண்டார். உடனே கேள்வியப்பன் ஜீயர் இது குறித்து விசாரிக்க, அதற்கு அங்கிருந்தோர்கள் “ஈட்டுப் பெருக்கர்” என்கிற அழகிய மனவாளாப்பெருமாள் நாயனார்  மற்றும் பொன்னடிக்கால் ஜீயர் என்று கூறினர்.

பல ஆசார்யர்கள் மாமுனிகளை தரிசிக்கப் பொன்னடிக்கால் ஜீயரே புருஷகரமாக இருந்தார். பல ஸ்ரீவைஷ்ணவர்கள் பொன்னடிக்கால் ஜீயரின் புருஷகாரத்தாலேயே மாமுனிகளை தர்சிக்க , பொன்னடிக்கால் ஜீயரும் மகிழ்வோடு அவர்களை ஆதரித்து, கைங்கர்யத்தையும் தந்து அருளினார்.

கந்தாடை அண்ணனும் அவர் திருமேனி சம்பந்திகளும் மாமுனிகளுக்குச் சிஷ்யர்கள் ஆன பின்னே , பொன்னடிக்கால் ஜீயரைத் தன் “ப்ராண ஸுக்ருத்” என்றும், தனக்குக் கிடைத்திருக்கும் எல்லாப் பெருமைகளும் பொன்னடிக்கால் ஜீயருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருளினார். அப்பாச்சியாரண்ணா மாமுனிகளை அணுகி சிஷ்யராக ஏற்றுக்கொள்ள வேண்ட, மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயரை அழைத்துத் தன் ஆசனத்தில் அவரை அமரச்செய்து , தன் திருவாழி – திருச்சக்கரத்தையும் (திருச்சங்கு – திருச்சக்கரம்) கொடுத்து அப்பாச்சியாரண்ணாவுக்கு திருவிலச்சினை (சமாச்ரயணம்) செய்யுமாறு கட்டளை இட்டார் . முதலில் பொன்னடிக்கால் ஜீயர் சங்கோஜத்துடன் இதை மறுத்தார். ஆனால் அதைத் தொடர்ந்து மாமுனிகள் வலியுறுத்த அவ்வாரே அப்பாச்சியாரண்ணாவுக்கும் அவருடன் வந்துருந்த சிலருக்கும் சமாச்ரயணம் செய்து  மாமுனிகள் கட்டளையை பூர்த்தி செய்துவித்தார். மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார். அவர்கள் – சோளசிம்ஹபுரம் மஹார்யர் (தொட்டாசார்யர்), சமரபுங்கவாசார்யர், சுத்தசத்வம் அண்ணா, ஞானக்கண்ணாத்தான், ராமானுஜம் பிள்ளை , பள்ளக்கால் சித்தர், கோஷ்டிபுரத்தய்யர் மற்றும் அப்பாச்சியாரண்ணா.

மாமுனிகள் அப்பாச்சியாரண்ணாவை ஸ்ரீரங்கத்தை விட்டுக் காஞ்சிபுரம் செல்லுமாறு பணிக்க, அதை கேட்டு அவர் மனம் நொந்தார். உடனே மாமுனிகள் பொன்னடிக்கால் ஜீயர் ஆராதித்த தன் பழைய ராமாநுஜனை (தீர்த்த சொம்புக்கு நம் சம்ப்ரதாயத்தில் வழங்கப்படும் சொல்) அப்பாச்சியாரண்ணாவை ஏற்கச்செய்து, தன்னைப்போல் இரண்டு அர்ச்சா திருமேனிகளை செய்து ஒன்றை ஆசார்யரான பொன்னடிக்கால் ஜீயருக்கும் மற்றொன்றை சிஷ்யரான அப்பாச்சியாரண்ணாவுக்கும் தந்தருளினார்.

பிறகு தெய்வநாயகன் எம்பெருமான் (வானமாமலை) சேனைமுதலியார் வாயிலாக “பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலை எழுந்தருளி கைங்கர்யம் செய்ய வேண்டும்” என்று ஒரு ஸ்ரீமுகத்தை மாமுனிகளுக்கு விண்ணப்பித்தார்.  உடனே இதை பொன்னடிக்கால் ஜீயருக்கு மாமுனிகள் தெரிவித்தார். அதன் பிறகு தன் முதலிகள் எல்லோரையும் (பொன்னடிக்கால் ஜீயர் உட்பட) பெரிய பெருமாள் முன்னிலையில் தினம் 100 பாசுரக்ரமமாக 4000 திவ்யப்ரபந்தத்தை அந்வயிக்குமாறு பணிக்க, அவ்வாறே பெரிய பெருமாள் திருச்செவி சாற்றுகிறார் (பெரிய பெருமாள் கேட்கிறார்). “அணியார் பொழில் சூள் அரங்கநகரப்பா” என்று முதலிகள் (சிஷ்யர்கள்) செவிப்பதைக்கேட்டு பெருமான் மனம் குளிர தன் சந்நிதியிலிருந்து அரங்கநகரப்பனை (ஸ்ரீ லக்ஷ்மிநாராயண விக்ரஹம்) பொன்னடிக்கால் ஜீயருக்கு வழங்கி வானமாமலை எழுந்தருளப்பண்ணுமாரு பணித்தார். மேலும் பொன்னடிக்கால் ஜீயருக்கு தனிப்ரசாதமும், ஸ்ரீசடகோபமும் அளித்தார். மாமுனிகள் மேற்கொண்டு பொன்னடிக்கால் ஜீயரை மடத்துக்கு வரச்செய்து விசேஷ ததியாராதனை செய்து வானமாமலைக்கு வழியனுப்பி வைக்கிறார்.

பொன்னடிக்கால் ஜீயர் வானமாமலையில் தங்கிப் பல கைங்கர்யங்களை செய்து வந்தது மட்டுமின்றி அருகிலிருக்கும் நவ திருப்பதி, திருக்குறுங்குடி கைங்கர்யங்களையும் ஏற்றார். மேலும் பதரீகாச்ரமத்திற்கும் யாத்திரை சென்றார். இந்த மார்க்கத்தில் இவருக்கு பல சிஷ்யர்கள் கிடைத்து அவர்களுக்கு காலக்ஷேபமும், கைங்கர்யங்களையும் நல்கினார்.

பொன்னடிக்கால் ஜீயர் மேலும் ஒரு நெடிய வடதேச யாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது மாமுனிகள் இந்த நில உலகைத் துறந்து பரமபதம் சென்று திருநாடு அலங்கரித்தார். பொன்னடிக்கால் ஜீயர் யாத்திரை முடித்துக்கொண்டு திரும்புகையில் திருமலையை அடைந்தபோது விஷயம் தெரிந்து மிகவும் கலக்கமுற்றார். அதனால் சில காலம் திருமலையிலேயே தங்கி இருந்தார். மேலும் அங்கிருந்து தான் யாத்திரையின் பொது சேகரித்த செல்வங்களோடு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். அங்கு ஜீயர் நாயனாரையும் (பூர்வாச்ரமத்தில் மாமுனிகளின் திருப்பேரனார் ) சில ஸ்ரீவைஷ்னவர்களையும் தண்டன் சமர்ப்பித்து தன் ஆசார்யனை பிரிந்து தான் வாடும் சோகத்தை பகிர்ந்துகொண்டார். அப்பொழுது மாமுனிகளின் ஆணைப்படி அவருடைய உபதண்டம் (தன் தண்டத்தின் மீதம்), திருவாழி மோதிரம் மற்றும் பாதுகைகளும் பொன்னடிக்கால் ஜீயரிடம் சமர்ப்பிக்க பட்டன. இப்பொழுதும் வானமாமலை ஜீயர்கள் உற்சவ காலங்களில் மாமுனிகளின் திருவாழி மோதிரத்தை அணிகிறார்கள். அதன் பிறகு வானமாமலையில் தொடர்ந்து கைங்கர்யங்களை மேற்கொண்டார்.

அக்காலத்தில் வானமாமலையில் ஸ்ரீவரமங்கை நாச்சியாருக்கு உற்சவ விக்ரஹம் எழுந்தருளப்பண்ணவில்லை. ஒரு முறை தெய்வநாயகன் பொன்னடிக்கால் ஜீயரின் ஸ்வப்பனத்தில் எழுந்தடருளி திருமலையிலிருந்து நாச்சியாரை எழுந்தருளப்பண்ணுமாறு ஆணையிட்டார். எனவே பொன்னடிக்கால் ஜீயர் திருமலைக்கு யாத்திரை புறப்பட்டு அடைந்தார். அப்பொழுது திருமலை நாச்சியார் ஸ்வப்பனத்தில் எழுந்தருளி “அப்பா, எம்மை வானமாமலைக்கு எழுந்தருளப்பண்ணி தெய்வநாயகனோடு திருக்கல்யாணம் செய்து வெய்யும்” என தன் சங்கல்பத்தை தெரிவித்தாள். இதே போல் திருமலை ஜீயர்களின் ஸ்வப்பனத்திலும் எழுந்தருளினாள். இதையேற்ற ஜீயர்கள் அவ்வாறே பொன்னடிக்கால் ஜீயரிடம் அர்ச்சா திருமேனியை ஒப்படைத்தனர். பொன்னடிக்கால் ஜீயர் தானே தாயாரை எம்பெருமானுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார். தெய்வனாயகனும் பொன்னடிக்கால் ஜீயரை பெரியாழ்வாரைப்போலே “மாமனாராக” கொள்கிறார். இன்றும் இந்த வைபவம் வானமாமலையில் கொண்டாடப்படுகின்றது.

இதன் பிறகு பல திருநக்ஷத்ரங்கள் வாழ்ந்து பல சத்தான உபதேசங்களை எல்லோருக்கும் நல்கி , பொன்னடிக்கால் ஜீயர் தன் ஆசார்யரான அழகிய மணவாளமாமுனிகளை த்யானித்து தன் சரம திருமேனியைத் துறந்து திருநாடு அலங்கரித்தார் (பரமபதம் அடைந்தார்). அவர் நியமித்த அடுத்த ஜீயர் ஸ்வாமிகளைத் தொடர்ந்து இன்றுவரை வானமாமலையில் ஆசார்ய பரம்பரை தொடர்ந்து வருகிறது.

நாமும் பொன்னடிக்கால் ஜீயரின் திருவடியை இதேபோல் எம்பெருமான் மற்றும் ஆசார்ய சம்பந்தத்துக்காகப் பிரார்த்திப்போம்!!!

பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா
ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே

இப்போது நாம் தொட்டாசார்யர் ஸ்வாமி அருளிய முக்யமான சம்ஸ்க்ருத அருளிசெயல்களை அனுபவிக்கலாம். பொன்னடிக்கால் ஜீயர் மங்களாசாஸனம் மற்றும் பிரபத்தி ஆகியவை அவருடைய பெருமைகளை பெரிதும் பறைசாற்றுகின்றன. இதற்கான மூலமும் மற்றும் அதற்கான தென்திருப்பேரை உ.வே. அரவிந்தலோசனன் ஸ்வாமி அவர்களின் எளிய தமிழ் மொழிபெயர்ப்பும் கீழ்க்கண்ட தொடர்பில் காண்க:

http://www.kaarimaaran.com/downloads/PrapathiMangalasasanam.pdf

ஸ்ரீ வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியை பற்றிய மங்களாசாஸனம் – ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான ஸ்ரீ தொட்டையங்கார் அப்பை என்னும் மஹாசார்யர் அருளிச்செய்தது

 1. அழகிய மணவாள மாமுனிகளுடய அருளுக்கு இருப்பிடமானவரும், கருணைக்குக் கடல்போல் இருப்பவரும், தூய மனதுடையவரும், பிறந்தது முதலாகவே நல்லொழுக்கத்தையும் ஞானத்தையும் உடையவரும், அழகிய வரதர் என்னும் பெயரை உடையவருமான வாநமாமலை ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.
 2. அழகிய மணவாள மாமுனிகளின் தயையால் பெறப்பட்ட நற்குணக் கூட்டங்களுக்கு கடல்போல் இருப்பவரும், முனிவர்களுக்குத் தலைவரும், எங்கள் குலத்திற்கு நாதருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமிக்கு எப்பொழுதும் வணக்கம் உரித்தாகுக.
 3. அழகிய மணவாள மாமுனிகளுடைய திருவடித்தாமரைகளில் வண்டுபோல் இருப்பவரும், கருணை நிறைந்த மனதுடையவரும், அடியேனுடைய மனதாகிற சந்த்ரகாந்தக்கல்லுக்கு முழுமதி போன்றவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.
 4. வாத்சல்யம், சீலம், ஞானம் முதலான நற்குணங்களுக்கு கடல் போன்று இருப்பவரும், அழகிய மாமுனிகளை தனக்கு ப்ராணனாக கொண்டிருப்பவருமான ராமாநுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.
 5. எவருடைய அனாதரத்தால் பிரம்மச்சர்ய-சந்யாஸாச்ராமங்களுக்கு நடுவிலுருக்கும் மற்றய இரண்டு ஆச்ரமங்களும் வெட்கத்தை அடைந்தனவோ, அந்த வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன். (வானமாமலை ஜீயர் ஸ்வாமி பிரம்மச்சர்ய ஆச்ரமத்திலிருந்து நேரே சந்யாஸாச்ரமத்திற்கு ச்வீகாரம் செய்தவர். எனவே நடுவில் இருக்கும் ஆஸ்ரமங்கள் வெட்கம் அடைந்தனவாம். )
 6. அழகிய மணவாளமாமுனிகளின் அருளுக்கு முதல் இலக்கானவரும், காமம் முதலிய தோஷங்களைக் களைபவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்.
 7. நற்குணங்களுக்கு இருப்பிடமானவரும், விருப்பு வெறுப்பு ஆகியவைகளிலிருந்து விடுபட்டவரும், தாமரை இதழ் போன்ற திருக்கண்களையுடையவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்.
 8. வைராக்கியமாகிற செல்வமானது வாயுகுமாரனிடத்தில் உற்பத்தியை அடைந்தது. பின்பு அது சந்தனு புத்ரரான பீஷ்மரிடம் நன்கு வளர்ச்சியை அடைந்து அது இப்பொழுது வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை அடைந்து பலவிதமாகப் பிரகாசிக்கிறது. அந்த ஜீயர் ஸ்வாமியை நாம் எப்பொழுதும் கண்களால் கண்டு களிப்போம்.
 9. யாருடைய வ்யாக்யானமானது வித்வத் ஜனங்களின் மனதை கவர்ந்திழுக்கக்கூடியதோ, யாருடைய நித்யானுஷ்டேயங்களான நற்கிரிசைகள் மற்ற யதிவரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனவோ, அத்தகையவரும், குற்றமற்றவரும், ஞானம் முதலிய நற்குணங்கள் நிறைந்தவரும், அழகிய மணவாள மாமுனிகளின் திருவடித்தாமரையினை ஆச்ரயித்தவருமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியை ஸேவிக்கிறேன்.
 10. யாருடைய கோஷ்டியில் அருகில் இருக்கும் பக்ஷிகளானது “ச்ரியப்பதியான நாராயணனே வேதாந்தப் பிரதிபாத்யன், பரம் ஜ்யோதி, பரம் தத்த்வம், எப்பொழுதுமுள்ளவன்” என்றும், “மற்ற நான்முகன் தொடக்கமான தேவர்கள் அவனுக்கு சேஷபூதர்கள்” என்று ஒன்றுக்கொன்று பேசுகின்றனவோ, அந்த ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை வணங்குகின்றேன்.
 11. காருண்யமாகிற அம்ருத அலைகள் விளங்காநிற்கும் எவருடைய கடைக்கண் பார்வைக்கு இலக்கானவர்கள் அர்த்தபஞ்சக ஞானம் பெற்ற வித்வான்களில் தலைவராக ஆவாரோ, அத்தகைய ராமானுஜ ஜீயர் ஸ்வாமி, சிஷ்யர்களுக்கு கற்பகவ்ருக்ஷம் போன்றும், ஸ்ரீ வானமாமலை திவ்ய தேசத்திற்குச் சிறந்த பல கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் சிறந்து விளங்குகின்றார்.
 12. எலும்பு. நரம்பு, கொழுப்பு, உதிரம், சதை இவற்றின் கூட்டுரவானதும், மாறுபாடுடையதும், அழியக்கூடியதுமான, இந்த நான் அல்லாத உடம்பில், நான் என்ற எண்ணத்தை உடையவனும், தன்னை நோக்கிக்கொண்டு போரும் ஸ்ரீவைஷ்ணவர்களிடத்திலும் பாராமுகமாக இருப்பவனுமாகிய அடியேன் இடத்திலும் எவர் அருள்புரிந்தாரோ, அத்தகைய வானமாமலை திவ்ய க்ஷேத்தரத்திற்கு நிதியான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை சேவிக்கிறேன்
 13. வித்யை விளையாடுமிடமாக இருப்பவரும், வைராக்யமாகிற கொடியானது ஓய்வெடுக்கும் கல்பகவ்ருக்ஷம் போன்றும், உயர்ந்த காந்தி பொருந்திய குணங்களாகிற் ரத்னங்களை வைக்கும் பெட்டி போன்றும் இருப்பவரும், எம்பெருமானால் நியமிக்கப்பட்ட ஆசார்ய பீடத்தை நிர்வஹிப்பதிலும் உறுதிபூண்டவரும், ஸ்ரீ வானமாமலை எம்பெருமானிடத்தில் எப்பொழுதும் ஈடுப்பட்டு இருப்பவருமான வானமாமலை எம்பெருமானிடத்தில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பவருமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியை ஆஸ்ரயிக்கிரேன்.
 14. அழகிய மனவாளமாமுனிகளின் தயைக்கு இருப்பிடமானவரும், வைராக்கியம் முதலிய நற்குணங்களுக்கு கடல் போன்றிருப்பவரும், ஸ்ரீதெய்வனாயகப்பெருமானுடய திருவடிகளில் மிகுந்த அன்புடயவருமான ராமானுஜ ஜீயர் ஸ்வாமியை எப்பொழுதும் வணங்குகின்றேன்.

வானமாமலை பொன்னடிக்கால் ஜீயர் ஸ்வாமியை பற்றிய பிரபத்தி – ஸ்ரீ வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய அஷ்டதிக்கஜங்களில் ஒருவரான ஸ்ரீ தொட்டையங்கார் அப்பை என்னும் மஹாசார்யர் அருளிச்செய்தது

 1. அப்போதலர்ந்த செந்தாமரையை ஒத்த அழகு பொருந்தியவரும், காண்போர் கண்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவனாகவும், சம்சாரக்கடலை தாண்டுவிப்பதில் வல்லமை உடவனாகவுமிருக்கும் வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப்பற்றுகிறேன்.
 2. மணவாள மாமுனிகளுடய கருணையினால் பெருமை பெற்றவரும், காமம் முதலிய தோஷங்களை அழிக்கக்கூடியவரும், நற்குணங்களுக்குக் கடல் போன்றிருப்பவருமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய, அடிபணிந்தார்க்கு கல்பகவ்ருக்ஷம் போன்றிருக்கும் திருவடிகளை சரணமாகப்பற்றுகிறேன்.
 3. மனைவி மக்கள் இவர்களாலே உருவாகும் இவ்வுலக சுகத்தை, சிறையிலுண்டாகும் வேதனைக்குச் சமமாக நினைத்து, அழகிய மணவாள மாமுனிகளின் திருவடியிணையை ஆச்ரயித்த வானமாமலை ராமானுஜ ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாக பற்றுகிறேன்.
 4. முதலில் விரக்தியான கொடி ஹனுமானிடத்தில் உண்டானது. பின்னர் ஆசார்ய ச்ரேஷ்டரான வானமாமலை ஜீயரை அடைந்து பணைத்துத் தழைத்து ஆயிரம் கிளைகளாக வளர்ந்து அழகாக விளங்குகிறது. அந்த வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை கதியாக பற்றுகிறேன்.
 5. யதிஷ்ரேஷ்டரான மணவாள மாமுனிகளின் உகப்புக்காக வானமாமலை திவ்யதேசதிற்கு சிறந்த மண்டப-கோபுராதி கைங்கர்யத்தை ஆதிசேஷனைப்போல் நன்ராக செய்தவரான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை ப்ராபகமாகப் பற்றுகிறேன்.
 6. செவிக்கினிய அமுதமாய், தமிழ் மொழியில் வேதத்தின் அர்த்தத்தை வெளியிட்ட நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களை நல்லோர்க்கு வண்மையோடு உபதேசித்தவரான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
 7. யாருடைய திருநாம சங்கீர்த்தனமானது, சம்ஸாரமாகிற பாம்பினுடைய விஷத்தைப் போக்கும் மந்த்ரமோ, ஜீவாத்மாக்களுக்கு பரமபுருஷனான எம்பெருமானோடு சாம்யத்தை அளிக்கவல்லதோ, அந்த ராமனுஜ ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன்.
 8. எவைகளை நினைத்த மாத்திரத்திலே, அநாதிகால சம்ஸாரதால் உண்டான பாவக்குவியலானது அழிவை அடையுமோ அத்தகையவைகளும், சாதுக்களாலே வணங்கப்படுபவைகளும், பரமபாவனத்வத்தை ஸ்வரூபமாக உடையவைகளுமான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.
 9. புனிதமான எந்த ஸ்ரீபாததீர்த்தமானது ஜனங்களுடைய கலிகாலமாகிற வாயுவினால் கிளர்ந்து தாபத்ரயமாகிற நெருப்பை அணைக்கவல்லதோ, எந்த ஸ்ரீபாததூளியானது, மனிதனின் அழுக்குகளைப போக்கவல்லதோ, அத்தகைய வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.
 10. வாதூலகுலதிலகராய், வரதார்யன் என்கிற திருநாமத்தை உடையவராய், வாத்சல்யம் முதலான குணங்களுக்கு கடல் போன்றிருப்பவராய், அனைத்து ஆத்ம குணங்களோடு கூடியிருப்பவருமான, அப்பாசியாரண்ணா, எந்தத் திருவடிகளில், தன்னை ரக்ஷிக்கும் பரத்தை சமர்ப்பிதாரோ, அந்த வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்.
 11. நல்லொழுக்கங்களுக்குப் பிறப்பிடமாய், சமதமாதி நற்குணங்களுக்கு எல்லை நிலமாய் நல்லோர்களால் வணங்கப்படுபவராய், வேதாந்தசாரத்தை அறிந்ததனால் பெருமைப் படைத்தவரான போரேற்று  நாயனாராலே நன்கு பூஜிக்கப்பட்டவைகளான வானமாமலை ஜீயர் ஸ்வாமியினுடைய திருவடிகளை சரணமாகப் பற்றுகிறேன் (போரேற்று நாயனார் என்பார் ஒன்றான வானமாமலை ஜீயர் ஸ்வாமியின் அஷ்டதிக்கஜங்களிலே ஒருவர்)
 12. வானமாமலை ஜீயர் ஸ்வாமியிடத்திலுள்ள வாயுபுத்ரரான ஸ்ரீ ஹனுமான் – ஸ்ரீ பீஷ்மர் இவர்களுடையதை விஞ்சியதாயுள்ளது. இவரிடமிருக்கும் பக்தி சடகோபர் முதலான ஓராண்வழி சம்பிரதாயத்தை அனுஸரித்ததாக இருக்கிறது. இவர் யதிஸ்ரேஷ்டரான நாதமுனி யாமுனமுனி ஆகியோரின் ஞானத்திற்கு ஒத்ததான உயர்ந்த ஞானத்தையுடையவர். ஆகையால் இத்தகைய வானமாமலை ஜீயர் ஸ்வாமிக்கு சமமாக இந்த ஜகத்தில் யவருளர்? ஒருவருமில்லை என்றபடி!
 13. ஆதிசேஷனைப்போலே வானமாமலை ஸ்ரீ தெய்வநாயகப்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்பவராகவும், அவ்வெம்பெருமானின் அடியார்களைப் பூஜிப்பதில் குலசேகர ஆழ்வாரைப்போலே ப்ரீதியை உடையவராகவும், தன் ஆசார்யருடைய திருவடித்தாமரைகளை அர்சிப்பதில் மதுரகவியாழ்வாரைப்போலே சிறந்து விளங்குபவராகவும் நற்குணங்களுக்கு ஒரே இருப்பிடமாகவும் ராமானுஜ ஜீயர் ஸ்வாமி எழுந்தருளியிருக்கிறார்.
 14. முன் காலத்தில் ச்ரியப்பதியானவன் தானே, ஆசார்யனாகவும் சிஷ்யனாகவும் இரண்டு திருமேனிகளை எடுத்துக்கொண்டான். அதில் சிஷ்யன் நரன், ஆசார்யன் நாராயணன். இப்பொழுது அவர்களில் ஒருவர் கருணைக்கடலான மணவாள மாமுனிகளாகவும், மற்றொருவர் அவருடைய சிஷ்யர்களில் தலைவராகிய வானமாமலை ஜீயர் ஸ்வாமியாய் விளங்குகின்றனர்.

அடியேன் மகிழ்மாறன் ராமானுஜ தாஸன்

ஆதாரம்: http://guruparamparai.wordpress.com/2012/09/30/ponnadikkal-jiyar/

வலைத்தளம் – https://guruparamparaitamil.wordpress.com/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://guruparamparai.wordpress.com
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

8 thoughts on “பொன்னடிக்கால் ஜீயர்

 1. பிங்குபாக்: கோயில் கந்தாடை அண்ணன் | guruparamparai thamizh

 2. பிங்குபாக்: vAnamAmalai/thOthAdhri jIyar (ponnadikkAl jIyar) | guruparamparai – AzhwArs/AchAryas Portal

 3. பிங்குபாக்: அப்பிள்ளை | guruparamparai thamizh

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s